Saturday, July 2, 2011

எழுத்துக் கலை - பட்டை தீட்டுதல்

உறுதியுடன், மந்தஒலி எழுப்பியபடி இயங்கிக் கொண்டு இருந்தது இயந்திரம். சீரான கதியில் திட்டிவாசலைத் திறப்பதும் இரண்டு ஸ்டீல் ராடுகளைப் பொருத்தி வைத்துவிட்டு மூடுவதும் இயந்திரம் முனகி முடித்தபின் அதன் சிறு கதவைத் திறந்து குளிர்ப்பான் பாலாய் கொட்டி நனைத்துக் கொண்டிருந்த தண்டுகளை எடுத்து அருகில் வைத்துக் கொண்டு திரும்ப உள்ளே புதியவற்றைப் பொருத்துவதுமாய் இருந்தார் எதிரில் இயங்கிக் கொண்டிருந்த இளைஞர். இயந்திரம் இயங்கிக் கொண்டு இருக்கையில் வெளியில் எடுக்கப்பட்ட ஸ்டீல் தண்டின் சிறு பள்ளத்தின் மேற்புறத்தை, நீண்டு மெலிந்தஇறகுபோல் பிடியுடன் இருந்த கருவியால் சீராகத் தேய்த்துவிட்டு வேறொரு இடத்தில் சேமித்துக் கொண்டு இருந்தார். 

கனரக வாகனங்களுக்கான கியர் பாக்ஸுக்கு உள்ளே இருக்கும் பிரதான ஷாஃப்ட்கள்தாம் உருவாகிக் கொண்டு இருந்தன. ஸ்டீல் துண்டத்தின் நீளம் அரையடி இருந்தாலே அதிகம். ஆனால் கியர் பெட்டிக்கு அதுதான் தண்டுவடம். வழவழத்து உருண்டு பளபளத்த ஸ்டீல் தண்டு ஷாஃப்ட்டாக உருவாக, முன்னும் பின்னும் ஆயிரம் காரியங்கள் செய்யப்பட்டும் காத்துக் கொண்டும் இருந்தன எனினும், அந்த இயந்திரத்தின் அப்போதைய விதிக்கப்பட்ட பணி பள்ளம் பாரித்தல் மட்டுமே. கணிக்கப்பட்ட துல்லிய அளவுகளில் உருளையில் பள்ளம் உருவாக்குவதுடன் இயந்திரத்தின் பணி முடிந்தது. ஆனால் உருவாக்கத்தின் போது அனிச்சையாய் உண்டாகிக் கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத, ஸ்பரிசத்திற்கு மட்டுமே பிடிபடும் பிசிறுகளைத்தான் தேய்த்து இலகுபடுத்திக் கொண்டிருந்தார் இயந்திரத்தின் எதிரில் இருந்த பணியாளர். 

தானியங்கி இயந்திரம். பொருத்தப்படும் பொருளில் வரையறுத்து போதிக்கப்பட்ட அளவுகளில் கச்சிதமாக பள்ளம் பாரித்துக் கொடுத்துவிடும் தேர்ந்த இயந்திரம் எனினும் நுட்பப் பிசிறுகளை மனித யத்தனத்திலேயே தேய்த்து எடுக்கவேண்டி இருந்தது.

ஷாஃப்ட் உருவாக்கத்தில் உண்டாகிக் கொண்டிருந்த பிசிறை தேய்த்து நீக்க உபயோகிக்க்கப்பட்டுக் கொண்டிருந்த சொரசொரப்பான கருவியின் ஆதார கச்சாப் பொருள் வைரத்துகள். வைரத்தைப் பட்டை தீட்டுகையில் கழிவாக சேகரமாகும் தூசியை இரும்பில் கலந்து உருவாக்கப்பட கருவி.
பட்டை தீட்டாத வைரம் வெள்ளைக் கரியன்றி வேறென்ன? ஒன்றைப் பட்டை தீட்டுகையில் உருவான கழிவு எத்துனைப் பொருட்களைப் பட்டை தீட்ட உபயோகப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

கழிவுதான் எருவென்று ஆகும்போது கழிவில் இருக்கும் இழிவுதான் என்ன?

எதுவாக இருந்தாலும் உருமாறுகிறதே அன்றி உருவாவதும் இல்லை அழிவதும் இல்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

ஆன்மீகப் பெருவெளியில் நீந்திக் கொண்டிருப்பதாய் அலட்டிக் கொள்ளும் நம் குருவி மண்டை, எளிய உண்மைகளை அவ்வளவு எளிதில் உணர்வதில்லை. உண்மையான கேள்விகள் எழுவதற்கு வாகாய் மனதைத் திறந்து வைத்துக் கொண்டால் தவிர நிச்சலன நீச்சல் சாத்தியமில்லை.