Friday, January 27, 2012

பிணவறைக் காப்பாளனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

ஜெய்பூர் இலக்கிய விழாவில் தூரதூர தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரிகளும் மார்க் கீப்பர் படித்துவிட்டு ரோஜா மாலை துலிப் மலர்களும் கையுமாக நிற்க, தற்காலிக ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு நீட்டி நீட்டிக் கழுத்திலும் கையிலும் சுளுக்கு பிடித்துக்கொண்டுவிட்டதாம். morgue keeper: digital story  January 22nd, 2012 

“இங்கே வந்திருக்கும் மற்ற எழுத்தாளர்களைப் போல் நான் ஆக்ஸ்ஃபோர்டிலோ கேம்ப்ரிட்ஜிலோ செய்ண்ட் ஸ்டீஃபன்ஸிலோ படித்தவன் அல்ல; நான் ஒரு கல்லூரி ட்ராப் அவ்ட்” என்று சொல்லிக்கொள்கிறார். அட சாரு இதிலும் நம்மைப்போலவே டிகிரி இல்லாத கேஸ்தானா? டிகிரி இல்லாததால்தானே நமக்கு வேலையில் சேரும்போதே இன்ஸ்பெக்டரோ  குறைந்தபட்சமாய் உயர்நிலை குமாஸ்தாவோகூடக் கிடைக்கவில்லை. டிகிரி இல்லாத இவருக்கு மட்டும் எப்படி எடுத்தவுடன் ஸ்டெனோ உத்தியோகம் கிடைத்தது? அந்தக்காலத்தில் Steno என்பது UDCக்கு இணையானதல்லவா? யூடிசி போலவே ஸ்டெனோவுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி டிகிரி ஆயிற்றே? அப்படியானால் ஒருவேளை அதிலும் நம்மைப்போலவே கடைநிலை குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்து பிறகு ஸ்டெனோகிராஃபி படித்து அலுவலகத்தின் உள்முகத் தேர்வில் பாஸாகி ஸ்டெனோ ஆகியிருப்பாரோ? இல்லையெனில் ஒருவேளை, தில்லியில் தி.ஜா மெட்ராசில் பிரமிள் என்று பாசப்பிணைப்போடு பழகியதும் சு.ராவுடன் சம்பாஷித்ததும்போல ”நான் ஒரு கல்லூரி ட்ராப் அவ்ட்” என்பதும் மேட் இன் ஜெய்ப்பூரோ என்னவோ? சாருவின் கல்வித் தகுதியைப் புலனாய அண்ணாசாலை தபால் அலுவலகத்தில் RTI போட்டால், அதுதான் இலக்கியத்திற்காகத் தகவலறியும் சட்டத்தின் கீழ் போடப்பட்ட முதல் விண்ணப்பமாக இருக்கும்.

@mdmuthuM.D.Muthukumaraswamy
சாரு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது
21 Jan via web Favorite Retweet Reply

சாருவைப் பாராட்ட வரிசையில்  முண்டாவிட்டால் தமிழ் நண்டு என்கிற பட்டம் கிடைத்துவிடுமே என்கிற பீதியில் சாருவைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை தேடிப்பிடித்தேனும் சொல்லிவிடவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் கூகுளைத் தட்டினேன். வந்து கொட்டியதெல்லாம் எக்ஸைல் தமிழச்சி சாட் தவிர முதல் பக்கத்தில், சாரு எழுதியதென்று உருப்படியாய் ஏதும் கிடைக்கவில்லை. நித்தி வைத்த சூனியத்தில் வைரஸ் தாக்கி சாருவின் இலக்கிய எழுத்தெல்லாம் சூ மந்திரக்காளியாகிவிட்டதோ என்கிற பதட்டத்துடன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி சாருஆன்லைன்.காமிலேயே தேடத் தொடங்கினேன்.
அப்படித்தான் சாருவின் இந்தப் பிணவறைக் காப்பாளன்  June 30th, 2010 கிடைத்தது. சிறியதாக வேறு இருந்ததா சைஸ் பிரச்சனை கூட இல்லை சிலாகித்துவிட்டுத்தான் மறுவேலை என்று படிக்கத் தொடங்கினேன். 

<(இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் முழுக் கற்பனையே. உயிரோடு இருக்கும், அல்லது உயிர் இல்லாமல் இருக்கும் யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவதாகத் தோன்றினால் அது வெறும் தற்செயலானதே)>

என்னைய்யா இது, சுவரில் என்பதை மட்டும் சுவற்றில் என்று எழுதுவார் மற்றபடி சாருவிடம், எஸ்.ராவின் ’தமிழ்’ தப்படிப் பிரச்சனையில்லை என்றல்லவா இவ்வளவு காலமும் எண்ணிக்கொண்டிருந்தோம்,  <சம்பவங்கள், பெயர்கள் யாவும் ...குறிப்பிடுவது அல்ல> என்று ஒருமை பன்மையை பன்னும் டீயுமாக அல்லவா பேரம் பேசுகிறார் எனத்தோன்றியது. பாராட்டியே தீருவது என்று எம்டிஎமுக்குப் போட்டியாக முடிவெடுதுவிட்டு பாதியில் பின்வாங்க முடியுமா? என்ன இருந்தாலும் பெரிய படிப்பு படித்த எம்டிஎம்மின் நாசூக்கு நமக்கெல்லாம் வருமா? சாருவின் எழுத்தின்மேல் பாதுகாப்பாய் காற்றுகூடப் பட்டுவிடாமல் ஜெய்பூருக்கு சாரு என்னவோ ஜானவாச ஊர்வலம் போயிருப்பதுபோல் பொத்தாம் பொதுவாய்ப் பாராட்டி வைக்க எவ்வளவு படிப்பு படித்திருக்கவேண்டி இருக்கிறது.

<சுமார் 37 வயது மதிக்கத்தக்க, தனியாகத் துண்டிக்கப்பட்ட ஆணின் தலை தனியாகக் காணப் பட்டது.>

தனியாகத் துண்டிக்கப்பட்ட தலை தனியாக இருப்பதில் என்னையா விசேஷம்?

எல்லாம் நம் தலையெழுத்து,எப்போதும் உப்பு விற்கிறோம் என்கிற அவப்பெயரைத் துடைத்தெரியப் புறப்பட்டால் இப்படியா தப்பு, மழையாகக் கொட்டவேண்டும்.

<அதைப் பரிசோதித்து ஆய்வு செய்ததில் தலையின் 4வது மற்றும் 5வது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பு, அதைச் சுற்றியுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் எல்லாம் வெட்டிய நிலையில் காணப்பட்டன.>

அடக்கொடுமையே, பெயில் ஆகியே தீருவேன் என்று அடம்பிடித்தபடி ஒரு எழுத்தாளன் தீர்மானமாய் எழுதிவிட்டு நான் ஒரு கல்லூரி டிராப்-அவுட் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை? பிறவிக்கோமாளித்தனம் பின்பாதி வயதில் பின்னும் பிரகாசமடையுமோ?

<தலையின் 4வது மற்றும் 5வது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பு,
அதைச் சுற்றியுள்ள தசைகள்,
ரத்த நாளங்கள்,
நரம்புகள்,
உணவுக் குழாய்,
மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம்
எல்லாம் வெட்டிய நிலையில் காணப்பட்டன.>

முதல் வரியிலேயே  தனியாகத் துண்டிக்கப்பட்ட தலை தனியாகக் காணப் பட்டது  என்று எழுதிவிட்டு இரண்டாவது பத்தியில் போய் மகத்தான ஆராய்ச்சி முடிவு போல இது என்ன கமா பட்டியலாய்,  எல்லாம் வெட்டிய நிலையில் காணப்பட்டன என்று எழுதுவது? எக்ஸைலின் மளிகைக்கடைப் பட்டியலுக்குப் பார்த்த வெள்ளோட்டமோ?

இப்படியும் தத்துபித்தென எழுதிவிட்டு, இலக்கியக் கல்லூரியில் அட்மிஷனே கிடைக்கவில்லை என்று உள்ளூரில் புலம்பல். வெளியூரில் டிராப் அவுட் ஆனதற்குப் பெருமிதம். நிதர்சனம் என்னவென்றால் எக்காலத்திலும் சுலபமாய் டிஸ்மிஸ் ஆகிவிடக்கூடிய எழுத்து என்பதுதான். போர்ஹேவை ஹோர்ஹே (ராயர் கஃபேவும் கஃபே ஹஃபாவும்) என்று சுதி சுத்தமாகச் சொன்னால் மட்டும் போதுமா? பனித்துளியில் உலகைக்காட்டும் ஹோர்ஹேவின் சொற்சிக்கணத்திற்குத் தமிழ் வாரிசாக நிற்பது நாமில்லை வேறு யாராவா?

