Monday, December 5, 2011

கதையும் கத்தரியும்

இறுதி வடிவத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது என்று எழுத்தாளன் முடிவு செய்துவிட்ட படைப்பில் ஒரு வார்த்தையை எடுக்கவோ சேர்க்கவோ இடமிருக்கக்கூடாது என்று காலம்காலமாக நம்பும் மூட கோஷ்டியில் நிரந்தர உறுப்பினராக இருக்கவேண்டுமே என்பதுதான் என் ஏக்கம்.

புத்திசாலிகளால் காற்று வீசப்போகும் திசையை முந்தைய தினமே கனவில் கண்டு அதற்குத்தக பாயை விரிக்க முடிகிறது. வெற்றிக் கிளுகிளுப்பிற்கான எளிய தொற்று நோய் அது. அதன் விளைவு, சாரத்தைக் கொன்று சவத்திற்கு அலங்காரப்பேரணி நடத்துவதுதான்.

இந்த சூட்சுமம் இலக்கிய மூதாதைகளான மூடர்களிடமிருந்து தொடரோட்ட கைக்கோலாய் வந்துகொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் உற்சாகமாகக் கழியை ஏந்தி அதி தீவிரமாய் சுழற்றியபடி ஓடத்தொடங்கிய பலர் இன்னமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் ஓட்டப்பாதையில் இல்லாமல் யானைமுகத்தானின் புத்திசாலித்தனத்துடன் வெற்றிமேடையை மட்டுமே சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.

இணையத்தில் மட்டுமே எழுதினால் மேம்போக்கான வாசகர்களிடம் ஒரு இளக்காரம். ஆஃப்செட்டில் அச்சாகும் பத்திரிகைகள் சீந்தவில்லை ஆகவேதான் இலவச இலைப் பந்தியில் உட்கார்ந்திருக்கவேண்டிய நிர்பந்தம் என்கிற ஏளன முறுவல்.

படைப்பின் உயிர் அதற்குள்ளாகவேதான் இருக்கிறதே அன்றி பகட்டான வெளியீட்டில் அல்ல. பரவலாகத் தெரிய வந்தால்தானே படித்துப் பாராட்ட முடியும் என்பது இந்தத்தலைமுறையின் வினவல். பூ மலர்வதற்கு இயற்கையின் இயல்பு என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? பூக்கள் என்றும் பாதையின் குறுக்கே பாய்ந்து மூக்கருகில் உரசி, முகர்ந்துபார் என்னைப் பாராட்டு என்று சொல்வதில்லை. பூக்காமல் இருக்க முடியாத போது அது பூக்கிறது. முகரும் சக்தி பெற்றவர்களும் மூக்கை நீளமாக வளர்த்துக்கொண்டவர்களும் அணுகி துய்க்கிறார்கள். துய்ப்பில் தோய்ந்து இருக்கையில் மலர் கூட நினைவில் இருப்பதில்லை. பாராட்டவேண்டும் என்கிற நினைப்பெல்லாம் இரண்டாம் பட்சம். நினைக்குந்தொறும் வாசம் பரப்பும் தோட்டம் நம் வசப்பட்டுவிடாதா என்றுதான் உண்மையான எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கிறான். ஆனால் எது ரோஜாவாகும் எது குரோட்டன்ஸ்ஸாகும் என்பது மனநிலத்தில் விதையாக விழும்போது தெரிவதில்லை என்பதுதான் படைப்பின் மாயச் சிலிர்ப்பு. சாகசம் தரும் போதையே எழுதத்தூண்டுகிறது. கைத்தட்டல் உண்மையான கலைஞனுக்குக் கடைசிபட்சம்.

இனிமேல் வரப்போகும் உண்மைச் சம்பவத்திற்கு மேலே கூறிய அனைத்தும் அவசியமற்றது என்று விளக்கேந்தி பயணிக்கும் விவேகிகள் மட்டறுக்கச்சொல்லி அறிவுருத்தக் கூடும். பெரியமனம் வைத்து வேண்டியதை மட்டும் பொறுக்கிப் படித்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்வதைத் தவிர பின்னணி பலமற்ற என்னால் வேறென்ன சொல்ல இயலும்?

