Wednesday, November 30, 2011

விற்றதும் கற்றதும்

கடந்த சனிக்கிழமையன்று, மாலை நான்குமணிவாக்கில் மனுஷ்ய புத்திரனை சந்தித்தேன். ஏறக்குறைய ஒரு வருடத்திற்குமுன் அவரிடம் தனிப்பட்ட முறையில் உதவி கேட்டுப் போயிருந்தேன். அவர் எனக்கு நண்பர்கூட அல்ல. அவரது பத்திரிகையில் என் பெயர் அவ்வப்போது சுகுமாரனால் குறிப்பிடப்பட்டுக்கொண்டு இருந்தது என்பதைத் தவிர பெரிய பரிச்சயம் ஏதுமில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்தது எனது அப்போதைய அலுவலக நிலைமை. அந்தத் தருணத்தில் அவரால் எனக்கு உதவ முடியவில்லை. அங்கிருந்த சாருவுக்கு மூன்று நான்கு பதிவுகள் எழுத மட்டுமே உபயோகப்பட்டது அந்தச் சந்திப்பு.

மீதி கதையெல்லாம் சாருவிடமும் என்னிடமும் தேடினால் தேதிவாரியாகப் படிக்கக்கிடைக்கும். சண்டை என்று வந்துவிட்டால் கண்மண் தெரியாமல் வீசுவதே நாம் கற்ற கலை.

பழிவாங்கலாய்ப் பந்தாடிய அலுவலகத்திற்கு ஆறுமாத விடுப்பு எடுத்தேன். விடுப்பு கொடுத்துவிட்டு வீட்டில் சும்மா எப்படி இருப்பது? பதினாறுவருடம் விடுப்பு கொடுத்திருந்த இலக்கியத்திற்குள் மறு பிரவேசம். ஜூலை 8 முதல்  என்ன நடக்கிறது என்று சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தவன் ஆகஸ்ட்டு 16ல்  இணையத்தில் முதல் பதிவாய் ஃபெலினியின் இண்டர்வ்யூ மூலமாய் அலுவலக சம்பளத்துடன் ’முழுநேர எழுத்தாளன்’ ஆனேன்.

ஏறக்குறைய இரண்டு மூன்று வாசக தலைமுறைகள் கடந்து, என் பெயர்கூட தெரியாத அளவிற்கு இலக்கிய ’சீன்’ மாறிவிட்டிருந்த காலகட்டத்தில், அதுவரையில் நான் எழுதிய கதைகள் அனைத்தையும் பதிப்பிக்க முன்வந்தவர் என்கிற விதத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது.

சிறுபத்திரிக்கைச் சூழலில் பதிப்பகம் என்றால், எவரெஸ்ட் எழுத்தாளர்களுக்குக் க்ரியா, ஏனைய பத்திருபது ஆண்டுகள் புழங்கிய ’புதியவர்களுக்கு’ அன்னம். அன்னமும் அற்றோருக்கு ஆர்வமுள்ள நண்பர்கள் நிதி திரட்டிப் பதிப்பித்தால்தான் புத்தகம். புத்தகம் வரும் வரை எழுத்தாளன் பூப்பெய்தியதாகக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாது என்றிருந்த காலம்.

தமிழின் சிறு இலக்கிய வட்டாரத்தில் ’பசை’க்கான ஒரே பாலைவனச்சோலையாய் வாய்த்திருந்த சுப்ரமண்ய ராஜூ, புத்தகம் போடப்போகிறேன் என்று கூறியதும் பணம் தேவைப்பட்டால் கேள், ஆனால் உனக்குப் புத்தகம் இவ்வளவு சீக்கிரம் அவசியமில்லை என்றார். கடைசிவரை அவரது உதவி தேவைப்படவில்லை எனினும் பல விஷயங்களில் பலருக்கும் உதவியவர் என்பதாலும் கேட்காமலே எனக்கு உதவுவதாய்ச் சொன்னதாலும் அவருக்கும் முதல் புத்தகத்தில் நன்றிகூறி இருந்தேன். அதற்கு சிலவருடங்கள் கழித்தே அவருக்கு தொகுதி வந்தது என்று நினைவு.

