Thursday, March 1, 2012

முகமும் நகமும்

<என்ன நரசிம்மன் சார் எப்படி இருக்கீங்க......... ஞாபகம் இருக்க என்ன??.. உங்க அண்டை வீட்டு சின்ன பையன்...> 

என்கிற மெய்ல் பார்த்ததும், நமக்கு அண்டைவீட்டில் பாலாஜி என்கிற பெயரில் யார் இருக்கிறார்கள் என்று குழம்பி ஏதும் புரியாமல் மெர்சலாகிவிட்டார்.

கடிதத்தில் ரமேஷ்-மகேஷ் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்ததும்தான் யார் எனப் பிடி கிடைத்தது. குரோம்பேட்டையில் இருக்கும் தம்முடைய 5ஆம் நம்பர் ஃப்ளாட்டுக்குப் பக்கத்தில் 6ஆம் நம்பர்க்காரர்.

ரமேஷ்-மகேஷ் என்பது அந்த அபார்ட்மெண்டின் அண்ணன் தம்பி பில்டர்கள். 

பில்டர்வாள்கள் அடிதளத்திலிருந்து செய்திருந்த கோல்மால்களைத் தனியொருவராய் புலன்விசாரனையில் இறங்கி அம்பலப்ப்படுத்தியது நினைவில் மேலெழுந்து பெருமூச்சாய் வெளியேறிற்று. வங்கிக்கடனை வாங்கிக்கொண்டதாய் ஜெராக்ஸ் பிரதியில் கையெழுத்து போடச்சொல்லி பில்டர் அனுப்பிவைத்த ஆள் வந்து நின்றதில் இருந்து அடிவயிற்றில் உருண்ட கிலேசம் திரண்டு எழுந்து ஒரிஜினல் கடன் கடிதம் என்னாயிற்று யாருக்குப் போயிற்று என்ன நடக்கிறது என்ற விடையற்ற கேள்விகள் பீஜங்களாய் முளைவிட்டன. என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ளத் தெருத்தெருவாய்த் திரியவைத்த காலங்கள். 

தம்முடையதும் இந்த அண்டைவீட்டாருடையதுமான வீட்டின்மேலும் ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த கடன்களை அடைக்காமலேயே, இவர்கள் இருவர் பெயரிலும் இரண்டு கடன்கள் வாங்கியிருப்பது தெரிய வந்ததில் நெஞ்சு பதைத்தது. அந்தக் கடன்கள் அடைபடாமல் தங்கள் வீடுகளுக்காக அதே வங்கியில், தங்கள் பெயரிலும் எப்படி கடன் கிடைத்தது? தங்கள் வீட்டு நம்பரில் பழைய கடன்கள். தங்கள் கடன்களுக்கோ வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி வீட்டு எண்கள் வேறு என்பது பிடிபடவே பலநாள் உழற்வு.

ஐயையோ, அப்படியானால், நாள் நட்சத்திரம் பார்த்து ஹோமம் வளர்த்து பிரவேசம் செய்திருந்த செய்யவிருந்த வீடுகள், வங்கியில் இருக்கும் ஆவணத்தின்படி வேறு இருவருடையவையா? இதுதான் நிஜம் எனில் அவர்களது வீடுகளும் தங்களது வீடுகளும் எப்படி வங்கிக் கணக்கில் இடிக்கவில்லை? அவர்களுடையவை வங்கிக் கடனில்லா கைக்காசுப் பறிமாற்றம். வங்கிக் கணக்கின்படி அவர்கள் கணக்கிலேயே வரவில்லை. எவர்கள் கணக்கில் வரவில்லை? இவை என்ன இரண்டு வீடுகள் பிரச்சனையா? நான்கா? ஆறா? இருப்பவை எட்டு வீடுகள்தாமே? ஆக உபரியாய் வாங்கப்பட்ட நான்கு வீடுகளுக்கான கடனை முதலாய் வைத்தே அல்லது ரொடேஷனில் விட்டே எட்டு வீடுகளைக் கட்டிமுடித்துவிட்டார்களா? எவன் கடன் எவன் தலையில் சுமையாய் இருந்துகொண்டு இருக்கிறது? அடித்தளத்தில் புதையுண்டிருக்கும் எலும்புகள் பற்றிய பிரக்ஞையேயில்லாத புத்த புன்னகையுடன் மெல்ல மெல்ல தன்னை அலங்கரித்து வளந்துகொண்டிருந்தது எட்டு வீடுகள் கொண்ட அந்தக் கட்டிடம்.

