Sunday, September 8, 2013

யாசகம் [சிறுகதை]

தொலைபேசி மணி அடித்தது. மனைவி எடுத்தாள். யாரோ பெரியவர். உங்கள் பெயர் சொல்லிக் கேட்கிறார் என்று கிசுகிசுத்தபடி கொடுத்தாள். 

நமஸ்காரம். நான் வெங்கடேச ஐயர் பேசறேன். நீங்க என்னைவிடப் பெரியவாளா இருந்தா நமஸ்காரம் இல்லேன்னா ஆசீர்வாதம். எனக்கு வயசு எழுவத்தி மூனு என்ற குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

சின்னவன்தான் சொல்லுங்கோ

நீங்க ஸ்ரீநிவாசன்தானே?

ஆமாம்.

போன வருஷம் எம் பொண்ணுக்கு கேகே நகர்ல பெரிய ஆக்சிடெண்ட் ஆயிடுத்து. பொழச்சதே பெரிய விஷயம். கிட்டத்தட்ட ஒருவருஷமா சித்தப்பிரமை பிடிச்சாப்பல இருந்தா. சச்சிதானந்த சுவாமிகள் ஆஸ்ரமத்துக்குக் கூட்டிண்டு போனோம். தெய்வாதீனமா குணமாயிட்டா. அவளுக்கு இப்ப கல்யாணம் நிச்சயமாயிருக்கு. 

ம்

உங்க நம்பரை டைரக்டரில பாத்து எடுத்தேன்.

ம்.

நாளைக்குத் திருமாங்கல்யம் பண்ண ஆர்டர் குடுக்கறதா இருக்கோம்.

தன்னிச்சையாகப் பக்கவாட்டில் பார்த்தார். நியூ ராஜா ஸ்டோர்ஸ் மளிகைக் கடை நாடார் கொடுத்திருந்த பெருமாள் படம் போட்ட நாள் காலண்டரின் மீது ஸ்ரீனிவாசனின் பார்வை பதிந்தது. நாளைக்கு அஷ்டமி நவமி இல்லை. மறுமுனை ஆசாமி அடிமட்ட புருடா இல்லை.

ம்

நாலு பேரண்டை யாசகம் கேட்டு திருமாங்கல்யம் பண்ணுடான்னு  எங்க அம்மா சொன்னா. அவளுக்கு வயசு தொண்ணுத்தொம்பது ஆறது. 

அப்படியா

ஆமாம். கல்யாணத்துக்குக் கேக்கலை. திருமாங்கல்யம் செய்யதான் கேக்கறேன். 

ம்

அதும் அப்பா பேரு இருக்கறவாகிட்டையா கேளுடான்னு சொன்னா. அதான் டைரக்டரியைப் பாத்து உங்களை செலெக்ட் பண்ணிக் கூப்பிட்டேன்.

ம்

நீங்க சி. ஸ்ரீநிவாசன். எங்கப்பா பேரும் அதான். சித்திரக்குளம் ஸ்ரீநிவாச  ஐயர். அதாலதான் சி.ஸ்ரீநிவாசன்னு பேர் கொண்டவாளா தேடி கேக்கறேன்.

சரி

கட்டாயமில்லை. உங்களுக்கு விருப்பப்பட்டதைக் குடுக்கலாம்.

நீங்க எங்க இருக்கேள்? உங்களை எங்க மீட் பண்றது?

சேலத்துல இருக்கேன். இப்ப சத்திக்கு சேலத்தையும் தாண்டி ஒரு குக்கிராமத்துல இருக்கேன். திருமாங்கல்யத்துக்கு ஆர்டர் குடுக்க நாளைக்குக் கார்த்தால சேலம் வறேன்.

எப்படி குடுக்கறது? அதும் நாளைக்குக் காலைலன்னா கேக்கறேள். இப்பையே அனுப்ச்சாலும் மணி ஆர்டர் கூட நாளைக்கு வந்து சேராதே.

இல்லை பேங்க்கு வழியா அனுப்பிடலாம்.

NEFT பண்ணனும்னா இன்னக்கி சனிக்கெழமையாச்சே. நெட் பேங்கிங் பண்ணினாக்கூட ஆர்பிஐயோட ஒர்க்கிங் அவர்ஸ்லன்னா டிரான்ஸ்வர் ஆகும். நாளைக்கு சண்டே ஆச்சே.

