Saturday, October 22, 2011

ஆர்வி ரமணி - மனவெளியில் அலையடிப்பு

நீண்டகால நண்பரும் சிறந்த ஓளிப்பதிவாள இயக்குநருமான ஆர்வி ரமணி, என் கேமராவும் சுனாமியும் என்கிற அவரது சமீபத்திய ஆவணப்பட திரையிடலுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். 

பல வருடங்கள் முன்பாக, தாஜ் கோரமண்டலுக்கு எதிரில் இருக்கும் காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனின் திறந்தவெளித் திரையில் (இலவசமாய்க் விநியோகிக்கப்பட்ட ஓடொமாஸ் தடவிக்கொண்டு) ‘தளர்ந்தது’ என்கிற குறும்படம் பார்த்தேன். மேற்கு மலைத்தொடரின் அடிவாரம் என்று நினைவு. ஜிகினாத் தாள்களை அட்டையில் ஒட்டி மண்ணில் செருகி சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலித்தப் பகல் காட்சிகளையும் ஒற்றை விளக்கொளியில் எடுக்கப்பட்ட குடிசைகளின் அகக் காட்சிகளையும் கொண்ட கவிதை. அதற்கு ரமணி உபயோகித்தது, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளுக்கு சாவி கொடுப்பது போல கையால் சுழற்றி ஓடவைக்கப்பட்ட கேமரா என்று நண்பன் நாகா ட்ரைவ்-இன்னில் ஒரு முறை குறிப்பிட்டதாக நினைவு.  

ஜெர்மன் கலாச்சார மையத்தில் பார்த்த ஆவணப்படம் ஒன்றில் வெர்னர் ஹெர்ஸாக் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

”பணம்” சினிமா எடுப்பதில்லை. நீங்கள்தான் எடுக்கிறீர்கள். கடன் வாங்குங்கள் திருடுங்கள் படம் எடுங்கள். சினிமா எடுப்பதுதான் முக்கியம்.

அறம் அறம் என்றபடி கட்டுரையிலும் கதையிலும் ஆன்மாவை அறுத்துக் கூறுகட்டி கூவலாட்டம் போட்டு,விற்று முடிந்துகொள்வதுதான் கலை இலக்கியத்தின் கொடுமுடி என்கிற கூத்து வியாதியாய் பீடித்திருக்கும் தமிழ்ச் சூழலில் படைப்பிலும் பழக்கத்திலும் முதிர்ந்த அமைதியின் மொத்த உருவம் ரமணி.

இயக்குநர் செளதாமினி எடுத்த எம்.டி.ராமனாதன் பற்றிய ஆவணப்படம் அப்போதைய சோவியத் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டது. இருவரும் அழைத்திருந்தனர். நண்பர்களுடன் படம் பார்க்கப்போனவன் எப்போது தூங்கினேன் என்று தெரியாது. படம் முடிந்ததும் பயணத்தின் கடைசி நிறுத்தத்தில் உள்ளுணர்வு உசுப்ப திடுக்கிட்டு விழிப்பவன்போல் எழுந்துகொண்டேன்.

அப்புறம் வழக்கம் போல் திரைப்பட அரங்கிற்கு வெளியில் மங்கிய வெளிச்சத்தில் குரல் முடிச்சுகளாய் நண்பர்களுடன் பேச்சு..

செளதாமினி படம் எப்படி இருந்தது என்று கேட்டார்.

படம் தொடங்கிய சொற்ப நேரத்தில் தூங்கிவிட்டேன். தூக்கத்திலும் போரடித்தது என்றேன்.

அதை ரமணி உட்பட நான் அறிந்த அறியாத இரண்டு மூன்று நண்பர்களிடம் என் காதுபடவே சொல்லி சிரித்தார். படம்பார்த்த பெரும்பாலோரின் அபிப்ராயமும் அதுவே எனத்தெரிய வந்தும்கூட, என் படைப்பை எவரேனும் தப்பித்தவறி இப்படிச் சொன்னதாய்க் கேள்விப்பட்டிருந்தால் கூட என்னால் இப்படி ஏற்றுக்கொண்டிருந்திருக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்து, துடுக்குத் தனத்தை நினைத்து என்னை வெட்கப்பட வைத்தது.

விமர்சனங்களை எதிர்கொள்வது சாதாரண காரியமில்லை. தான் ஒரு அவதாரம் என்கிற ரீதியில் மூக்கை மேகத்தில் சொருகிக்கொண்டு தன்னைத்தவிர தலைசிறந்த படைப்பூக்கவாதி வேறொருவர் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்கிற விதமாய் கலைத் திமிர்ப் புறக்கணிப்பு என்கிற பந்தாவில் விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தன்னை மொத்தமாய் மெளனத்தில் புதைத்துக் கொள்வது படைப்பாணவம் இல்லை பதில் சொல்லத் துப்பில்லாத அவமானம்.

