Monday, May 23, 2011

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி நான்கு

மாடன் மோட்சம்
July 10th, 2000

<மறுவருஷம் நடந்த இருமத சமரசக் கூட்டத்தில் தமிழ் தெரியாத கலெக்டர் உரையாற்றினார். >

கதை நடக்கும் கால அளவை நினைவுறுத்திக் கொள்வோம்.

மேற்குறிப்பிட்டது, முந்தைய பகுதியான மூன்றின், இறுதி பத்தியின் முதல் வரி. 

அதாவது கதையின் தொடக்கத்தில் ஒரு ’சுபதின’ இரவில் விழித்துக் கொண்ட மாடன் அப்பியின் அறிவுரைப்படி மறுநாள் வியாதிகளை வீசியும் ஒன்றுமே ‘நடக்கவில்லை என்று 

<திரும்பி வந்து சப்பக்கொட்டிக்கொண்டு அமர்ந்தது. இரண்டு நாள் ஒன்றும் ஆகவில்லை. யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. மூன்றாம் நாள் சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில் வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப் போனான்.>

ஆக மூன்றாம் நாள் இரவில் இறந்தது போல மாடன் கண்மூடி நடிக்க, மரத்தினால் ஆன சிலுவை நடப்பட்டு, மறுநாள் காலை, பூசாரியாகிய அப்பி மாரடித்து கலவரம் உண்டாக்க என்று நான்கு நாட்களில் முஸ்தீபுகள் அனைத்தும் முடிந்து எதிர்பார்த்த ரகளையே ஆரம்பித்து விடுகிறது. 

<ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது; அப்பியும் ஜாக்ரதையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். பிறகு அவனை அப்பக்கமாகக் காணவில்லை.>

இதற்கு அடுத்து,

<தொடர்ந்து மூன்று நாட்கள் மாடனுக்குப் போலீஸ் காவல். சேரியிலும் சந்தையிலும். அடிதடியும் கொலையும் தண்ணீர் பட்டபாடு ஆயின. மொத்தம் ஏழு என்றார்கள். பாக்கி தொண்ணூற்று மூன்றை நதியில் வீசிவிட்டார்கள் என்றது வதந்தி. அப்பியைக் கண்ணிலே காணவில்லை..>

ஆக ஏழுநாட்கள். அதிலிருந்து எழுத்து என்னமாய் வேகமெடுக்கிறது. ஒரு வருட காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எழுதுவதில்தான் என்ன அனாயாசமான பகடி. கலவரம் கொலைகள் மறைப்புகள் இருதரப்புப் பிரச்சாரங்கள் சொந்த தரப்பை மூட்டை அவிழ்ந்த நெல்லியாக சிதறி ஓடாமலிருக்க அவரவரும் எடுக்கும் பிரயத்தனங்கள் என சரசரவென கதை ஓட்டமான ஓட்டம். படைப்பூக்கத்தின் உச்சம் என்று இந்த பகுதியைச் சொல்லலாம். 

<போலீஸ் துப்பாக்கிச் சூடு, சமாதானப் பேரணி, நூற்றி நாற்பத்து நாலு, ஆர்.டி.ஓ. விசாரணை, நீதி கேட்டு உண்ணாவிரதம், போஸ்டர் யுத்தம், மந்திரி வருகை, சேலை தானம், சர்வ கட்சி சமாதானக் கூட்டம் ,சர்வ மதத் தலைவர்கள் அறிக்கை என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள் நடந்தேறின. சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் உடன்பாடானது.>

என்னமாய் அடுக்குகிறார். சந்நதம் வந்ததுபோன்ற ஆவேசம் அடா அடா எவ்வளவு விஷயங்கள், மிகச்சில வார்த்தைகளில். அசர வைக்கும் எழுத்து. இதெல்லாம் நின்று நிதானித்து எழுதும் சாமானியர்களிடம் வெளிப்படக்கூடியதா என்ன? கடவுளின் கடைக்கண் பார்வை படாதவர்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத நீரோட்டமான எழுத்து. காட்டாற்று வெள்ளம். ஆன்மீக அறம் கொடுக்கும் ஆசுகவித்துவ படைப்பூக்கம்.

