Saturday, November 5, 2011

கிழிசல் [சிறுகதை]

மூன்று ஆட்கள் நிற்பதற்கான நீளமே இருந்த, சுவரில் பொருத்தப்பட்ட சலான் எழுதும் சாய்வுப் பலகையை, ஆணும் பெண்ணுமாய் இருவரும், சுவரையொட்டி வங்கியின் விளம்பரப் பிரசுரங்களும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததால் பணம் செலுத்தும் பகுப்பின் கண்ணாடித் தடுப்பிற்குள் தெரிந்த சாந்தமாகத் தோற்றமளித்த இளைஞனிடம் பணமும் காசோலையும் செலுத்த இரண்டு படிவங்கள் கேட்டு வாங்கிக்கொண்டேன். எடுத்துக்கொடுத்தபடி, 

முத்து, ரைட்டிங் டேபிள்ல சலான்ஸ் வெக்கலையா? என்று குரல் கொடுத்தான்.

நேரடியாய் சம்பளம் செலுத்த திறந்தே ஆகவேண்டும் என்கிற அலுவலக் நிர்பந்தமாய் வெளியூரில் திறக்கப்பட்டிருந்த வங்கியின் நெரிசலில் பட்ட அவஸ்தையில்தான், வீட்டிற்குப் பக்கமாய் சமீபத்தில் தொடங்கப்பட்டிருந்த அந்தக் கிளைக்கு சேமிப்புக் கணக்கை மாற்றிக்கொண்டு ஓடிவந்தேன். கையெழுத்துப் போட்டதுடன் சரி. மற்றபடி மாற்றுவதற்கு எல்லாக் காரியமும் செய்தது என் மனைவிதான். முதல் முறையாக வங்கிக்குள் அன்றுதான் நுழைந்தேன். குங்குமச்சிமிழ் போல் குட்டியூண்டு வங்கி.

வாங்குதல் வழங்குதல் மேனேஜர் என்று மூன்றே பொந்துகளில் அடங்கிவிட்ட வங்கியில் போய், நீளமான ரைட்டிங் டேபிளை எதிர்பார்க்க முடியாதுதான். இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சமீபத்தில் தொடங்கப்பட்டிருந்த எத்துனையோ ஆயிரமாவது கிளை அது. எங்கள் பகுதியில் இருந்த நான்கு கிளைகளில் அதுதான் ஆளரவமற்றதும் அரசுப்பணியில் இருப்போருக்கு வசதியாய் வாராந்திர விடுமுறை நாட்களில் திறந்திருப்பதுமாகும். 

வரிசைக்கு நான்காய் நல்ல அகலத்தில் மூன்று வரிசையாகப் போடப்பட்டிருந்த வாடிக்கையாளர் இருக்கைகளில் சுவரையொட்டியிருந்த கடைசி வரிசையில் மறு நாற்காலியையே டேபிளாக்கிக் கைப்பிடியில் தொப்பை இடிக்க சலான் எழுதத் தலைப்பட்டேன். 

பக்கவாட்டுப் படுதாவை நீக்கி வெளியில் வந்த வளர்ந்த குழந்தை சலான் யாருக்கு வேணும் என்று கேட்டது. அதுதான் முத்துவாக இருக்கவேண்டும். நான் நுழைகையில் அருகருகே நின்று ரைட்டிங் டேபிளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஆணும் பெண்ணும் இன்னமும் இணை பிரியாது குனிந்த வண்ணமே இருந்தனர். இருவரின் இடுப்புகளின் இடைவெளியில் காணக்கிடைத்த சதுர பொந்துகளில் ஒன்றிலிருந்துதான் சலான் கட்டு எடுகப்பட்டிருக்கவேண்டும். இருவர்மேலும் உரசாமல் லாகவமாய் சலான்களை முத்து உள்ளே வைப்பது தெரிந்தது. 