81ல் எழுதத்தொடங்கிய பாலகனுக்கு 83ல் புத்தகம். அதுவும் அதுவரை புத்தகம் வந்து பூப்பெய்தியிராத சுகுமாரனின் முன்னுரையோடு. ’ரொம்பத்தான்யா உங்க ரெண்டுபேருக்கும் தைரியம்’ என்று சந்திக்க நேர்ந்தபோது வண்ணதாசன் பாராட்டியதாக சுகுமாரன் கூறியிருக்கிறான். ஆனால் அது அப்படியொன்றும் முதல் காரியம் அன்று. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாக அசோகமித்திரனின் முதல் தொகுப்பு ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் வெளியாகி இருந்தது. அப்போது ஞானக்கூத்தனின் கவிதைகளும் புத்தகவடிவில் வெளியாகியிருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

உயிர்மை வெளியிடும்வரை என் கதைத் தொகுப்புகள், அறியாத முகங்கள் (1983) முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986) உயிர்த்தெழுதல் (1994) அறியாத முகங்கள் மறு பதிப்பு (1994) என்று அனைத்தும் சத்ரபதி வெளியீடு என்கிற பெயரில் நானே பதிப்பித்தவைதான். பாரீசில் போய் புத்தகத்திற்கான காகிதம் வாங்கிவருவது முதல் முகப்பின் வடிவாக்கக் காட்சிரூபம் உட்பட - முதல் புத்தகத்தின் முகப்பு தலைப்புக் கதையான அறியாத முகங்களைப் படித்துவிட்டு அப்போது அப்பாவுக்கு அலாட் ஆகியிருந்த பெஸண்ட் நகர் குடியிருப்பின் அடுத்தவீட்டுக்காரராய் இருந்த ஆதிமூலம் வரைந்து கொடுத்தது. அதைத் தவிர, என் புத்தகங்கள் அனைத்தையும் பதிப்பிக்கும் அனைத்துக் காரியங்களும் நானே நேரடியாய் ஈடுபட்டுச் செய்தவை.

1994 புத்தகக் கண்காட்சி மறக்க முடியாதது.

கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட சமூகத்தின் ’பார்வை’யிலேயே படாமல் ஒரு ஓரமாய் இறுமாப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாலும் இலக்கிய ’உழக்கிற்குள்ளேயே’ படவேண்டிய அவமானம் கொஞ்சநஞ்சமன்று.

94லில் தில்லியில் நடக்கும் உலக திரைப்பட விழாவும் காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியும் ஒரே சமயத்தில் வந்து சேர்ந்தன.

மயிலாப்பூர் அச்சகத்தில் இருந்து 1200 புத்தகங்களைக் கொண்டு வந்தாயிற்று. வரக்கூடும் என எதிர்பார்க்கும் நூலக ஆணைக்குமாக சேர்த்து 1200 பிரதிகளாய் அச்சடித்தால்தான் அந்தக் காலத்தில் நஷ்டத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.  அச்சுக் கோர்ப்பிலிருந்து பதிப்பகங்கள் ஆஃப்செட்டுக்குத் தாவிக்கொண்டிருந்த நேரம். பங்குச் சந்தையில் இருந்தவர் அலுவலக அதிகாரி என இரண்டு நலம்விரும்பிகள் ஒரே நேரத்தில் கடன்கொடுத்து உதவ முன்வந்ததால் தலைகால் புரியவில்லை. மாவு, கூட இருந்ததால் சாதா ஒன்று மசாலா ஒன்று என ஒரே நேரத்தில் உயிர்த்தெழுதலை அச்சுக்கோர்ப்பிலும் அறியாத முகங்கள் இரண்டாம் பதிப்பை ஆஃப்செட்டிலுமாகக் கடன்பட்டு வெளியிட்டு இரட்டைச் சூனியம் வைத்துக்கொண்டேன்.

