Thursday, January 15, 2015

எலிகளும் எழுத்தாளரும்

இணையத்தில் நாங்களெல்லாம் வீராவேசம் காட்டுவதுபோலதானே அய்யா எங்கள் எழுத்தாளரும் எழுத்தில் காட்டினார். 

66Aவின் கீழ் நடவடிக்கை என்றதும் எங்களில் எத்தனைபேர் ட்விட்டர் அக்கவுண்டையே மூடிவிட்டு ஓடினோம். சிலர், திரைமறைவில் வீரதீரமாய் சமரசம் செய்து கொண்டோம். எங்களில் சிலர், அரண்டுபோய் அக்கவுண்ட்டுக்கு அன்று போட்ட பூட்டை இன்னமும்கூடத் திறக்கவேயில்லை. 

நாங்கள் அதிதீவிரமாய் அரசியல் விவாதம் செய்வதைப்போல எங்கள் எழுத்தாளரும் ஜாதி கீதி சாமீ கீமி என்று சும்மா 'கதை' எழுத வந்தவரைய்யா. 

அவரைப் போய் பாரதியார்போல் தைரியமாய் நில். அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து தந்திரோபமாய் பாண்டிச்சேரிக்குத் தப்பி ஓடியதுபோல் ஏன் சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளக்கூடாது. போலீசில் புகார் கொடுத்தால் என்ன FIRஏ பொட்டால்தான் என்ன குடியா முழுகிவிடும். ஒரு சினிமாக்காரியால் முடிந்தது, எல்லாம் வல்ல எழுத்தாளனால் முடியாமல் போய்விடுமா. வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்திருந்தால் இந்தச் சாக்கடைகளுக்கு எதிராய் சட்டரீதியான நிரந்தரத் தீர்வு கிடைத்திருக்குமே என்று கேட்பதெல்லாம் இலக்கியத்துக்கே எதிரான எவ்வளவு பெரிய வன்கொடுமை. எங்கள் எழுத்தாளரால் முடிந்தது மன்னிப்புக் கடிதம். எங்களால் முடிந்தது இலவச இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு ஆயிடுச்சே இப்படி ஆயிடுச்சே என்கிற பிலாக்கணம்.

கைதட்டலுக்காக, கதையின் கடைசீ வரியில் ஏண்டா நாயே ஏண்டா நாயே என்று பஞ்சு டயலாக் விட்டு அரசியல் காவியம் படைப்பதைத்தவிர நிஜவாழ்வில் எலியாகத்தானே வாழ முடியும் சமூகத்தின் ஆன்மாவான எங்கள் முற்போக்கு எழுத்தாளர் எங்களைப்போலவே @ISupportOurWriter