Monday, December 29, 2014

வெற்றிகரம்

மாதொருபாகன் புத்தகத்தை கிழிப்பது உதைப்பது எரிப்பது போன்ற புறச் சேவைகள் ஒருபுறம் நடக்கட்டும் இந்துத்துவ சிங்கமே, கூடவே 1992ல் வெளியான Immaculate Conception என்கிற பாக்கிஸ்தானில் நடப்பதாக எடுக்கப்பட்ட படத்தை முதலில் பார்த்து விடு. 

பாக்கிஸ்தானா என முகம் சுளிக்க வேண்டாம். நாம் கொண்டாட அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. இதே மாதொருபாகனின் குழந்தையில்லா ஜோடி கோவிலுக்குப் போய் குழந்தை பெற்றுக்கொள்ளும் கதைதான் அதுவும். கோவில் என்றதும் முறைக்காதே என் தங்கமே. பாகிஸ்தானில் நடக்கிற கதை என்று சொல்லிவிட்டேன். அப்புறமும் என்னை முறைத்துப் பார்ப்பது நியாயமா? கதை நிகழ்வது பாக்கிஸ்தானில் உள்ள நம் கோவிலில் அன்று. அவர்கள் கோவிலில். பாய் கோவிலில். தர்கா. அதுவும் நம் சச்சின் காவியத்தின் முதல் அத்தியாயம் எழுதப்பட்ட கராச்சியில்... சார் என்னதான் நீங்க இந்துத்வர்ங்கறதால ஸ்பெஷல் இந்தியரா இருந்தாலும் அதுக்காகக் கட்டுரை நடுவுல எல்லாம் சச்சின் பேரைச் சொனதும் விசிலடிச்சி கைதட்டறதெல்லாம் நல்லா இல்ல. பிளீஸ் ஸ்டாப் இட். அப்படியாப்பட்ட கராச்சியில், திருநங்கைகளால் பரிபாலிக்கப்படும் தர்காவில் போய்தான் அல்லாவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. கதை உங்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பது உங்கள் சிரிப்பிலிருந்தே தெரிகிறது. நம்பும்படி இல்லையா. அருளில் எல்லாம் எப்படிக் குழந்தை பிறக்கும் என்கிறீர்களா. அதானே முஸ்லீம் கடவுளின் அருளில் எல்லாம் குழந்தைப் பிறக்க வாய்ப்பு எப்படி இருக்க முடியும். அவர் ஒரே ஒருவர்தானே. ஒருவரின் பவர் லிமிட்டெட்தானே. இந்துக்களைப் போல மைல்கல் முதல் மண்புத்துவரை கணக்கிலடங்கா கடவுளர்களின் ஒட்டுமொத்த பவரை வைத்து எத்தனை அணு குண்டுகள் தயாரிக்கலாம். இப்பதான சொன்னேன் திரும்பவும் விசிலடிக்கிறீங்களே.. கரெக்டுதான் பாய்ண்ட்டைக் கரெக்டாகப் பிடித்துவிட்டீர்கள். அதேதான் மேட்டர். நம் மாதொருபாகனைவிட இன்னும் நுணுக்கமான படம் இது. குழந்தையில்லா ஜோடி அந்த கராச்சி தர்காவில் ராத்தங்கி கூடினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும் நம்பும்படியாகவும் இருக்கிறது. போகவும் திருநங்கைகளால் நடத்தப்படும் கோவில் என்பதால் பிறக்கிற குழந்தை தங்களால் தங்களுக்காக தாங்களே பெற்றுக்கொண்டது என்கிற வலுவான நம்பிக்கையும் தம்பதியருக்கு வரும். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் என்கிறீர்களா. இல்லை சுவாமி படமும் தம்பதியரும் ஆங்கிலம். இயக்குனர் பாக்கிஸ்தான் பாய் ஓய் Jamil Dehlavi பாதி ஃபிரெஞ்ச் வேற. மாதொருபாகனைப்போல அதான் நீங்கள் குறிப்பிட்ட 87, 116,117,118, 129 மற்றும் 172 பக்கங்களை உங்களைப் போலவும் இணையத்தில் உள்ள பெரும்பாலானோரைப் போலவும் நானும் அந்த 'பக்கங்கள் நாவலை'ப் படித்துவிட்டேன். உமக்கும் எனக்கும் ஆயிரம் வேலை. போராட்டம் நடத்தவே நேரம் போதவில்லை உமக்கு. இதில் இத்தனை பக்கங்கள் படித்தற்கே எழுத்தாளன்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும். போகவும் பெருமாள்முருகன், கல்லூரிப் பேராசிரியர்கள் எழுதும் செமினார் கட்டுரைகள் போல, கொட்டாங்கச்சி அரிசியை வைத்தே குண்டான் சோறு பொங்கிவிடுபவர். என்ன, சோறு கொஞ்சம் வெந்தும் வேகாமல் டிரையாக இருக்கும். அதை ஃபிரைட் ரைஸ் எனச்சொல்லி சாமர்த்தியமாய் ஆங்கிலத்திலும் ஒப்பேத்தி பென்குயினுக்கே கொண்டு போய்விட்டார் கண்ணபிரான். என்ன இருந்தாலும் பெடிகரி என்ன லேசான விஷயமா. குமுதம் விகடன் போல இலக்கிய மார்க்கெட்டிங் இன்னொருவிதம். கலாச்சார ரீதியாய் இந்தியா பற்றிய தவறான சித்தரிப்பு வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கவேண்டும் என நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பாகிஸ்தானின் சீரழிந்த கலாச்சரம் பற்றி சொல்கிற இந்தப்படம் இருக்கிறதே... பாக்கிஸ்தானின் சீரழிவு என்று தொடங்கியதுமே சொல் சொல் என அவசரப்படுத்தினால் எப்படி கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள். மாதொருபாகன் போல க்ரூடாக, திறந்தவெளி இருட்டில் சாமியாடி என்ற பெயரில் கண்டவனும் வந்து சருக்கு மரம் ஏறிவிட்டுப் போவதாக இல்லாமல், நம்பும்படியாய் கணவன் மனைவி