Saturday, January 17, 2015

எடுக்கவா கோர்க்கவா

யாழ் நூலகத்துக்கு அருகில் கைகளைக் கட்டிக்கொண்டு மாதொருபாகனை எரித்ததற்கு கண்டணம் தெரிவித்துப் போராட்டம் நடத்தி Facebookகில் போட்டோ போட்டுக்கொண்டுள்ளனர். எண்ணி ஏழே பேர். குறைந்தபட்சம் போட்டோவாவது போடாது இருந்திருக்கலாம். நிபந்தனையில்லா மன்னிப்பைக் கேட்டு எழுதிப்பெற்ற எதிர் அணி இணையத்திலேயே இருந்து இவையனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் இருத்த வேண்டும். எதையாவது செய்யவேண்டும் என்கிற உணர்ச்சிவேகம் மட்டுமே ஒன்றுக்கும் உதவாது. புத்தகத்தை எரித்ததையெல்லாம் கடந்து விஷயம் எங்கோ போய்விட்டது. உண்மையிலேயே பெருமாள் முருகனுக்கு எதாவது செய்ய நினைப்பவர்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது ஒன்றும், கலங்கிப் போகுமளவுக்கு, பெரிய களங்கமில்லை, உலகம் நிலையாக நிற்காது சூரியனைச் சுற்றி வருகிறது என்று, பைபிளில் இருப்பதற்கு எதிராய் kஊறியதற்காக, கலீலியொ கலீலியே சர்ச்சிடமும் பொபாண்டவரிடமும் மண்டியிட்டு செய்ததுதானே, நீங்கள் மேசையில் அமர்ந்துதானே எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறலாம்.
The sentence of the Inquisition was delivered on 22 June. It was in three essential parts:
  • Galileo was found "vehemently suspect of heresy", namely of having held the opinions that the Sun lies motionless at the centre of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to "abjure, curse and detest" those opinions.[67]
  • He was sentenced to formal imprisonment at the pleasure of the Inquisition.[68] On the following day this was commuted to house arrest, which he remained under for the rest of his life.
His offending Dialogue was banned; and in an action not announced at the trial, publication of any of his works was forbidden, including any he might write in the future.[69] 

According to popular legend, after recanting his theory that the Earth moved around the Sun, Galileo allegedly muttered the rebellious phrase And yet it moves
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei

கலீலியோ போலவே தாங்களும், என்னதான் இப்படியொன்று நடக்கவே இல்லை என்று என்னிடம் எழுதி வாங்கினாலும் 60-70 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இல்லையென்று ஆக்கிவிடாது என்று முணு முணுத்துக்கொள்ளலாம் என்று உங்கள் ஆதரவை நேரில் சென்று பார்த்து அவருக்கு அளிக்கலாம். இவை எதுவும் செய்ய முடியாதவர்கள் எதிர் தரப்பைக் கொக்கரிக்க வைக்கும்படியான கோமாளித்தனங்களைச் செய்யாமல் இருக்கலாம். உண்மையிலேயே அவர் மீது அன்பு இருக்கிறது ஆனால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவிப்பவர்கள், எதுவுமே செய்யாது அவரை அமைதியாய் தனிமையில் இருக்க விட்டுவிடலாம். தன்னை திடப்படுத்திக்கொண்டு எழுந்துவர முடியாத அளவுக்கு இவ்வளவு எழுதியவர் எப்படி அவ்வளவு நோஞ்சானாய் பூஞ்சையாய் இருக்க முடியும். 

உண்மையில் பெருமாள்முருகன் அவரே சொல்லிக்கொண்டதைப் பொல வெறும் பெ. முருகன்தானா.

அவர் ஒரு மென்மையான கல்லூரிப் பேராசிரியர் மட்டும்தானா. எந்தப் பின்னணியும் இல்லாத ஒரு சாதாரண அரசுக் கல்லூரிப் பேராசிரியருக்கு கதைகளில் மட்டும் எப்படி தீவிர அரசியல் சார்பு வந்துவிடும். பெ. முருகன் என்பவர், எதுவும் தெரியாத சாதாரண திருச்செங்கோடு கவுண்டராக மட்டுமே இருப்பாரேயானால், தமது கவுண்டர் சாதி ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைப்பது அநீதி என்று படுமா இல்லை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தோன்றுமா. இதே 1966ல் பிறந்த, இனையத்தில் இருக்கும் கவுண்டர்களில் எத்தனைப் பேருக்கு இப்படித் தோன்றியிருக்கிறது. தம் மனசுக்கு அநீதியாய் தோன்றுவதைப் அட்லீஸ்ட் இணையத்திலேனும் சொல்ல வேண்டும் என்று, இந்தப் பிரச்சனைக்கு முன் தோன்றியிருக்கிறது? தோன்றியதோடு அல்லாது தமக்குத் தோன்றியதை கதைகளில் அம்பலப்படுத்த வேறு செய்கிறார் என்றால் அவர் எந்த பின்புலமும் இல்லாதவராக இருக்க முடியுமா.

