Sunday, November 20, 2011

பயம் [சிறுகதை]

ரயிலை விட்டு இறங்கியதும் அந்த நெடிய உருவம் எல்லோரையும் போல் கூட்டத்தோடு கூட்டமாய் படியேறி இறங்கும். தலை வாயிலில் தெரிந்ததும் ஓரமாய் நிற்கும் ஜீப் உயிர்பெற்று அதன் அருகில் வரும். தமது அதிகார பரப்புக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அத்துனைபேர் வாழ்வுக்கும் ஒளி கொடுக்கும் பதவியில் இருப்பவர்.

தண்டவாளப் பாலத்தின் படிக்கட்டில் ஏறும்போது ஒரு நாள் கேட்டேன், என்ன சார் மழைதான் நல்லா பேயுதே பவர் சிச்சுவேஷன் இம்ப்ரூவ் ஆயிடும் இல்லே.

பதில்வராமல் போகவே பக்கத்தில் அண்ணாந்து பார்க்க, அவர் சத்தமின்றி சிரித்தபடி துட்டி பிதுக்கிக்கொண்டிருந்தார்.

அதான் நெய்வேலி வேற இன்னும் ரெண்டு மாசத்துல ரெடியாயிடும்னு...

பத்து வருஷம் முன்னால எத்தனை பில்டிங்குல ஏஸிய பாத்துருப்பீங்க? இப்போ ஏஸி இல்லாத வீடு எவ்ளோ இருக்கும்?

இன்னொரு நாள், என்ன சார் ஆட்சி மாறினதுல இம்ப்ரூவ் ஆகும்னு பாத்தா, இன்னும் மோசமாயிட்டே போயிட்டிருக்கு பவர்கட்டு?

சிரித்தபடி ஆட்சிக்கும் பவருக்கும் என்னங்க சம்பந்தம் என்றார்.

கன்சம்ஷன் கொறையாது இன்க்ரீஸ் ஆகிக்கிட்டேதான் இருக்கும். இப்பல்லாம் எங்குளுக்குப் பீக் அவர்னே ஒண்ணு இல்லாமப் போயிடுச்சி. ராத்திரி பத்து மணி ஆனாலும் ஜாஸ்திதான் ஆவுதே தவிர கொறையிற வழியக்காணம். எங்கப் பாத்தாலும் ஏஸிங்க, என்ன பண்றது என்று சிரித்தார்.

என் முகமாற்றத்தை அவர் கவனித்திருக்க வேண்டும்.

என்னையும் சேத்துதான் சொல்றேன். ஃபேன்ல படுக்க முடியலைங்க. ஜன்னலைத் தெறந்தா கொசு கொண்ணுடுது.

எங்கள் அலுவலகம், ஒரு வீட்டின் மாடிப்பகுதியை வாடகைக்கு எடுத்து இயங்கிக்கொண்டிருந்தது. ஆபீசுக்குள் நுழையும்போதே இருட்டு.

என்னம்மா ஆச்சு? ஈபிக்கு ஃபோன் பண்ணினியா?

குட்மார்னிங் சார். காத்தாலப் பத்து மணிக்கே கரண்டு போயிடுச்சி சார். போன் பண்ணதுக்கு, இன்னிக்கு நாலு மணி நேரம் கரண்டு கட்டாம். காத்தால பத்துலேந்து பன்னெண்டு மத்தியானம் மூணுலேந்து அஞ்சுன்னு சொன்னாங்க சார்..

நாசாமாப் போக. வேர்த்து வடிஞ்சாலும் பரவால்ல, கீபோர்டைப் பாக்கவாச்சியும் லைட்டு வேணாமா? கம்ப்யூட்டருக்கான பேக்கப்பும் நாப்பது நிமிஷம்தான் வருது. இந்த லட்சனத்துல தேதி குறிச்சி குடுக்கறாங்க. இதுக்குள்ள இதை முடி அதுக்குள்ள அதை முடின்னு. முடியத்தான் பிச்சிக்கணும். இன்னிக்கும் ரிப்போர்ட்டு போவாது. மேலேந்து டோஸுதான்.

