Friday, April 24, 2015

வடுகப்பட்டி வைரமுத்துத் தேவர் உருவிய மராட்டிய தலித் இலக்கியம்

இந்த வார குமுதத்தில் வந்திருக்கும் வைரமுத்துவின் கதை வாசித்துப் பார்க்க வசதியாய்.


இழவெடுத்த கதையைப் படித்துவிட்டீர்களா. நல்லது. கதையின் கடைசி சீனை விட்டால் இந்தக் கதையில் என்ன இழவு எழுதப்பட்டு இருக்கிறது. அந்தக் கடைசீ சீனும் வறுமையின் கொடுமையைக் காட்ட பிணத்தின் வாயிலிருந்து வாய்க்கரிசியை எடுக்க வைக்கிறாராம் கவிப்பிச்சை. இந்த சீனுக்காகவே வலிந்து அவனுக்கு வைக்கப்பட்ட பழக்கம்தான் வேக வைக்காத அரிசியைத் தின்பதென்பது. அதன் காரணமாகவே அவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் அரிசிமணி. அவன் எப்படி செத்தான் என்பதுதான் ஒப்பேற்றப்பட்ட கதை. கதையே, இந்தக் காக்கா வலிப்பு வந்து எழுதிய கதையின் கடைசீ சீன்தான் என்றால், அது குமுதம் லெவலுக்குக்கூட கேவலம். அந்த சீனும் அற்பமாய் உருவப்பட்டது என்பது தெரிய வந்தால் அது எவ்வளவு பெரிய காமெடி. சினிமாவின் பேரரசுதான் எவ்வளவு பெரிய பிச்சைக்காரர்.

இப்போது இந்தக் கதையைப் படியுங்கள். எஸ்.வி. ராஜதுரையின் மொழிபெயர்ப்பு முழியைப் பெயர்க்காவிட்டாலும் கொஞ்சம் பல்லைக் கூசத்தான் செய்கிறது ஏனினும் பொருட்படுத்தாமல் படியுங்கள். நிதானமாய் முழுமையாய் கடைசி வரி வரை படியுங்கள். கதை உங்களை ஏமாற்றாது என்பது உறுதி. ஆஹா ஓஹோ கதையில்லைதான் ஆனால் கட்டாயம் நல்ல கதை.
உலகெங்கும் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாய் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் பேராசை பெரு நஷ்டம் என்கிற அதே விஷயம்தான். நூறாண்டுகளுக்கும் முன்னதாய் டால்ஸ்டாய் கூறிய ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்’ (ஆங்கிலத்தில் இங்கே கிடைக்கிறது http://www.gutenberg.org/files/6157/6157-h/6157-h.htm) தொடங்கி, மராட்டிய தலித் இலக்கியவாதியான அண்ணாபாவ் சாத்தே (1 August 1920 – 18 July 1969) மயானத் தங்கம் வரை அவரவர் பின்னணியை வைத்து அதையேதான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 

பாவ் சாத்தே கதையைத் தொடங்குவதையும் முடிப்பதையும் பாருங்கள். எங்கே எப்படித் தொடங்கி எங்கே எப்படி முடிக்கிறார் என்று பாருங்கள். அவர் தலித்தாக பிறந்தார் தலித்துகளின் உரிமைக்காகப் போராடினார். ஆனால் அவர் எழுதிய கதையில் வரும் பீமா, தலித்தாகவா தெரிகிறான். டால்ஸ்டாய் காண்பித்த விவசாயி Pahom போலவே நம் எல்லோருடைய பிரதிநிதியாக அல்லவா இருக்கிறான். இதுதான் இலக்கியத்தின் வேலை. நம்மை நமக்கு நேரடியாய்க் காட்டாமல் வேறு எவனோ ஒருவனின் கதையை சொல்வதைப் போல நம்முடைய முகத்தின் லட்சணத்தை நமக்குக் காட்டிவிடுவது.

கதாபாத்திரம் வாழ நேரும் ஏழ்மையின் அவலத்தைக் கதையில் கூறியிருப்பினும் பாவ் சாத்தேவின் அக்கறை குவிந்து நிற்பதென்னவோ நேர்மையான உழைப்பில்தான். 

பணக்காரரான கவிப்பேராசையின் முனைப்பெல்லாம், ஏழ்மையை ஆரத்தி எடுத்து அரிச்சுவடி வாசகனின் அசட்டு உணர்ச்சியைத் தூண்டுவதில்தான். 

கவிஞர் எழுதிய கதையில் பாட்டு சீன் இல்லாமலா. அரிசிமணி பாட்டும் பாடுவான். வெட்டியானின் அஜிஸ்டெண்ட்டாய் இருக்கும் பிதாமகனை அப்படியே உருவி அரிசிமணியாய் கண்முன் நிறுத்தும் டைமண்டூவின் தெறம யாருக்கு வரும்.

வைரமுத்து கதாபாத்திரத்துக்கு அரிசிமணி என்று பெயர் வைத்து அவன் வெறும் அரிசியைத் தின்பதில் மட்டுமே நாட்டம் கொண்டவனாய் ‘படைக்கிறார்’. வெறும் அரிசியை மட்டுமே தின்பவன் ’அரிசின்னு நெனச்சி கொதிக்கிற உலையில கையை விட்டுட்டான்’  கொதிக்கிற உலையிலும் அது இன்னும் அரிசியாய்தான் இருக்கும் அல்லது படிப்பவர் கண்கள் குளமாக வேண்டுமானால் அது அரிசியாய்தான் இருந்தாக வேண்டும். 

