Monday, January 20, 2014

உத்தம புத்திரன்

Janavary 16 at 11.22am. Edited

<விமலாதித்த மாமல்லன் கதைகள் 600 பிரதிகள் அச்சிட்டதில் 211 கையில் இருந்த பிரதிகள் ராயல்டி தொகை போக மீதித் தொகைக்கு இன்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் அளிக்கப்ப்படடது. நான் புதிதாக அச்சிட்டுக் கொடுத்ததாக மாமல்லன் சொன்ன பொய், அதிக பிரதிகள் அச்சிட்டதாக சொன்ன பொய், அதற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்ததாக சொன்ன பொய் அத்தனையும் நிரூபிக்காவிட்டால் மாமல்லன் வீட்டிற்க்குபோய் கண்டிப்பாக செருப்பால் அடிப்பேன்.>

***

<விமலாதித்த மாமல்லன் கதைகள் 600 பிரதிகள் அச்சிட்டதில் 211 கையில் இருந்த பிரதிகள் ராயல்டி தொகை போக மீதித் தொகைக்கு இன்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் அளிக்கப்ப்படடது.>

புத்தகம் அச்சடிக்கப்பட்டது எப்போது? 

2010 டிசம்பர்

உங்களையெல்லாம் படிச்சி வளந்தவங்க நான் என்றபடியே பத்தோடு பதினொண்ணு அத்தோட இது ஒண்ணு என்று அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் என்னையும் அடைத்து ஏற்றிவிட்டு பத்துப் பதினோரு புத்தகங்களோடு என் புத்தகத்துக்கு ‘விழா’ நடத்தியது என்று?

26ஆம் தேதி டிசம்பர் 2010

<விமலாதித்த மாமல்லன் கதைகள் 600 பிரதிகள் அச்சிட்டதில்>

அச்சிடப்பட்டவை 600 பிரதிகள் என்கிற மர்ம முடிச்சை மனுஷ்ய புத்திரன் அவிழ்த்தது எப்போது?

புத்தகம் போடலாம் என முடிவு செய்தபோதா? புத்தகம் அச்சில் இருக்கும் போதா? வெளியீட்டு விழா சமயத்திலா? இல்லை அடுத்த மாதம் 2011 ஜனவரியில் பச்சையப்பாஸ் எதிரில் நடந்த புத்தகத் திருவிழாவிலா? எந்த நிலையிலும் இல்லை.

விற்றதும் கற்றதும் Wednesday, November 30, 2011 எழுதுவதற்கு முந்தைய நாள். அதாவது ஏறக்குறைய ஒரு வருடம் கழித்துதான் எத்துனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டது என்கிற விபரத்தையே எழுத்தாளனிடம் கூறுகிறார். அதுவும் பதிப்பாளர் வீடு கம் அலுவலகத்துக்குப் போய் கேட்டபிறகு.

செருப்பால் அடிக்கப்பட வேண்டியன்,எவ்வளவு புத்தகம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக்கூட சொல்லாத உயிர்மை பதிப்பாளனா இல்லை ஊருக்கிளைத்த எழுத்தாளனா? 

<211 கையில் இருந்த பிரதிகள்>

விநாயக முருகன் மட்டுமில்லை மனுஷ்ய புத்திரனும் சுத்தமாகத் தமிழ் எழுதுகிறார். 211 கையில் இருந்த பிரதிகள். இந்துக் கடவுளர்களுக்குக் கூட நாலு எட்டு பத்து என்கிற அளவிலதான் இருக்கின்றன. 211 கைகள் இருப்பதால்தான் இத்துனை சுஜாதா டைட்டில்களைப் போட முடிந்திருக்கிறது

211 பிரதிகள் கையில் இருக்கையில், புத்தகக் கண்காட்சியில் உயிர்மை கடையில் வந்து புத்தகம் கேட்டோரிடம் எல்லாம், புத்தகம் இல்லை என்று சொல்லி அனுப்பியவர் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவரா? இல்லை ஏதும் செய்ய முடியாத ஏமாளியாக நின்ற எழுத்தாளன் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவனா?

