Tuesday, November 27, 2012

ஆடி போயி ஆவணி வந்தா...

நிஜ வாழ்வில் தாம் புரிந்த லீலாவிநோதங்களை அப்படியே உல்டா பண்ணி எக்ஸைலாக உருட்டிக் கொடுத்திருக்கிறார் சாரு என்று காலையில் விவகாரங்களும் விகாரங்களும் என்று எழுதிப் போட்டால், நைஸாக மூக்கை நுழைத்து பாருங்கள் இப்படித்தான் என்னை அப்போதைய சாட்டிலும் மாட்டிவிட்டார்கள் என்று ஒரு குப்பையை, ஸ்பாமைக் காட்டி நிஜத்தில் தாம் நடந்துகொண்ட கீழ்மையிலிருந்து திரும்பவும் எப்படித் தப்பிக்கப் பார்க்கிறார் சாரு நிவேதிதா என்கிற கைப்புள்ளை.

ஆனால் பாவம் இந்த டகால்டி வேலை நம்மிடம் செல்லாமல் இப்படி காமெடியாகப்போகிறது என்று பாவம் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

பொதுவாகவே சாருவின் தளத்தைப் பார்த்தால் தமிழ் தெரியாதவர்கள் கூட தவிர்க்க இயலாத சமாச்சாரம் பெண்கள் இவரை மோகித்து எழுதும் கடிதங்கள்.  அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் வேறு இருக்கும். பாவம் அவற்றில் சில இணைய சில்லுண்டிகளால் எழுதப்பட்டவை என்பதுகூட இந்த ட்யூபுப் லைட்டுக்குத் தெரியாமல் சாரு இவற்றைப் பிரசுரிப்பதன் காரணத்தை அலசிப்பார்ப்போம்.

இவரது வாசக பில்லக்காய்காய்கள், பெரும்பாலும் ஆங்கில ஃப்ரென்சு மொழிகளில் கில்லாடி, எவ்வளவு பெயர் உதிர்க்கிறார், எப்போதும் குறைந்தது இரண்டு பெண்கள் புடைசூழ இருப்பவர், பெரிய ஓட்டல்களில் எல்லாம் சரக்கடிக்கிறவர் சாரு, எவ்வளவு பெரிய ஆளாய் இவர் இருந்தால் இதெல்லாம் சாத்தியம் என்று கிறங்கிக் கிடப்பவர்கள் என்பது வாசகர் வட்டத்தை ஒரே ஒரு முறை ஸ்க்ரோல் செய்து பார்த்தாலே புரிந்துவிடும்.

தாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள சாரு படும்பாடு தறிபடுமா? இதற்காகத்தான் இந்தப் பெண் பெயர் கடிதங்கள். பேச்சு மட்டும்தான் உலக அளவில். டெக்னிக் எல்லாம் அந்தக்கால லோக்கல்தான். இது அரதப்பழைய எம்ஜிஆர் பட டெக்னிக்தானே. எல்லா கிளுகிளூப்பு கனவு சீன்களிலும் எப்போதும் பெண்களே எம்ஜிஆர் பற்றிக் கனவு காண்பார்கள் இல்லையா. அதுபோல. வயதாக ஆக ஹீரோயின்களின் வயதைக் குறைத்துத் தம்மை இளமையாகக் காட்டிக்கொண்ட அதே பாணியைத்தான் அண்ணன் சாரு அவர்களும் கடைப்பிடிக்கிறார்.

சாரு நிவேதிதா தமிழிலக்கியத்துக்குப் பணியாற்ற இணையத்துக்கு எழுத வந்தபோது நடந்த நிகழ்ச்சியொன்றைக் கூறினால்தான், 35 வருடங்களாக எழுத்துத் தவமிருந்து குருதிகொட்டி செருப்பாய் தேயும் தியாகச் செம்மல் சாருவின் ஆழ்மனத்தில் இருப்பது இலக்கியமா இல்லை குட்டி ஷோக்கா என்பது தெரியவரும்.

