Monday, February 2, 2015

வக்கீல் கிரிமினல்கள்

எக்மூர் கோர்ட்டுக்கான பார் கவுன்சில் தேர்தல் கொண்டாட்டத்தில் வன்முறை. வக்கீல் கொலை. பெண் வழக்குரைஞரும் ரெளடியும் கைது

***

இதைவிடப் பிரமாதமான தெலுங்கு டப்பிங் படத்துக்கான ஒன் லைனரைப் பார்க்க முடியுமா. 

20 ஓட்டில் தோற்பது பெரும் துரதிருஷ்டம்தான். கொண்டாடுவதைக் காணக் கடுப்பாய் இருக்கும்தான். அதற்காக கத்தி கட்டை கற்களுடன் கொலை செய்யவும் தயாராகிவிட்டவர்கள் வக்கீல்களா கிரிமினல்களா.


போலீஸ் இல்லடா நான் பொறுக்கி என்கிற டயலாக் ரொம்பப் பிரபலம். அது டப்பிங் படம்கூட இல்லை. நேரடியான தமிழ்ப் படம். அந்த வசனமும் யாரோ துணை நடிகர் சொல்வதன்று. படத்தின் கதாநாயகன் சொல்வது. அந்த வசனம் அப்போதுதான் முதல் முறையாக சொல்லப்பட்டதும் இல்லை. ஏற்கெனவே, வேறொரு படத்தில் சொல்லப்பட்ட பொறுக்கி போலீஸ் என்கிற வசனமும் பார்வையாளர்களிடம் பலத்த கைத்தட்டலைப் பெற்றதுதான். இதற்கெல்லாம் போலீசிடம் இருந்து சிறிய முணுமுணுப்புகூடக் கிளம்பியதாக நினைவில்லை. ஒரு நல்ல போலீசைக் காட்டிவிட்டு, ஒன்பது போலிஸ் அதிகாரிகளை அடியாளாகக் காட்டி, மத்தியான சாப்பாட்டில் கறி போட்டுவிட்டால் போதும், சினிமா ஃபைட்டர்கள்கூட நரம்பு நாராயணனான நம் ஹீரோவைப் பற்றி புகார் கூறப்போவதில்லை. போலீசை இப்படியெல்லாம் காட்டலாமா என்று எவன் கேட்கப் போகிறான். கோர்ட்டுகூட போலீஸ் மானம் காக்க முன்வராது. குறைந்தபட்சம் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இருப்பதைப் போல, ஒரு வெற்று அறிக்கைவிடக்கூட, போலீசுக்கு என்ன சங்கமா இருக்கிறது.


சினிமா டயலாக்தானே எவன் பேசினாலும் தியேட்டரில் கேட்கும்தானே என்று எந்த சினிமாக்காரனும் இந்த ’பொறுக்கி’ வசனத்தை, கருப்புக் கோட்டணிந்த எந்த எக்ஸ்ட்ராவுக்கும் கனவிலும்கூடக் கொடுக்கத் துணிய மாட்டான். தில் இருந்தால், ’நாங்க வக்கீல் இல்லடா பொறுக்கிங்க’ என்று இரண்டு அடியாள் பாத்திரங்கள் சொல்வது போல் ஒரு டயலாக்கை எந்த சினிமாக்காரனாவது வைத்துப் பார்க்கட்டும். அவ்வளவுதான் சென்னையே மூச்சடங்கி நின்றாக வேண்டும். படத்தைத் தடை செய்தால்தான் ஆயிற்றென்று பொறுக்கி வக்கீல்களெல்லாம் கும்பலாய் ஜட்ஜை சுற்றிக்கொள்வார்கள். ஏதோ கலாட்டா இன்று கோர்ட்டு நடக்காது எனத் தெரிந்ததும் நம் மரியாதையை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று, தொழில்முறை வக்கீல்கள் வீட்டுக்குக் கிளம்பிடுவார்கள். கோஷமிடும் கும்பலை, சேம்பரில் அமர்ந்தபடி எவ்வளவு நேரம்தான் தாக்குபிடிக்க முடியும். வசனம் படம் என எல்லாவற்றுக்கும் நீதிபதி இடைக்காலத் தடையாவது விதித்துதான் ஆக வேண்டும், இல்லையென்றால் வீட்டுக்குப் போகாமல் சேம்பரில்தான் அன்றிரவைக் கழித்தாக வேண்டியிருக்கும். இது இன்-டோர். அவுட்-டோரில் கல்வீச்சு பஸ் எரிப்பு அமர்க்களமாய் நடந்துகொண்டிருக்கும். கிளம்பி வந்த வேலையை மறந்துவிட்டு, பிளந்த வாய்மீது கைவைத்து அதிர்ச்சியும் கிளுகிளுப்புமாய் எவனாவது இதை திருட்டு விசிடியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். கருப்பு வெள்ளை உடையணிந்த களப்போராளி எரிந்த கல் நெற்றிப் பொட்டில் தாக்கி வேடிக்கை பார்த்த அப்பாவி ஸ்பாட்டிலேயே செத்துப் போவான்.

