Wednesday, January 21, 2015

தக்கார் தகவிலார்79-80ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மாணவனாய் இருக்கையில், காலரில்லாத கதருமில்லாத வெள்ளை ஜிப்பா வேட்டி உடுத்தி, ஜோல்னாப் பை அணிந்த இளைஞர்கள் இருவரை அவன் காண நேர்ந்தது. 19-20 வயதென்பது காலத்தின் கயிறுகள் சகல திசைகளிலிருந்தும் இழுத்து, வாழ்வைப் பாவைக் கூத்தாக்கிக் கொண்டிருந்த காலம். அவர்களிருவரும் அவனுக்குச் சற்றே மூத்தவர்களாய்த் தோன்றினர். அந்தப் பிரதேசத்துக்கே சம்மந்தமில்லாதவர்கள் பொலும் தோன்றவே, வகுப்புக்குப் போகாமல் வழ்க்கையைப் படிக்க நேர்ந்துவிட்டவன் ஆதலால் அவர்களைத் தூர இருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள், அவர்களைவிடவும் அமாஞ்சித் தோற்றம் கொண்ட மாணவர்கள் இருவரை அணுகுவதைக் கண்டான். அவனுக்கு அவர்களைப் பற்றிக் கொஞ்சம் லேசாய் பிடிபடத் தொடங்கிற்று. கொஞ்ச நேரத்தில் அவர்களைச் சுற்றி மெல்ல, சிறிய கூட்டம் சேரத் தொடங்கிற்று. கூட்டத்தின் விளிம்பில் சிலர் வந்து எட்டிப் பார்த்து அசுவாரசியமாய் அகன்றவண்ணம் இருப்பினும் மெல்ல மெல்ல கூட்டம் வலுக்கத் தொடங்கிற்று. வந்தவர்கள் இருவரும் மந்திர உச்சாடணம் பொல் வீரியத்துடன், அதே நேரம் கட்டுப்பாடாக சிலசமயம் கைகளைக் கட்டியும் பவ்விய தீர்க்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். அருகில் சென்றான். 

...தேசத்தின் எதிர்காலம் இளைஞர்களான நம் கையில்தான் இருக்கிறது. நமது பாரதத்தை வலிமையுள்ளதாய் ஆக்க விவேகானந்தர் கூறியதைப்போல நம் அற்பணிப்பும் சேவை மனப்பான்மையும் அவசியம். என்பது போல போய்க்கொண்டிருந்தது அவர்கள் பேச்சு. ஒரு இளைஞனின் கையில் துண்டறிக்கைகளும் படிவங்களும் இருந்தன. அவன் அவற்றை விநியோகித்தபடியே அவ்வப்போது பேசிக்கொண்டும் இருந்தான். கூட்டத்தில் இருந்த பையன்களில் ஒருவன், அருகில் ஆளற்றிருந்த வகுப்பறையில் உட்கார்ந்து படிவங்களை நிரப்பலாமே என்றதும் அந்த கும்பல் மிதந்தபடி வகுப்பறை நோக்கிச் சென்றது. அவனும் பின் தொடர்ந்தான். இளந்தாடி கதர் ஜிப்பா ஜோல்னாப்பை அணியத்தொடங்கி, நவீன நாடகக் குழுக்களில் சேர்ந்து முழுமூச்சுடன் இயங்கவும் தொடங்கிவிட்டிருந்த காலம். நவீன இலக்கியத்தின் நூல்கள் பரிச்சயப்பட்டுக்கொண்டிருந்த காலம். கதைகள் எழுதும் கனவு, ஸ்பரிச தூரத்தில் நனவாகிவிடக் கனிந்துகொண்டிருந்தது காலம். கபாலம் முழுக்கப் பெண்கள். ஆனால் நிறம் காரணமாய் பஸ்ஸிலும் ட்ரெயினிலும் லைப்ரெரிகளின் வாட்ச் மேன்கள் அறிவுஜீவி தடியர்களின் அருவெறுக்கவைக்கும் தொடுகைகள் அவனைத் தொடர்ந்துகொண்டிருந்தன்.. ஒரு மனம் எல்லாவற்றிலிருந்தும் விலகி தூர ஓடச் சொல்லி துரத்திக்கொண்டிருந்தது. இன்னொரு மனம் எதையும் எதிர்ப்பதில் சிலிர்த்து மயிர்க்கூச்செரிந்து திளைத்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சென்றமர்ந்து நீள மர பென்சுகள் மீது நான்கைந்து பேர் படிவங்களை நிரப்புவதில் மும்முரமாய் இருந்தனர். எட்டிப் பார்த்தான். 