இருவருக்குமே அவர்களுக்கே பிறந்ததான நம்பிக்கை வரும்படியாய், வேண்டுதலின் பூஜையின், சடங்குகளின் ஒரு பகுதியாய் இருட்டில் கணவன் மனைவி இருவருமே ஒன்றாய் முதலிரவுபோல் அலங்கரிக்கப்பட்ட அறையில் தங்க வைக்கப் படுகிறார்கள். சடங்கு சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாய் அந்த ஆங்கிலேயக் கணவனுக்கு பால் தரப்படுகிறது. உங்கள் நமுட்டுச் சிரிப்பிலேயே தெரிகிறது சூட்சுமம் உங்களுக்குப் பிடிபட்டு விட்டது என்று. என்ன இருந்தாலும் இந்துக் கடவுளர்கள் போல பாய் சாமிக்கு ஏது பவர். பாலில் தூக்க மருந்து என்பது கொஞ்சம் மொக்கையான மேட்டர்தான். ஆனால் அந்த ஆங்கிலேயக் கணவன் நம்பும்படியாக அது இரவில் சக்தியுடன் இருப்பதற்கான சத்துணவுப் பால் என்று சொல்லி அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அவனும் அதைக் குடித்துவிட்டு, ஆங்கிலப் பெண்சக்தி அருகில் படுத்திருக்க அவன் குழந்தையாய்த் தூங்கிவிடுகிறான். ஏற்கெனவே அறைமுழுக்க வாசனைத் திரவியங்களின் கிறக்க நறுமணம். மயக்கவைக்கும் ஊதுபத்தி புகைமண்டலம் என ருப்பதால், சுற்றி என்ன நடக்கிறது என்கிற சுய நினைவற்ற நிலையில் அறை மயக்கத்தில் இருக்கும் ஆங்கில மனைவி அடுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். புரிந்துவிட்டதா அவ்வளவுதான் விஷயம். அதற்கப்புறம் படமா. அட நீங்கள் வேறு 92-93 உலக திரைப்பட விழாவில் டெல்லியிலோ எங்கோ பார்த்தது. சொன்னால் நம்புங்கள் சஹிருதயரே! என்ன இப்படி நச்சரிக்கிறீர்கள். எங்கு பார்த்தேன் என்பதே நினைவில்லை. அதற்குமேல் கதை என்ன என்று 22-23 வருடம் கழித்து எப்படி நினைவிருக்க சாத்தியம்? சீனா. என்னது பிட்டா. என்ன சார் இப்படிப் பச்சையாகக் கேட்கிறீர்கள். நாமெல்லாம் இந்துக்கள். இந்துத்துவர்கள் ஆபாசத்துக்கு எதிரானவர்கள் இல்லையா. ஆபாசம் நம் கலாச்சார ரத்தத்திலேயே இல்லாத விஷயமில்லையா. நாமெல்லாம் செக்ஸை அனுபவிக்கவா செக்ஸில் ஈடுபடுகிறோம். இந்து தர்மத்தைக் காக்கிற, அபிவிருத்தி செய்கிற புனிதக் கடமையாகத்தானே அய்யா மனைவியுடனேயே சம்போகிக்கிறோம். எந்த அளவுக்கு துணி விலகினால் போதுமோ அந்த அளவுக்கு மட்டுமே விலக்கி, ஆபாசமற்று இந்து நாகரிகம் பேணிதானே அதைக்கூட செய்கிறோம். ஒரு அதிதீவிர இந்துத்வராய், கலவர காலகட்டங்களில் கற்பழிப்புக் கைங்கர்யத்தில் ஈடுபடுகையில் உங்களால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது என்பது புரிகிறது. மேலும் அந்த களேபரத்தில் நம்மை யார் குறிப்பாகக் கவனிக்கப் போகிறார்கள் என்கிற தைரியமும் சேர்ந்து கொள்ளும்போது கட்டற்றுத் திரிவது உங்களது புனிதக் கடமையாகத்தான் தோன்றக்கூடும். மத வெறி தலைக்கேறி தாண்டவமாடிக்கொண்டிருக்கும் போது எல்லா மதத்துக்காரனுக்கும் கைமுனையில் ஆயுதம் முளைத்துவிடுவதுபோல் சாமான் புரைக்கேறி தலையில் கொம்பாகிவிடுகிறது என்பது வேறு விஷயம். ஒரு இந்துத்வராய் இருந்துகொண்டு ஒரு இந்துவான என்னிடம் போய் ஆபாசமாய் அந்த சென்ஸார் இல்லாத சீன் எப்படி இருந்தது என்று விவரமாய் சொல்லச்சொல்லி எப்படி வற்புறுத்தலாம், என்னதான் பாக்கிஸ்தானின் இழிவைத் தெரிந்துகொள்வதும் அதை இழுவுபடுத்துவதுமே உங்களது பிரதான நோக்கம் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றபோதிலும் ஐய்யா சத்தியமாய் எனக்கு அதற்குமேல் படம் என்ன ஆகிறது என்று நினைவில்லை. டிவிடி தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது டோரண்ட் கிடைக்கிறதா என இணையத்தில் தேடிப் படத்தைப் பாருங்கள் நிச்சயம் மாதொருபாகனைவிட நல்லபடம். பெருமாள் முருகன்கூட ஒருவேளை இந்தப் படத்தைப் பார்த்திருந்திருக்காவிட்டாலும் இதைப்பற்றி யாரேனும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை அப்படியே உள்ளூர் தோசைக் கல்லில் வார்த்தாலென்ன என்று அவருக்குத் தோன்றியிருக்கவும் வாய்ப்புண்டு. என்ன கொஞ்சம் எண்ணெய் குத்த மறந்துவிட்டார் போலும் வார்த்த தோசை வழக்கம்போல வறட்டென்று இருக்கிறது. பாதகமில்லை, ரொட்டி சாப்பிடும் வெள்ளைக்காரனுக்கு பிடித்துப்போய்விடக்கூடும். வரட்டு ரொட்டிக்குக் கலை மனம் அவசியமில்லை. ஒட்டுமொத்தமாய் தெரியும் ரொட்டியில் கொஞ்சம் அதிர்ச்சி ஜாமைத் தொட்டுக்கொண்டால் முற்போக்கு ஆழங்கள் அதில் தெரியவும் வாய்ப்புண்டு. சுபம். 

