Saturday, August 6, 2011

நிறம் [சிறுகதை]

பான்பராக் குதப்பியபடி, கம்பியைப் பிடித்துக்கொண்டு, தொந்திகள் தொட்டுக்கொள்ள, பிளாட்ஃபாரத்தில் நின்றிருந்த வழியனுப்பவந்த குடும்பத்துடன், பேசிக்கொண்டு இருந்தனர் இரண்டு வடக்கத்திக்காரர்கள். யாரையும் கொஞ்சம் சுற்றிக் கொண்டு போகவைக்கும் அவர்களது கனபரிமானங்கள் காரணமாகத் தயங்கி நின்றான் எஸ்ஆர்எஸ். பேச்சிற்கு இடைக்காலத்தடை போடுவதை, அவர்கள் பரிசீலிப்பதற்கான முகாந்திரம் எதுவும் தட்டுப்படாததால், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்லிப்பார்த்தான். அதுவும் எடுபடாததால், தெருவோர சாறு பிழியும் உருளைகளுக்கு இடையில் நுழையும் தோல் சுரண்டிய வெண்சோகைக் கரும்பென, சன்ன கைப்பெட்டியை முன்னுக்கு நீட்டியபடி ரயில் பெட்டிக்குள் நுழையத் தலைப்பட்டான் எஸ்.ஆர்.ஸ்ரீநிவாசன் என்கிற எஸ்ஆர்எஸ். 

கரும்பு யந்திரம் சாவகாசமாய் அசைந்துகொடுத்ததில், வண்டிக்கு உள்ளேத் தள்ளப்பட்டான். கையில் பிடித்திருந்த பெட்டியைவிட அவன் சற்றே காத்திரமாக இருந்ததனால் உருளைகளால் பெரிய பாதிப்பு உண்டாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுக்கூடு படபடக்க அதுவே போதுமானதாக இருந்தது. வரப்போகும் கிளம்பப்போகும் வண்டிகள் பற்றிய அறிவிப்புகள் வரிசையாய் வந்துகொண்டு இருந்தன. அறிவிப்பின் நிசப்த இடைவெளிகளில் கக்கூஸ் நாற்றம் மூக்கைத் துளைத்தது. நிற்கிற ரயில், வழியனுப்ப வருபவர்களின் சிரமபரிகாரத்திற்குமானதுதானே. கழித்துவிட்டு நீர் ஊற்றினால் காலில் தெறிக்கும் என்கிற சுகாதார உணர்வுள்ள பழம்பெரும் கலாச்சாரக் குடிமக்களைப் பெரும்பாண்மையாய்க் கொண்ட நாடு. நாற்றத்தைத் தெருநாய்களென சகஜமாய் எடுத்துக்கொண்டு ஒதுங்கி நடக்கப் பழகிவிட்டிருந்தது உலகம். 

புதற்பாதை போலிருந்த ரயில் பெட்டியின் இடைவழியில் அடிக்கொருதரம் எதிர்ப்படும் முட்களாய், கால்கள் முட்டிகள் என நீண்டு நடைவழியைக் குறுக்கி இருந்தன. ஐந்தாறு வரிசைகளைத் தாண்டியதும் நின்று நம்பரை சரிபார்த்துக் கொண்டான். மூத்த குடிமக்கள் யாரும் சுற்று வட்டாரத்தில் தென்படாதிருந்தது, சற்று ஆறுதலளித்தது. முன்பதிவுகளுக்குள் இருக்கும் எழுதப்படாத உட்பதிவுகளின் உபத்திரவம். ஒவ்வொரு பயணத்திலும் கெஞ்சி வாங்கும், கழிப்பறைகளுக்கு சமதூர நடுப்படுக்கை, இந்த தடவை தனக்குதான் என்பது மிகுந்த சந்தோஷமளித்தது. 