காசோலைபோடுவதற்கான பணத்தின் எண்ணை, ரொக்கம் போடவேண்டிய சலானில் எழுதி இருந்ததைப் பார்த்ததும் வெட்கியபடி அடித்துக் கையெழுத்துப் போட்டு எழுந்து காலியாய் இருந்த முதல் கெளண்டரில் பணத்தையும் காசோலையையும் நீட்டினேன். காசோலைச் சலானைப் பக்கத்துப் பகுப்பில் இருந்த மேனேஜரிடம் கொடுக்கச்சொல்லி மென்மையாய் சைகையில் காட்டினான் கெளண்டரில் இருந்த இளம் குமாஸ்தா.

ஃபோனில் தன் நம்பரைக் கூறிக்கொண்டிருந்த, பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்த பெண் எதிரில் உட்கார்ந்து, காசோலை கொடுக்கையில் சேமிப்புக் கணக்கை தற்காலிக சேமிப்பு நிதியமாகவும் வைத்துக்கொள்ளும் வசதிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். மலையாள வாடையுடன் கடிதம் கொடுங்கள் எனக் கண்ணகட்டிப் புன்னகைத்தபடி வெள்ளைக் காகிதம் கொடுத்தாள். முன்னிரண்டு பற்கள் அகன்று, ஒல்லியான தேகத்தின் ஒடிசலை இன்னமும் கூட்டிக்காட்டின.

மொத்த வரிசைகளும் காலியாகக்கிடந்தாலும் திரும்பப் பின்வரிசைக்கே சென்று கடிதம் எழுதினேன். முடித்துவிட்டு நிமிர்ந்தால் முன்வரிசையில் எண்ணெய் பளபளப்பில் நெளிகூந்தலுடன் ஒல்லியான் பெண்மணி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவரைத் தாண்டி, மேனேஜர் சிறுமிக்கு நேரெதிரில் இருந்த இருக்கை காலியாய் இருக்கவே போய் உட்கார்ந்தேன்.

ஐயாம் சப்போஸ்டுபி இன் த க்யூ

பக்கத்து நாற்காலியில் இருந்து நடுங்கிய குரல் சொன்னது. மெலிந்து தளர்ந்த உருவம். ஓணம் பண்டிகைக்கு எடுத்த படம் போல் வெளிர் சந்தனத்தில் கசங்காத புடவையணிந்திருந்தவர் மெலிதாக முறுவலித்துத் தமக்கு அடுத்து இருந்த இருக்கையை, இங்கே உட்காரு என்பதுபோல் வலது கையால் தடவிக் காட்டினார்.

க்யூவெல்லாம் என்னங்க. மொதல்ல வந்தது நானாவே இருந்தாலும் நீங்களே முன்னாடிப் போலாம் அப்ஸல்யூட்லி நோ ப்ராப்ளம்.

நேக்கு ரொம்ப நேரம் ஒக்கார முடியாது.

மாநகரின் மழை வெரித்த தார் ரோடாய் கரடுமுரடாக நரம்புகள் ஓடிய கரங்கள். மூக்கிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த முடிகளில் முதுமையின் ஆயாசம் தெரிந்தது. இளமையில் பெண்மை இவ்வளவு அசிரத்தையாய் இருக்கவிட்டிருக்காது. இப்போதும்கூட நரை கலப்பு குறைவாக இருந்தது சற்றே வியப்பளித்தது.  அனிச்சையாய் தலையைத் தடவிக்கொண்டேன். 

பாட்டிக்கு எதிரில் இருந்த இளைஞனின் கெளண்டர் முன்னால் உட்கார்ந்திருந்த பெரியவரோ நோட்டுகளை உலர்த்துபவர்போல் விரித்து வைத்து எண்ணிக்கொண்டிருந்தார். 

பாஸ் புக்குல எண்ட்ரி போட்டுக்குடுப்பா.

மழையில ரெண்டு நாளா சர்வர் டெளன் சார். சாரி. புதன் கிழமை வந்தா எண்ட்ரி போட்டுத்தறேன்.

எனக்கு எதிரில் தெரிந்த மேனேஜர் சிறுமியின் முன்னால் அமர்ந்திருந்த பெண்மணிக்கு சேலம் கிளையில் வைப்பு நிதியத்தில் ஏதோ பிரச்சனை. வளைத்து வளைத்துக் கேள்வியாய் கேட்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு ஒட்டவைத்த சிரிப்பு மாறாமல் பொறுமையாய் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.முறுவலிப்பு மாறாமல் பதில் சொவதற்கென்றே பயிற்சி காலத்தில் வங்கி அதிகாரிகளுக்குத் தனி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன போலும்.