<சமீப காலத்தில் தான் எனக்கு உங்கள் எழுத்து அறிமுகமானது. ஆனால் அதற்குள் நீங்கள் என் பிரியமான தோழன் ஆகி விட்டீர்கள். எப்படி நம் நட்பு முறியும். நீங்கள் எனக்கு நண்பர் என்பது என்னால் நம்பக் கூட முடியவில்லை. இப்போதும் இது ஒரு கனவு தானோ என்று என்னை நானே கிள்ளிப் பார்ப்பதுண்டு. முதலில் உங்கள் கடிதத்தைப் பார்த்து நான் நிஜமாகவே உன்மத்தை ஆகி விட்டேன்.>

கஷாயம் போடப் பயன்படுத்தும் சித்தரத்தை போல உன்மத்தை என்பதென்ன  புதிய மூலிகையா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு நடுவில் சம்மந்தமே இல்லாமல் சாரு தளத்தில் எழுதி வெளியிடப்படும் பிராண நாதா - பிரிய சகி போல இது என்ன பெண் பேச்சு? ஓ! இதுதான் போஸ்ட்மார்டனிஸமோ?

அது சரி எப்போதும் இந்தக் கிழவரைப் பார்த்து 17 வயசுப்பெண்களாகவே ஈஷவருகிறார்களே? தன்னைப் பெரிய குழல்விளக்காகக் காட்டிக்கொள்ள, கனவுகண்டபடி வந்து விழும் விட்டில் பூச்சிகளைக் கவரவேண்டி, எப்போதும்  அப்போதுதான் பூப்பெய்திய புத்தம்புதுப்பூவாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்த எம் ஜி ஆர் காலத்து அரதப்பழைய உத்திக்குப் பெயர்தான் பின் நவீனத்துவமா? .

பொதுப்பார்வைக்கு ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாகவும் அத்தியாயங்களுக்குள்ளான ஊடிழை ஒரே காலகட்டமாகவும் வைத்து எழுதப்பட்ட அசோகமித்திரனின் இன்று நாவல் கணையாழியில் வெளியான காலம் என்ன? 80ஆ? 81ஆ? அந்த வடிவத்தை சின்ன சைஸில் வெளியிட 2010ஆ? முப்பது வருடத்துப் பழைய மொந்தை.

அரிசியில் விரல் அளைந்து கல் பொறுக்குவதுபோல நம் சவுகரியத்திற்கு முதலாவது ட்ராக்கையும் இரண்டாவது டிராக்கையும் இப்போதைக்குத் தனித்தனியாக தந்தூரிக் கம்பியில் கோர்த்துத் தொங்கவிடுவோம், பின்னால் சேர்த்துப் பிடிக்க வசதியாக.

<வலது தாடையில் வலது கண் புருவத்திற்கு வெளிப்புறமாக 1.5 செ.மீ. x 1.5 செ.மீ. அளவு எலும்பில் ஆழம் 3 செ.மீ.வரை சென்றிருந்தது வெட்டுக்காயம். அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது அதன் கீழ் உள்ள தசைகள், ரத்தநாளங்கள், நரம்புகள் மற்றும் கீழ்த்தாடையின் புறப்பகுதி எல்லாவற்றிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.>

திரும்ப போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டா? சரி அது என்ன விவரணை?

<வலது தாடையில் வலது கண் புருவத்திற்கு வெளிப்புறமாக>

என்னது! கண் புருவத்திற்கு வெளிப்புறம் இருக்கிற பக்கவாட்டுப் பகுதிக்குப் பெயர் தாடையா? அடக்கஷ்டகாலமே? அது நெற்றிப்பொட்டு, கன்னப்பொறி என்றல்லவா பள்ளியில் பால பாடம்? சினிமாப் படங்களில் கூட அங்குதானே உடனடியாய் சாவதற்கு சுட்டுக்கொள்வார்கள்? புருவத்தை ஒட்டி இருக்கிற இடத்திற்கு இங்கிலீஷில் என்ன பெயர்? Temple

தாடை என்றால் எதப்பா?

தாடையும் நெற்றிப்பொட்டும் ஒண்ணாப்பா? சிவசம்போ!

<திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு சிற்றூர் செந்தட்டி. அங்குள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்குள் தலித்துகளுக்கு அனுமதி இல்லை. அனுமதி கேட்டதால் இரண்டு தலித்துகள் கொலை. செய்தியை விலாவாரியாக சேகரித்து வெளியிட்ட போது இதோடு மேலவளவு முருகேசனின் கொலையையும் சேர்த்து விடு என்றார் எடிட்டர்.

பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள மேலவளவு என்ற ஊரில் வெட்டிக் கொல்லப்பட்ட ஒரு தலித் இளைஞன் முருகேசன். இப்போது அந்தக் கேசை எடுத்து ஆராய்ச்சி செய்து வெளியிடுவதை விட முருகேசனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையே வெளியிட்டு விடலாம் என்று தோன்றியது பெருமாளுக்கு.>

இந்த இடத்தை ப்ரீதம் கே சக்ரவர்த்தி ஏன் இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்?

In Chenthatti, a tiny town in Sankarankoil district in Thirunelveli, there is a Muppitathi Amman temple, which Dalits are not allowed to enter. Two Dalits who demanded to be let in were subsequently murdered. An exhaustively researched report on this was prepared, and when it reached the editor’s desk, the editor decided to flesh out the story by digging up further details on the murder of Melavalavu Murugesan. Murugesan was a young man who had been hacked to death 12 years earlier in Melavalavu, a village near Madurai. Perumal thought it would be wiser not to rake up the case at this point; at most, they might publish the old post-mortem report.

<இதோடு மேலவளவு முருகேசனின் கொலையையும் சேர்த்து விடு என்றார் எடிட்டர்.>
and when it reached the editor’s desk, the editor decided to flesh out the story by digging up further details on the murder of Melavalavu Murugesan.

இரண்டும் ஒன்றா?

<இப்போது அந்தக் கேசை எடுத்து ஆராய்ச்சி செய்து வெளியிடுவதை விட முருகேசனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையே வெளியிட்டு விடலாம் என்று தோன்றியது பெருமாளுக்கு>
<Perumal thought it would be wiser not to rake up the case at this point; at most, they might publish the old post-mortem report.>

இரண்டும் ஒன்றா?

உள்ளூருக்கு ஒன்று வெளியூருக்கு ஒன்று என இரண்டு வெர்ஷன்களா? எது ஆசிரியனின் உண்மையான வெளிப்பாடு? தமிழில் சாதாரணமாக போகிற போக்கில் சொல்வதுபோல எழுதப்பட்டிருப்பது ஆங்கிலத்தில் இத் தருணத்தில் அதைக் கிளறுவது புத்திசாலித்தனமல்ல என்று நினைத்தான்; அதற்கு பதிலாகப் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடலாம் என்று நினைத்தான் என்றால் எழுத்தாளனும் பத்திரிகையாளனுமான ஒருவன் அரசியல் நிலைப்பாடு எடுக்கிறான் என்றல்லவா பொருள்? அதற்கேற்ப அவனது பாத்திரம் மாறிவிடாதா? இது ’தான்’எழுதியதே இல்லை மொழிபெயர்ப்பாளர் ’தானாக’ எழுதிக்கொண்டது என்கிற பட்சத்தில், அதுதான் சிறந்த மொழிபெயர்ப்பு அதனாலதான் தனக்கு வெளியூரிகளில் சென்றவிடமெல்லாம் சிறப்பு சேற்கிறது என்றுவேறு எழுதிக்கொண்டால், சாரு நிவேதிதா மொக்கை ப்ரீதம் கே சக்ரவர்த்தி துல்லியமான வெளிப்பாடு கைவரப்பெற்ற எழுத்தாளர் என்றாகிவிடாதா?

<என் சிறுகதை ஒன்றை யாராவது மொழிபெயர்த்துத் தர முடியுமா? ஆங்கிலம் மார்க் கீப்பரின் தரத்தில் இருக்க வேண்டும்.>

என்னுடைய அட்டு அடாசை எல்லாம் பட்டி பார்த்து டிங்கரிங் பெயிண்டிங் பண்ணி ஆங்கிலத்தில் நல்லவிதமாக செய்துகொடுங்கள் என்பதை நாசூக்காகவும் சூசகமாகவும் சொல்கிறாரோ அல்டிமேட் ரைட்டர்?

<என் நண்பனிடம் அதை வெளிப்படுத்தினேன். அடுத்த நாள் அவனிடமிருந்து கிடைத்தது நிறைய திட்டு தான். அவனை நான் பூனை சுரண்டுவது போல் சுரண்டி விட்டேனாம். அவன் உடம்பு பூராவும் என் நீண்ட நகங்களின் அடையாளங்கள். அவனுடைய சிவப்புத் தோல் இன்னும் சிவப்பாகி ரத்தம் வழியும் அளவிற்கு நொந்து போயிருந்தது. பாவம். அவனுக்கு உங்கள் பெயரைக் கூட ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாது. பச்சைக் கண்ணன். ஆம்ஸ்டர்டாம்காரன். பரிதாபமாக அவனை நான் பார்க்க அவனும் என்னைப் பரிதாபமாகப் பார்த்து கேட்டான். உனக்குப் பெருமாள் மீது சோஃப்ட் கார்னர் தொடங்கி விட்டதா என்று. ஒரு நிமிடம் பதில் சொல்ல முடியவில்லை.>

பெருமாள் என்கிற பத்திரிகையாள எழுத்தாளரின் அறச்சீற்ற எழுத்தாய் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு 17 வயது சாந்தினிகளை சாட்டில் மடக்க கிழபோல்ட் எழுத்தாளர்களுக்குக்கூட ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்பதுபோல் மேலவளவு முருகேசன்தான் எவ்வளவு உபயோகமாய் இருக்கிறார்.

