Monday, June 6, 2011

ஆசைதான் காரணம்

சுந்தர ராமசாமி, 
நாகர்கோவில்
15.1.87.

அன்புள்ள மாமல்லன்,

உங்கள் 1.1.87 கடிதம்.

உங்கள் கடிதம் இல்லையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கவில்லை - வரும்போது சந்தோஷமாக இருக்கிறது என்றாலும். நீங்கள் எழுதியிருப்பதுபோல் சம்பாஷித்துக் கொண்டிருந்தால் சரிதான்.

என்னுடன் மனஸ்தாபம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். என்ன என்றே தெரியவில்லை. நான் நினைத்துப் பார்க்கும்போது எப்போதும் நீங்கள் என் மனதில் நெருக்கமாக இருப்பதையே உணருகிறேன். சந்தர்ப்பம், சூழல் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் இருக்கும்போது எனக்கு உங்கள் மீது கோபம் வந்ததுண்டு. உள்ளூர. தகுந்த நேரத்தில் உங்களுக்குத் தோன்றத் தெரியும் என்றாலும் தகுந்த நேரத்தில் உங்களால் மறைய முடிவதில்லை. ஆசைதான் காரணம். சில சமயம் நீங்கள் பின் பெஞ்சுக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் ஆசிரியரால் நாற்காலியிலிருந்து உங்களைக் கிளப்பவே முடியாது.

முரண்பாடுகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு அப்படியே உடன்பாடு. புத்தகத்திலிருந்து உங்களுடைய விலகல் ஒரு இடைக்காலக் காரியமாக இருக்க வேண்டும். நிரந்தரக் காரியம் ஆகிவிடக் கூடாது. இதெல்லாம் என் ஆசை சம்பந்தப்பட்ட விஷயங்கள். புத்தக வாசனையே அற்ற ஞானிகளையும் நமக்குத் தெரியும். புத்தகப் புழுக்கள் - உண்மையாகவே வாழ்க்கையின் முன்னால் ஒரு புழுவாக இருப்பவர்கள் - நமக்குத் தெரியும்.

திரைப்படங்கள் பார்க்க சந்தர்ப்பமே எனக்குக் குறைவு. முடிந்தவரை திருவனந்தபுரம் போய் விட்டு வரத்தான் செய்கிறேன். ஒரு படம் பார்க்க ஒரு முழு நாள் போய்விடுகிறது. 150 கிலோ மீட்டர் பஸ் யாத்திரை. மறுநாள் சோர்வு. இங்கு சில வேலை முடக்கங்கள். மனதில் சில அற்புத அசைவுகள். சில சமயம் உடல்ரீதியாக முடியாமல் போய்விடுகிறது.

உன்னத மனமே உன்னதத்தைப் பெற்றெடுக்கும் என்கிற அளவுகோல் எனக்கு இல்லை. உன்னத மனம் உன்னதத்தைப் பெற்றெட்டுக்க முடியாது என்பதும் இல்லை. கீழ்மை தேவை என்பதும் இல்லை. எப்படியோ வாழ்ந்து கலையைப் படைக்கலாம். மனிதனாக இருந்து சாகலாம். இந்த இரண்டு கருத்தும் தேர்தலுக்கு நின்றால் என் வாக்கு இரண்டாவது கருத்துக்கு. அவ்வளவுதான்.

சென்னை வந்திருந்தோம். நானும் மனைவியும். தைலா அமெரிக்காவிலிருந்து வந்தாள். உங்களைச் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. நடுவில் எங்கள் மைத்துனியின் கணவர் குரோம்பேட்டையில் மறைந்த செய்தியும் வந்து சேர்ந்தது. 

உங்களுக்கு ஏன் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சுரா.