இன்றோ நாளையோ உட்கார்ந்துவிடுவேனென்கிற தோற்றத்துடனிருந்த பெண்ணொன்று ஜன்னலோரம் அமர்ந்து மங்கலாகத்தெரிந்த தண்டவாளத்தையும் இரண்டு பிளாட்பாரம் தள்ளி விளக்கின்றி நின்றிருந்த ரயிலையும் பார்த்துக் கொண்டிருந்தது. அது தவிர குஞ்சு குளுவான்கள். குடும்பமே குல்ஃபி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. குல்ஃபிக்காக நிறையவே செலவழித்ததற்கு சாட்சியாய் இருந்தது குடும்பத்தின் எண்ணிக்கை. கடைக்குட்டி, அமெரிக்கா சென்ற விவேகானந்தரைப் போல வாயைத்தவிர வண்டி மொத்ததிற்கும் ஊட்டிக் கொண்டிருந்தது. கொஞ்சம்போல எஸ்ஆர்எஸ்ஸின் கைப்பெட்டிக்கும் கிடைத்தது. அம்மாக்காரி கடைசி செல்லத்தைக் கோவிலில் வைப்பவகளாக இருந்தாள். குல்ஃபியின் ஊட்டம் குடும்பம் மொத்தத்திலும் பூசி இருந்தது. குள்ள குண்டுக் குடும்பம். 

கருகருத்து அகன்றிருந்த மூக்கில் இரண்டு மூக்குத்திகள் மாரியம்மன் படம்போல் அப்பப்பட்டிருந்தன. அண்ணாச்சி மாமியோ என்னவோ. அருவாள் மாமியாகக் கூட இருக்கலாம். அல்லது அவாளாகவும் இருக்கலாம். யார் கண்டது. ஐயரையங்கார் மாத்வ ஸ்மார்த்தாள்களுக்கு இடையிலான வெளுப்புச் சாயைகளின் வித்தியாசம் போலவே கருப்பிலும் நுண்பிரிவுகள் பார்த்தவுடன் பிடிபட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும். பிடிபடாத பொது இடங்களில் பேச்சைத் தவிர்த்தல் உத்தமம் என்கிற பெருநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆயிற்று. அப்பாவின் காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திலிருந்தே ஊட்டப்டாமல் தானாய் வளர்ந்து நெரியாய்க் கட்டிக் கொண்டிருந்தது மெளனம். 

பாவாடை அடிக்கொருதரம் அணிச்சையாய் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தது. ஆறுமாதம் முன்புகூட தன்னுணர்வற்று, இன்னும் கொஞ்சம் கலகலப்பாக இருந்திருக்கக்கூடும். சிறுமியில் பெண்மை முளைகட்டும் கூச்சம். 

கைப்பெட்டியை சீட்டில் வைக்கப்போனதும், கால் விரித்து அகலமாய் உட்கார்ந்திருந்த அப்பாக்காரன் முக்கி முனகியபடி, பெண்ணோடு ஈஷிக்கொள்ளாத குறையாய் நகர்ந்துகொண்டான். அவன் வேட்டி விலகியதில் வலதுகாலில் பெரிய ப்ளாச்சுக் கட்டு போடப்பட்டிருப்பது தெரிந்தது. கவனிக்காமல் சிரமம் கொடுத்துவிட்டதற்கான சம்பிரதாய வருத்தத்தை சைகையால் தெரிவித்தான். அம்மாக்காரி ஜன்னலிலிருந்துத் தன்னை உள்ளுக்கு இழுத்து இடமேற்படுத்தி மகளை அழைத்துக் கொண்டாள். தான் அந்தச் சிறுமியை கொஞ்சம் அதிகப்படியாக, கவனித்ததாக அம்மாக்காரி நினைத்திருக்கக்கூடுமோவெனக் கூசினான். ஏதும் செய்வதற்கில்லை. நல்லெண்ணத்தை உருவாக்க எதுவும் செய்யாமல் அமைதிகாப்பதே நலம். செயலின்மையின் இடைவெளி கொடுக்கும் அமைதி, படபடப்பை சமன்படுத்தக்கூடும். 

கிடைத்த இடைவெளியில் அமர்ந்து, கைப்பெட்டியை மார்புக்காய் அணைத்து பவ்வியமாய்க் குறுக்கிக்கொண்டு கண்மூடினான். குல்ஃபியை ஊட்டிகொண்டபடி அடிக்கொருக்கால் அம்மாக்காரி பார்ப்பதை, பேருக்குக் கன்னம் என இருந்த அவனது தாடையிலும் உணர முடிந்தது. அசட்டைப் பார்வைக்கு, தூங்கும் பாவனையில் இருந்த இமைகளின் இடைவெளியில், அவள் அடிக்கடி அவனைப் பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாக இருப்பது போலவும் பட்டது. 

