Sunday, February 26, 2012

மாடன் மோட்சம் - கார்ல் மார்க்ஸ் போட்ட கடிதம்

karl max ***@gmail.com  7:39 PM (27 minutes ago)
to me

அன்புள்ள மாமல்லன்,

இன்று தான் 'மாடன் மோட்சம்' பற்றிய தங்களது விரிவான ஆராய்ச்சியை (!) படித்தேன். இதற்கு பின்னான தங்களது உழைப்பை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. படித்ததை பற்றி நாலு வரி 'google transliteration பயன்படுத்தி தமிழில் அடிப்பதற்கே கடுப்படிக்கிறது.

மாடன் மோட்சம் எனக்கு மிகவும் பிடித்த கதை. கிட்டத்தட்ட ஜெயமோகனின் எல்லா படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். ஆனாலும் அவரது உளறல்களை என்னால் சகித்து கொள்ளவே முடியாமல் இருந்தது. அன்னா ஹசாரே குறித்த அவரது கட்டுரைகளுக்கு பிறகு அவரை படிப்பதையே நான் நிறுத்திவிட்டேன். எஸ்ரா குறித்தும் இவ்வாறான புகாரே என்னிடம் இருந்தது. மிகவும் சலிப்பூட்டும் படியான நடை. ஒரு தேர்ந்த வாசகனை ஈர்க்கும் சாத்தியமில்லாத வறட்சி.

நண்பர்களுடனான உரையாடலில் புலம்பிக்கொள்வோம். தங்களது மீள் வரவுக்கு முன்பு உங்களை எனக்கு தெரியாது. உங்களது படைப்புகள் எதையும் முன்பு நான் படித்து கிடையாது. இப்போதுதான் படித்துகொண்டிருக்கிறேன். தங்களது வலைத்தளம் மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நன்றாக எழுத தெரிந்த ஒரு ஆள் இந்த உளறல்களுக்கு எல்லாம் எதிராக எழுத வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். சாரு வின் நிகழ்ச்சியில் கூட ஞானி நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்கி கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். எனக்கு அப்படி தோன்றவில்லை. தேடி தேடி நிறைய படிக்கிற வாசகனாக என்னை உணர்வதால் நான் நிஜமாகவே இதை சொல்கிறேன். நீங்கள் இவ்வாறு தொடர்ந்து எழுதுவதுதான் சரி.

என் பெயர் கார்ல் மார்க்ஸ். (வீட்டில் வைத்த பெயர்தான்). கும்பகோணத்துக்கு அருகில் அம்மாசத்திரம் என்ற ஊர். நம்பிக்கு தெரியும். நிறைய முறை வந்திருக்கிறார். இலக்கியம் பேசி முடித்த பின்னிரவில் நடக்க முடியாமல் (!) ஆகும் அவரை தூக்கிக்கொண்டு நடந்திருக்கிறோம். படிக்கும் பழக்கம் கொண்ட நிறைய இளைஞர்கள் உள்ள ஊர். (நான் சொல்வதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு. இதை எழுதும் போது நம்பியின் வாயில் இருந்து வரும் கெட்ட வார்த்தை காதில் ஒலிக்கிறது) 

நாங்கள் வேலை எதுவும் இல்லாமல் படித்துக்கொண்டும் அதைப்பற்றி பேசிக்கொண்டும் மட்டுமே இருந்த காலங்களில் (1992 - 1998 ) கோணங்கி, எஸ்ரா, யூமா,அ. மார்க்ஸ் மற்றும் நிறைய பேர் அங்கு வருவார்கள்.

எங்களது நண்பர்களில் இரண்டு பேர் ஊரில் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் வேலை செய்கிறார்கள். நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன். mechanical engineer . ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஊருக்கு வருவேன். நிறைய படைப்பாளிகளை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்ததனாலோ என்னவோ தங்கள் மீது எனக்கு ஒரு மரியாதையும் வசீகரமும் இருக்கிறது. நீங்கள் நிறைய எழுத வேண்டும். எப்போதும் என்னைப்போன்ற வாசகர்களின் அன்பு தங்களுக்கு உண்டு.

அன்புடன்,
கார்ல் மார்க்ஸ்.

அன்பான கார்ல் மார்க்ஸ்,

எழுத்தாளன் என்பவன் என்ன எழுதிக் கிழிக்கிறான் என்பதைவிட குழு சேர்க்காமல் அனாதையாக இருக்க முனையவேண்டும் என்பதுதான் என் எண்ணம். எப்போது வேண்டுமானாலும் எவனை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தூக்கி எறியத்தயங்காதவன் அனாதையாகத்தானே இருந்தாக வேண்டும்.

இதுபோல எப்போதேனும் தெரிவிக்கப்படும் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதிலிருந்து வழுவாதிருக்க என்னால் முயன்றவரை முயற்சிக்க வேண்டும்.