அப்போது அண்ணா நகர் குடியிருப்பில் வாசம். ஆகவே மந்தைவெளியில் இருந்த சுகுமாரன் வீட்டில் கணிசமான் பிரதிகளைக் கொண்டுபோய் வைத்துவிட்டு, சென்னையில் ‘இந்த மாதிரியான’ புத்தகங்களைக் விற்கும் ஒரே கடையான க்ரியா ஸ்டாலில் காட்சிக்கு வைப்பதற்காக திலீப்குமார் அவர்களிடம் கொடுக்கவேண்டி 50 பிரதிகளை எடுத்துச் சென்றேன்.

மந்தைவெளியில் கீழே வீடு, மாடியில் மொத்த சில்லறை புத்தக வியாபாரம் என்று இலக்கியமும் கடையுமாக இருந்தார் திலீப்குமார். பெரும்பாலான நேரம் அளவளாவ வந்து செல்லும் இலக்கிய நண்பர்களின் தனிப்பார்வைக்கு மட்டும் என்று போர்டு வைக்கும் அளவிலான வியாபாரம். பல பத்திரிகைகளும் புத்தகங்களும் இருந்த இடம்விட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தபடி இருந்துகொண்டு இருக்கும் இடம். ஆனால் அப்படி ஒரு இடம் இருந்துகொண்டே இருந்தது என்பதுதான் அதன் முக்கியத்துவம். லட்சக்கணக்கானோர் பாத்திர பண்டம் ஜவுளி எடுக்க முண்டும்போது அத்துனை நெரிசலுக்கு இடையிலும்  திருஷ்டிக்குக் கட்டும் படிகாரமாய் ரங்கநாதன் தெருவில் முன்றில் இருக்கவில்லையா அதுபோல.

பார்த்ததும் பதறிப்போனார்.

என்ன மாமல்லன் இது.

புக்ஃபேருக்காக...

அது சரி இவ்ளோ எதுக்கு. இங்க எடமே இல்லை மாமல்லன்.

இல்லை. இண்டர்நேஷ்ணல் ஃபில்ம் ஃபெஸ்டிவலுக்கு டெல்லி போறேன். புக்ஃபேரும்போது இங்க இருக்க மாட்டேன் அதாலதான்.

எவ்ளோ மாமல்லன்? எக்கச்சக்கமா இருக்கும் போல இருக்கே?

இல்லை ஐம்பது ஐம்பது காப்பிதான் கொண்டாந்துருக்கேன். தேவைப்பட்டா இருக்கட்டும்னு கொஞ்சம் சுகுமாரன்கிட்ட குடுத்திருக்கேன்.

இருவத்தியஞ்சு காப்பிக்குமேல வித்துதுன்னா ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கறேன். அதுவே போகாது மாமல்லன். வேணும்னா சுகுமாரன்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன் என்றார்.

சென்ற வருடம், பதினாறு வருட இடைவெளி வேறு. இணைய எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இலக்கிய வானில் ஜொலிக்கிறார்களே லோகம் சுபிட்சமடைந்துவிட்டது போலும் என்கிற மூட நம்பிக்கையில் யதார்த்த நிலைமை தெரியாமல் அப்பாவியாக மனுஷ்ய புத்திரனிடம் அடுத்த பதிப்பின்போது களையவேண்டிய பிழைகள் பற்றிக் கூறத்தொடங்கினேன்.

புத்தருக்குரிய மோன வதனத்துடன், ஒரு வருஷத்துல எவ்ளோ போகும்னு நெனைக்கிறீங்க? என்றார் கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தபடி.

நிலவரம் தெரியாததாலும் கூடுதலாகச் சொல்லிவிடுவோமோ என்கிற கூச்சத்தாலும் தயங்கித் தயங்கி 300 என்றேன்.

அடுத்த வருஷம் இதே இடத்துல சந்திப்போம். 70 காப்பி போயிருந்தா உங்க புக்கு ஹிட்டுன்னு அர்த்தம் என்றார்.

