Sunday, September 4, 2011

கர்வமும் கூச்சமும்

கல்லூரிக் காலத்தில் அண்ணாசாலையை இட வலப் பக்கங்களாய்ப் பிரித்தது, வெறும் மஞ்சள் கோடுதான். இன்றிருப்பது போன்ற பகுப்பு கிடையாது. ஆனால் பத்திரமாய்க் கடக்க வாகன நெரிசல் மிகுந்த முக்கியமான பகுதிகளில் சுரங்கப்பாதைகள் இருந்தன. எனினும் உபயோகிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. சாலையை ஒட்டி கருப்பும் வெள்ளையும் அடிக்கப்பட்ட நடைபாதையில் இருந்து மஞ்சள்கோட்டைக் கடந்து எதிர்சாரியில் ஏறுகையில் கருப்புப் பூச்சில் கால்வைக்கும் முன்னதாகப் பின்னால் பெரிய வண்டி எதுவும் கடக்காமல் இருந்தால்,

பத்து எண்ணுவதற்குள் மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் காக்கை பறந்துவிடாதிருந்தால்,

முன்னால் இருக்கும் குறிப்பிட்ட ஒரு இடத்தை, முன்னால் செல்பவர் கடக்கும் முன்னதாக நாம் கடந்துவிட்டால்,

கண்டிப்பாக பெரிய எழுத்தாளனாகிவிடுவோம் என்கிற கற்பனை விளையாட்டில் சதா ஈடுபட்டிருந்த காலம். இது முளைவிட்டது என்னவோ பாண்டிச்சேரியின் பள்ளிப்பருவத்திலேயே எனினும் அப்போது எல்லாம் என்னவென்றே புரியாத திக்குதிசை தெரியாத மெளடீகக் கனவாகவே இருந்தது. இந்தக் கிறுக்கு முளைத்த முகூர்த்தம் எது என்பது சுத்தமாக எவ்வளவு யோசித்தும் வசப்பட மறுக்கிறது.

பச்சையப்பாசில் எம் ஏ தமிழிலக்கியம் பயின்றுகொண்டிருந்த நண்பன் இதயகுமாரிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,தொங்கும் தண்டவாளத் துண்டம் அதிர்ந்து ஒலியெழ வண்டிகள் வரும்போகும். லயோலா மதிலுக்கு மேல் தெரியும் மரங்களைப் பார்த்தபடி ஜேகே அமி சுரா என்று பேச்சு போய்க்கொண்டிருக்கும்.

ஒருநாள் மிகுந்த லஜ்ஜையுடன் என் கிறுக்குத்தனம் பற்றிக் கூறியபோது சிரித்தபடி, இந்தக் குழந்தைத்தனம் ஏகப்பட்டபேரிடம் இருக்கிறது என்று கூறி ஜெயகாந்தன்கூட இதை எழுதி இருக்கிறார் என சுட்டிக்காட்டினான்.

சில நேரங்களில் சில மனிதர்கள் அல்லது ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டில் ஏதோ ஒன்றில்,உரையாடலுக்கு இடையில் பிடித்துக் கொண்டிருக்கும் சிகரெட்டை ஆஷ்ட்ரேவில் வைத்துவிட்டு, நாயகன் பாத்ரூமுக்குப் போவான். அவன் திரும்ப வந்து, புகைந்து சாம்பலாய் நீண்டுகொண்டிருக்கும் சிகரெட்டை, ஒருமுறையேனும் இழுத்துவிட்டு அணைத்தால், அவர்களுக்குள் உண்டாகியிருக்கும் இடைவெளி மறைந்து நெருக்கம் ஏற்படும் என்று நினைத்துக் கொள்வாள் நாயகி. பாத்ரூமை விட்டு வெளியில் வரும் அவன் சிகரெட்டை எடுத்து ஒரு பஃப் அடித்துவிட்டு ஆஷ்ட்ரேவில் நசுக்குவான். 

82ன் இறுதியில் சுந்தர ராமச்சாமியின் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருக்கையில் இந்த விளையாட்டைக் குறிப்பிட்டு என்னிடம் ஏதோ சரியில்லை என்பதைக் காட்டுகிறதோ என்று தீவரக் குழப்பத்தில் கேட்க, அவர் சிரித்தபடி மனுஷாளுக்குக் கொஞ்ச நஞ்சமில்லே நிறைய கிறுக்கு உண்டு என்றார்.

அதற்குப்பின் 85 டிசம்பரில் சுராவின் பள்ளம் வெளியானபோதுதான் ரத்னாபாயின் ஆங்கிலம் (அஃ ஜூலை-ஆகஸ்ட் 1976) படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடம் வந்தபோது ஆச்சரியமாய் இருந்தது.

“கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்றுகொண்டிருந்தால், தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும், அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பது போலவே இருக்கும் எனவும் கற்பனை செய்துகொண்டு கதவைத் திறந்தாள். கிழவர் இருந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு இருந்தார்.”

82ல் நான் கேட்டபோது சுரா இதைப்பற்றி மூச்சுகூட விடவில்லை. நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் ஏற்கெனவே 76லேயே எழுதி இருக்கிறேன் என்றோ அல்லது குறைந்தபட்சம் என் ரத்னாபாயின் ஆங்கிலம் கதையைப் படித்திருக்கிறீர்களா என்று ஜாடையாகவோக்கூட, சிதறிய குரும்பை நெடுமரத்தை அண்ணாந்து பார்த்ததுபோல் கிடந்த, என்னிடம் ராமசாமி கேட்கவில்லை.

கணக்கிலடங்கா பொக்கிஷங்களை அடிவயிற்றில் கொண்டிருந்தாலும் என்னிடம் என்னென்ன இருக்கிறது, இதைப் பார்த்தாயா அதைப் பார்த்தாயா என்று துள்ளிக் குதிக்காது கரைநோக்கி மூர்க்கமாய் ஓங்கியெழும் அலைத்தோற்றம் காட்டினாலும் மணலையல்லவா வருடிப் பதப்படுத்திச் செல்கிறது கடல்.

எந்தக்காலத்திலும் படைப்பாளிகளிடம் கர்வத்திற்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால் கூச்சம் கொஞ்சம்போல, குஞ்சலம் போலவேனும் இருந்துகொண்டிருந்தது. ஜடையே இல்லாத காலத்தில் அடடா குஞ்சலம் இல்லையே என்றா குறைபட்டுக்கொள்ள முடியும்?