Tuesday, January 20, 2015

சரியும் தப்பும் சரியா தப்பா

சாரு நிவேதிதா என்பவர், சாரு என்று குறிப்பிட்டுப் பேசக்கூட அருகதையில்லாத ஆள்தான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இவ்வளவு கலாட்டாவுக்கும் இடையில், இருந்த இடத்திலேயே இருக்கிறாரேயன்றி நகரக்கூட இல்லை என்பது அப்பட்டமாய் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. http://youtu.be/aG0pKCha9NE 

ஆயிரம் பல்டி அடித்தவர். நயாபைசாவுக்குக்கூட நம்பகத் தன்மை இல்லாத நபர்தான் சாரு. அவரது கருத்து சரியோ தப்போ ஆனால், மாதொருபாகன் குப்பை என்றதையோ லஜ்ஜாவைக் குப்பை என்றதையோ செருப்பால் அடிப்பேன் என்றதையோக்கூட திரும்பப் பெறவில்லை. என்னுடைய கூட்டத்தில், என்னைப் பேசவே விடாமல் திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தை வைத்து நோண்டிக்கொண்டு இருந்தால், 'செருப்பால் அடிப்பேன்' என்று வாயால்தானே சொன்னார் சாரு. நான் அடிப்பேன். ஓத்தா என ஆரம்பித்து வண்டை வண்டையாய்த் திட்டியடி அடிப்பேன். நீங்கள் கும்பலாக சேர்ந்து என்னைத் திருப்பி அடித்தால் வாங்கிக்கொள்ளவும் செய்வேன். வலித்தால் அழக்கூட செய்வேனாய் இருக்கும். ஆனால் களத்தைவிட்டு ஒருபோதும் பெருமாள்முருகன் போல ஓடமாட்டேன். அப்படி இப்படி அசைவேனாய் இருக்கும். சண்டையின்போது கொஞ்சம் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நகர்வது சட்டத்துக்கு உட்பட்ட கூறுதானே. 

சாரு முன்னால், கொந்தளித்துக் கூப்பாடு போட்ட முற்போக்கு சக்திகள்போல,  திருச்செங்கோட்டிலோ நாமக்கல்லிலோ கூடிய மதவாத சாதிக் கும்பல், பெருமாள்முருகனிடம் இந்த அளவுக்காவது, நேரடியாய் நெருங்கி வந்து கொந்தளித்ததா. அப்படி நடந்தது என்பதுபோல் பெருமாள்முருகனின் பேச்சுக்களிலோ அல்லது அவரைச் சார்ந்தோர் வாயிலாகவோக்கூட ஏதாவது பதிவாகியிருக்கிறதா. அவர் வீட்டுக்கு ஒரே ஒருமுறை இரவு பத்து மணிக்கு வந்து புத்தகத்தைக் காட்டி விளக்கம் கேட்டார்கள் என்றுதான் அவரே சொல்கிறார் http://youtu.be/Oe-f20iMcI8. வினவு ம.க.இ.க கும்பலுக்குப் பிடித்தது வீடுபுகு விழாவுக்கு விடியற்காலை முகூர்த்தம். மதஜாதியவாதிகளுக்குப் பிரியமானது இரவு. நக்ஸலைட்டுகளுக்கும் இந்துத்துவர்களுக்கும் இடையில் இந்த வித்தியாசம்கூட இல்லாவிட்டால் எப்படி? வினவு ம.க.இ.க கும்பல், தமக்கோ அல்லது தமது கொள்கைக்கெதிராகவோ பெருமாள்முருகன் நடந்துகொண்டு இருந்தால், இந்த மதவாத சாதியவாத கும்பல் அளவுக்கு கன்னியமாய் நடந்துகொண்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நியாயமாகச் சொல்லுங்கள். நிதானமாக யோசித்துச் சொல்லுங்கள்.

இந்து முன்னணி, லீனா மீது போலீசில் புகார் கொடுத்ததற்கு எதிராய், லீனாவின் ’ஆபாசமாய் மொக்கை அரசியல் கவிதை’ எழுதும் உரிமைக்காக அ.மார்க்ஸ் நடத்திய கண்டணக் கூட்டத்தில், கார்ல் மார்க்ஸைக் கேவலமாய் எழுதிவிட்டார் என்பதற்காக, ம.க.இ.க. வினவு கும்பல் நடந்துகொண்டதைப் போலவா அராஜகமாய் பெருமாள்முருகனின் எதிரணி நடந்துகொண்டது. இத்தனைக்கும் லீனா செய்த 'அவதூறு' கார்ல் மார்க்ஸுக்கு எதிராய். அவர் புனிதத்தைக் காக்க. முகம்மது நபிகளின் புனிதத்தைப் பேண, மத அடிப்படைவாதத் தீவிரவாதிகள் சார்லி ஹெப்டோவுக்கு பாடம் புகட்டியதைப் போல மகத்தான ஜனநாயகப் பண்புடன் வகுந்தெடுக்க ஆள் திரட்டி வந்தது ம.க.இ.க.

