Monday, January 9, 2012

இணையமும் இலக்கியமும்இணையமும் இலக்கியமும்

வெகுஜன படைப்பிலிருந்து வெகுதூரம் தள்ளி இருப்பதே இலக்கியப் படைப்பு என்பதை இது வெளியாகிற பத்திரிகையின் வாசகர்களுக்கு விரித்து எழுதவேண்டிய அவசியமில்லை. இரண்டும் ஒரே மொழியில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்றபோதிலும் படைப்பைப் போலவே வாசிப்பும் இரண்டு வகைப்பட்டதாகவே இருக்கிறது. 

இலக்கியத்தில் எழுத்தாளனுக்குத் தக மொழியானது கடினமாகவோ எளிமையாகவோ எளிய வார்த்தைகளில் நுட்பங்களை வெளிப்படுத்துவதாகவோ விளங்குகிறது. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளின் மொழி ஜனநாயகப் பொதுமை கொண்டது. அதன் எழுத்தாளர்களிடம் வெளிப்பாட்டில் தனித்துவம் இருந்தாலும் மெனக்கெடலே தேவைப்படாத மேலோட்ட வாசிப்பை மட்டுமே பொதுமையாகக் கொண்டது. காரணம் பெரும்பான்மையின் தேர்வு அதுதான் என்கிற நம்பிக்கை. பெரும்பாலும் அது உண்மையும் கூட. 

நுட்பமே விற்கும் சரக்காக ஆகிப்போகிற எதிர்காலக் கற்பனை உலகில், வெகுஜன வணிகப் பத்திரிகைகளின் பொருளடக்கமும் நுட்பமாகவே அமையும். அதன் நோக்கம் வியாபாரம் மட்டுமே. வியாபாரம் அதனளவில் கீழ்மையானதும் அல்ல. தேவை என்று இருந்தால் அதை நிறைவேற்றும் தேவையும் அனிச்சையாய்த் தோன்றிவிடுவதே இயற்கை.

கலை இலக்க்கியத்திற்கான தேவையை, இலக்கியப் பத்திரிகைகள் நிறைவு செய்ய முயற்சித்து, குறுங்குழுக்களில் இருந்து மீண்டு, ஓரளவு விரிவாக்கம் நாளடைவில் நடந்திருப்பதற்கு, புத்தகக் கண்காட்சி சிறந்த சாட்சியம். அன்றைய இன்றைய மக்கள்தொகை மற்றும் கல்வி விரிவாக்கத்துடன் புத்தக விற்பனையை ஒப்பிட்டு, நம் ரத்தக் கொதிப்பை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ளாதிருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது எனவே அதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

இந்தப் பரவலாக்கத்தில், கல்வி மட்டுமின்றி தொழில் நுட்பத்தின், குறிப்பாக கணினியின் இணையத்தின் தாக்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

எப்படி சிறு பத்திரிகைகள் வணிகத்திற்கு எதிராய், சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் சுவாசிக்கத் தலைப்பட்டனவோ அதே போல, இன்று இணையத்தைச் சொல்லலாம். இணையத்தின் அவலங்கள் பட்டியலிட்டு மாளாத அளவிற்கு அநேகம் என்ற போதிலும் சுதந்திர எழுத்துக்கு இணையம் கொடுக்கும் களத்தை எந்தப் பத்திரிகையும் எந்த காலத்திலும் கொடுத்துவிட முடியாது. பக்க நெருக்கடியோ ஆசாமிகளின் பக்கவாட்டு நெருக்கடியோ கால நெருக்கடியோ இல்லாமல் எழுத, ஒரே இடம் இணையம் மட்டுமே.

இணையத்தின் முக்கியப் பிரச்சனையும் சுதந்திர வெளிப்பாடுதான். தனக்குப் பட்ட கருத்தை அப்பட்டமாக வெளியிட்டால் அடுத்த கணமே விவாதம் என்கிற போர்வையில் பக்கச் சார்புகொண்ட ரசிக ரெளடிகளின் அர்த்தமற்ற கொலைவெறிக் கூப்பாடு அலைக்கழிக்கத் தொடங்கிவிடும். அதற்கு முகம் கொடுப்பது நேரவிரயம். ஆனால், பெரும்பாலும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாத சமாதான சகோதரத்துவ சுகவாழ்வில் முக்தியடைவதை லட்சியமாய்க் கொண்டோரே பெரும்பான்மை என்பதால் தமிழ் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. 

