Thursday, December 8, 2011

கலையின் தாவலும் திறந்த மனமும்

90 என்கிற காலச் சட்டகம் காரணமாக ஆட்லரி வரும் சிக்கல் தவிர ஷோபா சக்தியின் கப்டன் கதை காலப் பொதுமை கொண்டதாக அல்லவா இருக்கிறது.

<மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று:>

தொடக்கத்தில் வரும் இந்த நக்கலே வாசகர்களை அணைக்கவும் விலக்கவும் செய்துவிடும் வல்லமை கொண்டது. எந்த மூடு மந்திரமும் இல்லாது கதையின் தொனியை தெளிவாகவே முன்வைக்கிறார் ஆசிரியர்.

ஈழம் எனக்கு அந்நியமான சூழல் என்றால், நான் குறிப்பிட்ட பஷீரின் பூவன் பழத்தில் வரும் ஆறும் இஸ்லாமி.குடும்ப்ச் சூழலும் செல்மாவின் தேவமலரின் பனியும் பேர் லாகெர் குவிஸ்டின் பாரபாசின் கப்பல் பயணமும் எனக்கு அந்நியமான கதைக் களங்களே. ஆனால் எப்படி சுகிக்க முடிந்தது.

குதிரைக்கு குர்ரம் என்பதால் யானைக்கு அர்ரம் இல்லை. P u t புட் என்பதால் But புட் இல்லை பட் தான். மொக்கைகளைக் கிழிப்பவன் என்பதால் எல்லாவற்றையும் கிழித்தாக வேண்டிய அவசியம் இல்லை. கதையே அக்குதொக்காக இருப்பதில் தகவல்களும் அப்படியே இருப்பதைத்தான் எந்த மரியாதையும் கொடுக்காமல் கிழிக்கப்படுகிறது. நீ அனைத்தையும் கிழிக்கிற தொழில்முறை கிறுக்கன்தானே இதையும் நீ கிழித்துதான் அணியவேண்டும்  என்று கட்டாயப்படுத்துவது நியாயமா? இதுவே சென்னையைப் பற்றி இப்படி தகவல் பிழையோடு எழுதி இருந்தால் ஒப்புவாயா என்றால் என்னுடைய பதில் ஒன்றுதான். கதை கண்கட்டி வித்தையை நிகழ்த்தவேண்டும். பிசிறே இல்லாத கோலம் இல்லை. ஆனால் தற்கால தமிழ் இலக்கியத்திலோ திப்பி திப்பியாய் கொட்டிக்கிடக்கும் பொடிகளே கோலம் எனக் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பின்னணி இல்லாமல் பார்த்தாலும் ஷோபாவின் கதை பெரிய ரகத்தைச் சேர்ந்ததுதான்.

புலி அனுதாபிகளால் அரசியலைத் தாண்டி அதை வாசிக்க இயலவில்லை என்பது அவர்களுக்கும் ஷோபாவுக்குமான பிரச்சனை. நம்பகத் தன்மையுடன் புலிகளின் நல்ல பக்கத்தை ஒருவர் இதே தரத்தில் எழுதி வியக்கவைப்பாரேயானால் வாசித்து மகிழ்வதில் எனக்குத் தடையேதும் இல்லை. எனது குறைந்த இணைய அனுபவத்தில் என்னால் கிரகிக்கப்பட்டதுவரை, ஷோபா சக்தியின் புலி எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாய் அவர்மீது நடக்கும் தாக்குதல்களில் அவர் படைப்புகளும் பரிசீலனை இன்றியே அல்லது ஒவ்வொரு அசைவுக்கும் உள்ளர்த்தம் சுட்டப்பட்டே தட்டப்படுகிறன என்பது என் அனுமானம்.

ஒரு கட்டம்வரை புலிகளின் மேல் சாகச புல்லரிப்பும் அதற்குப்பின் தம் தலையில் தாமே மண்ணள்ளிப்போட்டுக்கொண்டு விட்டார்களே என்கிற கசப்புமாக வெறுத்து ஒதுக்கிய லட்சோபலட்சம் சாதாரண மக்களில் நனும் ஒருவன்.. புலிகளின் குரூரத் தவறுகளை மறுத்து நியாயப்படுத்தி புத்தர் முலாம் பூசுவது நகைப்புக்குறியது. ஷோபா சக்தியின் அரசியல், புலிகளை ஒரு பக்கமாக மட்டுமே காட்டுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

கப்டன் கதையில் புலிகள் கொடுக்கும் தண்டனை ஏன் பெரிய வில்லத்தனமாகக் காட்டப்படுவதாக எடுத்துக்கொள்ளப் படுகிறது? அதை எழுதியது ஷோபா சக்தி என்பதாலா? மெட்ராஸ் ஐ காரணமாய் சொட்டு மருந்து விட்டுக்கொண்டு படுத்திருக்கும் மாற்று அணி பொடியன்களை ஒத்த வயதுடைய புலிப்பொடியன்கள் த்டீர் தாக்குதலில் அழிக்கத் தொடங்கி அந்த இயக்கத்தையே அழித்ததைக் கேள்விப்பட்டதிலையா? அதைவிடவா முள்கம்பி கிழிப்பு பெரிய குரூரம்? 

