Wednesday, February 15, 2012

சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு -2

2010ல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆடுகளின் நடனம் அவர் தளத்திலிருந்தும் படிக்கலாம் 

இதை விமர்சித்து நான் எழுதியது Tuesday, September 7, 2010 எழுத்துக் கலை - உண்மை. 16 வருட மரண உறக்கம் கலைத்து, உயிர்த்தெழுந்து எழுதவந்த ஒருமாத காலத்தில் எழுதியது. இணையத்தில் அன்று எவருக்குமே என்னைத் தெரியாது. எனது அறிமுகமாகக்கூட இதைக் கூறலாம். இதைப் படித்து என்னை தூஷித்தோரும் எஸ்.ராவுக்காக வருத்தப்பட்டோரும் ஏராளம். இருந்தும் இதை மீள் பதிவக்குவதற்கான காரணம் இந்தப் பதிவின் இறுதியில் வருகிறது. எனவே இதை  ஏற்கெனவே படித்தவர்கள் தயவுசெய்து தாண்டிப்போகவும்.

"பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை"

ரோட்லயே எந்த மலையும் ஆரம்பிக்கறதில்லை, மெட்ராஸ் ரோட்லதான் பிளாட்பாரத்துலேர்ந்தே பில்டிங் செவர் ஆரம்பிச்சுடும். CMDA விதிகளுக்குட்படாத மலை, ஆக அடிவாரம்தான் மொதல்ல ஆரம்பிக்கறதாக்கும், மலை செத்த தள்ளி இருக்குங்கறார், ஒரு ஃபர்லாங்காச்சும் இருக்கும்னு வச்சுப்போம்.

"அன்றும் பாறை ஒன்றின் மீது ஒரு உட்கார்ந்து ஆடுமேய்க்கும் சிறுவன் ஆடுகளுடன் தூரத்து மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தான். மங்கிய வெளிச்சம் மலையை ரம்மியமாக்கியிருந்தது."

இங்கிலீஷ்ல டாக்ட்டரேட் பண்ண ட்ரை பண்ணினவர் சப்ஜெக்ட் ப்ரெடிகேட்லாம் மாத்திப்போட்டு இங்கிலீஷ்ல எழுதுவாரோ.

உட்கார்ந்து ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் - தமிழன் மட்டுமில்லே எவ்ளோ அடிச்சாலும் தமிழும் தாங்கறது. இந்த சீன் எடுக்க இவ்ளதான் டைம், அடிச்சித்தூக்கி சுருட்டு. கால்ஷீட் ப்ராப்ளம் ம், ம், அடுத்த சீனுக்குப் போ

”ஆடுகளுடன் தூரத்து மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தான்.”

பாலாவோட கேமராமேனண்ட கத்துண்ட டெக்னிக்கா கண்லயே ஜூம் போறார்.

”மங்கிய வெளிச்சம் மலையை ரம்மியமாக்கியிருந்தது”

பரவால்லயே பஸ்ல ட்ராவல் பண்ணும்போது ரிஃப்ளெக்டர்லாம் கொண்டுபோயாறதோ. ஏரியாவே மங்கல் வெளிச்சத்துல இருக்கு எங்கியோ இருக்கற ‘ஒரு உட்கார்ந்து ஆடு மேய்க்கும் சிறுவன்’ மானத்தப் பாக்கறானா இல்லே கோமணத்தப் பாக்குறானன்னு எப்டிண்ணா ஒங்களுக்குத் தெரியறது. இலக்கிய த்ருஷ்டிண்றது இதானோ?

”மலை நிசப்தமான கண்களால் ஆடுகளை பார்த்தபடியிருக்கிறது.”

லெளட்ஸ்பீக்கர் கண்ணெல்லாம் வேற இருக்கோ? ’நிசப்தமான கண்’ கவித நட? அருமையான வரிகள், சிறந்த சொல்லாட்சின்னு எட்டு பேர் லாப் டாப்போட திரிவாளே பின்னூட்டம் போட.

”ஆடுகளின் காதுகள் சரிந்து தொங்குகின்றன. அது எப்போதுமே ஒரு இலை காற்றில் அசைந்து கொண்டிருப்பதை போலதானிருக்கிறது. மிக பரவசமூட்டும் நடனமது.”