<இடது கன்னத்தில் இடது புறப்பகுதிக்கு 2 செ.மீ. மேலே 1.5 செ.மீ x 1 செ.மீ. அளவு ஆழத்திற்கு ஒரு வெட்டுக்காயம் காணப் பட்டது. அந்தக் காயத்தில் அனைத்து வெட்டுக்காயங்களின் ஓரங்கள் சீராகக் காணப்பட்டன.>

சீரான வெட்டுக்காயங்கள் காணப்பட மேலவளவு முருகேசனை ஆபரேஷன் தியேட்டரிலா வைத்து அறுத்தார்கள். ஓடும்பேரூந்தில் நடந்த கொடூரம் அல்லவா?அது WEDNESDAY, JUNE 30, 2010 மேலவளவு போராளிகளின் நினைவு!

<அவனிடம் சொன்னேன், நான் அவரின் எழுத்துக்களை துலிப் பூக்களை விட ரசிக்கிறேன். ஏறக்குறைய அரோரா போரியலிஸ் அளவிற்கு. ஒருக்கணம் என்னை விழித்துப் பார்த்தான். பிறகு அவனுக்கே உரித்தான புன்னகையுடன், நோ ப்ரோப்ளம் டியர் என்றான்.>

மேலவளவு முருகேசன் தெஹல்காவுக்கு, அங்கே துலிப் பூக்கள் அரோரா போரியலிஸ் என்றெல்லாம் ஆங்கிலத்திலிருந்து பிட்டிடடித்தால்தானே நுணிநாக்கு சாந்தினிகளை சாட்டில் கவர் பண்ண முடியும். அல்லது அப்படி வந்து விழுவதாக காட்டிக்கொள்ள முடியும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டே கொஞ்சம் வெயிட பண்ணு. தூண்டிலில் மாட்டவேண்டிய மீனுக்காக முள்ளில் புழுக்களைக் கோர்க்த்துக்கொண்டிருக்கிறது புழு.

<அப்சொல்யூட் வோட்கா நான்கு ரவுண்டை விழுங்கி விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பெருமாளின் உணர்வுகள் உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் இருந்ததால் அவனால் ஒருக்கணம் ஆஃபீஸில் இருக்கிறோமா அல்லது தூங்கிக் கொண்டிருக்கிறோமா என்றே நிதானிக்க முடியாதபடி இருந்தது.>

உலகம் இருக்கிற போக்கு, பாவப்பட்ட எழுத்தாளனைத்தான் வேலை நேரத்திலும் எப்படிக் குடிக்க வைக்கிறது? காதல் தோல்வி அல்லது காமவேள்வியெல்லாம் பாவம் தத்துவச்சிக்கலாய் அரைமயக்க நிலையில் இருக்க வைத்து எக்ஸிஸ்டென்ஷியல் பிரச்சனையை உண்டாக்கி எப்படி அலைக்கழிக்க வைக்கிறது.

<எல்லாம் ஒரு Chat-இல்தான் ஆரம்பித்தது. சாந்தினி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். கல்லூரி முதலாண்டு மாணவி. ஐயோ? ஆமாம், வயது 17 என்றுதான் சொன்னாள். அடடா, அப்படியானால் இது ஒரு பீடஃபைல் கதை என்ற விமர்சனம் வருமே? அதற்கு அவன் என்ன செய்வான்? அவள் சொன்ன வயது அதுதான். பெருமாளுக்கு எதையும் கற்பனையாக இட்டுக்கட்டி எழுதத் தெரியாது. அவன் பத்திரிகைக்கு செய்தி எழுதினாலும் சரி, கதை எழுதினாலும் சரி. அதில் நிஜம் மட்டுமே இருக்கும். இந்தக் கதையை அவன் இன்னும் ஒரு ஆண்டு கழித்து எழுதியிருந்தால் இந்தப் பழியிலிருந்து அவன் தப்பியிருக்கலாம்.>

பிறவியிலேயே வாயில் வைத்துத் தைத்துவிட்ட சீவாளி. சுயபுராணம் தவிர வேறு எதையுமே வாசிக்கத் தெரியாத பீப்பீ.

<பெருமாளுக்கு எதையும் கற்பனையாக இட்டுக்கட்டி எழுதத் தெரியாது. அவன் பத்திரிகைக்கு செய்தி எழுதினாலும் சரி, கதை எழுதினாலும் சரி. அதில் நிஜம் மட்டுமே இருக்கும்.>

யதார்த்த பொய்களைப் புனைவுகளில் உண்மைப் பதார்த்தம்போல் பறிமாற இவ்வளவு எளியவழி இருக்கிறதா சபாஷ்.

<இந்த வயதிலேயே சாந்தினிக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தான். இப்போது பெருமாள் இரண்டாவது. எடுத்த எடுப்பிலேயே அவன் உண்மையைச் சொல்லி விட்டான். இதோ பார், உன் தந்தையை விட எனக்கு வயது அதிகம் என்று>

உண்மை? வாழ்க்கையிலேயே இல்லாத விஷயத்தை, எழுத்தில் அதுமட்டுமே இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள வேண்டியக் கருமாந்திரத்திற்காகவே அப்சால்யூட் ஓட்கா இன்னும் நாலு ரவுண்ட் உள்ளே செல்லவேண்டாமோ?

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமாளே!

எவனோ குடித்து முடித்து காலிசெய்து வீசிய வெளிநாட்டு பாட்டில்களில் உள்ளூர் சாராயம் சப்பி கலக்கல் இவற்றைப் பின் நவீனத்துவம் என்கிற லேபிளின்பேரில் இட்டு நிரப்பித் தானும் உயர் தரமான குடிகாரன்தான் எனக் காட்டிக்கொண்டு போஸ் கொடுப்பதற்கே தமிழ் எழுத்தாளன் எவ்வளவு மெனக்கெடவேண்டி இருக்கிறது. வார்னிஷை எடுடா அந்த டால்மோர் பாட்டிலில் இருந்து.

<யாருக்கு வேண்டும் உன் வயது; நீதான் வேண்டும் எனக்கு என்று வசனம் எழுதி அந்த வயதுப் பிரச்சினையை ஒரே அமுக்காக அமுக்கி விட்டாள். சாந்தினிக்கு அவன் குத்து மதிப்பாக ஒரு 35 வயது மதிப்பிட்டிருந்தான். கணினி யுகத்தில் இதெல்லாம் சகஜம். நேரில் பார்க்கும் வரை உண்மையான வயதுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால் நேரில் பார்த்தபோது அவள் அரட்டையில் சொன்ன விஷயங்களில் எதுவும் பொய் இல்லை என்று கண்டு கொண்டான்.>

பரவாயில்லை உலகில் எழுத்தாளனைத் தவிர மற்ற சாதாரண மக்கள் பெரிய அளவுக்குப் பீலா விடுவதில்லை என்கிற உண்மை வெளிப்படும் இந்த இடம் ஆறுதலை அளிக்கிறது. ஆனால் இந்தக் கதை ப்ரிமோனிஷன் போல எதிர்காலத்தில் நடக்கப்போவதை சுட்டிக்காட்டிய காரணத்தால் சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் சேரவேண்டியதோ? அல்லது சாட் மேட்டரில் சிக்கி இன்னும் ஓராண்டில் சிரிப்பாய் சிரித்து சிந்தி சீரழிந்து, அதை சரிக்கட்ட சபரிமலைக்கு இருமுடிகட்டி ஏறப்போவதை தீர்க்கதரிசனத்தோடு எழுதி இருப்பதால் ஆன்மீக வகையில் சேருமா?அல்லது இளம்பெண்ணின் ஆதங்கமாய் வருவதால் ஆத்தும சரீர சுகமளிக்கும் விசேஷக்கூடல் என்கிற வகையில் சேருமா?

<பெருமாளின் மனைவி மீரா ஒரு பதினேழு வயது பையனுக்கு ’ஹீலிங்’ கொடுத்துக் கொண்டிருந்தாள்.>

எழுத்தாளரே சொல்லிக்கொள்வது போல அவருக்குதான் எத்துனைக் கற்பனை வறட்சி. அவரிடம் சாட்டில் வந்து ‘தொந்தரவு’ செய்யும் பெண்ணுக்கும் 17 வயது ஆத்துக்கார அம்மாளிடம் ஹீலிங் செய்துகொள்ள வரும் பையனுக்கும் 17 வயது. பிணங்களாக மேலேவிழுந்து கொண்டிருக்கப் பதுங்கு குழியில் அமர்ந்திருக்கும் சாந்தனுக்கும் 17 வயது.. இந்தப் 17 அந்த மே 17ன் குறியீடு என்று பிச்சைக்கார ரசிகக்குஞ்சு கொட்டை தொண்டைக்கு ஏறிக்கொள்ள போடும் கூச்சலுக்கு சாரு தன் தளத்தில் ’படித்ததில் பிடித்தது’ என்று சுட்டி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவ்த்ற்கில்லை.

<மத்தியதர வர்க்கக் குடும்பத் தலைவிகளின் அடையாளம் இந்தியாவில் என்னவாக இருக்கிறது?>

கதை இங்கிருந்து சிந்தனை தளத்திற்கு மேலெழும்புகிறது.