பின்னே இப்படி ஓட்டமும் நடையுமாக எழுதினால்தானே கதை எப்படித் தொடங்கியது என்பதை வாசக மனத்தின் நினைவிலிருந்து அகற்ற முடியும். மொத்தமும் ஒருவனின் மோசடி. அந்த ஒருவன் ஹிந்து. அய்யையோ ஹிந்துவென வந்துவிட்டதே! கவலையே வேண்டாம். அவன் சேரியில் வாழும் பறையன். வாசகர்மேல் அவர்களது மறதியின்மேல் எவ்வளவு உறுதியான நம்பிக்கை. ஆகவேதான் வெறும் நையாண்டியாய்த் தொடங்குகிற கதை முதலிரண்டு பகுதிகள் வரை மாடன் - அப்பி பற்றிய கிண்டல் கேலியாக வளவளவென செல்கிறது.

உடையில் மட்டுமே வேறுபட்டு, மற்றபடிக்கு, அப்பி போலவே இருக்கும் கிறித்துவ தரப்பு பூசாரிகள், அந்தக் காலம் உன் முறை இந்தக் காலம் எங்கள் முறை என்கிற விதமாய் மதப்பிரச்சாரம் செய்து கூட்டம் சேர்த்து கும்பி வளர்த்ததில் ஏதும் பிரச்சனை இருந்ததா?

சாதாரணமாக இருந்த ஊரில், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்கிறவிதமாய் கலவரத்தை உண்டாக்கிவிட்டுக் காணாமல் போன அப்பி மற்றும் கண்ணை மூடிக்கொண்ட மாடன் பற்றி நையாண்டி என்கிற பெயரில் நழுவ வேண்டும் என்றால், கலவரம் பற்றி கடகடவென்று கதையை ஓட்டினால்தானே முடியும். 

கலவரம் நடந்தது, முட்டாள்கள் அடித்துக் கொண்டு செத்தார்கள். இதை யார் தொடங்கினார்கள்? ஏன் தொடங்கப்பட்டது? இதில் யார் சரி தப்பு எல்லாம் பார்க்க முடியுமா என்ன? 

<என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள் நடந்தேறின.>

இதுதான் முன் தீர்மானமற்ற எழுத்து. நம்புங்கள் இதுதான் தன்னிச்சையான படைபூக்கம்.

ஜெயமோகன் தான் சொல்ல வரும் கருத்து என்ன என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். எதை நையாண்டியாய் சொல்ல வேண்டும் எதை தீவிரமாய் சொல்ல வேண்டும் எதை விரித்துச் சொல்ல வேண்டும் எதை சுருக்கமாய்ச் சொல்லிக் கடக்க வேண்டும் என்பதில் எல்லாம் மிகக் கவனமாய் இருக்கிறார்.

அவரது ஒரே பிரச்சனை அவர் இலக்கியவாதி அல்ல வெறும் பிரச்சாரகர் என்பதுதான். இலக்கியவாதி என்கிற ஜோடனை முகப்பூச்சு மாவாக அவர் எழுத்தில் ஆங்காங்கே தூவிக்கிடக்கும் சில வார்த்தை வீச்சுகள் கவிநடைப் பிரயோகங்கள் பார்த்து ஆரம்ப வாசகன் மயங்கி ஆரவாரிக்கக்கூடும்.

உயர்ந்த எழுத்து ஒரு போதும் பாத்திரங்களுக்குள் புகுந்து ஆவி எழுப்பும் கூட்டம் நடத்தாது. 

It seems to me that the writer should not try to solve such questions as those of God, pes­simism, etc. His business is but to describe those who have been speak­ing or think­ing about God and pes­simism, how and under what cir­cum­stances. The artist should be not the judge of his char­ac­ters and their con­ver­sa­tions, but only an unbiased observer.

ANTON CHEKHOV

ஜெயகாந்தன், சிறந்த இலக்கியம் நோக்கிய செப்பனிடாத பாதையாகத் தங்கிப்போனதற்கு இதுவே காரணம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெகுஜன பத்திரிகைப் பரப்பில் அப்படியான ஆளுமைக்கான அவசியத்தை அன்றைய சூழல் கோரி நின்றது.