ஹலோ நீங்க யாரு? 

நமஸ்காரம். நாங்க அகில பாரதீய வித்யார்த்தி பரீக்‌ஷித்ங்கற ஸ்டூடண்ட்ஸுக்கான அமைப்புலேந்து வந்து...

ABVPதானே.

படிவம் நிரப்ப உதவுவதில் மும்முரமாய் இருந்தவன் தலையை உயர்த்தி முகமலர்ந்தான். சிநேக பாவத்துடன் ABVP தெரியுமா என்றான் இவன் குர்த்தாவைப் பார்த்தபடி. 

அது மட்டுமில்லே அது யாரோட ஸ்டூடண்ட்ஸ் விங்குங்கறதும் தெரியும். இங்க என்ன புள்ள பிடிக்க வந்தீங்களா? 

பிரதர் நீங்க...

யோவ் நீ RSS தானேய்யா...

இல்லை பிரதர் நாங்க...

இத பார் உனக்கு மரியாதையா சொல்றேன். வந்த கையோட ஒழுங்கா திரும்பிப் போவணும்னா இப்பையேக் கெளம்பிடு. 

ப்ளீஸ் லிஸன் டு அஸ். 

கூடியிருந்த மாணவர்களில் அநேகமாய், பேசியதில்லை எனினும் அனைவருக்கும் அவனைத் தெரியும். வகுப்பின் உள்ளேயே போகாமல் கல்லூரிப் போட்டிகளில் கவிதை வாசிப்பவன். ரகளை என்று வந்தால் பஸ் மீது கல்லடிக்கும் கும்பலின் முதல் வரிசையில் நிற்பவன். கல்லூரி விழாக்களில் மேசைமீது மேசை போட்டு அதன்மீது நாற்காலி போட்டு சட்டையைக் கழற்றித் தலைக்குமேல் சுழற்றியபடி விசிலடிக்கும் பொறுக்கி. ஜோல்னாப்பையில் எப்போதும் இலக்கியப் புத்தகங்களுடன் திரிந்துகொண்டிருப்பவன். ஆர்ட்ஸ் பிளாக்கிலும் சயன்ஸ் பிளாக்கிலும் இருக்கும் இரண்டு பேரழகிகளின் சிநேகிதத்தைப் பெற்றவன். கல்லூரித் தோட்டத்தில் வியாசர்பாடிப் பசங்களுடன் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பவன் என எதில் வகைப் படுத்துவதென்றே தெரியாதபடிக்கு எதிரெதிர் மாணவ முடிச்சுகளில் எல்லாவற்றிலும் தென்படுபவன் - வகுப்பறை ஒன்றைத் தவிர, என்பதால் பழகாதவர்களுக்கும்கூடப் பார்வையளவில் தெரியும் எனவே, படிவத்தை நிரப்ப கூடிய கூட்டத்தில் ஓரிருவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தனர். 

மெல்ல வெளியிலிருந்து கருத்த நிற கட்டுமஸ்தான மாணவர்கள் சிலர் என்ன மச்சி எனிப் பிராப்ளம் எனக் கேட்டபடி எட்டிப் பார்க்கத் தொடங்கினர்.

அவர்களிருவரின் முகத்திலும் லேசான பயம் பரவத்தொடங்குவதைக் கண்டதும் உற்சாக மிகுதியில் அவன் குரல் உயர்ந்தது. 

ஏய் இப்ப இன்னா சொல்றே ங்கோத்தா டேரா தூக்கறியா இல்லே டாரா கிழியப்போறியா. இத என்னான்னு நெனச்சே. பச்சையப்பாஸ் DMKவோட கோட்டை. கொம்மாள ஒரு வார்த்தை  நீ யாருனு சொன்னா அவ்ளதான் நீங்க.