வலைப்பூவை, பிரத்தியேக நாட்குறிப்பாய் வைத்துக்கொள்வதில் இருந்து, தனது நம்பிக்கையின் பிரச்சாரத்திற்கு உபயோகித்துக் கொள்வதுவரை என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை, எழுத்தாளனுக்கு அளிப்பதாய் இணையமே இருக்கிறது. தெரு நாடகத்தின் உடனடி எதிர்வினை போல எல்லைகளற்ற இணையத்தின் எதிரொலிப்பு பிரமிக்க வைப்பது.

கைத்தட்டலுக்கு மயங்காத கர்மயோகியால் மட்டுமே கலையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு இணையத்தில் தப்பித்து நிற்கவும் முடியும். கொஞ்சம் அசந்தாலும் ஆரவார வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீர்த்துப் போகவைக்கும் அபாயச் சுழிப்புகளே அதிகம்.

இணையத்தில் முக்காலுக்கும் மேற்பட்டோர் வயது மற்றும் அனுபவம் காரணமாய், முதிராநிலை வாசகர்களே ஆவர். அனுபவ மூளையைவிடவும் வாழ்வின் தட்பவெப்பங்களைக் கண்ட அனுபவமனம் கிடைப்பதும் வாசித்து அனுபவிக்கும் மனம் கிடைப்பதும் அல்லவா அபூர்வம். தீவிர நுட்ப வாசிப்புக்கு பழக்கப்படாதவர்களும் அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்துப் பயிலவியலாத வேலைச் சூழலின் அழுத்தம் காரணமாய், அதிலிருந்து தப்பிக்க இணையத்தைக் கேளிக்கை வடிகாலாய்ப் பார்ப்பவர்களுமே ஏராளம். 

இன்னும் கொஞ்சம் முன்னேறி, வாசிப்பைப் பழக்கமாக்கிக் கொண்டவர்களில் பெரும்பாலோருக்கு, இலக்கியம் பற்றிய பிரமைபீடித்த துலாக்கோல் கொண்டு பார்க்கையில், எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் ஒன்றாகவும் நன்றாகவும் இருப்பதான கானல் தோற்றமே தெரிகிறது. தரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கண்ணுக்குத் தப்பிவிடுகிறது. ஆகவே விமர்சன எழுத்து விதண்டாவாதத்தையே எதிரொலியாய் எழுப்புகிறது. இந்தத் தீவிர மிதவாதிகளுக்கு அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து விளக்குவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் ஆனால் கண்ணிமைக்காது வெல்லமுடியா கர்வத்துடன் காலத்துக்கும் தம் பிரிய எழுத்தாளர்களுக்கு சிறப்புக் கமாண்டோக்களாய் இணையத்தில் இவர்கள் காவலுக்கு நின்றுகொண்டே இருப்பார்கள். 

ரசிகர் மன்ற தற்கொலைப் படையைக் காட்டிலும் பலமானது திராவிடக் காவற்படை. இடம் வலம் தீவிர இடது என கட்சிசார் கமாண்டோக்களின் திண்டோள் திறம் சொல்லி மாளாது. ஒரே ஆள் ஒன்பது ஐடியை வைத்துக்கொண்டு முற்போக்குக் கதிர்வீச்சை தேச எல்லைகளையெல்லாம் தாண்டி கண்டம்விட்டு கண்டம் பரப்பிக்கொண்டு இருப்பார். இதே போல் ஒன்பது நபர்கள் குழுவாய் ஒன்றிணைந்தால் அதுவே இணையத்தின் அதிதீவிர இயக்கமாகிவிடும். 

என்றாலும், சவரக்கடைக் காத்திருப்பின் பத்திரிகைப் புரட்டலாய் தினந்தோறும் தளத்திற்கு வந்துபோவோரின் எண்ணிக்கை எல்லாம் தீவிர வாசிப்பாய் எடுத்துக்கொண்டு புளகிப்பது கடைசியில் கழிவிரக்கத்திலேயே கொண்டு விடும். ஆழ்ந்த வாசிப்பிற்கானதாய் இன்னமும் அச்சுவடிவமே இருக்கிறது என்றே படுகிறது. 