நேற்றைய சந்திப்பில், 94ல் வெளியிட்ட அறியாத முகங்களின் மறு பதிப்பும் உயிர்த்தெழுதல் புத்தகமும் ’கொஞ்சம்’ கைவசம் இருக்கின்றன, அவற்றை எங்கேனும் கொடுக்கலாமா?இவ்வளவு முதலீடு செய்து புத்தகத்தை வெளியிட்டு இருக்கையில் பழைய புத்தகங்களை வெளியில் கொணர்ந்தால் சரியாக இருக்காதே, உயிர்மை வெளியிட்டது கிட்டத்தட்ட தீரும் நிலையில் இருந்தால் இதை வெளியில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் எனத் தயங்கியபடிக் கூறினேன்.

பரவலான கவனத்துக்கு வந்த புத்தகங்களாச்சே அப்பவே வித்துருக்கணுமே என்றார்.

விற்பனை உரிமைக்குக் கூட எடுத்துக்கொள்ள யாரும் முன்வராத காலம். இப்படியான புத்தகங்களைக் க்ரியாவை விட்டால் விற்க, கோவையில் விஜயாதான். அங்கே கொடுத்த புத்தகங்களில் இருந்து இன்றுவரை ஒற்றைப் பைசா பெயரவில்லை. புத்தகத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்துப் பல வருடங்களாகிவிட்டன. தப்பித்தவறி விற்ற புத்தகங்களுக்கான பணத்தை வசூலிக்க வேண்டுமென்றால் கோணங்கிபோல உன்மையான தேசாந்தரியாகத் திரிந்தால்தான் உண்டு என எண்ணிக்கொண்டேன்.

தாராளமா குடுங்க மாமல்லன். வீட்டுல வெச்சி அதைப் பாத்துகிட்டு இருக்கறதுவேற டிப்ரஸிங்கா இருக்கும். உங்க புக்கு அறுநூறு போட்டேன். இருநூறு போயிருக்கு. ஆமா உங்க கதைகள் எல்லாத்தையும் பிடிஎஃபா படிச்சிட்டேன்னு  ஒருத்தரு சொன்னாரு. எல்லாக் கதைகளையும் சைட்டுலையே போட்டு இருக்கீங்களோ? என்றார் குசும்பாக.

இல்லையே ஒண்ணுரெண்டு கதைகள்தான் அழியாச்சுடர்கள்ல இருக்கு. அதுக்கு லிங்க்கு குடுத்துருக்கேன். தளத்துல இருக்கற மத்தது எல்லாம் புதுசா எழுதினதுதான் என்றேன்.

அத்துனைக் கதைகளையும் பிடிஎஃபில் படித்ததாய்ச் சொன்னவர், அநேகமாய், தளத்தின் முகப்பில் இருக்கும் புத்தகத்தின் படத்தை சொடுக்கினால் வரும் கதைகளின் முதல் பக்கங்களைப் படித்ததைச் சொல்லி இருப்பார் போலும். டிவிடியின் பின்னட்டையிலே படம் பார்த்து உலக சினிமா பற்றி புக்கெழுதவும் படித்த சில நூல்களில் இருந்து பல நூல்களைத் திரித்து தரிசன அனுபவமாய் கிண்டி கொடுக்கவும் எழுத்தாளர்கள்  இருக்கையில், முதல் பக்கத்தைப் படித்தே முழு கதையை அனுபவிக்கும் வாசகர்கள் இருக்கக்கூடாதா என்ன?

