Wednesday, January 22, 2014

உத்தம புத்திரன் பார்ட் - 2

Janavary 16 at 11.22am

<விமலாதித்த மாமல்லன் கதைகள் 600 பிரதிகள் அச்சிட்டதில் 211 கையில் இருந்த பிரதிகள் ராயல்டி தொகை போக மீதித் தொகைக்கு இன்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் அளிக்கப்ப்படடது. நான் புதிதாக அச்சிட்டுக் கொடுத்ததாக மாமல்லன் சொன்ன பொய், அதிக பிரதிகள் அச்சிட்டதாக சொன்ன பொய், அதற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்ததாக சொன்ன பொய் அத்தனையும் நிரூபிக்காவிட்டால் மாமல்லன் வீட்டிற்க்குபோய் கண்டிப்பாக செருப்பால் அடிப்பேன்.>

***
<விமலாதித்த மாமல்லன் கதைகள் 600 பிரதிகள் அச்சிட்டதில் 211 கையில் இருந்த பிரதிகள் ராயல்டி தொகை போக மீதித் தொகைக்கு இன்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் அளிக்கப்ப்படடது.>

இந்தக் காரியம் இவர் குறிப்பிடுவதுபோல இவ்வளவு எளிதாய் இயல்பாய் நியாயமாய் நடந்தேறியதா என்கிற உண்மையை உங்கள் முன் வைப்பதுதான் இந்த பகுதி எழுதப்படுவதன் நோக்கம்.

***

விமலாதித்த மாமல்லன் ‏@maamallanJan 16

காபி குடிச்சிட்டு BP மாத்திரை சாப்ட்டுட்டு நேரா உயிர்மை ஆபீஸ்தான் செக்கோட. அது சரி, 600+நூலக ஆர்டர் 1000 மொத்தம் 1600 காப்பிக்கு 10% ராயல்டியைக் கழிச்சிகிட்டு கெளடவுன்ல இருக்கற இந்த வரா புக்ஃபேரையே பாக்காத 200 காப்பிக்கு 30% கழிவு போக துட்டு நான் தரணுமா நீங்க எனக்கு தரவேண்டி இருக்குமா மிஸ்டர் செருப்படி? 

9:00 AM - 16 Jan 2014 ·

காப்பி குடித்து, மாத்திரை போட்டுக்கொண்டு உடைமாற்றி கீழே வந்து வண்டியெடுக்கும்போது மணி 9.20கூட ஆகியிருக்கலாம். உயிர்மைக்குப் போய் சேர்ந்ததும்

 விமலாதித்த மாமல்லன் ‏@maamallan

உயிர்மை மனுஷ்ய புத்திரன் வீட்டுமுன் செக்குடன் ஆஜர். அவர் 22 வரை பிசியாம் அப்பாயின்மெண்ட் கிடையாதாம் pic.twitter.com/5bpn268Ls1


2RETWEETS

9:39 AM - 16 Jan 2014

வீட்டெதிரில் போய் வந்திருக்கும் தகவலை, அவர் வீட்டுக் காரைத் துடைத்துக் கொண்டிருந்தவரிடம், மாமல்லன் வந்திருப்பதாய் தகவல் தெரிவிக்கும்படிக் கூறினேன்.

அவர் சென்று கூறியபின், ஒட்டைக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற விதமாய் ஒருக்களித்திருந்த கதவும் மூடிக்கொண்டது.


 விமலாதித்த மாமல்லன் ‏@maamallan Jan 16

மனுஷ்ய புத்திரனே! வந்திருப்பதைத் தெரிவித்தும் கதவம் திறக்கிலையோ! ராயல்டியும் புக்கும் கேட்டு எழுத்தாளன் pic.twitter.com/VlinT3f97I


