Sunday, January 12, 2014

ராயல்டியும் லாயல்டியும்<இன்னொரு முக்கியமான நிகழ்வு விமலாத்தித்த மாமல்லன் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிர்மை வெளியிட்ட அவரது கதைத் தொகுப்பை தானே இலவச பி.டி.எஃப் பாக அவரது இணைய தளத்த்தில் வெளியிட்டு தன்னை தேசிய உடமையாக்கிக்கொண்டிருப்பதாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன.கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தேசிய உடமையாக்கப்பட்டிருக்கும் விமலாதித்த மாமல்லனின் கதைப் புத்தகத்தை பெரிய அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பெரிய அளவில் அச்சிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காலச்சுவடு இதற்கு அரவிந்தனை பதிப்பாசிரியராகக் கொண்டு ஒரு செம்பதிப்பைக் கொண்டு வந்து அதை நவீன க்ளாசிக் வரிசையில் சேர்க்க இருப்பதாகவும் நேற்று கண்காட்சியில் ஒரே வதந்தி...

மேற்படி கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட தனது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்கு குறைந்த பட்சம் ஒரு தகவல் தெரிவித்துவிட்டு இந்த தேசிய உடமையாக்கும் திருப்பணியை செய்திருக்கலாம். அச்சிட்ட 500 பிரதிகளில் 200 பிரதிகள் கையில் இருக்கின்றன. அவரது ராயல்டி தொகை போக மீதித் தொகையை செலுத்திவிட்டு அந்தப் பிரதிகளை அவர் பெற்றுச் சென்று அவரது புத்தகத்தின் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

புத்தகம் விற்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாமல் நூல்களை பதிப்பிக்கும் என்னைப் போன்ற ஒரு பதிப்பாளன் மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் சிலரிடம் இருந்து கிடைக்கும் இது போன்ற செருப்படிகளால் அயரப் போவதில்லை. மாறாக கடந்த ஐந்தாண்டுகளில் உயிர்மை பதிபித்த பல இளம் எழுத்தாளர்கள் எவ்வளவு பிரதிகள் செல்வ்வாணியாகியிருக்கிறார்கள் என்ற கணக்கு விபரத்துடன் அவர்களது செலாவாணியாகாத நூற்றுக்கணகான பிரதிகளை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட எண்னியுள்ளேன்.

வருடத்திற்கு 50 பிரதிகள் கூட விற்காத கவிஞர்கள் சிலர் மனுஷ்ய புத்திரன் ராயல்டி தராமல் தாமதம் செய்கிறான் என பிரச்சாரம் செய்யும்போது எனக்கு உண்மையிலேயே கண்ணீர் வருகிறது. அது என்னைப் பார்த்தல்ல. தங்களுடைய ஸ்திதி என்னவென்றே தெரியாமல் இவ்வளவு கெத்தாக பேசுகிறவர்களைப் பார்த்து. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு விற்காத எதையும் பதிப்பிக்க மாட்டேன் என்று பதிரி ஷேசாத்ரி எழுதியபோது நான் அவரை விமர்சித்து எழுதினேன். ஆனல் இப்போது பத்ரி சொல்வதுதான் சரி என்கிற முடிவுக்கு கிட்டதட்ட வந்துவிட்டேன்.>

***

முதல் பத்தி விற்காத எழுத்தாளன் என்று என்னைப் பற்றி நக்கல். 

புத்தகம் போடுவதற்காக இதுவரை நான் எவனையும் நக்கியதில்லை என்பதால்தான் என் புத்தகங்கள் அனைத்தும் என்னாலேயே வெளியிடப்பட்டன.

சொற்பமாக விற்ற புத்தகங்களிலிருந்தும்கூட என் முதலீட்டையும் சேர்த்து நக்கித் தின்ற பதிப்பக விற்பனைப் பன்னாடைகளைப் பற்றியும் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.


