Sunday, January 8, 2012

ரோஸ் மில்க் [சிறுகதை]

முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைப்பவன், நாள் முழுக்க சிகரெட் பிடிக்காமல் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் சுலபத்தில் புரியக்கூடிய விஷயமில்லை. கடைசி சிகரெட்டைப் பிடித்தது, விடியற்காலை நான்கு மணிக்கு. தற்காலிகக் ’குழி கக்கூஸ்’களுக்குத் துணி மறைப்பு நடுவதற்கான இரும்புக் கம்பங்கள், காடாத் துணிகள் இன்னபிற தட்டுமுட்டுச் சாமான்களையும் ஏற்றிசெல்லும் டிரக்குக்குப் பின்புறமாய் மறைந்து நின்று, ரிடையர்டு கர்னல் ரேகேயின் கொள்ளிக் கண்ணுக்குப் படாதவண்னம் பிடித்த சிகரெட்தான் கடைசி. ஒட்ட இழுத்திழுத்து நிகொடினின் மஞ்சள் படிந்த சுட்டு நடுவிரல்களைக் கொண்ட கையும் வாயும் சிகரெட்டுக்காக நமநமத்துக் கொண்டிருந்தன.

இரவு ஏறிக்கொண்டிருந்தபோதிலும் வரிசைவரிசையாய் அறைகளைக் கொண்ட நீண்ட மாடி வராண்டாவின் கோடியில் இருந்த கக்கூசில்கூடப்போய் புகைக்க வழியில்லை. காரணம் தங்கவைக்கப்பட்டிருந்தது சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவில்.

பொற்கோவிலைச் சுற்றி பீடி சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கத் தடைசெய் என்கிற கோரிக்கையாய் முளத்த சிறிய போராட்டம் கணக்கற்ற உயிர்களைக் காவுகொண்டுவிட்டிருந்தது. முடிவற்ற பெரும் போர் போல தொடர்ந்துகொண்டிருந்தது.

போர் வேண்டாம். போரில் ஜெயிப்பு தோற்பு இல்லை. இழப்பு மட்டுமே உண்டு என்கிற அமைதிக்கான குரல்கள் வரிசையாய் சைக்கிள் மிதித்தபடிக் கூவிக்கொண்டு கன்யாகுமரியில் இருந்து காஷ்மீரை நோக்கி ஊரூராய் சென்றுகொண்டிருந்ததில் இடைவழித் தங்கலில் ஒன்றுதான் பொற்கோவில்.

சாலையில் சக்கரங்கள் உருளத்தொடங்கி, பக்கம்பக்கமாய் நூறு நாட்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. அட்டவணைப்படி ஜம்முவைத்தொட இன்னும் சில நாட்களே இருந்தன.

காலையில், பொற்கோவிலுக்கு வரும்போது நன்கு வெயிலேறிவிட்டிருந்தது. வளாகத்தின் நுழைவு வளைவின்மேல், உப்பரிகை போல் தோற்றமளித்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு மெஷின்கன் நீட்டிக்கொண்டிருந்தது. அதைப் பிடித்தபடி ராணுவப் பச்சையில் உடையணிந்த வீரர் உட்கார்ந்திருந்தார்.

தொலைவிலிருந்தே மெஷின்கன் மூட்டமாய்த் தெரியத்தொடங்கிவிட்டிருந்தது. முதலில் கவனித்த சைக்கிள்கள் ஒன்றோடொன்று கிசுகிசுத்துக்கொள்ள அனைத்தும் தலைதூக்கிப் பார்த்தபடி பிரதான வாயிலுக்குள் நுழைந்தன. பச்சை சீருடை சலனமற்ற முகத்துடன் கீழே பார்த்துக்கொண்டிருந்தது. தோளில் போடப்பட்ட ஜடையாய்ப் பக்கவாட்டில் தோட்டாக்கள் சரமாய்த் தொங்கும் மெஷின்கன்களை, ஆங்கில போர்ப்படங்களில்தான் அதற்கு முன்பாகப் பார்த்திருந்ததாக நினைவு.