திரும்ப பஸ்ஸுலேர்ந்து ஜூம். அவ்ளோ தூரத்துல அது ஆடுன்னு தெரியதே அதே பெரிய விஷயம். எல போல தூங்கறதா ஆட்டோட காது மூவ்மெண்ட்டோட கலக்கறேள் போங்கோ.

”பாலே நடனக்காரிகளின் விந்தைகளை தாங்கள் செய்து பார்ப்பதுபோல அவை இரண்டு கால்நுனிகளில் நின்று ஆடுகின்றன.”

”அதன் கண்களில் முன் காணமுடியாத பரிகாசம் ஒளிந்து கொண்டிருப்பது போலிருக்கிறது. ”

இப்போ டைட் க்ளோஸ்ல ஸ்க்ரீன் ஃபுல்லா ஜூம். ஒரே மோகன்லால் எக்ஸ்ப்ரெஷந்தான் போங்கோ. தெரிஞ்சி தெரியாத மாதிரி சிரிச்சி சிரிக்காத மாதிரி ரொம்பொ சட்ட்டுலா. அதெப்பிடினா ஒங்க கேமராக் கண்ணு மட்டும் இண்டர்ப்ரெட்டேஷனோட வேற பாக்கறது.

அதெல்லாம் அப்பறம் மொதல்ல, செத்த இந்த ஒருமை பண்மைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கோ. ”பன்னீர் புஷ்பங்களே கானம்” பாடு மாதிரி என்னண்ணா இது. அவைங்கறேள் ஒடனே அதன்கறேள். ஒங்களை லக்‌ஷக்கணக்கானபேர் படிக்கறா, விசிட் கவுண்டர் அல்லாடிண்டு பறக்கறது. இத அப்லோட் பண்றப்போ 12 லக்ஷத்தைத் தொட்ருந்தாலும் ஆஸ்ச்சர்யமில்லே.

வண்ணதாசனை ஆயிரக் கணக்குலதான் படிச்சிருப்பா. அவர் இப்டில்லாம் தப்பை, தமிழ்ல பண்ண மாட்டாரே. கொஞ்சம் ஓவரா வர்ணிச்சுண்டே ஓஞ்சுடுவார். அவரோட பாலை டீக்கடல ஒண்ணுக்கு மூணுன்னு எடைகட்டி தீர்த்தமாக்கறாப்ல எழுதறேள். ரீச்சுக்காத்தான் இத செய்றேளாயிருக்கும். அலெக்சியா சொல்றதே இந்தியாலதான் ஒங்க கொடி ஓங்கி பறக்கறதுன்னு.

”மேய்ச்சலில் இருந்த ஒரு ஆடு செருமுகிறது”

ட்ராவல்ல கூட ஆரிருந்தா? ஆஸ்கார் ஸவுண்ட் மிக்சிங் புகழ் ரசூல் பூக்குட்டியும் கூடவே இருந்தாரோ? இல்லே சவுண்ட் ரெக்கார்டிங் அஸிஸ்டெண்ட் பஸ்ஸுலேர்ந்து ஓடிப்போய் ரெகார்ட் பண்ணிண்டு வந்தாரோ. ட்ரெய்ன் வந்து கேட் டெல்லாம் தெறந்துட மாட்டா, எழுத்தாளர் கட்டுரையை முடிக்கிறவரைக்கும். அஞ்சாறு பக்கத்துக்காவுது ஆடு மேஞ்சிண்டே இருக்கவாண்டாமோ. அப்பதான இரவது கட்டுரையை சேர்த்து பக்கம் 250 விலை ரூ. 375 னு பொஸ்தகம் போட சரியா இருக்கும். ஜூமும் போயி சவுண்ட்லயும் பின்றேளே. புல்லரிக்கறது. ஒங்க ஆடுகளாட்டமே என்னோட மயிர்கால்களும் தூக்கிண்டு டான்ஸ் ஆட்றது பாருங்கோ.

