Saturday, November 7, 2015

பரிசு [சிறுகதை]

குப்பை மேட்டுலகூட தானா வளர்ற துளசி, எங்தாத்துல மட்டும் வரமாட்டேங்கறது. அப்படி என்ன வரம் வாங்கிண்டு வந்துருக்கமோ தெரியலை.

அரசுக் குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி அடுத்த வீட்டு மாமியிடம் பேசும் அம்மாவின் சன்னக் குரல் கேட்டுத் துணுக்குற்ற சேஷகிரி என்கிற சேஷகிரி ராவ் பதற்றத்துடன் மனைவி இல்லையா என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.

அவளாய் ஒன்றும் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் அம்மா அவளை காயப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அம்மா நல்லவள்தான். அவளுக்கு அவள் ஆதங்கம். அதுவும் ஒரு விதத்தில் நியாயம்தான். சுற்றுப்பட்டு சொந்தத்தில் முன் பின்னாக ஆனாலும் யாருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. அத்தைதான் அதிக காலம் எடுத்துக்கொண்டவள். பதினெட்டு வருடங்களுக்குப் பின் பிறந்தாலும் பிறந்தது இரட்டையாக. விரக்தியில்தான் பேசுகிறாள் அம்மா என்று அவன் புரிந்துகொண்டாலும் அவள் காதில் விழுந்தால் பாவம் எப்படி இருக்கும் அவளுக்கு.

அவள் ஆரம்பத்தில் ஓரிருமுறை, தயங்கித் தயங்கி டாக்டரைப் பார்க்கலாமா என்று அவனிடம் கேட்டுப் பார்த்தாள். அவமானப்படத் தான் தயாரில்லை என்று நிர்தாட்சண்யமாய்க் கூறிவிட்டான் சேஷகிரி. கொஞ்சம் வருத்தப்பட்டாலும் கண்ணைக் கசக்கிக்கொண்டு அமைதியாகிவிட்டாள்.

திருமணமே தாமதம் என்றாலும் அப்படி என்ன திருமணமாகி ரொம்ப காலமாகிவிட்டது என்று சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் துக்கம் விசாரிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவனிடம், ஓரிவர் தவிர யாரும் இதுவரை நேரடியாய்க் கேட்டதில்லை. அவர்கள்கூட ஜாடை மாடையாகத்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கம்பக்கத்து மாமிகள் அவளை என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நல்லவளான அம்மாவே இப்படித்தான் இருக்கிறாள் என்று தெரிய வரும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது அவளை நினைத்து. பாவம் அவளுக்காகவாவது போய் பார்த்துவிட்டால் என்ன என்றும் தோன்றியது.

சும்மா மூடியிருந்த கதவை சப்தமெழாதபடி திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்தான். கையை மறைப்பாய் வைத்துப் படுத்திருந்தவள் எழுந்துவிட்டாள். வருத்தம் தெரிவித்தான்.

சேச்சே தூங்கலை. சும்மா படுத்திருந்தேன் என்றாள்.

தயங்கியபடி கூறினான்.

பாய்ந்து அணைத்துக்கொண்டு விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டாள். சமாதானப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. எவ்வளவு அடக்கிக் கொண்டு இருந்திருப்பாள். பெருமூச்சு விட்டான். எல்லாம் தன்னால்தான். தன்னுடைய பயத்தினால்தான். என்னென்னவோ பயம்.

அலுவலகத்தில் மகேஸ்வரிகூட ஒரு நாள் செக்ஷன் ஹெட்டிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். தாம்பரம் பக்கத்தில் சித்த வைத்தியம் பார்க்கும் பிரபலமான பெண் டாக்டர் பற்றி. பல வருடங்கள் இல்லாமலிருந்த அவளது உறவினருக்கு அவரிடம் சென்ற மூன்றாவது மாதத்தில் அமைந்து விட்டதாம். சைடு எஃபெக்ட் பற்றி அவர் கேட்டார். பாவம் அந்தப் பெண்ணின் கணவருக்கு சொரியோசிஸ் வந்துவிட்டது ஆனாலும் இருப்பதற்குள் சித்தாதான் சேஃப் என்றதும் நினைவுக்கு வந்தது. அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டது அவர்களுக்காக இல்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இருவருக்குமே தலைக்கு இரண்டு வீதம் இருக்கிறது. இங்கிதம் தெரிந்த மனிதர்கள்.

