Monday, October 8, 2012

கள்ளமிரட்டல்காரன் - சிறுகதை

மதிய வெயிலும் மாடிப்படிகளும் இணைந்து பொங்கவைத்த வியர்வையை, வீட்டுக்குள் நுழைந்ததும் பாதி குளியலாய் கழுவி முரட்டுத் துண்டால் துடைத்துக்கொண்டு கைலிக்கு மாறினார். மதியத் தூக்க சோம்பலில் கதவைத்திறந்த அகண்ட மனைவி அறைக்குள்போய் கதவை மூடிக்கொண்டு கட்டிலில் அயர்ந்தார்.  

கார்ட்லெஸ்ஸை எடுத்து பட்டன்களை அழுத்த நான்கு அழைப்பொலிகள் சென்றபின் ஹலோ...என்றது எதிர்முனைப் பெண்குரல்.

குட் ஈவினிங் மேடம். 

துரைசிங்கம் சார் எப்படி இருக்கீங்க? மெட்ராஸ்ல ஜாய்ன் பண்ணிட்டீங்கில்ல. எங்க போஸ்டிங்? 

காரிடார் போஸ்டிங்குதான். 

ஆமா எல்லா கமிஷனரேட்லையும் போஸ்டிங் ஆர்டர் போட்டப்பறம், கடைசியாதான் அங்க போடுவாங்க. அதுவரைக்கும் நல்லா எஞ்சாய் பண்ணுங்க சார்.

எஞ்சாயா. இந்த வயசுல போயி என்னத்த எஞ்சாய்மெண்ட். ஒரு வேலையும் இல்லாம, சீட்சீட்டா போய் உக்காறது செமபோர் மேடம். வீட்லையே உக்கார்ந்திருக்க்லாம்னாலும் முடியாது.பேச ஆரம்பிச்ச ரெண்டாவுது வார்த்தையிலையே வீட்டுக்காரம்மாவோட சண்டை வந்துரும். அப்புறம் என்னோட இன்க்ரிமென்ட் அரியர்ஸ் என்னாச்சு மேடம்.

நான் எப்பவோ அனுப்ச்சாச்சு. உங்க பில்லோட ராமசுவாமி , கமலாமேடத்தோட பில்லுங்களும் போயிருக்கு. ஏதாவது ஒரு கொரி போட்டு பாண்டிச்சேரிலேந்து திரும்பித்  திரும்பி வருது. ஆஃப் த ரெக்கார்டு சொல்றேன். அவரைப் போய் பாக்கலேன்னா செக்கு கைக்கு வராது. 

ஒரு வருஷம் இங்க இருந்ததுக்கே இப்புடி ஒரு தண்டனையா? அந்த பீஏஓ பேரென்ன மேடம்? 

புவியரசன் சார்.

அவரோட லேண்ட் லைன் நம்பர் கொஞ்சம் குடுங்களேன்.

தர்றேன். ஆனா சண்டைகிண்டை போட்டுப் பிரச்சனைய பெருசாக்கிடாதீங்க சார். நான்தான் நம்பரைத் தந்தேன்னு அவருக்குத் தெரியவேண்டாம். எழுதிக்கோங்க **** இன்னும் இன்னொரு வருஷம் நா இங்கதான்  சார் குப்பைகொட்டியாவனும்.   

தேங்ஸ் மேடம்.. கவலையேப் படாதீங்க.நம்பர் பெரிய விஷயமா? வெப்சைட்டுக்குப்போனா கெடைக்கிது. இல்லாட்டி இருக்கவே இருக்கு போர்டு நம்பர். ஃபோனைப் போட்டு பீஏஓ புவியரசனுக்குக் குடுங்கன்னா போச்சு. என்கேந்து என் ஃபோன் நம்பர் கெடச்சிதுன்னுல்லாம் யார் மேடம் கேக்கப்போறாங்க?

நீங்கங்கறதாலதான் சார் இவ்ளோ மெனக்கெடவேண்டீருக்கு. தயவு செஞ்சு  என்னை இதுல இன்வால்வ் பண்ணிடாதீங்க சார். ரகளைகிகளை பண்ணாம சாஃப்ட்டா கேளுங்க சார்.

சொல்லிட்டீங்க இல்லை. நீங்க விழுப்புரத்துலையே இல்லை. நீங்க ஏஓவே இல்லை. டோண்ட் ஒர்ரி மேடம். 

அடுத்த ஃபோனே புதுவைக்குதான் போயிற்று.

 சார் வணக்கம் புவியரசன் சாரா?

ஸ்பீக்கிங். சொல்லுங்க. 