உண்மையில் சொல்லப்போனால், இப்போது இதை எழுதிக்கொண்டிருப்பது யதார்த்த நியதிப்படி பார்த்தால் நியாயமே இல்லை. அச்சுப் பத்திரிகையின் ஆசிரியர் இணையம் பற்றிய அனுபவத்தை எழுதச்சொல்லி கேட்டிருந்தார். அவர் கொடுத்த கெடுவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக் கட்டுரையைப் பாதி எழுதிக்கொண்டு இருக்கையில், யாருமே கேட்காத இது பிசாசுபோல் பின்னால் இருந்து உந்தித்தள்ளவே ’ஒரு பிரயோஜனமும்’ இல்லாத இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அச்சு நேர்த்தியில் அமரிக்கையாக எழுதப்பட்டதைப் பார்த்தால் இணையத்தில் ஒருசிலருக்கேனும் எவரும் சீந்ததாத வெற்று நொட்டைப் பயல் என்கிற அபிப்ராயம் மாறக்கூடும்.இவனிடமும் ஏதோ இருக்கப்போய்த்தானே பத்திரிகையில் எழுதச்சொல்லி இருக்கிறார்கள் என்கிற மனோரூப அங்கீகாரக் கண்ணாடியை அணிந்து பார்க்கத் தொடங்கி, பழைய கட்டுரைகளில்கூட புதிய தரிசனக்கள் கிடைக்கக்கூடும். ஆனால் இந்த இழவெடுத்த மனம் இதற்குத்தாவி விட்டது என்ன செய்ய? எதையும் காரியமாய் எடுத்துக்கொண்டு செய்வதைவிட மனக்கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும்போதுதான் அபூர்வமாய் ஏதேனும் அகப்படும் என்பது எனது எளிய மூடநம்பிக்கை. எழுத்தில் என்றில்லை வாழ்க்கையிலும் இப்படித்தான்.

1982 டிசம்பர். 

வேலையை ராஜினாமா செய்து காவியில் வெளியேறி ஒன்றரை நாளில் திரும்ப நேர்ந்தவன், அதிகாரபூர்வமற்ற தண்டனை மாற்றலில் ஈரோடு போய், அலுவலகத்தில் சேர்ந்து ஒரு மாதம் முழுவதும் அண்ணாந்து அகன்ற வாய்களிடம் அதைப் பற்றியே பேசிக் கழித்தவன், விடுமுறையோடு ஓரிருநாள் விடுப்பும் எடுத்து மெட்ராஸ் வந்து அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல் திரும்பக் காவியில் தப்பிக்கப் பார்த்தவனுக்கு கொடுபடாத கொஞ்சப் பணம் மெட்ராஸ் அலுவலகத்தில் இருப்பது தெரிய வரவே ரயில் செலவுக்கு ஆகட்டும் என்று நுங்கம்பாக்கம் நோக்கி பஸ்ஸில் பயணப்பட்டேன். கேகே நகரிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல இரண்டு பஸ் மாறவேண்டும். எல்லாவற்றையும் உதறத் துணிந்த மனநிலைக்கு வந்தபின் நேர்க்கோட்டுப் பயணம் அர்த்தமற்றதல்லவா? வந்த பேருந்தில் ஏறினேன். தி.நகர் பஸ் நிலையத்தில் இறங்கி நுங்கம்பாக்கம் இருந்த திசைநோக்கி நடக்கத் தொடங்கினேன். வழியில் வந்தது ஹிந்தி பிரச்சார சபா. அங்கு ஏதோ சினிமா படப்பிடிப்பு நடந்துகொண்டு இருப்பதை வெளிப்புறப்படப்பிடிப்பு வாகனமும் உதிரிக் கருவிகளும் தெரிவித்தன. பொதுவாக தமிழ் சினிமாவே பார்க்காமல் துணைவரிகளை எழுத்துகூட்டிப் படிப்பதா படம் பார்ப்பதா என்கிற தவிப்பை உண்டாக்கும் உலகப்படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த காலம். எனவே வெளிப்புறப் படப்பிடிப்பைப் பராக்கு பார்ப்பவர்கள் மீது குருட்டுத்தனமான அருவருப்பு.

