Tuesday, April 3, 2012

ஜெயமோகனின் கோத்திரம் என்ன?

ஆனால் எனக்கு ஆச்சரியம் இந்தக் கட்டுரை. அதைவிட எந்தக்கட்டுரைக்கும் பின்னூட்டம் கொந்தளிக்கும் தமிழ்ஹிந்துவில் காணக்கிடைக்கும் பேரமைதி.

Apr 01 2012 தமிழ்ஹிந்து
ஜெயமோகன் பெயர் குறிப்பிடாமல் ”இந்தக் கட்டுரை” என்று கொடுத்திருக்கும் சுட்டி என்ன சொல்கிறது? 

புராணகாலத்திலிருந்து ’ஆர்.எஸ்.எஸின் சர்சங்க சாலக் மரியாதைக்குரிய மோகன் பாகவத் ஜி’ வரை “March 25, 2012 சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்” அருளிய மேற்கோள்களின் தொகுப்பு. இதற்குப் பெயர் ஜெமோகன் அகராதியில் கட்டுரை. 

போகட்டும். மேற்கோள்களின் சாராம்சம்தான் என்ன? 

ஹிந்து சான்றோர்கள், புராணகாலம்தொட்டே சாதிபேதத்திற்கு எதிராய்ப் பேசி,  எப்படி பிரிவுகளை இணைக்கப்பார்த்தார்கள் என்பதுதான். 

மகாபாரதம் உட்பட யாவரும் ஒன்றே குலம் என்று ஓதிக்கொண்டு சாதிகளைப் பிரித்துப் பார்க்காதபோதும் ஏதோ பேய் பூதப் பிசாசுகள்தான் சாதியை இந்து மதத்திற்குள் புகுத்தியிருக்கவேண்டும் என்று, தமிழ் ஹிந்து பாவ்லா காட்டுவதில் தவறொன்றுமில்லை. அது ஆர்.எஸ்.எஸ். என்கிற அரசியல் அமைப்பை ஆதரிக்கும் தளம். அந்த அரசியலை ஏற்காதோர் தமக்கு அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தம் வழியில் கடந்துபோய்விடலாம்.

ஆனால் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாகி அனைத்தையும் பிரத்தியேக ஞானக்கண்கொண்டு பார்த்து உச்சத்தில் சிந்தித்தபடி உயிர்வாழ்வதாய் பாவனை காட்டும் ஜெயமோகன் அவர்கள் “தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று.” என்று அறிவித்து ” ”விமரிசகனின் பரிந்துரை” என்று லேபிள் ஒட்டி விநியோகிக்கும்போது அதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டியுள்ளது.

***

ஜெயமோகன் தனது முன்னோடியெனப் பாராட்டி விருதளித்து விதந்தோதி தனது தளத்தில் பெருமையுடன் பிரசுரித்திருக்கும் Dec 19 2011 விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரையில் பூமணி என்ன குறிப்பிடுகிறார்? ”கலைக்கு சாதி மதம் இனம் குலம் கோத்திரம் கிடையாது.” 

பூமணி குறிப்பிடும் எல்லா வார்த்தைகளும் எல்லோருக்கும் தெரிந்தவைதாம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றாலும் மறுத்தாலும் எல்லோருக்குமே ஏதோ ஒரு சாதி மதம் இனம் குலம் என்கிற அடையாளங்கள் இருந்தே தீருகின்றன.

கோத்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா? சாதி மதம் இனம் குலம் என எல்லார் கழுத்திலும் இவை தொங்கவிடப்பட்டிருந்தாலும் கோத்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா?

உன் கோத்திரம் என்ன என்று ஒரு பிராமணனைப் பார்த்து சும்மாக் கேட்டால் கூடச் சட்டென்று காஸ்யப கோத்திரம் கெளடிண்ய கோத்திரம் கெளசிக கோத்திரம் விஸ்வாமித்ர கோத்திரம் என்று ஏதேனும் ஒரு ரிஷியின் பெயருடன் பதில் வரும். 