சார் என் பேரு துரைசிங்கம். இந்த ஏஜிடிலதான் திருவண்ணாமலைல இருந்து டிரான்ஸ்ஃபர்ல மெட்ராஸ் போயிருக்கேன்.

ஒகே... 

அனாமலி இன்க்கிரிமெண்ட் அரியர்ஸ் இன்னும் எனக்கு கெடைக்கலை...

அப்ஜெக்‌ஷன் ஏதாவுது இருந்திருக்கும்.கொரி போட்டு திருப்பி அனுப்பியிருப்போமே. உங்க டிவிஷன்ல விசாரிங்க.

டிவிஷன்ல விசாரிச்சிட்டேன். கொரிக்கு பதில் எழுதி உங்குளுக்கு செண்ட் பண்ணிட்டாங்களாம். வந்து பாக்க சொன்னீங்கன்னு கேள்விப்பட்டேன்...

நான் யாரையும் வந்து பாருன்னுல்லாம் சொல்றதில்லீங்க. என்ன பேர் சொன்னீங்க,  நரசிங்கமா?

இல்லீங்க துரைசிங்கம்.

ஹக்கீம்! துரைசிங்கம்ங்கற பேர்ல பில்லு ஏதும் பெண்டிங்கா இருக்கா?

’ஸ்பெசல் மஸ்ஸ்சாலா ஒண்ணேய்’ என்று சமையற்கட்டை நோக்கி சர்வர், குரல்கொடுப்பதுபோல, தமது இருக்கையிலிருந்தபடியே செக்‌ஷனை நோக்கி அவர் கேட்டது தெள்ளத்தெளிவாகக் கேட்கவே, துரைசிங்கம் ரிசீவரைக் கொஞ்சம் தள்ளி பிடித்துக்கொண்டார்.

இங்க எதையுமே பெண்டிங் வெச்சுக்கறதில்லை. பில்லுல ஏதாவது பிராப்ளம்னா கொரி போட்டு உடனே திருப்பி அனுப்பிச்சிடுவேன்.  

சாரைப்பத்தித் தெரியாதா? சார் அப்பிடில்லாம் சொல்லி இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அதனாலதான மேட்ராஸ்லேந்தே ஃபோன் பண்றேன்.

ஹக்கீம், மிஸ்டர் துரைசிங்கம் பில் ஏதும் பெண்டிங்கா இருக்கா பாருங்க?  உதவியாளன் அவர் அறைக்கே வந்துவிட்டிருக்க வேண்டும். குரல் சற்றே மட்டுபட்டிருந்தது.

பில் இருக்குது சார். அதுல அப்ஜெக்‌ஷன் இருக்கு சார்.

என்ன ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் கொரி போட்டு அனுப்பிட வேண்டியதுதானே

ஹக்கீமிடம் பேசுவது தமது காதில் விழவேண்டும் என்பதற்காகவே ஃபோன் பொத்தப்படவில்லை என்பது தோன்றவும் லேசாக முகம்கோண ரிசீவரைப்பார்த்து சேட்டை செய்தார். முகத்தைப் பாவமாக்கிக்கொண்டு கெஞ்சும் குரலில்,

விழுப்புரம் டிவிஷன்ல இருந்து அனுப்பியே கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆவப்போவுது சார்.

மிஸ்டர் துரைசிங்கம் கொஞ்சம் இருங்க. பில்லு கைலதான் இருக்கு. 2ஆம்தேதி வந்திருக்கு. அப்பறம் 17ஆம் தேதி வந்திருக்கு.

இன்னிக்கி தேதி 5. போனமாசம் எப்படி சார் ஒரே பில்லு ரெண்டுதடவை வந்துருக்கும்?

அப்பிடி இல்லீங்க. 2ஆம் தேதி வந்ததை 5ஆம் தேதியே கொரி போட்டு திருப்பி அனுப்பிச்சிட்டோம். அவங்க 15ஆம் தேதிதான் கொரிக்கி ரிப்ளை பண்ணி இருக்காங்க. அது எங்குளுக்கு 17ஆம் தேதிதான் வந்துருக்கு. உங்க டிவிஷன்லதான் டிலே. 

சார் இன்னக்கி தேதி 5. 2ஆம்தேதியே வந்தது போவட்டும். 17ஆம்தேதிலேந்தே எவ்ளோநாள் லேட்டாயிருக்கு பாருங்க.

சார் உங்க ஒரு பில்லு மட்டுமே இல்லியே. இங்க இருக்கற ஆளுங்களே ரொம்பக்கம்மி. அது போவ ரெண்டுமூணுபேரு சம்மர் வெக்கேஷன்னு எல்டிசில போயிருக்காங்க.  