ஆனால் அதைப் பார்க்க அன்று ஏனோ குறுகுறுப்பு. இளம்தாடி ஜிப்பா ஜீன்ஸ் தோளிலே ஜோல்னாப் பை அதற்குள்ளே சுருட்டித் திணிக்கப்பட்ட இரண்டு காவி வேட்டிகள் சகிதம் அந்த வளாகத்தின் உள்ளே நுழைந்தேன். எடுத்த எடுப்பிலேயே பொதுமக்களுக்கும் இருட்டானால் நாய்களுக்கும் அரைலூசு என்று எளிதாக அடையாளம் காட்டக்கூடிய சீருடை அது. அந்தக்கோலத்தில் வழக்கம்போல விறுவிறுவென உள்ளே நுழைந்ததால் யார் என்ன என்று எவரும் கேட்கவில்லை. 

படப்பிடிப்பில் நடந்துகொண்டிருந்தது கல்லூரி வகுப்பறைக் காட்சி. கதவோரம் கைகட்டி சாய்ந்து ஏளனப் பார்வையுடன் நின்றுகொண்டேன். நாயக நாயகி இருவரும் இருபுறத்து மரபெஞ்சுகளின் முனையில் அமர்ந்திருந்தனர். இடையில் இருந்த நடைவழியில் பேனா மூடி விழுகிறது. அதை எடுக்க இருவரும் ஒரே சமயத்தில் குனிய தலைகள் முட்டிக்கொள்கின்றன. இரண்டு மூன்று மாதங்களில் இதே காட்சி பிரபல சுவரொட்டியாகி பார்த்த இடமெங்கும் கண்ணைப்பறித்தது.  படம் பிரும்மாண்டமான வெற்றியைக் கண்டது. 

இரண்டாம் முறையும் பெயிலானதில் காவி கழன்று தரையில் விழுந்தது. தொலைபேசி அலுவலகத்திற்கு எதிர் சாரியில் இருந்த சிறு தெருக்களில்  ஒன்றில், ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்துகொடுத்த, மாடி அறைகளின் கோடி அறையில் தங்கியிருந்தேன். அப்போது பெருந்துறை ரோடில் கீழே இருந்த மெட்ராஸ் ஆட்டோ பார்ட்ஸில் வேலை பார்த்த நால்வரோடு ஐவரானேன். யாருமற்ற நேரத்தில் அறை நண்பர்களில் ஒருவன் பத்திரிகையைப் புரட்டி அந்தப் படத்தைப் பற்றி விதந்தோதிக்கொண்டிருந்தான். 

அந்தப் படத்தோட ஷூட்டிங்கு ஹிந்தி பிரசார சபாவுலதான் நடந்துது.

அப்பிடியா சார் அய்யோ நீங்க அந்த ஷூட்டிங்கைப் பாத்தீங்களா? சினிமாவுல மட்டும் சக்ஸஸ் ஆயிட்டா யாரை வேணாப் போட்டுக்கலாம் இல்லையா சார். எப்பிடி சார் இருந்துது. சும்மா எட்டுவாட்டி எடுத்ததையே எடுப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். இது எப்பிடி, இண்ட்ரஸ்டிங்கா இருந்துதா சார்.

எனக்கே அப்போது 22-23 வயதுதான் இருக்கும். அவன் இன்னும் பாலகன்.  கொஞ்சம் புஷ்டியான பாலகன். பக்கையாக நான் என்றாலும் கடைநிலை குமாஸ்தா. நான் அரசு. அவன் தனியார். தலைகொழுத்த நான் அலுவலகத்தில் உபயோகிக்க மறுத்த சார்களை எல்லாம் சேர்த்து இவன் எனக்கு அர்ச்சனை செய்துகொண்டிருப்பான். சினிமா எடுக்கப் படுகையில் நடந்த உண்மைக் கதை என்றதும் அவனது கிளுகிளுப்பு விறைத்தெழுந்துகொண்டது. நான், என் சுபாவப்படி கிடைத்தான் ஒருவன் என்று விஸ்தாரமாக விவரிக்கத் தொடங்கினேன்.

கதவோரம் நின்று பராக்கு பார்த்துக்கொண்டிருந்தவனை,ஆசிரியர் மேஜைமேல் அமர்ந்திருந்த தாடிக்காரர், ஜபர்தஸ்தை வைத்துப் பார்த்தால் அவர்தான் இயக்குநராக இருக்கவேண்டும் என்கிற தோற்றமளித்தவர்,

இதர் ஆவ் என்றார்.