எட்டிப் பார்த்த நன்பர்களில் ஏய் யாரு மச்சி நம்ம ஏரியாவுல வந்து பிரச்சனை பன்றது. ஏய் இன்னா இன்னா வோணும் உனக்கு. தூக்கிடுவோம் என சவுண்டு விட்டதும் அவர்களிருவரும் வகுப்பறை மேசைகளின் மீதிருந்த பாதி நிரப்பிய நிரிப்பப்படாத படிவங்கள் துண்டறிக்கைகளை பரபரவென சேகரித்துக்கொண்டு  கிளம்பினர். 

குரல் கொடுத்தவன், அவர்களின் மீசை மழித்த முகங்களைப் பார்த்து, சுத்தமாகத் தப்பாய்ப் புரிந்துகொண்டிருந்தான். ஓமோவா மச்சி. ஏய் இன்னா சின்னப் பசங்ககிட்ட சில்மிசம் பன்றீங்களா என்றான். அவர்களிருவரின் முகத்திலும் காண நேர்ந்த பயம் கலந்த அவமானம் அவனிடம் கொஞ்சம் பரிதாபத்தை உண்டாக்கிற்று. இல்லையில்லை இது வேற மேட்டர். விடு மச்சி அவன்க வெளிய போனா போதும். 

இன்னோரு தடவை உங்களை இந்தக் காலேஜ் உள்ளையோ கேட்டுகிட்டியோ பார்த்தேன் இப்ப மாதிரி பேசிகிட்டு இருக்க மாட்டேன். ஆள் பிடிக்கணும்னா கோயில் கொளம்னு எங்கியாவுது போங்கடா. அரக்கப் பரக்கப் போய்க்கொண்டிருந்த அவர்களின் பின்புறத்தைப் பார்த்துக் அவன் கத்தினான்.

அயிரே உனக்கு இந்த வாய் கண்டி இல்லேனா உன்னை எப்பியோ காக்கா தூக்கிட்டு போயிட்ருக்கு மச்சி.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலேயே பங்காளியாய் ஐந்தாண்டுகள் ஆற அமர சாவகாசமாய் சுகவாசியாய் இருந்து தன் சகவாசத்தை முறித்துக் கொள்வதற்குள் பச்சையப்பன் கல்லூரியில் அகில் பாரதீய விஸ்வ ஹிந்து பரிக்ஷித் கால் வைத்ததா கிளை விரித்ததா என்கிற தற்போதைய நிலவரம் அவனுக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளும் அக்கறையும் இல்லை. எந்தப் பின்னனியும் பின்பலமும் இல்லாத அவனது மதிய உணவைப் பெரும்பாலும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீலாகப் போகிறவனோ அல்லது செளகார்பேட்டையில் கெய்த்தான் ஃபேன் டீலராயிருந்த ஆந்திரக் குடும்பத்தின் நீலக்குழந்தையாய் பிறந்து 40வயதிலேயே இறந்துவிடப் போகிறவனோ என யாரோ ஒருவர் ஊட்டி வளர்த்த ஊரார் பிள்ளையான ஒரு சாதாரண மாணவனாய் அவனுக்குத் தெரிந்த அளவிலான மத அடிப்படைவாதத்தை அவனிருந்த இடத்துக்குள் முளைவிட முடியாத படிக்கு எடுத்த முதிர்சியற்ற முயற்சி என்பதைத் தாண்டி இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.


85-86ஆக இருக்கலாம். ஏதாவதொரு பிலிம் சொசைட்டியின் மாலைக் காட்சியோ அல்லது நண்பர்களுடனான இலக்கிய அரட்டையோ முடித்து எப்போதுமே இரண்டாவது ஷோ இங்கிலீஷ் படம் பார்க்காது வீடுவந்து தூங்கி ஒன்பது மணிக்குமுன் விழித்துப் பழக்கமில்லாதவன் அன்றைக்குப் பார்த்து அதிசயமாய் காலையில் எழுந்துவிட்டிருந்தான். கேகே நகர் குடியிருப்பில் அவனிருந்த வளாகத்திற்கு எதிர்ப்புற வளாகத்தில் திடீரென்று சப்பாத்திக் கள்ளியாய் முளைத்திருந்த காக்கிக் கால் சாராய்கள் கழிகளை வைத்து உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காட்சி கண்ணில் பட்டது. விறுவிறுவென 13/7லிருந்து கீழிறங்கிப் போனான்.  