1983 ஜூலை கலவரத்தின்போது April 22, 1982ல் பிறந்த ஷசீவனுக்கு ஒன்றேகால் வயதாக இருந்திருக்கும். கலவரம் பற்றிய சேதிகளைப் படித்தும் கேட்டுக்கொண்டும் இருந்தவன் ஒரு வேகத்தில் அலுவலகத்திற்கு ’சொந்த காரணம்’ என்று லீவு போட்டுவிட்டு, இலங்கையிலிருந்து வரும் அகதிகளுக்கு உதவ வேண்டும் என்று ராமேசுவரம் கிளம்பினேன். அலுவலகதில் கிறுக்கனென்று ஒரு சாராரும் இவனல்லவா தமிழன் என்று இன்னொரு கோஷ்டியும் கீழும் மேலுமாய்ப் பார்த்தது. மெட்ராசிலிருந்து ராமேசுவரம் போகவேண்டும் என்றால் மதுரை போகவேண்டும் என்பது மட்டுமே தெரியும் அளவிலானதுதான் எனது புவியியல் அறிவு. ராமேசுவரம் போக பஸ்ஸுக்குக் காசு மட்டும் இருந்தால் போதாது அதற்குத் தோதான ஆட்களையும் விசாரித்துவிட்டுப் போவது நல்லது என்று 22 வயது பட்டறிவு சொல்லிற்று. மதுரையில் இறங்கி, ப.நெடுமாரன் இருக்குமிடம் கேட்டேன். ஏதோ ஒரு மாசி வீதி என்று சொன்னதாய் நினைவு.விசாரித்து மரப்படியில் ஏறினால் விட்டகுறை தொட்டகுறையாய் காங்கிரஸ் பாணி மெத்தை திண்டில் உட்கார்ந்திருந்தார்.

காதி கிராமோதியோக் பவனில் வாங்கிய முரட்டு குர்த்தா இளம்தாடி சகிதம் வணங்கிவிட்டு, விஷயத்தைக் கூறினேன்.

இன்னமும் யாரும் வரலைங்க. எப்படியும் வர ஒரு வாரமாவது ஆகும் என்றார்.

82ல் காவிப் பயணம்தான் பாதியில் முடிந்தது என்றால், போட்டிருக்கும் லீவே ஒரு வாரம்தான் அதற்குள் வராத அகதிகளுக்கு எப்படி தொண்டு செய்வதாம். கிட்டத்தட்டக் கோமாளி போல் உணர்ந்து தலை தொங்கிப் படியிறங்கியவன், உற்சாகமாக இலக்கிய கோஷ்டிகளைப் பார்க்கும் தேசாந்தரமாக அதை மாற்றிக்கொண்டேன். மதுரையில் சுரேஷ் குமார இந்திரஜித் அடுத்த ஸ்டாப்பில் கோவில்பட்டி சமயவேல் & கோ இடசெவலில் கி.ரா என்று ஊரூராகப் போகத்தொடங்கினேன். பயண விபரம் தெரிய வந்ததும் நைனா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி,

நெடுமாரன் என்ன சொன்னார்? வந்த மொதல் அகதியே நீங்கதான்யான்னாரா? என்றார்.

மெட்ராஸ் ஐ வந்து சொட்டு மருந்து விட்டுக்கொண்டு படுத்திருந்த பையன்களுக்கு 22 வயது கூட இருந்திருக்குமா?. அவன் என்ன இந்தியக் கைக்கூலியாக இருக்க வேண்டும் என்றா கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினான். உணர்ச்சி வேகம். நம்மாலானது ஏதாவது செய்ய வேண்டும் என்றல்லவா வந்திருப்பான். 83ன் வேகத்தில் வந்தவர்களை,எல்லா இயக்கங்களும் படகுகளில் வாரிப்போட்டுக்கொண்டன. எல்லோருக்கும் ஆயுதப் பயிற்சி அந்நிய அரசாங்க ஆசிர்வாதத்துடன் கொடுக்கப்பட்டது வரலாறு. உள் மோதலில் இந்தப் பையன்கள் அந்தப் பையன்களை பீளைக் கண்களுடன் இமைதிறக்க முடியாது கருப்புக் கண்ணாடியுடன் படுத்திருந்தவர்களை கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றதும் அதை இந்த மண்ணில் இருந்த பொம்மலாட்டக்காரர்கள் கண்டும் காணாதுபோல் முகம் திருப்பிக் கொண்டதும் உள்வட்ட சரித்திரம். சுடுவதற்கு எல்லா நியாயமும் புலிகளுக்கு இருந்திருக்கலாம் செத்தவர்களுக்குத்தான் சாவதற்கான எந்த நியாயமும் இல்லை. சரி தவறு என்று எளிதாய் பிரித்துப் பார்த்துக் காயுருட்ட முடியாதது அரசியல் சதுரங்கம்.

