Tuesday, October 23, 2012

ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்

கீழ்க்காணும் ஸ்கிரீன்ஷாட்டை, ஷோபா சக்தியின் ஃபேஸ்புக்கில் பார்க்க நேர்ந்தது. அவரிடமிருந்து இதைச் சிலர் தத்தம் சுவர்களில் பகிர்ந்துகொண்டும் இருந்தனர். 
சற்றே இதை உற்றுப் பாருங்கள். 

எந்த மென்பொருளையும் வைத்துக்கொண்டு தேடச்சொன்னால் அது ஏதோ ஒரு ஒழுங்கில் வரிசைக்கிரமமாகத்தானே தேடும். 28 ஜனவரி 2011 ட்விட்டு வந்த பின் 29 ஜனவரி 2011 வருவதோ அல்லது பின்னிருந்து தேடினால் 29.ஜனவரி 2011 முதலில் வந்து பின் 28.ஜனவரி 2011 வருவதோதானே முறை.

இங்கு ஏன் இரண்டு 28 ஜனவரி ட்விட்டுகளும் பிறகு இரண்டு 29 ஜனவரி ட்விட்டுகளும் வந்தபின் கால இயந்திரத்தில் பின்னோக்கிப்போய் திரும்ப 28 ஜனவரி (பிரஸ்தாப) ட்விட்டு வருகிறது? மென்பொருள் என்பதால் முன்னும் பின்னுமாக பெண்ணுக்கு மனமிறங்கி விளையாடிவிட்டதா?

தேதியில் மட்டும் முரண்கண்டு தேவாமிருதம் உண்ட திளைப்போடு ஊளையிடுவோரின் கவனத்திற்கு, ஐயா ஆமாம் சாமிகளா! இது நான் தேடிக் கண்டடைந்ததன்று. உங்கள் தரப்பு கொடுத்தது. சிறிது டிவிட் எண்களையும் பார்க்கலாமா?

முதலில் என்னுடைய ட்விட்டுகளின் எண்களைப் பார்க்கலாம்.

419, 421, 421 இது எப்படி சாத்தியம்? 420 காணாததைப்பற்றியே கேட்கவில்லை. அது வேறு யாரிடமோ பேசப்பட்ட ட்விட்டாக இருக்கலாம் தேடல் அளவீடுகள் காரணமாய் அது விடுபட்டும் போயிருக்கலாம். ஆனால் இரண்டு ட்விட்டுகளுக்கு எப்படி 421 என்கிற ஒரே எண் வந்திருக்க முடியும்? தேதியை சவுகரியமாக திருத்திய தகிடுதித்த மென்பொருள் எண்ணைத் திருத்த மறந்துவிட்டதோ?

சின்மயியின் இரண்டு ட்விட்டுகளின் எண்கள் என்னென்ன? முறையே 20,105 மற்றும் 20,108.

எவ்வித பின்னணி பலமுமற்ற ஊர்பேர் தெரியாத இந்த அறிவிலியின் எதிர் வாதத்திற்கு செவிசாய்த்து ஒரே ஒரு நிமிடம் தேதிகளை மறந்துவிட்டு,  மேற்படி ட்விட்டுகளை எண்கள் வாரியாக அடுக்கிப்பார்க்க தயவு செய்யுங்கள்.

மீனவர்களுக்கு சம்பந்தமில்லாதது என்று காட்டுவதற்காகவே கட்டங்கடைசியாகக்  கொடுக்கப்பட்டுள்ள ட்விட் எண் என்ன? 20,105. இருப்பதே இரண்டுதான் மற்றது 20,108 எனில் அது எங்கே வந்திருக்க வேண்டும்? முதலில் அல்லவா? அதை 419க்குப் பிறகு கொண்டுபோய் ஒட்டி வையுங்கள்.

அடுத்தது இரண்டு 421 ட்விட்டுகளுக்குப் பிறகு எண் வரிசையில் 20,105 இருந்த இடத்தில் ட்விட் எண் 20,108ஐ வையுங்கள்.