எதிரிலிருக்கும் துப்புறவுப் பணிப்பெண் தவிர இன்னும் யாரும் வந்திராத அலுவலகத்தில் தனித்த புலம்பல்.

அந்தப் பெண் என் மீது பாவப்பட்டதோ இல்லை தான் ஃபோன் செய்ததை இவர் நம்பவில்லை போலும் என்று நினத்ததோ என்னவோ, ஏழெட்டு முறை முயற்சித்து இறுதியாய் வெற்றிகண்டது.

அழகேசன் நகர் கஸ்டம்ஸ் ஆபீஸ்லேந்து பேசறோம். கரண்டு போயிடுச்சி. இன்னாங்க இப்புடி ஆபீசு இருக்கற ஏரியாவுலப் போயி காலீல கரண்டு கட் பண்ணினா எப்பிடிங்க வேலை செய்யுறது? ராத்திரில கட் பண்ணினாலும் பராவல்ல.

தரை பெருக்கி தண்ணீர் எடுத்து வைப்பவள்தான் என்றாலும். வருடாவருடம் அதிகாரிகள் மாறிக்கொண்டே இருக்கும் அலுவலகத்தில் மாறாதிருக்கும் ஒரே நபர் தான்தான் என்பதால் கிடைத்த தன்னம்பிக்கையில், மூன்று அறைகளும் ஹாலும் கொண்ட மாடிப் பகுதி முழுக்க அவள் குரல் எதிரொலிப்பது போல் பெரிதாகக் கேட்டது. நல்லவேளையாக கீழ்ப்பகுதியில் வசிக்கும் வீட்டின் சொந்தக்காரர் குடும்பத்தோடு ஊருக்குப் போயிருந்தார்.

எதிர் முனையில் எடுத்தவர் அதிகாரியாக இருக்கவேண்டும். பேசுமொழியில் யாரெனத் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். அவர் கொஞ்சம் கடுமையாய்ப் பேசினார் போலும்..

இல்லையில்லை சார். இங்க ஒரு நம்பர் இருந்துது சார். அதான் பண்ணினோம். இன்னிக்கி ஒரு நாள்தானே சார். சரி சார். சரி சார். சாரி சார்.

அன்று கிண்டியில் ரயிலேறும் போது சரியான மழை. ட்ரெயினும் லேட்டாக வந்தது. அதிசயமாய் வண்டியிலும் கூட்டமில்லை. முந்தைய வண்டி தாமதமாக வந்து இருந்த ஐடி மகாஜங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிருக்க வேண்டும்.

பெண்கள் பகுதியைப் பிரிக்கும் முதல் வகுப்பின் வாயிலை ஒட்டி நானும் பெட்டியின் சுவரை ஒட்டி அவருமாக, எப்போதும் எதிரெதிர் கோடிகளில் உட்காருவோம். ஈரமான இருக்கைகள் அன்று நடுவில் அமர வைத்தன. என்னைப் பார்த்ததும் கைபேசியில் பேசிக்கொண்டே தலையாட்டி சிரித்தார். பேசி முடிப்பதற்காகக் காத்திருந்தேன். ம். ம். சரி சரி என்றவர் ஒரு விரலால் எனக்கு சைகை காட்டி மொபைலைக் காதிலிருந்து எடுத்தார். கண் சுருக்கிப் பார்த்தபடி ஏதோ நம்பருக்கு அடித்து, என்னவோ நம்பரைக்கூறி அங்க மட்டும் கட்பண்ண வேண்டாம் என்றார். அலைபேசி சட்டைப் பாக்கெட்டுக்குள் போனதும்,

நேத்து என்ன சார் நாலு மணி நேரம் கட் பண்ணிட்டீங்க என்று கேட்டேன்.

இல்லையே, அஞ்சு மணி நேரம். ராத்திரி வேற அரை அரை மணி நேரமா கேப் விட்டுக் கட்டாகியிருக்கு என்றார் சிரித்தபடி.