60-70களில் அகிலன் நாபா போன்ற அசடுகள் ஆபாசக் கலப்பற்ற உயர்ந்த கதைகள் படைக்கிறோம் எனவே இது இலக்கியம் என கூத்தடித்தபோது ஜெயகாந்தனின் கர்ஜனை யதார்த்தம் அதே களத்தில் ஓங்கி ஒலித்தது அர்த்தபூர்வமான காரியமாய் இருந்தது.

குமுதம் கல்கி கதைகளை எழுதத்தொடங்கிய ஜெயமோகன் இலக்கிய சூழலுக்கு உள்ளேயே உட்கார்ந்து, கிட்டத்தட்ட 1991 வரையில் தொடர்ந்து வெகுஜன அசட்டு நெகிழ்ச்சிக் கதைகளைக் கல்கிக்கும் இவர் போல ஒன்று அவர் போல ஒன்று என இலக்கியவாதிகள் போல எழுதி, குழப்படி செய்துகொண்டு இருந்தவர், தன்னையும் ஜெயகாந்தனாக பாவித்துக் கொண்டு பொல்லாச் சிறகை விரிப்பதுதான் கொடுமை.

இலக்கியச் சூழலுக்குள் இமயமாய் வாழ்ந்துகொண்டு இருப்பதாக ஜோடித்துக் கொள்பவர் செருமிக்கொள்ளும் பேச்சு கர்ஜனையாகுமா? கதா பாத்திரங்களில் தான் கரையாமல், தன் ஜாடையில் சகட்டுமேனிக்குக் கழித்துத் தள்ளிக் கொண்டிருப்பதற்குப் பெயர் படைப்பூக்கமா? 

<‘என்ன இருந்தாலும் அவிய ஏமான்மாருங்க. பறப்பய எண்ணும் பறப்பயதான் ‘ என்று பாதிரியார் வீடுவீடாகச் சென்று உபதேசம் செய்தார். ‘மறந்து போச்சா பளைய கதையொக்கெ ? அங்க வலிய கோவில் பக்கமாட்டு உங்களயொக்கெ போவ விடுவனுமா ? அவிய செத்தா நீங்க மொட்ட போடணும் எண்ணு அடிச்சவனுவதானே ? இப்பம் என்னத்துக்கு வாறானுவ ? ‘>

இது கிறித்துவ ஆள்சேர்ப்புப் பிரச்சாரன் பற்றிய காரமான விமர்சனம்.

<சேரியில் ஹிந்துமதப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சொர்ணமலை தீபானந்தசாமி வந்து அனைவருக்கும் ஆசியளித்து, சாதி ஏதானாலும் ஹிந்து ஹிந்துதான் என்றார். ஒரே போடாக கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களே என்று அவர் கூறியது சற்று அதிகம் என்று பலர் அபிப்பிராயப்பட்டனர். சனாதன தருமம் என்றுமே அழிவற்றது என்று முழங்கினார். ஆகவே ஹிந்துமதத்தைக் காக்க இளைஞர்கள் முன்வரும்படி கண்ணீர் மல்க வேண்டினார். யாரும் மதம் மாறுதல் கூடாது என்று கெஞ்சினார்.>

ஆனால் ஹிந்துக்கள் அடிக்கும் கூத்துக்கள் மட்டும் பஜ்ஜி சொஜ்ஜியாக காட்டப்படுவது இலக்கிய அறம் இல்லையா?

<சேரிப் பிள்ளைகளுக்குப் போஜன மந்திரம் கற்பிக்கும் பணி எதிர்பார்த்ததைவிடவும் மூன்று மாதம் அதிகமாக எடுத்துக் கொண்டது.>

மனிதாபிமானம் என்பது கூட ’அரசியல் சரி’களில் ஒன்றுதானே! ஆகவே அதைக் கிண்டலடிப்பதும் கூட அறத்தின்பாற்பட்டதே. இதை அளவுகோலாய்க் கொண்டால் ஆண்டாண்டுகாலமாய் தனிப்பேச்சில் சர்வசதாரணமாய்க் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் ”பாப்பானுக்குக் குளிச்சா பசிக்கும் பறையனுக்குப் பல்தேச்சாப் பசிக்கும்” என்கிற பழமொழிகூட உலக கலக இலக்கியத்தரம்தான்.

<இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த மாடன் கோவில் இனிமேலும் இப்படியே கிடக்கலாகாது என்று அவர் கூறினார். உடனே முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜை புனஸ்காரதிகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிதி வசூல் தொடங்கியது.>

கிறித்துவர் பற்றி இருப்பது கிண்டல் மட்டுமேவா?

<எதிர் முகாமிலும் நிதிவசூல் பரபரப்பாக நடைபெற்றது.> 

<அங்கு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. நெய்யூரை சார்ந்த ஜெபமணி-எஸ்தர் தம்பதிகளின் குழந்தை சாம்சன் அருமைராசனுக்கு சிறுவயதிலேயே போலியோ வந்து நைந்துபோன கால் இங்கு வந்து கண்ணீருடன் முட்டிப்பாக ஜெபித்தபோது சரியாக ஆயிற்று. இதைப் போலவே திருச்சி அன்புசாமி, பாளையங்கோட்டை நத்தானியேல், வல்லவிளை அக்னீஸ் ஆகியோருக்கு வேலையும், ஞாறாம்விளை பாக்கியமுத்துவிற்கு லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசும், கிறிஸ்துராஜா நகர் ஹெலனா புரூட்டஸுக்கு பரிட்சையில் ஜெயமும் கர்த்தரின் வல்லமையினால் கிடைத்ததாக சாட்சி சொல்லப்பட்டது.>

சரி இவ்வளவு கூத்தும் எங்கு நடக்கிறது? வாசகனை விடுங்கள், ஆசிரியருக்கேனும் நினைவு இருக்கிறதா? இல்லாமலென்ன அதுதான் கடந்த பத்திகளிலேயே திரும்பத்திரும்பச் சேரி என்று சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்.

சேரியில் எவ்வளவு ஹிந்துக் குடும்பங்கள் இருக்கின்றன?

<மீதமிருந்த ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப்படுதலுக்கு உள்ளாகி விடலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள் வந்திறங்கினர்.>

கலவரம் நடப்பதற்கு முந்தைய ஆசிரியரின் கூற்றுப்படி வெறும் ஆறே குடும்பங்கள்தான் ஹிந்துவாக இருந்தவை.

போகவும் பகுதி ஒன்றில் நடக்கும் மாடன் - அப்பி உரையாடலிலும் இது ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது.

<‘இப்பம் சேரியில ஏளெட்டு பறக்குடிய விட்டா, பாக்கியொக்க மத்தசைடு பயவளாக்கும் பாத்துக்கிடும். ‘>

கால ஓட்டத்தைக்கூட ஆசிரியர் என்னமாய் பக்கசார்பற்றுப் பகடி செய்கிறார் பருங்கள்.

<ஞானப்பிரகாசம் அன்ட் சன்ஸின் ‘சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும் ‘ பரமார்த்த நாடாரின் ‘மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும் ‘ விருத்தி அடைந்தன.>

அடுத்து

<பிஷப் வந்த அன்று அறுநூறு பேருக்கு அன்னதானமும், நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது.>

அட கதை ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் கலவரம் நடந்து அதன்பின் சில மாதங்களுக்குள்ளாகவே ஜெயமோகனின் படைபூக்க வேகத்திற்கே சவால்விடும்படியாகக் சேரியில் கிறித்துவர்கள் பெற்றுத் தள்ளிவிடுகிறார்கள்.

<நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது>

கிறித்துவர்கள் நடத்துவது ஆவி எழுப்புதல் கூட்டமா இல்லை அடியிற் கண்ட சொத்தை எழுப்பும் கூட்டமா? ஹிந்துவாக இருந்த அதே சேரியைச் சார்ந்தோர் கிறித்துவரானதும் இரவுபகலாய் இதே தொழிலாய் இருக்கிறார்கள் போலும்.