ட்விட்டரில் அக்கப்போரே அதிகம் எனினும் 140 தட்டல்களுக்குள் உயர் நகைச்சுவையும் கவித்துவ வெளிப்பாடுகளையும் காணலாம். 140 கேரெக்டர்களுக்குள் எழுத்தின் கேரெக்டரை வெளிப்படுத்துவது என்பது ஆகப்பெரிய சவால். பல்லுடைப்புக் கட்டுரையாளர்களுக்கு கல்லுடைப்பு தண்டனைபோல் ட்விட்டரில் எழுதப் பணிகப் பட்டால், மொழி வெளிபாட்டில் கூர்மை வர வாய்ப்புண்டு. ட்விட்டரின் பயன்பாடு தனி நபரின் வெளிபாட்டைத் தாண்டி பொது அக்கறைகள் சார்ந்து இயங்கவும் இடம்கொடுக்க வல்லது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது பொருள் குறித்த முனைப்பைத் தீவிரப்படுத்தி, போராட்ட வடிவமாக்கி, உலகின் கவனத்தை ஈர்க்கவும் வழியுள்ளது. 140 தட்டல்களுக்குள் ஏதேனும் ஒரு இடத்தில் - பெரும்பாலும் இறுதியில், ஒரே விதமான வார்த்தையைக் குறிப்பிடும் ட்விட்டுகள் ட்ரெண்டிங் என்கிற அளவீட்டின்படி எண்ணிக்கையில் உச்சத்தை எட்டுவதைச் சுட்டிக் காட்டலாம். ட்விட்டர் உலகம் எதைபற்றி அதிகம் பேசுகிறது என்பதன் மூலம் ஊடகங்களின் கவனத்தைக் கவர வாய்ப்புள்ளது. இந்த வகையில் சமீபத்திய எடுத்துக்காட்டாக தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எதிரொலித்த ட்விட்டர் குரலைக் கூறலாம். 

இதைவிடவும் அதிகமாய் எழுத, ஃபேஸ்புக்கின் சுவரும் அதைவிடவும் நீளமாய் எழுத அதன் குறிப்பேடும் இடம் கொடுக்கின்றன எனினும் இரண்டு ஊடகங்களில் பிந்தையதன் வீச்சே அதிகம். ஆனால் ட்விட்டரை ஒப்பிட்டால் ஃபேஸ்புக்கில் தீவிர வெளிப்பாடு குறைவு என்றே தோன்றுகிறது. இணையத்தின் வாசகர்கள் பெரும்பாலும் ஒற்றைவரி இரட்டைவரியோடு நிறுத்திகொள்பவர்கள் என்கிற குற்றச்சாட்டிற்கு பெருத்த உதாரணமாய் ஃபேஸ்புக்கையேக் கூறவேண்டும். நிலைச்செய்தி என்கிற குறுஞ்செய்திகளைப் படிப்போரே அதிகம். ஆனால் குறைந்த அளவில்தான் என்றாலும் தீவிர விவாதங்கள் ஃபேஸ்புக்கில் நடப்பதையும் சுட்டாமல் போவதும் நியாயமில்லை. எல்லாவற்றிலும் கடைசியில் எஞ்சுவது தனிநபரே என்பதுபோல் விவாதிக்கும் பொருளும் நபர்களையும் சார்ந்தே விவாத்த்தின் தீவிரமும் விளங்குகிறது. 

கிட்டத்தட்ட இறுதி மூச்சை இழுத்தபடி இருக்கும் கூகுள் பஸ் என்பது, கூடி விவாதிக்க ஆகச்சிறந்த இடம் எனினும் இரண்டாவது மூன்றாவது உரைக் கீற்றிலேயே விவாதத்தின் தீவிரத்தை இழக்கவைக்க உற்சாகத்துடன் கிண்டலும் கேலியுமாய் ஓடி வருவோரே ஏராளம். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. வேலை அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இடையிடையில் இளைப்பார எட்டிப் பார்ப்போரே அநேகர். அவர்களிடம் தீவிரத்தை எதிர்பார்ப்பது அறிவார்த்த மடத்தனம்.

