Tuesday, November 8, 2011

சுனாமிக்கு பலியான ரமணியின் கேமரா

கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆர்வி ரமணியின் என் கேமராவும் சுனாமியும் என்கிற ஆவணப்படம் பார்த்தேன்.

விசேஷமான கேமராவெல்லாம் ஏதுமில்லை. ஓரளவு வசதிபடைத்த எல்லோரிடமும் இருப்பதுமாதிரியான ஹேண்டி கேம்தான். படத்தில் இருக்கும் பலகாட்சிகள்கூட எல்லோர் வீட்டிலும் பொதுவாகப் பார்க்கக்கிடைக்கும் பையனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள். அவன் வளர்வது. வெவ்வேறு தருணங்களில் அவனது பிரத்தியேக சுட்டித்தனங்கள். உறவினர்கள். அவர்களின் மழலைகள் அடிக்கும் லூட்டிகள். வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலிருந்து வெளியில் தெரியும் வான் காட்சிகள். வெளிநாட்டில் சந்திக்க நேரும் ஆங்கில மழலையில் பெண்கள் சிறுமிகள் வெட்கிச்சொல்லும் பெயரென்ன படிப்பென்ன என்கிற பதில்கள் என்று காட்சிமேல் காட்சிகளாய்ப் போய்க்கொண்டே இருக்கின்றன. சரி. இதிலென்ன குறிப்பிடும்படியான விஷயம்?

இவையனைத்தும் நான்கு வருடங்கள் 2000த்திலிருந்து 2004கில் சுனாமி தாக்கும்வரை ரமணியிடம் இருந்த சோனி ஹேண்டிகேமில் எடுக்கப்பட்டவை. இந்த கேமராவை உபயோகித்துத் தயாரிக்கப்பட்டப் படங்களில் இருந்தும் சில காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கலாம் போல் தோன்றுகிறது.

ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இருக்கும் இடம்தேடி இருட்டில் அலைந்து ஒருவழியாய்க் கண்டுபிடித்தால், கேட்டில் வருகையாளர் விபரம் பதிக்க வைத்திருக்கும் பதிவேட்டில் எழுதிக்கொண்டிருக்கையில் இந்தப் பக்கம் அம்ஷன்குமார். அந்தப்பக்கம் மொட்டைத்தலைக் குட்டிப்பையன். அவனை அண்ணாந்து பார்த்து அட அபியா என்றால் இல்லை நச்சு, ராஜு என்று அவனது அப்பா வைத்த செல்லப்பெயரில் அழைத்தான் ஆதிமூலத்தின் இரண்டாவது மகன். படம் தொடங்கியாகிவிட்டது என்றபடியே நாங்களிருந்த இடத்திற்கே வந்துவிட்டார் ரமணி.

அவர் கூறிய இரண்டாவது மாடி என்கிற தகவலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு திரையரங்கைத் தேடி கண்ணில்பட்டக் கதவுகளையெல்லாம் திறக்க முயன்றதில்வேறு, படம் போய்க்கொண்டே இருக்கிறதே என்கிற பதற்றம். தாமதமாய்ப் பார்த்தபடம் முழுதாய்ப் பார்த்த படம் என்று இரண்டு வெர்சன்கள் இதற்கு உண்டு என்று எழுத வரலாற்றாசிரியர்கள் எவரேனும் எதிர்காலத்தில் முளைக்கக்கூடும் என்கிற பயம்.

ஒன்றேபோல் இருந்த கதவுகளில் ஒன்று திறந்துகொள்ள திரையில் பகற்கடலின் பின்னணியில் சுனாமி பற்றி ரமணி பேசிக்கொண்டிருந்தார். சுனாமியின் பேரலை தாக்கியபோது கேமராவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்ததில் விரல்கள் வலித்தன. அந்த வலியை இன்னமும் தன்னால் உணரமுடிகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதற்குப்பிறகு அந்த கேமரா மெல்ல மெல்ல பகுதி பகுதியாய்ப் பிரிக்கப்படுகிறது. உள்ளே இருந்ததோ சுனாமி கொண்டுவந்து சேர்த்திருந்த மணல். அந்த கேமராவில் பதிவான சுனாமிக் காட்சிகள் முற்றாக அழிக்கப்பட்டதன் சுவடுதான் மணலாக மிஞ்சி நிற்கிறது.