கதையில் வரும் கிறித்துவர்கள் விவரணங்களின் அடிப்படையில் பார்த்தால் பலமான நிறுவனமயமாக்கப்பட்ட ஆர்.சி / சிஎஸ்ஐ (ப்ரோட்டஸ்டண்ட்) இருவரும் அல்ல. மதமாற்றத்தில் நோட்டு பார்க்கும் கும்பல்கள். இவ்வளவு பேரிடம் ஏசுவின் செய்தியைக் கொண்டுபோயிருக்கிறோம் என்று கூட்ட வீடியோக்களை வெளிநாட்டில் காட்டி வசூல் வேட்டை செய்யும் கோஷ்டிகள். இவர்கள் குடும்பம் குடும்பமாக குறி வைப்பவர்கள். இதையாவது தெளிவாக எழுதி இருக்கிறாரா? பெய்ண்ட் அடிப்பது என முடிவெடுத்தபின் பிரித்து ஆள் பார்த்து அடிப்பதெல்லாம் வெட்டி வேலை அப்படியே வீசுவதுதான் விவேகம்.

<நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது>

எங்கு அளிக்கப்பட்டது? ஆறே ஹிந்துக் குடும்பங்கள் இருக்கும் சேரியிலா? ஆறு குடும்பங்கள் சில மாதங்களில் நூறு குழந்தைகள் பெற்றுவிட்டனவா? ஆறைத்தவிர சேரியில் இருக்கும் மீதி குடும்பங்கள் எல்லாம் கதை தொடங்கும் முன்பாகவே கிறித்துவத்திற்கு மாறிவிட்டனவே. மாறியபோதே ஞானஸ்நானம் கொடுத்தல்லவா மாற்றப்பட்டிருப்பார்கள். எனில் நூறு குழந்தைகள், வேறு இடங்களில் ஏற்கெனவே கிறித்துவராய் இருக்கும் குடும்பங்களில் இருந்து இங்கே கூட்டிவந்து ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனரோ? இங்கே இருக்கும் வெறும் ஆறு குடும்பங்களை கிறித்துவராக்க இவ்வளவு பிரயத்தனமா?

ஊர்ல இருக்கற பறையனை எல்லாம் கிறிஸ்துவனா ஆக்கிகிட்டு இருக்காங்க என்று, போகிற போக்கில் சொல்லப்படுகிற அக்கறையற்ற அங்கலாய்ப்பைப் படித்த முட்டாள் வெறியர்களிடம் இருந்து,திரும்பிய பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். இதற்கு இலக்கிய அந்தஸ்து வேறு ஒரு கேடா?

இப்போது திரும்பவும் பக்க சார்பற்றதாய்க் காட்டிக்கொள்ள பகடியாய் எழுதப்பட்ட தோற்றத்தில் இருக்கும் பழைய வரியைத் திரும்ப படித்துப் பார்ப்போமா!

<பரமார்த்த நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார். ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது.>

<ஞானப்பிரகாசம் அன்ட் சன்ஸின் ‘சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும் ‘ பரமார்த்த நாடாரின் ‘மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும் ‘ விருத்தி அடைந்தன.>

மத ரீதியாய்ப் பிரிந்து கிடக்கும் சேரியில் ஜாதியும் கடைவிரிக்கிறதாம். கிறித்துவரால் (ஞானப்பிரகாச நாடார்?) ஓட்டலும் பரமார்த்த நாடாரான இந்துவால் பலசரக்குக் கடையும் (ஸ்டோர் என்பதைப் பலசரக்குக் கடை என்றே எடுத்துக் கொள்வோம். சிரிப்புசிரிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஸ்டோர் என குறிப்பிடப்படுவது ஃபேன்ஸி ஸ்டோர் இல்லைதானே!) ஆறு குடும்பங்களுக்காக ஆரம்பிக்கப்படும் கடை விருத்தியாகிறதாம். 

ஈரைப் பேனாக்குதல் பேனைப் பெருமாளாக்குதல் என்பது போல இது ஆறை நூறாக்குதலா?

இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் பிட் நோட்டீஸ்கூட இவ்வளவு அபத்தமாய் இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்துனை பச்சையான பக்கச்சார்பு எடுப்பதற்கு ஆசிரியரின் அகராதியில் கொடுத்துக்கொள்ளப்படும் விளக்கம், ஒருபோதும்’ அரசியல் சரிகளை’ எழுதாத பெரும் கலகக்காரர்.

விதைக்கவேண்டியதை விதைத்தாயிற்று எனவே மாடனை மகாவிஷ்ணுவாக்கப் பார்ப்பதான பாவனை காட்டி கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

பகுதி நான்கு இப்படித் தொடங்குகிறது.