9:49 AM - 16 Jan 2014

அதன் பிறகு மனுஷ்ய புத்திரன் கூடவே இருப்பாரே ஒருவர், அவர் பனியன் சிவப்புக் கைலியுடன் வந்து தின்னை போன்ற இடத்தில் உட்கார்ந்துகொண்டார். மனுஷ்ய புத்திரன் பிசியாக இருப்பதாகக் கூறி பழைய பல்லவியையே - புக்ஃபேர் முடிந்து 22 ஆம் தேதி வரச்சொல்லியும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் அவர் பாட்டுக்கும் பேசிக்கொண்டிருந்தார். இடையில் 1200 அச்சடிக்கிற புத்தகம் எல்லாம் இங்க வராது. தேவைப்படறது மட்டும்தான் பைண்டிங்குக்குப் போயி புக்காகி இங்க வரும் என்று எதோ கூறினார். புத்தகத்தின் சீரிளமைத் திறத்தை கட்டுக்குலையாது வைத்திருக்க அவ்வப்போது பைண்ட் செய்துகொள்கிறார்களோ என்னவோ அது எல்லாம் டெக்னிகல் விஷயம் எனக்கு ஷாக்கடித்தது, இவர்கள் பொதுவாகவே 1200 தான் எல்லா புத்தகங்களுக்கும் போடுகிறார்களோ என்பது. இது வெறும் தன்னியல்பான தகவல் துணுக்கு மட்டுமே டி எம் டி முறுக்குக் கம்பி போன்ற அசைக்கவியலா ஆதாரம் எல்லாம் இல்லை. எனினும் புலனாய்வில் எளிதாய் புறமொதுக்க முடியாததும் இல்லை அல்லவா?

கோக்கு மாக்காக ஏதாவது சொல்லி, மக்களைத் தூண்டிவிட்டு, பொங்கிப் பொங்கி பேசவிடப் பேசவிடத்தான் தேவையில்லாத தகவல்களை - நமக்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கத் தொடங்குவார்கள் என்பது புலனாய்வின் அடிப்படை.

எல்லோரும் புத்தகக் கண்காட்சியில் மும்முரமாய் இருப்பதால், அலுவலகமே 22 வரை இயங்காது. அலுவலகத்தில் பார்ப்பவர் ஒருவர் குடவுன் கணக்குவழக்குகளைப் பார்ப்பவர் வேறொருவர். அவர்கள் எவ்வளவு சிரமத்துக்கிடையில் பதிப்பகத்தை நடத்துகிறார்கள். கொடவுனுக்குப் போய்ப் பார்த்தால்தான் தெரியும் எவ்வளவு புத்தகங்கள் விற்காமல் தேங்கி இருக்கின்றன என்று. மூன்று வருடங்களாய் லைப்ரெரி ஆடரே இல்லை மூன்றாண்டுகளுக்கு சேர்த்து இப்போதுதான் ஆணையே வந்துள்ளது. 

2010ற்கான ஆணை ஏற்கெனவே வந்துவிட்டது இல்லையா? இப்போது வந்திருப்பது 2011, 2012 மற்றும் 2013க்கானவை அல்லவா? என்றேன் மனுஷ்ய புத்திரனின் தம்பியாக இருக்க வேண்டும். அதற்கும் ஆர்டர் வரவில்லை என்றார். அவர் பேச்சிலிருந்து அவருக்குப் பொதுவாக மேலோட்டமாகத்தான் தெரிகிறதேயன்றி குறிப்பாகத் தெரியவில்லை என்று புரிந்தது. 

இதற்குள் இன்று போய் 22ஆம் தேதிக்குமேல் வா என்கிற ராவணனிடம் ராமன் சொல்லும் டயலாக் இரண்டு மூன்றுமுறை அந்த ராம் லீலா மைதானத்தில் என்னிடம் சொல்லப்பட்டு விட்டிருந்தது.

நான் புத்தகம் இல்லாமல் நகரவே மாட்டேன் என்று அவர்களுக்குப் புலப்பட்டது இன்னொருவர் தீவிரமானவர் போல தோற்றமளித்த, தலைசீவி  நீல கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்த மிதவாதி போன்றவர் வந்து சாந்தமாக சேரைப் போடு என்று சொல்லி உட்காருங்கள் என்றார்.

இதற்குள் இரண்டு படங்கள் ட்விட்டரி ஃபேஸ்புக் கூகுள்+ தளங்களில் ஏற்றப்பட்டிருப்பதை உள்ளே இருந்த பிசியான மனிதர் இணையத்தில் பார்த்துக் கொண்டு இருந்திருக்கவேண்டும். இந்த ஏழரை அவ்வலவு சுலபத்தில் நம்மை விடாது என்று நினைத்ததாலோ என்னவோ - தன் கதைகளை PDFஆக வலையேற்றி பதிப்பாளருக்கு படுபயங்கரமான நட்டத்தை ஏற்படுத்திவிட்ட எழுத்தாளன் அதற்கான இழப்பீட்டைக் கொடுக்க பதிப்பாளன் வீட்டெதிரில் வந்து நின்று, கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்து உட்கார இருக்கை தரப்பட்டது. 