வேண்டுமென்றே ஒன்றும் அறியாததுபோல் பின்புறம் திரும்பிப் பார்த்தேன்.

ஆவ் ஆவ் என்று எனக்காய் கைநீட்டி அழைத்தார்.

நெஞ்சைத் தொட்டுக்காட்டி, என்னையா அழைக்கிறீர்கள் என்று தலையால் வினவினேன். சாதகமாய் அழைப்பு வலுப்படவே நாலெட்டு எடுத்து வைத்து மேடை ஏறினேன்.

தமிழ் மாலும் ஹை என்று கேட்டதை வைத்து அவருக்கு ஹிந்தி தெரியாதென்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

அவரை மட்டம் தட்டும்விதமாக வேண்டுமென்றே குரலைக் கீய்யென கேவலமாய் மாற்றிக்கொண்டு ’நெல்லாவேத் தெரியும்’ என்றுகூறிய அதே மூச்சில், சும்மா வேடிக்கை பாக்கத்தான் வந்தேன் அங்க நின்னு பாக்கட்டுமா என்றேன்.

என்ன படிச்சிருக்கீங்க?

தமிழ் இலக்கியம்.

ஓ. அப்ப கவிதைலாம் எழுதுவீங்களா?

எப்பவாவுது எழுதுவேன். பேசிக்கா ரைட்டர். அங்க நின்னு வேடிக்கை பாக்கறேனே.

ரைட்டர்னா கதை எழுதுவீங்களா? எந்தப் பத்திரிகைல எழுதறீங்க?

அதெல்லாம் யாருக்கும் தெரியாத பத்திரிகை. இலக்கியப் பத்திரிகை. நடிக்கிறதுல எல்லாம் இண்ட்ரஸ்ட்டில்லே. வேடிக்கை பாக்கதான் வந்தேன். போகட்டுமா?

உங்களை ஒடனே இப்பவே கேமரா முன்னாடி நிக்கச் சொல்லலே...

சாரிங்க வரட்டா..

சரிங்க.

அவரது எந்தப் படத்தையும் பார்க்காமல் கேள்விப்பட்டதை வைத்தே மனதில் மட்டமான சித்திரம் உருவாகியிருந்தது. சினிமா என்கிற பெயரில் என்னதான் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவே உள்ளே போனது. படம் இன்னாருடையது  எனத் தெரியவந்ததும் இளக்காரம் இரட்டிப்பாகியது. ஆகவேதான் அவமானப்படுத்தும் விதமாய் தரைடிக்கெட்டாய்ப் பேசினேன். ஆனால் அவரது அமைதியான எதிர்வினை அப்புறம் பலநாள் யோசிக்க வைத்தது. அவருக்குத் தெரிந்ததை அவர் கலை என்று தீவிரமாக நம்புகிறார். தொடர்ந்து அதையே செய்து சில முறை வெற்றியும் பெற்றதால் அதை சாதனை என்றும் நம்புகிறார் என்று தோன்றியது. புத்தகக் கண்காட்சிகளுக்கென்றே எழுந்து நிற்கும் சோளக்கொல்லை பொம்மைகளைவிட அவர் நம்பிக்கை அப்படி என்ன கேவலமானது. படித்தவர்களுக்கான எழுத்து என்பதால் இது உயர்வு பாமரர்களுக்கான ஊடகம் சினிமா என்பதால் அது மட்டமா?

என்ன சார் திடீர்னு அமைதியாயிட்டீங்க. அப்பறம் என்ன ஆச்சி.

என்ன ஆகும.சும்மா நிண்ணுட்டு வெளிய வந்துட்டேன். காலேஜ் டேஸ்ல 79வாக்குல சைதாப்பேட்டைல இருந்தோம். அப்ப சைதை-பேரீஸ் 18ஆம் நம்பர் பஸ்ஸுல கண்டக்டரா இருந்தவர், அந்த ஷூட்டிங்குல, கும்பல்ல நின்னு முகம் காட்ட மேக்கப் போட்டுகிட்டு இருந்தார். என்னை பாத்ததும் வெக்கத்தோட சிரிச்சார். அவரைப் பார்த்து நான் எவ்ளோ வயிறெரிஞ்சிருக்கேன்னு அவருக்கு எங்க தெரியும்? காயிதே மில்லத் பொண்ணுங்ககிட்ட அப்படி ஒரு ஹிட் அந்தாளு. அவர் ஏறும் வண்டிக்காகவே வெயிட் பண்ணி பஸ்ஸைத் தவறவிடும் பொண்ணூங்கள்ளாம் உண்டு.