டிரைவ்-இன்னில் பல சந்திப்புகளில் ஒன்றில், ஓவியர் ஒருவரைப் பற்றித் தான் ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருப்பதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். வரைவதற்கு முன்னால் குறிப்புகள் எழுதித் தயார் செய்துகொள்வது அவரது பாணியாம். அதாவது கேன்வாசில் இன்னின்ன இடத்தில் இன்னின்ன வண்னங்கள் விஷயங்கள் வரவேண்டும் என்று முன்தீர்மானங்களை ஒரு நோட்டுப்புத்தகத்தில் சினிமாவிற்கு ஸ்டோரி போர்டு எழுதுவதுபோல் எழுதி வைத்துக்கொண்டு ஓவியம் தீட்டத்தொடங்குவாராம் அந்த ஓவியர்.

என்ன அநியாயம் சரஸ்வதி வந்து நாக்கை நீட்டச்சொல்லி வரைவதுதானே கலை. எழுதத் தொடங்கியதும் தத்துபித்து தத்துபித்து என்று தன்னிச்சையாய் சரஸ்வதி கடாட்ச்சத்துடன் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருப்பது அல்லவா இந்து மரபில் வரும் ஞானக்கலை. அந்த ஓவியர் எப்படி இந்தியராய் இருக்க இயலும்? நாட்டைத் துண்டாட முடியவிலை என்பதால் கேன்வாசைத் துண்டாடுகிறார் போலும்.

எந்த படைப்பும் எப்படி உருவாகிறது என்பதில் இல்லை எப்படி உள் ஒத்திசைவுடன் முழுமையைக் கொண்டிருக்கிறது என்பதில்தான் இருக்கிறது  அதன் உயர்வு. முழுமை என்பதே மெளடீகவாதம் என்று தலை கால்களைப் பிய்த்துத் தாறுமாறாய்ப் போடப்பட்டதிலும் ஒரு ஒழுங்கும் ஒத்திசைவும் இருக்கும். செய்யத் தெரியாதவனின் தடுமாற்றமும் தெரிந்து செய்பவனின் திருகலும் ஒன்றில்லை அல்லவா?

92 சென்னை உலக திரைப்பட விழாவில் (கலைவாணர் அரங்கில் என்று நினைக்கிறேன்) ரமணியின் ஒளிப்பதிவில் வெளியாகியிருந்த ஆவணப்படமான குட்டி ஜப்பானின் குழந்தைகள் திரையிடப்பட்டது.. துரதிருஷ்டவசமாய் அதே நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்பட்ட உலக சினிமா ஒன்றைத் தவறவிடலாகாதென்று இதைத் தவறவிட நேர்ந்தது. நண்பன் ஒளிப்பதிவாளர் தரன் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு மிக நன்றாக இருந்ததாய்க் கூறினான்.

ஆர்வி ரமணி, புனே திரைப்படக்கல்லூரியின் தயாரிப்பு. டயலாக் ரைட்டர் ஜெயமோகனின் கொசு மூளையால் எட்டமுடியாத தளத்தில் இருக்கும் ஒரே காரணத்தால் நிந்திக்கப்பட்ட மணிகெளல் புனே திரைப்படக்கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியவர். 

பழைய புத்தகங்களில் இருந்து பொறுக்கித் திரட்டியவற்றை ஏதோ தனித்துத் தவமிருந்து மனக்கடலில் முக்குளித்து எடுத்த தத்துவமுத்துக்கள் போல் ஓலமிட்டுக் கடை பரப்பும் சூழலில் நம்மோடு அணுகாமல் அகலாமல் நின்றபடி, கடற்கரையில் நிற்கும்போது கால் நனைவதில் வியப்பென்ன என்று மெளனமாய்ப் புன்னகைப்பவர் ரமணி. 

தமது ஆவணப்படத்தின் திரையிடலுக்காக ஃபேஸ்புக்கில் அவர் கொடுத்த அழைப்பு இது. சென்னையில் இருக்கும் சினிமா ஆர்வலர்கள் கண்டிப்பாக வரவும்.


Hi Mamallan,

I would like to invite you to the screening of my recent documentary, 
MY CAMERA AND TSUNAMI, duration 90 mts, 
at the Asian College of Journalism (ACJ), 
on Saturday, 22nd October 2011 at 6.30 PM. 
ACJ is situated behind the M. S. Swaminathan Research Foundation(MSSRF) at Taramani.

Screening is open for all. Kindly inform your friends.

Ramani