சுனாமி என்று தலைப்பில் வருவதால் சோகப்படம் என்று தவறாக நினைத்துவிடவேண்டாம். கேமரா உயிரோடு இருந்த காலத்தில் எவ்வளவு உயிர்ப்போடு இருந்திருக்கிறது என்பதை, அது பதிவுசெய்திருந்த அவர் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகள். மகனின் பிறந்தநாள், அப்பாவின் பூஜை, அம்மா பிடிக்கும் கொழுக்கட்டை என வண்ணவண்ணமாய் சீரோட்டமாகவும் நேரடித்தொடர்பற்ற கண்ணிகளாகவும் காட்சியளிக்கின்றன…

இதுபோன்ற சுவாரசியமான பல இடங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பட்டியலிட்டு என்றேனும் படம் பார்க்க வாய்ப்பிருந்து, பார்க்கையில் கிடைக்க இருக்கும் அனுபவத்தைக் கெடுப்பது சரியில்லை. எனவே சிலவற்றைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.

சுந்தர ராமசாமியின் 50 வருட திருமண நிறைவு நாள் காட்சி. சு.ராவும் திருமதி கமலா சு.ரா அவர்களும் மாலை மாற்றிக்கொள்கின்றனர். பெண்வீட்டுக்காரா எங்கே என்று சு.ரா அடிக்கிற ஜோக்கும் அதற்குப்பிறகு அவருடன் விருந்தினர்கள் எல்லோருமாய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வருகிறது.

ரமணி இழந்த கேமரா பதிவு செய்த காட்சிகளில் அவரது வாழ்வுடன் நேரடியாய்த் தொடர்புடைய நண்பர்கள் சிநேகிதியர் எனப் பலரும் வருகிறார்கள். ஒருவரே வெவ்வேறு நாட்களில் வீட்டின் வெளிப்புற இரும்புக் கதவைத் திறந்துகொண்டு செல்வதை ரமணி மாடியில் இருந்து பார்ப்பதைப் பதிவுசெய்த ஷாட்கள். கலைராணி வெவ்வேறு நாட்களில் வண்டிகளில் செல்லும் ஷாட்கள். ஒன்றில் அவரது இருசக்கர வாகனம் கிளம்பாமல் மக்கர் செய்கிறது. அவரும் விடாமல் அதனுடன் நெடுநேரம் போராடுகிறார். கேமராமூலம் ரமணி அதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

படம் முடிந்தபிறகு இயக்குநருடனான கேள்வி-பதில் நேரத்தில், அந்தப் பெண்மணி கஷ்டப்படுகையில் கீழே இறங்கிப்போய் உதவி செய்யாமல் கேமராவால் படம் எடுத்துக் கொண்டிருந்தது சரியா என்று பார்வையாளர்களில் ஒருவர் கேட்டார். அதற்கு, அந்த ஷாட்டை வைப்பதைப் பற்றித் தான் கலைராணியிடம் அனுமதி வாங்கியது சம்பந்தமாய் ரமணி ஏதோ கூறினார். இரு சக்கர வாகனம் கிளம்பவில்லை என்கிற சாதாரணமான நிகழ்ச்சி காரணமாய் அந்த இடத்தில் அந்தக் கேள்வி அவ்வளவு முக்கியமில்லைதான்.

ஆனால், குறிப்பாக ஒரு மனிதனுக்குள் இருக்கும் கலைஞன் மனிதன் இருவரில் யாருக்கு முதன்மையான பங்கு இருக்கிறது, அல்லது முதன்மை கொடுக்கப்படவேண்டும் என்பது மிக முக்கியமான விவாதத்திற்கு உள்ளாகும் காலாகாலமான கேள்வி. சில புகைப்படங்களையும் ஊடகக் காட்சிகளையும் பார்க்க நேர்கையில் இது ஏதோவொரு தருணத்தில் எல்லோர் மனதிலும் எழக்கூடியதுதான்.

நப்பாம் குண்டுகள் வெடிக்கும் பின்புலத்தில் பெண் குழந்தை அம்மணமாய் அலறியபடி ஓடிவரும் வியட்நாம் போரின் அவலத்தைப் புகைப்படம் எடுத்தவர், ஒரு மனிதனாக அந்தக் குழந்தையிடம் ஓடிப்போய், தான் போட்டிருந்த சட்டையால் போர்த்துவதைவிட்டு கேமராவை சரியான கோணம் பார்த்து கூர்மை பார்த்து புகைப்படம் எடுத்தது சரியா என்கிற கேள்வி நிரந்தரமானது.

