Sunday, July 31, 2011

உப்பரிகை [சிறுகதை]

பாத்ரூமில் பிளாஸ்டிக் பக்கெட்டுக்குள் சர்ரென்று சீறி நுரைத்துக்கொண்டிருந்த நீரையும் மீறிக்கொண்டு சலிப்பின் சத்தம் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரை நோக்கி வந்தது. 

சேச்சேச்சே ஒரு நாளைப்போல இதுங்களோட தொல்லை தாங்கலை. காத்தாலதான் கழுவினேன். அதற்குள்ளாகத் திரும்பவும். ம். 

நாளிதழின் தலையங்க பக்கத்தை மேய்ந்தபடி இருந்தவர், புலம்பல் எதைப் பற்றியெனப் புரிந்தவராய், தலையைத் தூக்காமலே கூறினார். 

கம்பிவலை போட்டால் எல்லாம் சரியாகிவிடும். 

தண்ணீர் சிந்திவிடாதிருக்க, ஒரு பக்கமாய் மடித்திருந்தது தரைவிரிப்பு. பாதி நிரம்பிய வாளியை முன்னால் தூக்கிக்கொண்டு, குதிகால் தெரிய தூக்கிச் செருகியிருந்த நைட்டியைக் கீழிறக்கி பால்கனி பார்க்க நடந்தபடி, 

ஆமாம் அது ஒன்றுதான் குறைச்சல். சுற்றி மூன்று பக்கமும் போட்டுவிட்டால் ஜெயில் மாதிரியே ஆகிவிடும். 

இப்பக் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இருப்பதுபோல இருக்கிறதே! 

என்ன ப்ரூவோ போங்கள். 

இல்லை, போனமுறை பால்கனிக்குக் கம்பிவலை போட்டால் நாய் வண்டி மாதிரி ஆகிவிடும் என்றாய்! நாய்வண்டிக்கு ஜெயில் நல்ல இம்ப்ரூவ்மெண்ட்தானே. 

எச்சங்களை ஈரத்துணியால் துடைத்துத்துடைத்தே வார்னிஷ்போய் பிறந்தமேனியாய் ஆகிவிட்டிருந்த பிரம்பூஞ்சலைத் துடைத்தபடி திரும்பிப் பார்க்காமல், 

சிரியுங்கள். உங்களுக்கென்ன ஹாலில் பேப்பர். அதைவிட்டால் டிவி. போதாக்குறைக்கு அறையில் புத்தகம் கம்ப்யூட்டர் என்று ஏஸியை விட்டு வரவே வேண்டாத காரியங்கள். எனக்கென்ன அப்பிடியா? சமையலறையில் புழுங்கியது போக, எப்போதேனும் அக்கடாவென்று உட்கார இந்த வீட்டில் இருக்கிற ஒரே இடம் பால்கனிதான். அதில்போய் இப்படி அக்கிரமம் பண்ணி வைத்தால் என்ன பண்ணுவது?. ம். 

எட்டடிக்கு நாலடி பால்கனியில் பக்கெட்டு நீர் விசிறி விழுந்து சளார் சளாரெனத் தென்னந் துடைப்பம் ஒலியெழுப்ப, கீழே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கெல்லாம் ஆயுதபூஜையின் சந்தனத் தெளிப்பாய் இலவசப் பொட்டுக்கள் கிடைத்தன. அவர்கள் வீட்டு வண்டி ஷெட்டில் இருந்தது. 