உங்க கதைகளை உங்க தளத்துலப் போட்டாலும் பெருசாப் பிரச்சினை ஒண்ணுமில்லை. ஒரு லட்சம் காப்பி போட்டு நெட்டுல வந்துட்டதால அம்பதாயிரம் பிரதி விக்காம நஷ்டமாயிடுச்சின்னு சொன்னா வருத்தப்படறதுல அர்த்தமிருக்கு. இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருத்தரையும் நேரடியாப் பேரோட தெரியற அளவுக்கு சின்ன எடம் இது. சூதாட்டம் மாதிரி, இறங்கிட்டோமேன்னு ஆடிகிட்டு இருக்கவேண்டி இருக்கு. மூனு வருஷமா லைப்ரெரி ஆர்டரே கிடையாது. எப்பையோ தேடிகிட்டு வர வாசகனுக்காக ஷெல்ஃபுல புக்கு இருந்துகிட்டு இருக்கு. புத்தகத்தை விளம்பரப்படுத்தி விற்பனையைக்கூட்ட சில ‘வழிகள்’ இருக்கு. ஆனா தன்மானம் பாக்கற எழுத்தாளர்களுக்கு அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்.

94ல் மந்தைவெளியில் இருந்த திலீப்குமாரின் மீசைப் பேச்சைக்கேட்டபின், 25-25 போக மீதமிருந்த புத்தக சரக்குடன், அவரது வீடு-கம்-அலுவலகத்தை விட்டு,  ரத்தம் வடிய இறங்கினேன். M80யில் தொங்கிக்கொண்டிருந்தவற்றைத் திரும்ப சுகுமாரனிடம் சேர்த்துவிட்டு, புக்குவெக்க எடமில்லேனு சொல்றது நியாயம். உன் புக்கு 25க்குமேல வித்தா மீசைய எடுத்துக்கறேன்னு சொல்ற அளவுக்கு இங்கென்ன மல்யுத்தமா நடக்குது என்று புலம்பினேன்.

17 நாட்கள் ஆஃபீஸுக்கு விடுப்பெடுத்துக்கொண்டு தில்லிக்குப் படம் பார்க்கப்போனேன். வந்து பார்த்தால் திலீப்பிடம் இருந்து ஒரு தபால் அட்டை வந்திருந்தது. சந்தித்ததற்கு மறுநாளே அனுப்பட்ட அட்டை.. தாம் கடுமையாகப் பேசிவிட்டமைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிக்கும்படி எழுதி இருந்தார்.

ஒரு பக்கக் கதையை எழுதி அனுப்பிவிட்டு, ஆனந்த விகடனுக்காக நூலகத்தில் அலைபாய்ந்த நாட்களைக் கடந்துவர உதவியதில், இங்கே இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று தெரியக்கொடுத்த ஞாநியின் பரீக்ஷா நாடகக்குழுவுக்கும் முக்கியப் பங்குண்டு. பீட்டர்ஸ் காலனி 17/2 ஞாநியின் வீட்டில் தங்கியிருந்த திலீப்குமார், ஜானிஜான்கான் தெருவிலிருக்கும் மேன்ஷனுக்கு மாறியிருந்த நேரம். பெரும்பாலான நாட்கள் பரீக்ஷா பக்கம் வந்து செல்வார். இவர்தான் ’தீர்வு’ எழுதியவரா என்று தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட தருணமும் உண்டு. மூங்கில் குருத்து படித்து அசந்துபோனதோடு அல்லாமல் அதைப் பாராட்டி சுந்தர ராமசாமி கொடுத்திருந்த தந்தி இலக்கிய கோளத்தையே பரபரப்பாக்கியதைப் பார்த்து இதைப்போல் ஒரு தந்தியை நாமும் என்றாவது ஒரு நாள் வாங்கிக் காட்ட வேண்டும் என்று குழந்தைத்தனமான வைராக்கியமும் உள்ளே மூண்டதும் உண்மை...

அந்த வருட புத்தகக் கண்காட்சியில் அடைமழை. திலீப்பிடம் கொடுத்த இருபத்தைந்து பிரதிகள் விற்றது மட்டுமல்லாது, கடைசி மூன்று நாட்கள் கடையில் பிரதிகளே இல்லை. கடுமையான மழை வாகன வசதியின்மை போன்ற காரணங்களால் சுகுமாரனால் புத்தகங்களை எடுத்துச்செல்ல இயலவில்லை. அந்த மூன்று நாட்களும் மாமல்லன் புத்தகம் எங்கே எங்கே என்று இலக்கிய ஆர்வலர்கள் அலைபாயவில்லை என்றாலும் காட்சிக்கு இருந்திருந்தால் ஒருசிலரேனும் வாங்கியிருக்கக் கூடும்.