சாகச விழைவின் காரணமாய் விளைந்த அதீத பாராட்டுணர்வுடன், புலிகள் குட்டிகளாய் குறைந்த அளவில் 83-84 வாக்கில் இந்திரா நகரில் வீட்டுப் பூனைகளாய் திரிந்த காலத்தில், முகமறியாதிருப்பினும் கிசுகிசுப் பேச்சுக்களால் தமிழகமே வியந்தபோது நானும் பார்த்திருக்கிறேன்.  குண்டடி பட்டு தோளில் கட்டுடன் கூல் ட்ரிங்க் கொடுத்து உபசரித்த பையன் அடுத்த வாரம் ‘நாட்டுக்குப் போய்’ அதற்கடுத்த மாதத்துப் போரில் இறந்துபட்டான் என்கிற தகவலாய்க் கிடைத்தான். அவன் முகத்தையும் அந்த காயம்பட்ட கட்டையும் கண்ணிலிருந்து அகற்ற முடியாமல் பல நாட்கள் திணறி இருக்கிறேன்.

மெட்ராஸ் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலியை ஓரமாய் இழுத்துவிடப்போன, இடைக்கால கஸ்டம்ஸ் பணியில் இருந்த எங்கள் அலுவலக இன்ஸ்பெக்டர், கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த குண்டு வெடித்து அநியாயமாய் இறந்தபோது, அலுவலகமே கொதித்தது. அந்த இயக்கம் வேறு, அதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை என நான் வாதாடியதும் போக அது இங்கு வெடிப்பதற்காக வைக்கப்பட்டதன்று என்றெல்லாம் வைத்த வாதங்கள் செவிடன் காது சங்காயின. காரணம் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் கடல்தாண்டி வந்த எல்லோரும் அன்று புலிகளே. தமிழக மக்களுக்கு நன்நான்காய்ய் ஆளாளுக்கும் ஆங்கில எழுத்துகளுடன் திரிந்த இயக்கங்களுக்குள் இருக்கும் வித்தியாசம் தெரியாது.

கோவிந்தன் என்பவர் ஒருவரா பலரா உண்மையிலேயே அப்படி ஒருவர் உண்டா அவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்கிற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பெயரை அட்டையில் தாங்கி வந்த புதியதோர் உலகம் நாவலை அது வெளியான காலத்திலேயே படித்திருக்கிறேன். அதன் களம் சுத்தமாக எனக்குத் தெரியாதது. ஆனால் அதன் குரல் எனக்குப் பரிச்சயமானதாகத்தான் தோன்றியது.

கதையின் நம்பகத் தன்மையை சுண்டினால் சொல்லிவிடமுடியும் அளவிற்கு நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வெறியோடு திரிந்த காலம் அது.

கணையாழியில், ஈழக் கதையொன்று வெளியாகியிருந்தது. அதை எழுதியவர் அன்று கிட்டத்தட்ட சினிமா நடிகை அளவிற்கு கவர்ச்சிகரப் பெயராக இருந்தார். கதையைப் படித்த எனக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது.

அந்த சமயத்தில் நாதன் என்றொரு பையன் சிநேகிதனான். (அப்போது நானும் பையன்தான் என்ன, அவனைவிட ஓரிரு வருடங்கள் கூடுதலாய் வளர்ந்த பையன்) கோடம்பாக்கத்தில் இருந்த வீட்டில் கும்பலாய் தங்கியிருந்த பலரில் அவனும் ஒருவன். அவனுக்கு சேரன் ஆதர்சம். சில சமயங்களில் என் சைக்கிளில் அவனை டபுள்ஸ் அடித்துக்கொண்டுபோய் விட்டும் இருக்கிறேன். நான் கேகே நகர் குடியிருப்பில் இருந்த காலம். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு இடத்தில் விடச் சொல்லுவான்.