கண்டக்டரெல்லாம் ரஜினியா? சார் அப்பறம் என்ன ஆச்சு. ஐயோ சூப்பர் சான்ஸை விட்டுட்டீங்களே சார். இன்னிக்கி உங்க முகம்கூட போஸ்டர்ல இருக்குமே. ஈரோட்ல உங்களால இப்ப ந ட க் க முடிஞ்சிருக்காதே சார்.

ஏம்பா நீ சொல்றாப்புல நடந்துருந்தா நான் ஈரோடுக்கே வந்துருக்கமாட்டேனே. அது சரி கண்டக்டரெல்லாம் ரஜினியான்னு நீதானே சொன்னே. அது எனக்கு மட்டும் பொருந்தாதா?

சார் இப்பிடி மடக்கி மடக்கிப் பேசி என்னத்தை சார் கண்டீங்க. அடுத்த படத்துலயே நீங்க ஹீரோவாயிருக்கலாம். உங்க கலருக்கு அவளவளும் வந்து மேல விழுவாளுங்க.

அவன் தனது கனவிலெழுந்த மர்மப்பிரதேசங்களில் கிறங்கிக் கரையத் தொடங்கிவிட்டிருந்தான்.

அந்தப் படப்பிடிப்பை விட்டு வெளியேறுகையில் பணம்பூசிய ஆரோக்கியத்துடன் ஒருவர் இடைமறித்தார். தான் மலேசியாவிலிருந்து வருவதாகவும் சித்தர் பீடங்களை தரிசிக்க வந்ததாகவும் கூறி பையிலிருந்த காவியைச் சுட்டிக் காட்டி என்னைப் பற்றி அறிய ஆவலுடன் இருப்பதாய் முகம் பிரகாசிக்க தெரிவித்தார். சினிமாவில் இருந்தாலும் மது மாதுவைத் தொடாத சித்தர் ஒருவர் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் அந்த ஷூட்டிங்கைப் பார்க்க அவர் வந்திருந்தார்போலும்.

சார் எனக்கு சும்ம ஊர் சுற்றிப் பார்க்க ஆசை. சட்டை பேண்டுடன் போனால் எவனும் சோறு போடமாட்டான். அதனால்தான் காவி என்றேன்.

அவர் முகம் வாடிவிட்டது.

தொப்புள் மேலே கஞ்சியான எல்லோரையும் ஆன்மீகம், சைத்தான்போல் என்னமாய் ஆட்டிப் படைக்கிறது என்று எண்ணியபடி அவரை விலக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன்.

சினிமாவுக்குப் போனால் போடலாம். சித்தரானால் பாடலாம். ஏதாவது ஆவதால் எதாவது கிடைக்கும். என்ன கிடைக்கும் என்று குட்டிச்சுவர்களில் கிறுக்கிக்கொடிருக்கிறோம் என்று தோன்றியது.மணி ஐந்தைத் தொட்டுவிட்டது. அவ்வளவுதான் இனிமேல் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் பைசா கிடைக்காது. அது இல்லாவிட்டால் இரவு ரயிலில் ஈரோடு செல்ல வழியில்லை. ஈரோடு அலுவலகத்தில் அடுத்தநாள் காலை கட்டாயம் ஆஜராகியேத் தீர வேண்டும். ஏற்கெனவே சம்பளமில்லாத லீவு எதிரில் நின்று பயமுறுத்திக்கொண்டிருந்தது.எல்லாவற்றையும் விட்டொழித்தபின் வேதனையில்லை. அதுவரை அணிவகுத்து நிற்கும் அன்றாடத்திற்கு முகம்கொடுத்தேயாக வேண்டும். வேலைக்கு சேர்ந்தே இன்னும் ஒன்பதுமாதம்கூட ஆகவில்லை. இன்னும் ஒருவாரம் கழித்துதான் இரண்டாம்கட்ட காவிப்பயணம். அவ்வளவு சுலபத்தில் எவரையும் காசு கேட்பவன் இல்லை. இல்லை என்றால் திருடலாம். திருடுவதில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. சாகசம் உள்ளது. மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படி என மூளைவிறைத்து கூர்மையாகும் வாய்ப்பு உள்ளது. கெஞ்சுவது இழிவு. எந்த சிக்கலும் இல்லாமல் சுளுவாக கடைதேற்றும் அற்ப வழி.

