Tuesday, October 2, 2012

இணையப்புலி

கூடங்குளம் போரட்டத்தின் பகுதியாக 29.09.2012ல் நாகர்கோவிலில் நடந்த உண்ணாநிலைப் போராராட்டத்தின் சில  படங்களை காலச்சுவடு கண்ணனின் பேஸ்புக்கில் பார்க்க நேர்ந்தது.


இந்த படங்களின் அவுட் ஆஃப் ஃபிரேமில் இருப்பவர்களையும் சேர்த்தால் மிகஅதிகபட்சம் 30லிருந்து 50பேர் இருப்பார்களா?

எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் போராட்டம் என்று இதை ஏற்பாடு செய்தவர்கள் அவ்வளவாக இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆகக்குறைந்தபட்சம் ஜெயமோகன் தளைத்தைக்கூடப் படிக்காத கோடிக்கணக்கான மரத்தமிழர்களில் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். 

நாகர்கோவிலில் ஒருவருக்குக் கூட்டம் சேருகிறது என்றால், அது நேசமணிக்குப் பிறகு நம் ஜெயமோகனுக்கு மட்டுமாகத்தான் இருக்கும் என்பது என் ஊகம். நாஞ்சில் நாடன் அறுபது, நூல் வெளியீட்டை ஏற்பாடு செய்து அரங்கு நிறைந்த வெற்றிகர விழாவாய் நடத்தியதைப் பற்றி ’ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை’ என்று அவரே கூறுவதைப் படித்துப்பாருங்கள். 

எனவே இதை இலக்கியக்கூட்டமாகவே ஏற்பாடு செய்து, ஜெயமோகனையே சிறப்புப் பேச்சாளராகவும் அறிவித்திருந்தால் தமிழகத்தின் நாலாதிசைகளிலிருந்தும் அவரது வாசக விசிறிகளின் கூட்டத்தில் நாகர்கோவிலே நெரிந்திருக்குமே! 

எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரியவரவே அதிமுக கூட கொடிநட்டு தார்மீக ஆதரவு தெரிவித்திருப்பதைக் கோணங்கிக்குப் பின்னாலிருக்கும் கொடியே கூறவில்லையா? இணையத்தில் கூட்டறிக்கை அறிவிக்கப்பட்டதும் அறிக்கை வாசகம் என்னவாக இருக்கும் யார் அதை எழுதப்போகிறவர்கள் என்பதைப்பற்றியெல்லாம், எழுத்தாளராய் இருந்தும் கவலைப்படாமல்  நொடியில் ஒப்புதல் தெரிவித்தவர் உள்ளூரில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வில்லை என்பதை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. 

விதவிதமான உணவை ருசித்து உண்பதையே தொழிலாகக்கொண்டு ஊரூராய் திரிபவர் என்பதுபோல ரசிக்கரசிக்க ஜெயமோகனால் விவரிக்கப்பட்ட கோணங்கியே உண்ணாவிரதத்துக்கு கோவில்பட்டிலிருந்து வந்திருந்தது சிறந்த சிறப்பு. கூடங்குளம் திட்டத்தைப் பற்றி, ஜெயமோகனின் அறச்சீற்ற ஆவேசத்தை சற்றே நினைவுகூர்வது அவருக்கு அணிவிக்கும் இன்னுமொரு மாலையாகவே இருக்கும்.

"அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே"

"நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொய் என்றே சொல்லவேண்டும."

"நமது பெரும்பான்மை மக்கள் ஆழமான ஆன்மீகச் சோம்பலில் மூழ்கியவர்கள். ஊழல், ஒழுங்கின்மை ஆகியவற்றை ஆளுமையாகவே வளர்த்துக்கொண்டவர்கள். இன்றைய எல்லா சீரழிவுகளிலும் சேற்றில் பன்றி போல வாழ்பவர்கள். அன்றாட வாழ்க்கைத் தேடல், சாயங்கால மது, அரசியல் சினிமா அரட்டை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதேனும் ஆர்வங்கள் கொண்டவர்கள் என எத்தனைபேரை உங்களுக்குத் தெரியும் என்று சிந்தித்தாலே போதும்."

