Friday, February 17, 2012

சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு - 4

அலுவலகப் பிரச்சனையில் அரசியல் பின்புலமுள்ள அதிகார ’எதிரிகளின்’ பழிவாங்கலுக்கு எதிராய் என்னால் முடிந்தவரை எதிர்த்து நின்று பார்த்தேன். இனி தாக்குப்பிடிக்க முடியாது என்கிற நிலையின் வாசனை தட்டுப்படத் தொடங்கியதும் மேல் ஏறி தலையில் அடிப்பதுதான் ஒரே வழி என்று தோன்றியது. பழிவாங்கலில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வேண்டும் அதே சமயம் அலுவலகப் புலனாய்வில் ஆற்றலை நிரூபித்துக்காட்டவும் வேண்டும். அதற்கு சரியான இடம் கலால் புலனாய்வு மையம் மட்டுமே என்கிற எண்ணம் பலப்படத் தொடங்கிற்று.

அரசு அலுவலகங்களின் அடைப்படை விஷயங்களில் ஒன்று, ஒருவன் மாற்றலாகிச் செல்லும் முன்பாகவே அவனைப்பற்றிய பிம்பம் வம்பாய் பறந்து சென்றுவிடும். RTI போட்டு சேவை வரியில் ரகளை செய்துகொண்டிருந்தானே ஐயோ அவனா என்கிற பேச்சு என் விண்ணப்பத்தைப் பார்த்ததுமே தீயாய்ப் பற்றிக்கொண்டது. 

[இன்று என் அலுவலக சகாக்களில் பலரும் எதிரிகளில் சிலரும் இணையத்தில் குறிப்பாக ஃபேஸ்புக்கில் நான் இடும் சுட்டிகளைப் படிக்கிறார்கள். தொடர்ந்த பார்வையில் நான் இருப்பதால், இணைய எழுத்து சுமோவீரர்களைப்போல் கண்டபடி ரீல் சுற்ற, குறிப்பாக அலுவலகம் பற்றியும் அங்கே என் இருப்பைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததும் எழுதி உங்களிடம் கரகோஷம் வாங்கிக்கொள்ளும் சவுகரியம் எனக்கு இல்லை.] 

ராஜாஜி பவனிலிருக்கும் அலுவலகத்தின் கதவுகள் எனக்குப் பிரத்தியேகமாய் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்துகொள்ளாமல் மண்டையை முட்டிக்கொண்டிருந்தேன். என் ஆற்றலை நிரூபித்துக்காட்ட வீட்டிற்கு நடைதூரத்தில் இருக்கும் அலுவலகத்தில் நுழைவு மறுத்து அறைந்து மூடப்பட்டிருந்த கபாடத்தைத் திறக்க உதவிகேட்டுப்போனது உயிர்மை மனுஷ்ய புத்திரனிடம். அவரை அதற்குமுன் பார்த்திருந்ததே ஓரிருமுறைதான். எனவே மனுஷ்ய புத்திரனின் அலைபேசி எண்ணைக் கேட்டது சாருவிடம். உயிர்மை அலுவலகத்திற்குள் நுழையும் தறுவாயில் தற்செயலாய் சாருவை எதிர்கொள்ள நேர்ந்தது.

வழக்கம்போல மனம்போனபோக்கில் வளவளா பேச்சில் பல்லாண்டு இடைவெளியில் இலக்கிய உலகில் நடந்திருக்கும் வினவு ஈராக் கவிதைக்காக பாசிஸ்ட்டுகள்போல் வீடுபுகுந்து ரகளை செய்தது போன்ற நானறியாத அடிதடிகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் சாரு. அய்யே எங்கள் அலுவலகம் போலவே தற்கால இலக்கியத்திலும் ஒரே அடிதடி ரகளைதானா 15 வருட இடைவெளியில் பெரிதாக ஒன்றுமே மாறவில்லை போலிருக்கிறதே என்று சொல்லி வைத்தேன் அதுதான் நான் செய்த தீவாந்தர சிக்ஷை கொடுக்கதக்க மாபெரும் குற்றம்.