ஐயையோ! என்ன சார் இது அநியாயமா இருக்கு. ரொம்ப கஷ்டம் சார்.

இப்ப லைன்ல வந்தது லா காலேஜ் பிரின்ஸிபல். எக்ஸாம் நடந்துகிட்டு இருக்குன்னு சொன்னாரு. அட்ஜஸ்ட் பண்ணி அங்க மட்டும் குடுக்கச்சொல்லி இருக்கேன்.

என்ன சார் அப்பக் கூடங்குளம் வந்தாதான் விடிவா?

யார் கண்டா போராட்டத்துக்கு எதிரா ஜனங்க மத்தில எதிர்ப்ப உருவாக்கக்கூட எக்ஸ்ட்ரா பவர் கட் பண்றாங்களோ என்னவோ? அருகிலிருந்தவர் சிரித்தபடிக் கூறினார்.

கூடங்குளத்தைப் பத்தி இப்ப இவ்ளோ ரகளை பண்றாங்களே, முப்பது வருஷமா இருக்கற கல்பாக்கத்தால என்ன சார் பெரிய ஆபத்து வந்துடிச்சி? அதுலேந்து எவ்ளோ பவர் சார் கெடைக்கிது?

இருநூறு மெகா வாட்.

அவ்ளதானா.

அதுக்குப் பேரே ஃபாஸ்ட் ப்ரீடர் டெஸ்ட் ரியாக்டர்தான்.

கூடங்குளத்துலேந்து எவ்ளோ கெடைக்கும்?

ஐநூறு.

கூடங்குளம் வந்தா இந்தப் ப்ராப்ளம் சால்வாயிட சான்ஸ் இருக்கில்லையா.

நிச்சயமா இப்ப இருக்கறதைவிட இம்ப்ரூவாகும். அது இருக்கட்டும். மெட்ராசோட ஒரு நாள் பவர் ரிக்கொயர்மெண்ட் என்னான்னு நெனைக்கிறீங்க? என்றார்.

எவ்ளோ சார்?

ரெண்டாயிரத்தி ஐநூறு மெகா வாட். கேரளா ஸ்டேட்டைவிட ஜாஸ்தி. என்று சொல்லி சிரித்தார். அப்ப தமிழ்நாட்டோட தேவையை நெனச்சிப்பாருங்க.

கூடங்குளமும் இல்லாட்டா என்னதாங்க பண்றது?

கதிர் வீச்சு அபாயம்னு சொல்றது எவ்ளோ தூரம் சார் உண்மை? பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

சிரித்தபடி, பிரச்சனையே சேஃப்டி பத்தின அவேர்னஸைக் கிரியேட் பண்ணப்போய்தான் ஆரம்பிச்சிது. ஆக்ஸிடெண்ட்டலா ஏதாவுது ஆச்சின்னா, என்ன பண்ணனும் எப்டி நடந்துக்கணும்னு, தீ பிடிச்சா என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு ஃபையர் சர்வீஸ்காரங்க செஞ்சி காட்டறாங்களே...

மாக்-ட்ரில்.

ஆ அது மாதிரி செஞ்சிக்காட்டப்போயிதான் வந்துது வெனை. அதைப் பாத்ததும் லோக்கல் ஜனங்க அணு உலை பயங்கரமான ஆபத்துன்னு பயந்துட்டாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி கல்பாக்கத்துல கூட இது மாதிரி நடத்தினாங்க. எல்லா டிபார்ட்மெண்ட்டுலேந்தும் கூப்டுருந்தாங்க. லீக்கேஜ் மாதிரி ஆக்சிடெண்ட் ஏதாவுது நடந்தா, எமர்ஜன்சி சிட்ச்சுவேஷன்ல எப்டி நடந்துக்கணும்னு டெமான்ஸ்ட்ரேட் பண்ண்ணிக்காட்டினாங்க. நாங்கள்ளாம் கூட போயிருந்தோம். எல்லாரையும் கொண்டு போய் ஒரு ரூமுள்ள அடைச்சி, தண்ணியெல்லாம் ஊத்தி, மாஸ்கெல்லாம் போட்டு, கதிர்வீச்சு பரவாம இருக்க என்னென்ன ப்ரிகாஷன்ஸ் எடுக்கணும்னு காட்டினாங்க.