”தற்செயலாக இரண்டு ஆடுகள் நடனமாட துவங்குவதை பார்த்தேன்”

என்னண்ணா ஜெயமோகனுக்கு அடுத்து, டைரக்டர் பாலா சார் படம் பண்றேள். நடக்கறாப்ல ஷாட் வைக்கறதுனா, அந்தகாலத்துலதான் மடிசஞ்சிகளா ஆக்‌ஷன்னு சொன்னதுலேர்ந்தே ஷாட்டை வெச்சிருப்பா. நின்ணுண்டேயிருந்து ஆக்‌ஷன்னு சொல்லி அவன் டைரக்டரைப் பாத்துட்டு நடக்கறதெல்லாம் கூட ஷாட்ல இருக்கும். இப்போ வர பில்லக்கா டைரக்ட்டர் கூட மூவ்மெண்ட்ல நடக்க ஆரம்ப்சப்பறம்தான் எடிடிங்ல ஜாய்னே பண்ன ஆரம்பிக்கறா. மூவ்மெண்ட் டு மூவ்மெண்ட் கட்டெல்லாம் சர்வ சாதாரணமாயிடுத்து. நீங்க ஆக்‌ஷன் சொன்னப்பறம்தான் ஆடுசார்வாள் ஆடவே ஆரம்பிக்கறா செலிப்ரிட்டி ரைட்டரோல்லியோ எக்ஸ்க்ளூஸிவ் ஷோவாருக்கும் பரவால்ல போறது, ரைட்டர் டைரக்ட்டர் ஆனா வர ப்ரச்சனை.

நீங்க பார்த்த சினிமாவுக்கும் படிச்ச தண்டி தண்டி பொஸ்தகத்துக்கும் இது சரியா. ஏதோ ஒரு ஃபிஸியோதெரப்பிஸ்ட்னா பரவால்லை பீரோ மோரோ வாங்கிண்டு கொழந்த கிறுக்கல்னு சர்ட்டிபிகேட் குடுத்துற்லாம். பொஸ்தகத்துல சென்ச்சுரி அடிக்கப்போறேள். நீங்கப் போயி ஹிட் அவுட் ஆகலாமோ?

”காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த மற்ற ஆடுகள் தலைதூக்கவேயில்லை”

பின்னிப் பெடலெடுத்துட்டேள் போங்கோ. தளபதில டைரக்டர் மணிரத்தினம் சார் கூட மல்லிப்பூவுக்கு இவ்ளோ டைட் க்ளோசப் வெக்கலை. என்ன லென்ஸ் யூஸ் பண்ணேள் கழட்டிப் பார்த்து சொல்லுங்கோ. லென்ஸ் நம்பர்லாம் எழுத்துத்தொழில் ரகசியம் சொல்லப்படாதோ? அடுத்த நம்பர் லென்ஸ் போட்ருந்தேள்னா ஆடோட தாடை அசையறது கூட ‘மங்கலான வெளிச்சத்துலயும்’ நன்னா வந்துருக்குமேன்னா மிஸ் பண்ணிட்டேளே. அடுத்த பத்தில அந்த சீனை வச்சுட்டா போச்சுங்கறேளா ஓகே ஒகே.

”அதன் உடலில் நடனம் கொப்பளிக்கிறது”

ரெண்டாடு டான்ஸ் ஆடி ஒரு உடல்ல எப்டிண்ணா நடனம் கொப்புளிக்கும், பின் நவீனத்துவ மேட்டரா? எழுதி 15 வருஷமாயிடுத்தா ஒரு எழவும் பிடிபட மாட்டேங்கறது நேக்கு. தமிழ் வாத்தி எல்லாம் அந்த காலத்துல ஒருமைல ஆரம்பிச்சி பன்மைல, இல்லாட்டி பன்மைல தொடங்கி ஒருமைல முடிச்சா, ஸ்கேலால நொட்டு நொட்டுன்னு, அடிச்சே கைமுட்டியைக் கழட்டிடுவான். ஒருவாரத்துக்கு அடிக்கவே முடியாது எதையும்.

”ஆடுகள் எப்போதாவது இப்படி சில வேளைகளில் நடனமாட விரும்புகின்றன. அதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்று தெரியவில்லை”

ஐ தெரியாத மாதிரி இன்னொஸெண்ட்டா டபாய்க்கறேள் பார்த்தேளா. வேறென்னத்துக்கு அவா டான்ஸ் ஆட்றா. ஒங்களோட 78 வுது புக்குல எடம் புடிக்கத்தான்.

”தலையை மண்ணில் தேய்த்து சிலும்புகின்றன. அதன் உற்சாகம் பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது.”

புழுதி கெளம்பறத காட்ற லென்ஸ் ஸ்டாக் இல்லையோ. ஒரு செண்டென்ஸ் பன்மை மறு செண்டென்ஸ் ஒருமை. வடிவேலுவாட்டம் நன்னா ’மெய்ண்டெய்ன்’ பண்றேளே.

