Thursday, September 27, 2012

என்ன செய்ய?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது.

அவளைப் பாத்தா ’அச்சி’யாட்டம் இல்லை?

அச்சி?! ஓ லஷ்மியா. அட ஆமா

அடச்சே அது முகுந்தனும் லஷ்மியுமேதான். இவங்க எங்க இங்க வந்தாங்க.

மாறி மாறி எங்கேஜ்டாய் இருந்ததால் மிஸ்டு கால்கள். 

ஏன் உங்க பேரைக்கூட சொல்லலை முகுந்தன்?

எடுக்கும்போது எல்லாம் எடுத்தாங்க. அவன்கூட நியூஸிலேண்ட்லேந்து அவுளுக்கு பர்த்டே விஷ் பண்ணினான். ஓவர் பப்ளிசிடியா, அவுளுக்கு அண்டியூ அட்வாண்டேஜா போயிடும்னு எல்லாத்தையும் கட் பண்ணிட்டாங்க. 

ஓ! அது சரிதான். உங்குளுக்கு பிரகதி எப்பிடி...?

என் கசின் குருவோட பொண்ணு மாமல்லன்.

குரு...

நாங்க 133ல இருந்தப்ப என்கூட இருந்தானே... குரு...

ஆமா உங்ககூட ஒரு பையன் தங்கியிருந்தது இப்ப ஞாபகம் வருது... பேர் கூட... குருன்னு நீங்க சொன்னதுகூட ஞாபகம் வருது பட். முகம் நினைவில்லே.

பச்சைக் கலர் சேத்தக் வெச்சிருந்தான். உங்குளுக்கு நல்லா தெரியும் மாமல்லன். அப்ப உங்களை மாதிரியே அவனும் ஒல்ல்லியா இருப்பான்:) ஐடில இருந்தான். யூஎஸ் போயிட்டான். அவன் பொண்ணுதான் பிரகதி.

பழகிய பலரின் முகங்கள் மறந்துவிடுகின்றன.  நினைவுபடுத்திக்கொள்ள நிறைய முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது, என்பது தெரிய நேர்ந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்? 

எட்டுமாதக் குட்டியாய் 1990ல் அறிமுகமாகி ’மாமைய்யன் மாமா’ என்று எனக்கு இன்னொரு பெயர் சூட்டிய ’அப்பு’ என்கிற அபிநவ் முகுந்தை, பல வருட இடைவெளிக்குப் பிறகு, அவன்  +2 படிக்கையில் பார்க்க நேர்ந்தது.   

தெரியலை! ‘மாமைய்யன் மாமாடா’ எனச்சொல்லி நகைத்தபடி பெற்றோர்கள் நினைவுபடுத்தினர். அவன் மைய்யமாக சிரித்து வைத்தான். அவனுடைய இரண்டரை வயதில் டிடிகே ரோடு வீட்டு போர்டிகோவில் நான்கூட அவனுக்கு பந்து போட்டிருக்கிறேன். 

வெளி கேட்டுக்கு வலதுபுற மதிற்சுவர் மறைவில் சற்று ஒதுங்கிநின்று தம்மடித்துக்கொண்டிருக்கையில், கேட்டைப் பிடித்தபடி தலை நீட்டி எட்டிப்பார்த்து ’இன்னுமா முடிக்கலை’ என்று அப்பு சலித்துக்கொண்டது, என் நினைவில் உளி ஒப்பமாக தங்கியிருக்கிறது.

’ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க’ என்று சிறிய புன்னகை பூத்து ‘பெரிய மனுஷி’யாய் நகர்ந்து செல்லும் டாக்டருக்குப் படிக்கும் ஜனனி, ஐந்தோ ஆறோ படிக்கையில் சிலவருட இடைவெளியில் சந்திக்க நேர்ந்த போது, அவள் தனது இரண்டரை வயதில் எங்களுக்கு வழங்கிய அளவற்ற மகிழ்ச்சிகள் எவையுமே அவளுக்கு  நினைவில் இல்லை. வெட்டி ஆபீசர் வீரபத்திர வாகனத்தில் அண்ணா நகர் குடியிருப்பில் இருந்து வேலைக்குக் கிளம்புகையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு, ஒருநாளும் இளம் மனைவியை கையசைக்க விட்டதில்லை. அது ஜனனியின் தனியுரிமை.

மனிதர்கள் குழந்தைகளாய் இருக்கையில், இயல்பாய் மகிழ்ச்சியை வழங்குகிறார்கள். அவற்றை நினைவுப்பேரேட்டில்கூட  குறித்துவைத்துக்கொள்ளவது இல்லை. 

இப்படித்தான் சூதுவாதின்றி எந்த கணக்குவழக்கும் பார்க்காமல் நாம்கூட ஒருகாலத்தில் இருந்திருக்கிறோம் என்பதை எப்போதேனும் சில பெரியவர்கள் நமக்கும் நினைவூட்டுகிறார்கள். அந்தத் தருணங்களில் நாமும் இந்தக் குழந்தைகள் போலவே நினைவுகூர  முடியாது தர்மசங்கடத்தில் அசட்டுச் சிரிப்புடன் தத்தளிக்கவேண்டி இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு ’எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிதான் முக்கியம் நீ நினைவுகூர்கிறாயா இல்லையா என்பதல்ல’  என்கிற குழந்தைப் புன்னகையுடன் கடந்துசெல்லும் அந்த முதியவர்களின் முதிர்ச்சி வாய்க்கப்பெற்றால் அது வரம்.

’அப்பு’வுக்கு சொந்தக்காரி, இணையான திறமைசாலி என்றாலும் பிரகதி குருப்ரசாதைக் காட்டிலும் முன்பின் அறியாத சுகன்யா தன் வசீகரக் குரலால் சுண்டி இழுக்கிறாளே என்ன செய்ய?