Thursday, December 8, 2011

கோட்டையும் ஓட்டையும்


<அதென்னய்யா ஆட்லரி?

சோபாசக்தியின் கதை 1990 இல் நடக்கின்றது. அப்போதே ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன என்று எழுதிச் செல்கின்றார் ஷோபாசக்தி. (கவனிக்க ஓட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தன அல்ல 'போட்டுக் கொண்டேயிருந்தன'. எஸ். ரா இன் பாதிப்போ?)>

<மா மாமல்லன்

'பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்' என்ற பதிவை எழுதிய நம்ம மாமல்லன் அல்லைப்பிட்டிக்குப் பக்கத்தில நெடுந்தீவிலோ அல்லது வேலணையிலோ பிறந்திருந்தால், ஷோபாசக்தியின் கதையை வாசித்த கையோடு என்ன பதிவு எழுதியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

அது இதுதான்.

'ஷோபாசக்தி அடிச்ச ஆட்லரி'>

என்கிற எள்ளலுடன் முடிக்கிறார்.

இது தொடர்பாக ஷசீவன் அவர்களின் ஃபேஸ்புக் மதிலில் ராஜன்குறை கிருஷ்ணன் மற்றும் எம்டிஎம் போன்றவர்கள் ஆட்லரிகளால் சுடுகின்றனர். 

நேற்று செங்கையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டு இருக்கையில், எம்டிஎம்தான் 7.35 PMக்கு அலைபேசியில் அழைத்து இப்படி ஒரு விவாதம் ஃபேஸ்புக்கில் நடந்துகொண்டு இருப்பதைத் தெரிவித்தார்.


அந்த விவாத்தத்தில் ஷசீவனே ஏற்றுக்கொள்வது

<இல்லை. அதைப்பெரிய வரலாற்று ஊழலாக நினைக்கவில்லை. காலத்தைக் கற்பனை செய்து எழுதும் போது கவனம் தேவை என்பதை வலியுறுத்த விரும்பினேன்.> 

நிச்சயமாக ஷோபாசக்தியின் புனைவு அபாரமானதுதான்.> 

ஆட்லரி பற்றிய இந்தத் தகவல் பிழை எனக்குத் தெரியாது. மன்னிக்கவும்.

ஆர்ட்டிலரி என்கிற ஆங்கில வார்த்தையைத்தான் ஈழ வழக்கில் இப்படிக்குறிப்பிடுகின்றனர் போலும். ஆங்கில அகராதிகளின்படி artillery definition என்பது பிரத்தியேகமாய் ஒன்றைக் குறிக்காமல் பலகருவிகளுக்கும் பொருந்தும் பொதுச் சொல்லாகவே தோன்றுகிறது. ஆனால் ஈழத்துப் போர் பின்னணியில் ஆட்லரி என்பது ஷசீவன் கூறுவது போல ஒன்றை மட்டுமே குறிப்பதாகவும் இருக்கலாம். வரலாற்று ரீதியில் புலிகளிடம் கதை நடக்கும் காலகட்டத்தில் புலிகளிடம் ஆட்லரி இல்லை என்றால் நிச்சயம் வரலாற்றுப் பிழையும் கூடத்தான்.

புனைவில் வரும் தகவல் பிழைகள் வரலாற்றுப் பிழைகளின் தன்மை முக்கியம். புனைவின் அடிப்படையே அந்த வரலாற்றையும் அல்லது தகவலையும் அடிப்படையாகக் கொண்டது என்றாலோ அல்லது கதையின் உச்சகட்ட உணர்ச்சி எழுப்பல் முற்றமுழுக்க அந்தத் தகவலைச் சார்ந்தது என்றாலோ, ருசித்து சாப்பிட்டிக்கொண்டிருகையில் பல்லிடைக் கல்லாய் தவறு தட்டுப்பட்டால் வாசிப்பு அனுபவத்தையே கெடுத்துவிடும் அல்லது கதையின் நம்பகத்தன்மையைக் கேலிக்கூத்தாகிவிடும். இப்படி இருந்தால் சாதாரண கவனமின்மையாய்க் கொள்ள இயலாத நிச்சயம் பெரும் பிழைதான்.