வெளியாட்களான நீங்கள் சீருடைகளுடன் எப்படி அரசுக் குடியிருப்புக்குள் பயிற்சி செய்யலாம். 

இல்லை நாங்கள், - குடியிருப்பு ஆளைக் காட்டி - இவர் அழைப்பின்பேரில் வந்தவர்கள் என்றான் தலைவன் போல தோற்றமளித்த நடுத்தர வயதுக்காரன். 

அது கிறிஸ்மஸ் சமயம். சற்றுத் தொலைவில் வண்ண நட்சத்திரம் தொங்கிக்கொண்டிருந்த குடியிருப்பு அடுக்கின் அருகில் சென்றான். அங்கிருந்த, தூக்கம் கலைந்தும் சோம்பல் கலையா இளைஞர்களிடம் இவர்களைப் பற்றி விளக்கி துணைக்கு வரச்சொல்லி அழைத்தான். சாருவுக்கு எதிராய் புக்ஃபேரில் நிகழ்ந்த கலாட்டாவின்போது, வாய் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்குமாய் கிழியும் யுவகிருஷ்ணாவும் கே என் சிவராமனும் செய்துகொண்டு இருந்தார்களே அதுபோல, அந்த சிலுவைகள் மூஞ்சை மூஞ்சைப் பார்த்துக்கொண்டு இருந்தனவேயன்றி இடத்தைவிட்டு நகரக்கூட இல்லை. அவன் தோல்வியுடன் தனித்துத் திரும்பி வருவதைக் கண்டு தலைமைக் காக்கி டவுசர் தெனாவட்டாகப் பார்த்து ஏளனமாய் சிரித்தது.

உங்களை இறுதியாய் எச்சரிக்கிறேன். நீங்கள் நிறுத்தவில்லை என்றால் போலீசில் புகார் செய்யவேண்டிவரும் என்றான். 

காதிலேயே வாங்கிக்கொள்ளாது தங்கள் காரியமே குறியாய் கண்டுகொள்ளாது அலட்சியப் படுத்தினார்கள்.போலீசுக்குப் போனான். கேகே நகர் ஏட்டுக்கு அவன் தீவிரமாய் ஏதோ சொல்கிறான் என்று மட்டும் தெரிந்ததேயன்றி, என்ன சொல்கிறான் என்று புரியவேயில்லை. அப்போது பார்த்து உள்ளே நுழைந்த SIயிடம் விஷயத்தைக் கூறினான். மெளனமாய்க் கேட்டுக் கொண்டவர், ஆரம்பத்திலிருந்து அவனிடமே விசாரணையை ஆரம்பித்தார்.யார் அவங்கRSS சார்அப்பிடின்னா என்றார் திராவிடத் தமிழனாய் தோற்றமளித்த SI.மண்டைக்காடு கலவரம் நடத்தினாங்களே அந்த கும்பல் சார்


இங்க என்ன பண்றாங்கஎக்ஸர்சைஸ் பண்றாங்கஎக்ஸர்சைஸ்தானே பண்றாங்கஇல்லை சார் கொம்பு வெச்சிகிட்டுப் பண்றாங்க சார்ஏதும் பிரச்சனை பண்றாங்களாஇல்லை சார் கும்பல் சேந்து பெருசானா பண்ணுவாங்க சார்ஏங்க இதையெல்லாம் காரணமாச் சொல்லி எப்படிங்க நடவடிக்கை எடுக்க முடியும்சார் அவங்க பயிற்சி பண்றது கவர்மெண்ட் குவார்ட்டஸுல சார்அதனால என்னங்க அவங்களால பப்ளிக்குக்கு எதாவது லா அண்ட் ஆர்டர் பிராப்ளம் வந்துதுனா சொல்லுங்க நடவடிக்கை எடுக்கறேன்டிரஸ்ட்பாஸிங் சட்டப்படி சரியா சார்...நீங்க நடவடிக்கை எடுக்கலேனா எங்க அரசுக் குடியிருப்புல இது எப்படி நடக்கலாம்னு கமிசனர் ஆபீசுக்குப் போயி லெட்டர் குடுக்கிறதைத் தவிர எனக்கு வேற வழியில்லேநீங்க யாரு எங்க வேலை பாக்கறீங்க.

