Saturday, September 14, 2013

பார்வை [சிறுகதை]

எப்போது ஓட்டலுக்குப் போனாலும் சுவரோர இருக்கையாகப் பார்த்து உட்காருவதே கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. அலுவலக சகாக்களுடனோ அல்லது குடும்பத்துடனோ போகும்போதுகூட உடகாரும் இடத் தேர்வில் தமக்கே முன்னுரிமை என்பதை எழுதாத சட்டமாகவே அவர் கடைபிடித்து வந்தார். அப்படி அமையாத சமயங்களில் பெரும்பாண்மையான இடம் தம் பார்வையில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வார். தம் கண்ணில் எல்லோரும் படவேண்டும் என்பதுபோக தாம் எல்லோர் கண்ணிலும் படவேண்டும் என்பதுவும் அவரது வாழ்வின் ஆதார விருப்பங்களில் ஒன்று.

மாலையில் மழைபெய்து நின்ற பிறகு, விடுமுறை நாளான அன்று, தொலைக் காட்சிச் சேனல்களிலும் சொதப்பல் படங்கள் என்பதால் மனைவியுடன் ஓட்டலுக்குப் போயிருந்தார். விரிவடைகிறேன் பேர்வழி என்று சென்னை குறுகத் தொடங்கிவிட்டது.  படுக்கும் நேரம் தவிர வீட்டில் எவனுமே இருப்பதில்லை. அப்படியே படுத்தாலும் எவனும் தூங்குவதற்காகப் படுப்பது போலத் தெரியவில்லை. இல்லாவிட்டால் இவ்வளவு நெரிசல் ஏன் வரப்போகிறது? எல்லாவற்றையும் தானே பண்ணிக்கொள்ள வேண்டியது. ஆனால் பழியென்னவோ ஊர் தலையில். சேர் தடுக்கிவிட்டது கதவு இடித்துவிட்டது என்பதுபோல. அல்ப்பம் இருசக்கர வாகனத்தை நிறுத்த ஒரு மனிதன் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டி இருக்கிறது. வண்டியை நிறுத்த இடமின்றி ஓட்டிக்கொண்டே இருக்கப் போகிற காலம் ஒன்று வரத்தான் போகிறது. தம் காலத்துக்குள் அது வந்துவிடாமல் இருந்தால் போதும் என்று எண்ணியபடி மாநகர நிர்வாகம் பற்றிய சிந்தனையில் தோய்ந்திருந்தவர், சைட் ஸ்டேண்ட் போடவேண்டாம். சைட் லாக் போடவேண்டாம் போன்ற வாகனக் காப்பாளனின் கட்டளைகளை நிறைவேற்றி, நிறுத்த இடம் கிடைத்து, தம் வண்டியை நிறுத்தியதும் மூளை தரைதட்ட, சுற்றுமுற்றும் பார்த்தார். மனைவியைக் காணவில்லை. இந்த வயதில், அவள் எங்கே ஓடியா போக முடியும் உள்ளேதான் போயிருப்பாள் என்று வெகண்டையாக சிரித்துக் கொண்டாலும் தமக்காக அவள் காத்திருக்காதது உள்ளூரக் கொஞ்சம் சுணங்கத்தான் வைத்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, படியேறி வந்தவர் தொலைவிலிருந்தே மனைவி இருக்குமிடத்தைப் பார்த்துவிட்டார். அவரது பிரத்தியேகமான சுவரோரத்தை அவர் மனைவி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். வண்டி நிறுத்த சீக்கிரம் வழி செய்யாத வாகனக் காப்பாளனை மனதுக்குள் திட்டித் தீர்த்தார். அப்படி என்ன கொள்ளை போகிறது? புருஷன்காரன் வரும்வரைகூட பொறுத்திருக்க முடியாதா? அவள் உட்கார்ந்துவிட்டாள் என்பதற்காக அவளுக்கு எதிர்புறம் உட்கார்ந்து அவள் முகத்தையும் சுவரையும் அகன்ற சுவர்க் கண்ணாடியில் தெரியும் பிம்ப முகங்களையுமா பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? கண்ணாடியில் வல இடமாகத் தெரிவனவற்றையெல்லாம் இடவலமாகமாற்றிப் பார்க்க மனம் பழகி பக்குவப்படுவதற்குள் பில் வந்துவிடும். வேறு வழியில்லை. மனைவி பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டார்.

