Wednesday, November 2, 2011

பார்ப்பதின் படிப்பதெளிது

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஆர்.வி.ரமணியின் 90 நிமிட ஆவணப்படம், கடந்த 22ஆம் தேதியன்று சசிகுமார் அவர்களின் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் திரையிடப்பட்டது. அதற்கான அழைப்பை ஃபேஸ்புக்கில் விடுத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். 

அதை முகாந்திரமாக வைத்து ரமணியைப் பற்றியும் திரையிடல் அறிவிப்பு பற்றியும் ஆர்வி ரமணி - மனவெளியில் அலையடிப்பு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு சென்னையில் இருக்கும் ஒற்றை நண்பரேனும் வரக்கூடும் என்று எதிர்பார்த்தேன். அநேகமாக எல்லோரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள்போலும். ஆவணப்படம் என்பதால் படம் பார்க்க சிறப்புக் கட்டணம் தரப்படும் என்று அறிவித்து இருந்தால் சிகரெட்டு பீடாவுக்கு ஆகும் என்று விசாவுக்காகக் காத்திருப்போரில் ஓரிருவர் ஒருவேளை வந்திருக்கவும்கூடும். 

தீவிர சினிமா என்றால் அதைப் பற்றி யாரேனும் எழுதியதைப் படித்தால்தான் ’புரியும்’ என்கிற அளவிற்குப் பெரும்பாலோர் எழுத்துமோகிகள் அல்லது புலன் சோம்பேரிகள். சினிமா என்கிற கலை வடிவைப் பார்த்து அனுபவித்து ரசனையை வளப்படுத்தி சுய கருத்தை உருவாக்கிக்கொள்ள துளியளவு முயற்சிக்கவும் முன்வராது, அவர் எழுதியது இது இவர் எழுதியது அது இரண்டில் எது சரி எது தப்பு இவரிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரிடம் இவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கெலிப்பு தோற்பாய் கோழிச்சண்டைக் குதூகலிப்பாய் ‘விவாதிக்க’ மட்டும் தாம்பூலம் குதப்பிய வாயோடு வெட்டியாய் இணையத்தில் திரிய எல்லோரும் தயார். 

இதற்குப் பிறகும் எவருக்கேனும் படிக்கவேண்டும் என்று தோன்றுமெனில்,சுனாமிக்கு பலியான ரமணியின் கேமரா இண்றைய தமிழ் பேப்பரில் வெளியாகி உள்ளது.