இணையத்தில் வெளியிடப்பட்ட இலவச PDF, அச்சு புத்தகத்தைக் கொல்லுமா இல்லையா என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விவகாரமன்று. 

தமது தளத்தில் பிரசுரமாகி இருக்கும் கதைகளை புத்தகத் திருவிழாவின் போது சத்தம் போடாமல் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜெயமோகன், தமது புத்தகங்கள் PDFல் சுற்றுவது தெரிந்தும் இப்போதெல்லாம் இணைப்பைத் துண்டிப்பதில்லை. காரணம் PDFல் படித்துப் பிடித்தவர்களும் சேர்ந்து தமது புத்தகத்தை வாங்குவதால் தம் புத்தக விற்பனை PDFஇனால் அதிகரித்திருப்பதை அவர் உணரத்தொடங்கியுள்ளார் என்பதுதான் என்று ஒரு பேச்சு உலவுவது மனுஷ்ய புத்திரனுக்குத் தெரியுமா?

இதெல்லாம் தெரிய வேண்டுமென்றால் மக்களோடு மக்களாய் இருக்க வேண்டும், ஐடி கம்பெனி விசிடிங் கார்டு போல புத்தகத்தையும் தம் பேர்போட்ட எக்ஸ்ட்ரா விசிட்டிங் கார்டாக வைத்துக்கொள்ள, ஆசைப்பட்டு எழுத்தாளன்களாய் ஆவதற்காக அலைபவர்களின் முதலீட்டில் புத்தகம் போட்டால் அடிச்சது வரை லாபம்தானே. 

தமது தளத்திலேயே ஏன் ஜெயமோகன் பிரிண்டர் ஐக்கானைக் கொடுக்கிறார்? இலவசமாய் கிடைக்கும் doPDF மென்பொருளை நிறுவி இருக்கும் கணினியில் பிரிண்ட் ஐக்கானை அழுத்தினாலே அனிச்சையாய் PDFஆக சேமித்துக் கொள்ளலாம். 

அடுத்தவர்கள் முதலீட்டில் போட்ட புத்தகங்கள் விற்காது தங்கிப்போவதால் நஷ்டப்படக்கூடிய பதிப்பாளர்கள் இதையெல்லாம் பற்றி அலசி ஆராய வேண்டிய அவசியம் இல்லைதானே.

மூன்று மாதம் வேண்டாம். உயிர்மை பாவம் சின்ன பதிப்பகம். ஆள் பலம் குறைவு என்பதால் ஆறு மாதம் கூட வேண்டாம். வருடத்துக்கு ஒரு முறையேனும் உங்கள் புத்தகம் இவ்வளவு அச்சிடப்பட்டது.கடந்த ஒருவருடத்தில் விற்பனையானது இவ்வளவு. உங்களுக்கு சேரவேண்டிய ராயல்டி இவ்வளவு என்று பணம்கூட அல்ல கணக்காவது கொடுத்திருப்பாரா மனுஷ்ய புத்திரன்? விசிடிங்கார்டு எழுத்தாளர்களை விடுங்கள். நீங்கள் படித்து வளர்ந்ததாகக் கூறிய கதைகள எழுதிய எழுத்தாளனுக்காவது இந்தக் ‘கடமையை’க்கூட அல்ல சிறப்புச் ‘சலுகையாகவாவது’ செய்தாரா? 

செருப்படிக்கு ஆளாக வேண்டியவன் இவர் படித்து வளர்ந்த எழுத்தாளனா? இல்லை, படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என பிழைப்பு நடத்தும் பதிப்பாளனாகிய இவரா?