சாரி தெருவில் ரயில்வே தடுப்பிற்கு எதிரிலிருந்த முற்போக்கு மாளிகையில் வித்யா ஷங்கர் என்கிற துரை பாரதி என்கிற வெள்ளைத் துரை (அடங்கொ இருக்கற அரையாளுக்கு எவ்ளோ பேருடாப்பா) இருந்த முற்போக்கு சொர்க்கபுரிக்கு - அவ்விடத்து பிரஜைகளில் ஒருசிலர் எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருப்பதைப் பார்த்து என்ன விஷயம் என்றேன். தூங்கியே பசியை வெல்லும் வித்தையைப் பயின்றுகொண்டு இருக்கிறார்கள் என்ன என்று இளித்தபடி சொன்னான் துரை. ஒரு நாள் சாரி தெருவுக்கு நாதனை அழைத்துச் சென்றிருந்தேன். திரும்பி வருகையில் தண்டவாளத்தை ஒட்டிய குடிசைகளையும் மனிதர்கள் தெருவிலேயே படுத்துத் தூங்குவதையும் பாததுவிட்டு நாதன் ஆச்சரியப்பட்டான். எவ்வளவுதான் வருமை என்றாலும் குறைந்தது கயிற்றுக் கட்டிலாவது இருக்கும் ஈழத்தில் என்றான்.

அது நாதன் எனக்கு அறிமுகமான தினமாய் இருக்க வேண்டும். மெளண்ட் ரோடில் சோடியம் வேப்பர் விளக்குகள் புதிதாய் முளைத்திருந்தன.  இரவென்றாலே மெர்குரி விளக்குகளின் தண்மையில் இருந்து பழகிய கண்களுக்கு, இரவின் மேல் சோகையான ரத்தத்தை அப்பியதுபோல் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன சோடியம் வேப்பர் விளக்குகள். மெர்குரி விளக்குகளை விட பிரகாசமாக இருந்தன எனினும் இரவைப் பகலாக்குவது சகிக்கவில்லை. சஃபையர் தியேட்டருக்கு எதிரிலிருந்த பஸ் நிறுத்த நடைபாதையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

கணையாழியில் வெளியான கதையை ஊரே பாராட்டுகிறது ஆனால் அந்தக் கதை ஏனோ சரியில்லை என்றே தோன்றுகிறது என்றேன். நீங்கள் சொல்வது சரிதான். அந்த ஆள் அரசு வேலையில் இருந்துகொண்டு அந்தப்பக்கம் இருந்தவர். ஆனால் இந்தியா வந்தபின் கதை என்று இப்படி எழுதிக்கொண்டு  இருக்கிறார் என்றான். அடுத்தமுறை ஏதோ கூட்டத்தில் பார்த்து அருகில் வந்து சிரித்து அவர் கைகுலுக்கியபோது சட்டென விலகிக்கொண்டேன். அந்த காலகட்டத்தில் அவரது முகம் தென்படாத இலக்கியக்கூட்டங்களே இல்லை என்லாம்.எவனுக்கோ பெயரும் புகழும் கிடைக்க எவனெவனோ செத்துக்கொண்டிருந்தான்.

இப்போது போலவே அப்போதும் ஈழம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சரியில்லாத ஒன்றை சரியில்லை என்று அடையாளம் கண்டுகொள்ள மட்டும் அப்போதும் இப்போதும் தெரியும்.

ஒரு மனிதனின் பல்வேறு காலகட்ட வாழ்வின் நிலைகளை இடறல் சருக்கல் இறுமாப்பு என நம்பகத் தன்மையுடன் எவ்வளவு அநாயாசமாக எழுப்பி அனுபவாக்கி நிறுத்துகிறார் ஷோபா சக்தி. இன்னொரு ஈழத்தவரான அ.முத்துலிங்கத்திடம் இருக்கும் மேட்டிமை நகைச்சுவையும் எனக்குப் பிடிக்கும். இவர்கள் இருவரையும் இரு கலைஞர்கள் என்று ஜெயமோகன் எழுதி இருந்தார். ஜெயமோகனுடன் இந்த ஒரு விஷயத்திலாவது ஒத்துப்போக முடிந்தது என் மூதாதையரின் பூஜாபலன்.

கலை, கடலையும் நிலத்தையும் நிறத்தையும் தாண்டி மனிதனைத் தொடும் வல்லைமை கொண்டது. வேண்டியதெல்லாம் அது கலையாக இருக்கவேண்டும் என்பதும் வாசிப்பவன் திறந்த மனதுடன் வாசிக்கவேண்டும் என்பதும்தான்.