Friday, October 26, 2012

ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு

கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப்போராடிய 44 தலித்துகள் உயிரோடு 1968ல் எரித்துக்கொல்லப்பட்டார்கள்.

அதைப் பற்றி நிறைய பேர் எழுதி உள்ளார்கள்

ஞானக்கூத்தன் எழுதிய இலக்கியக் கவிதை இது

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிரெனத் தெரிந்த ல்கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

நன்றாக இருக்கிறது. இலக்கியமாக இருக்கிறது. ஒரு கெளரவமான ஸ்ரேஷ்ட்ட பிராமணர் எழுதியதுபோல் இருக்கிறது. இதற்குமேல் இவர் கூச்சல் போட்டால் ஜோதிகா நடிப்பதுபோல் ஆகிவிடும்.

இதே விசயத்தை இன்குலாப் எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க

...இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா


உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்


குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது


சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க

எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்


மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா


- மக்கள் பாவலர் இன்குலாப்க்ருஷ்ணா நீ பேகனே பாரோ என்று இழுத்திழுத்து சாவகாசமாய் நீ எவ்வளவு மெள்ள வந்தாலும் ஓகே என்கிறவிதமாய் பாடுகிற வித்துவானைக்கூப்பிட்டு இந்தப்பாடலை நாங்க... மனுசங்கடா... என்று   பாட வைத்தால் எப்படி இருக்கும்.பாருங்கள் நாடி நரம்புகளைப் புடைக்க வைக்கும் உடைந்த கிரீச்சிடும் குரல் நெஞ்சை அறுப்பதைக் கேளுங்கள்.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா


http://youtu.be/zn2uen3RzCc

இதைப்போன்ற மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்தான் இட ஒதுக்கீடும். 

பொதுவெளியில் விவாதம் என்று வருகையில், ஐயோ நம்பளவாளுக்கு தொன்னை கெடைக்கலியே என்கிற ஆதங்கத்தை மறைத்துக்கொண்டு, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அப்படிச் சொல்பவர் சின்மயி போன்ற பிரபலமான பிராமணப் பெண்ணாகவும் இருந்தால்,  இவர்கள் கொல்லைப்பக்க வழியாய் நமது இட ஒதுக்கீட்டைப் பிடுங்கி பங்குபோட்டுக் கொள்ளத்தான் பம்மிப் பதுங்கி வருகிறார்கள் என்று மற்றவர்கள் எண்ணுவது இயல்பா இல்லையா?பொதுவெளியில் இதற்கெதிராய் ஆற்றும்  எதிர்வினை எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?அதைத் தீர்ம்மானிக்கும் அதிகாரமும் தனக்கே இருப்பதாக நினைக்கும் மேட்டுக்குடித் தன்மைதான் சின்மயியின் பிரச்சனையே.

சின்மயி இதுவரை போட்ட ட்விட்டுகளின் எண்ணிக்கை 49,355
ஆதாரம் - 1
ட்விட்டுகளைப் போடுவதும் பிரச்சனை வரும் என்று யாராவது சொன்னவுடன் அதை உடனடியாக அழித்துவிட்டுத் தான் அப்படிச் சொல்லவே இல்லை என்பதும் சின்மையியின் தனிச்சிறப்பு. அப்படி இவர் அழித்த ட்விட்டுகள் எத்துனையோ.

எந்த சமூக நிகழ்வுக்கான எதிர்வினையும் வெவ்வேறு பின்னணி கொண்ட நபர்களிடமிருந்து வெவ்வேறு தொனியிகளில்தான் வெளிப்படும். அதுதான் இயற்கை.

ஞானக்கூத்தான் கனவானின் அங்கதத்துடன் கூறும்,

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க 

என்கிற அதே சம்பவத்திற்கு குரல் அறுந்து கழிவிரக்கத்தில் பாடும் குணசேகரன் அடுத்து கூக்குரலாய் வெடித்து இன்குலாப்பின் வரிகளால் நேரடியாய் குரல்வளையைப் பிடிக்கும் ஆவேசத்துடன் பாய்கிறார்.

— நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

எது நாகரிகமான வெளிப்பாடு என்பதை எவர் தீர்மானிப்பது? அவனவன் வயிற்றுவலியும் வாதையும் அவனவனுக்கும் பிரத்தியேகமானதில்லையா?.

இரண்டு வருடங்களாய் இல்லாததும் பொல்லாததும் சொல்லாததுமாய் எழுதி என்னை இழிவுபடுத்துகிறார்கள் என்று பிலாக்கணம் வைக்கிறார் சின்மயி. அவரது சில ட்விட்டுகளின் தன்மையைப் பார்ப்போமா?

