Thursday, May 12, 2011

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி ஒன்று

மாடன் மோட்சம் 1991ல் பிரசுரமானது.
July 10th, 2000

ஐந்து பகுதிகளாய் பகுக்கப்பட்டிருக்கும் நையாண்டிக் கதை.

கதைச்சுருக்கம்.

ஒன்று - எவரும் தன்னை மதித்துக் கொடை என்ற பெயரில் உணவிடாததால் மாடன் என்கிற சிறு தெய்வம், பசியும் கடுப்புமாய் புறப்பட்டு சேரிக்குள் போய் பூசாரியைப் பார்த்து தனக்கான கவனிப்பின்மையின் காரணம் சேரியின் பறையர்களில் பெரும்பாலோர் கிறித்துவத்திற்கு மாறி விட்டமைதான் எனவும் அவர்களைத் திரும்ப கட்டுக்குள் கொண்டு வர கொள்ளை வியாதியைப் பரப்புவதன் பயத்தால் மட்டுமே முடியும் என்கிற பூசாரியின் விளக்கவுரை மற்றும் உத்தியைக் கேட்டுத் திரும்பத் தான் இருக்குமிடம் நோக்கி வருகிறது.

பேச்சு வழக்கைப் பார்த்தால் நாகர்கோவில் எனக்கொள்ளலாம்.

இரண்டு

காலம் மாறி நவீனமாகிவிட்டது. சேரி முன்னேறி தார் ரோடும் சாக்கடையும் குழந்தைகளுமாக இருக்கிறது. பூசாரி சொல்லிய உத்திக்கு உபயோகம் ஒன்றுமில்லை. அந்தக்காலம் போல் பெரிய மரண பயமில்லை. எனவே எவரும் படையல் கொடுக்க வரவில்லை. பூசாரியின் நிலையே கிட்டத்தட்டக் கையேந்தல்தான். செல்லாக் காசான மாடனைத் தாண்டிப் பிழைப்பைப் பார்க்கப்போகும் பூசாரியுடன் மாடன் இன்னுமொரு உரையாடல். புதிய யோசனையைப் பூசாரி தெரிவித்தல்.

மூன்று

பூசாரியின் யோசனையின்படி மாடன் மரித்ததுபோல் கிடக்க பூசாரியின் இரக்கம் வரவைக்கும் நாடகம். கிறித்துவர் - ஹிந்து என கட்சி கட்டிப் பிளவு பட்டு அணிகள் திரளுதல். 

நான்கு

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாடனுக்கான கோவிலுக்கு எதிரில் மாடனுக்கும் பூசாரி அப்பிக்குமான உரையாடல்.

ஐந்து

பறைச்சேரியைச் சார்ந்த மாடன் பிராமணர்களின் கடவுளாய் பிரதிருஷ்டை செய்யப்படுதல்.

எந்தக் கதையையும் போல இது இன்னொரு கதை என்று மேலோட்டமாய் படிக்கும் வாசகனை மூச்சு முட்டி பிரமிக்க வைக்கக்கூடிய கதை. 

***

கதை எப்படி ஆரம்பிக்கிறது?

<ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது.>

பறைச்சேரியைச் சேர்ந்த மாடன் கதை முடியும்போது பிராமணக் கடவுளாக மாறி தன் வீரம் இழந்து வயிற்றுப் பசிக்காக வழிதவறி கிடா படையல் சக்கரைப் பொங்கல் பிரசாதமாய் ஆகிவிட்டிருப்பதை எதிர்த்துப் போராடக்கூட நாதியற்றவனாய் ஆகவேண்டும்? இதுதானே மேலோட்டமான ஒன்லைன்.

அப்படி இருக்கையில் உயர்த்தப்பட்ட சாதியினரின் முகூர்த்தப் பத்திரிகை வாசிப்பு போல இது என்ன ஆடிமாதம் திதியை சித்தயோகம் சுபதினம்? 

வாய்க்கு வாய் வார்த்தைக்கு வார்த்தை உரையாடலில் பற, பறக்குடி, பறையன் என்று எழுதுவது வெறும் அதிர்ச்சி மதிபீடா அல்லது அலுவலகத்தில் சொல்ல முடியாததைப் பாத்திரம் வழி சொல்லிப்பார்த்துக் கொள்கிற ஆழ்மன சொறிதலின் சுகமா?

உள் நோக்கங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். வெளிப்படையாய் வார்த்தைகளில் வெளிப்பட்டிருப்பதன் இலக்கிய சாமுந்திரிகா லட்சணம் என்ன?