அடுத்திருந்த பகுப்பின் உள்ளே அமர்ந்திருந்த பணியாளரின் முகம் தெரியாத அளவிற்குத் தடுப்புப் பலகை மறைத்தது. ஆனால் அவரெதிரில் சேலை பேண்ட் சுரிதார் என்று விதவிதமான வாளித்த பின்புறங்கள் வருவதும் போவதுமாய் இருந்தன. லஜ்ஜையற்ற விழைவில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது நேரம்.

பக்கத்து இருக்கைப் பாட்டி ஏன் அந்த கெளண்டரை அணுகவில்லை என்று ஆச்சரியமாய் இருந்தது. அந்த கூண்டிற்குள் இருக்கும் முகத்தைப் பார்க்க ஆர்வமுற்று, சற்றே பக்கவாட்டில் சரிந்தேன். உள்ளே இருந்த உம்மணாம் மூஞ்சி குண்டு அம்மணி எண்ணுவதில் கண்ணாயிருந்தார். 

பரபரக்கும் வேலைகளற்ற சனிக்கிழமை என்பதாலும் வரிசையில் முதலாவதாக இருக்கும் பாட்டிக்கு உதவுவதான பாவனையில் பராக்கு பார்த்துக்கொண்டும். உட்கார்ந்திருந்தேன். 

உலர்த்திய நோட்டுக்களை எண்ணி முடித்துவிட்டுப் பெரியவர் இடத்தைக் காலி செய்ததும் பாட்டி எழுந்து இளைஞனின் கெளண்டரின் எதிரில் உட்கார்ந்தார். பணத்தை நீட்டியபடி,

சலானைக் கொஞ்சம் நீயே ஃபில்லப் பண்ணிடுப்பா நான் எழுதினா அக்கவுண்ட் நம்பரைத் தப்பா எழுதிடுவேன்....அப்ப்டியேப் பாஸ்புக்குலக் கொஞ்சம் எண்ட்ரியும் போட்டுடு.

சலானை எழுதியபடியே, சாரிங்க சர்வர் டெளன். புதன்கிழமை வந்தா போட்டுத்தறேன் என்றான்.

எனக்கு எதிரிலிருந்த பெண்மணி எழுந்திருக்கும் வழியாய்த் தெரியாததாலும் கொஞ்சநேரமாய் குண்டு அம்மணிக்கு வாடிக்கையாளர் யாரும் வாராதிருந்ததாலும் இருக்கையில் இருந்தபடியே என் காகிதத்தை லேசாய் வளைத்து முன்னால் நீட்டியபடி மேனேஜரைப் பார்த்தேன். முறுவலித்து,வரும்படி மென்மையாய் தலையசைத்து கடிதத்தை வாங்கிக்கொண்டாள்.

உங்க நம்பர்...726லதான முடியும் என்றேன். முதல் நம்பருக்குப் பிறகான மூன்று நம்பர்கள் அப்படியே திரும்ப வந்ததை அவள் ஃபோனில் கூறியபோது நுட்பமாய் கவனித்து நினைவில் பதித்து இருந்தேன் என்று அவளிடம் கூறாமல் கூற அதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டேன். பெண்களை வசீகரிக்கப் பெரும்பாலும் சின்னச்சின்ன விஷயங்களே போதுமானவையாய் இருக்கின்றன, தக்கவைத்துக் கொள்வதுதான் தலையைத் தின்னக்கொடுக்கவேண்டிய மரணாவஸ்தை. எதிர்பார்த்ததுபோலவே முகம் மலர்ந்து மேஜையின் டிராயரைத் திறந்து விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள்.

இந்த நோட்டு பாருங்கோ போன வாரம் இந்த மெஷின்ல எண்ணிக் குடுத்தது. இப்டி வந்துருக்கு.