என்னதானய்யா நடந்திருக்கிறது என்று கேட்கப்போனால்,

என்ன இருந்தாலும் நாம்பள்ளாம் பிராமணாள் இல்லியா. அப்பிடில்லாம் அடுத்தவாளை மோசம் பண்ணிடுவோமா என்ன? என்று வாய்க்குவாய் ‘பிராமணாளிடம்’ சொல்லிக்கொண்டும், சார் எனக்கு ஜாதில்லாம் கிடையாது என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸே குப்பத்துக்காரங்கதான் என்று அ-அவாள்களிடம் சொல்லிக்கொண்டும் திசைக்கொரு முகம்காட்டி சுழன்றவண்ணமிருந்தனர் அண்ணன் தம்பிகளான ரமேஷ்-மகேஷ்.

அனைத்து முஸ்தீபுகளுடனும் சாஸ்திரோக்தமாய் பிரவேசிக்க இருக்கும் வீடுகள் நம்முடையவையே அல்ல என்று தெரிந்ததும் எவ்வளவு நொறுங்கிப்போய்விடும் மத்தியதரவர்க்கம். வீட்டு நம்பரை வங்கியில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் ஒய்ட்னர் வைத்து மாற்றிய தகிடுதித்தங்கள உட்பட அத்தனை வீட்டு சமாச்சாரங்களையும் RTI போடவா என்று வெவ்வேறு வங்கிக் கிளைகளில் தரவுகளோடு வாய்ச்சவடாலில் மிரட்டியே தகவல்களை கறக்கத் தொடங்கினார். ஓரிடத்துத் தகவலை அடுத்த இடத்தில் தரவாகக்காட்டி பின்னும் தகவல் பறிப்பு என்று அலுவக வேலைக்கு இடையில் வங்கிகளுக்கும் வீடு வாங்கிய நபர்களின் முகவரிகளைத் தேடியும் தாவிக்கொண்டிருந்தார். 

ஒவ்வொருவராய் ஏதேதோ முகவரிகளில் அகண்டாகாரச் சென்னையின் மூலைக்கொருவராய் இருந்தவர்களைத் தேடித்தேடி அந்தக் கட்டிடத்தைப் பீடித்திருப்பதென்ன என்று சொல்லிப் புரியவைக்க முயன்ற அவரது எத்தனங்கள் பயமாகவும் இவன் சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகவேதான் இருக்கும் இருக்கவேண்டும் என்கிற பிரார்த்தனையாகவும் மட்டுமே நம்பத் தலைப்பட்டு,வெறுப்பேற்றும் வியர்வையாயின.இவரோடு சேராமல்,பில்டர்களை முறைத்துக்கொள்ளாதிருந்தால் ந்மக்கு மட்டுமேனும் வீடு கிடைத்துவிடாதா என்கிற கால்களின் பின்னிழுப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் வில்லன்கள்.

ஒருங்கிணைத்துக் கூட்டிச்சென்ற கூட்டத்தை ஒரே வாக்கியத்தில் கலைத்தான் கில்லாடி ரமேஷ்.

சார் வீட்டை நான் தனித்தனியாதானே வித்தேன்? இப்பிடிக் கூட்டமா வந்தா என்ன சார் நியாயம். ஒவ்வொருத்தரா வாங்க பேசலாம் - இதைக் கேட்டுக்கொண்டு போகவே வந்தவர்களைப்போல அநேகமாய் எல்லோரும் எழுந்து சென்றுவிட்டனர். 