காத்திருப்போர் பட்டியலில் வரிசை அங்குல அங்குலமாய் நகர்ந்துகொண்டு இருக்கையில், இரண்டாவது மாடி பால்கனி கிடைக்குமா என்று ஏங்கிய நாட்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மரங்களும் மாடிகளுமாய் கடல் பார்க்க போட்டி போட்டு உயர்ந்து நின்ற குடியிருப்பு. மாநகரத்திலேயே மிகுந்த கிராக்கியுள்ள இடம். அந்தஸ்தும் ரசனையும் உள்ளவர்கள் மட்டுமே ஆதிகாலத்தில் இடம் வாங்கிப்போட்ட வட்டாரம். பிற்காலச் சந்ததிகளின் அந்தஸ்து மேலும் கூடி வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்ததில், அந்த பகுதியே வாசஸ்தலம் போல ஆகிவிட்டிருந்தது. அமைதியும் இயற்கையும் கொஞ்சும் பிரதேசத்தில் மலிவான அரசு வாடகையில் ஒண்டக்கிடைத்ததே அதிகம். ’ஓய்வுபெறும்வரை’ மட்டுமே என்பது எழுதப்படாத சட்டம். செளகரியமாய் உட்கார்ந்தபின் ஜன்மஜன்மாந்திர சொந்தமாய் உணர்வதே உயிர்களின் சாஸ்வத நினைப்பு. 

இருமல் தும்மல் போல சாதாரண எரிச்சலாய் ஆரம்பித்தப் பறவைகளின் படுத்தல், தாங்க முடியாத இம்சையாய் ஆகிக்கொண்டு இருந்தது. சதா நேரமும் விரட்டிக் கொண்டிருப்பதே நாளின் பெரும்பகுதியை விழுங்கத் தொடங்கிற்று. தனியாக ஆளை நியமிக்கவேண்டும் போல விரட்டுவதே ஒரு வேலையாய் ஆகத் தொடங்கிற்று. சும்மா இருந்தால் வீட்டிற்குள்ளும் எட்டிப்பார்க்கத் தலைப்பட்டன. 

பலவருட கெஞ்சல்களுக்குப் பிறகு துவைத்ததைக் காயவைக்கவும் இளைப்பாறிக்கொள்ளவும் என்று கட்டப்பட்ட பால்கனியை கழிப்பிடமாக்குவதையே கங்கணம் கட்டி அமலாக்கத் தொடங்கி இருந்தன பறவைகள், அதிலும் குறிப்பாய் காகங்கள். அடுத்திருந்த மரக்கிளைகளில் யதேச்சையாய் அமர்ந்திருப்பதுபோல கூட்டம் போட்டுக் கொண்டிருந்தன. 

வீட்டாருக்கு பால்கனி எப்படிச் சொந்தமாக முடியும்? மண்ணும் மரங்களுமாய் இருந்த இடத்தில் கட்டிடம் முளைக்கத் தொடங்கியதே அநியாயம். யாருடைய மண்ணில் யார் கட்டிடம் கட்டுவது? மெத்தனமாய் இருந்த நம் மூதாதைகளின் மெளடீகம்தான் இன்றைய அவல நிலைக்குக் காரணம். அதையாவது போய்த் தொலைகிறது என்று விட்டாலும் முந்தைய தலைமுறை, பால்கனி கட்டத் தொடங்கியதை ஆக்ரமிப்பாய்ப் பார்க்கத் தவறியதுதான் மன்னிக்க முடியாத குற்றம். ஆக்குரோஷமாய் குரல்கொடுத்தது ஒரு காகம். 

என்ன அநியாயம் இது? ஆதாரமான நம் இருப்பே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதா? நாம் இல்லையெனில் வீடெங்கே? வீடில்லையெனில் மனிதர்களெங்கே? மனிதரில்லாவிடில் கழிவெங்கே? கழிவும் மிச்சம் மீதிகளும் இல்லையெனில் வாய்நீளும் இந்தக் கேடுகெட்டக் காகங்களுக்கு உயிரெங்கே? காலாகாலமாய் நாம் படும் அவஸ்தைகள் கொஞ்சமாநஞ்சமா? கல்லும் மண்ணுமாய் இருப்பதென்ன அவ்வளவுக் கேவலமா? எனக் கொந்தளிக்கத் தொடங்கின காலாகாலமாய் எல்லாம் பார்த்தபடி நின்றிருந்த குடியிருப்புக் கட்டிடங்கள். 