"உண்மையான இலட்சியவாதம் என்பது பிறருக்காக, பொது நன்மைக்காகப் போராடுவது"

"கூடங்குளம் திட்டம் முற்றிலும் தேவையற்றது, ஊழலுக்காக மட்டுமே உருவாக்கப்படுவது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அதில் ‘கொள்முதல்’ செய்பவர்களும் செய்தவர்களும் எளிதில் அதை விட்டுவிட மாட்டார்கள். அது ஒரு பிரம்மாண்டமான நிதிச்சதிப்பின்னல்." 

"மக்கள் வன்முறை நோக்கி வராதபோது அரசே வன்முறையை உருவாக்கியிருக்கிறது."

"வரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்."

இப்படிக் கொந்தளிப்பதற்கு முன்பாக, களப்பணியாளரின் தீவிரத்துடன் இடிந்தகரைக்கே நேரில் சென்று ஆற்றிய ஆவேச உரையை அவரே மேற்கோளிட்டு விளம்புவதைக் கேளுங்கள்.
//என்னை மேடைக்குப் பேச அழைத்தார்கள். நான் வாழ்நாளில் இதைப்போன்ற ஒரு பெருங்கூட்டத்தில் பேசியதில்லை. கண்முன் முகங்களின் கடல். கண்களைப்பாராமல் பேசி எனக்கு பழக்கம் இல்லை. மூச்சுத்திணறி ஐந்து நிமிடம் பேசினேன். ‘சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு கப்பல் வந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் இருந்தது முழுக்க சிகாகோ நகரின் குப்பை. கக்கூஸ் குப்பை. ஆஸ்பத்திரிக் கழிவு. நோய்பரப்பும் பொருட்கள். அவற்றை நமக்கு அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாம் அவர்களின் குப்பைக்கூடையாக ஆகிவிட்டிருக்கிறோம்’ என்றேன்
‘அதேபோன்ற ஒரு பெரிய குப்பைதான் இந்த அணுமின்நிலையம். இது நமக்குப் பரிசாக அளிக்கப்பட்டது என்றும் நாம் விலைகொடுத்து வாங்கியது என்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்குப் பயன்படாத குப்பை. அவர்களுக்கு ஆபத்தான குப்பை. நாம் இதை விலைகொடுத்து வாங்கிக் கொண்டுவந்து வைத்திருக்கிறோம்’ என்றேன்//

எழுதியவை சொல்லியவையெல்லாம் அறிவுபூர்வமானவைதானா, இவற்றுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எள்ளளவும் கவலைப் படாமல் தான் ஒரு நிலையை எடுத்துவிட்டோம் எனவே அது சரியாகத்தான் இருந்தாக வேண்டும் என்கிற அவரது இயல்பான தன்னம்பிக்கையுடன், தீவிரமாக அணு உலைக்கு எதிராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட  ஒருவர், இந்தா ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கற பார்வதிபுரத்திலிருந்து உடற்பயிற்சி நடைபோல உண்ணா நோன்புப் பந்தலுக்கு வந்திருக்க மாட்டாரா என்ன? அமைப்பாளர்கள்தாம் முதல் மரியாதை செய்து அவரை அழைக்கத் தவறிவிட்டிருக்க வேண்டும்.   

ப்ச் கெஞ்சிக் கூத்தாடியாவது போராட்டக் குழுவினர் ஜெயமோகனிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்திருக்கலாம்.போனஸாக அவர் மணிரத்தினத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பார்.   அது ஒரு பெரும் திறப்பாக அமைந்திருக்கும். மணிரத்னம் கண்ணசைத்தால் ஐஸ்வர்யா ராய் வராமல் இருந்துவிடுவாரா என்ன? மருமகளே வந்தபின் மாமனார் வராமலா? இப்படி மட்டும் நிகழ்ந்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கூடங்குளம் மீது குவிந்திருக்கும். 

பார்த்துக்கொண்டே இருங்கள், இன்னொரு  அணுமின் நிலையம் மட்டும் தமிழகத்தில் எங்காவது தொடங்கப்படட்டும், அதற்கு எதிரான உண்ணாநிலைப் போராட்டத்தில், அதன் பூமிபூஜையன்றே  ஜெயமோகனுக்காக ஜெயமோகன் மணிரத்தினம் இருவரும் குடும்பத்தோடு கலந்துகொள்கிறார்களா இல்லையா என்று.