Tuesday, November 8, 2011

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய நிக் உட்டின் புகைப்படம்

2011/11/8 Ramjee Swaminathan <***@gmail.com>

அன்புள்ள மாமல்லன்,

உங்கள் 'சுனாமிக்கு பலியான ரமணியின் கேமரா ' இடுகையைப் படித்தேன் - நன்றாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் எழுதியுள்ளீர்கள்: "நப்பாம் குண்டுகள் வெடிக்கும் பின்புலத்தில் பெண் குழந்தை அம்மணமாய் அலறியபடி ஓடிவரும் வியட்நாம் போரின் அவலத்தைப் புகைப்படம் எடுத்தவர், ஒரு மனிதனாக அந்தக் குழந்தையிடம் ஓடிப்போய், தான் போட்டிருந்த சட்டையால் போர்த்துவதைவிட்டு கேமராவை சரியான கோணம் பார்த்து கூர்மை பார்த்து புகைப்படம் எடுத்தது சரியா என்கிற கேள்வி நிரந்தரமானது."

ஆனால் நிக் உட் (அந்தப் புகைப் படக்காரர்) அந்தப் புகைப் படம் எடுத்தவுடன் உண்மையாகவே ஓடிப்போய், கிம் ஃபுக் (சிறுமியின் பெயர்) - ஐ, மற்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் - எடுத்துக்கொண்டு, நேரத்தை வீணடிக்காமல், சைகோன் மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பித்தார். மற்ற உதவிகளும் செய்தார். பின்னர் பொருளுதவியும் செய்தார். என் நினைவுப் படி, அக்குழந்தை ஒரு வருடத்துக்கு மேல் அங்கிருந்து - பிறகு நல்லபடியானது என நினைக்கிறேன். ஆனால், நாபாம் வேதிப் பொருளால் தாக்கப் பட்ட அக்குழந்தையை அவர் 'மானம்' கருதிப் போர்த்தியிருந்தால், அந்த துணியுடன் சதையும் கூடக் கழன்று தான் வந்திருக்கும். பதிலுக்கு அவர் அச்சிறுமி மீது நீர் ஊற்றியிருக்க வேண்டும் - ஊற்றியிருப்பார் என நினைக்கிறேன்.

ஆனால், நீங்கள் சொல்கிற கருத்து சரியே. மிகப் பல விஷயங்கள் சார்ந்தவையை சுளுவான கருப்பு-வெள்ளை இருமைகளில் பார்க்க முயல்வது, சரியல்ல. 

நன்றி.

ராம்ஜீ 
-- 
“The universe is made of stories, not of atoms.”
– Muriel Rukeyser (1913-1980)

அன்பான ராம்ஜி,

சொல்லவந்ததன் சாராம்சத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி.