Friday, December 9, 2011

இடுகுறியும் குறியீடும் தற்குறியும்


எனக்கு (கப்டன்) இதைப் படித்ததிலிருந்து அப்பாவின் ஞாபகம். கவலை. பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி உளவியல் தாக்கமுடையவராக இப்பவும் இந்தியாவிலிருக்கிறார். 6 மாதம் புலிகள் கொண்டு வைச்சிருந்து அடிச்சு விட்டாப் பிறகு அந்தக் கோபமெல்லாம் அடியாக எனக்கும் அம்மாவுக்கும் தான் விழுந்தது. உண்மையாகவே என் சங்கிலி வாங்கிக் கொண்டு ஒரு பானையில் சோறுடன் இந்தியா போறதாக வெளிக்கிட்டார். நாம் நம்பவில்லை. 13, 19 வயது பிள்ளைகள் அகதிகளாக படகில் இந்தியா போனது கவலை. ஒரே குடி. கோட்டை நோக்கி வந்த ஆமி பிடித்து 5 நாட்களாக வைத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களவர்கள் .படகில் வேட்டி கட்டி நெடுந்தீவடைந்து நயினாதீவு போய் பிறகு நேவியிடம் உளவாளி என அடிவாங்கி.புலிகளிடமும் நேவியின் உளவாளி என அடிவாங்கி (அப்ப 53 வயசு) புலிகளின் 6 மாத சிறைக்கு பிறகு வந்தும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் பயப்பிடுவார்.இப்பவும் யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை.இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறதாக சொல்வார்.இது உண்மை. தனிப்பட உங்களுக்கு எழுதுகிறேன். நம்பகத்தன்மை பற்றிய உங்கள் கணிப்பு சரியெனச் சொல்ல இதை எழுதுகிறேன். இது அண்ணன் எழுதிய கதை. ஆகவே சாட்சியாயிருக்கும் நான் அமைதியாக கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நுழைந்து கதையை இரசிப்பவர்களை குழப்ப விரும்பவில்லை. "நான் இயக்கத்திட்ட வாங்கின அடியெல்லாம் உங்களுக்குத் தருவன்" என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே அடி. இவர்கள் எழுதுவதால் எம் வாழ்விலும் இது போல பல சனங்களின் வாழ்விலும் நடந்தவைகள் இல்லெயென்றாகாது.


இதிலே அண்ணன் முக்கிய சம்பவங்களை வைத்து கற்பனையை சேர்த்து எழுதினார். நம்பகத்தன்மை பற்றி இன்னும் உறுதியாக நீங்கள் எழுதலாம்.

தர்மினி


இதை என் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி கிடைக்குமா? உங்கள் பெயர் வரவேண்டாம் எனில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈழத்துப் பெண் என்று வெளியிட விரும்புகிறேன்.


என் பெயரை வெளியிடுவது பற்றி பிரச்சனையில்லை. பெயர் இல்லாமல் வெளியிட இது என்ன இரகசியம். அல்லைப்பிட்டியில் எல்லோருக்கும் தெரிந்த கதை நம் கதை. தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு அனுப்பிய மெஸேச் இது என்றும் என் அனுமதியுடன் வெளியிடப்படுகிறதெனவும் நீங்கள் குறிப்பிடலாம். என் அண்ணா ஷோபாசக்தியுடன் இது வெளியான பிறகு நான் இன்னும் கதைக்கவில்லை.அவர் இப்ப இந்தியாவில்.


அப்படியெனில் தாங்கள் ஷோபா சக்தியின் உடன்பிறந்த சகோதரியா?


அவர் பிறந்து 6 வருடங்களின் பின் பிறந்தவள்.