ஆர்டர் எடுப்பவன் வருவதற்குள், சொற்ப தொலைவில் ஹால் நடுவில் இவர் டேபிளுக்கு இடப்பக்கம் சற்றுத் தள்ளி எதிரில் இருந்த மேஜையில் மூன்று இளம் நடுத்தர வயதுக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். மூவரில் எவரும் இவருக்கு முதுகைக் காட்டி அமர்ந்திருக்கவில்லை. இல்லையென்றால் எவன் முதுகையாவது வேறு பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அந்தவரை சந்தோஷம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஹால் முழுக்க ஆண்கள் கூட்டம். சென்னையில் மழை எப்போதாவதுதான் பெய்கிறது. அப்படிப் பெய்கையில் பெரும்பாலும் பெண்கள் வெளியில் தலையே காட்டுவதில்லை. ஆனால் அப்போதுதான் வெளியில் சாப்பிடவேண்டும் என்று இவளுக்குத் தோன்றுகிறது. தொலைவில் ஒரு குடும்பம், இளசென்றாலும் ரொம்ப சுமாரான அம்மா, அவளையே கொண்ட குழந்தைகள் என்று உட்கார்ந்து பரபரவென்று தின்றுகொண்டு இருந்தது. சாப்பிட்ட தட்டுகளை எடுக்கக்கூட, பெண்களை நியமித்திருந்த ஓட்டல் என்ற போதிலும் எதுவும் தேறவில்லை. எங்கு நோக்கினும் அசுவாரசியம் அப்பி கிடந்தது.

வெள்ளைச் சீருடை அணிந்த சர்வர் வந்து அச்சடித்த உணவு வகை விலைப் பட்டியலை வைத்துவிட்டுச் சென்றான். அதைப் பிரித்துப் பார்க்கும் முன்பாக, டீக்காக உடையணிந்தவன் குட்டைக் நோட்டுடன் குறித்துக்கொள்ள வந்து அமைதியாக நின்றான். அவனிடம் ஆர்டர் கொடுக்கப் பேச முனைந்தவர் தற்செயலாய் எதிர்புறம் பார்த்தார். ஹாலின் நடு மேஜையில் இவர்களைப் பார்த்து உட்கார்ந்திருந்த வாட்டசாட்டமானவன் இவர்களையே பார்ப்பது போல இருந்தது. என்ன சாப்பிடுகிறாய் என்பது போல அருகிலிருந்த மனைவியின் உடையை நோட்டம் விட்டார் கிருஷ்ணமூர்த்தி. அவளது மறு தோள்புறம் சரியாகத் தெரியவில்லை. டேபிளின் மையத்தைத் தாண்டி அந்தப் பக்கம் இருந்த துடைப்புத் தாள் நிலையை, தேவைக்கு மீறி முதுகை வளைத்து கைநீட்டி அருகாமைக்கு இழுப்பதான பாவனையில் கழுத்தை ஒடித்துப் பின்பக்கம் பார்த்தார். மனைவியின் துப்பட்டா அந்தப் பக்கம் கூட அப்படியொன்றும் விலகி இருப்பதாகப் படவில்லை. அவள் மெனு அட்டைகளில் வாராந்தரியில் தொடர் படிப்பவள்போல் மூழ்கி இருந்தாள். அப்படியே மேல் நோக்கிய பார்வையுடன் இயல்புக்கு வந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் முதுகுப்புறம் தலைக்கு மேல் பதித்திருந்த கண்ணாடியைப் பார்த்து ஆர்டர் எடுப்பவன் மூக்கை சுளித்துக் கொண்டிருப்பது பார்வையில் பட்டது. இயல்பிலேயே சுமாராக இருந்த அவன் முகம், சேஷ்டை காரணமாய் இன்னும் விகாரமாக ஆனது. கண்ணாடியில் அது மேலும் கொடூரமாய் ஆகியிருக்கக்கூடும். நீட்டிக்கொண்டிருக்கும் எதையும் மனிதர்களால் சும்மா வைத்துக்கொண்டிருக்க முடிவதில்லை. தோல் சோபாவில் முதுகை சாய்த்தவரின் பார்வை, தன்னிச்சையாய் எதிர் புறம் சென்றது. அந்த ’இளைய ஆள்’ இவளையே பார்ப்பது தெரிந்தது. எனக்கொரு தோசை உனக்கென்ன வேண்டுமோ ஆர்ட கொடு என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, பென்ஞ்சு போன்ற சோபாவில் அரக்கியபடி டேபிள் முனைக்கு வந்தவர் சடக்கென எழுந்து, எதிர் டேபிளை அலட்சியப் படுத்தியவர் போல கைகழுவும் இடத்தைத் தேடி சுற்று முற்றும் பார்த்தபடி மெத்தனமாய் நடந்தார். பாவ் பாஜி என்னும் மனைவியின் குரல் பின்புறம் தேசலாய்க் கேட்டது.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வலப்பக்க தொலைவில் ரயில்வே நடைமேடைப் பலகைபோல தொங்கிக் கொண்டிருந்தது கைகழுவும் இடம் என்கிற அறிவிப்பு. கை அலம்பிக்கொள்கையில் தெரிந்த பிம்பத்தில் அன்றைய காலைச் சவரத்தின் லட்சணம் வெள்ளிப் பிசிறுகளாய் முளைத்திருந்தன. டை போடாவிட்டாலும் ஆளையடிக்கிற நிறத்தில் ஐந்து ஏழு வயது இளையவராகவே தோன்றுவதாய் பார்ப்பவர் எல்லாம் சொல்வதுதான் எவ்வளவு உண்மை என்கிற பெருமிதத்தில் முகம் பூரித்தது. அதை ஆமோதிப்பவர் போல குறுநகையுடன் பிம்பத்தைப் பார்த்து முறுவலித்தபடி லேசாகத் தலையசைத்துக் கொண்டார். ஈரமான கையை, சுவரில் இருந்த பேப்பரை எடுத்துத் துடைத்தபடி வெளியில் வந்தவரின் பார்வைச் சட்டகத்தில் பட்ட அவர் மனைவி தன் கைவளையல்களில் பார்வை பதித்திருந்தாள். எதிர் டேபிள்காரன் நண்பர்களின் முகம் பார்த்த உரையாடலில் கூடுதல் சுவாரசியம் காட்டிக் கொண்டிருந்தான். உட்காரும் சோபாவின் உள்ளே சென்றவர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைத்து அணிந்து கொள்கையில், நண்பர்களிடம் பேசியபடியே இந்த மேசைக்காய் அவன் பார்ப்பது தெரிந்தது. சற்றுத் தள்ளியிருந்த பக்கத்துத் தடுப்புச் சுவருக்குப் பின்னாலிருந்து இரண்டு மூன்று குழந்தைகள் வாஷ் பேசினை நோக்கி ஓடின. அவற்றைப் பார்த்து சிரிப்பவர் போல மனைவியைப் பார்த்தார். அவள் பார்வை நேர் எதிரில் தொலைவில் தெரிந்த கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் தொப்பித் தலை அவளுக்காக தயாராத்துக் கொண்டிருந்த பாவ் பாஜியில் பதிந்திருந்தது. ஆசுவாசப்பட்டுத் கழுத்தைத் திருப்பியவர் கண்களில் அவன் லேசாய் முறுவலிப்பது போல் தெரிந்தது. பக்கவாட்டில் திரும்பி,