நல்ல பாம்பா நல்ல பண்பா?

அப்போது மணி என்ன? நான் எப்போது வந்தேன்? எப்போது என்னிடம் ’வந்தவரை உட்கார வைக்கும்’ நார்மல் காரியம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதையும் உலகின் கவனத்துக்குக் கொண்டுவரவே இவையனைத்தும் அன்றே உடனுக்குடன் ட்விட்டர் ஃபேஸ்புக் கூகுள்+களில் பதிவேற்றப்பட்டன.

 விமலாதித்த மாமல்லன்‏ @maamallan

பிரேக்கிங் நியூஸ் - பத்து மணிக்கு யாராவது வந்து விடுவார்கள் எடுத்துத்தரச் சொல்கிறோம். சேருக்கு நன்றி pic.twitter.com/zELDw88xHl
9:59 AM - 16 Jan 2014

சேர் கொடுக்கப்பட்டு அலுவலக வாசலில் உட்காரும் உபசாரம் கொடுக்கப்பட்டது 9.59 என்றால் நான் எழுதிக் கொடுத்த செக் உயிர்மையால் ஒரு வழியாக பெற்றுக்கொள்ளப்பட்டது எப்போது என்பதைக் கீழ்க்காணும் செக் படத்தில் கவனியுங்கள். 11.44

இடைப்பட்ட ஒன்றே முக்கால் மணி நேரத்தில் என்ன நடந்தது? அவை இரண்டு மூன்று பாகங்களாய் நிகழ்ந்தன. அவற்றைச் சற்று விலாவாரியாகப் பார்ப்போம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதென்ன என்று மனதுக்குள் நொந்தபடி அமர்ந்திருந்தேன் உயிர்மை அலுவலக வாயிலில்.

மனித மனம் அழுக்காக இருந்தால் எவனுக்குத் தெரியப்போகிறது?கார் அழுக்காய் இருந்தால் ஓனரின் கவுரவம் என்னாவது? 

துடைத்து சுத்தப்படுத்தப்பட்ட கார் ரிவர்ஸ் எடுத்து வெளியில் சென்றது. ஆஹா நமக்காகதான் விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தை எடுத்துவரத்தான் கார் கெளடவுனுக்குப் போகிறது பல ஆயிரங்கள் போனாலும் வெற்றி வெற்றி என்று மனம் துள்ளிக் குதித்தது.

திரும்பவும் பழைய பாடல் மறு ஒலிபரப்பு. இப்போது கூட ஓரிரு சங்கதிகளாய் கொசுக்கடி வேறு சேர்ந்துகொள்ள, காத்திருந்து காத்திருந்து...  

உயிர்மையின் அலுவல்களை கவனித்துக்கொள்ளும் புத்தகக் கண்காட்சியில் கணினிமுன் அமர்ந்து பில் போடும் பெண்மணி பரப்பாக வந்து சேர்ந்தார். கார் வந்து நின்று டிக்கியிலிருந்து புத்தகக் கட்டுகள் இறக்கப்பட்டன. அட ஆண்டவா! புத்தகங்கள் நீல வண்ணத்தில் இருக்கின்றனவே நமது இல்லை. நமக்கு இல்லையா? பதட்டம் யாருக்குதான் இல்லை? அதை எவ்வளவு திறமையாக மறைத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வெற்றி என்கிற தொனியில் எப்போதோ நம் கிரிக்கெட் கேபடன் தோனி கூறியது நினைவுக்கு வந்தது. நானாவது பரவாயில்லை. என் பதட்டத்தை வெட்டவெளியில் நின்று காட்டிக்கொள்ளாமல் இருக்கிறேன். உள்ளே இருக்கும் டிவி புகழ் கருத்து கந்தசாமி முகத்தையே காட்டாமல் அல்லவா தமது பதட்டத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பதட்டம் அவரால் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேமராவின் லென்சுகளையும் தாண்டி புனிதமானது.