எப்படியும் ஆங்கில மருத்துவம் என்றால் லட்சத்துக்கு மேல் ஆகும். ஒரு தடவையில் கூடி வருவது அபூர்வம். குறைந்தபட்சம் மூன்று தடவையாவது போயாக வேண்டும். முதலில் ஒன்றுமே இல்லை சாதாரணமாக முயற்சிக்கலாம் என்று ஒரு தடவைக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று தொடங்குவார்கள். இதுவே மாசா மாசம் என்று ஒரு வருடத்துக்கோ இரண்டு வருடங்களுக்கோ இழுத்துவிடுவார்கள். அதுவாக செட்டாகவில்லை எனவே அடுத்தடுத்து சோதனை பரிசோதனை என்று குத்திக் குத்திப் பெண் உடலைப் புண் ஆக்கி விடுவார்கள். குழந்தை பிறக்கிறதோ இல்லையோ போடப்படும் ஊசிகளிலேயே அவளது பாதி உடம்பு போய்விடும். டிவியில் மட்டுமல்ல, நேரில்கூட அறைக்குள் முதல் முறை செல்கையில், பேச்செல்லாம் தேனொழுகத்தான் இருக்கும். எல்லாம் செலவழித்து தோல்வியடைந்துவிட்டால், என்ன இப்படி ஆகிவிட்டதே என்று கேட்கக்கூட முடியாது. கேரண்ட்டி வாரண்ட்டியெல்லாம் கொடுக்க, இது என்ன எதாவது எலக்ட்ரானிக் அயிட்டமா. எல்லோருக்கும் செய்வதைப் போல உங்களுக்கும் மனப்பூர்வமாய்தான் செய்தோம். எத்தனையோ பேருக்கு செட்டானது உங்களுக்கு செட்டாகவில்லை. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட்டாள் அந்த பிரபல டாக்டர்.  கவலைப் படாமல் மனதில் நம்பிக்கையோடு இன்னொரு முறை முயற்சி செய்யலாம், நிச்சயம் பலன் கிடைக்கும் என்று எதோ குறி சொல்பவள் போல் சாதாரணமாய் சொல்லி அனுப்பிவிட்டாள். சேஷகிரி, எது எப்படியோ ஆனா குழந்தைங்கறது சர்வ சத்தியமா கடவுளின் பரிசு. இதுல சந்தேகமே இல்லை. கிஃப்ட்டை துட்டு செலவழிச்சி வாங்கப் பாக்கறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதுவா கிடைக்கணும். இல்லாட்டா இல்லே அவ்வளவுதான்னு இருந்துடனும். டாக்டருங்கள்ளாம் உதவலாம் உருவாக்கமுடியாது. சாமியில்லை பூதமில்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் ராமனாதன் உணர்ச்சிவயப்பட்டு பீச்சில் சொல்லி அழுதது சேஷகிரியின் மனதின் அடியில் தங்கிவிட்டிருந்தது. அவனுக்கோ அவ்வளவு பணத்துக்கெல்லாம் வழியுமில்லை பூர்வீக சொத்து சுகம் என்கிற வசதியுமில்லை. அரசுக் குடியிருப்பு கிடைத்ததே போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று எண்ணி திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

தாம்பரம் போல அருகில் எங்காவது சித்த மருத்துவ கிளினிக் இருந்தால் செல்லலாம் என்று சொன்னதுதான் தாமதம், ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தலையணை அடியில் இருந்து எடுத்தாள். பக்கம் பக்கமாக, டாக்டர் பெயர் முகவரி செல்லும் வழி என்ன செலவு என்று ஏகப்பட்ட விபரங்களை எழுதி வைத்திருந்தாள். வேலைக்குச் செல்லவில்லை என்பதால் தின்று விட்டு தூங்கிக்கொண்டு இருப்பவளில்லை என்று தெரியும். ஆனால் இவ்வளவு சமத்து என்று தெரியாது. இவ்வளவு ஏக்கத்தையும் எப்படி வெளியில் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்துகொண்டு இருக்கிறாள் என்று நினைக்க நினைக்க, டாக்டரிடம் போகமாட்டேன் எனும் பிடிவாதத்தால் அவளைத் தானும் கொடுமைப்படுத்தி இருக்கிறோம் என்று அவனுக்குக் குற்ற உணர்வு மேலோங்கிற்று.

நாளைக்கு நல்ல நாளா பாரேன்.

பாய்ந்து போய் மாத்வ பந்து பஞ்சாங்கத்தை எடுத்து வந்தாள்.

இன்னைக்கு சப்தமி நல்ல நாள்தான். நாளை நாளன்னைக்குனா அஷ்டமி நவமி வந்துவிடும்.

அப்ப இன்னைக்கே போயிடலாம்.

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மதிய உணவு அன்று பத்தரை பதினொன்றுக்கே முடிந்து, சமையல் மேடையைக்கூட அலம்பிவிட்டாற்று.

அந்த நோட்டுப் புத்தகத்தில், இருந்ததிலேயே அருகிலும் சகாய செலவிலும் இருந்த ஒரு சித்த மருத்துவரைத் தேர்ந்தெடுத்தான். அதற்கு அவள் நான்கு நட்சத்திரக் குறி கொடுத்து இருந்தாள்.