இதை எழுதுவதற்காக கூகுளாண்டவரின் துணைகொண்டு இணையத்தைத் துழாவியதில், பிராமின் டுடேவில் சுவாரசியமான கட்டுரையொன்றைப் படிக்க நேர்ந்தது.


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. காஞ்சி ஸ்ரீ பால பெரியவர்களுடன் ஸஞ்சாரம் செய்துகொண்டிருந்த காலம். அம்ரோதி என்ற இடம் மஹராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. அங்கு பூஜை ஒரு பிராம்மண நடுத்தர வயது மனிதர் மிகவும் உபயோகமாக ஓடி ஆடி பணி செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீ பால பெரியவர்கள் அடியேனிடம் அவரின் கோத்திரம் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். அவர் என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி திக்குமுக்காடச் செய்தது. நான் அவரைக் கேட்டது 'தங்களின் கோத்திரம் என்னஒ என்று அவர் என்னைக்கேட்டது 'கோத்திரம் என்றால் என்ன' என்பது.

பெரியவர்களிடம் அப்படியே தெரிவித்தேன். பிராம்மணருக்கு இப்படி ஒரு நிலையா என்று கேட்டுவிட்டுத் தெரிந்த அளவில் எத்தனை கோத்திரங்கள் உண்டோ அவற்றிற்கு எல்லாம் பிரவரம் தயார்செய்து அதனைத் தனித்தனியாக அச்சிட்டு யாவருக்கும் வழங்க உத்திரவிட்டார்கள். அங்ஙனமே செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிதான் ஸ்ரீமடத்தின் சார்பில் "ஸத்விஷயஸங்கிரஹம்" என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு பிராம்மணர்கட்கு இலவசமாக அளிப்பதற்கான ஏற்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது.

பிராம்மணன் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்வதற்கு முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது தன்னுடைய கோத்திரத்தை.

***

சண்டீச நாயனார் மற்றும் சண்டிகேஸ்வரர் பற்றிய Sep 23 2011 சண்டிகேஸ்வரர் என்கிற ஹிந்து ஞான காலட்சேபப் பதிவில் கோத்திரம் பற்றி ஸ்ரீ ஜெயமோகன் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்.

சண்டீசநாயனார் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவராக இருக்கலாம்.அவரைப்பற்றி இருவேறு கதைகள் உள்ளன. பெரியபுராணத்தின்படி அவர் திருசேஞ்ஞல்லூரில் காசியப கோத்திரத்தில் எச்சதத்தன் என்ற அந்தணரின் மகனாகப் பிறந்தவர் . பெயர் விசாரசருமர்.  சிவரகசியம் என்ற நூலில் கர்க்ககுலத்தில் கணபத்திரன் என்ற அந்தணரின் மகனாகப்பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

***

பிராமண அர்ச்சகர்கள் அல்லது பட்டர்களைக்கொண்ட மயிலைக் கபாலி அல்லது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்ற பெரிய கோவில்களுக்குச் சென்றால், அர்ச்சனைத் தட்டை நீட்டியபடி அர்ச்சகரிடம் கோத்திரம் நட்சத்திரம் பெயர் சொல்பவர்கள் பிராமணர்களாகவே இருப்பதைக் காணலாம். 

கடவுளே உன்னை போற்றுபவர் இந்த ஜனசமுத்திரத்தில் இந்த குறிப்பிட்ட கோத்திரத்தில் வம்சாவளியில் இந்த நட்சத்திரத்தில் பிறந்த இன்ன பெயருடையவர் என்று குறிப்பிட்டுச் சொல்லுமுகமாகவே இது நிகழ்கிறது. 

ஜெயமோகன் நாயருக்கு கோத்திரம் உண்டா? 

கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

சூத்ராளுக்குப் பொத்தாம்பொதுவாக சிவ கோத்திரம் விஷ்ணு கோத்திரம் என்கிற உளுவுளாயி மட்டுமே.

இவ்வளவு தெளிவாக தரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹிந்து மதத்தில் சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள் கூறியவற்றை மேற்கோளாகக் காட்டி பிராமணரல்லாத பெரும்பாண்மை களவுபோகாமல் கையருகிலேயே இருக்க தமிழ் ஹிந்து மெனக்கெடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தரப்படுத்தலை எதிர்த்து ஈழவர்களின் இயக்கமாக எழுந்தவரல்லவா நாராயண குரு. அவரது சீடர் பரம்பரையில் வந்தவராகத் தம்மை அடிக்கொருதரம் அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர் கொஞ்சம்கூட சுரணையே இல்லாமல் 

<ஆனால் எனக்கு ஆச்சரியம் இந்தக் கட்டுரை. அதைவிட எந்தக்கட்டுரைக்கும் பின்னூட்டம் கொந்தளிக்கும் தமிழ்ஹிந்துவில் காணக்கிடைக்கும் பேரமைதி.>

என்று கெக்கலிப்பதற்குக் காரணம் என்ன? ஹிந்துமதம் சாதியைக் கொண்டுவந்தது கடைப்பிடிக்கிறது என்று சொல்வதெல்லாம் பொய். பார்த்தீர்களா சாதி இணக்கத் திருமணம் குறித்து தமிழ் ஹிந்து சொல்வதை. இதைப் பார்த்ததும் எல்லோரும் வாயடைத்து விட்டார்கள் என்றுதானே சொல்கிறது இந்த இளிப்பு. 

சாதிய ஏற்றத் தாழ்வை இந்துமதம் கேரளாவில் கடைபிடிக்காது இருந்திருந்தால், நாராயன குரு இயக்கம் தோன்றியிருக்கவேண்டிய அவசியம் என்ன?

கோத்திரம் என்ன சொல்கிறது? பிறப்பால் மட்டுமே ஒருவன் பிராமணன். இதைத்தானே டுடே பிராமினும் சொல்கிறது. அப்படி இருக்கையில் சில மேற்கோள்களை மட்டும் காட்டி நாமெல்லாம் ஒண்ணு என்றுதான் அனாதிக்காலம் முதலே ஹிந்து மத்தத்தில் இருந்திருக்கிறது என்பது அயோக்கியத்தனம் இல்லையா? அதற்கெதற்கு “விமர்சகனின்” பரிந்துரை?

நம்பூதிரிகள் எதிர்படுகையில் சாலையைவிட்டு இறங்கி ஒதுங்கி நிற்கவேண்டிய கட்டாயத்தில் நாயர்கள் எந்தக் காலத்திலும் இருந்தது இல்லையோ?

பெரியார் இறந்தபோது, பொழுதன்னிக்கும் திட்டிண்ட்ருந்தான் ஒருவழியாப் போய்ச்சேந்தான் பாவி என்று வெளிப்படையாய் குதூகலித்த பிராமண துவேஷத்தைக்கூடப் புரிந்துகொள்ளலாம் ஆனால் சொந்த வரலாற்றை மறைத்து சுயமரியாதையை அடகுவைத்து ஹிந்துவத்தைப் போற்றி பெரியாரைத் தூற்றுவதற்குப் பின்னால் இருக்கும் உளவியலைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. 

நாயக்கரை இழித்துப் பேசுவதால்,நாயரை பிராமின் என்று ஏற்றுக்கொண்டுவிடப்போகிறார்களா என்ன?

இப்படியேத் தொடர்ந்து பெரியாரை அவதூறு செய்வதன்மூலம், மிஞ்சி மிஞ்சிப்போனால் சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு அறியாத இப்படியான சில அறைகுறைகளைத்தான் ஜெயமோகனால் உருவாக்க முடியும்.