தற்செயல்போல் மேல்நோக்கிப் பார்த்தான். கைப்பெட்டியைப் பக்கத்தில் வைத்து, சடக்கென எழுந்தான். கீழ் பர்த்தில் ஒரு கால் வைத்து உந்தி எக்கினான். அவள் சற்று நகர்ந்து, தன் பர்த்தில் மறுகால் வைக்க இடமேற்படுத்தினாள். வீம்பாக அதை ஏற்காமல் எதிர் நடு பர்த்தில் ஒரு கையை அண்டக்கொடுத்துக் கொண்டான். காத்தாடியின் நடு பத்தையென, நீட்டிய கையின் பால்பாய்ண்ட்பேனாவும் ஊஞ்சலாடிய ஒற்றைக்காலும் நேர்க்கோட்டில் இருக்க, கம்பி வலைக்குள் சாமரம் வீசுவது போல் அசைய மறுத்த கருப்பு விசிறியைத்தள்ளி ஓடவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் விலுக்கெனக் கிளம்பிற்று வண்டி. நிலைகுலைந்து, மூக்குத்தியின் திரண்டுவிரிந்த தொடைகளுக்கு நடுவில் முகம் மோத நிலைகுலைந்து விழுந்தான். சரட்டென சமாளித்துக் கொண்டு தன் பர்த்துக்காய் பாய்ந்து பின்வாங்கி உட்கார்ந்ததில் பின்புறம் பலமாய் மோதிக்கொள்ள முதுகும் வலித்தது. அவளுக்கும் வலித்திருக்க வேண்டும். உச்சுகொட்டி தொடையை நீவி விட்டுக்கொண்டிருந்தாள். குறுகிப்போய் வளைந்து குனிந்திருந்தான். விளக்குக் கம்பத்தில் நேரெதிராய் மோதிக்கொண்டதுபோல் மூக்கு விண்ணென வலித்துக்கொண்டிருந்த்து. 

ஸ்தூலம்தான் எனினும் வாளிப்பின் ஸ்பரிச நினைவில் காது மடல்கள் கனன்றன. மானபங்கப்பட்டவனாய் மனத்தைப்பிடுங்கி பக்கவாட்டிற்காய் முகம்திருப்பிக் கொண்டான். விஸ்தரித்துக்கொண்டிருந்த நகரத்தால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்த விளிம்புகள், மந்தகதியில் உறங்கத் தயாராகிக்கொண்டு இருப்பது, ஜன்னல் வழி காணக்கிடைத்த சாலை வாகனங்களின் துரிதகதியில் தெரிந்தது. 

பயணச்சீட்டுப் பரிசோதகரின் வருகை, சகஜ பாவத்திற்குத் திரும்ப சந்தர்ப்பம் அளித்தது. டிக்கட்டுகள் அவளது ஜாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட பர்சிலிருந்து வெளியில் வந்தன. நடுவாந்திர குல்ஃபியை கொஞ்சம் சந்தேகத்தோடு பார்த்த பரிசோதகர் அம்மாக்காரியின் முகம் பார்த்து அமைதியாகி அடுத்த வரிசைக்குப் போனார். 

துப்பாக்கி சுமந்த தோளுடன் தள்ளாடிக் கடந்தார் ரயில்வே போலீஸ். தோட்டாக்கள் துப்பாக்கியிலேயே, தயார் நிலையில் இருக்குமா? அவசரமாய்த் தேவைப்படுகையில் தேடிப்போட்டுக்கொள்ள அவகாசம் இருக்குமா என்று உள்ளெழுந்த அசட்டுக் கேள்விகளில் இதழ் நெளிந்தது. 

ஆரவாரமும் கும்மாளியும் வண்டியின் தடதடப்பைப் பின்னணிக்குத்தள்ளி மேலெழுந்து முன்னோக்கி வந்தன. வெற்றுக் குறுகுறுப்பில் தலைகள் நடைவழிக்காய் நீண்டன. 