தனியாளாய் விடப்பட்டவனிடம் கொக்கரக்கோவென்றது சவடால்.குரல்.

பாத்தீங்களா? போதுமா? இவ்ளதான் இவங்க. அவங்களுக்கு வேண்டியது வீடு. அது கெடைச்சா போதும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை தலைக்குமேல கெடக்குது சார். வேலை வெட்டியை விட்டுட்டு உங்க பின்னாடி யார் சார் வருவா? ஒண்ணுமில்லாத விஷயத்தை நீங்கதான் பெருசு பண்றீங்க. யார் பேர்ல எவ்வளவு லோன் இருந்தா உங்குளுக்கு என்ன சார். அது பில்டருக்கும் பேங்குக்குமான பிரச்சனை. உங்குளுக்கு வேண்டியது வீடு. அதைக் குடுக்கறத்துக்கு நாங்க கியாரண்டி. சும்மா இருந்தா எல்லாத்தையும் சரி பண்ணித் தருவோம். எங்க போய்க் கம்ப்ளெய்ண்ட் பண்ணினாலும் பணம் கட்டப்போறது யாரு? கமிஷ்ணரா? நாங்கதானே? எங்கப் போனாலும் பிரச்சனை சுமுகமா முடியணும்னா திரும்ப எங்ககிட்டதான வந்தாவணும்? 

தளபதிக்கு ஃபோன் போடணுமா இல்லே தோட்டத்துக்கா? பேக்ரவுண்ட் இல்லாம இந்த பிசினினஸை இருபது வருஷமா சக்ஸஸ்ஃபுல்லா நடத்த முடியுமா? சார் இந்த வெலைல எங்கையும் உங்குளுக்கு வீடு கிடைக்காது. இந்த விலையிலையும் கிடைக்கணும் ஆனா எல்லாமும் பக்காவாவும் இருக்கணும்னா எப்பிடி சார். பிராக்டிகலா பாருங்க. கஷ்டப்படற மிடில் கிளாசுக்கு அஃபொர்டபுளா வீடு குடுக்கணும்னா கொஞ்சம் அப்பிடி இப்படித்தான் இருந்தாவணும். இதுக்குப்போய் ஏன் சார் இவ்ளோ கலாட்டா பண்றீங்க? 

இதேபோல ஒவ்வொருவரிடமும் என்னென்ன வேதம் ஓதப்பட்டதோ? இவர் தலை தென்பட்டாலே அக்கம்பக்கம் வீடு வாங்கியோர் தவிர்க்கத் தொடங்கினர்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்து வாங்கிப் பார்த்ததில் 8 ஃப்ளாட்டுக்கு 42 பதிவுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதில் இறந்துபட்ட மனிதரின் பெயரும் அடக்கம் என்பது துருவலில் தெரிய வந்தது. என்னைய்யா இது என்று பில்டரைக் கேட்ட கொஞ்ச நாட்களில், சாம்பலில் இருந்து, ’இறந்த மனிதர்’ எழுந்து நேராக பதிவு அலுவலகத்திற்குப் போய் பத்திரத்தையே ரத்து செய்துவிட்டார். ஆனால் அவர் கட்டவேண்டிய கடன் மட்டும் கட்டப்படாமல் வங்கிக் கணக்கில் நிலுவையில் இருந்தது. இதைப் பார்த்தீர்களா என்று வங்கி மேலாளரிடம் காட்டினால் ஐயையோ இந்தக் கடன்காரனால நேக்கு வேலை போயிடுமே சார் என்று அலறத்தொடங்கினார். 

இதே அதிகாரிதான், அதற்கு இரண்டு மாதங்கள் முன்னால் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்கோ. எக்மூர் கமிஷ்ணர் ஆபீஸ்ல போயிக் கம்ப்ளெய்ண்ட் குடுங்கோ சார் என்று துச்சமாய் நடத்தியவர்.

