Saturday, January 5, 2013

பின் தொடரும் குற்றவுணர்வுக்குரலின் நிழல்

சின்மயிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவர்களது கருத்துக்களுக்கு எதிராய் எவ்வளவு ஆணித்தரமான அறிவுபூர்வமான ஆதாரபூர்வமான கருத்துக்கள் தர்க்கபூர்வமாய் முன் வைக்கப்பட்டாலும் அப்படி ஒரு சங்கதி நிகழவே இல்லை என்பது போல வேற்றுலகவாசிகளாய் தாம் சொன்னதையே தேய்ந்த ரெக்கார்டாய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 

இம்முறை சின்மயி யாரிடம் போய் கண்ணைக் கசக்குகிறார்  என்று பாருங்கள்.

சின்மயி எதோ புத்திசாலித்தன்மாய் பேசுகிறார் போல என்று கலெக்டர் அலெக்ஸ்பால் மேனன் பேசவந்தால், சொந்தக் கதை சோகக்கதை என்று மீட்டத்தொடங்குகிறார்.

யாருமே யாருக்கும் கீழானவர் இல்லை என்று சொன்னதுகூட இவருக்கு பிரச்சனை ஆகிவிட்டதாம்.

தமிழறியா காரணத்தால், தாழ்ந்தவர் தாழ்த்தப்பட்டவர் இரண்டுக்குமான வேறுபாடு தெரியாமல சொல்லிவிட்டாராம். ஆனால் தான் கூற நினைத்தது எவரும் தாழ்ந்தவர் இல்லை என்பதைத்தான் என்று பல்லாயிரம்முறை ராஜனிடம் கூறிவிட்டதாக பிளாகில் எழுதிக் கொள்கிறார். 

இந்த வார்த்தையை மட்டுமே பிடித்துக்கொண்டு உங்களை யாரும் சிலுவையில் அறைந்துவிடவில்லை சின்மயி. அதற்கு முன்பாக, பள்ளியில் ஜாதியைப் பதிய வேண்டும் என்பது   கட்டாயம் இல்லை என்கிற அரசாணையை, உங்களுக்கு சவுகரியமாய் அரசு ஏதோ ஜாதிச் சான்றிதழே தேவையில்லை ஜாதியே 2001 முதல் இல்லை என்று கூறிவிட்டதைப்போல யுரேகாயுரேகா எனக்கூவினீர்கள். ஆனால் பாருங்கள் இது  “நடைமுறையில் இல்லை” என்று நாடகமாடினீர்கள். அதன் தொடர்ச்சியாய் சோக்கால்டு ”தாழ்த்தப்பட்டவர்கள்” என்கிற சொற்களை உதிர்க்கிறீர்கள் என்பதை ஏன் கலெக்டராய் இருக்கும் அலெக்ஸ்பால் மேனன் அவர்களிடம் மறைத்துப் பேசுகிறீர்கள்?

ஜாதிகள் உள்ளதடி பாப்பா - அதற்கு
சலுகையும் உள்ளதடி பாப்பா - அதனால்தான்
கஷ்ட்டப்பட்டாலும் நம்பளவாளால் - இங்கு
ஐஏஎஸ் பாஸ்பண்ண முடியலடி பாப்பா

என்று ஆர்த்திஆன்ஏர் என்பவரிடம் புலம்புகிறீர்கள். டிஜிபி நடராஜ் சார் உங்களுக்கு தேர்வுக்கான விண்ணப்பப் படிவம்தான் கொடுக்க முடியும். அம்மா நீ படித்தால் உன் திறமைக்கு கட்டாயம் நீ ஐஏஎஸ் ஆகமுடியும் என்று ஊக்க வார்த்தைகளதான் அளிக்க முடியும். அதைத்தான் அவரும் செய்தார் என்பதற்கு உங்களது ட்விட்டுகளே சாட்சி. முனைந்து படிக்க வேண்டியதை அதற்காக உழைக்க வேண்டியதை நீங்கள் அல்லவா செய்ய வேண்டும். அவரே உங்களைப் பாஸ் பண்ண வைக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

அப்பாவி வேடம் கட்டும் இவ்வளவு பெரிய அயோக்கியராய், நீங்கள் ஏன் சின்மயி இருக்கிறீர்கள்? உங்களது குற்ற உணர்வு உங்களை விடாமல் துரத்துகிறதா? அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இருவருக்கு அநியாய தண்டனை வாங்கிக் கொடுத்தும் உங்கள் புலம்பல் நிற்கமாட்டேன் என்கிறதோ. அவர்களுக்குத்தானே வேலை போயிற்று உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே. அப்புறம் ஏனிந்த கழிவிரக்கம்?

உண்மையில் பார்த்தால், அடச்சே எமது வாழ்க்கையை இப்படிக் குலைத்துவிட்டாயே என உங்களைப் பார்த்து சபிக்க வேண்டிய இருவரும், விடு கழுத என்னவோ நடந்தது நடந்து போச்சு அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார்க்கலாம் என்று, ஒருவர் எம்பிஏ தேர்வு எழுதுவதில் மும்முரமாய் இருக்கிறார் மற்றவரோ அடுத்து,தனது வாழ்வைக் கட்டியெழுப்ப என்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  பட்ட காயத்தையே நக்கிக்கொண்டு இருக்காமல் அவர்கள் வாழ்வின் சவாலை ஏற்கத் தலைப்பட்டுவிட்டார்கள். ஒருவேளை  இதுதான் உங்களை இந்த பாடுபடுத்துகிறதோ?