<ஆடிமாதம்> 
ஆடி மாதம் என்பது சூன்ய மாதம். ஆடி மாதத்தில் சுபதினம் - முகூர்த்தம் உண்டா? அமங்கல மாதம் என்பதால்தானே எவனும் புதுசு வாங்க மாட்டேன் என்கிறான். அதனால்தானே ஆடித்தள்ளுபடி விற்பனையே அமலுக்கு வந்தது.

<திதியை> 
திதி என்பது தினத்தைக் குறிக்கும் பொதுச் சொல், திதி என்பது இந்த வரியில் ஏதோ விசேஷ தினம் என்பது போலக் குறிப்பிடப்படுகிறதே அது எப்படி?

”விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும், சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதியாகும்.

திதியின் பெயர்கள் என்ன?

பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி மற்றும் சதுர்த்தசி.”

இந்து ஞானமரபின் அத்தாரிட்டி! இன்னும் சில வருடங்களில் இலக்கிய கொடுமுடியான விஷ்ணுபுரம் எழுதப் போகிறவருக்குப் பூணூல் மரபைப் பற்றிய புரிதலின் லட்சணமே இதுதானெனில் ஞானமரபின் லட்சணம் எப்படியோ?

<சித்தயோகம்> நினைத்த காரியம் கைகூடும் தினம் என நினைத்துவிட்டதோ எழுத்தாளச் சிகரம்? 

”சித்த யோகம் என்றால் சித்தியாகுமா?

அப்படி எல்லாம் இல்லை. ஒரு சிலருக்கு மரண யோகமே நன்றாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஜாதகமே எதிர்மறையாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மரண யோகம் நல்ல பலனைக் கொடுக்கும்.” http://www.yarl.com/forum3/index.php?showtopic=41528

என்றைக்கோ எழுதிய கதைக்கு, தட்டினால் தகவல் கிடைக்கும் இன்றைய இணைய வசதியுடன் நொட்டை சொல்வதாய்ப் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தத் தகவல்கள் எல்லாம் சேர்ந்ததே கலாச்சாரம் என்பது. அவனவன் வாழ்க்கைச் சூழல் மட்டுமே அவனவனுக்கு நுட்பமாய்த் தெரியும். பேத்தலாய்ப் பேச்சு வழக்கைக் கொத்து பரோட்டா போலப் பிய்த்து எழுதிவிட்டால் அடுத்த சமூகத்தவனின் வாழ்வை அறிந்ததாய்ப் பொருளில்லை. எல்லார் எழவையும் ஒருவனே எடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அல்லது எல்லாவற்றையும் எழுதினால்தான் எழுத்தாளன் என்று இல்லை. மாமா மாமி என அழைத்தால் பிராமண வாழ்வு தெரிந்ததாய்ப் பொருளா? வே என்றால் திருநெல்வேலி தெரிந்ததாகுமா?என்ற உன்ற என்றாலே கோவைக் கவுண்டனை வேட்டியில் முடிந்து கொள்ள முடியுமா?

தெரிந்தால் எழுதவேண்டும். தெரிந்ததை மட்டுமே எழுத வேண்டும் எல்லாம் தெரிந்தது போல் எழுதக் கூடாது என்பதை சுட்டுவதே நோக்கம்.

நல்ல நாள் நேரம் பார்த்து மாடன் விழித்துக் கொண்டது என்பதைச் சொல்ல நேரெதிர் வார்த்தைகளைப் பயன்படுத்துவது அடிப்படையே அறியாத அபத்தம் இல்லையா? இது போல் ஏகப்பட்டதை அம்பாரமாக எழுதிக்கொண்டே போவதில் என்னளவுக்கு என்னளவுக்கு எனப் பீற்றல் வேறு எதற்கு?

ஒட்டுப்போட்ட சட்டையில் ஓரம் தைக்காமல் விட்ட துண்டுத்துணியெல்லாம் பையாகுமா? என் சட்டையில் எட்டுப் பை என்பதில் என்ன பெருமை?

அறியாமையில் எழுதப்பட்ட நையாண்டி, கண்ணாடிப் பிரதிபிம்பமாய் நம்மையே பார்த்து இளிக்கும்.

எழுதுபொருளாய் எதை எடுக்கிறோமோ அதன் சாரம் உள்வாங்கப் பட்டிருக்க வேண்டும். எழுத்தாளனுக்கு உள்ளே இருந்து வரும் பட்சத்திலேயே அதன் முழுமை விகசிக்கும்.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே! இப்படியாக முதல் கோணலாய் விழித்த மாடன்

<கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து>

அப்பா என்ன துல்லியம் <கீய்ஞ் கீய்ஞ்> என்று இருமுறை இப்படி ஒரு முறை அப்படி ஒருமுறை உரசிப் பதம் வந்துவிடுகிறது என்ன இருந்தாலும் சிகரம் செதுக்கிய மாடன் இல்லையா?

<இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான்?>

<தேமே என்று> பிராமணனை இனிமேல்தான் பார்க்கவே போகிற மாடனுக்கு பிராமண பாஷை மட்டும் தெரிந்துவிட்டதே! ஆசிரியர் போலவே நல்ல சூட்டிகையான சாமிதான்.’தேமே’இது யாருடைய சொல்லாடல்? நாட்டார் மேட்டரா? அட எழவே மேலோட்டப் பார்வையில் ’கதை ’ சொல்ல வருவதே நாட்டார் தெய்வத்தை பிராமணாள் தத்தெடுத்து வளர்ப்புப் பிராணியாக்கிக் கொண்டதைப் பற்றிதானே? அப்படியான தோற்றப் பிழை கொடுப்பதால்தானே இதற்கு இப்படியொரு முற்போக்கு மவுசு.

<இப்படியே விட்டால் மீசையைக்கூட பீராய்ந்து கொண்டு போய்விடுவான்கள்.>

<பீராய்ந்து> மாடன் என்ன பலமொழி மன்னனா? மெட்ராஸ் பாஷையெல்லாம் கூடத் தெரிகிறதே?

<இளிச்சவாயன் என்ற பட்டமே தன்னை வைத்து ஏற்பட்ட மரபுதானோ என்ற சந்தேகம் மாடனுக்கு வந்தது.>

<மரபுதானோ> இன்னாபா மாடன் ஒண்ணா மெட்ராஸ் பாச பேசுது வுட்டா ஷ்ட்ரெய்ட்டாத் திருப்பனந்தாள் மடத்துப் புலவராயிடுது!

<இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில், பன்றிகளின் அமறல் ஒலித்தது.>

நன்றாக நினைவில் பதியுங்கள். முதல் சேரி விஜயத்தில் மாடனின்  பார்வையில் பதிவது இது. இதற்கு வேலை பின்னால் வருகிறது.

<ஞைய்ங் என்று ஒரு பன்றிக்குட்டி அன்னையைக் கூப்பிட்டது.>

<ஞைய்ங்> இது பன்றியின் குரலா? அமறலா? இல்லைக் கொசுவினுடையதா? அமெரிக்க வெள்ளைப் பன்றிகூட ’ர்ர்ர்’ சத்தம் இல்லாமல் கத்துமா?

<வந்த உத்வேகத்தில் ஒன்றைப்பிடித்து லவட்டி விடலாமென்றுதான் தோன்றியது.

<உத்வேகத்தில்> ஸ்வாமி பாஷையான சமஸ்க்ருதம் தெரிந்த, சிறுபத்திரிகை படிக்கும் மாடனோ?

<லவட்டி> ஐ லவ் மெட்ராஸ் யூ டூவா ரைட்ரே?

<ஒரு பயந்தாங்குளி (நாய்) அதற்குள் பிலாக்கணமே ஆரம்பித்து விட்டிருந்தது. சவலை நாசியைத் தூக்கி, மூசு மூசு என்று மோப்பம் பிடித்தது. மாடனை உணர்ந்ததும் ஒரே பாய்ச்சலாக வராண்டாவில் ஏறி நின்று, பாட ஆரம்பித்தது.>

<மாடனை உணர்ந்ததும் வராண்டாவில் ஏறி நின்று>

1989-1991லேயே நாகர் கோவில் சேரியில் வராண்டா பால்கனி எல்லாம் உள்ள பங்களாக்கள் இருந்தன என்று ”நூறு இருநூறு முன்னூறு ஆண்டுகளானாலும் அசைத்துப் பார்க்க முடியாத எழுத்தாளுமையான நண்பர் ஜெயமோகன்  அவர்களே!” எழுதியிருக்கிறார் என்பது தெரியுமா நாஞ்சில் நாடன் அவர்களே!

அடடா காலாகாலத்திற்கும் நிற்கப்போகிற கல்வெட்டு எழுத்து என்று இதைத்தான் கோஷிக்கிறார்களோ!

<அவனைத் தன் பட்டாக்கத்தியால் நெற்றிப் பொட்டில் தொட்டு> 

சென்ற பாராவில்தானே சார் மாடன் சார் அவர்கள் 

<கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது.>

கை வாள் - பட்டாக்கத்தியாயிடுச்சே! இன்னா ஒரு கண்ட்டினியூட்டி, பிரமிக்க வைக்கிறது ஆசிரியரின் நினைவாற்றல்.

