Saturday, May 28, 2011

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி ஐந்து

July 10th, 2000

<உற்சாகமாய்த்தான் இருந்தது. கோவிலுக்கு முன் பெரிய பலிபீடம்.>

பகுதி நான்கில் பலிபீடம் இருந்த இடம் கோவிலுக்கும் முன்னால் அதாவது வெளியில்.

<இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம்.>

கோவிலுக்கு எதிரில் இருந்த பலிபீடம் பகுதி ஐந்தில் ஸ்டவ் ஜோசியம் போல கர்பக்கிரகத்திற்கு எதிரில் நகர்ந்துவிட்டது.


சேரியின் மாடனை கடவுளாகப் பதவி உயர்வு கொடுத்து ”கர்ப்பக் கிருகத்திற்கு” உள்ளே உட்கார வைக்கும் ’உயர்த்திக்கொண்ட’ சாதியினர் சேரி பாணியிலேயே பலிபீடத்தை மட்டும் தொடர்கிறார்களாம். ஆனால் பலியாகப் படைக்கப்படுவது என்னவோ அவர்களுக்குடைய உணவான சைவ சர்க்கரைப்பொங்கலாம்.சக்கரைப் பொங்கலை பலி என்றும் அதைப் படைக்குமிடத்தின் பெயரை பலிபீடம் என்றும் எழுதுகையில் இயல்பாக இருக்கிறதா? இட்டுக்கட்டியத்தனம் வந்துவிடவில்லையா?

எந்த உருவகத்தையும் படைப்பாய் எழுத எடுக்கையில், பொறியாய்த் தோன்றிய நிலையிலேயே பொருந்திவருமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.எழுதிச்செல்கையில் முழுமையை நோக்கி அது வராத பட்சத்தில் கட்டி இழுக்காமல் கைவிடுவதே கலைஞர்கள் செய்யும் காரியம். ஏதோவொரு வேகத்தில் எழுதத்தொடங்கி பாதி வரை வந்து தடுமாறுவதாகத் தோன்றி மனதிற்குள்ளும் பேப்பரிலும் நிராகரிக்கப்பட்டவை கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களிடமும் உண்டு. ஜெயமோகனே அறம் சீரிஸ் முடித்து,  

<மொத்தம் பதினாறு கதைகள். அவற்றில் இரண்டு கதைகள் சரியாக வரவில்லை என அரங்கசாமி சொன்னார். அருண்மொழியும் அதை உறுதிப்படுத்தினாள். இரு கதைகள் முடிவுறாமல் நின்றுவிட்டன. மற்ற கதைகள் பன்னிரண்டும் இப்போது வெளியாகியிருக்கின்றன.>

கூறியது நினைவிருக்கலாம். கதைகளின் முடிவில்.. March 15th, 2011

சடையர் என்கிற நையாண்டி பாணியில் எழுதப்பட்ட கதையை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு அணுகலாமா?

முழுமையாகக் கதையைப் பார்க்காமல் துண்டு துண்டாக ஆங்காங்கே மட்டும் பார்த்து சிரித்துவிட்டுப் போக இது என்ன கமர்சியல் சினிமாவில் காமெடி வீரப்பன் எழுதிய சிரிப்பு ட்ராக்கா?


கொத்துக்கறிக்காக பரோட்டாவைப் பிய்த்துப் போட்டாலும் எல்லாத் துண்டுகளும் பரோட்டாவே! ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு வகையாய் இருக்குமென்றால் பிசைந்த கைகளில் கள்ளம் அல்லது பிசையப்பட்ட மாவில் கலப்படம்.

<காடு மேடெல்லாம் காணாமல் போய்>
<முழு எருமை காவு வாங்கிய அந்தப் பொன்னாட்களில் இப்பகுதி பெரிய காடு. ஊடே நாலைந்து குடிசைகள்.>
<முன்பெல்லாம் காடும் வருடம் முழுக்க மழையும் இருந்தது. வீசியது என்றால் ஒன்றுக்குப் பத்தாக முளைக்கும்.>
<இந்தக் காடு போனப்பளே நமக்குப் பெலன் போச்சி>

காடு அழிந்து நாகரிக நாடாக ஆனதில் ஆதிவாசியின் வாழ்வாதாரம் அழிந்துபட்டதன் அவதிகள் கதையாக்கப்பட்டுள்ளதா?

ஆதிவாசிக்குக் கடவுளின் செய்தியைக் கொடுத்து அவனை நல்வழிப்படுத்துவதாக நம்பி பைபிளைக் கொடுத்தனர் என்பதும் அவன் எங்கள் ஆள் என்று கோஷித்தபடி பகவத் கீதையைக் கொடுக்க இன்னொரு கூட்டம் கூப்பாடு போடுவதுமே யதார்த்தம்.