<இப்படிப்பட்ட பெண்களைப் பிடித்து ஆச்சாரியா பயிற்சி கொடுத்து 4000 பேருக்கு முன்னால் மேடையில் நடுநாயகமாக அமரச் செய்து பிரசங்கம் செய்யச் செய்தால் பிறகு எந்தப் பெண்ணுக்குத்தான் குடும்ப அமைப்பின் மீது மரியாதை இருக்கும்? இந்த ஆன்மீக குருவைப் பற்றிய சரியான அறிமுகம் மட்டும் கிடைத்து விட்டால் இந்தியாவில் உள்ள அத்தனை நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் அவர் பின்னே ஓடி விடுவார்கள் என்பதில் பெருமாளுக்கு சிறிதும் சந்தேகம் இல்லை.>

அட அட அடா பெண்களின் மன அழுத்தங்கள் பற்றி ஆசிரியருக்குதான் எத்துனை அழுத்த அக்கறை.

எழுத்தாளனின் அக்கறை உலகளாவியது அல்லவா? இதோ ஆஜர்.

<இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படைகள் ஆயிரக்கணக்கான மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திப் பதுங்கியிருக்கிறது.>

<படைகள் - பதுங்கியிருக்கிறது> ஆங்கில மொழிபெயர்ப்பு மூலத்திற்கு உண்மையாய் அப்படியே பன்மை ஒருமை மயக்கத்துடன் இருக்கிறதா அப்படியே ஆங்கிலப் பத்திரிகையில் வெளியாகி ஜெய்பூர் விழாவிலும் விநியோகிக்கப்பட்டதா? அல்லது மொழிபெயர்ப்பாளரே சொந்தமாக,’மொழுகி’ மெருகேற்றிவிட்டாரா? பொதுவாக தமிழில் எட்டு ஊர் வாந்தியாக ஈமொய்க்கக் கிடந்து நாறுவதுகூட நல்ல ஆங்கிலத்தில், நட்சத்திர ஓட்டல் வண்ண அலங்கரிப்பாய் தோற்றமளிக்கும்.

THE WAR was drawing to a close. The last remnants of the liberation force were using thousands of civilians as human shields.

நாகேஸ்வர ராவ் பார்க்கில் புல்தரையைக் காலால் திலாவினான் என்று திஜா மோகமுள்ளில் எழுதியதை வேறு மொழிக்குப் பெயர்க்கப்பார்த்தால் குப்பை அல்லவா மண்டுகிறது. மண்ணுக்கும் மனதிற்கும் சம்மந்தமில்லாத மொண்ணை எழுத்தை மொழிபெயற்பதுதான் எவ்வளவு எளிது.

எழுத்தாளன், வாழ்வை ரத்தமும் சதையுமாக எழுதுவதுதான் முக்கியம். உண்மையான அக்கறை எதுவுமின்றி கையில் அகப்பட்ட எவனுடைய ரத்தத்தையும் சதையையும் வைத்து உலகத்தை எத்துபவனெல்லாம் எழுத்தாளனா?

<ராணுவம் சுட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்கிறது. வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறாள். குழந்தை இறந்து போயிருக்கிறது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றிக் கொண்டும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு வழி எதுவும் இல்லை.>

எல்லா ஜோடனையும் விற்பனைக்கே. ஈழத்துப் போர் பின்னணியில் அடுத்தடுத்து இரண்டு சிறிய பாராக்கள். முதலாவதில் இழந்த குழந்தையை இறுகப்பிடித்தப்டி குழந்தையை விடவும் முடியாமல் எடுத்துச் செல்லவும் முடியாமல் தவிக்கும் தாய் என்கிற சித்திரம் காட்டப்படுகிறது. அடுத்த பத்தியில், அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. 

இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் இருக்கும் இடம்தான் எழுத்தாளனுக்கு உரிய இடம். அந்த இடம் இந்தக் கதியில் காலியாகவே இருக்கிறது என்றால் அவன் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்க்காக மட்டுமே அந்த சம்பவத்தைப் பயன்படுத்தி இருக்கிறான் மற்றபடி ‘அந்த நிலையில்’ அவன் ’வாழவே’ இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இறப்பு என்பது யதார்த்த நிஜம். அறிவுக்கு அது தெரியும் என்றாலும் மனமும் உணர்வும் அதை ஏற்க முடியாமல் புரளும் அவஸ்தையே இலக்கியத்தின் கள்ம். அதைப்பற்றி எழுத முடியாதவன் கவனமாய் அதைத் தவிர்ப்பவன் எப்படி இலக்கியவாதியாக இருக்க முடியும்?

ஆரம்பகாலப் படங்களில் கமலகாசனுக்கு அழும் காட்சிகளில் நடிக்கவராது. அப்படியான தருணம் படத்தில் வந்ததும் பொசுக்கென முகத்தைப் பொத்திக்கொள்வார். 

2010ல்தான் இப்படி என்றில்லை. 1979ல் கணையாழியில் வெளியான சாருவின் ’முள் ’ளிலும் இதே கதைதான். அத்தையுடனான நெருக்கத்தைத் தொண்டையில் சிக்கிய முள்ளின் நெருடலாக பாவித்து எழுதிய கதை. அதில் அத்தையின் அண்மை எப்படி சித்தரிக்கிறார் எனப் பார்க்கலாம்.

<நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்....

அத்தை...

”ராஜா... நெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என் பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள். நெற்றி சுடுவதென்ன...? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்....>

அத்தையின் ஸ்பரிசத்தில் எழும் மனக்கிளர்ச்சியை எழுதியிருப்பதைப் பார்க்கலாமா?

<என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால்?

இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?>

நுட்பமான உணர்வுகளை அப்படியே அப்படியே என்று எழுதுவதுதான் இலக்கிய எழுத்தா?  அது எப்படியானது என்று எழுதி எழுதாமல் மெளனமாகவும் தொனியாகவும் காட்டுவதுதானே அய்யா எழுத்தை ஆள்பவனின் காரியம்.

1979லும் சரி 2010லும் கதைகளுக்கு இடையில தமிழ் எழுத்தாளனால் தமிழ் வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாமல் ஆங்கிலத்துக்குத் தாவுதல் அப்புறம் ஃப்ரெஞ்சு ஸ்பானிஷ் வார்த்தையடுக்குதலெல்லாம் என்ன விதமான அலட்டல்?  கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவனின் வானமேறி வைகுந்தத்திற்கு வழிகாட்டலா? லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் எவனோ இப்படித்தான் எழுதியுள்ளான் அது 8 மில்லியன் விற்றுள்ளது, அதையே நான் எழுதினால் குறை சொல்கிறார்கள் என்பதெல்லாம் இலக்கியக் காரணமா?

<அந்த ஆன்மீக குரு பற்றி மீராவிடம் சொன்னான். அவ்வளவுதான். ஒரே கணத்தில் மீரா spiritual activist-ஆக மாறிப் போனாள்.>

<ஆக்டிவிஸ்டுகளுக்கு – அது எந்தவிதமான ஆக்டிவிஸமாக இருந்தாலும் சரி – தனி நபர்கள் மீதான அக்கறை கிடையாது.>

என்னவிதமான இருப்பியல் தத்துவம் அடடா என்று சிலாகிக்கப்பார்த்தால் சிந்தி விழுவதோ சொந்த முற்றத்து புளித்துப்போன புலம்பல்.

<பெருமாள் ஒருமுறை வைரல் ஜூரத்தில் விழுந்து கிடந்த போது அவனை கவனித்துக் கொள்ள ஒரு நாதியும் இல்லாமல் இருந்தது. ஆசிரமத்தில் இருந்த மீராவுக்கு மெஸேஜ் கொடுத்தால் “கடவுளை பிரார்த்தித்துக் கொள்; அவர் உன்னை கவனித்துக் கொள்வார்” என்று பதில் மெஸேஜ் கொடுக்கிறாள். கடைசி வரையிலும் வரவில்லை. கடவுளும் சரி, மீராவும் சரி.>

காலத்துக்கும் அதே மாவுக்கரைசலில் சுயபுராண ஜாங்கிரி சுத்தும் யுவன் சந்திரசேகர் நினைவுக்கு வரவில்லையா?

<25 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் ஒரு கம்யூனிச அனுதாபியாக இருந்தான்.>

அவ்வப்போது பழைய பொய்க்குப் புது சிறகு முளைப்பது இயற்கைதானே.

<அவன் முதல் மனைவிக்கு அவன் தன் கம்யூனிசத்தின் சாற்றைப் பிழிந்து கொடுத்திருந்தான். அதைப் பருகிய அடுத்த கணமே அவள் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் ஆக்டிவிஸ்டாக மாறி அவனை விட்டுப் பிரிந்தாள்.>

80களில் ஆனந்தவிகடனில் வெளியான லா.ச.ரா கதையொன்று இப்படி ஆரம்பிக்கும் என்று நினைவு.

”பொய் பெருத்து விட்டது. வீட்டின் சுவர்கள் விரிசல்விட ஆரம்பித்திருந்தன.” இந்தக்கூறுப்படி இந்நேரம் சாரு வீடு இடிந்து குட்டிச்சுவராகி இருந்திருக்க வேண்டும்.