ஆனால் ஷோபாவின் ‘தவறு’ காரணமாய் இந்தக் கதையின் உயிர் பழுதுபட்டுவிட்டதா? யாரையும் விட ஷசீவனின் ஃபேஸ்புக் மதிலில் எதிரொலிக்கும் மேற்குறிப்பிட்ட <நிச்சயமாக ஷோபாசக்தியின் புனைவு அபாரமானதுதான்.> என்கிற கூற்றே இதற்கு சாட்சியம்.

ஒன்றை அல்லது ஒருவரை எள்ளி நகையாட கையில் எடுக்கும் ஆயுதம் ஒருபோதும் குண்டு இல்லாத ஆட்லரியாக இருக்கக் கூடாது.

இந்த ஓட்டையைப் பார்க்காமல் எவரெவர் கோட்டையையோ இடிக்கிறாயே என்று எள்ள வேண்டுமென்றால் இவரது கிண்டலுக்கே ஆளாகும் எஸ்.ராவைவிட என்னை அடிக்க, சிறுகதைக்கே இலக்கணம் வகுத்ததென அ.முத்துலிங்கம் அவர்களால் சுட்டப்பட்ட ஜெயமோகனின் அறம் கதைக்கு நான் பயன்படுத்திய ஆட்லரியைச் சுட்டி இருக்கலாம்.

ஜெயமோகனின் அறம் என்கிற கதையின் உச்சம், உச்சிவெயிலில் தார்ரோட்டில் உட்கார்ந்து நடத்தும் போராட்டத்தில் தார் உருகி சேலை ஒட்டிக்கொள்ள ஆச்சியின் சூத்தாம்பட்டைத் தோல் வழண்டு போவதில்தான் இருக்கிறது. 

தகதகவென தகிப்பாக எழுதிச்செல்லும் பத்தியைப் படித்துப் பாருங்கள்

< ’இன்னிக்கே குடு, இப்பவே குடு. நீ குடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்’னு சட்டுன்னு நேராபோயி தார் ரோட்டிலே சப்புன்னு உக்காந்திட்டா. நல்ல கறுத்த நெறம். நெறைஞ்ச உருவம்.நாலாளு சைஸ் இருப்பா. முகத்திலே கனமா மஞ்சள். காலணா அகலத்துக்கு எரியறாப்ல குங்குமம். பெருக்கிப்போட்ட தாலி சும்மா வாகைநெத்து குலைகுலையா விளைஞ்சதுமாதிரி கழுத்து நெறைஞ்சு …அம்மன் வந்து முச்சந்தியிலே கோவில்கொண்டது மாதிரில்ல அவ இருந்தா? ஒரு வார்த்தை சொல்லமுடியாது. சங்கைக் கடிச்சு ரத்தம் குடிச்சிருவா…. செட்டி எந்திரிச்சு ஓடினான். பேங்கிலே அவ்ளவு பணம் இல்லை… கைமாத்துக்கு ஓடினான். தெரிஞ்சவங்க காலிலே விழுந்தான். பணம் தெரட்ட சாயங்காலமாச்சு. அதுவரை அப்டியே நடுரோட்டிலே கருங்கல்லால செஞ்ச செலை மாதிரி கண்ணமூடி உக்காந்திட்டிருக்கா. தீ மாதிரி சித்திரமாச வெயில். நல்ல அக்கினி நட்சத்திரம்யா அது… தார் ரோடு அப்டியே உருகி வழியுது. செட்டி டாக்ஸிய புடிச்சுகிட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்தான். நான்தான் பொணமா கெடக்கறேனே. என் பொஞ்சாதி காலிலே பணத்தைக்கொட்டி ‘என் குடும்பத்த அழிச்சிராதேன்னு உன்புருஷன்கிட்ட சொல்லு தாயீ…என் கொலத்துக்கே வெளக்கு இப்ப தெருவிலே உக்காந்திருக்கா… அவன் பணம் முச்சூடும் வட்டியோட இந்தா இருக்கு’ன்னு சொல்லிட்டு அதே காரிலே திரும்பி ஒடினான். நேராபோயி அவ முன்னாடி துண்ட இடுப்பிலே கட்டிகிட்டு ‘என் கொலதெய்வமே, எந்திரி .நான் செய்யவேண்டியத செஞ்சுட்டேன் தாயீ’னு சொல்லி கதறிட்டான். நாலுபேரு சேந்து அவள தூக்கினாங்களாம். சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’>