”பாலே நடனக்காரிகளின் விந்தைகளை தாங்கள் செய்து பார்ப்பதுபோல அவை இரண்டு கால்நுனிகளில் நின்று ஆடுகின்றன”

பாலேன்னு சொல்லி கமிட் பண்ணிண்டுடேள் அப்பறம் ’விரல் நுனி’ தானேண்ணா சரியாயிருக்கும். அதும்போக ’கால் முனை’ ’விரல் நுனி’ ன்னு சொறதுதான் பாந்தமாப் பட்றது. எதுக்கும் ஒரு வார்த்தை ஜெயமோகனைக் கேட்டுட்றது நல்லது. தமிழ் இலக்கியத்துல ஒண்ணு நடந்து, குருபீடத்துலை ஒப்பினியன் கேழ்க்காட்டா நமக்கு பவ்யமில்லை. சொல்லாட்டா அவர் பீடமில்லை. என்ன நான் சொல்றது. ஊட்டி போய்ட்டு வந்துட்டார் க்ளாஸ்லாம் நல்லபடியா நடந்துடுத்து. ரிஸல்ட் கூட பப்ளிஷ் பண்ணிட்டார். அதால ஆத்துலயே கேழ்க்கலாம். ஒங்களுக்குதான் அவா ஆத்துக்குப் போற வழி நன்னா தெரியுமெ. ஃபோட்டோவப் பார்த்தே http://www.jeyamohan.in/?p=605 “மலையின் நித்ய இருப்பையும்”

அவாத்து மலையத் தவிர மித்த மலையெல்லாம் டெய்லி ஜெயமோகனாட்டமே வாக் போயிண்ட்ருக்கு போலருக்கே உங்காம் பக்கத்துலயோ?

”அதை கடந்து போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் நடைச்சுவடையும் மனது நினைத்துக் கொண்டேயிருக்கிறது”.

ஏண்ணா விதியில்லாதவா சொந்த வீடில்லாமெ டாய்லெட் இல்லாமெ ரோட்டோரமா வழிச்சிண்டு ஒக்கார்ரவா போட்டதெல்லாம் கூட ரோட்டோரமா இருக்கும்னா. ஓ அதையெல்லாம் எழுதினா - வருடிக் கொடுக்கும் உயர்ந்த நடை - அப்பிடின்னு பின்னூட்டம் வராதோ. கேகே நகர்லயும் ஏகப்பட்ட  மனுஷாதானேன்னா நட்ந்துண்டிருக்கா. தோட்டா தரணி சாரண்ட சொல்லி ஆத்து பக்கத்துல மல செட் போட்டா போச்சு. அதுல நடக்கறவா நடைச்சுவடும் அப்பறம் இலக்கியம் ஆயிடும் இல்லையோ. போதாக் கொறைக்கு ஜெயமோகன் சாரும் ஜாகைய மாத்திடுவா கேகே நகருக்கே.

”மலையடிவாரத்தில் வாழ்கின்றவர்கள் பாக்கியவான்கள்.”

ஆமாண்ணா ஆமா. துற்பாக்கியவான்கள் செட் போட்டுண்டா போச்சு.

சும்மா ஒரு ஃபோட்டோவைப் பார்த்தே ஒரு பாரா சைசுக்கு இந்த ஓட்டு ஓட்றேளே ஒங்கள பஸ்லயும் ஒக்காற வெச்சு லாங்ல மலையவேறக் குடுத்துட்டா.

”ரயில்வே கேட் திறக்கபடுகிறது. சிறுவர்கள் முந்திக் கொண்டு போக எத்தனிக்கிறார்கள். வாகன இரைச்சல். ஆடுகள் அதை திரும்பி பார்க்கவில்லை.”

என்னண்ணா இப்புடி சிலும்பறேள். ”ஆடுகள் திரும்பிப் பாக்கலையாம்” அவா மொதல்லேர்ந்தே ஒங்களை பார்க்கலேண்ணா. ஆடுகளுக்கு என்ன தலயெழுத்தா ஒங்களப் பார்க்கணும்னு, எந்த பத்திரிகைக்கு எந்த பத்தியை எத்தப் பத்தி ரொப்பிக் குடுக்கணும்னு ஆடு சார்வாளுக்கு ஏதாவுது கவலை இருக்கா சொல்லுங்கோ.