மொட்டைமாடிக்குக் கீழிருக்கும் மூன்றாவது மாடியே ஏமாந்தவன் தலையில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. காற்றின் அழிச்சாட்டியத்தில் ஆளே பறக்க நேரிடும் என்பதால் எப்போதும் மூடப்பட்டே வைத்திருக்கவேண்டிய மூன்றாவது மாடி ஜன்னல்கள். கோடையில் கேட்கவே வேண்டாம் தளம் என்று ஒன்று உண்டா என சந்தேகம் வருமளவிற்குத் தகிப்பு. இத்துனைக்கும் எட்டு வீட்டுத் தண்ணீர்த் தொட்டிகளைத் தலையில் சுமந்த மொட்டை மாடிகள். மழை அடித்தால் மூன்றாவது மாடிக்கே தலைபாரமாகி ஜலதோஷம் பிடித்து சுற்றுச்சுவரெங்கும் மூக்கொழுகல் கறை. 

இரண்டாவது மாடிச் சுவர்களுக்கு ஈரப்பதம் மட்டுமே. மழை வெறித்த சில நாளில் தாமே காய்ந்துவிடும். வெளியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே வெயில் அடிப்பது தெரியும்படியான குளுமை. திறந்த ஜன்னலில் மிதமான காற்று. படியேற சிரமப்படும் பலகீன இருதயமுள்ள பெரியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கே முதல் மாடி. அதையெல்லாம் தாண்டி, ஆள்பலம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை. காற்று வெளிசத்திற்காகக் கதவு ஜன்னலைத் திறந்தால் எல்லோருக்கும் காட்சிப் பொருளாய் இருக்கும் கீழ்வீடு. ஆனாலும் எல்லோருக்கும் முதல் தேர்வு என்னவோ அதுதான். 

இரண்டாண்டிற்கு ஒருமுறை கிடைக்கும் உள்வெளி சுண்ணாம்புப் பூச்சுகளாலேயே ஆரோக்கிய தோரணையில் ஊளைச் சதைபோட்டு ஊதிக்கொண்டிருந்த கட்டிடங்கள் உள்ளூர வெதும்பிக் கொதித்தன. 

மாடிகளில் குடியிருப்போருக்குத் துணி காயவைக்கும் வசதியில்லை என்கிற முறையிடல்கள் தலைநகர்வரை பயணம் செய்து பல வருடங்கள் கழித்து எட்டுக்கு நான்கென்ற இடைவெளியில் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இரண்டிரண்டாய் சதுரக் கைத்தடிகள் முளைத்தன. உச்சி நோக்கி வளர்ந்து உபரி தளம் பரப்பி பத்துவருடங்கள் முன்னால் உப்பரிகையாய் மாறின. 

உண்மை இப்படி இருக்கையில், பால்கனி எப்படி வீட்டின் பகுதியாகும். கேவலம் துணியின் பெயரால் நமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. நமது வாழ்வாதாரமாய் வீடுகளை ஒட்டி இருந்த மரங்களும் மரக்கிளைகளும் இரக்கமற்று வெட்டி வீசப்பட்டன என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா? ஓரத்திலிருந்து ஒல்லியாய் இருந்த காகத்தின் ஓங்கியெழுந்த குரல்கேட்டு இளம் காகங்கள் திரும்பிப் பார்த்து அதை நோக்கி நகர முண்டியடித்தன. 

அசைவ வீடுகளில் கிடைத்த மிச்சம் மீதிகளைக் கொத்திக் கொண்டு, சாவகாசமாய் தின்பதற்கான சாப்பாட்டு மேசைகளாக, பால்கனிகளைத் தேர்ந்தெடுத்தன. திரைச்சீலை மடிப்புகள் ஜன்னலின் கொக்கி பள்ளங்கள் மற்றும் டிவி கேபிள் உள்நுழையும் ஓட்டைகள் என எந்த இண்டு இடுக்கில் இருந்து எப்போது துர்நாற்றம் அடிக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாமல் போயிற்று. முகர்ந்து முகர்ந்தே வீட்டாருக்கு மூக்குகள் நீளத்தொடங்கின. காகங்கள், திருட்டுத்தனம் மட்டுமே கொண்ட எளிய பறவைகள் என்பதிலிருந்து வீட்டை நாற அடித்து வியாதியைப் பரப்பும் விரோத ஜந்துக்களாகப் பரிணாம வளர்ச்சி அடையத்தொடங்கின. விளிம்பை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் துளசி மற்றும் பூச்செடிகளிலும் தம் கால் மற்றும் அலகுவரிசையைக் காட்டத்தொடங்கின கிராதகக் காகங்கள். தளிர் மொக்கு என எதுவானாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு ரணகளமாய் ஆகிக் கொண்டிருந்தது உப்பரிகை. 