சினிமாக்களில் எப்போதுமே மெஷின்கன்னுடன் மேலே உட்கார்ந்திருப்பவன் வில்லனாகவும் கீழிருந்து, எதன் பின்னாலாவது ஒளிந்தபடி சின்ன கைத்துப்பாக்கியால் உச்சிக் கொட்டகையில் உட்கார்ந்திருப்பவனை சுட்டுச் சாய்ப்பவன், நாயகனாகவுமே இருப்பான். வில்லன் வீழ்ந்ததுமே, நாயகனோடு அடையாளப்படுத்திக்கொண்டு ஒன்றிப்போயிருக்கும் பார்வையாளக் கூட்டத்தோடு சேர்ந்து நர்சிக்கும் உற்சாகம் பிய்த்துக்கொள்ளும்.

பொற்கோவில் நுழைவில் இருந்த இயந்திரத் துப்பாக்கியும் அதன் குறி பதிந்த இடங்களும் எதிரெதிர் அணிகளில் இருந்தாலும் நாயக வில்லனாய்த் துல்லியமாய்ப் பிரிக்கமுடியாதவையாய் இருப்பதாகத் தோன்றியது.

சைக்கிள்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்த மாடி அறைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பது, தோளில் தொங்கிய கெட்டிச்சணலாலான குடிதண்ணீர்ப் பையைத் தூக்கிக் குடித்துவிட்டுக் சுவரோரமாய்க் கீழே வைக்கையில்தான் மண்டையில் உறைத்தது.பயம்தான், எதையுமே நினைவில் பதியவிடாமல் அனிச்சையாய் இயக்கிக்கொண்டிருந்தது போலப்பட்டது.

அறைக்கு வெளியில், நீளமான பால்கனிக்கு வந்து நின்றான். வந்த வழியைப் பார்த்தபோது, ஒன்றரை வருடத்திற்குமுன் அங்கே நுழைந்த ராணுவம், ஒரு ஆளை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதுபோல் சற்றுத்தொலைவில் மெஷின்கன்னின் விறைத்திருந்த முதுகு தெரிந்தது.

வளாகத்தின் உள்ளே பெரிய குளமும் நீருக்கு நடுவில் பொற்கோயிலும் தகதகத்துக்கொண்டிருந்தன. ஆனால் பார்வை என்னவோ மறுபடியும் அந்த மெஷின்கன் மனிதர் மீதே திரும்பப்போய் பதிந்தது. அநேகமாக அந்த ஆளை அண்ணாந்து பார்க்காமல் உள்ளே ஒரு சைக்கிள்கூட நுழையவில்லை என்று பட்டது. அவர்களுக்குள்ளான சளசளப்பற்ற அமைதிப் பார்வையிலேயே பயம் மெழுகப்பட்டிருந்தது.

அறைக்குள் இருந்தவர்கள் சுவரில் துவண்டிருந்தார்கள். வெயிலில் சைக்கிள் மிதித்து வந்ததன் அயர்ச்சிமட்டுமே அதற்குக் காரணம் இல்லை. ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கையில், அனந்த்பூர் சாகிப்புக்குள் முதுகெலும்பு சில்லிட நுழைந்தபோது உண்டான பயமே அறிவுருத்தலாய் வடிவெடுத்திருக்க வேண்டும். உக்கிரப்போரின் முக்கியக் கேந்திரத்திற்குள் செல்கிறோம், முடிந்த அளவு தனியே செல்வதைத் தவிருங்கள். வெளியில் செல்லவே செல்லதீர்கள். எதிர்படுபவர்களிடம் பார்த்துப் பக்குவமாகப் பேசி நடந்துகொள்வது நல்லது என்று முந்தைய நாள் கொடுக்கப்பட்ட அறிவுரைகள் வேறு பீதியைப் பெரிதுபடுத்திவிட்டிருந்தன.

உண்மையில் சொல்லப்போனால், பஞ்சாப்புக்குள் நுழைவதற்கு முன்னால் இருந்த மிரட்சி, நுழைந்தபின் ஒவ்வொரு ஊரிலும் கிடைத்த உற்சாக விருந்தோம்பலில் மறந்தே போயிருந்தது. எந்த மாநிலத்திலும் இல்லாத வண்ணம், பஞ்சாப்பில் மட்டும், சென்ற ஊர்களில் எல்லாம் தினத்திற்குக் குறைந்தது இரண்டுவேளை வரவேற்பும் உணவும் தின்பண்டங்களுமாய் அப்படியொரு உபசரிப்பு.