ஊரில் பிரச்சனை எதாவது நடக்காதா எங்கேனும் சிறு பொரியாவது தட்டுப்படாதா, போராட்டம் நடத்தி போட்டோ பிடித்துப் போட்டுக் கொண்டு கட்சியை வளரலாமே என அல்லும் பகலும் விழிப்போடிருக்கும் வினவு, இந்துமத அடிப்படைவாதிகளும் சாதி சங்கங்களும் கைகோர்த்து நடத்திய இவ்வளவு பெரிய நிகழ்வை ஏன் இன்னமும் கண்டுகொள்ளவில்லை. ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கையில் இதை என்ன ஏது என்றுகூடக் கண்டுகொள்ளாமல் அம்போவென விட்டுவிட்டு, மொக்கையாய் அய்யங்காரை அய்யங்கார் பல்லக்கில் தூக்குவதைப்போய் பெரிய அநீதி என்று ஶ்ரீரங்கத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க ம.க.இ.கவுக்கு முகாந்திரம் என்ன? மாதொருபாகன் நாவல் காலச்சுவடு பதிப்பித்தது என்கிற காழ்ப்பு அல்ல, பெருமாள்முருகன் ம.க.இ.கவின் எதிரணியைச் சேர்ந்தவர் என்பதே வினவின் கள்ள மவுனத்திற்கானக் காரணம். ஸ்டாலினாவது, பெருமாள்முருகனை ஆதரித்து அறிக்கை விட்டால் எவ்வளவு ஓட்டு போய்விடும் என்று கள ஆய்வுசெய்து கணக்கிட்டுக்கொண்டு இருந்ததில் கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது என்றால் அதைவிட அற்பத்தனம் மார்க்ஸீய லெனினீய நக்ஸலீய அம்பேத்காரீய பெரியாரீய என்று ஈய மொத்த வியாபாரம் செய்யும் வெட்டி வினவு செய்துகொண்டு இருப்பது.

இதைப் புரிந்துகொள்ள 80களுக்கு முன்னால் செல்லவேண்டும். 

பூமணிக்கு சீனியராய் முற்போக்குக் கதைகள் எழுதிக்கொண்டிருந்தவர் காடு பா.செயப்பிரகாசம். பிரஞ்ஞை பத்திரிகையின் ரங்கராஜனாய் இருந்தவர் தன்னைத்தானே வளர்த்தெடுத்துக்கொண்டு வண்ணநிலவன் போன்றோரையும் வளர்த்தெடுக்க மார்க்ஸிய வகுப்பெடுத்து தன்னைப் பாட்டாளியாய் மாற்றிக்கொண்டு, உலகத்துக்கு இந்தியன் வங்கி பெரியமேடு கிளையில் கிளார்க்காகவும் உள்ளூர தீவிர நக்ஸ்ல்பாரியாகவும் இருந்தவர்தான் இன்றைய வினவின் தொப்புள்கொடியான ம.க.இ.கவின் முக்கியஸ்தரான வீராச்சாமி. இதே போல 1965 இந்தி எதிர்ப்புப் பொராட்டத்தில் மாணவர் தலைவராய் இருந்து  http://www.kalachuvadu.com/issue-106/page32.asp முரசொலி துணை ஆசிரியராய் வளர்ந்து கரிசல் கதைகள் எழுதிய பா.செயப்பிரகாசமும் மாவோயிசம் பீடித்து இரவுகள் உடையும் கதைகளில் மாஓசேதுங் பாதையில் சூரியதீபனாகி, உலகத் தேவைகளுக்கு இந்தி எதிர்ப்பு மாணவர் கோட்டாவில், புனித ஜார்ஜ் கோட்டையில்  PROவாக வேலைபார்த்து ஓய்வுபெற்றார்.