பழைய புத்தகத்துக்கு - அதுவும் மூன்ஞ்சில் விட்டுக் கடாசப்போகும் புத்தகங்களுக்கு, எல்லாம் இது போதும் என்பதுபோல் டிவி நடிகரிடம் வேலை பார்க்கும் நபருடைய டிவிஎஸ் வண்டி, மூடப்பட்டிருந்த மனுஷ்ய புத்திரன் உட்காரும் உயிர்மை அலுவலகக் கதவுக்கு முன்னால் வந்து நின்றது. 

எல்லா புத்தகங்களும் அந்த நபரைச் சுற்றி மெக்கானிக் ஷெட்டின் உதிரி பாகங்கள் டிங்கரிங் பெயிண்டிங்குக்கு எடுத்துச் செல்லப்படுபவைபோல 25 கட்டுகளாய் உட்கார்ந்திருந்தன. நான் உட்கார்ந்திருந்த வெளி முற்றத்தைச் சுற்றி இருந்த குறு மதில் மீது அடுக்கப்பட்டன.


செல்வி ராமச்சந்திரன் அவர்கள் பூட்டப்பட்டிருந்த அலுவலக நுழைவாயிற் கதவைத் திறந்து உள்ளே போய் அலமாரியில் இருந்த, படிக்க வைத்திருந்த புத்தகத்தையும் எடுத்துவந்து இதோடு சேர்த்து வைத்தார். இன்னும் நிறைய கடைகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். 

ஒட்டுமொத்தமாக 2014 புத்தகக் கண்காட்சியிலேயே விமலாதித்த மாமல்லன் புத்தகங்கள் ஒன்றுகூட எவர் கண்ணிலும் படாதபடி இருட்டடிப்பு செய்துவிட வேண்டும் என்ற மனுஷ்ய புத்திரனின் சதியை, அவர் வீட்டுத் தோட்டத்து மர மறைப்புகளையும் மீறி, என் புத்தகங்களின்மீது தன் கிரணங்களைப் பாய்ச்சி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது சூரியன்.


ஒரு துண்டுத்தாளில் செல்வி அவர்கள் 211 போக 289 என்று கணக்கு போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இல்லையில்லை 500 இல்லை 600 என்று மனுஷ்ய புத்திரனே 2011ல் கூறியதை என் தளத்திலேயே எழுதிப் பதிவு செய்துள்ளேன் என்றேன்.

அவரோ அச்சடித்தது 500தான் என்றார்.

நீங்கள் வேண்டுமென்றால் மனுஷ்ய புத்திரனையே கேளுங்கள். அந்த அறையிலிருந்த கட்டிலில் உட்கார்ந்தபடிக் கூறியதுகூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்றேன்.

ஐயோ கடையைத் திறக்க நேரமாகிறதே என்றபடி செல்வி அவர்கள் உள்ளே போய்விட்டு வந்து 600க்கே ராயல்டியைக் கணக்கிட்டுக் கழிக்கும்படி கூறிவிட்டார் என்று கணக்கிட்டுத் துண்டுத்தாளை என்னிடம் நீட்டினார்.

நான் அவரிடம் என்ன பெயரில் செக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். 

செக் வாங்க முடியாது கேஷ்தான் வேண்டும் என்றார்.

செக்கில் என்ன பிரச்சனை? இது என் அலுவலக சம்பள அக்கவுண்ட். என் கணக்கு வழக்கனைத்துமே செக்கில்தான் இருந்தாக வேண்டும் என்றேன்.

செல்வி திரும்பவும் உள்ளே சென்றுவிட்டு வந்து கேஷாகத்தான் வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர் என்றார்.

அதற்குள் இடைமறித்து, மனுஷ்ய புத்திரனுடன் கூடவே இருக்கும் இளைஞர். என்ன சார் 15000தானே ஏடிஎம்ல போய் எடுத்துக் குடுக்க முடியாதா. போய் எடுத்துகிட்டு வாங்க என்றார்.

இல்லீங்க இதுல ராயல்டி சம்பந்தப்பட்டிருக்கு. நான் ஆபீஸ்ல தெரிவிச்சாகணும் அதனால செக்குலதான் குடுக்க முடியும் புரிஞ்சிக்கிங்க என்றேன். 