போதும்போதுமெனச் சொன்னதையும் மீறி, தட்டில் விழுந்த ஜிலேபியைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்த சுதிர், ஒன்றா தோட்டாவால் சாவு இல்லையேல் இனிப்பால் சாவு என்று லூதியானாவில் சொன்னது நினைவுக்கு வந்தது.

பஞ்சாப்புக்குள் நுழையப்போகும் முன்தினம், அம்பாலாவில் அந்த இரவு உண்டாக்கிய கிலி கொஞ்சநஞ்சமன்று. உணவுக்குப்பின் அவசரமாகக் கூடச்சொல்லி அழைப்பு வந்தது. வழக்கத்திற்கு மாறான அவசர அழைப்பு என்று அறிவிக்கப்பட்டது, அந்த அழைப்பே நர்சியையும் சுதிரையும் விசேஷ பார்வைகளைப் பறிமாரிக்கொள்ள வைத்தது. சுதிரின் பார்வையில் பயமும் கூடவே நக்கலும் இருந்ததுபோல் நர்சிக்குப்பட்டது.

பாபா உற்சாகமின்றிக் காணப்பட்டார். கர்ஜனையின்றி கவலையின் கீறல் விழுந்த குரலில், சாத்தியோ(ன்) என்று செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்.

அம்பாலாவிலேயே பத்துப் பதினைந்து நாட்கள் தங்க வசதி செய்துகொடுக்கிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நிலவரம் சரியாகிக் கட்டுக்குள் வரட்டும். அப்புறம் பஞ்சாபுக்குள் நுழையலாம் என்பதுதான் செய்தி.

பாபா அதை அறிவித்ததுதான் தாமதம். ஒரே கூச்சலும் குழப்பமுமாய் ஆவேசக் குரல்கள் முட்டிமோதி எழுந்தன. பெண்சாயல்நடை காரணமாய் பிரசித்திபெற்றிருந்த பேராசிரியர் காயர்க்கர் சட்டை பட்டன்களைக் கழற்றாத குறையாக முதல் ஆளாக நான் போகத்தயார் முதல் குண்டு வாங்கி சாகத்தயார் போன்ற வீர வசனங்களைப் பேசத் தொடங்கிவிட்டான். இதுவே வேறொரு சமயமாய் இருந்தால் வெடித்து சிரித்துவிட்டிருக்ககூடிய நர்சி சுதீரை கவலையுடன் பார்த்தான். அவன் பெருமூச்சுவிடுவது தெரிந்தது.

கூட்டத்தை அமைதிப் படுத்திவிட்டு பாபா கூறினார். நாம் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பது சாவதற்காக அன்று. அர்த்தமற்ற வன்மத்தில் சண்டையில் மாட்டிகொண்டு உயிர்கள் பலியாவதைத் தடுப்பதற்காகவே உடலை வருத்திக்கொண்டு வந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆகவே கொந்தளித்து ஆவேசமாய்ப் பேசுவதைவிடவும் விவேகமாய் யோசிப்பதே இப்போதைய அவசியம். என் உயிருக்கு மட்டுமன்று உங்கள் உயிருக்கும் சேர்த்தே நான் பொறுப்பு. அதேசமயம் எல்லோருக்குமாய் சேர்ந்த முடிவை நானே எதேச்சையாய் எடுக்கவும் விரும்பவில்லை. உங்கள் கருத்தையும் தெரிந்துகொள்ளவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. எனவே அமைதியாகவும் தனித்தனியாகவும் அவரவர் கருத்தைக் கூறுங்கள்.

திரும்ப ஆளாளுக்கும் ஒரே சமயத்தில் பேசத்தொடங்கி, பெண்களும் சேர்ந்துகொள்ள ஒரே களேபரம். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மாத்தூர் கோஷ்டி நடப்பதைக் கண்டு தலையைக் குனிந்தவண்ணம் நகைத்துக் கொண்டிருந்தது. மாத்தூர், ராஜஸ்தான்காரர். பத்திரிகையாளர். அரிதாக ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி ஹிந்திக்குத் தாவி விடுவார். தீவிர இடதுசாரி அரசியல்சார்பு கொண்டவர் என்று கேள்விப்பட்டிருந்தான். நிதானமான ஆள், மந்தமற்ற முதிர்ந்த மனிதர் என்கிற எண்ணமே மனதில் அவரைப்பற்றி உருவாகி இருந்தது. நர்சி அவரைப் பார்த்த சமயத்தில் அவரும் பார்க்கப்போக உதட்டைப் பிதுக்கினார். லெஃப்டினெண்ட் கர்னல் ரேகே சுவரோரம் சாய்ந்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பாபா எதிரில் அவர் அநேகமாய் பேசுபவரே அல்ல.