தடுமாறி வந்துகொண்டு இருந்த கருத்த காத்திரமான சரீரம் வெள்ளை சபாரி அணிந்திருந்தது. கையிலும் கழுத்திலும் தாம்புக்கயிறாய் தங்கம் ஜொலித்தது. வழியின் இருபுறமும் தாங்கலாய் வைத்த கைகள் ரயிலின் மேல் பர்த்துகளை அநாயாசமாய்ப் பிடித்தன. சபாரியின் தள்ளாட்டத்திற்கு ரயில் காரணமல்ல என்பது மூத்திர நாற்றத்தையும் மீறி காற்றில் மிதந்தது. வழியில் இருந்த பெண்மூக்குகள் அணிச்சையாய் விரல்தடவி சுளித்துக் கொண்டன. 

கட்டை குட்டையாய் இருந்த இருவருடன் வந்து, எஸ்ஆர்எஸ் இருந்ததற்கு அடுத்த வரிசை இருக்கைகளை ஆக்கிரமித்து தஸ்ஸு புஸ்ஸென ஆசுவாசப்படுத்திக்கொண்டது தெளிவாய்க் கேட்ட்து. 

மடிந்திருந்த பர்த்துகள் உயர்த்தப்பட்டுக் கொக்கிகளால் கவ்விக்கொள்ளப்பட்டபின், தட்டுபுட்டென தட்டப்பட்டு நித்திரைக்குத் தயாராயின. இருந்த இடத்தில் இருந்தபடியே அவள் துணிப்பைகளை ஓரிடமாய் ஒதுக்கிக் குவிப்பதைக் கண்ட எஸ்ஆர்எஸ், உபகாரமாய் எதிர்புற ஜன்னல் சீட்டிற்குப்போய் ஒண்டி உட்கார்ந்துகொண்டான். 

குல்ஃபி குடும்பக்காரி, சாமியாடிய குழந்தையை கீழ் பர்த்தில் அப்பனுக்கும் சுவருக்குமிடையில் படுக்கவைத்தாள். மலையேறியிருந்த இரண்டையும் தானிருந்த பர்த்தில் இழுத்துப் போட்டாள். ஆளைப்போலவே அகலாமாகவும் குட்டையாகவும் இருந்தது அவளது பின்னல். கிளம்பியபோது போட்டிருந்த ஜடையின் இறுக்கம் நெகிழ்ந்து கனபரிமாணத்தைக் கூட்டி இருந்தது. பின்னந்தலையில் விரல் நுழைக்கக் காத்திருந்ததுபோல் பிரிந்துகொண்டது. அநாயாசமாய் அள்ளி முடிந்துகொண்டாள். முதுகுப்பிரதேசம் அம்பாரமாய்த் தெரியவே லயித்திருந்தவன், தற்செயலாய் அவள் திரும்ப, பிடிபட்டுப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். அவள் கொஞ்சமாய் முறுவலித்ததுபோல பிரமை தட்டிற்று. 

பென்சிலாய் இருந்ததால், சட்டைப்பாவாடை எதிர் நடு பர்த்திற்கு பக்கவாட்டு ஏணியில் ஏறி, ரப்பராய் வளைந்து உள்ளே நுழைந்து நீட்டிப் படுத்தது. பழைய சேலையைக் காலால் உதைத்து தலைக்காய் இழுத்துக்கொண்டது. அம்மாக்காரி, போர்வையைப் பக்கவாட்டுகளில் செருகி மகளை நீள மூட்டையாக்கி வைத்தாள். அரை மணிநேரம் தாங்குமா அந்தப் பொட்டலக்கட்டு என்கிற நினைப்பில் உதடுகள் கோண பக்கவாட்டில் முகம் திருப்பிக் கொண்டான். மேல் பர்த் இரண்டும் ஏற்கெனவே படுத்துவிட்டிருந்தன. அவற்றில் பெண்ணுக்குமேற்புறம் இருந்தது, எப்போதோ சுருதிப்பெட்டியாகிவிட்டிருந்தது. 