இல்லைங்க கேஷா இருந்த புக்கு இல்லைனா இல்லை புக்ஃபேர்ல கடை திறக்கணும் என்றபடி புக்கையெல்லாம் எடுத்து உள்ல வைங்க என்ற கறாராய் சொல்லிவிட்டார். டிவிஎஸ் 50 போன்ற வண்டியில் புத்தகங்களைக் கொண்டுவந்தவர். புத்தகக் கட்டுகளை இரண்டிரண்டாய் தூக்கிக் கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டார். செல்வி கதவை மூடி தாளிட்டார்.

என்னங்க இப்படி செய்யறீங்க அவர்கிட்ட சொல்லுங்க என்று கெஞ்சாத குறையாகச் சொன்னேன்.

மனமிறங்கிய செல்வி திரும்ப உள்ளே போய்விட்டு வந்து கேஷ் மட்டும்தான் வாங்க வேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார் என்றார். 

இதே போல் செல்வி உள்ளே செல்வதும் மனுஷ்ய புத்திரன் செக்கை வாங்க மறுக்கிறார் கேஷாக மட்டுமே கேட்கிறார் என்பதுமாக, உயிர்மையின் குடும்பமும் சுற்றமும் ஊழியர்களும் பங்குபெற ஒற்றைப் பார்வையாளனாய் நான் நிற்க, கிட்டத்தட்ட ஏழுமுறை அரங்கேறிற்று மனுஷ்ய புத்திரன் இயக்கிய அறம்.

முன்பே குறிப்பிட்ட நீல சட்டை அணிந்திருந்த சாத்வீக மனிதர், செல்வி அவர்களிடம், செக்கை வாங்கிக் கொள் என்றார்.

எனக்குத் தெரியாது நாளைக்கு எதுனா ஆச்சினா நீதான் பொறுப்பு என்று அவரைக் கடிந்தார் செல்வி. 

பரவாயில்லை நானே பாத்துக்கறேன் நீ புக்கைக் குடுத்து அனுப்பு என்றார்.

செல்வி தயங்கி நிற்கவே, ஏங்க நான் ஒரு கவர்மெண்ட் அஃபீஷியலுங்க, இந்த செக்கு பெளன்சாச்சுனா கிரிமினல் கேசுல என்னை உள்ளையே தள்ளலாம். என் வேலையே போயிடும். வேண்டிய அளவுக்கு பணத்தை SB அக்கவுண்ட்டுலையே வெச்சிருக்கேன். என் சம்பளமே மாசா மாசம் இதுலதாங்க கிரெடிட் ஆவுது. என்னங்க இது இப்படிப் பண்றீங்க.

செக்கை வாங்கிக் கொண்டார் செல்வி.

இந்த புக்கு போட்டு பிரச்சனியாயி நாங்க அவமானப்பட்டதுதான் மிச்சம் என்றபடி உள்ளே செல்லப் போனவர் கதவருகில் நின்று செக்கை வாங்கிக்கிறோம் ஆனா ரியலைஸ் ஆனபிறகுதான் புக்கைக் குடுப்போம் என்றார்.

கண்டினுவசா லீவுங்க. செக்கு ரியலைசாயி நீங்க புக்கு குடுக்கறதுக்குள்ள புத்தகக் கண்காட்சியே முடிஞ்சிருங்களே. எனக்கு இருக்குறதே இந்த ஒரு புக்ஃபேர்தான். வேற எங்கதான் கொண்டுபோயி நான் விக்க முடியும் சொல்லுங்க என்றேன்.

திரும்ப நீல சட்டைக்காரர் குறுக்கிட்டு புக்கை குடுத்து அனுப்பு என்றார். 

கெளடவுனைவிட்டு வந்தும் திரும்ப அறைக்குள் போய் புகுந்துகொண்ட புத்தகங்கள் டிவிஎஸ் அதிபர் கரங்களின் வழியே திரும்ப குறுமதில்மீது வந்து கட்டுக் கட்டாய்க் குந்தத் தொடங்கின. 

எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. புத்தக வியாபாரக் கணக்குவழக்குகளை 

வைத்து மேனேஜ் செய்பவர் பதினைந்தாயிரம் ரூபாயை, அரசு ஊழியனிடமிருந்து செக்கில் வாங்க சின்ன குழந்தைபோல இந்த அளவுக்குத் தரையில் விழுந்து அழுது புரண்டு அடம் பிடிப்பது ஏன்? 