இவையனைத்தையும் கபளீகரம் செய்து ஓரிடத்தில் கொண்டுவர கூகுள் பிளஸ் முயற்சிக்கிறது. வியாபாரப் போட்டியின் காரணமாய் எழுத்தோடு சேர்ந்து ட்விட்டர், புகைப்படம் போட வழிசெய்கிறது. ஃபேஸ்புக் பிளாகை சாப்பிட, கட்டற்ற இடம்கொடுத்து எவ்வளவும் எழுதிக்கொள் என்கிறது.

ஆனால் இவையனைத்தும் வலைத்தளத்தில் எழுதி வெளியிடப்பட்டிருப்பதை சுட்டியின் மூலம் அறிவிக்கப் பேருதவியாய் இருக்கின்றன.

ஒழுங்கமைதியை மேற்பார்வையிட ஆசிரியர்குழு இருப்பதன் காரணத்தால் அச்சுப் பத்திரிகைகளில் பக்கச் சார்புகள் இருப்பினும் அடிப்படை தரம் பேண இருக்கும் வாய்ப்பு இணையத்தில் இல்லாதது பெரும் குறை என்றே கூறவேண்டும். 

அச்சுப் பிரதி, எழுதப் பட்டிருப்பதைப் பற்றி,  ஆரம்ப வாசகனிடம் ஏற்படுத்தும் ஆழ்மன அங்கீகாரம் அளப்பரியது. இணைய எழுத்து அறிமுகமில்லா தொடக்கத்தில் இளக்காரத்தையே எதிர்கொண்டாக வேண்டி இருக்கிறது. எதுவுமே தொடர்ந்த இயக்கத்திலும் இருத்தலிலும் மட்டுமே வலுப்பெறும் என்பது விதியாய் இருக்கையில் இணையம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?

கையளவிலான எழுத்தாளர்களைத் தவிர, பெயராக நிலைத்துவிட்ட பெரும்பாண்மைப் படைப்பாளிகளின் தளங்கள் வெளிப்பாடுகளாய் இல்லாமல் வெறும் பிரதிபலிப்புகளாய் எஞ்சி நிற்பது ஏமாற்றமே. 

இணையத்தின் இலவச வாசிப்பு புத்தக விற்பனையை பாதிக்கும் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதற்காக, வெள்ளெழுத்துக் கண்ணாடிகளின் விற்பனை அமோகமாகட்டும் என்று மந்திரித்துத் தாயத்து கட்டிக்கொள்ள முடியுமா என்ன? வருங்காலத்தில், கருவிலிருக்கும் உருவம், சுருண்டு தட்டச்சியபடியே வெளியில் வந்தாலும் வியப்பில்லை. 

இன்னும் இன்னும் என்று இணைய வாசிப்பு எதிர்காலத்தில் பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்பு, அது இலவசமாய்க் கிடைக்கிறது என்பதால் மட்டுமே அன்று. அந்நியப் பணத்தை சதா உருமாற்றிக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சொந்த வீட்டார் போலவே, பதிப்பகங்களும் ஏதோ வெள்ளைக்காரனுக்கு விற்பதுபோன்ற பாவனையில் பன்மடங்கு விலையேற்றி விற்பதும் ஒரு காரணம். அப்பித்தப்பி வாங்கிய அச்சுப் பிரதிகளை விமானத்தில் எடுத்துச் செல்வதற்கும் திரும்பக் கொண்டு வருவதற்கும் என்று சுக்குக் காப்பணம் சுமைகூலி முக்காற பணம் என்று தண்டம் அழவேண்டி இருப்பதை கணினிக்குள் எப்போதும் விழித்தபடி பார்த்திருக்கும் இணையத்தின் இளிப்பு இன்னொரு காரணம். 

அந்நிய மண்ணில் ஆயிரம் வசதிகள் கிடைத்தாலும் வயிற்றைக் கடந்த மனம், தன் அடையாளத்தைத் தன் மண்ணிலேயே தக்கவைத்துக்கொள்ளப் பார்ப்பது இணைய வாசிப்பிற்கான அதி முக்கிய காரணமாகும். 

அச்சுப் பத்திரிகையில் வெளியாகி புத்தகமானால்தான் அங்கீகாரம் என்கிற,தற்கால யதார்த்தத்தை முற்கால தலைமுறையின் மூடநம்பிக்கையாய் ஆக்கப்போகிற எதிர்காலம் தொலைதூரத்தில் இல்லை.

நன்றி: காலச்சுவடு ஜனவரி 2012