ஒரு வருடமல்ல இரண்டு வருடமல்ல முழுதாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. எனினும் விற்ற 350க்கும் மேலான புத்தகங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய ராயல்டி தொகையான 350 X 18 = 6,300 ரூபாயில் பத்து பைசாவைக்கூடத் தராத யோக்கிய சிகாமணியான இவரை செருப்பால அடிப்பதா? இல்லை தன் ராயல்டியை, மிச்சமிருக்கும் 211 புத்தகங்களை, வடிகட்டிய ‘அசடனை’ப்போல தானே  விலைகொடுத்து வாங்கி, அதில் கழித்துக்கொண்டதன் மூலமாய் தனது ராயல்டியைப் பெற்ற் எழுத்தாளனை செருப்பால் அடிப்பதா?

<ராயல்டி தொகை போக மீதித் தொகைக்கு இன்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் அளிக்கப்ப்படடது.>

கொஞ்சம்கூட சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் கூச்சம் ஏதுமின்றி, அச்சிட்ட புத்தகத்தை எழுத்தாளனிடமே விற்றதை ஏதோ பெரிய சமூக சேவை செய்ததைப் போல சர்வ சாதாரணமாய் சொல்லும் இவரை செருப்பால் அடிப்பதா இல்லை இப்படியான ஆள் புத்தகம் போடுகிறேன் என்று சொன்னதற்குத் நாகரிகமாய் நன்றி தெரிவித்துத் தலையாட்டிய எழுத்தாளனை செருப்பால் அடிப்பதா?

இப்படியான பேச்சு சர்வ சாதாரணமாய் இவரிடமிருந்து வெளிவரக் காரணம், இவரது பெரும்பாலான புத்தகங்களுக்கான முதலீடு இவருடையதுதானா அல்லது சம்பந்தப்பட்ட எழுத்தாள விசிடிங் கார்டுக்கு ஆர்டர் கொடுப்பவர்களுடையதா என்கிற ஐயத்தை உண்டாக்குவது இயல்பா இல்லையா?

என்னை விடுங்கள், உலகத் தொலைக்காட்சியில் விலாவாரியாய் நீதி நேர்மை அறம் நியாயம் என்று கடகடவென தொழில்முறை கதாகாலட்சேபம் செய்பவர் போல் பேசும் பதிப்பாளர், தமது இரண்டு புத்தகங்களுக்கான ராயல்டியில் ஒன்றுமே கொடுக்கவிலை என்று பிரபஞ்சன்  தி இந்துவில் பெயர் குறிப்பிடாமல் கூறியிருப்பது யாரை என்று பதிப்பக இண்டஸ்ட்ரியில் கொஞ்சம் கேட்டுச் சொல்லுவாரா மனுஷ்ய புத்திரன்? அந்த ’நபரை’, கவிஞர் மற்றும் தமிழின் தலைசிறந்த பத்து ஆளுமைகளில் முதலாமவர் என்கிற ரீதியிலும் பிரபஞ்சனின் நண்பன் மற்றும் சக எழுத்தாளன் என்கிற முறையில் நானும் அந்த மோசடி பதிப்பகத்தானை செருப்பால் அடிக்கலாம். என்ன இருந்தாலும் மனுஷ் ஒரு காலத்தில் மார்க்ஸிட் லெனினிஸ்ட் இயக்கக் கவிஞராக இருந்தவர் என்பதால், இவருக்கு இடது செருப்பால் அடிக்கும் முன்னுரிமையை அளிக்கிறேன். ராயல்டி கொடுக்காமல் பிரபஞ்சனை ஏமாற்றிய பதிப்பாளன் எவன் என்று மட்டும் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் மனுஷ்ய புத்திரன்.

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கும் உயிர்மை ஒற்றைப் பைசா தரவில்லை என்றொருவரிடம் இ.பா வருத்தப்பட்டதாக வெளியூர்க்காரர் ஒருவர் கூறினார். அ. மார்க்ஸ் போல ஒற்றை மனித  உண்மை கண்டறியும் குழுவாக தொலைபேசியில் இ.பாவைத் தொடர்புகொண்டேன்.

