Saturday, December 3, 2011

உயிர்மையின் நூறில் ஒன்று - சிரைப்புக்குத் தப்பிய சிகை

தூரத்து நாமத்தைப் பார்த்தால் உள்ளே நுழையாவிட்டாலும் பெருமாள் என்று கும்பிட்டு வைப்பதில்லையா அது போல, பெரிதாக வாசித்ததில்லை என்றாலும் இத்துனை நாளும் உயிர்மையை இலக்கிய பத்திரிகை என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். 

என்னைப் பொறுத்தவரை இலக்கியப் பத்திரிகைக்கான இலக்கணம், எழுத்தாளனின் எழுத்தை கத்தரிக்காது வெளியிடுதல். அப்படியே பக்க நிர்பந்தம் காரணமாய் கத்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் குறைந்த பட்சம் அவனைக் கலந்து கொள்ளுதல் முடிந்தவரை அவனையே திருத்தி எழுதித்தரச் சொல்லுதல்.

உயிர்மை சார்பாய் மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது.

from: uyirmmai * uyirmmai@gmail.com
to: madrasdada@gmail.com
date: Sun, Nov 6, 2011 at 6:58 PM
subject: reg uyirmmai 100th issue
mailed-by: gmail.com
signed-by: gmail.com

அன்புள்ள விமலாதித்த மாமல்லன்

நலமா? உயிர்மை வரும் டிசம்பர் இதழ் 100 ஆவது இதழாக வெளிவர விருக்கிறது. தமிழகத்தின் அறிவார்ந்த கலை மற்றும் இலக்கியச் சூழலில் அது தன்னால் இயன்ற பங்களிப்புகளை கடும்போராட்டதிற்கிடையே மேற்கொண்டு வந்திருக்கிறது. வரும் நூறாவது இதழில் உலகெங்கும் உள்ள முண்ணணி படைப்பாளிகளிடமிருந்து ஒரு சிறிய பங்களிப்பை வேண்டுகிறோம். 50க்கும் மேற்பட்ட படைப்பாளிகளிடம் தனித் தனியே ஒரு பிரத்யேக கேள்விக்கான பதிலைப் பெற்று அந்த பதில்களை ஒரு சிறப்புப் பகுதியாக வெளியிட விருக்கிறோம்.

உங்கள் பதில் உயிர்மையில் ஒரு பக்க அளவில் அமையலாம். கையெழுத்தில் என்றால் 3 பக்கங்களும் மின்னச்சில் என்றால் முன்னூறுவார்த்தைகளும் இருக்கும்படி உங்கள் பதிலை நவம்பர் 12 ஆந்தேதிக்குள் அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் பங்கேற்பு உயிர்மையின் பயணத்தில் என்றும் உறுதுணையாக இருக்கும்

உயிர்மை நூறாவது இதழின் சிறப்புப் பகுதிக்காக நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் அளித்து உதவுங்கள்.

ஒரு எழுத்தாளன் தொடர்ந்து செயல்படமுடியாதசூழலை ஒரு இலக்கியச் சூழல் என்பீர்களா அல்லது அவனது அந்தரங்கமான மன வீழ்ச்சி என்பீர்களா? 

என்றுன் அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

from: விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to: uyirmmai *
date: Sun, Nov 6, 2011 at 7:02 PM
subject: Re: reg uyirmmai 100th issue
mailed-by: gmail.com

கண்டிப்பாக முயற்சிக்கிறேன். முடிந்தால் இன்றேகூட அனுப்பப் பார்க்கிறேன்.

from: விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to: uyirmmai *
date: Sun, Nov 13, 2011 at 6:15 AM
subject: Re: reg uyirmmai 100th issue
mailed-by: gmail.com

உயிர்மையின் கேள்விக்கான என் பதிலை இத்துடன் இணைத்து இருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நூறாவது இதழுக்கு வாழ்த்துக்கள். 

***

உயிர்மைக்கு நான் அனுப்பிவைத்த மூல வடிவம் இதுதான்.

ஒரு எழுத்தாளன் தொடர்ந்து செயல்படமுடியாதசூழலை ஒரு இலக்கியச் சூழல் என்பீர்களா அல்லது அவனது அந்தரங்கமான மன வீழ்ச்சி என்பீர்களா? 

பூடகம் புரிகிற அளவிற்கு எனக்கு புத்தி போதாது. இடையில் பல வருடங்கள் எழுதாமல் இருந்ததற்குக் காரணம் இலக்கியச்சூழலா அல்லது இயலாமையா என்று கேட்பதாக எடுத்துக்கொண்டு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். 

பதிலளிக்க, ஒரு வாரத்திற்கும் மேல் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கடைசி தினம்வரை பதிலே சொல்லவில்லை. சொல்லக்கூடாது என்பதோ இயலவில்லை என்பதோ காரணம் அல்ல. வேறு காரியங்களில் மனம் ஈர்ப்புடன் ஈடுபட்டிருந்தது என்பதுதான் உண்மை. கெடு நெருங்கும்போது அலுவலக வேலை நெருக்கத்தொடங்கியது. கூடவே ஜலதோஷமும் பிய்த்தெடுத்ததில், தட்டச்சுவதைவிட அதிமுக்கிய வேலை விரல்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கொடுக்கப்பட்ட கெடு முடிந்தே விட்டது. 