அப்ப கதிர்வீச்சு அபாயம் இருக்கறது உண்மைதானா? அருகிலிருந்தவர் கேட்டார்.

அடாமிக் எனர்ஜினு வந்தப்பறம் ரேடியேஷன் டேஞ்சர் இல்லேன்னு எப்டிங்க சொல்ல முடியும்? கேஸ் சிலிண்டர் கூட, வெடிச்சா விபரீதம்தான். புக் பண்ணும் போதே, நாத்தம் வந்தா, லீக்காவறாப்புல கொஞ்சம் சந்தேகம் வந்தாக்கூட சுச்சி கிச்சி போடாதே, எல்லா ஜன்னலையும் தெறந்து வையின்னு சொல்லிக் குடுக்கறதில்லையா? வெடிச்சிடாம இருக்க என்னென்ன தற்காப்புகள் எடுக்கப்பட்டிருக்குனு பாக்கறதை விட்டுட்டு எங்க ஏரியாவுல சிலிண்டர் ஃபேக்டரியே வெக்கக்கூடாதுன்னா எப்படிங்க? ஃப்ளைட் கெளம்பின கொஞ்ச நேரத்துலையே சேஃப்டி மெஷர்ஸை டெமான்ஸ்ட்ரேட் பண்றதில்லையா? அது ஒரு ஸ்டேண்டர்ட் ப்ரொசீஜர். அதை செஞ்சி காட்டணும்னு சட்டம் ஏன் இருக்கு? எமெர்ஜன்சி சிட்சுவேஷன் ஏற்பட்டால் எண்ண பண்ணணும்னு சொல்லிக்குடுக்க வேண்டியது ஏர்வேஸோடக் கடமை. அதைப் பாத்ததுமே, பறக்கறதுல இவ்ளோ பிரச்சனை இருக்கா. வேணா வேணாம் நா எறங்கிக்கிறேன்னு சொல்லி ஃப்ளைட்டு விட்டு எறங்கிடறோமா? ரெகுலரா ஃப்ளைட்லப் போறவங்க அதை சட்டையே செய்யாம, கண்ணை மூடி, தூங்கவே ஆரம்பிச்சிடறதில்லையா?

அப்ப ஒண்ணுமில்லாததுக்குதான் இவ்ளோ ஆர்பாட்டமா? என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

லோக்கல்ல இருக்கற எல்லா ஜனக்களையும் கூப்ட்டு, ரொம்ப லார்ஜ் ஸ்கேல்ல கிட்டத்தட்ட நூறு பஸ் ஏற்பாடு பண்ணி, எமர்ஜென்சி இவாக்வேஷன் மாதிரி அந்த ஏரியாவையே எப்டி காலி பண்ணி காப்பாத்தணும்னு செஞ்சி காட்டினதைப் பாத்ததும் இதுல இவ்ளோ டேஞ்சர் இருக்கான்னு எல்லாரும் பயந்துட்டாங்க. அதுக்கப்புறம் இதைப் பொலிடிசைஸ் பண்ண நம்ப ஆளுங்களுக்கு சொல்லிக் குடுக்கணுமா? எல்லாரும் எகிறி குதிக்க பிரச்சனை இவ்ளோ பெருசா ஆயிடுச்சி.

ஒருத்தரு டிவில கேட்டாரு பாத்தீங்களா. இதை ஏன் அந்த கட்சி ஆள்ற ஊர்ல வெக்கலை? உங்களால இதை கேரளாவுல கொண்டுபோய் வெச்சிருக்க முடியுமான்னு?

பேச்சு, தீவிரத்திலிருந்து இளகி மெல்ல சிரிப்பு படர்ந்தது.