அப்போதுகூட நான்கைந்து வருடங்கள் எழுதாமல் இருந்த நேரம்தான். (எழுத முடியாமல் இருந்த காலம்), ‘நீங்கள் சீனிலேயே இல்லையாமே, கேள்விப்பட்டேன்’ என்று பர்மா பஜாரில் இருந்து கீபோர்ட் வாங்கிக்கொண்டு காபி சாப்பிட ட்ரைவ்-இன் வந்த பிரம்மராஜன் சிரித்தபடிக் கூறிச்சென்றதைக் கேட்க நேரிட்டது. இத்துனைக்கும் என்னுடைய முக்கியமான கதைகளில் சிலவற்றை வெளியிட்ட மீட்சியின் ஆசிரியரே பிரம்மராஜன்தான்.

புத்தகம் வெளியான சூட்டில் மதுரை கோவை என நிறைய இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். வழக்கம்போல எங்கிருந்தும் காசு வரவில்லை என்றாலும் பாரம் சுமந்து வருத்தப்பட்டவனின் சுமையைக் குறைத்தவர்கள் என்கிற வகையில் அவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நூலகத்திற்குப் போனவை போக மீதமிருந்தவை இடத்தை அடைத்துக்கொண்டிருந்தன. எப்போதாவது திலீப்பிடம் இருந்து ஐந்து பிரதிகள் கேட்டு அஞ்சலட்டைவரும். அவற்றில் ஒன்றோ இரண்டோ சிகாகோ பல்கலைக்கழக நூலகத்திற்குப் போகின்றன என்பதைக் கேட்டு நமக்கில்லாத பாஸ்போர்ட்டும் விசாவும் அவற்றிற்காவது கிடைத்ததே என்று எண்ணி மகிழ்ந்தாலும், துஷ்டத்தனம் செய்யாமல் ஓரமாய் அட்டைப்பெட்டிகளில் அடைந்து கிடப்பவை தப்பித்தவறிக் கண்ணில் பட்டு அவ்வப்போது கடுப்பேற்றிக்கொண்டிருந்தன. ரங்கநாதன் தெருப்பக்கம் போக நேர்ந்தபோது முன்றில் மகாதேவனிடம், எடைக்குப் போட்டுவிடலாமா என்று சமயத்தில் தோன்றுவதைக் கூறினேன். திட்டாத குறையாக அறிவுரை கூறத் தொடங்கிவிட்டார்.

2000த்தில் திருச்சிக்குப் போகும்போதும் அவை என்னுடனேயே அட்டைப்பெட்டிகளில் வந்தன. என்னதான் எல்லோரையும்போல சட்டை பேண்ட் அணிந்திருந்தாலும், என்னிடம் அப்படி என்னதான் பிரத்தியேகமான துர்வாசனை வீசுமோ தெரியாது, என்னடா பேச்சுகீச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்குதேன்னு அப்பவே நெனச்சேன். நீங்க ரைட்டராமே என்று அலுவலக ஊழியர்களில் யாரேனும் ஒருவர் கண்டுபிடித்துவிடுவார். அவ்வளவுதான் அதை அனுமார் வால் நெருப்பாய் ஓரிரண்டு நாட்களுக்கு எதிர்படுவோரிடமெல்லாம் பற்றவைக்காமல் அவர் வாய் ஓயாது. வலிய வந்து பொறியில் மாட்டிய எலியை சும்மா விடமுடியுமா? மாட்னியா மவனே என்று ஒன்றுக்கு இரண்டாய் புத்தகங்களைக் கொடுத்து, காசுகீசெல்லாம் வேண்டாம் கசங்காமல் பார்த்துக்கொண்டாலே போதும் வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிடுவேன்.