எல்லோருடைய கேள்விக்கான பதில்களும் பிரசுரமாகி என் ஒருவனுடையது மட்டும் இல்லாதிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினால் தவிர எத்துனை பேர் கவனிக்கப்போகிறார்கள்? 

கொடுக்கப்பட்ட கெடுவுக்குள் கேள்விக்கு பதில் சொன்னவர் இயங்குபவர், சொல்லாதோர், இயங்காதோர் பட்டாங்கில் உள்ளபடி என்று முடிவுகட்டிவிட இயலுமா? இருக்கிறேன் என்பதற்கு, வகுப்பறைக் கைத்தூக்கலாய் வருடத்திற்கு ஒரு கதையோ இரண்டு வருடத்திற்கு ஒன்றோ எழுதிக்கொண்டிருந்தால் தொடர்ந்த செயல்படல் என்றாகிவிடுமா? அல்லது மாதாந்தர நிர்பந்தமாய் எழுதிக்கொண்டிருப்பதுதான் மனவெழுச்சியின்பாற்பட்ட படைப்பூக்க இலக்கியத் தொடர் ஓட்டமா? 

எழுதியதை அச்சில் பார்பதே அபூர்வம் என்று இருந்த காலத்தில் இப்படியான கேள்வி கேட்கப்பட்டிருக்குமா? நூலகம் நம் புத்தகத்தை எடுக்குமா? புத்தகம் போட வாங்கிய கடனில், அரைப்பங்கேனும் திரும்பக் கிடைக்குமா? என்ற கேள்விகள் தலைக்குமேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருக்க, இலக்கியப் பத்திரிகைகளும் புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் எதை நம்பி இலக்கியத்தின் உயிர் துடித்துக்கொண்டு இருந்தது? 

ஒருவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதிலும் இன்னொருவர் எழுதாமல் போவதிலும் சூழலின் பங்கு, ’பிரசுர வாய்ப்பு’ என்கிற அளவில், ஓரளவுக்கு உண்டு, எனினும் தனிமனித மனதின் ஈர்ப்பும் துடிப்புமே வெளிப்படலைவிட இலக்கியத்தின் தீவிர அம்சம். ஓடாமல் இருப்பதை மட்டுமே சூழல் அறியும். நிறுத்திக்கொண்டதை நிரந்தரம் என்று எவர் முடிவுசெய்ய இயலும்? 

ஓடிக்கொண்டிருப்பவன் நிற்பதென்பது, மூச்சிளைத்தல் இயலாமை இளைப்பாறல் யோசித்தல் புதுப்பித்துக்கொள்ளல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடர்ந்து ’எழுதுவதே’ ‘இயங்குவதாகவும்’ அப்படி ‘இயங்குவதே’ மன எழுச்சியாகவும் எழுதாமல் இருப்பதை வீழ்ச்சியாகவும் பார்ப்பதென்பது, உயிர்புக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கெலிப்பு தோற்பு என்ற இரு நிலைகளில் வாழ்வை இறக்கிப் பார்க்கும் அன்றாடத்தின் அளவீடு. அது இலக்கியத்திற்குப் பொருந்துமா? 

வாழ்வு கேட்கும் கேள்வி ஒன்றாகவும் அதைப் புரிந்துகொண்டது வேறாகவும் பதிலிறுப்பு முற்றிலும் வேறொன்றாகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதல்லவா இலக்கியத்திற்கும் அல்லாததற்குமான அடிபடை வேறுபாடு.

***

<உங்கள் பதில் உயிர்மையில் ஒரு பக்க அளவில் அமையலாம். கையெழுத்தில் என்றால் 3 பக்கங்களும் மின்னச்சில் என்றால் முன்னூறுவார்த்தைகளும் இருக்கும்படி>

நான் எழுதிக்கொடுத்ததோ 238 வார்த்தைகள் மட்டுமே. இருந்தும் 87 வார்த்தைகளைக் கொண்ட முதல் மூன்றரை பாராக்களைக் காணவில்லை. தொந்தியும் தொப்பையுமாய் நிற்கும் மாமல்லனை சுஜாதா போல க்ரிஸ்பான  தோற்றத்தில் கொஞ்சம் இளைக்கவைத்துக் காட்டும் நல்லெண்ணம் காரணமாகத்தான் 151 வார்த்தைகளாய் சுருங்கிவிட்டன போலும்.