அன்று இரவே வந்தது பதிவு, என்று மறுநாள் காலை வந்த நண்பனின் அலைபேசி அழைப்பில், இன்னொரு பதிவு வெளியாகியிருப்பதும் தெரியவந்தது. எனக்குத் தெரியவராது என்கிற தெகிரியத்தில் எழுதியதாக இருக்குமோ என்னவோ? இல்லை தெரிந்தாலும் நம்மிடம் உதவிகேட்டு நம்மை அண்டிதானே இந்த நாய் இப்போது இருக்கிறது என்கிற சாரு நிவேதிதாவின் தெனாவட்டாகக்கூட இருக்கலாம்.


ஒரே ரகளை, அடிதடி… July 23rd, 2010 இரண்டையும் ஒருசேரப் படித்ததும் கக்கூஸ் படித்தேன் கமகம என்பதுதான் நான் அனுப்பிய குறுஞ்செய்தி. ட்யூப்லைட் அதை எப்படி எதிர்கொண்டது பாருங்கள்.
ஒரே ரகளை, அடிதடி… July 24th, 2010 இதைப்படித்துவிட்டு நான் அனுப்பிய Thanks for provoking me to write. But I am not for a fight with you. என்கிற குறுஞ்செய்திக்கு எதிர்வினையாய் சாருவிடமிருந்து வந்ததுதான்

யானையை கொசு புணர்ந்த கதை July 26th, 2010 
ஆச்சா போச்சா தான் யார் தன் கீர்த்தி என்ன என்று அரற்றும் சாருவால் யானை-கொசு கதையைக்கூட ஒரிஜினலாக எழுதத் துப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.

சாருவைப் பற்றி ஜெயமோகன் Jun 24 2008ல் சொன்ன ஒரு குட்டிக்கதையைத் தழுவி அதில் தன் சுயத்தை மொழுவி தன் தரத்திற்கேற்பதான், தன் ’எதிரியை’ அடிக்கவேண்டி இருக்கிறது ச்யோாருவுக்கு. பாவம் சுட்ட கை சுடுவதை சுடுகாட்டிற்குப் போகும்வரை நிறுத்த முடியுமா?

எதையேனும் எப்போதேனும் சுயமாக எண்ணிப் பார்க்கும் திராணியுள்ள எவனாலும் வாசகனாய் மட்டுமே இருக்கமுடியும். எப்படி ரசிகனாக இருக்க முடியும்? ரசிகன் வாசகனல்ல அவனே உலகமுமல்ல. ரஜினிக்கு இத்துனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ரஜினிக்குப் பெருமை. மெளனியின் வாசகன் என்பது வாசகனுக்குப் பெருமை. தன்னைப்பொருத்தமட்டிலும் இது எப்படியாவது உல்டா ஆகிவிடாதா என்று தலைகீழாய் தொங்கிகொண்டு தவமிருப்பவன் எழுத்தாளனா?

யார் யாருக்கு எவ்வெப்போது நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய வேண்டிய கவிதை இது எனவும் ஃபாரீன் பல்கலைகழகத்தில் இவர் துறைத் தலைவராக இருக்கத் தகுதியானவரென ஒன்றையணா தளத்தில் ஒப்புக்கு சிபாரிசு செய்யவேண்டிய தருணம் எதுவென்றும் சமயத்திற்கேற்ப தட்ட வேண்டிய தாளத்தை சுத்தமான கணக்குகளோடு தட்டிக்கொண்டு வாழ்வபர்தான் சொல்லிக்கொள்கிறார் தான் ரொம்ப வெள்ளந்தியானவன் என்று. வெள்ளையாக இருப்பவனெல்லாம் வெள்ளந்தியாக இருப்பான் என உலகம் நம்பிவிடும் என்று சாருவுக்குதான் எவ்வளவு உறுதியான நம்பிக்கை.

சாரு மட்டும்தான் இப்படி என்று நினைக்க ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தால், புத்தனுக்கு அடுத்து பூத்தமுகத்துடன் அன்பால் உலகையே ஆரத்தழுவிக்கொண்டே இருக்கும் எஸ்.ராவின் வயிற்றுப் பல்லைப் பார்க்கவேண்டுமா?