அதை டெப்பாசிட் பண்ணிட்டே இல்லையா என்றார்.

அவருக்காய் கழுத்தைத் திருப்பி ’எதை’ என்றாள் மனைவி.

வாடகை செக்கு

அதைப் போன வாரமே பண்ணிட்டேனே. பாஸ்புக் எண்ட்ரியைக்கூட உங்களிடம் காட்டினேனே, அசடு என்பதைப்போல் அவள் மெல்ல நகைத்தாள்.

ஆமாம் இல்ல என்றார்.

வாஷ் பேசின் அதகளப்பட்டிருக்க வேண்டும். பிஞ்சுக் கைகளின் ஈரத்தை, ஒன்றின் மீது ஒன்று தெறித்தபடி குழந்தைகள் இரைச்சலிட்டுக்கொண்டு தம் இடம் நோக்கி ஓடின.

இப்ப என்ன திடீர்னு, என்றபடி சிரித்தாள் மனைவி.

இல்லை டீஏ இன்னிக்கு வந்துடும்னு எதிர்பார்த்தோம் நாளைக்குக் கண்டிப்பா வந்துடும். அதை டெப்பாசிட் பண்ணணும்ங்கற தாட் வந்ததும் இந்த டெப்பாசிட் பத்தி நினைப்பு வந்துது. செயினாஃப் தாட்ஸ், என்றார்.

நல்லா இருக்கு உங்க தாட் பிராசஸ் சம்மந்தா சம்மந்தம் இல்லாம என்றாள் மனைவி.

எதையும் எதோடையும் சம்மந்தமில்லேனு ஒரேடியா தள்ளிட முடியாது. எல்லாத்துக்கும் எல்லாத்தோடையும் சம்மந்தமிருக்கு. பல சமயம் அது நம்ம பார்வைல படறதில்லை அவ்வளவுதான் என்றார்.

அவள் லேசாக முறுவலித்தபடி முகத்தை இடப்பக்கம் திருப்பிக் கொண்டாள். அதே சாரியில் மனைவிக்கு அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த பெண் எழுந்து, ஹாலில் நின்றிருந்த அனைத்து ஆண்களையும் குள்ளர்களாக்கிக் கை அலம்பும் இடம் நோக்கிச் சென்றாள். ராவ்ஜியின் பார்வை அவள் காலுக்காய் பாய்ந்தது. தட்டையான செருப்புதான் அணிந்திருந்தாள். எதிர் டேபிள்காரன் எதோ நகைச்சுவைக்கு எதிர்வினை ஆற்றுபவன் போல இப்போது பளிச்சென்றே இவளைப் பார்த்து சிரித்தான்.