<தமிழருக்கான சுதந்திரமான பூமி என்ற கனவைச் சொல்லி பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலி கொடுத்த தலைவனின் முகத்தின் எதிரே மரணத்தின் நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்.>

தெஹல்கா ஆர்டருக்கு எழுதிய கதையல்லவா? <தெஹல்கா சிறப்பிதழில் அந்த சிறிப்பிதழுக்காகவே எழுதப்பட்ட கதை. > இந்திய அறிவுஜீவி கும்பலுக்கு அப்பீல்லாகும்படி எழுதுவதுதானே வெற்றி இலக்கியத்திற்கான இலக்கணம். குறிப்பாக இங்கிலீஷில் வெளியாகிறது எனும்போது இன்னும் கொஞ்சம் ஏறி அடிப்பதுதான் சாதுரியம்.

ஆயிரம் விமர்சனங்கள் எல்லோருக்கும் உண்டு. இன்றைக்கும் புலிக்காசில் புளியேப்பக்கூச்சல் விடுபவர்களைப் பார்த்து உண்டாகும் எரிச்சலுக்கு அளவே இல்லை. ஆனால் சுவாரசியத்திற்காக பொய் சொல்வது சுகக்கேடு. வில்லனாய் வாழ்ந்த வாழ்க்கையை எழுத்தாக்கும் போது ஹீரோவேடம் புனைந்துகொள்பவனுக்குப் தலைப்புலி பற்றி ’விமர்சிப்பது’ இருக்கட்டும் பேசக்கூட என்ன அருகதை இருக்கிறது?

<1996ஆம் ஆண்டு மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10.9.96 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த முருகேசன் உள்ளிட்டோர் மேல்சாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து மனுவை வாபஸ் பெற்றனர். பிறகு சமாதானக் கூட்டம் நடந்தது. மீண்டும் நடந்த தேர்தலில் ஓட்டுப் பெட்டிகள் களவாடப்பட்டன. மீண்டும் 31.12.96இல் நடைபெற்ற தேர்தலை மேல்சாதியினர் புறக்கணித்தனர். தலித் மக்கள் மட்டுமே வாக்களிக்க, முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 30.6.97 அன்று முருகேசன் உள்ளிட்ட 6 பேர் 30 பேர் கொண்ட ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.>

இங்கிலீஷ் புரட்சிவர்க்க வாசகனுக்கு வெறும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே புரியாமல் போய்விடுமோ என்கிற பதட்டத்தில் தலித் படுகொலைப் பின்னணி செய்தி ரிப்போர்டேஜாக.

ஓட்டுக்காக தலித் தலித் என்று தேர்தலையொட்டி அரசியல்வாதிகள் அனுதாபம் காட்டும்போது எழுத்தாளன் மட்டும் என்ன குறைந்து போனான், ரத்தத்தை எடுத்துப் பூசிக்கொண்டு ஆங்கிலத்தில் கொட்டையாய் நான் சிவப்பு மனிதன் என்று எழுதிக்கொள்ளக் கூடதா என்ன?

<முருகேசனின் தலையைத் தனியே அறுத்தெடுத்த ஒருவன் அந்தத் தலையிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தத்தை மற்ற தலித்துகளின் வாயில் விட்டுக் குடிக்கச் செய்கிறான்.>

உண்மையில் நடந்த சம்பவத்தை எழுதும்போது ஏனைய்யா இந்தக் கற்பனைக் கலப்பு? நீதிமன்ற சாட்சிக்கூண்டின் உறுதிமொழிபோல் நான் எழுதுவது அத்தனையும் நிஜம். ஏனென்றால் எனக்கோ என்னை மட்டுமே வெவ்வேறு பெயர்களில் பிரதிபலிக்கும் என் கதாபாத்திரங்களுக்கோ படு பயங்கரமான  கற்பனை வறட்சி என்று பக்கத்துக்குப் பக்கம் பக்க எண்போல் எழுதிக்கொண்டு என்ன பம்மாத்து இது?

மேலவளவு முருகேசன் படுகொலையில் உண்மையில் நடந்தது என்ன?


Centre for the Study of Casteism, Communalism and Law (CSCCL) of the National Law School of India University (NLSIU) யால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி அறிக்கை என்ன சொல்கிறது?

Before the bus could reach Melavalavu, at around 3:45 p.m near Sennakarampatti bridge on the Melur-Natham Road, approximately 2km from Melavalavu and between Sennakarmpatti and Ettimangalam villages, Duraipandi shouted at the driver to stop the bus. When the driver stopped the bus, a mob of forty Kallar community people who had been hiding behind a haystack came running towards the bus, bearing deadly weapons including knives. Alagarsamy, who was inside the bus, called Murugesan caste and other abusive names and stabbed him in his right shoulder. This shook the remaining Dalits in the bus with terror and they started running for their lives out of the bus and into the fields. Mookan, Boopathy, Raja, Chelladurai and Sevugamoorthy were murdered on the spot. Krishnan was stabbed in the back by Duraipandi as he was running. When Krishnan looked back he saw the Kallar community people cut off Murugesan’s head and heave it into a nearby well, leaving his body in the field.

Having sustained severe injuries, Krishnan, Kumar and Chinnaiah fled to Melur Government Hospital, running through the field to escape. As they were severely injured they had to be taken to the Madurai Government Hospital.

நிஜத்தில் மற்ற தலித்துகளெல்லாம் உயிர்தப்ப வயல்வெளியில் ஓடுகிறார்கள்.

Alagarsamy, who was inside the bus, called Murugesan caste and other abusive names and stabbed him in his right shoulder. This shook the remaining Dalits in the bus with terror and they started running for their lives out of the bus and into the fields.

இப்படி நிஜத்தில் நடந்த கொடூர நிகழ்வை

<முருகேசனின் தலையைத் தனியே அறுத்தெடுத்த ஒருவன் அந்தத் தலையிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தத்தை மற்ற தலித்துகளின் வாயில் விட்டுக் குடிக்கச் செய்கிறான்.>

என்று நாடகீயமாய் எழுதுவதைவிட கொச்சைப்படுத்தும் ஆபாசமான காரியம் வேறு என்னவாக இருக்கக்கூடும்?

ஒன்றா ஆரம்பகால கமல் போல அழவே தெரியாது விட்டால் சிவாஜியக் கெஞ்சவைக்கும் ஓவர் ஆக்டிங். உண்மை இரண்டுக்கும் இடையில்தான் ஊடாடிக்கிடக்கிறது.

இப்படியான சாரு என்கிற நடமாடும் பொய், காமம் கசுமாலம் என்று எந்தக் கருமத்தையாவது எழுதிக்கொண்டு செல்லவேண்டியதுதானே?

<பெருமாள், ஒரு மழையுடன் விளையாடும் இனிமை, அமைதி, அழகு அத்தனையையும் உங்களிடம் பெறுகிறேன்.>

தமிழ் எழுத்தாளர்களை இந்த ‘ஒரு’ படுத்தும்பாடு இருக்கிறதே அது பெரும்பாடு.

<ஒரு மழையுடன் விளையாடும் இனிமை> சாரு நிவேதிதா

<ஒரு உட்கார்ந்து ஆடு மேய்க்கும் சிறுவன்> ஆடுகளின் நடனம் - எஸ்.ராமகிருஷ்ணன்

<ஒருவிதமான> ரப்பர் நாவல் முழுக்க விரவி எழுதியிருப்பார் ஜெயமோகன்

உணர்வைத் துல்லியமாய் வெளிப்படுத்த இயலாமை எழுத்தாற்றல் போதாமை அல்லவா இவற்றில் வெளிப்பட்டு இளிக்கின்றன..

<அவ்வப்போது உங்களின் மாசற்ற காதல், நேசம், உண்மை,இவை மழையின் இயற்கை மணத்தைத் தருகிறது,>

இதுபோன்ற ஒருமை பன்மை அபத்தத்தை அப்படியே ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்லாமல் ப்ரீதம் கே சக்ரவர்த்தி சொந்தமாய் ஆங்கிலத்தில் எழுதப்போய்தான் தெஹல்காவில் வெளியாயிற்றோ?

சாருவின் தமிழையும் ப்ரீதத்தின் ஆங்கிலத்தையும் அடுத்தடுத்துப் படியுங்கள்.

<பெருமாள், ஒரு மழையுடன் விளையாடும் இனிமை, அமைதி, அழகு அத்தனையையும் உங்களிடம் பெறுகிறேன். அவ்வப்போது உங்களின் மாசற்ற காதல், நேசம், உண்மை,இவை மழையின் இயற்கை மணத்தைத் தருகிறது,>

Perumal, I get the same pleasure spending time with you as I do playing in a gentle drizzle: the same peace, the same beauty, everything. Sometimes your flawless love, affection, and truth infuses me with the beauty of nature bathed in rain.

இதுதான் இவர் தமது மொழிபெயர்ப்பாளர்களுடன் சேர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடும் பவுசு போலும். இந்த லட்சணத்தில் ஃப்ரென்ச்சு ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இப்படி செய் அப்படி செய் என அறிவுரை வழங்கிக்கொண்டிருப்பதாய் அளப்பு வேறு. சாரு நிவேதிதா என்கிற பெயரில் எழுதுபவர் சாரு நிவேதிதாதான் என்பதாவது உண்மையா?