<இணைய எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இலக்கிய வானில் ஜொலிக்கிறார்களே லோகம் சுபிட்சமடைந்துவிட்டது போலும் என்கிற மூட நம்பிக்கையில் யதார்த்த நிலைமை தெரியாமல் அப்பாவியாக மனுஷ்ய புத்திரனிடம் அடுத்த பதிப்பின்போது களையவேண்டிய சில பிழைகள் பற்றிக் கூறத்தொடங்கினேன்.

புத்தருக்குரிய மோன வதனத்துடன், ஒரு வருஷத்துல எவ்ளோ போகும்னு நெனைக்கிறீங்க? என்றார் கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தபடி.

நிலவரம் தெரியாததாலும் கூடுதலாகச் சொல்லிவிடுவோமோ என்கிற கூச்சத்தாலும் தயங்கித் தயங்கி 300 என்றேன்.

அடுத்த வருஷம் இதே இடத்துல சந்திப்போம். 70 காப்பி போயிருந்தா உங்க புக்கு ஹிட்டுன்னு அர்த்தம் என்றார்.>

ஒரே வருடத்தில், அதிக அறிமுகம் இல்லாதவரின் இலக்கியப் புத்தகம் 70 பிரதிகள் விற்றால் ஹிட் என்கிற நிலையில், 200 பிரதிகள் விற்றிருப்பதாய் ஓராண்டு கழித்து அவரே சொன்னதற்கு என்ன பொருள்? நல்ல விற்பனையா நொள்ளை விற்பனையா?

பெரும்பாலும் சிறுபத்திரிகைகளில் மட்டுமே இயங்கிய, எந்த குரூப்பிலும் ஒண்டிக் கிடக்காது தறுதலையாய் திரிந்துகொண்டிருந்த, 16 வருடங்கள் இலக்கிய உலகிலேயே இல்லாத எந்த இலக்கியவாதியின் புத்தகம் வெளியிட்ட மூன்றாண்டுகளில், அதுவும் 180 ரூபாய் விலையுள்ள புத்தகம் 400 பிரதிகள் விற்றிருக்கிறது? எனில் அவன் விலை, போகாத எழுத்தாளனா விலைபோகாத எழுத்தாளனா?

<மேற்படி கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட தனது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்கு குறைந்த பட்சம் ஒரு தகவல் தெரிவித்துவிட்டு இந்த தேசிய உடமையாக்கும் திருப்பணியை செய்திருக்கலாம்.> 

விமலாதித்த மாமல்லன் கதைகள் 26, ஞாயிறு, டிசம்பர் 2010ல் வெளியிடப்பட்டது. 2011 டிசம்பர், 2012 டிசம்பர், 2013 டிசம்பர் முடிந்தபின் இரண்டாண்டுகளா மூன்றாண்டுகளா? இது கவிப் பிழையா? வியாபார சாதுர்யமா? 

மேற்படியாரின் மேற்படி வாக்கியம் கட்டளையா கட்டாயமா கர்ட்டசியா?

இலக்கிய உலகில் எவருக்கும் எவரும் கட்டளை இடமுடியாது. குறிப்பாக எனக்கு.

முன்னனுமதி பெறவேண்டிய கட்டாயம் எழுத்தாளனுக்கு இல்லை. ஏனெனில் காப்புரிமை அவனுடையது. இதை நான் சொல்லவில்லை மனுஷ்ய புத்திரனே தம் ஃபேஸ்புக் கமெண்டில் சொல்வதைப் பின்னால் பார்க்க இருக்கிறீர்கள்.

கர்ட்டசி எனப்படும் நாகரிகத்தின்படிப் பார்த்தால், நிறுவனமற்ற தனி நபரான நான் 1994ல் முதலீடு செய்து முடங்கிக் கிடக்கும் என் புத்தகங்களை, மொத்த தொகுப்பு வெளியிடப்பட்ட கண்காட்சி போக, இன்னும் இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் ஏன் விற்காமல் இருந்தேன்? புத்தகம் வெளியிட்ட உயிர்மைக்கு நட்டம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தானே.