பலமணி நேரம் ஆகிவிட்டபடியால் சிகரெட்டுக்காக கையும் வாயும் பரபரத்தன. பத்து நாளைக்கு ஒருமுறை வரும் சைக்கிள் மிதிக்கு ஓய்வளிக்கும் தினமாய் மறுநாள் இருந்தது அதிகாலையில் அரக்கப்பறக்க எழவேண்டிய அவசியமில்லை. அடுத்த நாள் தங்கல் அநேகமாய் இந்துக் கோவில் ஒன்றில்தான் எனக் கேள்விப்பட்டிருந்தான். நாளைக்கு ஜாலியன்வாலாபாக் போவது என மனதிற்குள் தீர்மானித்திருந்தான். கிட்டத்தட்ட எல்லோரும் படுக்கைக்குப் போயாகிவிட்டது. வழக்கம்போல சுதிர் ஏதோ புத்தகத்தைப் பிரித்துக்கொண்டு சுவரில் சாய்ந்திருந்தான்.

ஏப்ரலின் முதல்வார இரவு, எனினும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்ததும் மெட்ராஸின் மார்கழியாய் சில்லென்றிருந்தது. அநேகமாய் ஆள் நடமாட்டமே இல்லை. வளாகத்தின் பிரதான வழிக்கு அந்தப்பக்கம் இருந்த லங்கரில் அப்போதும் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. தலைப்பாகையில்லாத இரண்டொருவர் ரொட்டி தின்றுகொண்டு இருந்தனர். வள்ளலாரின் வடலூரைப்போல இங்கேயும் இன்னொரு அடுப்பு இருந்தது போலும்.

மதிய உணவிற்காக சுதிருடன் லங்கரில் போய் உட்கார்ந்தபோது கேட்காமலே ரொட்டி வந்து தட்டுகளில் விழுந்துகொண்டே இருந்ததைக்காண வியப்பாய் இருந்தது. கோவிலுக்குப் போவோரும் வருவோரும் சரசரவென நடமாடிக்கொண்டிருந்த வேகத்தைப் போலவே ரொட்டிகளும் வந்துகொண்டே இருந்தன. இரண்டு ரொட்டியை நிதானமாகத் தின்பதற்குள் வயிறு நிறைந்துவிட்டிருந்த்து. அந்த ரொட்டிகளைத் தின்பதால்தான் அவர்கள் திடகாத்திரமாக இருக்கிறார்களோ என்றும் திடகாத்திரமாய் இருப்பவர்களே அந்த ரொட்டியைத் தின்ன முடியும் என்றும் பட்டது. அதை சுதிரிடம் கிசுகிசுப்பாய்ச் சொல்லவும் பின்னே சர்தார் என்றால் சும்மாவா என்று கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்து அடித்தாலும் மரன அடி கொஞ்சினாலும் மூச்சு முட்டும். ஜாக்கிரதை இன்னொரு ரொட்டி வந்து விழுந்துவிடப்போகிறது  நர்சி என்றபடி சிரித்தான்.

எப்படி இவ்வளவு பெரிய சிடுக்காகிப்போனது என்பதுதான் புரியவே இல்லை. மதிய உணவிற்குப்பின் கோவிலைச் சுற்றிப்பார்க்கப் போனபோது, பல இடங்கள் தோட்டா வடுக்களைத் தாங்கியவண்ணம் இருந்தன. பொதுமக்கள் யார் போலீஸ் யார் தீவிரவாதிகள் யார் என்று பிரித்துப் பார்க்கவே இயலாதவாறு எல்லோரும் தலைப்பாகைகளுடன் வளைய வந்துகொண்டிருந்தனர். சைக்கிள் பயணிகள் யாரும் எதையும் யாருடனும் விவாதிக்கவேண்டாம் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமற்று அறிவுருத்தப்பட்டிந்ததன் காரணம் புரிந்தது.