இப்போது எண் வரிசைப்படி மட்டுமின்றி பொருள் ரீதியாகவும் எப்படிக் கோர்வையாக வருகிறது என்று பார்க்கலாமா?
முதல் ட்வீட் 419 மீன் தின்பவரா? மீனவன் உயிருக்காகவும் கொஞ்சம் யோசியுங்கள் என்கிறதா 

சரி அதற்கு பதிலாய் 20,105 என்ன சொல்கிறது?
நாங்க உயிர்களைத் துன்புறுத்தரவங்க இல்லை. வெட்டி சாப்படறவங்களும் இல்லை. சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பிஇடிஏ.

கேள்விக்கு பதில் எவ்வளவு பொறுத்தமாக இருக்கிறது. இதற்கு பொருள் என்ன? மற்றவர்கள் அதாவது மீனவர்கள் உயிர்களைத் துன்புறுத்துகிறவர்கள். வெட்டி சாப்பிடுகிறவர்கள் என்று பொருளாகிறதா இல்லையா? 

இந்த பதிலே பெரிய கொலைபாதகம் எல்லாம் ஒன்றும் இல்லை. பிராமணச் சிறுமி ’பாவம் அதுக்குத் தெரிஞ்சது அவ்ளதான்னு விட்டுட்டுப்போறதுன்னா உத்தமம். அதோடபோய் சரிக்கு சரியா மல்லுக்கு நின்ணுண்ட்ருக்கறதா’ என கடந்து சென்றிருக்கலாம். இருந்தும் ஏன் பேசப்போனது இந்தப் பெருசு? அப்போது நடந்துகொண்டிருந்தது என்ன? நடுக்கடலில் எல்லை தாண்டினார்கள் என்பதை, நாட்டையே தகர்க்க வந்தவர்கள் போல் சுட்டுக் கொன்றுகொண்டிருந்த இலங்கைக் கடற்ப்படையின் அக்கிரமத்துக்கு எதிராக, மீனவரின் உயிர்காப்பதற்கான் சிறு முயற்சி. தன்னெழுச்சியாய் ஆரம்பித்தது, சரட்டென இயக்கமாகத் தொடங்கிற்று. அதில் சிலர் உற்சாகப் பெருவழுதியாய் விட்டேத்தியாய் நடவடிக்கை எடுக்காத அரசியல்வாதிகளை வரம்பு மீறி திட்டினார்கள் என்கிற காரணத்தினாலேயே அதை வெற்றுப் பொறுக்கி கும்பல்போல இன்று சின்மயி சாதுர்யமாய் சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்த இயகத்தில் அவர் தம்மை இணைத்துக் கொள்ளாததற்காக அவரைக் கேவலமாய் ஒரு கும்பல் திட்டியதற்கு ஒப்பானதுதான் அவரது இந்த சாமர்த்திய மடைதிருப்பலும்.   

மஹாவீரர் அளவுக்கு வெஜிடேரியனாய் இருப்பதற்கும் மீனவன் கொலைக்கெதிராய் குரல் கொடுப்பதற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்கிற இந்த பிராமணரின் என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை? Thursday, January 27, 2011ல் எழுதப்பட்ட பதிவொன்றே போதுமானது.

இப்போது மேலே இருக்கும் ட்விட் எண் 20,108 ஐ எடுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள் அதைப் பிறகு பார்ப்போம்.

உயிர்களை நாங்க கொல்றவங்க இல்லை வெட்டி சாப்படறவங்களும் இல்லை என்று சொன்னதற்கு கெளண்ட்டராய் எதுவும் வாதாடாமல் எனது இரண்டாவது எண் 421 ட்விட் என்ன சொல்கிறது? 
கூட்டு பெட்டிஷனை  நீட்டி அக்கறையுள்ளவர்கள் கையொப்பமிடவும் என்று இறைஞ்சுகிறது. அதற்கு பதிலாய் என்ன வருகிறது?

இப்போது வரிசைக்கிரமப்படி வரவேண்டிய எண் 20,108ஐப் படியுங்கள். 
ட்விட்டோ பிளாகோ தவிர என்னால் எதுவும் செய்ய இயலாது என்கிறது. மேலும் கூடுதல் அறிவுரையாக, தயைகூர்ந்து உங்கள் ஆற்றலை நேர்வழிப்படுத்தி அதிகாரத்தில் இருப்போருக்கு எழுதுங்கள் என்னை மட்டுமே குறிவைத்து தாக்குவதை விடுத்து என்றும் சொல்கிறது.