இந்த வக்கீல்சார் தான் கல்லெரிந்தது என்று கருப்புடைக்கு எந்த இழுக்கும் ஏற்பட்டுவிடாதவாறு காக்கி உடை பேப்பரில் கைது செய்து ஜட்ஜ் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும். கருத்துரிமைக் காக்கக் கருப்புடை அணிந்தவரோ, தாம்தான் பகத்சிங்கின் மறுபிறவி என்பதுபோல், மனதுக்குள் அடுத்த பார் கவுன்சில் தேர்தலுக்கு வேட்புமணு தாக்கல் செய்தபடி, மார் நிமிர்த்தி நிற்பார். என்ன இருப்பினினும் சமூகப் பொறுப்புள்ள வக்கில் தொழில் பார்க்கிறவர் என்கிற தகுதியில், கல்வீசி மாங்காய் அடிப்பதுபோல் மனித உயிரைப் பறித்தவர், சொந்த ஜாமீனில் விடப்பட்டுவிடுவார்.

கஸ்டம்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து, நட்ட நடு ஹாலில் சூப்பிரெண்டெண்டின் நெஞ்சில் கராத்தே உதை விட்டது ஒரு கிரிமினல். அரசு அலுவலகம் என்பதால் சட்டப்படி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. கைது செய்து அழைத்துப் போய் நீதிபதி முன் நிறுத்தப்பட்டார் மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் பொறுக்கி. வக்கீல் என்கிற காரணத்தால் அவர் சொந்த ஜாமீனில் விடப்பட்டார். இது நிகழ்ந்தது எங்கோ இல்லை. இதே சென்னையில் இருக்கும் சுங்க இல்லக் கட்டிடத்தில்தான். கைது செய்து அழைத்துச் சென்றதும் இதே எக்மூருக்குதான். இது நடந்து நெடுங்காலம் ஆகிவிடவில்லை. அந்த கஸ்டம்ஸ் சூப்பிரெண்டெண்ட் அந்தப் பொறுக்கியின் கொலைவெறிக்கு ஆளாகும்படி அப்படி என்னதான் தவறிழைத்துவிட்டார். அது சம்மந்தப்பட்ட ஃபைலை, அதன் விருப்பப்படி டீல் செய்யாமல் சட்டப்படி நடந்துகொண்டதுதான் அவர் செய்த மாபெரும் குற்றம். எதிர்காலத்தில் கிரிமினல் வக்கீல்களைக் காட்டிலும் வக்கீல் கிரிமினல்கள் அதிகமாவிடக்கூடும்.

இந்த அல்ப சிங்கி வக்கீல் கிரிமினல் முதல், திருச்செங்கோட்டு மதஅடிப்படை மற்றும் சாதியவாதிகள் உட்பட, IS அல்காய்தா வெறியர்கள் வரை, அடுத்தவரை மிரட்டிப் பணிய வைத்தலே அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழிமுறை. பயந்து பணிவதல்ல, போடாங்க மயிறு என்று எதிர்த்து நிற்பதொன்றே இவர்களுக்கு ஆற்றவேண்டிய எதிர்வினை. இதற்குக் குறுக்கு வழியோ மாற்று வழியோ கிடையாது.

இதையெல்லாம் கண்ணெடுத்தும் பாராது, வாயையும் பொத்திக்கொண்டு, மனித உரிமை வக்கீல்கள், காஷ்மீரில் ராணுவம் அத்துமீறி அராஜகம் செய்கிறது என்று அறிக்கை விடுவார்கள். போலீசையும் ராணுவத்தையும் திட்டினால் எவன் கேட்கப் போகிறான். பொறுக்கிகள்  அப்படியல்ல, கோர்ட் வளாகத்திலேயே கத்தியும் கையுமாய் திரிந்துகொண்டிருப்பவர்கள். மனித உரிமையானது பொறுக்கிகளின் ஏகபோக உரிமையாகிவிட்ட காலம் இது என்பதை நன்கறிந்த முதிர்ச்சியே மனித வழக்குரைஞர்களின் அமைதிக்குக் காரணம்.