ஒரே பேங்க்குலேந்து அனுப்பறதா இருந்தா NEFTல பண்ண வேண்டியதில்லை. என் பேங்க் அக்கவுண்ட் நம்பரைத் தறேன். சித்த சிரமம் பாக்காமப் பேங்குக்குப் போய் பண்ணப் பாருங்கோ. பிரார்த்தனை. தெய்வ காரியம்.

ஓ! ஓகே. சொல்லுங்கோ.

உங்க மொபைல் நம்பர் இருந்தா சொல்லுங்கோ. அக்கவுண்ட் டீடெய்ல்சை எஸ்எம்எஸ் பண்றேன்.

கைபேசி எண்ணை மறுமுனைப் பெரியவர் வாங்கிக் கொண்டார். அடுத்த நிமிடம் ஸ்ரீனிவாசனின் கைபேசி இரைந்தது. வங்கிக் கிளையின் ஐஎஃப்சி எண் உட்பட அனைத்து விவரங்களும் எஸ்எம்எஸ்ஸாய் வந்து சேர்ந்திருந்தது. 

அடுக்களையிலிருந்து வந்த மனைவியிடம் நடந்ததைக் கூறினார். லேசான முறுவலுடன் அவள் கேட்டுக்கொண்டாள். 

பொய்யான ஆள்போல தெரியவில்லை. கொடுக்கலாம் என்றுதான் நினைக்கிறேன் என்றார்.

சரி குடுங்கோ. நல்ல காரியம்தானே. அவள் முகத்தில் மெலிதான பாராட்டுணர்வு படர்ந்தது. 

என்ன ஐநூறா ஆயிரமா? என்ன குடுக்கலாம்னு இருக்கேள்?

ம் எனச் சொல்லி, பார்த்துக்கொண்டு இருந்த பத்திரிகையில் மூழ்கிவிட்டார். 

ஓய்வு பெற்ற பின்னும் சம்பளம் கிடைக்கும் வழியைப் பற்றிய பாதுகாப்புத் திட்ட விளம்பரம் தட்டுப்பட்டதும் வாரிச் சுருட்டிக்கொள்ளாத குறையாய் டைனிங் டேபிள் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளியபடி எழுந்தார். இந்த சனியன் பிடித்த பேப்பரில் நுழைந்தாலே இப்படித்தான் நேரம் காலம் போவதே தெரிவதில்லை. எத்தனை டிவிக்களில் எத்தனை நியூஸ் சேனல் வந்தால்தான் என்ன? பத்திரிகையில் அப்படி என்னதான் சிக்கிரி கலந்து அச்சடிக்கிறானோ. கண் விழித்ததும் பத்திரிகை படிக்காவிட்டால் காபி குடித்தது போல இருக்கிறதா? 

அலுவலகம் கிளம்பும்போது தினமும் மனைவி நினைவு படுத்திக்கொண்டே இருந்தும் ஐந்தாறு நாட்களாக ஏடிஎம்மிலிருந்து சம்பளம் கொண்டுவர மறந்துமறந்து போவது நினைவுக்கு வந்தது. கூடவே, சனிக்கிழமையானாலும் அலுவலகத்துக்கு வந்துவிட்டுப் போகுமாறு கேட்டுக்கொண்டிருந்த மேலதிகாரியின் அன்புக் கட்டளையும் ஞாபகம் வந்தது. இரவு திரும்பி வரும்போது, வழக்கம்போல ஏடிஎம்கள் எல்லாம், சாளேட்சரக் கண்ணாடி போடாதவன் பார்த்த பத்திரிகையாய் சப்ஜாடாக மறைந்துவிடக்கூடும். வீட்டுச் செலவுக்கான பணத்தை இப்போதே கொண்டுவந்து கொடுத்துவிடுவதுதான் நல்லது. வெங்கடேச ஐயர்  குறிப்பிட்ட வங்கியும் ஏடிஎம்முக்குப் நான்கு எட்டில்தான் இருந்தது. அப்படியே அவர் கணக்கிலும் பணம் போட்டுவிடலாம் என வாக்கிங் ஷூவை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

டாலரிலும் பவுண்டிலுமாக ஆயிரம் லட்சம் என்று பரிசு விழுந்திருப்பதாகவும் அவற்றை அனுப்ப அவரது வங்கி தகவல்களை அனுப்புமாறும் நைஜீரிய மெயில்கள்தாம் அவ்வப்போது அறிவித்தபடி இருந்தன. இதுவரை எவரும் இப்படிப் பணம் அனுப்பச்சொல்லிக் கேட்டதில்லை.