அந்தூர்ல சாதாரனமா ஒரு ஃபேக்டரிய வெக்கறதே கஷ்டம். அவன்தான் எதுக்கெடுத்தாலும் கொடி தூக்குவானே. அணு உலைக்கு அங்க அடிக்கல் நாட்டவே உட்ருக்கமாட்டாங்க.

அவங்க ஊர்ல வரவிடமாட்டாங்க. ஆனா எல்லா ஊர்லையும் போயி அவங்க வேலை செய்வாங்க. கல்பாக்கத்துலையும் கூடங்குளத்துலையுமே எத்தினிபேர் வேலை செய்யறாங்கன்னு தலை எண்ணிப் பாத்தா நம்பளைவிட ஜாஸ்தியா இருப்பாங்க. மாஸ் சைக்காலஜி வேற தனி நபர் நடத்தை வேறதான் எப்பவும் இல்லியா. கல்பாக்கத்துல இன்னோரு ரியாக்டருக்கு வேலை நடக்குது. ரெண்டு வருஷத்துல இன்னோரு இருநூறு கெடைக்கும்.

பரவால்லியே. ஆனா இப்ப நடக்கிற ரகளை ஓவராப் போயி கூடங்குளமே இல்லேன்னு ஆயிட்டா என்ன்ங்க ஆவறது?

இத்தனை வருஷமா இவ்ளோ கோடியக் கொட்டிட்டு யாருங்க மூடுவாங்க. நடக்கற வேலை நடந்துகிட்டுத்தான் இருக்கும். தலைவர்கள்னு நாலு பேரு மைக் புடிச்சி, இருக்கற கரண்டையும் வேஸ்டாக்கிகிட்டு இருப்பாங்க.

சார் அக்டோபர் ஒண்ணுலேந்து எங்க ஆபீஸ் கம்ப்ளீட்டா ஆன்லைன் ஆயிடுச்சி. தேதிவாரியா டெட்லைன் குடுத்துட்டான். இந்திந்த பேக்லாக்கை இந்திந்த தேதில கிளியர் பண்ணனும்னு டேபிள் போட்டு குடுத்துருக்காங்க. சொன்ன தேதில முடிக்கிலைனா, விழுப்புரத்துக்கோ பாண்டிச்சேரிக்கோ வந்து கிளியர் பண்ணனும்னு ஓல வந்துருக்கு. இன்னிக்கி வழக்கம்போல ரெண்டு மணி நேரம்தானே பவர் கட்டு?

சிரித்தபடி, இனிமே டெய்லி அஞ்சு மணி நேரம். எந்தெந்த ஏரியாவுல எப்பெப்ப பவரைக் கட் பண்ணனும்னு எங்குளுக்கும் ஷெட்யூல் போட்டு மெட்ராசுலேந்து வந்துருக்கு. அது சரி விழுப்புரம் எங்க வெளிநாட்லையா இருக்கு? அங்கயும் அஞ்சாறு மணி நேரம் பவர்கட் இல்லாமையா இருக்கும். ஜெனரேட்டர் பேக்கப் வெச்சிக்குங்க. எல்லாரும் ஜெனரேட்டர் வாக்க ஆரம்பிச்சா டீசல் தட்டுப்பாடு வரும். சங்கிலித்தொடரா வெலவாசி ஏறும்.

கேஸ்கேடிங் எஃபெக்ட் பற்றி ஈபிகாரர் கிளாஸ் எடுக்கிறார். எக்சைஸ்காரன் கேட்கவேண்டி இருக்கிறது. ம். எல்லாம் நேரம்.

வண்டி நின்றது. இறங்கி நடக்கத் தொடங்கினோம். மழை வெரித்து வெயிலே அடிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. ஈர பூமி வெயிலை வாங்கிக்கொண்டிருந்ததால் இதமாக இருந்தது. படி ஏறத் தொடங்கினோம். நிலைமை இப்படியே தொடர்ந்தால், சென்னையில் இருந்து விழுப்புரமோ பாண்டிச்சேரியோ தினம் தினம் போக வேண்டி வரும் என்பது முன்னால் நின்று பேயாட்டமாடி பீதி கிளப்பிற்று. படியேறியபடி,

சார் எங்க ஆபீசுக்கு எதுத்தாப்புல பெரியாஸ்பித்திரி இருக்கே அதை வெச்சாவுது எங்க ஏரியாவுக்குக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணக்கூடாதா?