எனக்கு நேரடியாக எந்த பாதிப்பும் நேராத / வராத நிகழ்வுகளில் தார்மீகமாய் தலையைக் கொடுத்து பகைவர்களை உருவாக்கிக் கொள்வதே என் ஜாதக விசேஷம். சின்மயி விவகாரத்திலும் அதுதான் நடந்தது. இங்கும் அதுதான் நடந்திருக்கிறது.

உயிர்மைக்கும் அல்லது மனுஷ்ய புத்திரனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? 

இதை செய்பவர்கள் கையை ஒடிக்க வேண்டும். - என்று மனுஷ்ய புத்திரன் யாரையோ சொன்னதுதான் பிரச்சனை.

சம்மந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு வராத கோபம், சம்மந்தப்பட்ட பதிப்பாளருக்கு வராத ஆக்ரோஷம் மனுஷ்ய புத்திரனுக்கு ஏன் வரவேண்டும்? 100 சிறுகதைகளை PDFஆக வெளியிட்ட ஆபிதீனின் கையை ஒடிக்க வேண்டும் என்ற மனுஷ்ய புத்திரனின் அகங்காரக் குரலுக்கு எதிராய் கிளர்ந்தெழாவிடில் நான் என்ன மனிதன்? இலக்கியப் புடுங்கி என்கிற கோபமே என்னை வழிநடத்திற்று.

ஆபிதீன் செய்ததை இப்போது நான் செய்கிறேன் முடிந்தால் என் கையை ஒடி பார்க்கலாம் என்கிற ஆவேசத்தின் வெளிப்பாடுதான் என் PDF வெளியிடல். 

இலக்கியம் மனம் சம்மந்தப்பட்டது. இதன் எதிர்கால விளைவுகள் என்னென்ன? எந்த பதிப்பகமாவது நம்மைப் பதிப்பிக்க முன்வருமா வராதா என்கிற புத்தியின் கணக்கு வழக்கைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசிக்காமல் மனம் பூரித்து செய்த காரியம் அது. தட்டுகிற கையை வெட்டுவேன் என தார்மீகமாய் ஜெயகாந்தன் கர்ஜித்ததைப் போல.

[எம்ஜிஆர் – மதுவிலக்கை முழுமையாக அமல் படுத்துவோம் – பத்திரிகை அறிவிப்பு

ஜெகே – வீட்டிலே கதவை மூடிக்கொண்டு குடித்தால் என்ன செய்ய முடியும் - பேட்டி

எம்ஜிஆர் – சட்டம் வந்து கதவைத் தட்டும் - அறிவிப்பு

ஜெகே – வீட்டிலே கதவை மூடிக்கொண்டு குடித்தால், சட்டம் வந்து கதவைத் தட்டுமாம், தட்டுகிற கையை வெட்டுவேன்.

இது ஏதோ ப்ளாக்கிலோ குறும்பத்திரிகையிலோ அல்லது வீட்டுக் கொல்லைப் பக்கத்தில் அடுத்த ஸ்டேட்டை வைத்துக்கொண்டு எழுதியதில்லை, அல்லது எட்டுப்பேர் கும்மியடிக்கும் லக்கிய ஆன்மீக சுகமளிக்கும் சுவிசேஷ பட்டறைப் பேச்சல்ல.

நண்பரே, மெட்ராஸின் நட்ட நடுவில் இருக்கும் பனகல் பார்க்கில் பொது மேடையில் பேசிய பேச்சு. கற்பனையின் கட்டுக்குள் அடங்காத அதீத கம்பீரம்.]

வியாபார நோக்கிலோ, வாதத்தில் வெற்றிபெறும் நோக்கிலோ இதை இன்று சொல்லவில்லை. மனுஷ்ய புத்திரனிடமே 29 நவம்பர் 2011லேயே கூறியதன் பதிவு ஆதாரம் இணையத்தில் இருக்கிறது..