எவ்வளவோ தண்டச் செலவு செய்கிறோம். மாங்கல்யச் செலவுக்குப் பணம்  கொடுப்பது விசேஷ புண்ணியம். அறிந்தும் அறியாமலும் எத்துனையோ பாவம் செய்துகொண்டு இருக்கிறோம். குறைந்தபட்சம் அதற்கெல்லாம் சேர்த்துப் பரிகாரமாகவாவது இது இருந்துவிட்டுப் போகட்டும்.

பெரியவர் கூற்றை நம்பாமல் இருக்க முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வயதான அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும் விநோதமான பிரார்த்தனைகள் தோன்றுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அதுவும் விபத்தில் மூளை கலங்கி, குணமான பெண்ணுக்குத் திருமணம் எனும்போது அவளது எதிர்காலம் பற்றிய கிலேசம் கூடுதலாகத்தானே இருக்கும்.

வயதானாலும் பெரியவர் தொழில்நுட்பத்தில் தற்காலத்தில் இருப்பதை பாராட்டத் தோன்றியது. ஊரே ஒன்றுதிரண்டு கரித்துக் கொட்டினாலும் தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் தலையை மேலேயே வைத்துக் கொண்டிருக்கும் சாமர்த்தியம். இந்த வித்தை யார் கற்றுக்கொடுத்து வந்தது? எல்லாம் ஜீனில் இருக்கிறது. பிராமணாளுக்கு ரிசர்வேஷன் கேட்பதில் நியாயமேயில்லை. மட்டுமல்ல நம்மவர்களின் சுய மரியாதைக்கே அது இழுக்கு என்றும் அவருக்குத் தோன்றியது. 

யாசககம் கேட்பதுகூட வேண்டுதலுக்காகதானேயன்றி, இல்லாததால் இல்லை என, கல்யாணத்துக்குக் கேக்கலை, திருமாங்கல்யம் செய்வதற்காகத்தான் என்று எவ்வளவு சூசகமாகச் சொல்லிவிட்டார்? இவ்வளவு நுட்பமானவர் எங்காவது பெரிய போஸ்டில் இருந்துதான் ஓய்வு பெற்றிருப்பார். அதை சொல்லிக்கொள்வதைக்கூட தற்பெருமையாய் நினைக்கும் அந்தத் தலைமுறை மனுஷன். வயோதிகத்தில், வாஞ்சையோடு சொந்த மண்ணில் போய் குடியிருக்கிறார் போலும். 

கைபேசி ஒலித்ததில் எண்ண ஓட்டம் தடைபட்டது. பேங்க்குக்குப் போகாமலே ஏடிஎம்மில் பணமெடுத்ததோடு திரும்பி, வீடுவரை வந்துவிட்டிருந்ததும் பிரக்ஞையில் பட்டது. 

ஹலோ!

நமஸ்காரம். நான்தான் வெங்கடேச ஐயர் பேசறேன்.

சொல்லுங்கோ

ஒன்னுமில்லை. ஞாபகப் படுத்தத்தான் பண்ணினேன்.

ம்… பாக்கறேன். பேங்க் போக நேரம் கெடைக்குமான்னு தெரியலை. முடிஞ்சா பண்றேன். 

கடவுளே...!

படியேறி வந்து மனைவியிடம் ஏடிஎம்மிலிருந்து எடுத்த பணத்தைக் கொடுத்தார். 

சரியான நொச்சு பிடிச்சவரா இருப்பார் போல இருக்கே இந்த மனுஷன்!

ஏன் என்ன ஆச்சு?

திரும்ப அவர் கிட்டேந்து போன். ஞாபகப்படுத்தறாராம்.

அதுக்குள்ளையா?

ஆமா இவர் போன் பண்ணி டீடெய்ல்ஸ் குடுத்ததும் நேரா பேங்க்குக்குப் போயி பணத்தை அனுப்பிட்டுதான் அடுத்த வேலை பாக்கணும் போல இருக்கு.