அவரே அடுத்த கொஞ்ச நாளில், சார் நீங்க இல்லேன்னா இந்தக் கடன்காரன் பத்மநாபா நகர் பிராஞ்சிலயும் குரோம்பேட்டை பிராஞ்சிலையும் எக்ஸ்ட்ராவா ரெண்டு லோன் வாங்கியிருக்காங்கற விஷயமே நேக்குத் தெரியவந்துருக்காதே சார் என்றார்.

அதற்குப் பிறகு, சார் நீங்க மட்டும் இல்லேன்னா பேங்குக்குப் பணம் வந்துருக்காது சார். நீங்க போட்டு இந்த உருட்டு உருட்டலேன்னா எத்தனை வருஷமானாலும் அவன் திருப்பிக் கட்டி இருக்கவே மாட்டான் சார் . போன வாரம்தான் எல்லாம் நல்லபடியா நடந்துடுத்துன்னா அபிஷேகம் பண்றேன்னு ஷோளிங்கர் நரசிம்மரை சேவிச்சுண்டு வந்தேன் சார். 

சார் சமயத்துலக் கோவத்துலக் கொஞ்சம் ஓவராத் தாறுமாறாக் கத்திடறீங்க. ஆனா மனசுல ஒண்ணுமில்ல சார். ஆனா ஒண்ணுமேத் தெரியாத நல்லவனாட்டம் நடிக்கிறான் பாருங்க அந்த மேனேஜர். அவனுக்கு இருக்குது மண்டகப்படி. அவன் பொண்டாட்டி பேர்ல நாங்க கட்டிக் குடுத்த வீட்டுக்குப் பணத்தை எண்ணிக் கீழ வெக்கச் சொல்லுங்க. அந்த இன்னோரு லோனை அடைக்கிறேன். உங்க கிட்ட அவன் என்ன வேணாலும் சொல்லலாம். எங்க? எங்கிட்ட சொல்லச் சொல்லுங்க பாப்போம்?

சார் உங்குளுக்கு நூறு வயசு சார். இப்பதான் உங்களைப்பத்தி நெனச்சுண்ட்ருந்தேன். உங்ககிட்டேந்து ஃபோன் அடிக்கறது. நீங்க அவனை ஏதோ பண்ணியிருக்கேள் போல, நேத்து வந்து ஒரு போர்ஷனைக் கட்டிட்டான் சார். இப்பதான் பரிக்கல் நரசிம்மரைப் பாத்து சேவிச்சுட்டு ஃபேமிலியோட வந்துண்டே இருக்கோம். நல்ல தரிசனம் சார்.

பெரும்பலும் தன்னந்தனியாகவே போய்க்கொண்டிருந்த போராட்டத்தின் உச்சத்தில் ஒருமுறை, வெளியில் நின்ற டாடா சுமோவைப் பார்த்து உஷாராகி, இரண்டு மூன்று ஃபோன்கால்கள் அடித்து அடித்த நம்பரை சரிபார்க்கவும் என்று சொன்ன குரல்களிடம் சற்று உரக்க டாடா சுமோவுக்குக் கேட்கும்படியாக, தாழ்வான குரலில் பேசும் பாவனையில் டி ஒன் ஸ்டேஷன்தானே, சாரி சார் சிபிஐ இன்ஸ்பெக்டர்னு நெனச்சேன். ஓ அந்த நம்பர்ல பண்ணட்டுமா என்று தாம் கலவடையாகப் பேசுவது கவனிக்கப்படுகிறதா என்று நோட்டம் விட்டபடி சும்மா உலாத்திக்கொண்டிருந்தார். பில்டர்கள் வந்தபின் உள்ளே போனார். கிட்டத்தட்ட எட்டு தடியர்கள் அறைக்குள் சூழ்ந்துகொள்ள, முகத்துக்கு அருகில் வந்த கைகள் மூக்கின்மேலிருக்கும் பூனைமுடிவரை வந்ததோடு உறைந்து நின்றன.