<நேற்றைய சந்திப்பில், 94ல் வெளியிட்ட அறியாத முகங்களின் மறு பதிப்பும் உயிர்த்தெழுதல் புத்தகமும் ’கொஞ்சம்’ கைவசம் இருக்கின்றன, அவற்றை எங்கேனும் கொடுக்கலாமா? இவ்வளவு முதலீடு செய்து புத்தகத்தை வெளியிட்டு இருக்கையில் பழைய புத்தகங்களை வெளியில் கொணர்ந்தால் சரியாக இருக்காதே, உயிர்மை வெளியிட்டது கிட்டத்தட்ட தீரும் நிலையில் இருந்தால் இதை வெளியில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் எனத் தயங்கியபடிக் கூறினேன்.>

அதற்கு,மனுஷ்ய புத்திரன் செப்பிய மறுமொழியையும் அப்போதே பதிவு செய்துள்ளேன்.

<தாராளமா குடுங்க மாமல்லன். வீட்டுல வெச்சி அதைப் பாத்துகிட்டு இருக்கறது வேற டிப்ரஸிங்கா இருக்கும். உங்க புக்கு அறுநூறு போட்டேன். இருநூறு போயிருக்கு. ஆமா உங்க கதைகள் எல்லாத்தையும் பிடிஎஃபா படிச்சிட்டேன்னு ஒருத்தரு சொன்னாரு. எல்லாக் கதைகளையும் சைட்டுலையே போட்டு இருக்கீங்களோ? என்றார் குசும்பாக.

இல்லையே ஒண்ணுரெண்டு கதைகள்தான் அழியாச்சுடர்கள்ல இருக்கு. அதுக்கு லிங்க்கு குடுத்துருக்கேன். தளத்துல இருக்கற மத்தது எல்லாம் புதுசா எழுதினதுதான் என்றேன்.>

1994ல் பதிப்பித்த பழைய புத்தகங்களை விற்கவே இரண்டுவருடம் முன்பே ’அனுமதி’ கொடுத்தவருக்கு இப்போது என்ன பிரச்சனை? 

<உங்க கதைகளை தளத்துலப் போட்டாலும் பெருசாப் பிரச்சினை ஒண்ணுமில்லை. ஒரு லட்சம் காப்பி போட்டு நெட்டுல வந்துட்டதால அம்பதாயிரம் பிரதி விக்காம நஷ்டமாயிடுச்சின்னு சொன்னா வருத்தப்படறதுல அர்த்தமிருக்கு.>

எல்லாக் கதைகளையும் தளத்தில் போடுவதற்கும் PDFஆக வெளியிடுவதற்கும் என்ன பெரிய வேறுபாடு. எப்படியும் எவரும் எதையும் படிக்கப்போவதில்லை.

<இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருத்தரையும் நேரடியாப் பேரோட தெரியற அளவுக்கு சின்ன எடம் இது.>

ஆனாலும் சிறுபான்மை இலக்கியச் சூழலில் பெரும்பான்மை செலாவணி எழுத்தாளர்களான எஸ்.ரா ஜெமோ சாரு என்கிற பொதிகளுக்கு இடையில் ஊர்பேர் தெரியாத சுண்டைக்காயான என் புத்தகமும் மூன்றாண்டுகளில் (மனுஷ்யபுத்திரனின் பிரத்தியேகக் கணக்கு வழக்குகளின்படிப் பார்த்தாலும்) 400 பிரதிகள் விற்றிருக்கின்றன. இலக்கிய நாயகரிடமிருந்து ராயல்டியாக நயாபைசா பெயரவில்லை என்பது வேறு விஷயம். 