”பேருந்து பயணிகளின் முகங்கள் மாறுகின்றன. காற்று ஒடுங்குகிறது. ரயில்வே கேட்டை கடந்து பேருந்து செல்கிறது. ஆடுகள் கண்ணை விட்டு மறைகின்றன. எக்கி வெளியே பார்க்கிறேன். ”

ஏண்ணா இது ஒங்களுக்கே சரின்னு பட்றதா. பஸ்ஸு கெளம்பிடுத்து காத்து ஒடுங்கிடுத்துன்னு எழுதறேளே. எவ்ளோப் பெரிய தேசாந்திரி இப்டியா எழுதறது. பயணிகளுக்கு மொகம் மார்ரதுங்கறேள் இலக்கிய மூனாங்கிளாஸ் மாதிரி என்னதிது. மாறித்துன்னா என்ன மாதிரி. சந்தோஷமாவா இல்லே எழவுக்குப் போறாப்பலையா. பஸ் நிக்கறச்சே புழுக்கமா இருந்துதுன்னு சொன்னா ஓகே. பஸ்ஸு கெளம்பினா காத்து ஒடுங்குமா? காத்து ஓவரா அடிச்சி, தலையக் கலச்சி சொட்டையக் காட்றதுக்கு மின்னாடி கர்சீப்பை எடுத்துக் கட்டினேன்னு சொன்னா அது நியாயம். ஓட்ற பஸ்ஸுல காத்து ஒடுங்கறாதாவுது, எந்த தேசத்துலயோ? பத்தி ரொப்ப எத்த எழுதினா என்ன. இணையமானாலும் இன்னொரு பத்திரிகையானாலும் எல்லாம் ஒன்னுதான். கடசீல புக்கு டப்பு துட்டு ஆயிரக்கனக்கான வலைப்பூவுல எனக்குப் பிடித்த எழுத்தாளர் லிங்க்கு.

”ரயில் சென்ற பின்னும் ஆடுகள் துள்ளியாடிக்கொண்டேயிருக்கின்றன. அவை யாருக்காகவும் ஆடவில்லை என்பது தான் காரணமா?”

ஆடு தீசிஸ் முடிஞ்சுடுத்தா. இல்லாட்டி ஒரு வேளை சமூகம் ரயில்வே கேட் வெயிட்டிங்லயே ஒத்த ஆட்டைப் பாத்துட்டு லோகமே தெரியாமெ மடிக் கணினில மூழ்கி தட்டச்சிண்டிருந்தேளோ. ஊர்போய் சேர்ரத்துக்குள்ளயே அப்லோட் பண்ணிட்லாமே.

”காட்சி மறைய துவங்குகிறது. சந்தோஷத்தின் சிறு கிளையை ஒடித்து எனக்குள் மென்றபடியே நான் போய்க் கொண்டிருந்தேன் நடனமாடத் தெரியாமல்.:

தத்தகிட தத்தகிட தீம் கவித்துவமா வாசிச்சு கச்சேரிய ஏறக்கட்டிட்டேள். நம்ப ரெண்டு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும் மனசாட்சியத்தொட்டு சொல்லுங்கோ, கெளையவா மென்னுண்டிருந்தேள், எந்த கம்பெனில எவ்ளோ பேமெண்ட் பாக்கி, flat க்கு டியூ கட்டணுமே, ஆனந்த விகடன்லேர்ந்து செக் வந்துருக்கும், அஞ்சு புக் வெளியாறதே அதுலேர்ந்து எவ்ளோ வரும். அடுத்த டிஸ்கஷனுக்கு ட்ரெய்ந்தான் அதுல நடு பர்த் போட்டானா எதிர் காத்து படுத்தியெடுத்து இருமல் சளி ஜலதோஷம் பிடிச்சிண்டுடுத்துன்னா இப்டி ஓராயிரம் யதார்த்தாத்தை மென்னுண்டு கெளைய மெல்றதா சொல்றேளே அடுக்குமா.

”நடனமாடத் தெரியாமல்.”

இது ரொம்ப ஓவர்னா. அடைஞ்சிருக்கிற வெற்றியே நீங்க ஒரு தேர்ந்த ”நடனக் கலைஞர்” அதுலயும் அடுத்தவா டியூனுக்கு சூப்பரா ஆடுவேள்ங்கறதைத்தானே காட்றது.