என்றபடி பாட்டி ஒருபுறம் கிழிந்திருந்த நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். சேலம், இன்னமும் இடம்விட்டு அசையாத காரணத்தால் அந்தப்புறம் பாட்டியும் இந்தப்புறம் நானுமாக நின்றுகொண்டிருந்தோம்.
இப்படிக் கிளிஞ்ச நோட்டை பேங்கு தரில்லா என்றாள் மேனேஜர்.

பின்ன நானென்ன வேணும்னு கிழிச்சி எடுத்துண்டா வர்றேன்?

அப்படி சொல்லில்லா. ஆனா நம்பரே கிளிஞ்சி போயி. நோட்டு மாறியிருக்கலாம் இல்லா?

இங்கேந்து குடுத்த பணத்தை நான் அப்டியே எடுத்துண்டு போய் செர்வெண்ட் மெய்டுகிட்ட உன் சம்பளத்தை எடுத்துக்கோன்னு ஷொன்னேன். என் எதுர்லதான் பாவம் அவளும் எடுத்துண்டா.

இதைப்போன்ற நோட்டுக்களை ஆர்பிஐதான் எடுக்கும் இல்லையா என்றேன் நான்.

அப்பிடியில்லா அடையார் போலப் பெரிய பிராஞ்ச்சிலும் எடுக்கும்.

ஐயோ அடையாருக்கு நான் எங்க போறது அங்க மொய்க்கற கூட்டத்துல என்னையெல்லாம் இடிச்சே தள்ளிடுவா.

அதெப்படி இவ்ளோ கிளிஞ்ச நோட்டை பேங்கு கொடுக்கும்?

கிழிஞ்சது, பின்னடிக்கிற இடமா இருந்தாக் கூட உள்ள மாட்டிகிட்டு வெளிய தெரியாம நோட்டோட நோட்டா வந்திருக்கும்னு சொல்லலாம், காந்தியாண்டன்னா கிழிஞ்சிருக்கு என்றேன்.

இப்பல்லாம் பின் அடிக்கில்லா. 

ஓ ஆமாம் பேப்பர் பட்டைதானே இப்பல்லாம் பண்டல்மேல சுத்தறாங்க.

அதே. 

சேலம், டேபிளிலேயே சரிந்து பாட்டிக்குப் பின்மண்டையைக் காட்டியபடி, ஈயெனச் சிரிக்கத் தொடங்கிற்று. முதிர்ந்த வைப்பு நிதியத்தை எடுப்பதற்காக சேலம் செல்லவேண்டுமே என்கிற தன் கவலையை பாட்டியின் கதையில் அது தற்காலிகமாய் மறந்துவிட்டது போலும். இளிப்பிற்கு என்னிடம் எவ்வித ஆதரவும் இல்லாததாலோ என்னவோ,உறைந்து நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டது.

மேனேஜர் சிறுமியோ திடீரென்று பேய்க்காற்று வீசி, கிழிந்த நோட்டைத் தன் கையிலிருந்து பறித்துக்கொண்டுவிடாதா என்ற ஏக்கத்தில் சிரிக்க மறந்த முகத்துடன் இருந்தாள்.

என் பர்சை எடுத்துப்பார்த்தேன். ஒரு ஐம்பதும் சில பத்துகளும் இருந்தன. கல்லெறி தூரத்தில் இருக்கிற வங்கிதானே என்று எண்ணியதாலோ என்னவோ, மனைவி உபரிப் பணமாய் எதுவுமே வைக்கவில்லை. மொபைல் பிராட்பேண்டுக்குக் கட்டுவதற்கான பணத்தில் இருபது ரூபாய் மிகும். எதேச்சையாய் வண்டி பஞ்சரானால் ஏடிஎம் எங்கே என்று தேடவேண்டியதுதான்.

அடையார்ல உங்க பிரான்ச் எங்க இருக்கு? என்று மேனேஜரிடம் கேட்டபடி, பாட்டிக்காய் சில்லரைப் பணத்தை நீட்டினேன்.

கஸ்தூர்பா நகர் மேலே. பிரிட்ஜ்ஜெறெங்ஙி மெயின் ரோட்லே டூவீலர் செர்வீஸ் அது திரும்பி...

உங்களால முடியுமோ? நெஜமாவே மாத்துவாளா? என்றபடி பணத்தைத் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார் பாட்டி.