பதிப்பாளனிடம் ராயல்டி எதிர்ப்பார்ப்பது எழுத்தாளனின் உரிமை - அதற்காக
எழுத்தாளனிடம் லாயல்டி எதிர்பார்ப்பது பதிப்பாளனின் மமதை

காசில்லாத 80 - 90களில் பாண்டி பஜார் பனகல் பார்க அண்ணா நகர் கையேந்தி பவன்களில் இரண்டு ரூபாய் முட்டை தோசையுடன் இரவு உணவை முடித்துக்கொண்ட காலங்களிலும் காசு எனக்குக் கால் தூசு. அப்போதே பதிப்பித்து இல்லாத காசையும் தொலைத்தவன் நான்.

செருப்படி வரை பேச்சு போய்விட்டதால் அக்குவேறு ஆணிவேறாக அலசித்தான் பேசியாக வேண்டும். 

அடிப்படையான கேள்வி. என் புத்தகம் போடுவதற்காக யார்,யாரை அணுகியது? நானா நீங்களா? நீங்கள்தானே! நேரடியாக இல்லை எனினும் அகநாழிகை பொன் வாசுதேவன் மூலமாக என்பதுதானே உண்மை?

பதிப்பித்தல் என்பதில் என்னென்ன காரியங்கள் பொறுப்புகள் யார் யாருடையவை? பதிப்பிப்பதில் எழுத்தாளனின் பங்கு என்ன?

டைப்படித்துக் கொடுத்தது பொன் வாசுதேவன் அதற்கான தட்டச்ச்சுச் செலவையும் தருகிறேன் என்று நான் எவ்வளவு கூறியும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

மெய்ப்பு பார்த்தல் யார் செய்ய வேண்டிய வேலை? நானே தமிழ் தட்டச்சத் தெரியாமல் தத்தக்கா பித்தக்காவென தடுமாறிக்கொண்டு இருந்த 2010ல் ப்ரூஃப் ரீடிங் பொறுப்பையும் செலவை மிச்சப்படுத்த சாமர்த்தியமான பதிப்பக முதலாளியாக, என் தலையில் கட்டியது எந்த விதத்தில் நியாயம்? எண்ணிறைந்த எழுத்துப் பிழைகளுடன் புத்தகம் வெளியிடுவது உங்கள் பதிப்பகத்துக்குப் பெருமை சேர்க்குமா? அது எழுத்தாளனுக்கும்தான் எவ்வளவு இழுக்கு.

செலவு எனப் பார்த்தால் பேப்பர் + அச்சடிப்பு + முகப்பு + பைண்டிங் இவைதான் உயிர்மையுடையவை.

<அச்சிட்ட 500 பிரதிகளில் 200 பிரதிகள் கையில் இருக்கின்றன.> https://www.facebook.com/manushya.puthiran/posts/795325787160001

29, நவம்பர் 2011ல் நேர் பேச்சில் மனுஷ்யபுத்திரன் அச்சிட்டதாகக் கூறிய பிரதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?


மனுஷ்ய புத்திரனின் வார்த்தைகளில் உண்மையின் கலப்பு எவ்வளவு சதமானம்? 

கருப்பு வெள்ளையாக எழுத நேர்கையில் 100 பிரதிகள் கழிபட்டுவிட்டனவோ? 2011ல், நேர்ப்பேச்சில், தான் போட்டதாகச் சொன்ன 600 காப்பிகளே 600ஆ 1000மா என அஸ்திவாரத்தின் மீதே ஒருவருக்கு சந்தேகம் வருவது நியாயமா இல்லையா?

கிழக்கு ஆன் லைனில் விற்கப்பட்டவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு இருக்கும் என்று சொல்லுங்களேன் மனுஷ்ய புத்திரன்?

<அவரது ராயல்டி தொகை போக மீதித் தொகையை செலுத்திவிட்டு அந்தப் பிரதிகளை அவர் பெற்றுச் சென்று அவரது புத்தகத்தின் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.>

எழுத்தாளன் ஏன் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டும்?

இதே ஃபேஸ்புக்கில் சச்சிதானந்தன் PDFஆக வெளியிடுவது பற்றிய பேச்சுக்கு மனுஷ்ய புத்திரன் கூறி இருப்பது என்ன?