சார் ஸ்டாஃப் ஷார்ட்டேஜ் எங்கதான் இல்லை. எந்தக் கிளைமா இருந்தாலும் அப்ஜெக்‌ஷன்ஸை பீஸ்மீலா  ரெய்ஸ்பண்ணறது அமவுண்ட்ஸ் டு ஹராஸ்மெண்ட்னு கிளியர்கட் இன்ஸ்ரக்‌ஷனே இருக்குதில்லை. துரைசிங்கத்தின் குரல் சற்றே உயர்ந்ததுபோல உணரவும் இறுதியில் ஒரு ’சார்’ சேர்த்துக்கொண்டார்.

திரும்பவும் ‘ரெண்டு மஸ்சாலா முறுவலா...’ குரலில் புவியரசன் கூவத்தொடங்கிவிட்டார்.

ஏன்யா ஹக்கீம் உனக்கு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன். எந்த பேப்பர் வந்தாலும் ரிசீவ் பண்ணும்போதே பிராப்ளம் இருக்குதான்னு பாத்துருங்க. இருந்துதுன்னா கைல வெச்சுக்காம கொரி போட்டு தள்ளிருங்கன்னு. பாரு இப்ப உங்களால, ஹராஸ்மெண்ட்டுங்கற பெரிய வார்த்தையெல்லாம் நான் கேக்கவேண்டி இருக்கு.

ரிசீவர் பிடித்த கையை நீட்டிப் பிடித்துக்கொள்ளவேண்டிய அளவுக்கு காது ங்கொய்யென்றது. ரீங்காரம் அடங்கியதும் தொடங்கினார் துரைசிங்கம்.

சார் மொதல் தடவையா போனமாசம் 2ஆம் தேதி என் பில் வந்தப்பவே, என்னல்லாம் லேக்குணா இருக்குதோ எல்லாத்துக்கும் ஒண்ணா சேத்து கொரீஸ் ரெய்ஸ் பண்ணி இருந்தா, டிவிஷன்லேந்து அவங்களும் ஒரேடியா ரெக்டிஃபை பண்ணி ரிப்ளை குடுத்திருப்பாங்க. இல்லாட்டி சரியாதான் இருக்குன்னு அத்தாரிட்டியோட உங்களைக் கன்வின்ஸாச்சும்  பண்ணியிருப்பாங்க இதுக்குள்ள எனக்குக் கேஷே வந்திருக்கும் இல்லீங்களா?

ஹக்கீம் எல்லாம் உன்னால. இந்த மாதிரி இன்கேப்பபுள் ஸ்டாஃபை வெச்சுகிட்டு நான் படற கஸ்டம் யாருக்கு தெரியும். சரிங்க மிஸ்டர் துரைசிங்கம். என்ன பண்ணலாம்னு ஸ்டடிபண்ணி  கண்டிப்பா உங்குளுக்கு என்னாலான ஹெல்ப்பைப் பண்ணப் பாக்கறேன்.

பாருங்க சார் கீழ இருக்கறவங்களால உங்குளுக்கு எவ்ளோ கெட்ட பேரு. ஒரு கிளெய்முக்கே திரும்பத்திரும்ப கொரி போட்டு திருப்பி அனுப்பிச்சிகிட்டு இருந்தா, ’வேற எதுக்காகவோ’தான் டிலே பண்றீங்கன்னு அனாவசியமா உங்கபேர்தான் ரிப்பேர் ஆவும்.

நூத்துல ஒரு வார்த்தை சார் நீங்க சொன்னது. ஏண்டா ஆபீசரானோம்னு இருக்கு. அவசரப்படுத்தறாங்களேன்னு சரியா பார்க்காம பில்லை பாஸ் பண்ணிட்டு நாளைக்கு ரெவின்யூ லாஸ்னா நாந்தானே சார் ஆன்ஸரபிள். எப்புடிப்போனாலும் என் தலைதான் உருளும்.

சார் அதனாலதான் சொல்றேன். அந்த பில்லுல சின்ன பிராப்ளம் இருக்குதுன்னு உங்குளுக்குத் தோணினாக்கூட, பாவம் நீங்க ஏன் ரிஸ்க் எடுத்து பாஸ் பண்ணறீங்க? ரிஜெக்ட் பண்ணி மெட்ராசுக்கு அனுப்பி வெச்சுடுங்க. இந்த பீஏஓ கேக்கற விளக்கத்தை நான் குடுத்துக்கறேன்.

அப்பிடியா சொல்றீங்க.