சார் உங்கள் புக்குக்கு மனுஷ்ய புத்திரன் ராயல்டி கொடுத்தாரா?

நாலஞ்சு வருஷம் முன்னாடி எதோ கொஞ்சூண்டு குடுத்தார். 

எவ்ளோ சார் குடுத்தார்? 

நாலஞ்சு வருஷமாச்சு. ஞாபகமில்லை. வாட் ஹி கேவ் வாஸ் நாட் வொர்த் ரிமம்பரிங் என்றார்.

ஆனால் இந்திரா பார்த்தசாரதியின் புத்தகம் இன்னமும் அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகவில்லை. இதோ இப்போது கூட உயிர்மை ஆன்லைனில் இருக்கிறது!

நாலைந்து வருடங்களுக்கு முன்பாகவே ராயல்டி கொடுத்து இந்திரா பார்த்தசாரதியை ஒன் டைமாக ’செட்டில்’ செய்து விட்டார் போலும்.

<நான் புதிதாக அச்சிட்டுக் கொடுத்ததாக மாமல்லன் சொன்ன பொய்,>

விநாயக முருகன்தான்  ”நான் நேற்று அவனைப் பார்ப்பேன்” என்று எழுதுவதாக சாரு கூறினார். இலக்கியப் பதிப்பாளருமா? 

நான் ஊகமாக எதிர்காலத்தில் கூறியதை இவர் இறந்தகாலமாக மாற்றிவிட்டார். டெக்னிகல் கிரவுண்டில் கேஸ் அட்மிஷன் நினையிலேயே தள்ளுபடியாகிவிடும்.

இவர் புதிதாக அச்சிட்டுக் கொடுத்ததாக நான் எங்கு சொன்னேன்? புத்தகம் கைக்கு வராமல் இழுபறியில் இருக்கும்போதே கொடுத்ததாகச் சொல்ல நான் என்ன குடாக்கா? 

உயிர்மை கடையில் புத்தகம் இல்லை. செக்குடன் வருகிறேன் புக்கை ரெடியாக வைத்திருங்கள் என்றால், நீங்கள் புக்ஃபேர் முடிந்தபின் 22ஆம் தேதிக்குமேல் வா என்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? பொங்கல் விடுப்பு முடிந்து அச்சகம் திறக்கப்பட்டதும் 200 பிரதிகள் அச்சடித்துக் கொடுக்கப்போகிறீர்கள் என்றுதானே சாதாரண மூளக்குத் தோன்றும்.

கெளடவுனில் என் புத்தகங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, உங்களுக்கு ஒரு கண் நட்டம் வந்தாலும் பரவாயில்லை மாமல்லன் புத்தகம் விற்று அவனுக்கு இரண்டு கண்களாக ராயல்டி கொடுத்துவிடக்கூடாது என்கிற அளவுக்கு மஹான் காந்தி மஹ்ஹான் நீங்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?

விற்ற புத்தகம் இத்துனை இருப்பு இத்துனை என்று ஒவ்வொரு ஆண்டும் கணக்கு கொடுக்காது ஊகங்களுக்கு இடம் கொடுத்தது, உங்கள் தவறா என் தவறா? இதற்கு செருப்பால் அடிக்கப்பட வேண்டியவன் எழுத்தாளனா பதிப்பாளனா?

<அதிக பிரதிகள் அச்சிட்டதாக சொன்ன பொய்,>

இதுவுமதே! மூன்று வருடங்களாய் விற்பனைக் கணக்கை பதிப்பாளன் ஒழுங்காகக் கொடுத்துக்கொண்டு இருந்தால் அதிக பிரதிகள் அச்சிட்டு இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுத்தாளனுக்கு ஏன் வரப்போகிறது? 