அடையார்ல இல்லாட்டி ஆர்பிஐ பொறேன். வண்டிதானே போப்போறது. மாத்தாம விடுவமா?

வயசானவளாச்சேன்னு சிம்பதிக்காக கைக்காசைக் குடுக்காதீங்கோ.

சேச்சே. உங்க மொபைல் நம்பரை வேணாக் குடுங்கோ. பணத்தை மாத்திட்டு எஸ்எம்எஸ் பண்றேன். ஒடனே மாத்த முடியாட்டாலும் மாத்தின ஒடனே உங்களைக் காண்டாக்ட் பண்றேன்.

பாட்டி தமது கைப்பையைத் திறந்து துழாவியபடி,

எங்கையாவுது கீழகீழ விழுந்துட்டா, பாக்கறவாளுக்கு ஒத்தாசையா இருக்கட்டும்னு என் தங்கை மொபைல் வாங்கிக் குடுத்துருக்கா. அதுல அவ நம்பரையும் போட்டு வெச்சிருக்கா. ஒரு பேப்பர்ல என் நம்பரையும் குறிச்சிக் குடுத்துருக்கா. ஒரே பிராப்ளம் வெளில கெளம்பறச்சே மொபைலை எடுத்துக்க மறந்துடுவேன். அதாலதான் பேக்குலேந்து அதை எடுக்கறதே இல்லை... நம்பர் எழுதின சீட்டு கூட இங்கதான் எங்கியோ இருக்கும்...

கிழிந்த நோட்டை மேனேஜர் பெண்ணிடம் இருந்து வாங்கிக்கொண்டு என் பைக்கை எடுத்தேன்.

அடையார் கிளையில் உள்ளே நுழைகையில், ஏசிக்காய் ஒருகதவு மட்டுமே திறக்கப்பட்டிருந்த பிரதான கண்ணாடி வாயிலில்,வெளியில் வருபவர்களுக்கு வசதியாய் சற்று ஒதுங்கி நின்றேன். பின்னால் வந்த சின்னவயதுப் பெண்போல் நருங்கிப்போயிருந்த பெண்மணி, என்னை முந்திக்கொண்டு உள்ளே செல்ல முயன்றாள். எதிரில் கையகட்டிக் காலகட்டி வந்த அம்மா பெண் குடும்பமாய் அவள்மேல் உரச தடுமாறிப்போனாள். யாருமே வராமலும் போகாமலும் இருக்கக்கூடிய அபூர்வ தருணம் வாய்க்கும்பட்சத்தில்தான், பாட்டியால் கண்னாடிக் கதவையே தாண்டி இருக்க முடியும்.

முதல் கூண்டில் தென்பட்ட பெண்மணியின் எதிரில் இருந்தவர் அகன்றதும் நோட்டை நீட்டினேன். 

கிழிஞ்ச துண்டு எங்க? 

இல்லை ஆக்ச்சுவலா இதுவந்து...

கடைசீக் கெளண்டர், என்றபடி எதிரிலிருந்த கணினியைப் பார்த்து மெளசை அசைக்கத் தொடங்கிவிட்டார்.

கூண்டுகளுக்கு எதிரில் இருந்த வாடிக்கையாளர்களும் அவசர ஜோலியில் புட்டம் பாவாமல் உட்கார்ந்திருப்பதுபோலவே பட்டது.

கடைசி கூண்டை நோக்கி நடக்கப் பார்த்ததில், அந்த நீண்ட ஹாலின் எதிர்புறத்தில் இருந்த கெளண்டரைப் பார்த்து வரிசையில் நின்ற நாலைந்துபேரை மன்னிக்கச்சொல்லித் தள்ளி முன்னேறவேண்டி இருந்தது. 

இன்னாம்மா இது பின்ஜின் பணத்தக் கொறச்சி குடுக்கற. வாணாம் இத்தியும் நீயே வெச்சிக்க. பணத்தையும் பதிவுப்புத்தகத்தையும் வங்கி குமாஸ்தாவிடமே தள்ளிவிட்டது ஒரு ஆயா.