காட்டுவாசியை நாகரீகமாக்குகிறேன் பேர்வழி என்று நம்மைப்போல் அவனை மாற்ற முயலும் ஆதிக்க மனத்தை அறிவுஜீவிகள் கண்டிப்பதைப் பிரதிபலிக்கும் கதையா?

ஆதிவாசி நம்மிடம் வந்து ஒருபோதும் தொல்லை கொடுப்பதில்லை. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாய் நாம்தான் நமது வாழ்விடத்தை  விஸ்தரித்து அவனிடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறோம்.

அடடா இவ்வளவு ஆழமாகவெல்லாம் சிந்திப்பவரா ஜெயமோகன்? அவரது யோசனை எல்லாம் அப்போதையக் காற்று எந்த திக்கில் அடிக்கிறது அதை எப்படி தூற்றிக் கொள்ளலாம் என்று திசைகளின் நடுவே காத்திருப்பவர் அல்லவா!

அட ஆமாம் மாடன் மோட்சம் வெளியானது 91ல். மண்டல் எதிர்ப்பு கொழுந்துவிட்டு எரிந்த காலம் அல்லவா? சலுகை என்கிற பெயரில் சாதீயம் கூர்மைப்பட்டு இந்துமதம் பலகூறுகளாய் ஆகிவிடாமல் ஒன்றிணைக்கத்தானே அயோத்திப் போராட்டம் தீவிரமாக்கப்பட்டது! 

இலக்கியம் சமூகத்தைத்தான் பிரதிபலிக்க்கிறது எல்லோர் எழுத்திலும். எந்தக் கோணங்களில் உண்மைக்குப் புறம்பான எத்துணைக் கோணல்களில் பிரதிபலிக்கிறது என்பதல்லவா முக்கியம்.

அறவே கறி உண்ணாதோர்
விசேஷ நாட்களில் கறி உண்ணாதோர்
கறி கறி என்றே என்னாளும் அலைவோர்

<அதைப் பார்த்தபோதே மாடனுக்கு ஜொள்ளு ஊறியது. விசாலமாக முற்றம். முற்றம் நிறைய பலி! மீண்டும் பழைய நாட்கள்!>

<மாடனுக்கு ஜொள்ளு ஊறியது> கறி கறி என்றே என்னாளும் அலைவோரின் குறியீடோ மாடன்?

<கோவில் கட்டி முடிந்து, திறப்புவிழாவும் பிரதிஷ்டை மகா கர்மமும் நிச்சயிக்கப்பட்டது.>

<திறப்புவிழாவும்> 

இது என்ன தலைவர்களின் சிலை திறப்பு விழாவா? 
மாடன் பறக் கடவுள் ஆகவே கும்பாபிஷேகம் என்று சொல்ல இயலாதோ?அப்புறம் எப்படி ’பிரதிஷ்டை’ அது என்ன ‘நிச்சயிக்கப்பட்டது’ 

ஓ நையாண்டி என்பதால் நையாண்டித்தனமாய் எழுதப்பட்டது போலும். எழுத்துகளைக் கோணல்மாணலாக அச்சடித்தால் நையாண்டி இன்னமும் தூக்கலாகத் தெரியும் பதிப்பாளர் தமது பங்களிப்பாக அடுத்த பதிப்பில் அமல்படுத்தட்டும்.

அடுத்த காமெடி

<குழந்தைகள் முன்புபோலத் தன்மீது ஏறி விளையாட முடியாதது மாடனுககு என்னவோ போல இருந்தது.>

மாடன் என்ன சறுக்கு மரமா? 

<மாடன் ஆறடி உயரமாயிற்றே.>

அதனால்தானே 

<இருபதடி உயர கர்ப்பக் கிருகம். >

போதாக் குறைக்கு நிற்கிற போஸில் இருக்கிற சாமி

<‘பிலேய் அப்பி, ஒண்ணு ரெண்டல்ல ஆயிரம் வரியமாட்டு நின்னுகிட்டு இருக்குத காலாக்கும் இது; பாத்துக்க . . . ‘>

குழந்தைகள் ஏறி ஆடமுடியாதே என்று மாடன் வருத்தப்படுகிறது. நேரு மாமா போல நவம்பர் 14தான் மாடனுக்கும் ஜனனதினம் போலும். இலக்கியம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். களிமண் சிலைமேல் ஏறிவிளையாடி குறைந்தபட்சம் குழந்தைகளின் கைகால்களுக்கேனும் சேதாரம் ஆகாமல் இருந்தால் சரி. ஜெயமோகன் கதைக்கு அடையாளமே சேதாரம்தானே!

<சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.>

கோவிலுக்குள் இருக்கும் சக்கரைப் பொங்கலின் மணம் வயிற்றைக் குமட்டுகிறதாம்.அது என்ன தலைப்பாக்கட்டு பிரியாணியா தெருவைத் தாண்டும்போதே ஆளைத் தூக்க?


<சுற்றியும் கம்பிவேலி போடப்பட்டிருந்தது.>

இன்னமும் கோவிலின் கோபுரத்திற்கும் வெளியே, கம்பி வேலிக்குள்தான் மாடன் இருக்கிறது என்பதை ஆசிரியர் மறந்துவிட்டாரோ? 

<பெரிய நம்பூதிரி மைக் வைத்து, டேபிள் ஃபேன் ஓட, தூபம் வளர்த்து, அதில் நெய்யும் பிறவும் அவிஸாக்கி, இருபத்தி நாலு மணி நேர வேத கோஷத்தில் ஈடுபட்டிருந்தார். மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருந்த அதன் அந்த மாற்றமற்ற ராகம் குஞ்சன் மூப்பனின் பசுமாடு, தெரு முக்குச் சோனி நாய் ஆகியவற்றைப் பாதிப்படையச் செய்து தங்களை அறியாமலேயே அதே ராகத்தில் குரலெழுப்பும்படி அவற்றையும் மாற்றியது.>

ஜெயமோகன் காப்பி அடிப்பது லோகப் பிரசித்தம். அதற்காக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலேவில் இருந்தெல்லாமா? ’ஆட்டுக்குட்டி முட்ட இட்டு’ பாட்டின் இறுதியில் கழுதை கத்துவது எவ்வளவு இயல்பான நகைச்சுவை. அதைப் பார்த்துப் போட்டுக் கொண்ட வலிந்த சூடுதானோ ‘பசுமாடு சோனிநாய் பகடி’.

<மாடனின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது. யாரையாவது நாவாரத் திட்ட வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் கம்பிவேலி. ஜனத்திரள். அப்பியை வேறு காணவில்லை.>

ஆக எல்லோர் பார்வையிலும் படும்படியாக மாடன் இருக்கிறது.

<யந்திரபூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்பி வந்தான். மாடன் பிரகாசம் பெற்றது. அப்பியில் அந்த உற்சாகமான வாசனை வந்தது.>

மாடன் கண்ணுக்கு ஜனத்திரள் அனைத்தும் தெரிகிறது. ஆனால் ஜனங்களுக்கு மாடன் சிலையாக மட்டுமே இருக்கிறது. 

அப்பியுடனான மாடனின் முதல் சந்திப்பு இரவில். இரண்டாம் சந்திப்பு யாருமற்ற இடத்தில். மூன்றாம் சந்திப்பு <ஜனத்திரள்> நடுவில். இப்போது சந்திப்பு மட்டுமல்ல எல்லோர் மத்தியிலும் உரையாடல் வேறு. ஆனால் யார் காதிலும் விழாத எவர் கண்ணுக்கும் தெரியாத நீண்ட உரையாடல்.


பக்கவாட்டில் இருக்கிற காரணத்தால் பறவையின் சிறகுகள் திசைக்கொரு பக்கம் அடித்துக் கொண்டால் பறத்தல் சாத்தியமா?

<‘எரிப்பன் பெலமாடோய் அப்பி ? ‘ என்றது மாடன்.

அப்பி பொல பொலவென்று அழுதுவிட்டான்.>

ஆலையம் பிரவேசிக்க அப்பிக்கு அனுமதி மறுப்பு. சிலை பிரதிஷ்டையே இன்னும் முடியவில்லை ஆனால் அடடா உண்டியலில் பணம் போடப்படுகிறதாம். உற்பத்திப் பொருளான மாடன் அதை உற்பத்தி செய்யும் தொழிலாளியான அப்பிக்கு அன்னியமாகிவிடுகிறது.

<அந்தாலப் பாத்தீரா உண்டியலு ? அண்டா மேதிரி இருக்கு. அதிலக் கொண்டு செண்ணு இடுதானுவ. மாடன்சாமிக்குத் தாறோம் உனக்கெதுக்கு இங்காவ. ‘>

 என்று எவர் கண்ணுக்கும் படாமல் மாய யதார்த்தமாய் இருவரின் உரையாடல் பல தளங்களைத் தொடுகிறது. ஆசிரியருக்கே அப்பி மாடனைத் தொட்டது தெரியவில்லை. தெரிந்திருந்தால் எழுதி இருக்க மாட்டாரா என்ன? வைத்துக் கொண்டு வஞ்சனை செய்பவரல்லவே ஜெயமோகன்!