அகால் தக்த்தை நெருங்கும்போதே பிந்திரன்வாலே எங்கே உட்கார்ந்திருந்தார் ராணுவம் எப்படி நுழைந்தது என்று ஆங்கிலப் பத்திரிகைகளில் படித்ததையும் படங்களாய்ப் பார்த்ததையும் நின்று நிதானித்து கைகளை உயர்த்திச் சுட்டிக்காட்டி விளங்கிக்கொள்ள முடியவில்லை. யுத்தபூமியாக அது மாற்றப்பட்டிருந்தாலும் அவர்களின் கோவில் அல்லவா? போரின் சுவடுகளைச் சுற்றுலாப் பயணிகள்போல் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? இதுகள் ஏன் இங்கே வந்திருக்கின்றன என்று வேண்டா வெறுப்பாய் எல்லோரும் பார்ப்பது போலப் பட்டது.

சண்டிகர் சாலையில், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று கோஷமிட்டு மெல்ல நகர்ந்துகொண்டிருந்த சைக்கிள்களுக்கு இடையில் புகுந்து சாலையைக் கடந்த கன்னியமான தோற்றத்தில் இருந்த நரைமுடிக்காரர் ஃபெவிகால் லகாவ் என்று சொல்லிவிட்டுப்போனது நினைவுக்கு வந்தது.

அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கட்டிலில் படுத்திருந்த பாபா ஆம்தேவிடம், யாருக்காக இந்த சைக்கிள் பயணம், இந்துக்களான இவர்களே இப்படிப் பேசுகிறார்களே என்று சிலர் கோபப்பட்டனர். அதற்காகத்தான் இந்தப்பயணம் என்று பாபா ஆம்தே அமைதிப்படுத்தினார்.

ஆனால் அம்பாலாக் கூட்டத்தில் பாபாவின் குரலில் தெரிந்த கலவரத்திற்குக் காரணம்,  தற்போது நிலவரம் சரியில்லை, பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து பஞ்சாப்புக்குள் வாருங்கள் என்று முதலமைச்சர் சுர்ஜித் சிங் பர்னாலாவே கேட்டுக்கொண்டதுதான் என்று பின்புதான் தெரிய வந்தது. உள்ளூர் பத்திரிகைகளின் முதல் பக்கத்தை படுகொலைச் செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன. ஆவேசமாய் எழுந்த குரல்களில் அநேகமாய் பயணத்திற்கு இடைக்காலத்தடை விதிக்க பலத்த எதிர்ப்பு மட்டுமே இருந்ததன்றி, நிலைமையின் தீவிரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்ட குரல்கள் மவுனமாகவே இருந்தன. கன்யாகுமரியில் தொடங்கியபோது தீர்மானித்திருந்த அட்டவணைப்படி ஏப்ரல் 9ஆம் தேதி ஜம்முவை அடைந்தே தீருவோம் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதே இறுதிமுடிவாய் அறிவிக்கப்பட்டது.

கூட்டம் ஆரவாரத்தில் கைதட்டி குதூகலித்தது. பயணிகளில் பெரும்பாலோர் இருபதை ஒட்டிய வயதுடையவர்கள். பெரும்பாலும் மராட்டியர்கள். சமூகத்தொண்டாற்றும் ஆர்வத்திலும் பாபாவின் மேலிருந்த ’பக்தி’யிலும் கிளம்பி வந்தவர்கள். சட்டை பட்டன்களைப் பிய்த்துக்கொள்ளாத குறையாய் அந்தக்கணமே குண்டுவாங்கத் தயாராக இருந்த காயர்க்கர், தான் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்கிற நினைவே இல்லாது குஷியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான்.