நான்கைந்து வருடம் முன்பாகவே ராயல்டி கொடுத்த இ.பாவின் புத்தகம் இன்னமும் ஆன் லைனில் விற்றுக்கொண்டு இருக்கிறதே. 80 வயதாகிறதே பாவம் என்று அவருக்கு மட்டும் எதிர்காலத்து அச்சடிப்புகளுக்கும் சேர்த்து பெருங்கருணையுடன் ஒட்டுமொத்தமாய் ராயல்டி கொடுத்து விட்டீர்களோ?

முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு என்று புத்தகத்தில் அச்சிடும் வழக்கம் தமிழ் பதிப்புத் துறையிலிருந்தே வழக்கொழிந்துவிட்டதாக பராபரியாகப் பேசிக் கொள்கிறார்களே உண்மையா மனுஷ்ய புத்திரன்?

<அதற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்ததாக சொன்ன பொய்>

மர்மப் படங்களை எடுத்த ஹிட்ச்காக் கூட ஓப்பன் சீக்ரெட் டெக்னிக்கைதான் பயன்படுத்தினார். அதாவது படம் ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் டைட்டில் முடிந்ததும் கொலை நிகழ்ந்துவிடும். கொலையாளி யார் என்பதுகூட பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் அடுத்த 90 நிமிடங்களும் கதா பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் யார் கொலைகாரன் எப்படி நடந்தது என்று தெரியாமல் திணறிகொள்வதைப் பார்ப்பதில்தான்  பார்வையாளனின் சுவாரசியமே இருக்கும். 

இதற்கு எதிர்மாறாய் திகில் படங்களில் எதையுமே காட்டாமல் போங்காட்டம் ஆடி திடீரென எங்கிருந்தோ கத்தி வீசி பயங்கர பின்னணி இசையுடன் நம்மை திடுக்கிட வைத்து பயமுறுத்துவார்கள்.

முன்னது கிளாசிக் பின்னது கப்பி.

முதலிலேயே கூறியது போல ஓப்பன் சீக்ரெட்டாய் எத்துனை புத்தகங்கள் அச்சிடப்பட்டன லைப்ரரி ஆர்டர் கிடைத்ததா இல்லையா என்கிற விபரங்களை எழுத்தாளனுக்குத் தெரிவிக்கத் தவறியது யார்? எதுவுமே தெரியாது, திகில் படம் பார்ப்பதுபோல எழுத்தாளனை மலங்கமலங்க விழிக்க வைத்துவிட்டு அவன் திருதிருவென விழிக்கிறான் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு யார் யாரை செருப்பால் அடிக்கலாம்?

<அத்தனையும் நிரூபிக்காவிட்டால் மாமல்லன் வீட்டிற்க்குபோய் கண்டிப்பாக செருப்பால் அடிப்பேன்.>

என் வீடு பெசண்ட் நகரில் CPWD குடியிருப்பில் 5/6 என்கிற இலக்கத்தில், இரண்டாவது மாடியில் இருக்கிறது. சிரமம் வேண்டாம். வீட்டெதிரில் வந்துவிட்டு காரில் உட்கார்தபடியே, கால் டாக்சி டிரைவர்கள் போல்  மனுஷ்ய புத்திரன் ஒலியெழுப்பட்டும். நானே கீழிறங்கி வந்து ஐஃபோனுடன் அவர்முன் நிற்கிறேன்.

தன் எழுத்தை PDFல் இலவசமாய் இலக்கிய வாசகர்களுக்குக் கொடுத்ததால், ராயல்டி கொடுக்காமல் ஏமாற்றிய பதிப்பாளன் என்றுகூடப் பாராமல், நட்ட ஈடு கொடுத்த முதல் எழுத்தாளன் என்கிற அழியாப் பெயரை வரலாற்றில் எனக்கு வாங்கிக் கொடுத்தமைக்காக மனுஷ்ய புத்திரன் எத்துனைமுறை வேண்டுமானாலும் செருப்பால் அடித்துக்கொள்ளட்டும்.