சாரு இணையதளம் தொடங்கப்போவதாக நடுப்பக்க விளம்பரம் கொடுக்க இலக்கிய உலகில் பிரபலமான இடைநிலை பத்திரிகையை அணுகி இருக்கிறார். விளம்பரத்தைப் பார்த்த அந்தப் பத்திரிகையின் பொறுப்பாளருக்கும் சாருவுக்கும் இடையே நடந்த உரையாடலைக்  கிட்டத்தட்ட அதே வடிவத்திலேயே தர முயற்சிக்கிறேன்.

விளம்பரம் போடறதைப் பத்தியில்லை...

சொல்லுங்க எனி பிராப்ளம்?

பத்திரிகைக்கு ஒரு பிராப்ளமும் இல்லை ஆனா...

சொல்லுங்க...

விளம்பரம்னா கொஞ்சம் நம்பரா மாதிரியும் இருக்கணும் இல்லையா? அதான்...

ஏன் இதுல என்ன பிரச்சனை?

உங்களைப் பத்திப் பேசறவங்க எல்லாருமே பெண்களாவே இருக்காங்களே ஒண்ணு ரெண்டுபேர் ஆம்பளங்களையும் சேத்தாதானே கொஞ்சமாச்சும் நம்பராமாதிரி இருக்கு.

அட ஆமாம் இல்ல.

கொஞ்சம் அப்பிடி ரெடி பண்ணிக் கொண்டாங்களேன் போட்டுடலாம்.

கரெக்ட். பாருங்க இது எனக்குத் தோனவே இல்லை.

என்று சொல்லி அந்த விளம்பரத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டு மானம் மரியாதை எல்லாவற்றையும் அந்த அலுவலகத்திலேயே போட்டுவிட்டு வந்த நமது உலகப்புகழ் குழல் விளக்கு திரும்ப அந்தப் பத்திரிகைப் பக்கமே எட்டிகூடப் பார்க்கவில்லை.

மணி இரவு 11.21. இப்போது அந்தப் பத்திரிகை அதிபரைத் தொடர்புகொண்டு 2011 ஜனவரி புக்ஃபேரில் இந்த சம்பவத்தைக் கூறினாயே அதை நான் எழுதினால் உன் பெயரை பயன்படுத்திக்கொள்ளலாமா என்று முன் அனுமதி பெறவும் வழியில்லை. பாரம்பரியமாகவே ரொம்ப டிசிப்ளிண்டு குடும்பம் என்பதால் ஆசிரியர் இந்நேரம் உறங்கிவிட்டிருப்பார். எனவேதான் ஆதாரபூர்வமாக இல்லாமல், சம்பவத்தை மட்டுமே கூறவேண்டிய அவலம் எனக்கு.

இப்படி ஃபாரின் ஷூக்களால் நாசூக்காய் அடிவாங்கிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல நடையைக் கட்டுவதில் வடிவேலுவுக்கு முன்னோடி நம் ஒட்டுமொத்த அன்புக்கும் பாத்திரமான கைப்புள்ளை சாருதான்.

நடுங்குவதாக நடித்து இதைக் கூறுபோட்ட என்னைப் பார்த்து இலக்கியத்துல இதெல்லாம் சகஜமப்பா என்று தன் வழியில் நடந்து போவதான பாவனைதான் ஆங்கிலத்தில் வந்த காதல் கடிதம் என்கிற பதிவு.

என்னடா மாமல்லா! என்னைய ஏதோ அடிச்சதா பேசிக்கிட்டாங்க. அடிச்சியா? ஹே எங்க வலிக்கவே இல்ல.

ஏன் மச்சி இன்னிக்குக் காத்தாலதானடா குடுத்தேன்

அது கா த் தா ல இல்ல ஹுஹ்ஹு இ ப் ப...?

என்கிற கைப்புள்ளையின் சவடால் பதிவுதான் அது.