சட்டெனப் பிண்டு எங்கே இருக்கிறான் எனப் பார்க்கத் தோன்றியது. சைக்கிள் பயணத்தின் ஒரே சீக்கியப் பிரதிநிதி, பிண்டு என்கிற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மஞ்சித் சிங்.உச்சிக் கொண்டையை வெட்டிக் கிராப்பாக்கிக் கொண்டிருந்தான். ஏன் எனக்கேட்டபோது, ஐ நாட் லைக் நர்சி என்றான். திரும்பிப் போகையில் வீட்டாருக்கு என்ன பதில் சொல்லுவாய் என்றதற்கு, பாரதத்தை ஒன்றிணை என்றபடி பஞ்சாப்புக்குள் நுழைந்தவன் சர்தார் எனத் தெரிந்தால் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என பயமாக இருந்த்தால் வெட்டிவிட்டேன் என்று பயமுறுத்திக் கடிதம் போட்டுவிட்டதாய்க் கூறிச் சிரித்தான். அவன் எங்கே என்று கூட்டத்தைத் துழாவினான் நர்சி. ஐ லைக் ஸ்ரீதேவி என்கிறவிதமாய்த் தமிழ்நாட்டை அறிந்திருந்த பிஞ்சுப் பயல் ஓரமாய் சுவரில் சாய்ந்து தலைகுனிந்தவண்ணம் இருந்தான்.

வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த மாத்தூரையும் சுதிரையும் பார்த்தான். இருவர் முகங்களிலும் இறுக்கம் இளகக்கூட இல்லை. பாபா வலிந்து வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் இருப்பதாய்ப் பட்டது. மராட்டியப் புலி என்று சிலிர்த்து சீறியவை எல்லாம் எமெர்ஜென்சியில், இருக்கிற இடம் தெரியாமல் பூனையாகிக் கிடந்தபோது, துணிவாக எதிர்த்துக்குரல் கொடுத்த சாத்னா பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தவர் என்று சுதிரால் அறியக்கிடைத்த பெரியவர் யதுநாத் தத்தேவிடம்போய் சிலர் கைகுலுக்கினர். அவரோ அமைதியாய் தலையசைத்துக் கொண்டிருந்தார். எழுதுகோலுக்கு புல்லட் என்றால் என்னவென்றும் தோட்டாக்கள் எவ்வளவுதூரம் எழுதுகோலை மதிக்கக்கூடியவை என்றும் அவருக்குத் தெரியாததா?

அடுத்த நாள் காலையில், சண்டிகர் நோக்கிய நெடுஞ்சாலையில் குளிர்நிறைத்த இளவெயிலில் சக்கரங்கள் விர்ரிட்டுக்கொண்டு இருந்தன. திடீரென இடிபோல் துப்பாக்கி வெடித்தது. அந்த சத்தத்தில் சாலையோர மரங்களிலிருந்து பறவைகள் பிய்த்துக்கொண்டு விருட்டென விண்ணுக்குத்தாவின. வெடியொலியில் வாயடைத்து சைக்கிள்கள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. வரிசையில் சற்று முன்னாலிருந்த சுதிர் ரவுத் தலையைத் திருப்பி நர்சியைப் பார்த்துப் புன்னகைத்தான். காயர்க்கர் சட்டையைக் கழற்றியாயிற்றா என்று சத்தமாகக் கேட்டான். வெடித்தெழுந்த சிரிப்பலையில் காயர்க்கரும் சேர்ந்துகொண்டான். அடுத்தடுத்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் எதிரொலித்தது.

சற்றுநேரம் சென்றபின் சிற்றுண்டிக்காய் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டன. தெருவோரம் விநியோகிக்கப்பட்ட மிக்சரைத் தின்றபடி, அந்தப்பக்கமாய் வந்த  கர்னல் ரேகேயிடம், வரும்வழியில் வெடித்த்து 303 ரைஃபிள்தானே என்று கேட்டான். திருட்டு சிகரெட் மதராசிக்கு 303யும் தெரியுமா? என்று ஹிந்தியில் சிரித்தபடித் தொடங்கி ஆங்கிலத்தில் ஆமாம் என்று முடித்தார். வெட்கத்துடன், கல்லூரி நேவியில் இருந்தபோது துப்பாக்கி சுடும் பயிற்சியில் 303ஐக் கையாண்டிருப்பதாகவும் கழற்றி துடைக்கவும் தெரியும் என்றான். நெடுஞ்சாலைக்கு நன்கு தள்ளி உள்ளே எங்கோ பயிற்சிக்களம் இருந்தது போலும். அப்போதும் தூரத்து இடியாய் ஐந்தாறு வெடி சத்தங்கள் மங்கலாய்க் கேட்டன.