சார் இவங்களைக் கொஞ்சம் என்னான்னு கேளுங்க எங்கிட்டக் கோச்சிக்கிறாங்க. டெபிட் பண்ணி எண்ட்ரியெல்லாம் போட்டாச்சு. இப்பப்போய் வேண்டாம்னு சொன்னா. அவரைப் பாருங்கம்மா. 

என்றபடி ஒரு கெளண்டர் மற்றதிடம் பணத்தையும் பாஸ்புக்கையும் நீட்டியது. முகம் திரும்பி முறுவலுடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கிற்று பக்கவாட்டில் நீண்டு நின்ற வரிசை..

ஏம்மா உங்குளுக்கு ரெண்டு பென்ஷன் இருக்கு இல்லையா ஒண்ணு அறநூறு ரூபா இன்னோண்ணு நாலாயிரம் ருபா சரியா?

ஆஅமா..

ரெண்டுல இந்த மாசத்துக்கான அறநூறுதான் வந்துருக்குது. நாலாயிரம் இன்னும் வரலை. இந்த அறநூறையும் சேத்து, உங்க கணக்குல இருக்கறது, தொள்ளாயிரம்தான். நியாயமா பத்தா, ஐநூறை மிச்சம் வெச்சிட்டு, உங்குளுக்கு நாநூறுதான் குடுத்திருக்கணும். இவங்க ஜாஸ்தியா ஐநூறு குடுத்துருக்காங்க. நாலாயிரம் ரூபா பென்ஷனை ஏன் இன்னும் போடலைனு அந்த ஆபீஸ்லப்போயிக் கேளுங்க. 

இப்பிடிப் பிரியறாப்புல சொன்னாத்தான பிரியும். அவனுங்களாப் போடமாட்டானுங்க மாசாமாசம் போயி நாவகப்படுத்தனும். தனக்குத்தானே புலம்பிக்கொண்டபடி காலகட்டி சீசாப்பலகைபோல் நடக்கத் தலைப்பட்டது அந்த ஆயா.

கடைசி கூண்டில் நோட்டை நீட்டியதும், அங்கிருந்த அம்மாள்.

ஆர்பிஐ போங்க. அங்கையும் அம்பது ரூவாதான் கெடைக்கும்.

இல்லீங்க இது வந்து...

பக்கத்து இருக்கைக்குக் கண்ணைக்காட்டிக் கையை நீட்டினார்.

அடுத்து இருந்தது, அடைப்பின்றி திறந்தவெளியில் இருந்த கணினியில்லா மேஜை. அதன் பின்னால் என் வயதொத்த பெண்மணி என்னைவிட பெரிய தொப்பையுடன் பளபளத்த கம்மீஸில் சல்வாரின் நாடாக்கட்டு பூமத்திய ரேகையாய்ப் வளையமிட்டிருக்க, நின்றவண்ணம் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சீனியர் சிடிசன்ஸ்னு போர்டு போட்டுருக்கீங்க பாருங்க கெளண்டர்ல ஆளே இல்லாம மூடி வெச்சிருக்கீங்க. அட்லீஸ்ட் அந்த போர்டையாவது எடுத்துடுங்க.

இன்னிக்கி அவங்க லீவு சார். ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. 

இந்த நோட்டு... 

கிழிஞ்ச துண்டு இருக்காங்க. 

சொல்லப்போனா இது என்னுதே இல்லை. எங்க வீட்டாண்ட இருக்குற உங்க பிரான்ச்சோட மேனேஜர் மேடம், உங்க பிரான்ச்சுலதான் மாத்தமுடியும்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. அந்தச் சிறுமியின் விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டினேன்.

ஏன் அந்த பிரான்ச்சுக்கு என்ன? இந்த பிரான்ச்சுன்னு இல்லை, எந்த பேங்கோட எந்த பிரான்ச்சுலையும் கிழிஞ்ச துண்டை வெச்சி பேப்பர் ஒட்டிக்குடுத்தா எடுத்துக்குவாங்க. நம்பர்லக் கிழிஞ்சி இருக்கு. கிழிஞ்ச துண்டும் இல்லாம வந்துருக்கீங்க, இதை எங்கேயும் எடுக்க மாட்டாங்க.