ஹாடோஸ் ரோடின் அரசாங்கக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நண்பரும் அலுவலக இணைஉயர் அதிகாரியுமாக இருந்தவருடன்தான் அப்போதெல்லாம் என் வாழ்க்கையை எப்படிப் பரிசோதிக்கலாம் என்று தீவிரமாக விவாதம் நடத்திக்கொண்டு இருந்த்து. அவர் பாவம் தமக்கு எப்போது தாமதித்துக் கொண்டிருக்கும் அதிஉயர் அதிகாரி பதவி உயர்வு வரும் என எனக்குத் தெரியாமல் ஜோசியம் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். பரிசோதனைக் குழாய்க்குள் இருந்தது என் வாழ்க்கைதானே. அலுவலகச் சிக்கலில் எனக்கு ஏற்கெனவே ஒரு முறை உதவியவர் என்றாலும் உதட்டோரக் குறுஞ்சிரிப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை. இதைத்தான் ஏழைக்குசும்பு என்கிறார்கள் போலும். எவனையும் பார்த்து உள்ளூர சிரித்துக்கொள்ளும் இயல்பு எழுத்தாளனுக்கு அவசியம் என்ற எண்ணம் நிலைக்கத் தொடங்கியிருந்தது. தன்னையேக் கிழித்துக் கொள்ளத் தயாராய் இருப்பவனுக்கு அடுத்தவன் மேல் என்ன கரிசனம்.

அவர் வீடுதேடிப் போனேன். நடந்த கதையைச் சொல்லி, கைமாற்றாய் காசு கேட்டேன். ஈரோடு போய் சம்பளம் வாங்கியதும் அனுப்பிவைத்துவிடுவதாக உறுதிகூறினேன்.

உள்ளே கேட்டு நாற்பது ரூபாய் கொடுத்தார். நன்றிகூறிப் படியிறங்கினேன். முதல் மாடி வளைவைக் கூட திரும்பியிருக்கவில்லை, பின்னாலேயே மின்னலாய் வந்தார்.

இதப்பாரு ஒனக்கு பேசிக் டிசிப்ளின் வேணும். நுங்கம்பாக்கம் போயி வரவேண்டியக் காசைக் கலெக்ட் பண்றதை விட்டுட்டு ஏதோ சினிமா ஷூட்டிங்கை வேடிக்கை பாத்தேன்னு சொல்லிண்டிருக்கே. நா இல்லேன்னா என்ன பண்ணி இருப்பே. என்று லேசான கடுமையுடன் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். அதை வீட்டிற்குள்ளேயே சொல்லவிடாமல் தடுத்தது இங்கிதமாக இருந்திருக்கலாம். அல்லது ஊரைச் சுற்றி பரிசோதனையெல்லாம் செய்து அனுபவம் தேடி என்ன ஆகப்போகிறது ஒழுங்காய் வேலைக்குப்போய் அம்மாவைப் பார்த்துக்கொண்டு காலாகாலத்தில் கல்யாணம் முடி என்று அறிவுரை கூறாமல் இது என்ன அசட்டு பிசட்டென்று அந்தப் பையனுக்குத்தான் அறிவில்லை என்றால் நீங்களும் அவனுக்கு தூபம் போட்டுக்கொண்டு என மாமி சொல்லிவிடக்கூடுமோவென்கிற யதார்த்த பயமாகவும் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ அடுத்தநாள் காலை ஈரோடு அலுவலகம் சென்றதும் முதல் காரியமாய், ஹபிபுல்லா சாலையில் இருந்த தபால் அலுவலகத்தின் பொறுப்பாளராயிருந்தவரும், மீண்டும் வந்த ஞானரத்தத்தைப் பொறுப்பேற்று நடத்தியவரும் இணைஅதிஉயர் அதிகாரியின் நெருங்கிய நண்பருமான கேவிஆருக்கு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

அடுத்த மாத முதல் நாளில் காவியுடுத்து அறைநண்பர்கள் கலங்கி விடையளிக்க காவியுடுத்து ஈரோடிலிருந்து கோவை மார்க்கமாய் பிரம்மராஜனையும் நந்தலாலாவையும் பார்க்க ஊட்டிக்குப் போய் ஏறியில் போட்டோட்டிவிட்டு நாகர்கோவில் போய் முக்தியடைந்து இருபத்தி சொச்சம் நாட்களில் மெட்ராஸ் வந்தபின் கேவிஆரை சந்தித்தேன்.