வாழ்க்கையின் குரூரத்தை கோர முகங்களை சொல்லத்தான் இலக்கியம். எழுத்துக்கு மை சிவப்பில்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. அழகும் ரம்மியமும் ரசிப்பும் சேர்ந்ததுதான் கவித்துவம். மறுப்பே இல்லை. இது தெரியாதவரல்ல எஸ்.ராமகிருஷ்ணன். அல்லது வாழ்க்கையின் துயரங்களையோ நிதர்சனக்களையோ பார்க்கத் தெரியாதவருமல்ல. நான் ராமகிருஷ்ணனிடம் நேர்ப்பழக்கம் கொண்டு ட்ரைவ் இன்னில் சந்தித்த பல நாட்களில் அவர் எவ்வளவு இன்னல்களில் இருந்திருக்கிறார் என்பதை நான் அறிந்ததே இல்லை. காரணம் நான் அவருடைய நெருங்கிய நண்பனில்லை. அதனால் அவர் என்னிடம் சொல்லியதில்லை. நான்தான் அவரிடம் புலம்பியிருக்கிறேன். என் கதைகளைப்பற்றி எவனுமே பேசுவதில்லை என்று. மிகக் குறைவாகவே எழுதியும் கூட நீங்கள் ஒரு பெயராக இருக்கிறீர்கள் என்பதே உங்கள் எழுத்தின் வெற்றியல்லவா என்று அவர் கூறியபோது, அவற்றை நமக்குப் பின் வந்த இளைஞனின் ஆறுதல் வார்த்தைகள் என்றே எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர் பற்றிய தகவல்கள் கூட எனக்குத் தெரியாது. டிரைவ்-இன்னில் சில மணி சந்திப்பு.

அவரது வலைத் தளத்தில் “என்னைப் பற்றி” என அவர் எழுதி இருப்பதைக் கண்டு துணுக்குற்றேன். உள்ளூர வெட்கப்பட்டேன். இப்படி நமக்குத் தெரிந்த ஒருவர் பல நாட்கள் எவ்வளவு சிரிக்க வைத்திருக்கிறார். ஊரில் இருப்பவன் தலையையெல்லாம் உருட்டிக்கொண்டிருந்த நாமோ, தங்கக் கூட அறையின்றி இவர் இருப்பது கூட அறிந்திராத உண்மையான ‘மெட்ராஸ்காரனாய்’ இருந்திருக்கிறோமே என்று அதைப் படித்த போது உள்ளூரக் குன்றிப் போனேன். அவ்வளவு கஷ்ட்டத்திலும் தன் பிரச்சனையை வெளிக்காட்டாத அவரது சுய கெளரவம் என் மதிப்பில் அவரை பல படி உயர்த்திற்று. எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு முதல் காவு என்னை சுற்றி இருக்கும் மனிதர்கள்தான். புலம்பியே அமைதி காணவும் விளம்பியே கூர்மையடையவும் பேசியே எழுதாமல் போகவும் நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்.

ஒரு மனிதன் எவ்வளவு கஷ்ட்டத்திலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு எஸ்.ரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

வாழ்க்கையின் அவ்வளவு இடிபாடுகளையும் வதைப்புகளையும், எழுதி காசாக்கினான் அல்லது சூதாட்டத்தில் பட்ட கடனடைக்கக் கதையாக்கினான் தாஸ்த்தயேவ்ஸ்கி. காசுக்காக எழுதுவதும் கலையாகும் உன்னிடத்தில் உண்மை இருந்தால்.

சோப்பு டப்பா

ஒரு நண்பரின் வீட்டில் ஒரு முறை தங்க நேர்ந்தது. காலையில் குளிக்க பாத்ரூம் சென்ற போதுதான் நினைவிற்கு வந்தது சோப்பு டப்பா எடுத்து வரவில்லை என்பது. அந்த வீட்டின் சோப்பு டப்பா வித்தியாசமாக இருந்தன. நீல நிறத்தில் அடியில் துளைகள் வைத்து இருந்தன. என்னிடம் ஊரில் இருந்த சோப்பு டப்பா பச்சை நிறத்தில் இருக்கும். அது நீள்வட்ட வடிவில் இருந்தது, அதை நான் கடையில் வாங்கிய போது, அந்தக் கடைகாரரின் மனைவி நிறைமாத கர்பிணியாக இருந்தாள். அவளுக்கு இப்போது பிள்ளை பிறந்திருக்கும். பெண்கூட பிறந்திருக்கலாம். அது இப்போது கல்லூரியில் கூட படித்துக் கொண்டு இருக்கலாம்....