அரசியல் கொள்கை ரீதியாய் பா.செவுக்கும் ஞாநிக்கும் ஒட்டுறவுகூடக் கிடையாது ஆனால், இண்டியன் எக்ஸ்பிரஸ் வேலை போய் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராய் இருந்த ஞாநிக்கு ஆங்கிலப் பத்திரிகை/நாளிதழ்களைத் தமிழில் ’அரசு’த் தேவைக்காக மொழிபெயர்த்துக் கொடுக்கும் வேலைகளைக் கொடுத்து உதவியவர் ஜேபி என அழைக்கப்பட்ட பா.செதான்.

அவ்வளவு ஏன் 83ல் நான் ஈரோடில் இருந்தபோது, ஒரு சினிமாக் கொட்டகையில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். முடிந்து வெளியில் வந்தால் மழை. சாரலுக்கு ஒதுங்கி சிகரெட் பற்றவைத்துக் கொண்டு மழை நிற்கக் காத்திருக்கையில், பல்லிபோல நின்றிருந்த எனக்குப் பக்கத்தில் திடகாத்திரமாய் இரண்டு இளைஞர்கள். பா,செ அவர்களை நான் ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டேன் என்று ’கேள்விப்பட்டு’ என்னை அடிப்பதற்காக அவர்கள் பின் தொடர்ந்து வந்திருப்பதே பாதி உரையாடலுக்குப் பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. அவர்கள் செய்த ஒரே தவறு எதையும் பேசாமல், வந்தோமா வந்த ஜோலியைப் பார்த்தோமா என்று ஆரம்பத்திலேயே என்னை அடித்திருக்க வேண்டும். எந்த ஜெமினியையும் பேசவிடுவது ஆபத்து என்பது லிண்டாவைப் படித்திருந்தால் தெரிவந்திருக்கும். ஆனால் அந்த அறிவை அடையும் வாய்ப்பை மனஒசையின் மாவோ கெடுத்துவிட்டிருக்க வேண்டும். அப்புறமென்ன, என் சிகரெட்டை அவர்கள் பிடித்து இரவு இரண்டு மணி அளவில் கைகுலுக்கிப் பிரிந்தனர் காம்ரேடுகள். அடுத்து பா.செவை சந்திக்க நேர்ந்தபோது நடந்ததைக் கூறினேன். ஆவரது எதிர்வினை மிக எளிமையாய் ‘எந்த மடையங்க அது’ என்பதாய் இருந்தது.