ஜெனரேட்டர் வாங்கி வெச்சிக்குங்க. லா காலேஜ்ல எக்ஸாம் நடக்குதுங்கறதுக்காக ரிலாக்ஸ் பண்ணிக் குடுத்ததுக்கே மேலேந்து எப்ப கால் வருமேன்னு யோசனையா இருக்கு.

என்ன்ன சார், வேற எங்கையாவுது கட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா?

எந்த எடத்தைக் கட் பண்றது? அவங்களுக்கான ஷெட்யுல்னு ஒண்ணு இருக்குமில்ல. அதுக்கு முன்னதான் அந்த ஏரியாவுல பவர் கட் பண்ணி இருப்போம். திரும்பப் பண்ணினா அவன் கத்த மாட்டானா?

ரயில் நிலைய வாயிலுக்கு வந்தோம். வழக்கம்போல அவருக்கு ஜீப்பு எனக்கு ஆட்டோ. ஜெனரேட்டர் என்ன ஜெனரேட்டர். அலுவலகத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் டிஜி செட்டே ரயில் என்ஜின் போலக் காவி நிறத்தில் நீளமாய் நிற்கிறது. அதற்கு மாதம் பத்தாயிரத்திற்கு டீசலை யார் ஊற்றுவது? இரண்டு வருஷங்களுக்கும் மேலாக உபயோகிக்காமல் போனதில் அதன் பேட்டரியே உயிரை விட்டுவிட்டது. முன்னால் இருந்தவர்கள் எல்லாம் ஒப்புக்குக் கடிதம் போட்டு சும்மா இருந்துவிட்டார்கள். மூன்றரைக்குமேல் கரண்ட் இல்லை என்கிற சாக்கில் நான்கு மணி ட்ரெயின் பிடிக்க நல்ல சாக்காக இருந்தது. ம். அவர்கள் ஜாதகம் அப்படி.

ஆன்லைன் ஆனதில் இருந்து ஒவ்வொரு ஓட்டை உடைசலும் தலைநகருக்கே தெரிந்துவிடுவதால், கேள்விமேல் கேள்வி. திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த மாத சுமை ஏறிவிடுகிறது. மிச்சமிருக்கும் ஆறேழு மாதம் பெரிய பிரச்சனையில்லாமல் கழிந்தால் போதும் சென்னைக்கு ஓடிவிடலாம்.

தெருத் திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடையின் மேற்புறம் எரிந்த ட்யூப் லைட், அலுவலகத்திலும் மின்சாரம் இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திற்று.

உள்ளே நுழைந்தபோது, வழக்கம்போல இருட்டாக இருந்தது. கணினித் திரையில் விண்டோஸ் எக்ஸ்பி ப்ரொஃபஷனல் என்று ஸ்க்ரீன் சேவர் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

யாருமே இல்லாதப்போ, கம்ப்யூட்டரை ஏம்மா ஆன் பண்றே. பேக்கப் வேஸ்டாவுதுல்ல என்றபடி போய் எரிச்சலுடன் அமர்ந்து நீர் பாட்டிலை எடுத்தவன், குடித்தால் இன்னும் வியர்க்கப்போகிறதே என்கிற பயத்தில் வைத்துவிட்டேன். கஷ்டகாலம், தண்ணி குடிக்கக்கூட கரண்ட் வேண்டி இருக்கிறது.

ஜன்னல்வழி தெரிந்த தோட்டத்து மாமரம் பச்சைவண்ண ஓவியம்போல் அசையாது நின்றிருந்தது. படியேறி வந்த படபடப்பை சமன் செய்துகொள்ள நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டேன்.