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி கூறாவிட்டால் நான் நயவஞ்சகனாக நேரிடும். என் சுமையைக் குறைத்ததில் சிறு பங்கு அவருக்கும் உண்டு. வீட்டுக்கதவைத் தட்டிய மாணவ மாணவியர் மற்றும் எங்கள் அலுவலக பிஆர்ஓ என்று அண்ணா நூலகத்திற்காகப் புத்தகம் சேகரித்த எல்லோருக்கும் பழநி பஞ்சாமிருதமாய் விநியோகித்தேன். நீங்கள் நம்பினானும் நம்பாவிட்டாலும் ஒன்றைச்சொல்கிறேன். எனக்கு அரசியல் சார்பே கிடையாது. அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமணையாக ஆக்கினாலும் சரி காய்கறிச் சந்தையாக ஆக்கினாலும் சரி அந்த இடம் அந்நிய முதலீட்டோடு நடத்தப்படப்போகும் வெளிநாட்டு அண்ணாச்சியின் பிரும்மாண்ட பலசரக்குக் கடையாக மாற்றப்பட்டாலும் சரி என் புத்தகங்களின் பிரதிகளில் இரண்டொன்றை இலவசமாகவேனும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது ஒரே விண்ணப்பம்.

இலவசமாய் விநியோகித்தாலும் இரண்டுக்கு நான்காய் இவை இருந்துகொண்டே இருப்பதைப் பார்த்தால் இது ஏதோ யட்சிணி வேலைபோலத்தான் தோன்றுகிறது.

ஏறக்குறைய ஐந்துவருட இடைவெளிக்குப் பின் ஆறு மாதத்தில் எழுதி வெளிட்ட ஏழு கதைகளை மட்டுமே கொண்ட புத்தகம், 1995 புத்தகக் கண்காட்சியில் 25 பிரதிகள் விற்றிருந்தன என்பது ஆச்சரியம்தான். இத்துனைக்கும் இடைநிலை பத்திரிகை என்கிற கருத்தாக்கம் முளைகட்டிய காலம். சுபமங்களாவில் ஒளி, உயிர்த்தெழுதல், புதிய பார்வையில் புள்ளிகள், குல்லா ஆகியவை வெளியாகியிருந்தன. தமிழ் இண்டியா டுடேவுக்கு, நேரில் சென்று கொடுத்த உயிர்த்தெழுதல் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கதையையும் மிகவும் பவ்வியமாகவும் மன்னிப்புக்கோரும் தழுதழுத்த குரலோடும் அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியர், பரிசீலனைக் குழு துரதிருஷ்டவசமாய் நிராகரித்துவிட்டதாய் திருப்பிக் கொடுத்தார். வரவேற்பரையைத் தாண்டிச்சென்று ஆசிரியராய் இருந்த வாசந்தியை தரிசிக்கும் பாக்கியமே கிடைக்கவில்லை. அந்த உதவி ஆசிரியர் காலச்சுவடு அரவிந்தன் என்பதற்கும் அவரிடம் நேர்ப்பேச்சில் இலக்கியத் திருட்டுக்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதற்கும் அவர் அப்போது ஜெயமோகனின் தீவிர நண்பராக இருந்தவர் என்பதற்கும் கதைகள் தமிழ் இண்டியா டுடேயில் பிரசுரமாகாமல் போனதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அவர் உறுதியாய் சொல்கிறார் என்பதையும் இங்கே பதிவதுதான் உயர்ந்த அறவுடைமையாகும்..

எப்போதாவது படித்துவிட்டு யாராவது ஒருவர் ஆச்சா போச்சா என்கிறார் என்றாலும் இலக்கியச்சூழலில், தீவிரமாக ஒருவன் இயங்காமல் போகவே ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வந்தவனெல்லாம் புலம்பிச் செத்தாலும், வாழையடிவாழையாய் எழுத்துக்காரர்கள் வந்துகொண்டே இருக்க ஒரே காரணம் மன அரிப்பின் காந்தலுக்கு இலக்கியமே களிம்பு என்பதுதான் போலும்.