நகைச்சுவை என்ன புடலங்காய் நகைச்சுவை? நீ நகைச்சுவைக்கு சிரிக்கவில்லை. இந்தப் பக்கம் பார்த்து சிரிக்க, உனக்கு நகைச்சுவை ஒரு சாக்கு. இதுபோல எத்துனைப் பேரைப் பார்த்திருக்கிறேன். என்னிடமேவா? குழந்தையிடம் விளையாடுவதாய் இளம் அம்மாக்களுக்கு எத்துனைமுறை நூல் விட்டிருக்கிறேன் என் இளமையில் படவா? இவள் என்ன அவ்வளவு இளமையாகவா இருக்கிறாள். என்னதான் சற்று வாளிப்பாக இருந்தாலும் உனக்கு எவ்வளவு பெரியவள்? மனைவிக்கும் அவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் சரட்டென நங்கநல்லூர் ஆஞ்சனேயராய் நெடுநெடுவென எழுந்து நின்றது. பக்கத்து இருக்கையின் உயரமான பெண் கையலம்பி வந்து இருக்கையில் அமர்ந்தாள். உயரம் ஒன்றை விட்டால் அவளிடம் வேறு எதுவும் சுவாரசியமாக இருப்பதாய்த் தோன்றவில்லை. அதனால்தான் அந்தக் கடன்காரன் நம் மனைவியைப் பார்க்கிறானோ? மனைவியின் பார்வை எங்கே இருக்கிறது என்று நோட்டம்விடக்கூட அவருக்கு இப்போது பயமாய் இருந்தது. ஒருவேளை, அவளது ஆட்சேபமின்மைதான் அவனது உற்சாக சமிஞ்ஞைகளுக்குக் காரணமோ என்னவோ?

லேசாக வியர்க்கத் தொடங்குவதுபோல் இருந்தது. கையைத் தூக்கினார். அவரை நோக்கி வர முனைந்த சீருடையைப் பார்த்து ’ஏஸி ரிப்பேரா’ என்று சத்தமாகக் கேட்டார். அதற்கு மனைவி ஏதும் எதிர்வினையாற்றாமல் பாவ் பாஜியை விள்ளிக் கொண்டிருந்தது எரிச்சலூட்டிற்றிற்று. எப்போது தோசை வந்தது அது எப்போது உள்ளே போயிற்று என்றே அவருக்குத் தெரியவில்லை. காபியில் சூடு போதவில்லை என்று கடிந்துகொண்டார். வேறு எடுத்து வருவதாய்க் கூறிய சர்வரிடம் பரவாயில்லை. அதற்கு வேறு தாமதமாகும் என்றார்.

மனைவி இன்னொரு அயிட்டம் சொல்லி அது வந்து சாப்பிடும்வரை உள்ளூர நிலையற்று தவித்துக் கொண்டு இருந்தார் எனினும் அவர் பார்வை தம் டேபிளின் மீதே நிலைகுத்தி இருந்தது. கையலம்பிக் கொண்டு வந்து பில் கொடுத்து முடிக்கையில் எதிர் டேபிள் காலியாகத் தயாராவது போல் தோன்றியது. கிளம்பலாமா என்று கேட்டபடி எழுந்தார். விறுவிறுவென வெளியேற நடந்தவர் அந்த டேபிளை அடைந்ததும் மனைவி வரவேண்டி காத்திருப்பவர் போல தயங்கி நின்றபடி பல்லில் விரல் விட்டு நிரண்டிக் கொண்டிருந்தார். மனைவி அவரைக் கடந்து முன்னால் செல்கையில் அந்த டேபிள்காரனும் முன்னால் சென்றான். படி இறங்கும் குறுகலான திருப்பத்தில் அவர் பார்வை பதிந்திருந்தது. இரண்டெட்டிலேயே மனைவியைத் தாண்டிய அவன் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.

படிக்கட்டில் வேகமாய் இறங்கி வண்டி நிறுத்துமிடத்துக்குச் சென்றார். நிறுத்திய இடத்திலேயே வண்டி நின்றிருந்தது. அதை எடுக்கப் போகையில், யாரோ தம் மீது உரசுவது போல் தோன்றவே சற்று நகர்ந்துகொண்டு பார்த்தார். அவரது இடுப்புச் சதையைத் தன்னுடைய விரல்களால் நிதானமாக வருடிக்கொண்டு சென்ற இளைஞன், தனது வண்டியை எடுக்கையில் அவரைப் பார்த்து சிரிப்பது அவருக்குத் தெளிவாய் தெரிந்தது.