நேரெதிர் பர்த்தில், கூடைப்பந்து வீரன்போல் ட்ராக் சூட்டுடன் நீளமாயிருந்த பையன் மடங்கி மரவட்டையாகி இருந்தான். குல்ஃபிக்காரிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜாகை, பக்கவாட்டு ஒற்றை இருக்கைகளின் மேல்பர்த்தாக இருக்க வேண்டும். குடிகோஷ்டிக்கு எதிரில் இருந்த ஒன்றுதான் காலியாக இருந்தது. 

சடக் படக்கென ஆங்காங்கே விளக்குகள் அணைக்கப்பட்டுக்கொண்டு இருந்தன. மற்றவர்கள் பற்றிய நினைப்பு கிஞ்சித்துமின்றி, குடிகார கோஷ்டி, பாட்டில் கிளாஸ்கள் கினுங்க, கூச்சலும் கும்மாளியுமாய் ஆர்பாட்டப்படுத்திக் கொண்டிருந்தது. காலியான பாட்டில்கள் ஜன்னல்வழியாக மோட்சம் அடைந்துகொண்டிருந்தன. ஓயாத வாயாக தடதடத்த தண்டவாள ஒலியெழுப்பி இருளைக் கிழித்து இருட்டோடு இருட்டாய் ஓடிக்கொண்டிருந்தது வண்டி. போதைப்பிரதேசம் மட்டும் வெளிச்சத் தீவாய் மிதந்துகொண்டிருந்தது. இன்னமும் குல்ஃபி, பர்த் மாற்றிக்கொள்ள கேட்காதிருந்தது எஸ்ஆர்எஸ்ஸுக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. இருட்டு பிரியும்முன், யார் எங்கே இருப்போம் என்பது தெரியாதபோதிலும், ஏதோ ஒரு பிணைப்பு இருவருக்குமிடையில் உண்டாகி இருப்பதான அசட்டுணர்வில் மனம் துள்ளிற்று. இன்னுமின்னுமென ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தது இரவு. 

படுக்கத் தயாரானாள். மகள், அவளது பார்வையில் இருக்கும்படியாக இந்தப்புறமாகவே தலை வைத்துப் படுப்பாள் என எண்ணிக்கொண்டான். அது மகளுக்காக மட்டுமன்று தனக்காகவும்தான் என முடிந்துகொண்டான். அப்படியாகவே அவள் படுக்கத் தேர்ந்தெடுக்கிற பட்சத்தில், தனக்கு அவள் மனதில் கொடுத்திருக்கும் இடம் விசேஷமானது என நினைத்துக்கொண்டான். 

போதும்‘எந்திரி’என்பதுபோல், ஒண்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு உரியவர் புரண்டு படுத்தார். ஒரே எக்கில் உடலை எதிரிலிருந்த பிரதான நடுபர்த்தில் நுழைத்து மல்லாந்து படுத்து, நடைவழி பார்த்துக் கால் நீட்டிக்கொண்டான். வெளிச்சத்திற்குக் கையை மறைப்பாக்கி இடுக்கில் எதிர்புறத்தைப் பார்த்தபடி இருந்தான். ஏணியில் அவள் ஏறுகையில் திரளப்போகும் பிருஷ்ட தரிசனம் மிகுந்த கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அதற்குள்ளாகக் குடிகாரக்கும்பல் விளக்கணைத்துவிடக்கூடாதே என்கிற கவலையும் எழுந்தது. முடிக்கிற கும்பலா அது? இன்று எப்படியும் ஏகாதசிதான் என்று உள்ளூர கிளுகிளுப்பு கூடிக்கொண்டு இருந்தது. 

விளக்கை அணைத்தாள். நடைவழியின் நீலம் கவிந்தது. தடுப்பு தாண்டி இருந்த விளக்குகளில் இருந்து கசிந்த மஞ்சள் வெளிச்சம் மங்கலாய்க் கலந்ததில் கற்சிலையில் மூக்குத்தியின் பளபளப்பு கூடியிருப்பதாய்த் தோன்றியது. 

எதிர்பார்த்தபடி அவள் இப்புறமாகவே தலையை வைத்துக் கொண்டாலும் விட்டத்தைப் பார்த்தவளாய் படுத்து, போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டாள். 

சரளமாய் வந்து விழுந்துகொண்டிருந்த கெட்டவார்த்தைக் கதம்ப வாந்திக்குக் கம்பார்ட்மெண்டே கண்ணோடு காதையும் முழுமையாய் மூடிக்கொண்டுவிட்டிருந்தது. 