மச்சி நீயாச்சும் வெட்டி ஒட்டி மெனக்கெட்டிருக்கே. எனக்கு அந்த கஷ்டம்கூட இல்லை. இந்தா வெச்சிக்கோ. உன் பதிவுமேலையே ஃபேஸ்புக்குல எனக்கு வந்த அதே மெசேஜை என் பீச்சாங்கையால ஒட்டறேன் படிச்சிக்கோ. அதே மெசேஜ்தான் அச்சு அசலா. இது ஒனக்கு மட்டும் எனக்கு மட்டும் இல்ல புண்ணாக்கே! ஒலகத்துக்கே அனுப்பிகிட்டு இருக்கானுங்க எவுனுங்களோ.
மச்சி இந்த அட்டு ஃபிகரு ஒரு மெய்லனுப்பினதுக்கே இந்த ஆட்டம் போடறியே உனக்காக இந்தா கொசுரு. இதே ஃபிகரு 28 ஆகஸ்டுலையே எனக்குப் போட்ட மொதொ பிட்டு.
உன்னைய மாதிரி டுபாகூருங்க பயந்தாங்கொள்ளிங்கதான் இந்த மாதிரி ஸ்பாமுக்குலாம்கூட கேஸ் போட்டுருவாங்களோன்னு பயந்து மெயில் ஐடிய எல்லாம் நீக்கிட்டுக் குடுக்கணும். 

மச்சி மடியில கனமில்லாதவன் இதை சைபர் கிரைமுக்குக் குடுப்பான். இல்லியா அடச்சீ என்னடா இது சனியன்னு நினைக்கிறவன் ஸ்பாம்னு கண்டுக்காம ஜோலியப் பாத்து போய்கிட்டே இருப்பான்.ஃபேஸ்புக் மெசேஜுதானே மொத்தமா இந்த உரையாடலையே நீக்கிடலாம். திரும்பத்திரும்ப ரொம்ப லொள்ளு பண்றாங்கன்னா உன் யோக்கியதை தெரியாம உன்னைய Mr Charuனு  மரியாதையா விளிச்சாங்களே பாடகி சின்மயி மேடம், அவங்களை மாதிரி பிளாக்கும் பண்ணிடலாம். ஆனா அதுக்கப்பறம் பிளாக்பண்ணப்பட்டவன் என்ன பண்றான்னு அவங்க எட்டிப்பாத்துகிட்டு இருந்தாங்களே அது வெட்டி வேலை.

வெட்டித்தனமா இதுக்குப்போயி பதிவெல்லாம் போட்டு பம்மாத்துலாம் பண்றியே மச்சி 60 வயசுல இதெல்லாம் இந்தக் கட்டைக்குத் தேவையா?

ஏம்பா நீயி ராமகிருஷ்ணன் ஜெயமோகனைப் பாத்தாச்சும் கத்துக்கக் கூடாதா? 

எவ்ளோ அடிச்சாலும் ரியாக்சனே குடுக்காம, என்னையக் கண்டுக்காத மாதிரியே காட்டிகிட்டுப் பல்லை இறுக்கமா கடிச்சிகிட்டு மாமல்லனையெல்லாம் நாங்க ஆளாவே சீந்தறதில்லை பாத்தீங்களான்னு விசிறி அடிமைகள் முன்னாடி என்னா ஷ்டைலா ஃபேஷன் ஷோ காட்டிகிட்டு இருக்காங்க பாரு. அதைப் பாத்தாச்சும் கத்துக்கக்கூடாதா? வந்து வந்து ஏம்பா எங்கிட்ட முதுகைக் காட்டறே!

இப்புடிக்கேட்டா, அவங்கள்ளாம் போலி நான்தான் உண்மையான வெள்ளந்தினு சொல்லுவே. ஹை உன்னையப்பத்தி எனக்குத்தெரியாதா?

இந்த ராஜன் லீக்ஸ் வேற வெளிய வந்தும் வாய மூடிகிட்டு இருக்கான். வேற வழியில்லாம நானே டபுள் ரோல் பண்ணவேண்டியிருக்கு. 

ஆனா பாரு சாரு நெஜம்மாவே உன் தற்கொலைப்படை கும்பல்தான் உன்னைய விட ரொம்ப பாவம். ஏன்னா, ஆடிபோயி ஆவணி வந்தா நம்ப சாரு டாப்புல வருவார்னு ஜாதகத்துல இருக்கறதா நம்பி தேவுடு காத்துகிட்டு இருக்கறது அவங்கதான.