இந்தக் கதைட்டுரைக்கு பேனா நிப்பு தெரிய மோவாயில் முட்டு கொடுத்தபடி மோட்டு வளையில் குத்தி நிற்கும் போஸுள்ள படம் வைக்க சிபாரிசு செய்கிறேன்.

டம்ப்ளர்

அந்த வீட்டிற்கு விருந்தினனாய் போயிருந்தேன். மிகவும் பிரியமாக உபசரித்தார்கள். உபசரிப்பதே ஒரு கலை. அது எல்லோருக்கும் கைவருவதில்லை. எங்கள் தாத்தா வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது, இன்னும் கூட என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு டம்ப்ளரில் காப்பி கொடுத்தார்கள். எல்லார் வீட்டிலும் ஒரு டம்ளர் இருக்கத்தானே செய்கிறது. ஒவொரு வீட்டின் டம்ப்ளரும் ஒரு கதையை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. பல சமயங்களில் டம்ப்ளர்கள் ஆதி மனிதர்களின் கைரேகைகளைக் கூட கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. பெயர் எழுதப்பட்டவை எழுதப்படாதவை டம்ளர்களில் பெரும்பாலும் மனிதர்கள் சீப்பித்தான் குடிக்கிறார்கள். வேத காலத்தில் அவர்கள் சீப்பாமலே குடித்தார்களென்றும் அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கூட சில வீடுகளில் கொதிக்கும் காப்பியைக் கூட தூக்கிக் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது என்றும் 1934 லேயே அசோக மரங்கள் சூழ்ந்த கன்னிமரா லைப்ரரியில் இருக்கும் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

புதிதாக எழுத ஆசைப்படும் இளைஞர்களுக்காகவே நான் இதை எழுதுவது. எஸ்ராவிற்காக அல்ல.

இது எஸ்.ரா பற்றிய என் ஒட்டுமொத்த இலக்கிய விமர்சனமும் இல்லை. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஒரு மாஜி எழுத்தாளனுக்கு அந்த அருகதைகூடக் கிடையாது என்பதையும் நான் அறிவேன்.

கீழே இருக்கும் சுட்டியில் இருக்கும் கட்டுரை அளவிற்கு கட்டுக்கோப்புடனும் முழுமையாகவும் எழுதுவதென்பது எனக்கு சாத்தியமா எனில் சந்தேகமே இல்லாமல் சாத்தியமில்லை என்றே கூறுவேன். படிப்பாளிப் பாங்கு ஆராய்ச்சிக்குப் படிப்பதனால் வருவது. பாசாங்கினால் அல்ல. இதைப் படித்துவிட்டு பாராட்டி எஸ்.ரா விற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். இது அசோகமித்திரன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை.
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=666

இது மூத்த இலக்கியவாதியைப் பற்றி முதிர்ந்த வாசகர்களுக்கு எழுதப்படுவது. முக்கியமான கட்டுரை.

ஆடுகளின் நடனம், ஆடு மாடுகளுக்காக எழுதப்படுவது அவற்றுக்கு இது போதும்

http://www.sramakrishnan.com/view.asp?id=433&PS=1

எழுத்துக்கு உதாசீனம் எமன்

அவர் எழுதியிருக்கும் எதையும் நான் படித்ததில்லை. அத்தனையும் படிக்க எனக்கு ஆயுசும் காணாது, ஏனென்றால் ஜோசியன் கணிப்புப்படி இன்னும் 5-10 வருடங்கள்தான் எனக்கிருப்பது.