ஒருங்கமைப்பாளன் அதுல் சர்மா கர்னலின் அருகில் வந்து, இந்தத் துப்பாக்கி சத்தத்திற்கே குலை நடுங்கிப்போனதே, இன்னும் ஏகே 47 எதிரில் தெரிந்தால் என்ன ஆகுமோ என்கிற ரீதியில் ஹிந்தியில் சொனான். முதலமைச்சரே நிலவரம் பற்றி கவலை தெரிவிப்பதுதான் கவலைகொள்ள வைக்கிறது என்றார் கர்னல். கருத்த நெற்றியில் கவலையின் சுருக்கம் தெரிந்தது.

சண்டிகரில்தான் நர்சி முதன்முதலாக ஏகே 47ஐப் பார்த்தான். தொட்டுப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

வழக்கம்போல் புகைக்க ஒதுங்கியபோது, பள்ளிக் கட்டிடம் ஒன்றின் முன்னால், பெல்டில் துப்பாக்கியை சங்கிலியால் பிணைத்துத் தோளில் மாட்டியிருந்தவர் தமிழர் போன்று தோன்றவே, மெல்லப் பேச்சு கொடுத்தான்.

நீங்க தமிழா?

முகம் பிரகாசப்பட்டது.

நீங்க தமில் பேசறீங்க? என்றார் பதிலுக்கு.

மெட்ராஸ்.

ஆனா உங்களைப்பாத்தா வடநாட்டுக்காரர்போலத்தான் தெரியுது.

சைக்கிள் பயணத்தில் வந்திருப்பது பற்றியும் ஒருவாரத்திற்குப்பின் சவரம் செய்ய போரடித்துப்போய் விட்டதில் தாடி நீண்டுவிட்டதாகவும் கூறி கொஞ்சம் சகஜபாவம் தோன்றியதும் கேட்டான்.

இதான் ஏகே 47ஆ?

சாதகமாய் தலையசைத்தார்.

சங்கிலில ஏன் கோத்துருக்கீங்க?

சிரித்தார்.

சொல்லலாம்னா சொல்லுங்க.

இந்த ஊர்க்காரங்கன்னா இவ்ளோ நேரம் நாம்ப பேசியிருக்கக்கூட மாட்டோம். நீங்க நம்பொ தமிள்காரரா வேறப்போயிட்டிங்கொ. வெக்கத்தவுட்டுச் சொல்னும்ணா, இதைப் பக்கத்துல சாச்சி வெச்சிட்டு, வெளிக்கிக் கூடப் போக முட்யாது. யார் வேணா எப்ப வேணா எட்த்து சுட்டுட்டு துப்பாக்கியத் தூக்கிட்டி ஓட்ருவாங்கொ. இங்க ஆம்ளே பொம்ளே வித்தியாசமெல்லாம் கெட்யாது. நெஞ்சை நிமித்திகிட்டு சுடுங்கடா பாக்கலாம்னு அனந்த்பூர் சாகேப் ஊர்லெ லேடீஸ் முன்னாடி வந்துச்சு. இத்தினிக்கும் அப்போ அந்தூரு கர்ப்யூல இருக்கு. சாவப்பத்திக் கொஞ்சங்கூட பயமே கெட்யாது. இந்த மாதிரி தெகிரியத்தை இந்துஸ்தானத்துல வேற எங்கியுமேப் பாக்க முடியாது. இன்க்கி இந்துஸ்த்தானம் பத்தி எரியுதுன்னா அத்க்கு அந்தம்மாதான் கார்ணம். ஒண்ணுமில்லாத ஆளை அந்தம்மாதான் வள்த்துவுட்டுது. கட்சீல அந்தாளும் போச்சி அதுவும் போயிட்ச்சி. ம். ஆனா இந்த சண்டை என்க்கி முடியுமோ யார்க்கும் தெரியாது என்று பெருமூச்சுவிட்டார். குடும்பம் அவரது கண்ணெதிரில் வந்து நிற்பதுபோல் பட்டது. வெள்ளைக்காரன் காலத்தில் கேஜிஎஃப்பில் போய் நிரந்தரமாய்த் தங்கிவிட்ட தமிழ்க்குடும்பங்களின் வழித்தோன்றல்.