<துலிப் தோட்டத்தில் இளம் மழை கொண்டு நடப்பது போன்ற ஒரு பரவச நிலை…>

இணையத்திலும் டிவிடிகளிலும் பார்த்த துலிப் தோட்டத்தில் இளம் மழைகொண்டு நடப்பதாய் பாத்திரங்கள் மூலம் எழுதியே எழுதியே மயிலாப்பூர் தெருவோர குப்பைகளை எவ்வளவு காலம்தான் மூக்கைப்பொத்திக்கொண்டுக் கடந்து செல்கிறாரோ?

”இந்த பிளாஸ்டிக் ஸ்டூல் மீது ஒரு ஈ அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது. எழுதும்போது வண்ணத்துப்பூச்சி என்றுதான் எழுதவேண்டியிருக்கும்” 9/26/2009 23:02 - பேயோன்

<பெருமாளின் நீண்ட நாளைய சகா ஒருவன் தமிழரசன். 25 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமாளும் அவனும் சேர்ந்து டீ குடிக்கக் கூட காசு இல்லாமல் சிங்கி அடித்திருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில்தான் ஃபூக்கோவின் Archaelogy of Knowledge புத்தகத்தை இருவருமாக சேர்ந்து மொழிபெயர்த்ததும் கூட. பின்னர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்த தமிழரசன் முதல் முயற்சியிலேயே எம்.பி.யாகவும் ஆகி விட்டான். ஆன கையோடு அவன் செய்த ஒரே ஒரு டீலில் சம்பாதித்த தொகை 800 கோடி என்று அரசியல் மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் செய்தி பரவியது. அந்தப் பேரத்தில் படிந்தது மொத்தம் 10,000 கோடி என்றும், அதை எல்லோரும் பங்கு பிரித்துக் கொண்டதில் தமிழரசனின் பங்கு 800 கோடி என்றும் சொல்லிக் கொண்டார்கள். எதற்கும் ஆதாரம் இல்லாததால் செய்தியாகப் போட முடியாமல் வெறும் கிசுகிசுவாக மட்டுமே வெளியிட முடிந்தது.>

அடேங்கப்பா அடுத்தவனை அயோக்கியன் என்று கிசுகிசுவாகவேனும் அம்பலப்படுத்துவதில்தான் என்ன ‘ஒரு’ அறச்சீற்றம்? ஆனால் ஆசிரியரை மீறி ’தொனி’ப்பதென்னவோ நம்மால் முடியவில்லையே என்கிற ஆற்றாமைதான்.


<அந்தக் காயத்தின் முன்முனை வளைவாகவும், வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன.> 

<முன்முனை வளைவும் - வெளிமுனை கூர்மையும்> புரிவதற்கு எந்த பிராண்ட் சாராய போதை தேவைப்படுமோ அந்த நாகூராருக்கே வெளிச்சம்.

<அந்தக் காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது, காயம் சாய்வாகப் பின்நோக்கியும் கீழ் நோக்கியும் உள் நோக்கியும் சென்று சிறுகுடலின் நடுப்பகுதியின் முன் சிறுகுடலும், நடுச்சிறுகுடலும் சந்திக்கும் இடத்திலிருந்து 30செ.மீ.x 70 செ.மீ. இடைவெளியில் முறையே 2.5 செ.மீ. குடல் அறைக்குள்ளும் 2.5 x .5 செ.மீ. குடல் அறைக்குள்ளும் சென்ற நிலையில் காணப்பட்டது.>


எழுத்தாளர் அய்யா, அந்தப் பிரேதப்பரிசோதனை ரிப்போர்ட் கத்தியால் குத்தப்பட்ட உடலுக்குரியது என்பதாவது நினைவில்கொண்டுதான் எழுதி இருக்கிறாரா?


காயங்கள் அல்ல ஒரே ‘காயம்’ எப்படி ஐயா <சாய்வாகப் பின்நோக்கியும் கீழ் நோக்கியும் உள் நோக்கியும்> போயிருக்க முடியும்?


ப்ரீதம் எழுதி இருப்பது என்ன?


Hacking wound at the level of the umbilicus, 5 cm x 1.5 cm and slicing through the intestine. 1.5 cm x 5.5 cm laceration with contused margins, 4 cm below the umbilicus, curved at the left end, piercing through to the bowel. Stab-wound triangular in form, 2.5 cm x 1.5 cm, in the left lumbar region.


ஒருவேளை ப்ரீதம் ஆங்கிலத்தில் எழுதிய கதையை சாரு அபத்தமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டாரோ?காயத்தின் அளவுகளெல்லாம் கூட கன்னாபின்னாவென்று வேறுபடுகின்றனவே? அட்டு கும்பலுக்கு இது பெரிய ஆளுமையாகத் தெரிவதில் ஆச்சரியம் என்ன?

மூடரே அவரை அறிஞர் என்றனர்
பெருமூடர் அவரை பேரறிஞர் என்றனர்
- ஜெயகாந்தன்

ஏதோ சாருவைப் பாப்பார இலக்கியவாதிகளெல்லாம் சேர்ந்து இலக்கிய உலகில் இருட்டடிப்பு செய்துவிட்டதான கதை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இலக்கியத்தின் பக்கத்தில்கூட படைப்புகள்மூலம் அட்மிட்டே ஆகாத ஒருவரை எப்படி அய்யா டிஸ்மிஸ் செய்ய முடியும்?.

<இது சீனியர் அரசியல்வாதிகளிடையே தமிழரசனுக்குக் கொஞ்சம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது என்று சொல்லலாம். வாழ்நாள் பூராவும் அரசியல் செய்தே இவ்வளவு பெரிய தொகையைப் பார்த்ததில்லை; இந்த ஆள் ஒரே பேரத்தில் இவ்வளவு ஒதுக்கி விட்டானே என்று சீனியர்கள் பொசுங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கட்சித் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் இவன் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. எழுத்தாளன். ஃபூக்கோ அது இது என்று வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் சொல்கிறான். Economic and Political Weekly மாதிரி பத்திரிகைகளில் ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறான். இப்படி ஒரு ஆள் கட்சிக்கு வேண்டும்தானே?>

பொறாமையால் பொசுங்கிக்கொண்டிருந்தது சீனியர்கள் மட்டுமேவா?

<பாதுகாப்பு வளையப் பகுதிகளான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன், பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது சனிக்கிழமை அரசப்படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். பதுங்கு குழியில் அமர்ந்திருந்த 17 வயது சாந்தனின் மேல் பிணங்களாக விழுந்து கொண்டிருந்தன. குழந்தையின் பிணம், வயதான கிழவியின் பிணம், ஆண் பிணம், பெண் பிணம்… ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் பிரித்தறிய முடியவில்லை.>

மீட்புக் குழுவினர் வரும்வரை அவன் அந்தப் பிணக்குவியலின் நடுவேதான் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். ஒரு முழுப் பகலும், ஒரு முழு இரவும் கடந்துதான் அவனுக்கு அந்தப் பிணக்குவியலிலிருந்து விடுதலை கிடைத்தது.>

ஒரு முழுப் பகலும், ஒரு முழு இரவும் கடந்து மீட்புக் குழுவினர் வந்து 17 வயது சாந்தனுக்குப் பிணக்குவியகில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்பதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆளாக ராஜபக்ஷேதான் இருப்பார். பார்த்தீர்களா கைப்பற்றிய பகுதியில், ஒரே நாளில் நிவாரணப் பணிகளை அரசு துவங்கிவிட்டது என்பதற்கான இலக்கிய சாட்சியம் இதோ என்று கூறியே இனப்படுகொலை மனித உரிமை மீறல் வழக்க்குகளையெல்லாம் முறியடித்து விடமாட்டாரா என்ன? செய்தித்தாள்கூட ஒழுங்காகப் படிக்காமல் இதுபோன்ற சீரியஸ் விஷயங்களிலெல்லாம் கோமாளித்தனமான எலுனிச்சை மூக்கை நுழைக்கலாமா?

<ஒரு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் மீரா. பெருமாள் மீது விரோதம் கொண்ட ஒரு அரசியல் கட்சி அவனைத் தாக்க அவன் வீட்டுக்குள் நுழைந்த போது மீரா மாட்டிக் கொண்டாள். பெருமாளின் நாய் ரைட்டர் மட்டும் அப்போது பெரிய ரகளை செய்திருக்காவிட்டால் அன்றைய தினம் மீராவின் கதை முடிந்திருக்கும். மாமிச மலை போன்ற நாலு ரவுடிகள்.>

இப்படியெல்லம் எழுதினால்தானே கன்னிவெடிகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்த எழுத்தாளர் என்று தெஹல்காவுக்குப் பிலிம் காட்ட முடியும். கதையின் ஆரம்பத்தில் பிராக்கெட்டு போட்டு <(இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் முழுக் கற்பனையே.  உயிரோடு இருக்கும், அல்லது உயிர் இல்லாமல் இருக்கும் யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவதாகத் தோன்றினால் அது வெறும் தற்செயலானதே)> எழுதியதன் ’இலக்கிய மர்மம்’ இப்போது புரிகிறதா?