சுய காரியத்திற்காக மட்டுமே என்று இல்லாமல் பொது விஷயத்திற்காகத் துணிந்து தெருவில் இறங்கும்போது எங்கிருந்தோ அமானுஷ்ய பலம் வருவதைத் திசுக்களில் தரிசித்த நாட்கள். 

முதலில் முன்னால் இருந்தவை எல்லாம் முட்டுச் சந்துகளாய் மட்டுமே தெரிந்தன. கண்மண் தெரியாத உறுதியுடன் தொடர்ந்து முட்டியதில் நொறுங்கி விழுந்த சுவர்கள் அலெக்ஸாண்டராய் உணர வைத்தன. திரும்பிப் பார்த்தால் பின்னால் குறும்படையொன்று திரளத்தொடங்கியிருப்பது தெரியவந்தது. 

எல்லார் தலைமேலும் இருந்த மற்றவர் கடன்களை எல்லாம் சாம தான பேத தண்டத்தின் மூலம் ஒவ்வொன்றாய் பில்டர்களையேக் கட்ட வைத்த்தார். வீட்டுக்குரிய அசல் ஆட்கள் 8 பேருக்கும் ஒவ்வொருவருக்காய் வீடு கிடைத்தது. கடைசியாய் உடமைச் சான்றிதழை வாங்கிக்கொண்டவர் அவர்தான். அதே பகுதியில் இதே ஆட்கள் கட்டியிருக்கும் 23 ஃப்ளாட்டுக்ளும் 11 ஃப்ளாட்டுகளுமாய் இன்னமும் இரண்டு அபார்ட்ட்மெண்டுகள் இழுபறியில் இருக்கின்றன.

நோண்டிய நோண்டலில் அபார்ட்மெண்டில் விடுபட்டிருந்த சுத்துப்பட்டுப் பொதுக் காரியங்கள் ஆமையாகவேனும் நிறைவேறின. ஆனால் ஆங்காங்கே எவ்வெப்போதோ போடப்பட்டிருந்த கன்னிவெடிகள் காரணமாய், பில்டர்கள் சொந்த வீடுகளை விற்றுவிட்டு சிபிஐ கேசில் ஒருமுறை செண்ட்ரலையும் எட்டிப்பார்க்க நேர்ந்தது. சமீபத்தில்கூட தலைமறைவாய் இருப்பதாகவும் சிபிசிஐடியால் தேடப்படுவதாகவும் தினசரியில் புகைப்படம் வெளியாகியிருந்ததை வங்கியின் புதிய மேலாளர் காட்டினார். அவர் பாவம் அவ்வப்போது தாம்பரம் கோர்ட்டுக்கு விட்டகுறை தொட்ட குறையாய் பழைய மேட்டருக்காக அலைந்துகொண்டிருக்கிறார். 

வங்கிப்புலனாய்வில் போய் ஆதியோடந்தமாய் நடந்திருக்கும் மோசடியை அக்கக்காய்ப் புரியவைத்து வாய்வார்த்தையாய்க் கொடுத்த புகாரினால் நரசிம்ம உபாசியான அந்த வங்கி மேனேஜரின் தற்போதைய வசிப்பிடம் புவனேஸ்வர் என்று புதியவர் மூலம் தெரியவந்தது..

உண்மையான மரியாதை, அடுத்தவன் கொடுத்து வருவதன்று. உள்ளூர நீங்கள் என்னவாய் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிவதால் உண்டாவது.

சொல்லிக்கொண்டே போகலாம் அத்துனை சம்பவங்கள் அத்துனை முகங்கள் அவமானங்கள் பெருமிதங்கள் அச்சம் பிடித்து ஆட்டிய தருணங்கள் தலை பார்த்துத் தாண்டிப்போன கார் உண்டாக்கிய அடிவயிற்று வெறுப்பில் வீட்டுவாயிலில் நின்று கத்தியதில் வெட்கிச் சுருங்கி உள்ளே வந்து கத்தச்சொல்லி கதவடைத்த பில்டரின் குடும்பத்துப் பெண்குழந்தைகளின் அவமானம் கண்டு கூனிக்குறுகிய கணங்கள் என்று...