ஆனால், திருச்செங்கோட்டுக்காரர்கள் கொதித்தது எதற்காக? அவனையே அவன் பிறப்பையே கேள்விக்குறியாய் ஆக்கியதற்காக. இல்லையில்லை  நீங்கள் தவறாய் புரிந்துகொண்டுவிட்டீர்கள். உங்களைத் தேவடியாள் மகன் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை, இப்போதிருக்கும் பெண்கள் எவரையும் நான் அவதூறு செய்யவுமில்லை. 60 - 70 வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு வழக்கம் இருந்தது. அதில் உன் தாத்தாவோ அல்லது தந்தையோகூட இப்படிப் பிறந்திருக்க சாத்தியமுண்டு. உன் பாட்டியோ தாயோக்கூட இப்படி இருந்திருக்க வாய்ப்புண்டு என்று வாய்மொழியாய் கேள்விப்பட்டதை வைத்துதான் எழுதியிருக்கிறேன். இது வெறும் கதைதான். இது இப்போது நடக்கிறது என்று நான் எங்குமே குறிப்பிடவில்லை என்று விளக்கமளிக்கிறார். இரவு பத்து மணிக்குக் கதவைத் தட்டியவர்கள். கிட்டத்தட்ட சமாதானமாகித்தானே போய்விட்டார்கள் என்று கூறுகிறார். தினம் தினம் நாவலின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்கிறார்கள் என்கிறார். செய்யட்டுமே. இது என்ன பெரிய கொலையா. எதிர்ப்பைக் காட்ட எரிப்பது நம் திராவிட மரபுதானே. எத்தனை எரித்திருக்கிறோம், பஸ்ஸும் காரும். பத்திரிகை அலுவலகமுமாய். உள்ளே ஆட்களை மாணவிகளை வைத்தேகூட எரித்திருக்கிறோமே. குடிசைகளைக்கூட விட்டுவைப்பதில்லையே தாய் தமிழகத்தில். அதையெல்லாம் ஒப்பிடும்போது ஓரிரு புத்தகங்களை எரிப்பது  எப்படி தமிழ் தேசத்தில் வன்முறையாகும். பெரியார் எரித்திருக்கிறார். கருணாநிதி எரித்திருக்கிறார். எரித்துவிட்டு நான் எரித்தது அரசியல் சட்டமல்ல அரசியல் சட்டம் அச்சிட்ட துண்டுத்தாள் அவ்வளவே என்று சொல்லவில்லையா.

மக்களைப் பற்றி எழுத நமக்கிருக்கும் கருத்துரிமைச் சுதந்திரம், நம்மை எதிர்த்து கண்டித்து துண்டறிக்கை வெளியிட அவர்களுக்கு இல்லையா? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மைகூட கருத்துரிமைச் சுதந்திரம் பற்றி, அரைமணி அவகாசத்தில் பக்கம்பக்கமாய் எழுதி ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துவிடும் கல்லூரிப் பேராசிரியர்களான நமக்கு ஏன் இல்லை. எதைப் பற்றியும் எழுதும் சுதந்திரம் எழுத்தாளனாய் எனக்கு வேண்டும். ஆனால் நான் எழுதியதை எதிர்க்கும் கண்டிக்கும் உரிமையோ சுதந்திரமோ எவருக்கும் கிடையாது என்பது, எழுத்தில் எந்த ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்தோமோ அதே ஆதிக்க மனப்பான்மையுடன்தான் எழுத்தாளர்களாக நாங்கள் இருக்கிறோம் இருப்போம் என்கிற ஆணவமல்லாது வேறென்ன?.

கழிசடை சாருவை ஒப்பிட்டால், தமது எழுத்துத் தவத்தால் உயர்ந்த சமூகக் நற் கருத்துக்களை உலகத்துக்கு வழங்கியவர். ஜாதீய அநீதிகளுக்கு எதிராய் எழுத்தை ஒப்பற்ற ஆயுதமாய் உயர்த்திப் பிடித்தவர் பெருமாள்முருகன். கழிசடை உட்கார்ந்திருந்தது கல்லுப் பிள்ளையார்போல். ஆனால் ஜலதோஷம் பிடிப்பதற்கு முன்பாகவே மூக்கைச் சிந்திக்கொண்டு ஓடிவிட்டார் கருத்து கந்தசாமி என்றல்லவா எள்ளி நகையாடப் போகிறது நம் இலக்கிய சரித்திரம். 

நம் தரப்பு மனிதாபிமானத்தின் பெயரால் ஒருபோதும் மனசாட்சியை மறைக்கப் பார்க்காதீர்கள். அதே மனிதாபிமானத்தைக் கொஞ்சமேனும் ஈவு இரக்கத்துடன் எதிராளியிடமும் காட்டுங்கள்.

இப்படிச் சிக்கலான தருணங்களில் சாரு போன்ற தப்பானவர்கள் சரியாய் நடந்துகொள்கிறார்கள். ஆனால் எப்போதுமே சரியானவர்களான நாமெல்லாம் ஏன் இப்படித் தடுமாறுகிறோம்.