அவர் எடுத்த புகைப்படம், பார்த்தவர்களின் ஆன்மாவைத் தட்டி எழுப்பி அமெரிக்கர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகத்தின் கருத்தையே வியட்நாம் போருக்கு எதிராய்த் திருப்பியது என்பதுதான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதை நியாயப்படுத்துகிறது.திரையரங்கில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, என் கேமராவும் சுனாமியும் என்கிற படத்தில் வேறு கேமராக்களால் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் எப்படி வரலாம் என்பது.

அதற்கு ரமணியின் பதில் இந்தப்படம் நான்கு வருடங்கள் தன்னுடன் இருந்த கேமரா, தனக்குள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்களை வெளிப்படுத்துவதைப் பற்றியது. அந்த உணர்வைக் கொண்டுவரவே பிற கேமராவையும் உபயோகிக்கவேண்டி வந்தது என்றார்.

படத்தின் தொடக்கத்தில் பகுதி பகுதியாய்ப் பிரிக்கப்பட்டு சுனாமியின் மணலை சேகரித்திருந்த கேமராவின் பாகங்கள் படத்தின் பிற்பகுதியில் நிதானமாய் ஒவ்வொன்றாய்க் கழுவப்படுகின்றன.

சுனாமிக்கு பலியானவர்களின் பெயர்பதித்த நினைவுக்கற்களும் இழந்த உறவினர்களின் ஒப்பாரியும் காட்டப்படுகிறது.

சுந்தர ராமசாமியின் 50வது வருடத் திருமண நிறைவு விழாவில் விளையாடும் குட்டிப் பெண்ணின் ஷாட்டுகளும் விருந்தினர்கள் கூட்டமாய் நிற்கும் குரூப் போட்டோவும் வருகின்றன. அதில் இருக்கும் ஒரு பெரியவர், அவரது மகள், அவர் கையில் இருக்கும் அந்தக் குட்டிப் பெண் மூவரும் சுனாமியில் இறந்துவிட்டதை ரமணி தொட்டுக்காட்டிச் சொல்கையில் வாங்கிக்கொள்ள சற்று சங்கடமாய் இருந்தது..

படத்தின் இறுதியில் கேமராவின் பாகங்கள் கழுவப்படுவதும் பின்னணியில் நாதசுவர வகுப்பில் ஆசிரியர் வாசிப்பதை மாணவர்கள் திரும்ப வாசித்துப் பழகுவதும் வருகிறது. பார்வையாளர் பகிர்வு நேரத்தில் கேமரா கழுவப்படுவதைக் கலைராணி, இறந்தவர் உடல் கழுவப்படுவது போலத் தோன்றியதாய் தமது நீண்ட கருத்துக்கூறலின் பகுதியாய்க் கூறினார். சற்று நேரம் சென்ற பின் பார்வையாளர்களில் ஒருவர் அதையே கூறி ஷெனாய் போல நாதசுர இசையும் வேறு வருவதால் கேமராவின் இறப்பிற்குப்பின் இறந்த உடலைக் கழுவப்படுவதுபோல் தோன்றியதாய்க் கூறினார். மணிகெளலின் பள்ளியைச் சேர்ந்த ரமணி மெல்ல சிரித்தபடி அதை அமெச்சூர் அப்சர்வேஷன் என்றார்.

சுனாமிப் பேரலை அடிப்பதைத் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளே மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தன. வெறும் பார்வையாளர்களாய் நான்கு சுவர்களின் பாதுகாப்பில் தொலைக்காட்சியில் பார்க்கையில் பயங்கரத்தின் மறுபக்கமாய் சாகச உணர்வையும்கூடக் கொடுத்தது சுனாமி.

சுனாமியை எடுத்த ஒரு ஷாட்கூட படத்தில் காட்டமுடியாதபடி முற்றாக செயலிழந்த கேமராவைப் பற்றி 90 நிமிடத்திற்குப் படம் எடுத்திருப்பது, சுனாமியை நேரடியாய் தீண்டிப் பார்த்த ரமணியின் தைரியத்திற்கு ஒப்பானது.

[02 நவ 11ல் தமிழ் பேப்பரில் வெளியானது]