<Vishnu Swaroop ஆனால் மளயாளக் கவிஞர் சச்சிதானந்தன் காப்பிரைட்டுக்கு எதிராக தனது கவிதைகள் அனைத்தையும் அவரே pdfஆக இணையத்தில் வெளியிட்டுள்ளாரே? அவரது இந்தச் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒரு எழுத்தாளனே தனது படைப்புகள் இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று எண்ணும்போது பதிப்பாளர்கள் அதைத் தடுப்பது சரியா?
January 6 at 10:11pm · Like · 6

January 6 at 10:17pm · Like · 3

எழுத்தாளனாக நானேதானே என் படைப்புகளை வெளியிட்டிருக்கிறேன் பதிப்பாளராக மனுஷ்ய புத்திரன் ஏன் புத்தகங்களை எடுத்துச் செல் என என்னை மிரட்டுகிறார். ஃபேஸ்புக்கில் கவிஞர் ஃபேஸுடன் சச்சிதானந்தனுக்கு சார்பாய் ஒரு நிலைப்பாடு, உயிர்மையின் அதிபராய் உண்மையான ஃபேஸுடன் ஒரு நிலைப்பாடா?

அதென்ன கணக்கு - ராயல்டி போக?

மூன்று வருடங்களாய் இணையத்தில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நக்கலாகவும் எவ்வளவு முறை எழுதியும் ராயல்டி பற்றி மனுஷன், வாயே திறக்காததை எந்தக் கணக்கில் கொண்டு சேர்ப்பது? 

ராயல்டி போக என்பதில்தான் எவ்வளவு அலட்சியம்!

ராயல்டி என்பது முடிந்தால் முடியும்போது நாமாகப் பார்த்து பெரிய மனது வைத்து எழுத்தாளனுக்குப் போடும் பிச்சை என்பதுதான் பெரும்பாலான பதிப்பகங்களின் எழுதப்படாத இலட்சிணை வாசகம்.

உயிர்மையின் கையிலிருக்கும் 200 பிரதிகளின், மனுஷ்ய புத்திரன் கைவிட்டு செலவழித்த அடக்க விலை + அதற்கான மூன்று வருட 24% வட்டி எவ்வளவோ அதையல்லவா என்னிடம் கேட்க வேண்டும். அதே போல் அச்சுக்குக் கொடுத்த உண்மையான ஆர்டர் எவ்வளவு அவற்றில் கைவசம் இருக்கும் 200 போக மீதி எவ்வளவோ அவைதானே உண்மையான விற்பனைக் கணக்கு. அதற்கான ராயல்டி எவ்வளவு (வட்டி வாங்குதல் அராம் எனவே எனக்கு வேண்டாம்) என்று பார்த்துக் கழித்துவிட்டு மீதியை வெளியிட்டால் அதற்கான செக் என்னிடம் இப்போதே தயாராக உள்ளது. 

பொதுவாக, எழுத்தாளர்களின் இலக்கிய/விற்பனை மதிப்பு, முதலீட்டுக்கான வட்டி, மற்ற கடைகளுக்கான விற்பனைக் கழிவான 35% என அனைத்தையும் கணக்கில் கொண்டு அடக்க விலையிலிருந்து 2 1/2 இலிருந்து 3 மடங்குவரை புத்தகங்களுக்கு விலை வைக்கப்படுகிறது. எனவே 180 ரூபாய் புத்தகத்தின் அடக்க விலை 72 ஆக இருக்கலாம் (2 1/2 மடங்கு கணக்கின்படி)

எழுதியவன் என்கிற முறையில் எனக்குக் கொடுக்கும் கழிவான 30% போக 70% விலை போட்டால் 180 X 70% = ஒரு பிரதியின் விலை 126 X 200 = 25200 - இதுவரை விற்றிருக்கும் 400 பிரதிகளுக்கான ராயல்டி 180 X 10% = 18 X 400 = 7200. ஆக 25,200 - 7,200 = 18000

ரூபாய் 18,000/- க்கு செக்குடன் நாளை வருகிறேன். போட்டோ பிடிக்க பிரபு காளிதாஸை ரெடியாக வைத்திருங்கள்.