கூறினான்.

ஏட்டையா இவுரு கூட பொயி என்னான்னு பார்த்துட்டு வாங்க. 

மறுநாளிலிருந்து, கால்சாராய்கள் வளாகத்துக்கு வெளியில் பொதுச் சாலையைத் தாண்டி இருந்த காலி இடத்தில் கழி சுற்றத்தொடங்கின.

90-91ஆக இருக்கலாம். தேவர் பிரிவ்யூ தியேட்டரில் அலையன்ஸ் பிரான்சேஸ் மற்றும் ஐசியே ஃபோரம் இணைந்து நடத்திய பிலிம் சொசைட்டி ஒன்றால் உலக மர்மப் படங்கள் வரிசையில், திரையிடப்பட்டது  அந்த நாள் திரைப்படம், 

கடைசி வரிசையில் அலையன்ஸ் நன்பர்களுடன் அமர்ந்து படத்தை சீனுக்கு சீன் நக்கலடித்து குப்பைக்கு என்ன கொண்டாட்டம் என்கிற மனநிலையில் கலாட்டா செய்து கொண்டிருந்தான். தியேட்டரில சிலர் சங்கடமாய் நெளிந்தனர். ஓரிருவர் அவன் அமர்ந்திருந்த வரிசைவரை வந்து நோட்டம் பார்த்துவிட்டுச் சென்றனர். அதைக் கவனித்த புத்திசாலி நண்பர்கள் படம் முடிவதற்கு முன்பாகவே தனித்தனியாய் கழன்று கொண்டனர். கடைசி வரிசை என்பதால், படம் முடிந்து மொத்த கும்பலும் வெளியேறக் காத்திருந்து அவன் வெளியில் வந்தவுடன், ஏறக்குறைய இருபது பேர் சுற்றி வளைத்துக் கொண்டனர். எண்டர் த டிராகன் புரூஸ்லியாய் தான் தனித்து விடப்பட்டதை உணர நெடுநேரம் பிடிக்கவில்லை. சகல கெட்ட வார்த்தைகளும் வீசப்பட்டன. மூக்கருகில் கைகள் வந்துவந்து போயின. அவன் படித்தவனா. சினிமாவின் மீது உண்மையான பிடிப்புள்ளவ்ன் எவனும் கீழ்த்தரமாய் இப்படி நடந்துகொள்ள மாட்டான். பிடிக்காவிட்டல் எழுந்து சென்றிருக்க வேண்டும். ஆபீசில் வேலை செய்பவனா இல்லை தெருப் பொறுக்கியா. இதில் எவனோ ஒருவனுக்கு அவனை அடையாளம் வேறு தெரிந்துவிட்டிருந்தது. இப்படிக் கேவலமாய் நடந்து கொள்பவன் எப்படி எழுத்தாளனாய் இருக்க முடியும் என்பதையும் அர்ச்சனையில் சேர்த்துக் கொண்டான். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அடி வெளுத்து வாங்கிடும் அளவுக்குக் கும்பலிடம் கொந்தளிப்பு. எப்பொதும் பேச ஆரம்பித்த இரண்டாவது வாக்கியத்திலேயே சமநிலை இழந்து கோர்வையின்றி உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தை தடித்துவிடும் அவன் அன்றைக்கு கரணம் தப்பினால் மரணம் என்பதால் எப்போதெல்லாம் கோரஸ் குலவை ஓய்ந்ததோ அப்போதெல்லாம் அவன் அமைதியாகப் பேசினான். தன்னுடைய ஆபாசமான கன்னியமற்ற நடவடிக்கை கலைக்கான அறிவார்த்தப் போராட்டம் என்றான். ஒருவனுக்குக் கோபம் குடுமியை ஆட்டத்தொடங்கிற்று, கையிலிருந்த ஹெல்மெட்டை ஆட்டியாட்டி பாய்ந்து வந்தான். இவன் வெகுதூரம் செல்பவனாய் இருப்பான் எனக் கனித்து அவனை ஒதுக்கிவிட்டு, கும்பலைப் பார்த்துப் பொதுவாய்க் கூறினான். எப்படி இந்தப் படம் உலக வரிசைப் படங்களில் ஒன்றாய் திரையிடப் படலாம் என்பதன் விமர்சனத்தின் தன் பாணியிலான வெளிப்பாடே படத்தினிடையே தான் செய்த சேஷ்ட்டைகள் என்றான். ரோஷமானிலிருந்து சுட்ட மொக்கையை எப்படி உலகப் படவரிசையில் சேர்க்கப் போயிற்று. இது உலகப் படமளவுக்கு உயர்ந்தது எனில் இதற்கு முன்னால் போட்ட பிரெஞ்சு மேதைகளின் படங்களை அவமானப்படுத்துவதாய் ஆகாதா என்றான். அதை விவாதிக்க இதுதானா முறை? அவன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் அங்கிருந்து அகலவிடமாட்டோம் என மிரட்டில் கூவிற்று குறையத் தொடங்கியிருந்த கும்பல். தனக்கொன்றும் பிரச்சனையில்லை இதற்கு முன்தினம் திரையிடப்பட்ட க்ளூஸோ படம் எப்படி கிளாசிக் என்றும் அந்த நாள் படத்தை அவர் படத்துடன் திரையிடுவதே அவரை அவமானப்படுத்துவதாகும் என்றும் அப்போதே இதைப் பற்றித் தர்க்கிக்க தான் தயார் என்றும் அமைதியாய்க் கூறினான். ஏறக்குறைய 45 நிமிடங்கள குய்யோ முறையோவெனக் கூச்சலிட்டுக்கொண்டிருந்த கும்பல், முணுமுணுத்தபடியும் திட்டியபடியும் ஒருவழியாய்க் கலைந்தது. தன் மீது ஒரு கீறல் கூட விழாது அவன் தனது M 80ல் என்றும்போல் இரண்டாவது ஆட்டம் பார்க்க அன்றும் தேவியில் ரிலீசாகியிருந்த ஏதோ ஒரு ஹாலிவுட் படத்துக்குச் சென்றான் 