தமுஎகச கூட்டமோ என்னவோ, 80களில், அண்ணாசாலை ஆவின் மாடியில் நடந்தது. வட்டிக்கடை சேட்டு டைப்பில், தரைவிரிப்பில் எல்லோரும் அமர்ந்தபடிப் பேசும்  கூட்டம். அதில், கொஞ்சம் விட்டாலும் கொந்தளிப்பாய்ப் பேசும் சு.சமுத்திரம் நான் சானான். பனையேறி. இன்னமும் என் சொந்தக் காரங்க பனையேறிகிட்டுதான் இருக்காங்க என்று உணர்ச்சி வேகத்தில் பேசிக்கொண்டே போனவர் திடீரென இந்த அசோகமித்திரனை உதைக்க வேண்டும் என்று காச்சுமூச்சென கத்தத் தொடங்கினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இவருக்கு இவ்வளவு ஜாதி வெறி என்று அதிர்ச்சியாய் இருந்தது. இத்தனைக்கும் சு.சமுத்திரம் தமிழக அரசில் முக்கியமான பதவில் இருந்தவர். இதை மறுநாள் சைக்கிள் மிதித்து அசோகமித்திரன் வீடு தேடிப்போய் கனகாரியமாய் கூறினேன். ஆமாமா அவருக்குக் கால் கொஞ்சம் ஸ்ட்ராங் என்று மடித்துக் கட்டிய வேட்டிக்குக் கீழ் தெரிந்த தமது காலைத் தடவிக் கொண்டார். சத்தியமாய் சொல்கிறேன், கிட்டத்தட்ட 30 வருடங்களாகிவிட்டன, ஆனால் அதிலிருந்த ஜாதிய நக்கல் இதை எழுதிக்கொண்டிருக்கையில்தான் எனக்குப் பிடிபட்டது. இத்தனைக்கும் சு, சமுத்திரம் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டதை நான் சொல்லவே இல்லை. பிறகு அசோகமித்திரன் செய்ததுதான் என்னை வியப்பிலாழ்த்தியது. அவர் டைப்படித்துக் கொன்டிருந்த ஆங்கில பேப்பர் கட்டிங்குகளை எடுத்துக் காட்டி, இதோ இதெல்லாம் சமுத்திரம் குடுத்ததுதான் என்றார். http://www.maamallan.com/2013/01/blog-post_6.html வெளியில் வெவ்வேறு முகங்களைக் காட்டிக்கொண்டாலும் முற்போக்காளர்கள் தமது கலை இலக்கிய எதிரிகளுக்கு உதவிக்கொண்டு உள்ளூர நெகிழ்வாய்தான் இருக்கிறார்கள். ஆனால் பா.செயப்பிரகாசத்திடம் காணப்பட்ட, கொள்கை தாண்டிய நெகிழ்வும் நேசமும் நல்ல நகைச்சுவையுணர்வும் ஒரு காலத்தில் வீராச்சாமியிடமும் இருந்தது. ஆனால் சீனாவில் இருக்கும் ஆர்க்காடு ரோடு பாட்டாளிவர்க்க அதிபராய் ஆன பிறகு வீராச்சாமியிடம் வறண்டுவிட்டது. இல்லையென்றால், நம்பிராஜனின் வீடுதேடி வந்து போகும் அளவுக்கு பழக்கத்தில் இருந்ததையெல்லாம்கூட மறந்துவிட்டு சரக்கடித்துவிட்டு எழுதிய ஈராக் கூட்டுக் கவிதைக்காக ஈரமே இல்லாத ரோபோவாய், திருச்செங்கோட்டுக்காரர்கள் போல விக்ரமாதித்யனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி இருப்பாரா வீராச்சாமி.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே இப்படியாகத்தானே இந்த இருவரும் அதாவது திமுகவிலிருந்து கிளைத்த பா.செயப்பிரகாசமும் தீவிர இலக்கியப் பிரஞ்ஞையிலிருந்து முளைத்த வீராச்சாமியும் மக்கள் கலாச்சாரக் கழகம் என்றொரு கட்சி நடத்தி வந்தனர். அவர்கள் மாவட்ட மைய நூலகத்தின் முதல் மாடியில், முன்பெல்லாம் உயிர்மை, பத்துப் பன்னிரெண்டு என மந்தையாய் புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்துமே அதே இடத்தில் 79 வாக்கில் நடத்திய புரட்சிக் கவியரங்கில் நான்கூட நாங்கள் விழித்தால் நீங்கள் ஒரேயடியாய் தூங்கிவிடுவீர்கள் ரேஞ்சில் கல்லூரிப் போட்டிக் கவிதை வாசித்திருக்கிறேன். புரட்சிகர சூழலில் படித்ததால் அந்தக் கய்தை கிட்டத்தட்ட பாப்லோ நெரூதா லெவல் புரட்சிக் கவிதையாய் பாராட்டப்பட்டது. இதை சத்தம் https://drive.google.com/file/d/0B2RNbdLo8seod1BxMWxhOS03cU0/ என்கிற என் சொத்தைக் கதையில் நீங்கள் படித்துத் தொலைக்கலாம். 

என்னதான் பாட்டாளி வர்க்கத்துக்காய் ஒன்று சேர்ந்தாலும் சேர்ந்தவர்கள் மாவோயிஸ்ட்டுகளாகவே இருந்தாலும் இரண்டு அறிவுஜீவிகள், கத்தோலிக்க தம்பதியராய் கல்லறைக்குப் போகும்வரையிலா பிரியாமல் வாழ முடியும். ஆகவே சீக்கிரமே முறித்துக்கொண்டு விட்டார்கள். இவர்கள் பிரிந்த கூத்து இருக்கிறதே அது ஒரு களேபரக் காமெடியாய் எழுத வேண்டிய பட்டியலிலொன்றாய் கை வசம் இருக்கிறது. இதெல்லாம் நடந்து 30-35 வருடங்களாகிவிட்டன. கதையாய் எப்போது கணினியில் இறங்குமோ தெரியவில்லை. கருணாநிதியும் வைகோவும் என்னுடையதுதான் உண்மையான திமுக என சிகையைப் பிடித்துக்கொண்டதைப் போல, இருவரும் அடித்துப் பிடித்துக்கொண்டதில் தாய்க்கழகமாம் மக்கள் கலாச்சாரக் கழகம் பா.செவிடம் தங்கிவிட வீராச்சாமியிடம் ம.க.இ.க உதயமாகிற்று. எனக்குத் தெரிந்து ம.க.இ.கவின் ஒரே உருப்படியான செயல்பாடு பெல்ச்சி நாடகம். அது இன்னொரு - எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரையாய் பாதியில் நிற்கிறது. 