இரண்டு பார்கவுசில் இரண்டு கோர்ட்டு இரண்டு ஜட்ஜு இரண்டு சட்டம் கொண்டு வருவது ஒன்றே இதற்கான தீர்வு. 

ஒன்று தொழில்முறை வக்கீல்களுக்கானது. இன்னொன்று தொழில்முறை பொறுக்கிகளுக்கானது என அனைத்தையும் இரண்டிரண்டாய் வைத்துக் கொள்ள வேண்டியதுதான் இனி.

முதுகைக் காட்டிக்கொண்டிருக்கிறோம் என்கிற தைரியத்தில், எவ்வித நல்கை ஆதாயப் பின்புலமுமில்லாத நான் அப்பாவியாய் ஏதோ ஒரு அறச்சீற்றத்தில் எழுதிவிட்டேன். அலுவல் ரீதியாய் அடிக்கடி எல்லா கோர்ட்டுக்கும் போய்வரவேண்டி இருக்கிறது. ஏற்கெனவே இதைப் போன்றதொரு பொறுக்கி வக்கீல் சார் ஒருவர், அலுவலக வாயிலில் வைத்து, நானெடுத்த ஃபோனில் தன் முகம் பதிவாகாதவாறு தன் முகத்தைக் தனது கைபேசியால் மறைத்துக்கொண்டு,  மகா தைரியமாய் என்னை வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். இவர்களது தலைமை அதிகாரியை CBIயில் மாட்டிவைத்ததே நான்தான் இவர்களெல்லாம் எம்மாத்திரம் என்று போலீசிடம் என் காதுபடக் கூவிவிட்டுச் சென்றிருக்கிறார். கடத்தலை எதிர்த்துப் பணி செய்யவேண்டியது நம் கடமை. கடத்தல்காரனின் மிரட்டலை எதிர்ப்பது மடமை அவன் எவ்வளவு கீழேயும் இறங்கித் தாக்குவான் என்பதே எல்லோரும் அருளிச் செய்யும் அறிவுரை.


அசம்பாவிதம் எதுவும் நேராமல், உமாசங்கர் IAS, ஏசப்பாவிடம் வைத்திருப்பதைப் போல், எல்லாம் அந்த ஆண்டவன் காப்பாற்றுவான் என்கிற அசட்டு நம்பிக்கைதான் என்னையும் காப்பாற்ற வேண்டும்.


இளமையில் கல் முதுமையில் மண். மாணவனாய் இருக்கையில் தொடங்கியதைத்தான் படித்துப் பட்டம் பெற்றதும் அமல்படுத்துகிறார்கள்.
எங்காள் பேர்லதான் காலேஜே இருக்கு எங்களை எவனும் அசைக்க முடியாது என்று ஒரு கும்பல். பெரும்பான்மை அரபு நாடுகள் இன்னும் இஸ்ரேலை அங்கீகரிக்காததைப் போல இன்னமும் அதை மெட்ராஸ் சட்டக் கல்லூரி என்றுதான் நாங்கள் அழைப்போம் என்று போஸ்டர் அடிக்கும் இன்னொரு கும்பல். நாட்டைப் போலவே, வளாகத்திலும் சட்டமன்று சாதிதான் ஆதாரம்.

அடித்தவன் மீதும் அடிபட்டவன் மீதும் படிக்கும்போதே கிரிமினல் கேஸ்கள். அரசியலில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதியே கிரிமினல் வழக்குகள் என்றாகிவிட்ட நிலையில், ஏதாவதொரு அரசியல் கட்சியில் பதவி உறுதி.

http://www.frontline.in/static/html/fl2525/stories/20081219252502700.htm

நான் ஒன்றும் கடவுளில்லை. என்னால் முடிவது உன்னால் முடியாதா என நமக்கு உண்மையான உத்வேகம் கொடுப்பவர்கள் தம் வாழ்வில் சாதித்துக் காட்டிய இதுபோன்ற உண்மையான போராளிகள்தாம். 

"Never be afraid. Ultimately, you can’t die every day." - Justice (Retd) Chandru of the Madras High Court | Bar and Bench:

http://barandbench.com/content/212/never-be-afraid-ultimately-you-can%E2%80%99t-die-every-day-justice-retd-chandru-madras-high#.VM5aemiUdqU