From Tehelka Magazine, Vol 7, Issue 01, Dated January 09, 2010 கதையெழுதிய அதே வருடத்தின் இறுதியில் நடந்த புத்தக விழாவுக்கு சிறப்பு விருந்தினரே <பெருமாள் மீது விரோதம் கொண்ட ஒரு அரசியல் கட்சி>யின் முதல்வரின் மகள்தான் என்பது தெஹல்காவுக்கு எப்படித்தெரியும்? தப்பித்தவறி உண்மையை எவனாவது ட்விட்டில் தெஹல்காவுக்கு அட்டு போட்டு தெரிவித்தால் எழுத்தாளரின் தலைமை அடியாளிடமிருந்து ’தமிழ் நண்டு’ என்கிற பட்டம் கிடைக்கும்.

<கழுத்தில் பலமான அடி. ஒருவன் மீராவின் கழுத்தை சுவற்றோடு பிடித்து அழுத்தியிருக்கிறான். ரைட்டர் ஒரு மனித விரோதமான நாய். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் கூட அவர்கள் கிளம்பும் வரை தெருவே அதிர்வது போல் விடாமல் குலைத்துக் கொண்டேயிருக்கும். அதுதான் அந்த ரவுடிகளை அன்று குதறித் தள்ளி விரட்டி விட்டது.>

ரைட்டரின் நாய் பெயரும் ரைட்டர்தானா மகிழ்ச்சி?

<தெருவே அதிர்வது போல் விடாமல் குலைத்துக் கொண்டேயிருக்கும்> ரைட்டர் மட்டுமல்ல இணையத்திலில் அவருக்கிருக்கும் ரசிக பிச்சைக்காரனைவிடவா ரைட்டர் <மனித விரோதமான நாய்> நாய்?

ஆனால் தெஹல்காகாரர்களுக்கு ரைட்டரை சமூகத்திற்காக குறைக்கும் காவல் நாய் என்கிற குறியீடாகத் தோன்றவைக்கவேண்டாமா ஆகவேதான் எழுத்தாளன் பத்திரியாளனான விட்டு நாய்க்குப் பெயர்கூட ரைட்டர்.

<அந்த அரசாங்க மருத்துவமனையின் பிணவறைக் கூடத்தில் அப்போது ஏர்கண்டிஷனர் வேலை செய்யவில்லை. நேற்று இரவுதான் அந்த செய்தியில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று பெட்டிச் செய்தியாகப் போடாமல், ஏல விளம்பரத்துக்குக் கீழே தள்ளி விட்டான். அதன் பயனை இவ்வளவு சீக்கிரம் அவனே அனுபவிக்கும்படி நேரும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை. நேற்று இரவுதான் மீராவின் மீது தாக்குதல் நடந்தது. கொலை முயற்சி, போலீஸ் கேஸ் என்பதால் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றாக வேண்டும்.>

என்னதான் பத்திரிகையாளன் என்றாலும் மனைவி தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவளைப் பார்க்கச் செல்பவன், பிணவறையில் ஏசி வேலைசெய்யவில்லை என்கிற பிட்டு செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிணவறையைப் பார்க்கப் போகிறானாம்.

எழுத்தாளன் மண்டையில் அதிர்ச்சி மதிப்பு மிக்க சீன் அலேக் மால் என்று தோன்றிவிட்டதே, தெஹல்காவை அசத்த, கதாபாத்திரம் தர்க்க சம்பந்தம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

<நாற்றம் குடலைப் பிடுங்கியதால் பிணவறைக் கூடத்தைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டான். பெருமாள்.>

பத்திரிகையாளனுக்கு, தொழில் ரீதியில் எத்துனையோமுறை பிணவறையைப் பார்க்க வாய்த்திருக்கும். ஏதோ முதல்முறை பார்க்கச்செல்பவன் போல அதுவும் ஏசி வேலை செய்யாத நாற்றம் குடலைப்பிடுங்கும் பிணவறைக்கூடத்தை ’நோக்கி’ச் செல்கிறானாம். அப்ஸல்யூட் வோட்கா நான்கு ரவுண்டு உள்ளே போனதன் மகிமையோ?

இதுதான் விகடன்தனமான இட்டுக்கட்டல். பிணவறைக்குப் பெருமாளைப் போகவைத்தால்தானே கவர்ச்சிகர அதிர்ச்சிக் கிளுகிளுப்புக் காய்ந்த வெற்றிலையை மூன்றாய் மடித்து முக்கோன வடிவத்தில் பீடாபோல்சுற்றி வாசகன் மூளையில் சொருக முடியும்.

<பார்த்தால் அங்கே கதிரவன். பெருமாள் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருந்தபோது கதிரவனின் நட்பு ஏற்பட்டது. ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு யூ.ஜி.யாக இருந்த கதிரவன் சில தினங்கள் பெருமாளின் அறையில் தங்கியிருக்கிறான்.

பிறகு கதிரவன் மாட்டிக் கொண்டான் என்றும், ஐந்து ஆண்டுகள் தண்டனை கிடைத்தது என்றும் கேள்விப்பட்டதோடு சரி. அதற்குப் பிறகு அவனுடைய தொடர்பு போய் விட்டது.>

ஐந்தாண்டுகள் ஜெயிலுக்குப்போய் வந்தவனுக்கு அரசு மருத்துவமனையில் பிணவறைக் காப்பாளனாக வேலை கிடைக்குமா? அதுவும் தீவிரவாத இயக்கத்தில் இருந்து வங்கிக்கொள்ளையில் மாட்டி தண்டனை பெற்று சிறைக்குச் சென்றவன் பிணவறைக் காப்பாளனாக இருக்கிறானாம். எழுத்தாளர் சாரு நிவேதிதா என்கிற கே.அறிவழகன் மத்திய அரசில் அதுவும் தலைநகரான தில்லியில் குமாஸ்தாவாக வேலைபார்த்தவர் அல்லவா? அரசு வேலைக்கு சேருமுன், காவல்துறையிலிருந்து முந்தைய காலத்து நடத்தை பற்றி அவரது அக்கம்பக்க வீடுகளில் விசாரணை நடக்கவில்லையாமா? போலீஸ் வெரிஃபிகேஷன் இல்லாமல் பாஸ்போர்ட்கூடக் கிடைக்காது.

சாருவுக்குக் கோமாளித்தனம் தண்ணீர் குடிப்பதைப்போல.

<இந்த வேலை ஒரு தோழரின் சிபாரிசில் கிடைத்து இங்கே ஒட்டிக் கொண்டானாம்.>

பிணவறை உதவியாளர்களின் வேலை பற்றி இந்து நாளிதழில் வந்திருக்கும் இந்த செய்தியே எவ்வளவு தொடும்படியாக இருக்கிறது எனப்பாருங்கள் http://www.hindu.com/2011/03/17/stories/2011031764140300.htm மீரா சீனிவாசன் செய்தியை முடித்திருக்கும் விதத்தையும் பாருங்கள்.

நக்ஸலைட் அனுதாபியாக புக்கு படித்து எழுதி ’புரட்சிகர’ கட்டுரைகளை எவனுக்கும் தெரியாத பத்திரிகைகளில் எழுதி அறிவுஜீவி செய்யும் சாய்வுநாற்காலிப் புரட்சி போன்றதா இயக்க வேலை? நக்ஸலைட் இயக்கத்தில் இருந்து வங்கியைக் கொள்ளையடித்து மாட்டி சிறைக்குச் சென்று வந்தபின் அரசு மருத்துவமனையில் உதவியாளனாகக்கூட அல்ல பிணவறைக் காப்பாளனாக அதுவும் தோழரின் சிபாரிசில் வேலைக்கு சேருவது என்பது சிறந்த நகைச்சுவை அல்லவா? தமிழகத்தில் என்ன தோழர்களின் ஆட்சியா நடக்கிறது?

<ஒரு காலத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ், மாவோ என்று புத்தகம் புத்தகமாகக் கரைத்துக் குடித்து, புரட்சியிலேயே வாழ்ந்து, புரட்சியையே சுவாசித்துக் கொண்டிருந்தவன். எதைப் பற்றிப் பேசினாலும் அது இயங்கியலில்தான் வந்து முடியும். அப்பேர்ப்பட்டவனை இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு பிணவறைக் காப்பாளனாகப் பார்த்ததில் பெருமாளுக்குப் பெரும் ஆயாசமே ஏற்பட்டது.>

மாஜி கம்யூனிஸ்டு பிணவறைக் காப்பாளன் என்று கவர்ச்சிகர அதிர்ச்சிக் குறியீடாய்க் கமறிக்கொண்டு உலக தரத்தில் இலக்கியம் படைத்துவிட்டதாய், செய்திகளைக் கதம்பமாய் ஒட்டவைத்து எழுதியது ஆங்கிலத்தில் உலகளவில் போய்விட்டதாக மாரடித்துக் கொள்ளவேண்டியதுதான்.

<எதற்காக இந்த தியாகம்? நம்முடைய வாழ்வை மானுட விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொள்வது பற்றி பெருமாளுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நமக்குக் கிடைத்திருக்கும் கொஞ்ச வாழ்வை ஒரு தவறான வழியில் செலவழித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் முதுமை வந்து விடுகிறதே? இதோ இந்த கதிரவன் பெருமாளை விட பத்து வயது குறைவானவனாகத்தான் இருப்பான். 46 வயது இருக்கும். ஆனால் பார்க்க பெருமாளை விடப் பத்து வயது முதியவனாகத் தோற்றமளித்தான்.>

பெருமாள் அடித்துக்கொள்ளும் டையை மாஜி கம்யூனிஸ்டுக்கும் அடித்துவிட்டால் கருகரு இளமையோடு கமல்போலக் காட்சியளித்துவிட்டுப் போகிறான்.