பால்கனிக் கதவை ஒரேயடியாய் மூடி வைப்பதுகூட யோசிக்கப்பட்ட ஒரு தீர்வுதான். எனினும் அதை அவ்வளவு சுலபமாய் செயல்படுத்தவிடாமல் விபரீத கற்பனை பயமுறுத்தத் தொடங்கிற்று. நிரந்தரமாய் பால்கனி மூடப்பட்டால், வீட்டின் முக்கியமான பகுதியை விட்டுக்கொடுத்து சரணடைந்ததாய் எடுத்துக்கொண்டுவிட்டால்? ஒன்றின் வெற்றியில் தைரியம் பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை கொண்டாடப்பட்டால் மொத்தமாய் வீட்டையே இழக்க நேரிடும் அபாயம், தூரத்து மின்னலாய் பயமுறுத்திக் கொண்டிருந்தது. 

வீட்டு மனிதர்கள் முகத்தையும் மூக்கையும் துணிகளால் மூடிக்கொண்டு வீடெங்கும் இருந்த துளைகளில் எங்கெங்கெல்லாம் அழுகிய மாமிசங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்துப்பார்த்து அகற்றுவதிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்கப் பழகிவிட்டிருந்தனர். 

இளைய காகங்களில் இரண்டொன்று வீட்டின் பின்புற வெளிச்சுவர்களில் துளை ஏற்படுத்தி சமையலறைக்குள் வெடிக்காய்களைப் பதுக்கத் தொடங்கின. அவை முற்றி அவ்வப்போது வெடித்துக்கொண்டிருந்தன. வெடிகள் சமையலறைத் தாளிப்பாய் தள்ளிநின்று பார்த்து உச்சுகொட்டித் தடவிக்கொள்ள வைக்கும் சகஜ காரியமாய் ஆகத்தொடங்கிற்று. 

அமைதியான பறவைகள் ஏன் இப்படி பஞ்சமாபாதகத்திற்கும் அஞ்சாமற் போயின என்று தனக்குத்தானே உரத்துக் கேட்டவன், புத்தி பேதலித்ததாய் பேதி மாத்திரைகள் வாயில் திணிக்கப்பட்டு, கக்கூசில் அடைக்கப்பட்டான். 

அடுத்த சந்ததிக்கு, பால்கனியைப் பராமரிப்பது அநாவசியமான வேலையாய்த் தோன்றத்தொடங்கிற்று. மாதக்கூலிக்கு என நம்பிக்கையான ஆள் நியமிக்கப்பட்டான். பறவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கென்றே நியமித்த ஆளுக்கு சதா சண்டையிடுவதே வாழ்க்கையாயிற்று. பால்கனியை அவனுக்கே எழுதிக் கொடுத்துவிட்டது போல் அதுவே அவனது நிரந்தர ஜாகையாகிப்போயிற்று. பறவைகளுக்கும் அவனுக்கும் நடந்த சண்டை அறிவிக்கப்படாத போராயிற்று. இருப்பைத் தற்காத்துக்கொள்ளவே சமர் செய்தாக வேண்டியதாயிற்று. யுத்த சப்தங்கள் நிரந்தரமாய் அடைக்கப்பட்ட பால்கனிக் கதவையும் தாண்டி எப்போதேனும் வீட்டுக்கார்களின் காதிலும் விழுந்தது. பூர்வஜென்ம தொந்தமாய் நடந்துவந்த யுத்தத்தில் தம் பக்கமே ஜெயம் உண்டாகவேண்டி வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குள் விளக்கேற்றி ஜெபிக்கத் தொடங்கினார்கள். 

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு எப்போதோ எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து, இதுதான் நமது உப்பரிகை என்று பூரித்துக் கொண்டார்கள்.

31 ஜூலை 2011