விமலாதித்த மாமல்லன்‏ @maamallan

உயிர்மை கெளடவ்னில் பதுங்கி இருந்த 211 பிரதிகள். நூலக ஆணையே புத்தகத்துக்கு வரவில்லையாம் pic.twitter.com/MlHi8VyI8q11:44 AM - 16 Jan 2014

 விமலாதித்த மாமல்லன் ‏@maamallan

500 பிரதிகளில் விற்காதவை 200 என்ற மனுஷ்ய புத்திரனின் உயிர்மை 600 பிரதிகளுக்கு ஏன் ராயல்டியைக் கழிக்கிறது pic.twitter.com/gGFshp42yi
12:00 PM - 16 Jan 2014

ஒரு வழியாய் உயிர்மை ஊழியர்கள் ஓராயிரம் புத்தகங்களை விற்க காரில் ஏறிக்கொண்டு புக்ஃபேர் நோக்கிப் பறந்தனர்.

என் நெற்றியில் என்ன எழுதி இருக்கிறது என்று அன்றெதுவும் அறியாது என் புத்தகத்தை நானே விலைகொடுத்து வாங்கி, எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் ராயல்டி என்கிற எழுத்தின் கெளரவத்தை மீட்டெடுத்துக்கொண்டு ஆட்டோ பிடிக்கத் தெருமுனை நோக்கிச் சென்றேன்.

வாழ்வின் புதிர்போல, மனுஷ்ய புத்திரன் ஏன் தன் வியாபாரத்தில் விற்பனை செய்ததற்கு ஏன் செக் வாங்க மறுத்தார்? இவன் வில்லங்கம் பிடித்தவன் என்பதால் இந்த நடைமுறை என்னிடம் மட்டும் கடைப்பிடிக்கப்பட்டதா? இல்லை அவரது அனைத்து வியாபாரமும் செக் வாசனையே பார்க்காதவையா? என் கணக்கிருக்கும் கற்பகம் கார்டன் வங்கிக் கிளைக்கு போன் போட்டுக் கேட்டேன், உயிர்மைக்குக் கொடுத்த 16ஆம் தேதியிட்ட பதினைந்தாயிரம் செக் வந்ததா என்று.

சார் உங்க அக்கவுண்ட்ல பணமே இல்லையே என்றார்.

பகீலென்றது. சார் சரியா பாருங்க அது MOD அக்கவுண்ட். உயிர்மை பதிப்பகத்துக்குக் குடுத்த செக்கை பவுன்ஸ் பண்ணி கிரிமினல் கேசாக்கி  என் வேலையில மண்ணைப் போட்றாதீங்க என்று பதறினேன்.

ஓ MOD அக்கவுண்டா ஒன்னும் பிரச்சனை இல்லை. 

பாத்து சார் எங்க டிபார்ட்மெண்ட்டுல கேடர் ரீஸ்ட்ரக்சரிங் அனொவுன்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ரெண்டுமூனு மாசத்துல சீனியர் இண்டெலிஜென்ஸ் ஆபீசரா ப்ரொமோஷன் வர நேரம் என் வாழ்க்கைல விளையாடிடாதீங்க சார்

இது பிராஞ்சுதானே சார் செக்கெல்லாம் இங்க வரவே வராது ஆட்டோமெடிக்கா மெயின்லையே டெபிட்டாயிடும். ஆனா நீங்க சொல்றாப்புல எந்த அமவுண்டும் டெபிட்டே ஆகலையே சார்

சார் நல்லா பாருங்க 16ஆம் தேதி குடுத்த செக்கு!

ஆமா லோக்கல் செக்குனா இதுக்குள்ள டெபிட்டாகி இருக்கணுமே. பார்ட்டியைக் கேட்டீங்களா டெப்பாசிட் பண்ணிட்டாங்களானு?

வாழ்க்கையில், புழு புல் பூண்டு பூச்சியிலிருந்து எதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மனிதன் செத்து செத்து வாழ வேண்டி இருக்கிறது.

அனுபவம் பேசிய வார்த்தையல்லவா ங போல் வளை என்பது. 

ஆனால் இந்த எல்லாம் வல்ல எழுத்தாளன் மட்டும் ஏன் இது தனக்காக பிரத்தியேகமாகச் சொல்லப்பட்டதுபோல எடுத்துக் கொண்டு நிமிர முடியும் என்று நினைக்கக்கூட தயங்குகிறான்?