இருட்டுச் சந்து எங்காவது போய் சிகரெட் பிடிக்கவேண்டி, பொற்கோவில் வளாகத்தை விட்டு அந்த இரவில் தெருவிற்கு இறங்கியதும் எதிரில் தெரிந்தது, யாருமற்ற இருட்டில் ஏகே 47ஐத் தோளில் மாட்டியபடி உலாத்திக்கொண்டிருந்த வீரரும், சற்றுத்தொலைவில் அடைக்கப்பட்டுக்கொண்டிருந்த,பாதியாய்த் தெரிந்த கடையில், பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக்கொண்டிருந்த பெண்மணியும்தான்.

கடையை நோக்கி நடந்தான். வழியில், நர்சியின் வயதுகூட இருக்குமா என்று சந்தேகப்படவைக்கும் குழந்தை முகம் போல ஏகே 47காரன் தென்பட்டான். ஜீன்ஸ் பாண்டுக்குள் கைகளை நுழைத்தபடி லேசாக அவனைப் பார்த்து சிரித்து வைத்தான். அந்த வடக்கத்தி முகத்தில் எந்த மாறுதலும் தென்படவில்லை. நெருக்கத்தில் கடந்து சென்றபோது அவனும் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது மூடப்பட்டுக்கொண்டிருந்த கடை விளக்கின் வெளிச்சத்திலும் தெரிந்தது.  கடைக்குள், குட்டி மணையில் திடகாத்திரமான பாட்டியம்மாள் உட்கார்ந்திருந்தார்.

அருகில் போனதும் அகலமான அலுமினியப் பாத்திரத்தில் ரோஸ்மில்க் இருப்பது தெரிந்தது.

ரோஸ்மில்க் கித்னா பைசா?

ஒன்றுமே பேசாமல் பாத்திரத்தை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டி எவர்சில்வர் டம்ளரில் ஊற்றினார். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினான்.

பாத்மே என்று அப்புறமாக என்பதுபோல் சைகையில் காட்டினார். ரோஸ்மில்க் நல்ல திடத்தில் இருந்தது. உயரமான டம்ளரில் கொடுக்கப்பட்டதைக் குடித்தபடி பக்கவாட்டில் பார்த்தான். சற்றுத் தொலைவில் துப்பாக்கிக் குழந்தை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தான் பார்ப்பது தெரிந்ததும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். நாயொன்று வந்து வாலாட்டிவிட்டுக் கடந்து சென்றது.

குடித்துவிட்டு டம்ளரையும் காசையும் கொடுக்கப்போக, அதைக் கண்டுகொள்ளாமல், கீழே வைத்த டம்ளரில் பாட்டி திரும்பவும் ரோஸ் மில்க்கை ஊற்றுவதைப் பார்த்துப் பதறியவனாய் வேண்டாம் வேண்டாம் என்றான் நர்சி.

அட சும்மா குடியப்பா என்பது போல் அதட்டினார் பாட்டி.

கூச்சத்துடன் மூச்சு வாங்கக்குடிக்கத் தொடங்கினான். ரோஸ்மில்க் பாத்திரத்தைக் கையில் எடுத்து இன்னொரு லோட்டாவில் ஊற்றி, கையைக் காட்டி ஏகே47ஐ அழைத்தார் பாட்டி. அவன் வேறு யாரையோ அழைப்பது போல கவனிக்காது இருந்தான்.

அட வாய்யா கூச்சப்படாதே என்பதுபோல் பாட்டி கூப்பிட்டார்.

அவன் லஜ்ஜையுடன் சிரித்தபடி வேண்டாம் என்றான்.

விஷமொன்றும் கலக்கவில்லை. இவருக்குக் கொடுத்ததைத்தான் உனக்கும் கொடுக்கிறேன் கடை மூடும் நேரம் வா குடி என்றார்.

குழந்தைமுக வீரன் டம்ளரைக் கையில் எடுத்துக் குடிக்கத்தொடங்கினான்.

சண்டை என்று வரும்போது எதிரெதிராய் நின்று சண்டை போட்டுக்கொள்ளலாம். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்றார் அந்த சர்தாரினி.

[1985-86ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக பாபா ஆம்தேவின் தலைமையில், இந்தியாவை இணைத்துக்கட்டு என்கிற கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு மேற்கொண்ட சைக்கிள் பயண அனுபவத்தை அடிப்படையாய் வைத்து எழுதிக்கொண்டிருக்கும் ’சக்கரம்’ என்கிற நாவலின் ஒரு அத்தியாயம்]