புரட்சிகர PRO பா.செ அவர்களின் புரட்சிகர இயக்கமான மக்கள் கலாச்சாரக் கழகத்துக்காக நம் பெருமாள் முருகன் பஸ்களிலும் மின்வண்டிகளிலும் பிட் நோட்டீஸ் விநியோகித்த கவுண்ட்டர் கல்ச்சர்க்காரர். மட்டுமல்ல அந்த மாவோயிஸ்ட்டு பத்திரிகையின் ஆசிரியர் குழுவில்கூட இருந்தவர். இந்தப் பின்னணி காரணமாகத்தான் அவரால் சாதாரண கவுண்டராய் இருக்க முடியவில்லை. கலாபூர்வமாகவும் ஆழமாகவும் வாழ்க்கையைப் பல அடுக்குகளில் பார்க்கவும் அவரால் முடியாமல் போவதற்கும்கூட இந்த அரசியல் பிரச்சாரப் பின்னணியின் பாதிப்பு காரணமாக இருக்கலாம். ஆக பெருந்தகை பெருமாள்முருகன் அவர்கள் வினவுக்கு ஜென்ம வைரியான எதிரணியைச் சேர்ந்தவர். ஆகவேதான் அவர் பிரச்சனை வினவு ம.க.இ.கவுக்குப் பொருட்டாகவே இல்லை. உலகத்தின் அதி முக்கிய பிரச்சனையான, பட்டரை அய்யங்கார்கள் பல்லக்கில் தூக்குவதற்கெதிராய் கிளர்ந்தெழுந்து ஶ்ரீரங்கத்தையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்மனார் புரட்சிக்காரர்.

புரட்சியால் உலகை உய்விக்க வந்த இவர்களே இப்படி இருந்தால் இனி எழுதுவதில்லை என முடிவெடுப்பதைத் தவிர எழுத்தாளர் வேறென்ன செய்வார் என்கிறீர்களா இல்லை, எல்லாம் முடிந்து அஸ்தி கரைக்கையில் ஒப்புக்கு ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே ஸ்டாலின் அதனால் யாருக்கு என்ன பயன், தானும் குரல்கொடுத்ததாய் அவர் சொல்லிக்கொள்ளலாம் என்பதைத் தவிர என்கிறீர்களா. ஸ்டாலினுக்குப் போடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் https://www.facebook.com/MKStalin/posts/401564550003421:0 இந்த அறிக்கை எவ்வளவு பெரிய உலக சாதனை. எழவு நமக்குதான் எதுவும் தெரியவில்லை. கமெண்ட் போட்டவர்களுக்கு, தளபதிக்கு வைத்த கட்டவுட்டில் தம் முகத்தையும் சேர்த்துக்கொண்டுவிட்ட மகிழ்ச்சி. மாதொருபாகனாவது மண்ணாங்கட்டிசோகனாவது.

ஏதோ ஒரு பிராமணப் பிள்ளைப்பூச்சி எழுத்தாளரில்லை பெருமாள்முருகன். இந்த அளவு அரசியல் தெளிவும் பின்னணியும் இருக்கக்கூடிய ஆள், மிரட்டலுக்கு எதிர்த்து நிற்கவில்லையே என்பதுதான் என் ஆதங்கம். அந்த ஆதங்கமே பலவிதமாய் அவரை சீண்டிப் பார்க்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்கிற ஆதங்கத்தில் யாழ் நூலகத்துக்கு அருகில் வெறும் ஏழுபேர் நின்று தங்கள் கைகளைக் கயிற்றால் பிணைத்துக் கட்டிக்கொண்டு போராடினார்களே  அது போல. அவர்களுக்குத் தெரிந்தது பேனர் பிடித்து போட்டோ எடுத்து FBயில் போட்டுக்கொள்வது. எனக்குத் தெரிந்தது எழுத்து. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பெரிய பிரையோஜனமும் இல்லை. அதற்காக கையைப் பிசைந்துகொண்டு சும்மாயிருக்க முடியுமா என்ன.