<‘பிளேய், எலெய் அப்பி; பிள்ளேய் . . . ‘ என்று கூப்பிட்டு எழுப்பியது மாடன்>

பர்வா நஹி சுடலைமாடன் தேவுடு, தோடாத்தோடா நாகர்கோவில் பாஷைகூட போல்தா ஹை.

<ஒரே உதையால் பயலின் தொப்பையை உடைக்குமளவு வெறி எழாமல் இல்லை.>

<உதையால்> உதைத்தால், தொப்பை என்கிற தோலாலான அங்கம், கிழியுமா இல்லை உடையுமா?

தமிழ்தாத்தாவின் சொல்லாட்சியின் தரம்தான் என்னே!

<மேலும் அப்பி பரமபக்தன்.>

அப்பி என்ன அர்ச்சகரா? பட்டரா? இல்லே, பரமபக்தன்னு சொல்ல மாடன்தான் என்ன மஹாவிஷ்ணுவா மேன்?


<‘என்னவேய் ஒரு மேதிரி பேயறீரு ? மிந்தா நேத்திக்கு வரேல்லியா ? ‘>

<வேய்> இதி திருநெல்வேலி காதா செப்பண்டி?

எல்லா வட்டார வார்த்தைகளையும் வஞ்சனையில்லாமல் கலந்துகட்டினால்தான் தமிழிலக்கியத்திற்குத் தானைத்தலவனாகலாம் என்பது அப்போதே போட்ட பிளானா?

அதைவிட மாஸ்டர் பிளான் மத மாற்றம் பற்றி எழுதினால் அயோத்தி கரசேவை ஹிந்து ஏக்தா அலை தூக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்போ? அதை மறைக்கவே 91ல் வெளியானாலும் 89லேயே எழுதப்பட்டது என்கிற அடிக்குறிப்பா? (1989 ல் எழுதப்பட்டது. முதல் பிரசுரம் – 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில்.) புத்தகத்தில் இருப்பது வெறும் [புதிய நம்பிக்கை-1991] இதுலையேத் தெரியுதே எங்கப்பன் குதுருக்குள்ள இல்லே! என்னா ஒரு அற ஆவேசம்!

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? கணக்கு வழக்கோடதான் சகல காரியங்களும். நர்மதா அணைப் போராட்டம் நடக்கிற 87 காலகட்டமா? அவிழ்த்து விடு படுகை என்கிற பெயரில் அணைகட்டல் பற்றி. மூடர்களுக்கு என்னத் தெரியப்போகிறது அணை எனப் பார்த்ததுமே ஆஹா முற்போக்கு என கோஷிக்க ஒரு கோவை ஞான கும்பல் உண்டு! 

அதே போல அயோத்தி சீஸனுக்கு அடிடா லக்கிப் பிரைஸ் - மாடனை வைத்து தலித்துகள் எல்லாம் கிறித்துவராக்கப்பட்டனர் என்கிற அடி நீரோட்ட செய்தி. மேலோட்டப் பார்வையில் ஹிந்து - கிறித்துவர் இருவரையும் இணையாய்க் கலாய்த்ததாய் ஒரு ஏய்ப்பு. 

காற்றடிக்கும் திசை பார்த்து பாய்மரம் விரி! நாளையே சந்துத்வம் ரோடுத்வம்தாம் செலாவணி எனில் சங்கடமே இல்லாமல் தாவிக்கொள். 

அரசியல் எதுவாகவும் இருந்துத் தொலையட்டும் குறைந்த பட்சம் சொல்ல வந்தது இயல்பாகவும் நேர்மையாகவும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதே நம் இலக்கியக் கவலை?

அடுத்து நீளும் டயலாக்குகளில் சொல்லப்படும் விஷயம், மாடனுக்கு விசுவாசமாய் இருந்த சேரி தலித்துகளில் பெரும்பாலானோர் ஏசுவுக்கு விசுவாசிகளாய் ஆகிவிட்டமையே, மாடனுக்குக் கொடை கிடைக்கா மல் போனதற்குக் காரணம் என்பதுதான்.

சுவிசேஷத்திற்குப் போன தலித்துகளையும் சேர்த்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்க ஐடியா சொல்லி மாடனை அனுப்பி வைக்கிறான் பூசாரி அப்பி.

80-90களின் ”அண்ணே எனக்கு ஒரு ஐடியாண்ணே” என்கிற செந்திலின் குரலும் ”என்னடா” என்கிற கவுண்டமணியின் குரலும் அப்பியும் மாடனுமாக ஆகி இருப்பதை, எழுதப்பட்ட காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியமாகக் கொள்வது, படைப்பில் புதிய பரிமாணத்தைத் தரிசிக்க உதவக்கூடும்.