அத்துனை ஜனத்திரளிலும் ஒருத்தனுக்கு மட்டும் நேத்திராலையாவில் பொருத்தப்பட்ட தீக்ஷண்யக்கண்.

<‘ஆருடா அது, மாடன் சாமியைத் தொடுறது ? ‘ என்றது ஒரு குரல். பொன்னு முத்து நாடான் கம்புடன் ஓடிவந்தான்.>

கவிதாலையா போல் காதாலையா என்று ஒன்றும் இருந்திருந்தால் பாவம் ஓடிவந்தவனுக்கு இருவரின் உரையாடலும் கேட்டிருக்கக்கூடும்.

<‘ஈனச்சாதிப் பயலே. சாமியைத் தொட்டா பேசுதே ? ஏமான் ஏமான் ஓடி வாருங்க . . . ‘>

அப்பி அடித்து விரட்டப்படுகிறான்.

<அப்பி தள்ளாடியபடி விலகி ஓடினான். இருமுறை விழுந்தான். தூரத்தில் நின்றபடி அவன் அழுவதும், மாடனை நோக்கிக் கையை நீட்டியபடி ஏதோ கூவுவதும் தெரிந்தது.>

கறியாலடித்த பிண்டமாக இதைவிட வலிந்து யாராலும் சித்தரிக்க முடியாது.

<மாடனுக்கு மார்பை அடைத்தது. ஆயினும், அதன் மனம் விட்டுப் போகவில்லை. இன்னமும் ஒரே நம்பிக்கை பலிதான். எது எப்படியென்றாலும் இனி வருஷாவருஷம் கொடை உண்டு; பலி உண்டு. கும்பி கொதிக்கக் காத்திருக்க வேண்டியது இல்லை. அதுபோதும். அதற்காக எந்தக் கஷ்டத்துக்கு உள்ளாகவும் தயார்தான்.>

சபாஷ். ஹிந்துத்வ அத்தாரிட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். களிமண் பொம்மையை கெளரவத்திற்குரிய கடவுளாக பிராமணர்கள் முகூர்த்தம் பார்த்து எப்போது பிரதிஷ்டை செய்கிறார்கள் தெரியுமா?

<வெயில் சாய ஆரம்பிக்கும்வரை பூஜையும் மந்திரச் சடங்குகளும் இருந்தன. >

சபாஷ்! எந்தக் கோவிலில் பிரதிஷ்டை அந்தி சாய்ந்தபின் நடக்கிறது? நாட்டார் தெய்வங்களை மேட்டுக்குடியார் சுவீகரித்துக் கொண்டனர் என்பதைச் சொல்ல வருவதன் லட்சணமா இது?  

<பிற்பாடு மாடன் பெரிய கிரேன் ஒன்றின் உதவியுடன் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்டு, யந்திர பீடத்தின்மீது அமர்த்தப்பட்டது.>

ஆறடி உயர களிமண் பொம்மையைக் கிரேன் தூக்கினால் என்ன கதியாகும் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு படைப்பு ’பூக்கு’ கிடையாது.

<மாடன் அறையை நோட்டம் விட்டது. நல்ல வசதியான அறைதான். ‘எலட்டிக்லைட் ‘ உண்டு. காற்றோட்டம் உண்டு.

’அறை’க்குள் கிரேன் போகுமா? என்று கேட்பவன், கலை வழியே கடவுளிடம் ஒருநாளும் செல்ல முடியாத கபோதி. 

<முக்கியமாக மழை பெய்தால் ஒழுகாது.>

அப்படி என்றால் கூரை இருக்கிறது என்று பொருள் அல்லவா? ஏனைய்யா கிரேன் என்றால் என்ன? எந்தப் பொருளையும் கிரேன் மேலிருந்தல்லவா தூக்கும். கூரை உள்ள அறைக்குள் கிரேன் எப்படி மாடனைக் கொண்டுபோய் வைக்க முடியும்?

ஆஞ்சநேயா! நீதான் உனது சேனையிடமிருந்து தமிழிலக்கியத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.

<திருப்தியுடன் தன் வாயைச் சப்பிக் கொண்டது. என்ன இழவு இது,>

என்னது ”வாயைச் சப்பிக் கொண்டதா?” வாசகனும் அதைத்தான் கேட்கிறான் என்ன இழவு இது.