கதவை அடுத்திருந்த ஒற்றை இருக்கைக்கு, காத்திருப்புப் பட்டியல் கனியாததால், கதியற்று நின்ற பெரியவரிடம் அனுதாபத்தை விற்றுக் காசாக்கி, அடுத்திருந்த பக்கவாட்டுப் பர்த்தில் துண்டுவிரித்துக்கொண்ட பரிசோதகரும் கண்வளர்த்துக் கொண்டிருந்தார். 

இரண்டுமூன்று முறை அம்மணி உச்சு கொட்டித் தூக்கம் வராத எரிச்சலைக் வெளிப்படுத்தியது, அவ்வளவு அமளியிலும் எஸ்ஆர்எஸ்ஸுக்குத் தெளிவாய்க் கேட்டது. கண்ணையும் காதையும் அகற்றினால்தானே தவறவிடுவதற்கு. எதாவது செய்யவேண்டும் போல் பரபரப்பாய் இருந்தது. எந்த கணமும் பர்த்தை மாற்றிக்கொள்வதற்கான சமிக்ஞை வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ஜுரம்போல் கூடிக்கொண்டிருந்தது. 

மல்லாந்து படுத்திருந்தவள் சுவருக்காய் ஒருக்களித்தாள். பருத்துயர்ந்த கீழ் இடுப்பு உன்மத்தம் கொள்ளவைத்தது. கவிழ்ந்து படுப்பவன் போல் பர்த்தின் ஓரத்திற்கு நகர்ந்து கீழ் பர்த்துக்காய் தலை நீட்டிப் பார்த்தான் எஸ்ஆர்எஸ். குடும்பத்தலைவரின் முதுகுப்புறம் ஆடிக்கொண்டிருந்ததில் ஆசுவாசப்பட்டவனாய் ஒருக்களித்து கை மறைப்பிற்குப் போக இருந்தவன், குல்ஃபி தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டு துணுக்குற்றான். கூச்சமும் குறுகுறுப்பும் சேர, கிலேசத்திற்கு உள்ளானான். 

அவளது பார்வை கொக்கியாகி அவனைக் கொத்தாய்ப் பிடித்து கும்மாளக்காரர்களின்முன் கொண்டுபோய் நிறுத்திற்று. 

சார்... 

ஆரவாரத்தில் அவன் ஒருவன் அங்கு நிற்பது அவர்கள் யாருக்கும் தட்டுப்படவே இல்லை. 

சார்... எல்லாரும் தூங்கணும்... 

இன்னாது...? 

இல்ல... வந்து... 

இன்னாது எல்லாரும் தூக்கணுமா? 

... 

யார் பக்கத்துலபா? உம் பக்கத்துலையா? 

கிக்கிக்கியென கிளுகிளுத்துச் சிரிப்பு வெடித்தது. பாரமான தலைதூக்கிப் பாதி கண்ணால் மையமாய்ப் பார்த்தன பக்கவாத்தியங்கள். 

பாக்க பல்லி மாதிரி இருக்கறே. ஐயிரே நீ இன்னா பெரிய பாப்பாரப் பருப்பா? இல்லே இன்னும் பழைய நெனப்பா? 

... 

ஈரோ வந்ட்டாரு. கெளப்பிக் குடுங்கடா! ஏய் யாருட்டப் பேசறேன்னு தெர்தா? ஓத்தா உங்க ராச்சியமெல்லாம் ராஜாஜி காலத்தோட ஓவரு. ங்கொம்மாள ’பத்தை’யாவாம டேசன்ல முய்ஸா எறங்கணும்னா மூடிகிணு போ. 

எஸ்ஆர்எஸ் பதில் எதுவும் பேசாமல் விழி அசைக்காது பார்த்தபடி நின்றிருந்தான். 

ஏய்.. என்று நாக்கை மடக்கிக்கொண்டு அடிப்பதுபோல கையை ஓங்கியபடி எழுந்தது சபாரி. அருகிலிருந்த சுண்டைகள் அண்ணெ அண்ணே என்று கையைக் கையைப் பிடித்தன. உதறிவிட்டபடி விரல் சொடுக்கிற்று. 