வேறுவழியில்லை என்று தோன்றியதால், சீருடையில் இருக்கும் என் அலுவலக அடையாள அட்டையை எடுத்து நீட்டினேன்.

கிட்டத்தட்ட எழுவது எம்பது வயசிருக்குற பாட்டி, அந்த பிரான்ச்சுலக் குடுத்த பணத்தோட சேந்து இந்தக் கிழிஞ்ச நோட்டு வந்துடுச்சின்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. குடுங்க நான் மாத்திக்கிறேன்னு சொல்லி எடுத்துகிட்டு வந்தேன்.

அவர் உள்ளே செல்லும்போதே நோட்டைத் தூக்கி அண்ணாந்து நீர்க்கோட்டைப் பார்த்தபடி சென்றார். நல்லகாலம் கள்ள நோட்டு இல்லை நல்ல நோட்டுதான் என்பது உறுதியாகிவிட்டது. 

நொடியில் திரும்பிவந்து, சார் கிட்டையேக் கேட்டுட்டேன். அவரு இருவது இருவத்தியஞ்சு வருஷமா இருக்கற சீனியர். அவரும் எடுத்துக்க வழியில்லேன்னு சொல்லிட்டார்.

அப்ப ஆர்பிஐ தானா?

ஆமாம். இந்தமாதிரி நம்பர்லக் கிழிஞ்சது எரிஞ்சி போனது எல்லாம் ஆர்பிஐலதான் குடுக்கணும்.ஒரு பேப்பரை எடுத்து இந்த ஓரமா ஒட்டி அங்க போயிக் குடுங்க.

ஆர்பிஐலையும் அம்பது ரூபாதான் கெடைக்கும்னு சொல்றாங்க என்று பக்கத்தில் இருந்த கேபினைக் காட்டினேன்.

ஆமாம் என்று குழப்ப முகத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.

ஆர்பிஐ சனிக்கெழமை உண்டா?

இல்லை.

செண்ட்ரல் கவர்மெண்ட் ஹாலிடேலையும் இருக்காது இல்லையா?

ஆமாம்.

அப்ப எங்க ஆஃபீசுக்கு லீவு போட்டுட்டுப் போனாத்தான் உண்டா என்றபடி மந்தமாக எதிரில் பார்த்தேன்.

என் பக்கத்தில் நின்றபடி என்னவோ கேட்டுக்கொண்டிருந்த யாருக்கோ அவர் பதில் சொல்லத் தொடங்கி இருந்தார்.

பரிதாபத்தில் உதவ முன்வந்து நீ நஷ்டப்பட வேண்டாம் என்ற பாட்டியின் குரல் தொலைவில் ஒலித்தது.

நீண்ட நாளாய் செலுத்தாமல் இருந்த நேர்த்திக்கடனாய் இந்த நோட்டை உண்டியலில் போட்டுவிட்டால் என்ன என்ற எண்ணம் பொறியில் தட்டிற்று. செல்லாத காசை செலுத்தி தெய்வகுத்தம் வேறு சேர்ந்துகொள்ளுமோ என்ற பயமும் கூடவே வந்துபோயிற்று. பாட்டிக்கு உதவியதைத் தனக்கு செய்த நேர்த்திக்கடனாய் நேர்செய்துகொள்ளமாட்டாரா?இந்த தர்க்கம் கூடத் தெரியாதவரா கடவுள் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். 

என்னதான் கிழிந்துபோனது, செல்லாத நோட்டு என்றாலும், காந்தியும் கவர்மெண்ட் சிங்கங்களும் இருக்கும் நோட்டை எப்படி எரிக்கவோ குப்பையில்போடவோ முடியும்? பாட்டியம்மாவுக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாற்றியதாக இருக்கட்டும் என்று பலகாலம் அந்த நோட்டை பர்சிலேயே வைத்துக்கொண்டிருந்தேன், கீறல்விழுந்த கண்னாடி கிழிந்த நோட்டு உடைந்த சிலை போல மூளியாகிவிட்ட பொருளெல்லாம் துரதிருஷ்டத்தையேக் கொண்டுவரும் என்று கேள்விப்படும்வரை.