<இவ்வளவிற்கும் பிறகுதான் மாடன் கண்விழித்தது. அப்போது அது புது இடத்தில் இருந்தது. எதிரே கோயில் கட்டும் பணி வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சற்றுப் பெரிய கோவில்தான். மாடன் ஆறடி உயரமாயிற்றே. கோபுரம் வேறு. முன்பக்கம் பெரிய மண்டபம். இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம்.>

<எதிரில்>
<சற்றுப் பெரிய கோவில்தான்>
<கோபுரம் வேறு>
<முன்பக்கம் பெரிய மண்டபம்>
<இருபதடி உயர கர்ப்பக் கிருகம்.>
<பலிபீடம்.>

வெளியில் இருந்து ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி கோவிலுக்குள் நுழையும் நேரலை ஒளிபரப்பின் விளைவு உண்டாகிறது இல்லையா? பலிபீடம் எங்கு இருப்பதாகத் தோன்றுகிறது? குறித்துக் கொள்ளுங்கள் பகுதி ஐந்தில் தேவைப்படும்.

கதையில் இதற்குமுன் மாடனுக்கும் - அப்பிக்கும் நடந்த உரையாடல்கள் இருவருக்கிடையில் மட்டுமல்லாமல் மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாத கேட்காத வண்ணம் இருவருக்கு மட்டுமே தெரிகிறார்போல் நடந்தவை. அதற்கான காரணங்கள்.

1. மாடன் என்பது களிமண்ணாலான சிலை.
2.எல்லோரெதிரிலும் பேசுவதாக இருந்தால் அதற்கு முக்கியத்துவம் இருக்காது.
2. எந்த சதியும் எல்லோரும் அறிய நடப்பதில்லை.

இப்போது திறந்த வெளியில் பிரதிஷ்டை பண்ணப்படக் காத்திருக்கும் மாடனுக்கும் - அப்பிக்கும் இடையில் நடக்கும் மூன்றாவது உரையாடல்.

நடந்து முடிந்த சதி-கலவரத்தால் அப்பிக்கும் லாபம்தான் அவனுக்கும் நல்லகாலம் பிறந்துவிட்டது, அவனது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது என்பது போல் அவனது உருவ உடை மாற்றங்கள் குறித்த வர்ணனைகளில் தோன்றுகிறது.

< உடம்பு பளபளவென்று இருந்தது. வாயில் செழிப்பாக வெற்றிலை. குடுமியில் நல்லெண்ணெய். ஷோக்காக இருந்தான்.>

ஆனால் இது அவர்களுக்கு இடையிலான உரையாடலில் தெரியவே இல்லை. முன் இருமுறையும் புலம்பிய அப்பி இம்முறை புலம்பவே இல்லை. இதற்கும் அவன் உடலின் பளபளப்பிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா? அதெல்லாம் வாசகனாகப் புரிந்துகொள்ள வேண்டும் எழுத்தாளர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இப்படியெல்லாம் கேள்வி கேட்பது இலக்கிய தோஷம்.

மட்டுமன்றி,பகடியிலும் வேறு வேறு கண்களுக்கு வெண்ணையும் சுண்ணாம்புமாகவே தடவப்படும். 

பகுதி மூன்றில்

<சேரியே கலகலத்தது. சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், ‘எந்ததிசயமே தெய்வத்தின் சினேகம் ‘ என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின. பரமார்த்த நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார். ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது. வெள்ளைச் சேலையைக் கழுத்து மூடப் போர்த்திய, கணுக்கை மூடிய ஜாக்கெட் தரித்த, வெற்று நெற்றியும் வெளிறிய முகமும் கொண்ட, தேவ ஊழியப் பெண்கள் பக்திப் பரவசத்தில் அழுதார்கள். குழந்தைகள் ஒன்றுக்கிருந்தும், வீரிட்டலறியும் களைகூட்டின. மீதமிருந்த ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப்படுதலுக்கு உள்ளாகி விடலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள் வந்திறங்கினர்.>

இந்துக்களின் மூடத்தனத்திற்கு உரையாடலில் போகிற போக்கில் கிண்டலாகச் சொன்னால் போதாதா!