சொந்த அனுபவங்கள் ‘போல’ அறைக்குள் உற்பத்தி செய்யப்படுபவை கட்டுக்கதைகளாய், ரெண்டு மிதிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொடித்துப் போய் காற்றில் திரிந்த மாசாய் தரைபரப்பித்தான் கிடக்கக்கூடும். 

இதையெல்லாம் தமக்குத்தாமே ஓட்டிப்பார்த்துக்கொள்ள அண்டைவீட்டுக்காரர் பாலாஜியின் கடிதமே வாய்ப்பளித்தது. ஆனால் அவர் எழுத்தாளரும்கூட என்பது அண்டைவீட்டு பாலாஜிக்குத் தெரிந்திருக்கவில்லை. 

இதெல்லாம் நடந்தது 2007லிருந்து 2010வரை. அப்போதெல்லாம் தாமும் கூட எழுத்தாளர்தான் என்பது அவருக்கே தெரியாமல் தலைமுழுகிவிட்டிருந்த விஷயமல்லவா. அப்புறம் எப்படி பாலாஜிக்குத் தெரிந்திருக்க முடியும்? 

”காலம் சுற்றி வந்தாவது சத்தியத்தை முத்தமிடும் என்பது கலைஞனின் நம்பிக்கை. இவ்வுண்மை பொய்யென நிரூபிக்கப்பட்டாலும், அவன் தனது `மூட' நம்பிக்கையிலேயே உறுதியாக நிற்பான்.” வெங்கட் சாமிநாதனின் பாலையும் வாழையும் முன்னுரையில் சுந்தர ராமசாமி.

***

அன்பான பாலாஜி,

பெண் குழந்தை பெற்றதற்கு வாழ்த்துக்கள். இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?

***
On Tue, Feb 28, 2012 at 12:48 PM, Balajiviswanathan Veeraraghavan <***@gmail.com> wrote:
2012/2/27 Balajiviswanathan Veeraraghavan <***@gmail.com>

என்ன நரசிம்மன் சார் எப்படி இருக்கீங்க......... ஞாபகம் இருக்க என்ன??.. உங்க அண்டை வீட்டு சின்ன பையன்...

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி லக்கி ஒரு சுட்டில உங்கள பத்தி எழுதி இருந்தார் (போட்டோ ஓட), அப்போ தான் உங்கள பத்தி தெரிந்தது. நானும் ஒரு எழுத்தாளன் ஓட நண்பன் அப்டிங்கரதுல சந்தோசமா இருந்தது. உங்க வெப்சைட் படிக்கிறேன் (தினமும்)

நான் நல்லா இருக்கேன், கடவுள் எனக்கு பெண் குழந்தை ஆசீர்வதித்துள்ளார்....போடோஸ் மெயில் பண்றேன்............

ரமேஷ் மகேஷ் க்கு அப்புறம் இந்த இலக்கிய *** எடுக்கறிங்க போல ... வாழ்த்துக்கள்

பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்லே .................அந்த லாஸ்ட் கமெண்ட் படிங்க :-)

---------- Forwarded message ----------

From: Balajiviswanathan Veeraraghavan <***@gmail.com>
Date: 2012/2/27

Subject: Re: வணக்கம் நரசிம்மன் சார் ...... பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்லே

To: 
என்னமோ ஜிமெயில் இமேஜ் பேஸ்ட் பண்ணினால் ஒரு ஹிக்ஸ் கோடு ஹைபெர்லின்க் ஆக மாத்துறது.

நான் சொன்ன லாஸ்ட் கமெண்ட் இந்த சுட்டியில் பாருங்க