அன்று கொந்தளித்தோரில் பலர் இன்று ஃபேஸ்புக்கில் இருப்பதற்கும் நடந்ததை நினைவுகூறவும்கூட வாய்ப்பிருக்கிறது. 

புக்கு தேத்தும் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள், ’தேவடியாள் மகனே’ என்று அடி வயிற்றிலிருந்து பலமுறை ஆசீர்வதிக்கப்பட்டவனின் இந்தத் தகவல்களைக், கர்ண பரம்பரை நாவல் படைக்கப் பயன்படுத்திக்கொண்டு டாட்டா பிர்லா நல்கைகளுக்குக்குக் கள ஆய்வு மேற்கொண்டதாய் கணக்கெழுதிக்கொள்ளலாம்.

 இன்ஸ்டண்ட் கிச்சிடியாய் கிண்டி, பெரிய சைஸ் புக்கு தேத்த விழையும் எழுத்தாளர்கள், இந்த  இணைப்பில் காணப்படும் நிஜ வாழ்வின் நிகழ்வுகளை, அவரவர் வேலை செய்யுமிடத்தைக்கூட அறிவித்துக்கொள்ளாத புத்திசாலி தைரியவான்கள் நிறைந்த உலகில், ஏ ஆர் ரஹ்மானே சொல்லிக்கொண்டதுபோல். இசை உருவாக்கத்துக்குப் பயன் படுத்தும் மென்பொருட்களாய், இந்த உபரித் தகவல்களை, உபயோகித்துக் கொள்ளலாம்.
http://www.maamallan.com/2011/04/blog-post_9579.html

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்