ஜெயமோகன் - அறம் [சிறுகதை]

கதை சொல்லி ஆரம்பத்தில் நிதானமாகப் பேச ஆரம்பிக்கையில் தஞ்சை பிராமண பாஷை பேசத் தொடங்கியவர் கதை சொல்லும் சூட்டில் சாதி அழிந்து ஜனநாயகமாய் பொது மொழி பேசத் தொடங்கிவிடுகிறார். சுட்டுப்போட்டாலும் அக்கிரஹாரத்துப் பழம்பெருசுக்கு நாக்கு பிழறிப் பேசுமா? 

1947ஐ ஒட்டிய வருடங்களே கதை நடக்கும் காலகட்டம். விக்கிப்பீடியாவில் வேறு கதையின் நாயகன் எம்.வி.வி என்று இந்த கும்பலே கதைக்கு ஆதாரம் காட்டி எழுதிக் கொண்டது. உண்மை மனிதர்கள் கதை என்று காட்டுவதற்காக கதையில் வரும் புத்தகம் பதிப்பிக்கும் செட்டியார் பழனியப்பா பிரதர்ஸ் என்று அந்தப் பதிப்பகத்தையும் விக்கிக் குறிப்பில் ஏற்றி ’சூசகமாக’ விளக்கியது.

பழனியப்பா பிரதர்ஸ் இருந்த இருக்குமிடம் திருச்சி தெப்பக் குளம். அங்கே நிகழும் ‘உண்மை மனிதர்கள் கதையாக விளம்பரித்துக்கொள்ளூம்’ கதையில் வரலாற்று ரீதியாய் 1947-50களில் திருச்சி தெப்பக் குளத்தில் தார் ரோடா என்கிற சந்தேகம் எழுந்தால் எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கும். காரணம் கதையின் மெலோட்ராமா சீனின் அடிப்படைத் தரமே கொதிக்கும் ’தாரை’ அல்லவா சார்ந்திருக்கிறது.


ஜெயமோகனிடம் இவ்வளவு நொட்டை சொன்னாயே ஆனால் ஷோபாவைப் பாராட்டுகிறாயே என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருந்தால், என் தர்கக் கோட்டையைத் தகர்க்க உபயோகித்த் ஆட்லரியின் குறி சரியாய் இருந்திருக்கும். என்ன செய்வது? துரதிருஷ்டவசமாய் ஷோபா சதியைப் போலவே ஜெயமோகனும் புலி எதிர்ப்பாளர் ஆயிற்றே. 

உள்ளீடற்ற வெற்று மெலோட்ராமாக்களெல்லாம் உன்னதங்களாய்க் கொண்டாடிக்கொள்ளபடும் அதே காலகட்டத்தில் உண்மையிலேயே கப்டன் போன்ற அபாரமான படைப்புகளைப் படிக்க நேரிடும் போது கூத்தாடிக் கொண்டாடுவதில் என்ன தவறு?

அதெல்லாம் சரி யார் இந்த ஷசீவன் அவர் ஏதோ கூறிவிட்டார் என்பதற்கா இத்துனை அலப்பறை? இல்லை கீழ்க்காணும் இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்காகத்தான்.

<கடந்த சில நாட்களுக்கு எனக்குச் சம்பந்தமில்லாத ஒருவரை நான்தான் அவர் என ஷோபா அறிவித்ததன் வலியிலிருந்து இவ்வெழுத்துக்கள் தோன்றுகின்றன. >

நல்லா விவாதிச்சீங்க போங்க.