ஏய் இன்னா மொறைக்கிறே! பாப்பான்னு ஸொன்னது குத்துதா. முண்ட்ஞ்சா திருப்பித் திட்டிப்பாரு. கொத்த ஸொம்மா, நீ ஸொன்னேனு ஸொன்னாலே அள்ளிடுவான். அஃபென்ஸு கேஸு. கோத்தா நா அர்சில்வாதிடா, தெருவுல பஸ்ஸ மறிப்பேன். தண்டவாள்த்துலத் தலையும் குடுப்பேன். ஜெய்லுக்கும் போவேன். எதுக்கும் துண்ஞ்சவன். உன்னால மிடியுமா? நீ எங்கெனா ஆபீஸரா இர்ப்பே? வர்ர லஞ்சத்த வாங்க்கிணு பொத்திகினு போற வளியப் பாப்பியா, வந்ட்டாம் பெர்ஸ்ஸா. கோத்தப் போடா அப்பால... 

என்றபடி நெஞ்சில் கைவைத்து நெட்டித் தள்ளிற்று. எதிர் பர்த்தில் போய் குலைந்தான் எஸ்ஆர்எஸ். பட்டு பட்டென விளக்குகள் போடப்பட, பொலபொலவென கம்பார்ட்மெண்டே வெளிச்சமாகிவிட்டது. மொத்த ட்ரெயினும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கக்கூஸ் பக்கத்திலிருந்து துப்பாக்கி எட்டிப் பார்த்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தார் பரிசோதகர். 

ஏய் இன்னாடா ஓவரா சவுண்ட் உட்ற. ஒரே ஒரு காலு. அவ்ளதான் அட்த்த டேசன்ல ஆளு வந்து நிக்கிது பாக்றியா? இதின்னா ட்ரெயினா இல்லே டாஸ்மாக்கா? ஏம்பா டிகிட்செக்கிங்கு! இன்னா பண்ணிகினுகுறே? தோள்ல துப்பாக்கிய மாட்டிகிணு குறுக்கியும் நெடுக்கியும் நட்ந்துட்டா வாங்கற சம்பளம் ஜெர்ச்சிடுமா? பாடு, பேசிகினேப் போறான் பொட்டையாட்டம் எல்லாம் பாத்துகிணு இருக்கீங்க. 

எழுந்து உட்கார்ந்து அவிழ்ந்த தலையை முடிந்துகொண்டு செல்ஃபோனை ஆட்டியபடிக் கொதித்துக் கொண்டிருந்தது குல்ஃபி. குலைந்து விழுந்ததில் கூனிக் குறுகிப்போயிருந்த எஸ்ஆர்எஸ் தன்னை சேகரித்துக் கொண்டு எழுந்து நின்றான். 

வேகமாய் வந்த வெள்ளைச் சீருடை விரட்டிற்று. 

சார் கெளம்புங்க, சீட் நம்பர் என்ன? எஸ் டென்தான உங்க கம்பார்ட்மெண்ட். இங்க என்ன பண்றீங்க. போங்க சார். அங்க போங்க. 

நம்ப சகலதான்.... மாவட்டச் செய்லாலர்... 

அக்குளில் கைகொடுத்துக் கிளப்பப்பட்டபின், காக்கிச்சட்டையின் துப்பாக்கி மாட்டியிராத வெற்றுத்தோளில் சரிந்தபடி நேராக நடக்க பெரும் முயற்சி எடுத்துத் தடுமாறிப் போய்ச்சேர்ந்தது சபாரி. 

அதான. 

சும்மா சொல்லக்கூடாது. நாக்கைப் புடிங்கிக்கறாப்ல நல்லாக் கேட்டுது சார் அந்தம்மா. 

இப்பிடி நாலு பேர் கேட்டாதான் இவனுங்களுக்கும் புத்திவருமுங்க. 

நீட்டி முழக்கிய கொட்டாவிகளுக்கு நடுவில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் குரல்கள் எழுந்து தாழ்ந்தன. அடுத்தநாள் கவலையில் ஒன்றன்பின் ஒன்றாய் அணையத் தொடங்கின விளக்குகள்.

06 ஆகஸ்ட் 2011