நன்னாருக்கு.

டவலை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனார். 

ஆரம்பத்திலிருந்தே எதோ சரியில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. பொதுவாக வயதானவர்கள் சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது முதலில் தாம் வேலை பார்க்கும் இடத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், தாம் வகித்த பதவி, துறை, என்று பெருமை தொனிக்க, விலாவாரியாகக் குறிப்பிட்ட பின்னர்தான் பேச்சுக்குள்ளேயே நுழைவார்கள். சேலத்துக்குப் பக்கத்தில் குக்கிராமம் என்பது என்ன மாதிரியான வேலை?

இவருக்கே வயது எழுபத்தி மூன்று என்றால் பெண்ணுக்கு என்ன இருக்கும்? விபத்து நடந்தது கேகே நகரில் என்கிறார். எந்த கேகே நகர்? கேகே நகரும் அண்ணா நகரும் இல்லாத ஊர் தமிழ்நாட்டில் ஏதாவது உண்டா? அது என்ன அம்மாவுக்கு வயது தொண்ணூற்றி ஒன்பது? இந்த ஆள் சரியில்லை. 

டைரக்டரியைப் பார்த்த்தில் இன்று விழுந்த லக்கி பிரைஸ் ஸ்ரீநிவாசன். நேற்றைக்கு சுந்தரம். நாளைக்கு தோத்தாத்ரி. போதும் போதாததுக்கு இனிஷியல் வேறு. புளுகு சுப்புணி. யாசகமாம் யாசகம். அனத்திக்கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் யாசகமா? சிக்னலில் கைக்குழந்தையுடன் உச்சிமண்டை பிளக்க வெயிலில் எடுக்கிறதுகளே அதற்குப் பெயர் பிச்சை. அதையே மோசடி பிராமணன் எடுத்தால் கெளரவமாக யாசகம்.

தலையைத் துவட்டிக்கொண்டு இருந்தவருக்குப் பொறி தட்டிற்று. ஹாலுக்கு வந்து மொபைலை எடுத்து வெங்கடேச ஐயர் அனுப்பி இருந்த எஸ்எம்எஸ்ஸைப் பார்த்தார். வங்கிக் கணக்கு S.வெங்கடேஷ் என்கிற பெயரில் இருந்தது.

கடவுளே! என்கிற தீன குரலுக்கு இதான் காரணமா? ‘கடவுளே’ எதற்குக் கடவுளே! ஐய்யோ இவனை நம்பி பேங்க் அக்கவுண்ட் நம்பர் முதற்கொண்டு கொடுத்துவிட்டோமே. கிராஸ் செக் செய்துவிட்டால் என்னாவது என்கிற உதறல்தானே? அந்த ஆளின் எஸ்எம்எஸ் வந்த நம்பரை, தமது ஸ்மார்ட் ஃபோனில் இருந்த, அழைத்த நபர் யார் எனக் காட்டும் அப்ளிகேஷனில் போட்டார். நோ மேச்சஸ் ஃபெளண்ட். இண்டியா என்று காட்டிற்று. டோட்டல் டுபாகூர். ஃப்ராடுப் பயல். குடும்பமாய் சேர்ந்து மோசடி செய்யும் கும்பல். இது பிராமணணாய் இருப்பதற்கான வாய்ப்புகூட குறைவுதான். இப்போதெல்லாம், எவன் வேண்டுமானாலும் அச்சு அசலாய் பேசிவிட முடிகிற அளவுக்கு பிராமண பாஷை மிமிக்ரி போலல்லவா ஆகிவிட்டது. 

மூளையின் படிக்கட்டுகள் முடிவின்றி வளர்ந்துகொண்டே இருந்தன. கூடவே, மனதின் மூலையில், இவை அனைத்தையும் மீறி ஒருவேளை அந்த மனுஷன் சொன்னது எல்லாம் நிஜமாகவே இருந்துவிட்டால் என்கிற எண்ணம் முணுக் முணுக்கென தலைகாட்டிக்கொண்டும் இருந்தது.

வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது வழியில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்குப் போய் பெருமாள் பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டார் ஸ்ரீநிவாசன்.