கோமணத்தை அவிழ்த்து முண்டாசாய் கட்டிக்கொண்டு திரியும் என் போன்ற மூடனிடமெல்லாம் மனுஷ்ய புத்திரன் போன்ற வியாபார காந்தங்கள் சவால் விடக்கூடாது.   

<கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தேசிய உடமையாக்கப்பட்டிருக்கும் விமலாதித்த மாமல்லனின் கதைப் புத்தகத்தை பெரிய அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பெரிய அளவில் அச்சிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.>

தன் படைப்பின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய கூலியை, அவனே புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி அதில் ராயல்டியைக் கழித்துக் கொள்ளும்படியான லட்சணத்தில் சுரண்டும்போதே மனுஷ்ய புத்திரனுக்கு இவ்வளவு வாய் இருக்கிறதே தப்பித்தவறி வெளிப்படையான வியாபாரியாக இருந்திருந்தால் ஆப்பு கட்சியின் தமிழ் குல்லாவாக இவர்தான் இருந்திருப்பார் இல்லையா?

இலக்கியத்துக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரன் என்கிற தியாக தீபம், இலக்கிய உலகின் சில்க் சுமிதாவாக இருந்த சுஜாதாவை வைத்து (இப்போது சொல்வதல்ல சுஜாதாவிடம் பெரியவர்கள் குறுநாவலுக்காக கணையாழி குறுநாவல் போட்டியில் 1982ல் இரண்டாம் பரிசு வாங்கும்போது அவரை மேடையில் வைத்துக்கொண்டே 21 வயது பையனாகக் கூறியதுதான் இது) பதிப்பாளராய் ஆகியிராவிட்டால்கூட இவரது இத்துனைக் கவிதைத் தொகுதிகளையும் வானதி பதிப்பகம் முண்டியடித்து வெளியிட்டிருக்கும் என்று நம்புவோமாக.

<காலச்சுவடு இதற்கு அரவிந்தனை பதிப்பாசிரியராகக் கொண்டு ஒரு செம்பதிப்பைக் கொண்டு வந்து அதை நவீன க்ளாசிக் வரிசையில் சேர்க்க இருப்பதாகவும் நேற்று கண்காட்சியில் ஒரே வதந்தி...>

16 வருடங்கள் சும்மாக் கிடந்த சங்கை, கக்கூஸ் கிக்கூஸ் என நோண்டி, சாரு நிவேதிதா எப்படி இணைய எழுத்துலகில் மறு பிரவேசம் செய்ய வைத்தாரோ அது போல, என்னை சீண்டி இருக்கும் மனுஷ்ய புத்திரனுக்குக் காணிக்கையாக 2015 புத்தகக் கண்காட்சியில் புதிய கதைகளின் தொகுப்பு வெளிவரும். எழுதப்படப்போகும் கதைகள் என்னென்ன வெளிவரப்போவது PDF வடிவிலா அச்சுவடிவிலா வெளியிடப்போகும் பதிப்பகம் சத்ரபதி வெளியீடா இல்லை வெளிப் பதிப்பகமா என எதுவும் தெரியாது. ஆனால் வெளியிடவேண்டும் என்கிற வெறிக்கு வித்திட்டாயிற்று. இன்னும் சில மாதங்களில் கிடைக்கவிருக்கும் பதவி உயர்வுக்குப் பின் எந்தத் துறையில் இருப்பேன் எந்த ஊரில் இருப்பேன் என்பதுகூடத் தெரியாது. பொறுப்புகள் கூடிவிடும். அலுவலகத்தில் வேலை நெருக்கடி அதிகரிக்கும். BP எகிறும். ஆனாலும் இந்த சவாலுக்காகவேனும் என் ஆயுளை அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் பறித்துவிடவேண்டாம் என இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.