லெட்டர் கெடைச்சுதா? இந்தாங்க அவுருக்குக் குடுத்த பணம் என்று நாற்பது ரூபாயை நீட்டினேன்.

அந்தக் கூத்தை ஏன் கேக்குறே. பெரிய பிரச்சனையாயிடுச்சி.

ஏன் என்னாச்சு.

அப்பதான் உன் கடுதாசி வந்துருந்துது. வேலையா இருந்ததுல டேபிள்மேலயே பிரிக்காம இருந்திச்சு. அந்த சமயம் பாத்து அவனும் வந்துருந்தான். கருப்புப்  பட்டையெழுத்தைப் பாத்தே லெட்டர் என்ன மாமல்லன்கிட்டேந்தான்னு எடுத்துப் பிரிச்சான். படிச்சிட்டு என்ன இவன் இப்படில்லாம் எழுதியிருக்கான்னு சொல்லி அப்செட்டாயி ஒடனேக் கெளம்பிப் போயிட்டான். அப்பறம்தான் என்ன எழுதியிருக்கேன்னு படிச்சிப் பாத்தேன்.

அவரது இதழ்கடையில் குறும்பு தெரிந்தது.

நாற்பது ரூபாய் கைமாற்றுக்கு எவ்வளவு அறிவுரை. எல்லாவற்றையும் துறந்து தெருவில இறங்கப் போகிறவனிடம்போய் டிசிப்ளின் பற்றிப் பேசுவதன் அபத்தம் கூடவா புரியாது. ஜி.நாகராஜன் இறந்தபின் ஆச்சாபோச்சா என்று அரற்றி அனுதாபப்படுபவர்களில் எத்துனுபேர் இருக்கும்போது அவரை சகித்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் கடிதம் கிடைத்த மறுகணமே அவரிடம் வாங்கிய நாற்பது ரூபாயைக் கொடுத்துவிடுங்கள். சம்பளம் வாங்கியதும் உங்களுக்கு மனியார்டர் செய்துவிடுகிறேன். என்று எழுதி இருந்ததாய் நினைவு. இருவருமே இன்று இல்லை.

கொஞ்ச நாளாகவே எனக்கென்று இருக்கும் இந்த இணையப் பத்திரிகையில் அந்த காலத்தில் எழுதிய கண்டணக் கட்டுரையை வெளியிடவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. நேற்று மாலை வாணிமகாலுக்கு அருகில் வசிக்கும் கேவிஆரின் மகளுக்கு அப்பாவின் பொறுப்பில் நடந்த ஞானரதம் இதழ்கள் உன்னிடம் இருக்கிறதா என அலைபேசியில் அழைத்துக் கேட்டேன். தன்னிடம் இல்லை என்றும் அதையிடம் - கேவிஆரின் தங்கையான கிருஷாங்கினியிடம் இருக்கலாம் என்றும் தெரிவித்தாள். இவளது எண்ணே அவரிடம் இருந்து பெற்றதுதான். அவர் தொடர்பு எல்லைக்குள் வரக்காரணமே இணையத்தில் நான் எழுதவந்தபின் அறிமுகமான மயில்ராவணன்தான். அந்த உரையாடலில்தான் கேவிஆரின் துணைவியார் இருபது நாள் முன்னதாகத்தான் தவறிப்போனதாய்த் தெரியவந்தது. அவர்கள் வீட்டில் உண்டது முதல், அறியாத முகங்கள் கதையில் சங்கர நாராயண பூஜை என்று தவறாக எழுதி இருந்ததை அவர் 84கில் சுட்டிக்காட்ட 94கில் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் ஞாபகமாய் திருத்தியது உட்பட பழைய நினைவுகள் கிளர்ந்தெழ இதை எழுதத் தொடங்கினேன்.

பாதி எழுதி நிற்கும் கட்டுரை பத்திரிகைக்கான கெடுவைச் சொல்லி பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.