இதற்கடுத்து முதல் எண் 421ஐ வைத்துப் படியுங்கள். 
தன்னை பம்பார்ட் பண்ணாதீர்கள் என்றதற்கான எனது மறுமொழி இது. ஆத்மார்த்தமாய் சொன்னதுதான். சிலர் நினைப்பதைப்போல இது கிண்டலோ கேலியோ இல்லை. 

இதெல்லாம் நடந்தது,16 வருட இடைவெளிக்குப்பின், திரும்பவும் நான் இலக்கியத்திற்கு வந்த ஆரம்ப சில மாதங்களில். அப்போது எனக்கு இணையமே புதிது. தமிழ் தட்டச்சவே தெரியாது. தட்டுத்தடுமாறி டைப் அடித்துக்கொண்டிருந்த காலம். எனினும் இன்றுவரை எந்த பிரபலத்தின் பின்னாலும் போய் உரையாடுவதில் எந்த கிளுகிப்பும் இல்லாதவன் என்பதற்கு என் ட்விட்டுகளே சாட்சி. 

உண்மையிலேயே சின்மயி மீது, 15 வயது சிறுமியாய் போட்டியிட்டு முன்னேறி பாட வந்த சாதனையாளர் என்று எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தந்தையின் அரவணைப்பின்றி, தாய் வளர்ப்பில் ஆளாகி தனித்து நிற்பவர் என்கிற கரிசனம் இன்னமும் இருக்கிறது. அதனால்தான் வாழ்வலைகளின் எதிர்நீச்சல்காரி நீ என்றேன்.

எவன் எழுதியதாக இருந்தாலும் நூறு நொள்ளை நொட்டை சொல்லிக்கொண்டு திரிபவன் என்று இணையத்தில் ’பெத்த பெயர்’ எடுத்திருப்பவன், இணைய சில்லுண்டிகள் தேடிக்கொடுத்திருக்கும்  வரிசைப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசியிருக்க முடியுமா? மேற்குறிப்பிட்ட ஸ்கிரீன் ஷாட்படி நான் அப்படிப் பேசியிருந்தால் என் மனசாட்சியே என்னைக் குடைந்திருக்கும். எழுத்தாளன் என்கிற இறுமாப்புடனேயே சொல்கிறேன் என்னுடைய எந்த எழுத்தும் அசிரத்தையுடன் எழுதப்பட்டதில்லை.

சின்மயி பெரிய சிந்தனையாளியாக இல்லாமல் இருக்கலாம். அதை, வெளியுலகம் தெரியாமல் வளர்ந்த சிறுமியான அவரே நிறைய பேசிப்பேசி ருசுப்பித்திருக்கிறார். ஆனால் தான் சொல்ல வந்த கருத்து அபத்தமாய் இருந்தாலும் அதைக் கோர்வையாய் சொல்வதில் அவரிடம் குறையில்லை. காரணம் கலைஞர்களுக்கே இயல்பாய் இருந்தாகவேண்டிய உள்ளார்ந்த ஒழுங்கு அவரிடமும் இருப்பதுதான். வெளியுலகிற்குக் காட்டும் தோற்றம் என்னவாய் இருப்பினும் உள்ளார்ந்த ஒழுங்கற்ற எவனும் எந்தத் துறையைச் சார்ந்த கலைஞனாகவும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. 

சின்மயி சிறந்த பாடகி. உள் ஒழுங்கும் தாளக்கட்டும் ஓர்மையும் இல்லாமல் எப்படிப் பாட முடியும். அப்படிப்பட்டவர் நேரடி கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதிலளித்திருப்பரா?

சின்மயிக்கும் அவரது தாய்க்கும் நிகழ்ந்தது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்கவே முடியாது. ட்விட்டரில் நான் யாரையும் தொடர்பவனில்லை என்பதால் இதில் பெரும்பாலான விஷயம் என் பார்வைக்கே வந்ததில்லை. 