அரிசி இல்லா கொடுமை சார் கொடுமை பசியின் பெருங்கொடுமை. ஓடினான் ஒடினான் நெருப்பு வைத்துவிட்டு வெட்டியான் சினிமா பார்க்க பஸ் ஏறி வெளியூருக்கே போய்விட்டாலும் இவன் ஓடினான் ஓடினான் எரிந்துகொண்டிருக்கும் பிணத்திடம் ஓடினான். எதற்கு, பிணத்துக்குப் போடப்பட்ட வாய்க்கரிசியை எரிந்துகொண்டிருக்கும் பிணத்தின் வாயில் இருந்து எடுத்துத் தின்பதற்காக. கொதிக்கும் உலையில் அரிசி அரிசியாகவே இருப்பதைப் போல முரடன் முத்துவின் கதையில் வரும் எரியும் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசி தீயாது கருகாது அப்படியே அரிசிமணியாகவே இருக்குமல்லாவா அதற்காக. பசி சார் பசி. பசிக் கொடுமை. உள்ளே விட்ட விரலை பிணத்தின் வாய் இறுகக் கவ்விக்கொண்டு விட்டது. வைரமுத்துவின் பேராசைப் பசிக் கொடுமையின் காரணமாக. அப்புறம் என்ன ஆயிற்று கதை முடிந்தாக வேண்டுமே அரிசிமணி பிணம் அடித்து விழுந்து செத்துவிட்டான். 

இவ்வளவு அசட்டுத் தனமாய் எழுதுவதைக் கூட சொந்தமாய் எழுதத் துப்பில்லை கவிப் பேரரசூவுக்கு. அண்ணாபாவ் சாத்தேவின் கிளைமாக்ஸைத் திருடி சிறுகதை வரிசையில் 16ஆவதாய் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருக்கிறார். 

டால்ஸ்டாய்க்கோ அண்ணாபாவ் சாத்தேவுக்கோ வாசகனுக்கு அதிர்ச்சி அளிப்பதோ அவனது அசட்டுணர்ச்சியைத் தூண்டுவதோ அல்ல குறிக்கோள். அவனது விழிகளைத் திறப்பதே அவர்களுக்கு முக்கியம். அதனால்தான் அவை இலக்கியம். தலித் இலக்கியம் படைக்கிறேன் பேர்வழி என்று பாவ் சாத்தே பீமாவைப் பிணமாக்கி வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யவில்லை. பறப்பதை நினைத்து இருப்பதைக் கோட்டை விட்டாயே என்கிறார். கல்லுடைத்துக் கொண்டிருந்த பீமாவுக்கு வேலையில்லாமல் போனதிலிருந்து வேறுவழியின்று தொடங்கிய - பிணத்திலிருந்து பிடுங்கும் - குறுக்கு வழி மெல்ல மெல்ல அவனை இழுத்துக்கொள்ளத் தொடங்குகிறது. இதை நமது எந்த மோசமான காரியத்துடனும் வைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். எந்த மோசமான காரியத்தையுமே எல்லோரும் தொடங்குவது என்னவோ நிர்பந்தம் காரணமாகத்தான். ஆனால் தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை, ருசி கண்டுவிட்டோம் என்பதைத்தவிர. இந்தக் குறுக்குவழி தரும் உடனடி வசதி வாய்ப்புகள் நிரந்தரமான உழைப்பை, உழைக்கிற எண்ணத்தையே தகர்த்துவிடுகிறது. எதையாவது எழுதி ஒப்பேற்ற எங்கிருந்து திருடலாம் என்று புத்தகங்களைப் புரட்டும் வைரமுத்துவைப் போல. 

இதைத்தான் உணர்த்துகிறார் பாவ் சாத்தே இந்தக் கதையின் வாயிலாக. ஆனாலும் இதையெல்லாம் உணரமுடியாத உணரத் தேவையில்லாத அளவுக்கு வோர்ல்டு பேமஸ் ஆகிவிட்ட காரணத்தால், உணர்வுக் கொம்புகளற்று முழுக்க மொக்கையாகிவிட்டார் கவிப்பேரரசு. 

பாவ் சாத்தேவின் கதையின் இறுதியில், கல் குவாரியில் வேலை திரும்பவும் தொடங்கிவிட்டது ஆனால் விரல்கள் இல்லையே என பீமா அழுகிறான்.

விரல் ஜால வித்தகர் கதையின் இறுதியிலும் அழுகையை வைக்கிறார் வாசகனின் அசட்டுணர்ச்சியை டச் பண்ணுவதற்காக.

எவனோ எடுத்த சினிமாவிலிருந்து சினிமாக்காரன் சீன் திருடி சினிமா எடுத்தால் கலை. அதற்குப் பாராட்டு கேடையமெல்லாம் கிடைக்கும். 

அந்தத் திருட்டு சினிமாவை பஜார்காரன் சிடி போட்டு விற்றால் அது படுபயங்கரக் குற்றம். அவன் மீது குண்டர் சட்டம் பாயும். அட இதைக்கூட, எழை பஜார்க்காரனை ஹீரோவாய் வைத்து சிறுகதை வரிசையில் 17ஆவது சிறுகதையாய் எழுதலாமே. இந்தக் கதையை ஜெயகாந்தன் பாராட்டியதாய் குமுதத்தில் போட்டுக்கொள்ள முடியாது என்பது ஒன்றுதான் குறை. அது பரவாயில்லை. அதைத்தான் ஏற்கெனவே செய்தாயிற்றே.