ஆமா சார். பாவம் நீங்க ஏற்கெனவே ரெண்டுதடவை கொரி போட்டதே ரெக்கார்ட் ஆயிருச்சி. இப்ப இன்னொருக்கா கொரிபோட்டு டிலே ஆனா அதுவும் ரெக்கார்ட் ஆயிரும். நம்ப சென்ரல் கவர்மெண்டு ரொம்ப மோசம் சார். ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் போர்ட் ஆபீஸுக்கும் வெப்சைட் வெச்சிருக்கான். அதுல பப்ளிக் க்ரீவன்ஸ்னு ஒரு லிங்க்கும் குடுத்துருக்கான். அதைக் கிளிக் பண்ணினா செண்ட்ரல் கவர்மெண்ட்டுக்குக் கீழ வர எல்லா டிபார்ட்மெண்ட்டோட பேரும் டிராப்டவுன் மெனுவா வந்துருது. தேவையானதை செலெக்ட் பண்ணி வர விண்டோவுல கம்ப்ளெய்ண்ட் அடிச்சா, ஒரு மணிநேரத்துலையே நம்ம கம்ப்ளெய்ண்ட் அந்த செகண்ட்ல எந்த ஆபீசர்கிட்ட இருக்குன்னு ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி சொல்லுது சார். இந்த க்ரீவன்ஸ் செல்லோட மானிட்டரிங் டேரெக்டா ஹோம் மினிஸ்ட்ரிக்குக் கீழ வரதால, கம்ப்ளெய்ண்ட்டு நேரா உங்க அல்ட்டிமேட் ஹெட் ஆன, டெல்லில இருக்கற கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலுக்கே போயி சேந்துரும். அப்பறம் ஜோன் ஹெட், சென்னை ஹெட்டுன்னு ஒவ்வொரு தலையா எறங்கிவர ஆரம்பிக்கும். உங்க மெட்ராஸ் சீஃப், மூணு நாளைக்குள்ள பதில் குடுத்தாவணும். இந்தக் கம்ப்ளெய்ண்ட் பத்தி யார்கிட்ட டிலே எதனால டிலேன்னு இன்வெஸ்டிலேட் பண்ணி உங்ககிட்ட ஸ்டேட்மெண்ட் ரெக்கார்ட் பண்ணி மேல அனுப்பியாவணும்.  இதெல்லாம் எதுக்கு சார்? யாரோ செஞ்ச தப்புக்குப் பாவம் நீங்க ஏன் சார் பதில் சொல்லிகிட்டு இருக்கணும். சிம்பிளா  அந்த பில்லை, துரைசிங்கம் டிரான்ஸ்வர் ஆயிட்டான்னு சொல்லி மெட்ராசுக்கு ஃபார்வார்ட் பண்ணிடுங்க. நான் இங்க பாத்துக்கறேன்.

எதிர்முனையில் ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இருந்தாலும் ஹலோ ஹலோ என்று கடமைக்கு இரண்டுமுறை சொல்லிவிட்டு கார்ட்லெஸ்ஸைக் கீழே வைத்தார் துரைசிங்கம்.

சாப்பாட்டு மேசையின் பக்கவாட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த மனைவி காலி காபி டம்ப்ளர்களை எடுத்துக்கொண்டு, இதற்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு புத்திசாலித்தனம் என்கிற முறுவலோடு சமையலறை நோக்கிப் போனார்.

மறுநாள் மதிய வாக்கில், பொய்த்தூக்கத்தில் இருந்த செல்ஃபோன் ஒளிர்ந்து, 35,388.00 கணக்கில் சேர்ந்திருக்கிறது என்கிற குறுஞ்செய்தியாய் தெரிவித்தது.

விழுப்புரத்துக்கு ஃபோன்போட்டு, மேடம். அரியர்ஸ் அமவுண்ட் என் அக்கவுண்ட்டுல கிரெடிட் ஆயிடுச்சி ஆனா நாலாயிரம் கொறையிதே என்றார்.

அட்றா சக்கைன்னானாம். கிரெடிட் ஆயிடுச்சா! என்று பூரிப்புடன் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். நாலாயிரம் இன்கம்டாக்ஸுக்கான மினிமம் 10% டிடிஎஸ் பிடித்தம் சார். அண்ணாத்தைய புடிபுடின்னு புடிச்சிட்டீங்களோ? 

இருவருக்கிடையில் நடந்த உரையாடலை விவரித்தார்.

சண்டைக்காரர்னு எல்லாரும் உங்களை சொல்றோமே தவிர இப்புடியும் ரெண்டுபேர் வேணும் சார்.  ஆ அப்பறம் சொல்ல மறந்துட்டேனே. உங்க பில்லோட போன ராமசாமி, கமலாமேடம் ரெண்டுபேர் பில்லும் இன்னோரு மொக்கைக் கொரி போட்டு திரும்ப வந்துடுச்சி சார்.