நான் தமிழர்களுக்கு மீனவர்களுக்கு ஈழத்தவர்க்கு இட ஒதுக்கீட்டிற்கும் எதிரானவர் இல்லை என்றுமே இருந்ததில்லை என்று குரல் வற்ற கூச்சலிடும் இவரது மனப்பான்மை என்றுமே ஒன்றுதான். ஒரே மாதிரியான புராதன பிராமண மதிப்பீடுகள் உடையவர்.அடுத்தவரின் மன உணர்வுகள் பற்றி கவலைகொள்ளும் நுண்ணுணர்வு கிஞ்சித்தும் இல்லாதவர் என்பதற்கு இந்த சில ஸ்கிரீன்ஷாட்டுகளே போதுமானவை.

பிரபலங்களுக்கே உள்ளூர இருக்கும் உவகையும் உதைப்பும் இவருக்கும் இருக்கிறது. அதாவது ஆசைதீர அடித்த திருப்தியும் வேண்டும். அதேசமயம் நாம்தான் அடித்தோம் என்று அடிபட்டவனுக்குத் தெரிந்துபோய் அவன் நம்மை திருப்பி அடிக்க வந்துவிடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதை உணர்வுக்குப் பெயர் இங்கிலீஷில் டிஸ்க்ளெய்மர். Disclaimer: RT ≠ endorsement 

நான் செய்யும் ரீட்விட்டுகள் என் கருத்தல்ல அல்லது அதோடு நான் ஒத்துப்போகிறேன் என்று பொருளல்ல.

இந்தக் கடையில் விற்றபொருள் திரும்ப வாங்கப்படமாட்டாது என்று பில்லில் போடுவதற்கு கன்ஸ்யூமர் கோர்ட்டில் எந்த மரியாதையாவது உண்டா? அதே போலத்தான் இதுவும். சட்டத்தின் முன்னால் செல்லாக்காசு. எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு அல்லது எவனாவது எழுதியதைப் பரப்பிவிட்டு அதற்கு நான் பொறுப்பில்லை என்றால் நீங்கள் என்ன சமூக பொறுப்புள்ள பிரபலம்? ஒத்துப்போகாத கருத்தை ஏன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசிறிகளுக்கு பரப்புகிறீர்கள்? 

இரண்டு வருடம் முன்பு மட்டுமல்ல இப்போது இந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி சின்மயி செய்திருக்கும் காரியத்தைப் பாருங்கள்.

ஆதாரம்-2

பஞ்சம ஜாதிக்காரர்கள் (தீண்டத்தகாதவர்கள்) தாங்கள் வாழ அடுத்தவனை அண்டி வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

இதைப்படிக்கிற தலித்துக்கு எப்படி இருக்கும்? அவன் எப்படி இதற்கு எதிர்வினையற்ற வேண்டும் என்று யார் பாடம் எடுப்பது? நீ கண்ணியமாகப்பேச வேண்டும் என்றால் ஏன்யா நீ படிச்சவந்தானே ஒட்டுண்ணின்னு உன்னைக்கூப்ட்டா கன்னத்துல ரெண்டு குடுப்பியா இல்லை காதைப் பொத்திகிட்டு கண்ணியமா இருப்பியா என்று பாதிக்கப்பட்ட அவன் திருப்பிக் கேட்க மாட்டானா?  பிராமணர் மானம்மட்டும்தான் தன்மானம் தனி மானமா?

பிறப்பால் பிராமணனான எனக்கே தலித்துகளை ஒட்டுண்ணி என்று சொல்லியிருப்பதைப் பார்த்து, அடச்சீ இதுகளெல்லாம் என்ன ஜென்மங்கள்? இந்த சனியன்கள் ஐஃபோனும் ஐபேடும் அல்ட்ரா மாடர்ன் கார்களையும் வைத்துக்கொண்டு, கற்ங்கால கக்கூஸ் மூளையுடன் வாழ்கின்றனவே என தோன்றுகிறதே, இதைப் படிக்கும் ஒரு தலித்துக்கு எப்படி இருக்கும்? அவனும் நம்பளவா போலவே அடச்சீ என்றுதான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அதைத்தாண்டி கடுமையாகச் சொல்லிவிட்டால் உடனே போலீஸில் புகார் செய்வீர்களா? பாதிக்கப்பட்ட அவன் எங்கே போய் புகார் கொடுக்க வேண்டும்?