அவர் தனிப்படத் தாக்கப்பட்டதும் தரக்குறைவாகத் தாக்கப்பட்டதும் தவறான செயல் என்பதாலேயே பொதுவெளியில் அவர் உதிர்த்த திரேதாயுக சொத்தைகள் எல்லாம் முத்துக்கள் என்று ஆகிவிடுமா? சாதனையாளர் பிரபலமானவர் என்றாலும் சமூக சிந்தனையளவில் பிராமண குடும்பத்தில் பிறந்து பொத்தி வளர்க்கப்பட்ட முதிற்சியற்ற மற்றுமொரு சிறுமி மட்டுமே சின்மயி. இதற்கு சாட்சியம் தேடி அலையவேண்டிய அவசியம் எனக்கில்லை. தடுக்கி விழுந்தால் என் சொந்தங்களில் அத்துனைபேரும் இப்படித்தான்.

இட்டுட்றி சூதர்த்தி பந்து தொகம்பாளு

இப்ப நீ சொன்னது அவுளுக்குப் புரியாதுன்னு நினைக்கிறியா?

நம்ம கன்னடம் நல்லா புரியுமே அவ ஏழெட்டு வருஷமா இங்கதான இருக்கா? 

இல்லை நீ அவளை சூதர்த்தின்னு சொன்னது அவ காதுல விழுந்தா என்னாகும் தெரியுமா?

ஏன் என்னாகும். அவ சூதர்த்திதானே!

அவள் வேலைக்காரி. கெலசதவளுந்தல்லா ஹேளபேக்கு. சூத்திரன் சூதரத்திங்கறது டிராகேட்டரி வார்த்தைகள். 

ஹாங்கியா?

இந்தப் பெண்மணி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டால் அதிர்ந்து விடுவீர்கள். ஈரோடு. 

84 தேர்தலில் தீப்பொறி ஆறுமுகம் பேசுவார்: தலைவர் சொல்றாரு ஊமையன்னு பேசாதேன்னு. ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன், ஊமையனை ஊமையன்னு சொல்லாம வேற எப்பிடிய்யா சொல்றது? 

தான் செய்வது தவறு என்றோ அது அடுத்தவரைப் புண்படுத்தும் என்கிற அடிப்படை உணர்வோகூட இல்லாமல் இன்சென்சிடிவாக ஏகப்பட்ட ஜென்மங்கள் இருக்கின்றன. எல்லோரும் எல்லா நேரமும் புண்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன? திருப்பி அடி கிடைத்தால், இரண்டாம் உலகப்போர் யூதர்களாக ஐயையோ பொதுவெளியில் கொல்றாங்களே என்று அசோகமித்திரன்போல அவுட்லுக்கில் அறற்றிக்கொண்டே கிடக்க வேண்டியதுதான்.

சின்மயி சூட்டிகையான புத்திசாலி. பல்துறை கெட்டிக்காரி என்பதெல்லாம் சமூகப் பிராணியாக அவர் ’உயர்ந்தவர்’ என்று மதிக்கப்பட வேண்டியதற்கான  உத்தரவாதமல்ல. என்றால் உடனே எதிர்கோடியில்போய் நின்றுகொண்டு அவர் அவமதிக்கப்படவேண்டியவர் என்றோ அவதூறு செய்யப்படவேண்டியவர் என்றோ பொருளில்லை. ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட்டதுதான். அவர் பிராமணீய கருத்தாக்கங்களை உயர்த்திப்பிடிக்க எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவிலான உரிமை மற்றுக் கருத்து எதிர்க்கருத்து கொண்டவர்களுக்கும் உண்டு என்பதை அவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

இங்கே மாற்றுதரப்புக்காக வாதாடவே வாயில்லாமல் அடிக்கிற விஷயம் அவர்களது கேடுகெட்ட மொழியும் நடத்தையும்தான். நிர்மானப் பணி என்று பத்திரிகையில் எழுதியிருப்பதைப் படித்தவன் அதை அடுத்தவனுக்குச் சொல்லும்போது நிர்வாணப் பணியாய்த்தான் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பதை இந்தத் தரப்பைச் சார்ந்தோரும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ‘ஸ்டெடியாக’ச் சொன்ன அத்துனை கருத்துக்களும் ஒரு ‘லேடீஸ் கம்ப்ளெய்ண்டில்’ குப்பைக்கூளம் ஆகிவிட்டது.

போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்காக வேணாலும் போகலாம்  ஆனா பொம்பளை கம்ப்ளெய்ண்ட்டுல மட்டும் போயிடக்கூடாது. அப்பிடிப்போயிட்டா, போனவனுக்கு மட்டுமில்லே அவனைப் பார்க்கப் போனவனுக்கும் பொறுக்கி பட்டம்தான் கிடைக்கும் என்பது யதார்த்த மொழி. 

விவாதம் என்கிற பெயரால் இங்கே நடந்த தாக்குதல், விவாதிப்பதற்கான அடிப்படை அருகதைகூட அற்றது.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக சின்மயி என்ன செய்ய வேண்டும் என்கிற முடிவை அவர் தன்னிச்சையாக எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களே தங்களது மூட மூர்க்கத்தனத்தால் தங்கத் தாம்பாளத்தில் வைத்து வாய்ப்பை அவருக்கு வழங்கி இருக்கிறார்கள்.

ஆனால் என் பிரச்சனை சின்மயி அல்ல. அவருக்காக குரல்கொடுப்பவர்களின் நேர்மை பற்றியது. அதிலும் குறிப்பாக அவரை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவர் பேசியதை பேசவே இல்லை என்று குறுக்கேத்தமாய்த் திருகி நிறுவப்பார்த்துக் கோமாளிகளாய் நிற்பவர்களைப் பற்றியது. இது இணைய மோசடிக் குற்றத்தில் வராது. காரணம் புகார் கொடுக்கவேண்டிய நான் வக்கத்த அனாதை நாய் ஆயிற்றே?

இதை மொத்தமாய் ஒருமுறை அடுக்கிப் பார்த்துவிடலாமா?

மாமல்லன்
சின்மயி
மாமல்லன்
சின்மயி
மாமல்லன்

என்றிருந்ததைப்போய் கூகுள் எப்படி 

மாமல்லன் 
சின்மயி 
மாமல்லன் 
மாமல்லன் 
சின்மயி 

என்று மாற்றிக் காட்டியிருக்க முடியும்? கோளாறு மென்பொருளிலா? 

பாலை கொழந்தை குடிச்சிதா இல்லை பூனை குடிச்சிதா? ரெண்டும் இல்லை குண்டம்மா குடிச்சா என்கிற கதையாக அல்லவா இருக்கிறது.

மிகத் தீவிரமான ஒரு விஷயம், யார் யாரை ஜெயிக்கிறார்கள் என்று நிறுவ பார்ப்பதாகவும் வெற்றிக் கொக்கரிப்பாகவும் வெற்றிபெற எதையும் செய்யலாம் என்கிற மறப்போராகவும் சிறுத்துவிட்டதன் காரணமாய், தாக்குதலாளர்களின் கீழ்மைக்கு இணையாக சின்மயியின் ஆதரவாளர்களால் கொண்டாடப்படுவதும் அவரும் சேர்ந்துகொண்டு ட்விட்டுகளில் அதற்குக் கெக்கலிகொட்டிச் சிரிப்பதும் அவருக்கு எந்த சிறப்பையும் சேர்க்காது. 

பாப்பாரக்கூ என்பது கீழ்மையான ட்விட் என்றால் சூத்திரக்கூ எந்தவிதத்தில் உயர்வானது? இது க்ரைம் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டதும்தான் மாயவரத்தானுக்கு சட்டத்தின் சர்ப்ப நாக்கு நினைவுக்கு வந்ததோ? சட்டத்தின் மிரட்டல் கண்ணைக்கட்டியதால் மட்டுமே,  அடித்த ட்விட்டை அழிப்பான் என்றால் அவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? பிறப்பால் பிராமணன் என்பதாலா? அல்லது பிராமண பிரபலத்தின் ஆதரவாளன் என்பதாலா? வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் சூத்திரக்கூ வருமா என்பது சந்தேகமே என்று எவரேனும் வியாக்கியானம் கொடுத்திருந்தால் அவன் அதை அழிக்காமல் விட்டிருப்பதற்கான சாதீயக்கூறே அதிகம்.

படிச்சவன் சூதும்வாதும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்

என்று பாரதி சபித்ததற்குக் காரணம் கையாலாகாத்தனமன்று, அதுதான் கடவுளின் மொழி.