தம்மிடம் இல்லாத அறத்தை இருக்கிறது என்று தனக்கே சொல்லி உறுதிபடுத்திக் கொள்வதற்காக சதா அறம் பற்றியே பேசிக்கொண்டு திரியும் ஜெயமோகனைப்போல உங்களையும் நான் நல்லவள் என்று போவோர் வருவோரிடமெல்லாம் அதைப் பற்றியே பேசவைக்கிறதோ? சதாகாலமும் அதே சிந்தனையில் ஆழ்தி வைத்திருக்கிறதோ? 22 அக்டோபர் 12லிருந்து வேறு எண்ணமே இல்லாமல் இதிலேயே மூழ்கிக்கிடந்த நான்கூட புத்தகம் முடிந்தது என் பொறுப்பு முடிந்தது என்று நன்றாக தூங்கி எழுந்து பராக்கு பார்த்தபடி அலுவலகம் போய்வரத் தொடங்கிவிட்டேன்.

ராஜேந்திரன் என்கிற நண்பர் பல வருடங்கள் முன்பாக, ட்ரைவ்-இன் உட்லண்ட்ஸில் கூறிய ஹெமிங்வேயின் கதைதான் நினைவுக்கு வருகிறது. தலைப்பு தெரியவில்லை. காப்பி குடித்துமுடிக்கும் கால அவகாசத்துக்குள் அவர் சொன்ன வாய்மொழிக் கதை வடிவம் மனதில் தங்கிவிட்டது. அவர் அதைக் கூறத்தொடங்கிய முதல் வாக்கியத்திலேயெ இது ஷெப்ரால் படம்போல இருக்கிறதே என்றேன்.

கலையின் வேலை கட்டுரை கிளாட் செப்ரால் படத்தையும் அதன் ஹாலிவுட் மீள் உருவாக்கத்தைப் பற்றியும் பேசுகிறது.

படத்தின் முற்பகுதியும் கதையும் ஒன்றுபோலவே இருக்கும். பாதிக்கு மேல் வேறு திசை நோக்கிப் பயணப்பட்டுவிடுவார் ஹெமிங்வே.

மனைவியின் கள்ளக் காதலனைத் தேடிக் கண்டடைந்து, அவனிடம் தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு சகஜமாக பேசத்தொடங்குகிறான் கதாநாயகன். கலவரப்பட்ட கள்ளக் காதலனும் சற்று நேரத்தில் சுமுகமாக உரையாடத் தொடங்குகிறான். 

கோபத்தைவிட கணவனுக்கு கள்ளக்காதலனைப் பற்றித் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இருவரும் வீட்டுக்குள் நடந்தபடியே உரையாடுகின்றனர். அங்கு இருக்கும் கலைப்பரிசு ஒன்றைக் கையில் எடுத்து, இது யார் கொடுத்தது என கேட்கிறான் கணவன். தன் மனைவி கொடுத்ததுதான் என்பது தெரியவரவும் குலைந்து போகிறான். எதோவொரு திருமண நாளின் அன்பளிப்பாய், கணவன் தன் மனைவிக்கு அளித்த பரிசு அது. அந்த நொடிநேர அழுத்தத்தில் அருகிலிருக்கும் பீத்தோவன் சிலையால் காதலன் தலையில் ஒரே அடியாய் அடிக்கிறான். அவன் செத்துக் கீழே விழுகிறான்.

பிணத்தை அங்கிருக்கும் துணிகளைக் கொண்டு சுருட்டுகிறான். தரையில், தன்மீது என்று படிந்த குருதிக்கறையைத் துடைத்துக் கொள்கிறான். இது வரையிலும், இந்த படமும் ஹெமிங்வேயின் கதையும் கிட்டத்தட்ட  ஒன்றுதான். இதன் பிறகு படம் என்ன ஆகிறது என்பதை டிவிடியில் ஆங்கில துணைச் சொற்றொடர்களோடு பார்த்துக்கொள்ளுங்கள். 

ஹெமிங்வேயின் கதையில், பிணம் சுருட்டப்பட்டாயிற்று. தடயமே இல்லாமல் துப்புறவாய் கறை துடைக்கப்பட்டாயிற்று. அந்த வீட்டுக்குள் வந்தது முதல் தான் எதையெதையெல்லாம் தொட்டோம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பொருளாய் தேடித்தேடி தன் ரேகையின் தடயம்  இல்லாத வண்ணம் துடைக்கத் தொடங்குகிறான் கொலைகாரன். துடைத்துதுடைத்து தடயத்தை அழிப்பதிலேயே ஆழ்ந்திருக்கிறான். பிணம் நடுக்கூடத்தில் கிடக்கிறது.

விடிந்து விட்டவதை பால்காரனின் அழைப்பு மணி அறிவிக்கிறது.