உராய்த்து காயப்படுத்தியது போதாதென்று உப்புத்தாளை வேறு தேய்க்கிறார் பாருங்கள் இயக்குநர் S.S.Rajmouli. அதாவது மனுதர்மம் சொல்வது பிறப்பால் இல்லையாம். வாழ்க்கை முறையினாலாம். தலித்துகள் இன்றும் ரிசர்வேஷனில் ஒட்டுண்ணிகளாய் வாழ்கிறார்கள் என்கிறாரா?

இவரும் ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டுக்கொள்கிறார். அதாவது இது இவர் சொன்னதில்லையாம் இவருடன் டென்னிஸ் விளையாடும் பிரஸாத் என்கிற ஜெண்டில்மேன் சொன்னதாம். அவர் என்ன அரிஸ்டாடிலா இல்லை சாக்ரடீஸா? அது எதோ இதைப்போல இன்னொரு அநாமதேயம். அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதோ இல்லையோ. இணையத்தில் அவனவன் முகமூடியில் வருகிறான். இவர்கள் மேல்தட்டுக்காரர்கள் எனவே தான் சொல்ல நினைப்பதையே அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று அடுத்தவன் முதுகில் உப்பு மூட்டை ஏறுகிறார்கள்.

பிரஸாத் ஜெண்டில்மேன் சொன்னார் என்பதை S.S.Rajmouli சொன்னார் என்பதை சின்மயி அவர்கள் ரீட்விட்டி உலகத்திற்கு அத்தியாவசியமான தீண்டத்தகாதவர்கள் ஒட்டுண்ணிகள் என்கிற இந்த ‘நற்செய்தியை’த் தனது  லட்சத்துக்கும் மேற்பட்ட FOLLOWERSக்கும் பரப்புகிறார்.


ஆதாரம் - 3
இதற்கு தண்டனை இல்லையா?

இப்படி IPC கிரைம் பண்ணும் இந்த அம்மாவுக்கு தான் IAS படிக்காமல் போய்விட்டோம் என்பது பெரிய குறை. IASஉம் ஆகி இது போலவே சோக்கால்டு ”தாழ்த்தப்பட்டவர்கள்” என்று தலித்துகளை ஒட்டுண்ணிகளாகப் பார்க்கும் மனநிலையோடும் இருப்பவரால் இந்தியா என்ன கதி ஆகியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

(அட நீ வேற) டிஜிபி சார் எடுன்னு சொன்னது அப்ளிகேஷன் ஃபார்மா? (இருக்கும் அவுரு இன்னா உன்னை ஐஏஎஸ் ஆவுன்னா சொன்னாரு) என்று இந்த ஆம்ஸ்டர்டாம்காரர் அடிக்கும் நக்கலைப் பாருங்கள்.
தற்பெருமை அடித்துக் கொள்வதைக் கண்டு நான் எரிச்சல் அடைகிறேன். இவர் நக்கல் அடிக்கிறார். இன்னொருவர் ட்விட்டரில் இருக்கும் வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார்.

ஆதாரம் - 4
பிராமணர்களான நம்மைத் தவிரவும் குடிமக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு அதைப் புண்படுத்துவது அநாகரிகம் என்பதை எல்லாம் இவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து புரியக்கூடிய விஷயமா?

மனிதர்களை மனிதர்களாக நடத்தத்தெரியாத இந்த மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் மீனை மீன் தொட்டியில் வளர்ப்பதே பாவம் என்று நினைத்துப் பாசம் சொரிவதற்கான உண்மையான காரணம் அது ஒரு உயிர் என்பதா? இல்லை ‘நம்ப’ கடவுள் எடுத்த அவதாரம் என்பதா?

பார்க்கப்போனால் பிராமணர்களான தாங்கள்தாம், இரண்டாயிரம் வருடங்களாக எதையும் எவனுக்கும் கொடுக்காமல்  100% ரிஸர்வேஷனில் ஒட்டுண்ணிகளாய் வாழ்ந்துவந்திருக்கிறோம் ஆகையால், தாம்தான் உண்மையிலேயே தாழ்ந்தவர்கள என்று குற்ற உணர்வில் ஆத்மார்த்தமாய் கூனிக் குறுகவேண்டியவர்கள் என்கிற சமூக வரலாற்று உண்மை, இறுமாந்து திரியும் இந்த சின்மயி போன்ற பிராமணர்களுக்கு உறைக்குமா? சட்டம் வந்து வீட்டுக் கதவைத் தட்டும்போது பளிச்சென்று ஒரு வேளை சென்ஸிடிவாக உறைக்கலாம்.

பார்ப்பானை ஐயரென்ற 
  காலமும்போச்சே
- பாரதி