சந்தோஷம் - எரித்ததில் உமக்கும் எரிக்கப்பட்டதில் அவருக்கும் எரிபட்டுத் தீர்ந்ததில் பதிப்பகத்தாருக்கும்.

ஆனால் இணையத்து இளவட்டங்களுக்கு, 60-70 வருடங்கள் முன்பாகவே திருச்செங்கோடு திருவிழா நின்றுபோனதை, இந்தப் பிரச்சனையின்மூலம் கேள்விப்பட்டதிலிருந்து - கண் இலான் பெற்று இழந்தான் போல - அப்படி ஒரு துக்கம். பாவம் இதற்காக இவர்களென்ன விஸா வாங்கி பாக்கிஸ்தானுக்கா போய் கராச்சியில் திருப்பணி வேலை பார்க்கமுடியும்? 

டிவிடி வாங்கி முழு படத்தையும் பார்த்துவிடுங்களைய்யா, RSSஉம் திருமாவும் அடித்துக் கொண்டால் அப்பறம் நான் எதற்கு வெட்டியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கவா இருக்கிறேன் என, தன் பங்குக்கு இஸ்லாத்தை இழிவுபடுத்துகிறது இந்த Immaculate Conception (1992) என்று அமீர் பாய் சொன்னார் என ஜவாஹிருல்லா போய் படத்தைத் தடைசெய்யக்கோரி US தூதரகம் முன் நிற்பதற்கு முன்னால்.