<இப்பம் நானறியாத்த வல்ல காரியத்திலயும் எறங்குதா மாடன் ? ‘

‘நீ அறியாத்த காரியமா ? புண்ணில குத்தாத டேய் அப்பி. ‘

‘பின்ன இஞ்ச வாற பெண்ணுவளுக்கொக்கெ கெர்ப்பம் உண்டாவுதாமே ? ‘

மாடன் திடுக்கிட்டது. ‘நான் ஒரு பாவமும் அறியல்லடேய்; கண்ணாணை ஒன்னாணை . . . ‘ என்று பதறியது.

‘நாலு ஊருக்கு ஒரே பெரளி. பிள்ளையில்லாத்த மலடியொ இஞ்ச வாறாளுவ, பூஜை நடத்தியதுக்கு. ‘

‘நான் இஞ்ச என்னத்தக் கண்டேன் ? லேய் அப்பி, எனக்கு இதொண்ணும் ஒட்டும் பிடிக்கேல்ல கேட்டியா ? சும்மா இருக்கியவனுக்கு மேல, அதுமிதும் செல்லி பெரளி கெளப்பிவிடுயதுண்ணா சென்னா, ஒரு மாதிரி அக்குறும்பா இல்ல இருக்குவு ? ‘>

சாதி பற்றிக் கண்ணும் கருத்துமாய் இருக்கும் ஆசிரியருக்கு எவன் எப்படிப்பேசுவான் அல்லது எவனைப் பற்றிக் குறிப்பிடுகையில் எந்த எந்த வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் அல்லது கூடாது என்பது படைப்பூக்கக் கோமா நிலையில் எழுதுவதால் பிடிபடுவதில்லை போலும். இதில் தான் பிடித்து வைத்ததெல்லாமே பிள்ளையார் என்கிற பெருமிதம் வேறு.

எல்லா வட்டார வழக்கிலும் எல்லா ஜாதிஜனங்கள் பற்றியும் எல்லா மதக்காரர்கள் பற்றியும் அரை அவிப்பு முட்டையாய் அடுக்கித் தள்ள வேண்டியது.

91ல் எழுதிய மாடன் மோட்சத்தில்

<‘பயந்து போட்டேன்டேய் அப்பி ‘ என்றது மாடன் அசமஞ்சமாக சிரித்தபடி.>

<அசமஞ்சமாக> என்பது அப்பி - மாடன் இருவரது வாழ்விலும் தலையேனும் காட்டக்கூடிய வார்த்தையா? அட அசமஞ்சமே!

2011ல் எழுதிய தாயார் பாதம்

ஆய்போனால் கூட ’அலம்பி’க்கொள்ளும் பிராமணர் ஒருவரின் வாய்மொழியில் சொல்லப்படும் கதையில், அவர் மற்றொரு பிராமணரிடம் பிராமண பாஷையில் 1970ஆம் ஆண்டில் <‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’> சொல்லப்படுகிற கதையில் அவர் தமது பாட்டியைப் பற்றி இப்படிச் சொல்வதாக இப்படி வருகிறது.


<ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும்.>

50 வயது பிராமணன் தனது பாட்டியின் முலை பற்றி தமது பத்து வயது இளைய நண்பனிடம் விவரிப்பதாக எழுதுவது - என்னதான் எழுத்தாளன் என்றாலும் -யதார்த்தத்தில் சாத்தியமா? அப்படி தானறியாத ஒருவரைப் பற்றி ஜாடையாக எழுதுதல் அவசியமா? அதிர்ச்சி மதிபீட்டிற்கு அளவே இல்லையா? வித்தியாசமாக எழுதுகிற போர்வையில் தன்னையும் மீரிய ஆழ் மன வக்கிரத்தின் வெளிப்பாடா?  

<வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.>

<எந்திரிச்சு>
<கழுவி>

’வந்ததை’ எழுதுவதற்கு இலக்கியம் என்ன காலைக் கடனா? எவன் வாழ்க்கை பற்றியும் அனுபவமோ அவதானிப்போ இல்லாமல் இது என்ன எழுத்து? 1991ல் என்னவாக இருந்ததோ அதுவேதான் இருபது வருடம் கழித்து 2011லும்.

மாக்கல் நந்தி வளராது
- விக்ரமாதித்யன்.

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி ஐந்து