”சப்புகொட்டிக் கொண்டது” என்பதை ”சப்பிக் கொண்டது” என்று எழுதியதற்காகவே அ.முத்துலிங்கம் சிபாரிசில் நோபல் பரிசு ஒன்றை ஜெயமோகனுக்கு பார்ஸலாக அனுப்பி வைக்கலாம்.

<பூஜைக்கு ஒரு முடிவே இல்லையா ? சட்டு புட்டென்று பலியைக் கொண்டு வந்து படைக்க வேண்டியது தானே ? எத்தனை வருஷமாகக் காத்திருப்பது.> <ஆக்கப் பொறுத்தாயிற்று, ஆறவும் பொறுத்து விடலாம்.>

நானே அங்கலாய்ப்பும் ஆறுதலுமாய் அந்திமகாலம் வரை எழுதிக்கொண்டே இருப்பேன் - ஜெமோ - தி.ந - மா.மோ பக்:89 பத்தி:3 வரி:4,5 &6.

சக்கரைப் பொங்கல் மணம் வெகு தொலைவிலிருந்தே வயிற்றைக் குமட்டும் அளவிற்கு மோப்பம் பிடிக்கிற மூக்கிற்கு, தவமாய்த் தவமிருக்கும் கறியின் வாடை தெரியாதா? அப்படியொரு வாடை அந்த வட்டாரத்திலேயே இல்லை என்று அதற்குத் தோன்றவேத் தோன்றாதா?

<இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப் பட்டரை நோக்கிப் ‘பலி கொண்டு வாங்கோ ‘ என்றார்.>

சரி நம்பூதிரி கிச்சனுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்.

<மாடனின் காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன.>

<சர்வாங்கமும் இனித்தன> ஓ! அந்த இறக்குமதிக்கான வஸ்து, ஸ்ட்ரா போல ஏற்றுமதிக்கும் பயன்படுமோ!

<நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது.>

பலி என்பது என்ன டம் பிரியாணியா, ஏற்கெனவே தயார்செய்து தட்டு போட்டு மூடி எடுத்துவர? உயிரோடு இருக்கும் பிராணி கண்ணெதிரில் கொல்லப்படுவதற்குப் பெயர்தானே காவு, பலி.

<ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது.>

தூபப் புகையால், ஜலதோஷம்போலும் மூக்கிலே கொண்டுவந்து முட்டிய பிறகே சர்க்கரைப் பொங்கலின் வாடை தெரிகிறது.

<என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை ஓங்கியபடி, ‘அடேய் ‘ என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.>

<அது பாய்ந்து எழ முயன்றது.> உட்கார்ந்திருந்ததா? எப்போதிருந்து?

முடிந்து கொண்டால் பொறையளவு கூட காணாத தலைமுடியை முடியாமல் தொங்கவிடுவது பெரிய குறையில்லை. விரித்துப்போட்டதோடு நில்லாமல் வெளிச்சம் படும்போதெல்லாம் நொடித்துக் கொள்வது, தீவிர சிகிச்சை தேவைப்படுவதன் அறிகுறி.

ஒருமைப்பட்ட மனமும் மூளையும் ஒன்றாகக் கூடிய மோன நிலையே சிருஷ்டிகரம் அல்லது படைப்பூக்கம். அந்த நிலையில் கலைஞனின் நாட்டம் எண்ணிக்கையிலோ அளவில் எத்துனைப் பெரிது என்பதிலோ இருக்க முடியாது. முழுமை மட்டுமே அவனது குறி. மொழுக்கென இருப்பதெல்லாம் முழுமை அல்ல. எடுத்துக் கொண்ட கருவுக்கேற்ற முழுமை. கருப்பொருள் தீர்மானிக்கும் கட்டமைப்பின் முழுமை.

மாடு தின்ன அலையும் மாடா உனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒழுங்காய் இரு. உனக்கு இலவசமாய் சிலுவை மாட்டப் படுவது கருணையினால் அல்ல. அதன் உள்நோக்கம் சுயலாபமே! சிலுவை தொங்குவதில் ஒன்றும் பெரிய கெளரவமும் இல்லை. உனக்கென்று வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளால் நீ கட்டப்படிருக்கிறாய் என்பதை ஒருபோதும் மறவாதே! 

அரசு அலுவலகங்களில் மிகுந்த குரோதத்துடன் தணிந்த குரலில் சொல்லப்படும் ஒரு பழமொழி ”நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..... ”

இதைச்சொல்ல ஒரு ஜாதீய வாயும் கேட்க இன்னொரு ஜாதீயக் காதுமே போதும். இலக்கிய முகமூடி அவசியமில்லை.