இதற்குள் நான் எழுத வைத்திருக்கும் ஏகப்பட்ட கதைகளை எழுதியாக வேண்டுமே என்கிற பதைப்பே எனக்கு மேலோங்கியுள்ளது. இதற்கிடையில் இந்த விஜய் மகேந்திரன் என்கிற நபர் படிக்கச் சொல்லி லின்க் கொடுக்க அது என்னை எழுதத்தூண்ட மிகுந்த பொறுப்புனர்வோடு அவர் பெயரைத் தவிர்த்து நான் ஒரு கட்டுரை எழுத, சில இளைஞர்கள் உபயோகமாய் இருப்பதாகக் கூறி உசுப்பேற்ற (என் கதைகளை என்னை எழுதவிடாமல் செய்கிற எதிரணியின் சதியோ இது  என்றுகூட ஒரு சான்றற்ற சம்சயம் எனக்குள் உண்டு. இந்த இளைஞர்களின் ‘தல’ யை விட்டுவிட்டு என்னிடம் எப்படி?)

இந்த மாதிரி பத்திகளை பயிற்சிக்காக எழுதிப் பாருங்கள். ஆனந்த விகடனுக்கு எழுத வேண்டும் என்றால் இதை நீங்கள் எழுதிப் பாருங்கள். அப்போதும் இதை விட்டு வித்தியாசமாக எழுதிப்பாருங்கள். வித்தியாசம் தான் வியாபாரமாகும். அது வெவரமான வித்தியாசமாக இருக்க வேண்டும். விவகாரமான வித்தியாசமாய் இருத்தலாகாது.

எழுத்து வாசிப்புத்தன்மை கொண்டிருப்பதே பெரும் கலை ஆகிவிடுவதில்லை. சுவாரஸ்யமான மேம்போக்கான வாசிப்பே கலை என்றால் அதன் சிகர சாதனை சுஜாதா.

காதில் விழும் அடுத்தவன் கைத்தட்டலுக்காக எழுதுபவன் கேளிக்கையாளன். தாளகதிக்கேற்ப சதிர் மாறும்.

தன் மனதின் குரலுக்கு செவிமடுத்து, கொள்வார் இலையெனினும் கூவிக்கொண்டிருப்பவன் எழுத்தாளன். அவனுக்குக் கைத்தட்டல் கூடுதல் போனஸ், அவ்வளவுதான். அதுவே அவனுக்கான ஆதார சுருதி அன்று.

டம்ப்ளரில் எத்தனை டம்ப்ளர்கள் அந்த வீட்டில் இருக்கின்றன அவற்றில் உங்களுக்கு எது கொடுக்கப்பட்டது, அவர்களால் உபயோகப்படுத்தப் படுவது எது. உங்களோடு வருபவருக்குக் கொடுக்கப்படுவது எது. அவர் யார் என்ன ஜாதி. அதற்காகதான் அப்படிக் கொடுக்கப்பட்டதா. எச்சை பண்ணாமல் குடிக்கிற பட்சத்திலும் நீங்கள் அந்த வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு அந்த டம்ப்ளர் எப்படிக் கழுவப்படுகிறது யாரால் கழுவப்படுகிறது இப்படி ஆயிரம் கேள்விகள் உங்கள் உள்ளே புகுந்து குடாய்ந்து கொண்டே இருக்குமானால் நீங்கள் டம்ப்ளரைப் பற்றி நேரடியாக எழுதாவிட்டாலும் உங்களது எழுத்தில் எங்கோ ஒரு கீற்றில் கங்கு போல் அது வெளிப்பட்டுவிடும். அந்த கங்கு உங்கள் எழுத்தை உயர்த்தும்.. அதைசுற்றி எழுதப்படும் யாவும் அதற்குத் துண நிற்கும். அதற்கு உங்கள் பயிற்சி செய்நேர்த்தி உழைப்பு கைகொடுக்கும்.

எவன் சொன்னான் இலக்கிய எழுத்தாளன் கலகக்காரனில்லை என்று. அவன், எந்த கட்டிற்குள்ளும் கட்சிக்குள்ளும் அடைபட மறுக்கும் கலகக்காரன். முதலாளித்துவ நாட்டில் கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் நாட்டில் எதிர் கம்யூனிஸ்ட்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில்
வாக்கினிலே ஒளியுண்டாகும்

இதைச் சொன்னவனைவிடவா ஒரு பெரிய கலகக்காரன் இனிமேல் பிறக்கப் போகிறான்.

உண்மையான எழுத்தாளனின் அடையாள முத்திரை உண்மை. முகத்திரை அன்று.

***

இதற்கு உடனடியாக எதிர்வினை செய்தது எஸ்.ரா இல்லை இணையவேழம் சாரு நிவேதிதா.