Wednesday, January 14, 2015

கொலையும் தற்கொலையும்

திருச்செங்கோடு விவகாரத்தில் பெருமாள்முருகனை திராவிடக் கட்சிகள் ஆதரிக்கவில்லை என்பது பெரிய புகாராய் முன்வைக்கப்படுகிறது. முதலில் தன்னை அவர் ஆதரித்தாரா என்பதை எவரும் கேட்டுக்கொள்ளத் தயாராயில்லை.

பெரியாரையும் அண்ணாவையும் அவமானப்படுத்தாமல் மலர் தூவியா இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொண்டது. இல்லை அவர்கள்தாம், எதிர்ப்பு வரும்போது, யாராவது வந்து ஆதரித்தால்தான் இந்தச் சமூகத்துக்குப் பணியாற்றுவோம் இல்லையெனில் போங்கடா மயிரு என்று போய்விடுவோம் என்று சமுதாயத்தைதான் மிரட்டினார்களா? 

பொழுதுபோகவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நமது விளையாட்டு மைதானம் என்பதுபோல், சோ ராமசாமியின் துக்ளக் பத்திரிகை அலுவலகம் எத்தனை முறை திமுகக்காரர்களால் தாக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பயந்து தமக்கு சரியெனப்பட்டதை தொடர்ந்து எழுதாமல் மூடிக்கொண்டு போயிருந்தால் இன்று சோ என்பவர் யார்?

வரவேற்றால் நல்லது புறக்கணித்தால்கூடப் பரவாயில்லை எதிர்த்தால் எதிர்த்து நிற்கமாட்டேன் என்பவன் எதற்கு சமுதாயத்தை 'எதிர்த்து' 'அம்பலப்படுத்த' எழுதவரவேண்டும். கொங்கு வேளாளக் கவுண்டர் பத்திரிகைக்கு எழுதிக்கொண்டு செளக்கியமாய் இருக்கலாமே. 

எதிர்ப்பு கிளம்பியதுமே கைகால் நடுங்கத் தொடங்கிவிடக் கூடாது. அப்படியே நடுங்கினாலும் குறைந்தபட்சம் அதைக் காட்டிக்கொள்ளாத முதிர்ச்சியாவது இருக்கவேண்டும். 

அவமானப் படுத்தப்படுவதைத் தாங்கமுடியாத அளவுக்கு மயிர்க்கால்கள்தோறும் நுண்ணுணர்வு கொண்டவன் எழுத்தாளன் எனச் சொல்லிக்கொள்ள எந்தத் தகுதியுமற்றவன். 

அநேகமாய் இங்கு இருப்பவர்களிலேயே அநியாயத்துக்கும் குறைவாய் எழுதியிருப்பவனும் தேவடியாள் மவனே என ஜெயகாந்தன், சுபரமண்ய ராஜுவால் முகத்துக்கெதிரிலும் பலரால் முதுகுக்குப் பின்னாலும் திட்டப்பட்டவனும் நான்தான். (எதோ கோபத்தில் பேசிவிட்டேன் அதெல்லாம் மனசில் வெச்சுக்காதே வா என்று பொது இடங்களில் சந்திக்க நேர்கையில் ஜேகே அழைத்தும் 25வருடங்களாய் செல்லவில்லை. ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்த படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்ததிலிருந்து நேரில் போய் பார்த்துவிட உள்ளூர தவிக்கிறது என்பது வேறு விஷயம்.)  இதற்கெல்லாம் மிரண்டு எழுதாமல் பேசாமல் இருந்ததுமில்லை செண்ட்ரல் ரயில்வே அட்டவணைப் பட்டியலை எப்படியேனும் விஞ்சிவிடவேண்டும் என்கிற குறிக்கோளுடன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்ததுமில்லை.

அவ்வளவு ஏன் 2010ல் 16 வருட இடைவெளிக்குள் பின் நான் இணையத்தில் நுழைந்தபோது, எழுதத் தொடங்கிய 25 நாட்களுக்குள் எஸ்.ரா பற்றி எழுதியதைப் படித்து ஓரிருவர் தவிர்த்து ஒட்டுமொத்த இணைய தமிழிலக்கியக் கூட்டமே என்னை எதிர்க்கவில்லையா? அன்று எதிர்த்தோரில் பலர் - சாரு ஜெயமோகனின் தீவிர வாசகர்களில் பலர் இவனும் எதோ சொல்கிறான் என இன்று, வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளத் தயங்கினாலும் தொடர்ந்து படிக்கவில்லையா.

எடுத்தவுடன் தற்கொலை செய்துகொள்கிறேன் என்கிற எழுத்தாளனைக் கொலை செய்ய வெளியிலிருந்து எவனையாவது கூலிகொடுத்துக் கூட்டிக்கொண்டு வரவேண்டுமா என்ன.