அச்சில் வெளியானது சினிமா நடிகைபோல் சிக்கென இருப்பதாகப் பலருக்குத் தோன்றக்கூடும். இன்னும் சிலருக்கு வெட்டப்பட்ட பத்திகள் முட்டாள்தனமாய் இருப்பதாகவும் வெட்டியதே புத்திசாலித்தனமாகவும்கூடப் படக்கூடும். முதல் மூன்றரை பத்திகளை பாப் கட் பண்ணியபிறகே மேல் நவீனத்துவம்  மிளிர்வதாகவும்கூட புத்தகத்திற்கு லேபிள் கேட்டு வரிசையில் நிற்போருக்குத் தோன்றவும்கூடும்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையே தெரியாத மூச்சுத் திணரலிலா நூறு பேரிடம் கேட்கப்பட்டது? இந்தக் கேள்விகளை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கேள்வியின் நோக்கம் என அப்பாவியாய் உயிர்மையை தப்பாக எடுத்துக் கொண்டு தீவிரமாய்த் பதில் சொல்ல முனைந்ததுதான் என் தவறுபோலும்.

படைப்பாளியின் ’மூடத்தனத்தை’ பத்திரிகாசிரியரின் ‘புத்திசாலித்தனத்தால்’ அரிதாரம் பூசி அழகுபடுத்தும் காரியத்தை செய்ய ஆனந்தவிகடன் குமுதம் கல்கி வகையறாக்கள் போதாதா. அவர்களாக இருந்தால் வெட்டுவதோடு நில்லாமல் இடையில் வெல்டிங்காய் அங்கங்கே கொஞ்சம்மொஞ்சம் எழுதிச் சேர்த்து வெளியிட்டிருப்பார்கள் அதை இவர்கள் செய்யவில்லை என்பதுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடா?அவர்களுடன்தான் உயிர்மையின் போட்டி என்றால் அந்த ஆட்டத்தில் எனக்கு என்ன வேலை. 

கதையை எடிட் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு, இதே வடிவத்தில் இருந்தால் வெளியாக வாய்ப்பில்லையா என்று எஸ்டிடியில் திருப்பிக் கேட்டேன்.கண்டிப்பாக வெளியாகும் ஆனால் கதையை இன்னும் செழுமையாக்கவே இதைக்கேட்கிறேன். அந்த எடிட்டிங்கையும் வேறு யாருமல்ல நீங்களேதான் செய்யப்போகிறீர்கள் என்றவரிடம் இல்லை இந்தக் கதை இப்படியே வெளியாவதுதான் சரி என்று படுகிறது என்றவன் நான். எடிட் செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்ட கதை நிழல் பத்திரிகை காலச்சுவடு மலர் ஆசிரியர் சுந்தர ராமசாமி.

என்னை எப்படியாவது எழுதவைத்துவிடவேண்டும் என்கிற முனைப்பில், கதை எழுதும் மனநிலை இல்லையென்றால் போகட்டும். நீங்கள் விரும்பிக்கேட்கும் இசை நாடாக்கள் பற்றியேனும் எழுதுங்கள். எழுதத் தொடங்கிவிட்டால் எதிலும் தீவிரமாய் ஈடுபடுபவர் என்பதால் உங்களாலேயேக் கூட நிறுத்தமுடியாது என்று, 2001ல் திருச்சியில் நானிருந்தபோது உலகத்தமிழ்.காம் என்கிற இனைய பத்திரிகையில் எழுத உற்சாகப்படுத்தியவர் சுந்தர ராமசாமி. அவர் அன்பின் கட்டாயம் கொடுத்த உந்துதலில் முரசு அஞ்சலில் தட்டுத்தடுமாறி தமிழில் தட்டச்சு செய்து அனுப்பிவைத்தேன். வெளியானபோது ஓரிரு வரிகள் நீக்கப்பட்டிருந்தன. இதை சுந்தர ராமசாமி கேட்டுக் கொண்டதால்தான் எழுதினேன். என்னை எந்த இடத்தில் கீறினால் விலகி வெகுதூரம் சென்றுவிடுவேன் என்பதை நன்றாகத் தெரிந்தவர் ஆசிரியராய் இருப்பதை உற்சாகத்தில் மறந்து போனது என் தவறுதான் என்கிற பொருளில் எழுதி அனுப்பி எழுத்திற்கு மூட்டை கட்டினேன். அந்த இணைய பத்திரிகைக்கு ஆசிரியராய் இருந்த்வர் 94ல் இண்டியா டுடேவில் இருந்த அதே வில்லன்தான். அன்று தமிழ் இண்டியா டுடேவில் உதவி ஆசிரியராய் இருந்த அரவிந்தன் இடைப்பட்ட ஆறு வருடங்களில் முன்னேறி உலகத்தமிழ்.காமில் ஆசிரியர் பதவியில் இருந்தார். 

இதே கத்தரியைப் பிடித்து மஷ்ய புத்திரனின் கவிதைகளில் அவசியமில்லை என்று எனக்குப்படும் இடங்களை சிரைத்து இவ்வளவு சிகை போதும் என்று கொடுத்தால் எப்படி இருக்கும்? படைப்பாளி நடத்தும் பத்திரிகையிலும் எழுத்தாளனுக்கு இதுதான் கதி என்றால்...

மனுஷ்ய புத்திரன் அவர்களே!

ஒரு எழுத்தாளன் தொடர்ந்து செயல்படமுடியாதசூழலை ஒரு இலக்கியச் சூழல் என்பீர்களா அல்லது அவனது அந்தரங்கமான மன வீழ்ச்சி என்பீர்களா?