<ஆட்டோவே ஓட்டிக் கொண்டிருந்திருக்கலாம் போல் இருக்கிறது என்றான் கதிரவன். பிணங்கள் தாறுமாறாகக் கிடந்தன. அந்த அறையில் முப்பது பிணங்கள் இருக்கலாம். சுமார் நூறு பிணங்கள் கிடந்தன. விபத்தில் சிக்கி மாண்ட பிணம், தற்கொலை செய்து கொண்டது, அனாதையாய் செத்தது என்று பலவிதமாக வரும் என்றான் கதிரவன். விபத்தில் மாட்டியதுதான் அதிகமாம்.>

பெருமாளுக்கு மூக்கு என்று ஒன்று இருப்பதே சாருவுக்கு மறந்துபோயிற்றா? தூரத்திலிருக்கும்போதே குடலைப்பிடுங்கிய நாற்றம் பிணவறையில் நின்றிருக்கையில் பெருமாளை ஒன்றுமே செய்யவில்லையா? சாருவின் கதாபாத்திரங்கள் எல்லாரும் வாயும் சாமானுமாகவே வாழ்கிறவர்கள். எந்த கதாபாத்திரத்திற்கும் தரையில் கால்படவே படாது. காமம் கம்யூனிசம் ஆன்மீகம் எல்லாம் காற்றில் பேசியபடி கசிந்துவிடும்.

<“ஆனால் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும்போது தான் ஒரு விபரீத பிரச்சினை; அதற்காகவே இந்த வேலையை விட்டு விடலாம் போல் இருக்கிறது பெருமாள்…”

அது என்ன விபரீத பிரச்சினை என்றால், நடிகையின் பிணம் உறவினர்களிடம் கொடுக்கப்படும் வரை அந்தப் பிணத்தைப் புணர்வதற்கு பல பேர் அவனுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றான். ”பெரிய டாக்டர் சிபாரிசோடு எல்லாம் வருகிறார்கள். ஆயிரக் கணக்கில் பணம் தருகிறார்கள். பெரிய பிரச்சினையாக இருக்கிறது.”>

இந்த இடத்திற்கு வரத்தான் இவ்வளவு பாடா?

அதெல்லாம் கிடக்கட்டும் ப்ரீதம் எழுதியது வேறு கதை. சாரு எழுதியது வேறு கதையா? இல்லை ஒன்றே என்றால் இரண்டும் எப்படி நேரெதிராய் இருக்கின்றன?

<“ஆனால் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும்போது தான் ஒரு விபரீத பிரச்சினை; அதற்காகவே இந்த வேலையை விட்டு விடலாம் போல் இருக்கிறது பெருமாள்…” - இது சாரு நிவேதிதா

“But when actresses commit suicide... things are different. I think maybe I should keep this job just for that, Perumal…” (Translated from Tamil by Pritham K Chakravarthy )
<இந்த வேலையை விட்டு விடலாம் போல் இருக்கிறது>

என்ன கூத்து அய்யா இது. ஃப்ரென்ஞ்சு ஸ்பானிஷ் எல்லாம் படித்துக் கரைகண்டதில் எட்டாங்கிளாஸ் இங்கிலீஷ் மறந்து போய்விட்டதா? இல்லை எல்லா மொழியும் கரதலமாகக் கற்றதுபோல சாரு பம்மாத்து பண்ணிக்கொண்டிருக்கிறாரா?ஆங்கிலத்தில் இருப்பது என்ன? நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும்போது விஷயமே வேறு, அதற்காகவே இந்த வேலையில் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


ஜனனி என்கிற பெயரில் சார்த்தரின் சுவர் கதையை மொழிபெயர்த்தது உண்மையிலேயே சாரு நிவேதிதா தானா? தவறியும் போகாதவை


<அது என்ன விபரீத பிரச்சினை என்றால், நடிகையின் பிணம் உறவினர்களிடம் கொடுக்கப்படும் வரை அந்தப் பிணத்தைப் புணர்வதற்கு பல பேர் அவனுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றான். ”பெரிய டாக்டர் சிபாரிசோடு எல்லாம் வருகிறார்கள். ஆயிரக் கணக்கில் பணம் தருகிறார்கள். பெரிய பிரச்சினையாக இருக்கிறது.”> சாரு நிவேதிதா


What he said was, before an actress’ body could be handed over to the family, he would come under pressure from many people who were desperate to have sex with it. “They come here with approval from the dean of the hospital, and offer me bribes in thousands… it’s hard to refuse.” (Translated from Tamil by Pritham K Chakravarthy )


< பெரிய டாக்டர் சிபாரிசோடு எல்லாம் வருகிறார்கள். ஆயிரக் கணக்கில் பணம் தருகிறார்கள். பெரிய பிரச்சினையாக இருக்கிறது >
“They come here with approval from the dean of the hospital, and offer me bribes in thousands… it’s hard to refuse.” (Translated from Tamil by Pritham K Chakravarthy )


எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவனுக்குக் கொஞ்சமாவது மானம் ஈனம் தெரிய வேண்டாம்? தான் எழுதியதற்கு நேர் எதிரான மொழிபெயர்ப்பை இங்கிலீஷில் வந்துவிட்டது என்கிற ஒரே காரணத்திகாக ஆஹா ஓஹோ என்று தூக்கிக்கொண்டு ஆடுவதா? நான் எழுதியதற்கு நேர்மாறாய் செய்யப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பு இது என்றல்லவா நிராகரித்திருக்க வேண்டும்.


ப்ரீதத்தை இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 80 முதலாகவே தெரியும். இருவரும் பரீக்‌ஷா நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்.ப்ரீதம், தன்னிடம் கொடுக்கப்பட்டதைத்தான் மொழிபெயர்த்திருப்பாள். சாருவின் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் வடிவம் ப்ரீதத்திற்குத் தெரியாமலிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இங்கிலீஷ் கவர்ச்சிக்காக முன்னாள் தீவிர கம்யூனிஸ்டு,நடிகையின் பிணத்தைப் புணரக்கொடுத்து பணம் சம்பாதிப்பதற்காகவே பிணவறைக் காப்பாளன் வேலையில் இருக்க விரும்புகிறான் என்று இங்கிலீஷுக்காக எழுதிவிட்டு, தமிழில் இதனை அப்படியே எழுதினால் தொப்பி-திலகம் பிரச்சனையாக திரையுலகத்திடமிருந்தும் தீவிர கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் லீனா பிரச்சனையாக எதிர்ப்பு கிளம்பி சங்கர சுப்பிரமணியப் பிரச்சனையாக வீடு தேடி வ்ந்துவிட்டால் என்னாவது என்றும்தான் தமிழில் நேர் தலைகீழாக ”அதற்காகவே இந்த வேலையை விட்டு விடலாம் போல் இருக்கிறது” என்று எழுதி வைத்துவிட்டார் போலும் அஞ்சா நெஞ்ச ஆகிருதி.

எவன் சொன்னான் சாரு நிவேதிதாவுக்குக் கற்பனை வறட்சி என்று?

கவட்டைக்கு ஆபத்து என்றால் கற்பனை எப்படிக் காட்டாறாகப் பாய்கிறது.

தனித்தனி ட்ராக்குகளாகத் தந்தூரிக் கம்பியில் செருகியதில் எத்துனைக் கம்பிகள் தேறின? இப்படித்தான் செய்தியாகவும் காதல்காமமாகவும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டாகவும் சுயபுராண புளிப்புலம்பலாகவும் புலிக்கதையாகவும் தலித் கதையாகவும் தனித்தனியாய் எழுதிவிட்டு, பெரிய வெங்காயத்தைக் குறுக்காய் நறுக்கிப் பத்திகளைக் கன்னாபின்னவெனக் கலைத்துப்போட்டால் இந்தக் கதையின் வடிவம் பின் நவீனத்துவமாகக் கிடைத்துவிடும்.

சாரு என்கிற வீங்கிய யானைக்கால் மெளடீகத்துடன் தன்னை யானையாக பாவித்துத் தன்பொல்லாத் துதிக்கை தூக்கி மண்டியிட்டு இலக்கியக் கொடுமுடியில் மிதப்பதுபோல் பிளிறுவதுதான் சிறந்த பகடி.


(இந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு Morgue Keeper என்ற தலைப்பில் தெஹல்கா ஜனவரி 2010 இதழில் வெளிவந்தது. கதையின் தமிழ் வடிவம் இப்போதுதான் முதல் முதலாக வெளிவருகிறது).

பிணவறைக் காப்பாளன் June 30th, 2010

தமிழ் வடிவம் இன்னும் பிரசுரமாகவில்லை. morgue keeper: digital story January 22nd, 2012

From Tehelka Magazine, Vol 7, Issue 01, Dated January 09, 2010
SPECIAL ISSUE
original fictions 2
Morgue Keeper
CHARU NIVEDITA
(Translated from Tamil by Pritham K Chakravarthy )