இது என்ன.

இது பாப்புலாரிட்டி கம் சக்சஸ் ரேட்.

ஏய் என்ன நீ பெரிய ஸ்காலராட்டம் இதுல பெரிய ரிசர்ச்சே பண்ணிவெச்சிருக்கே.

இன்னோரு நோட்புக் இருக்கு. எந்தெந்த மெடிசின்ல என்னென்ன பத்தியம்,  டூஸ் அண்ட் டோன்ட்ஸ்னு விவரமா எழுதி வெச்சிருக்கேன் எடுக்கவா.

சான்ஸே இல்லை. சத்தியமா சொல்றேன் உன்னைப் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியலைனுதான் தோணுது சாரி.

அதெல்லாம் ஒன்னுமில்லே. மத்தவங்க சொல்றதுக்காக இல்லே எனக்கே பிடிச்சதாலதான் செஞ்சிருக்கேன்.

இவ்ளோ பிடிச்ச விஷயத்தை, மாட்டேன்னு நான் சொல்லிட்டேங்கற ஒரே காரணத்தால எப்படி இவ்ளோ நாளும் உள்ளையே உன்னால அடக்கி வெச்சிக்க முடிஞ்சிது.

உங்களையும் பிடிக்குமே அதனால.

சேஷகிரிக்குக் கண் கலங்காத குறை. அவள் கையை மெல்லப் பிடித்தான்.

1:30-3:00 எமகண்டம். அதற்கு முன் அங்கு இருந்தாகவேண்டும் என்று உடனடியாய்க் கிளம்பிவிட்டனர். 8:00-12:00 2:00-6:00 விளக்கு வைத்தபின் அவர் பார்ப்பதில்லை என்பது உடபட அவள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தாள். திருவல்லிக்கேணி ஹைரோடுக்குப் பின்னால் இருந்த சந்தில் இருந்தது அந்த சித்த மருத்துவரின் கிளினிக். மருத்துவரைப் பார்க்கும் முன் குறைந்தபட்சம் கோவிலையாவது பார்த்துவிடலாம் என்று, அதைத் தாண்டி பார்த்தசாரதி கோவில் கோவிலின் பின்புற நரசிம்மர் வாசல் ராகவேந்திரர் மடம் என்று பிரதட்சணமாய் சுற்றிக்கொண்டு சர்ச்சுக்குப் பின்னால் இருந்த மருத்துவ மனைக்கு, செகண்ட் ஹாண்டாய்ப் மழை வரும்போது மக்கர் பண்ணினாலும் பலகாலமாய் உற்ற நண்பனாய் இருந்துவரும் டிவிஎஸ் 50யில், ஒன்று இருபதுக்கே வந்து சேர்ந்துவிட்டனர். இரும்பு கேட்டின் திட்டிக் கதவுக்கு உள்ளே நுழைந்தால் படிக்கட்டு முன்னால் ஏகப்பட்ட செருப்புகள். கூட்டத்தைப் பார்த்து சரியான இடம்தான் என்று உற்சாகமாகவும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று ஆயாசமாகவும் இருந்தது. டோக்கன் வாங்கும் முன். மொபைலை எடுத்து மணி பார்த்தான் 1:28 காட்டிற்று.

இன்னும் நாற்பது ஐம்பது பேர்களுக்குப் பின்புதான் தங்கள் முறை என்பதாலும் உட்கார இடமில்லாத காரணத்தாலும் காற்றோட்டத்துக்காகவும் கட்டிடத்துக்கு வெளியில் வந்து நிழலில் ஒதுங்கி நின்றனர். இவர்களைப் போலவே இன்னும் பலரும் மழைத் தடுப்பு போட்ட ஜன்னல், மரத்தடி என்று எங்கெல்லாம் ஒண்ட நிழல் கிடைக்குமோ அங்கெல்லாம் நின்றவண்ணம் அமர்ந்தவண்ணம் இருந்தனர். வெய்யில் தகித்துக்கொண்டு இருந்தது. இந்த ஜாதி அந்த மதம் பணக்காரன் வறியவன் என்கிற வேறுபாடின்றி என்னென்ன வயதில் எத்தனை வகை தம்பதியர். தங்களுக்குமட்டுமின்றி இது இவ்வளவு பேருக்குமான பிரச்சனையா என்று மூச்சு முட்டியது. ஒரே ஒரு வயிறு தூக்கியப் பெண்ணைக்கூடப் பார்க்க முடியவில்லையே எப்படி என்றும் தோன்றிற்று. அவன் மனதைப் படித்தவள் போல் மனைவி சொன்னாள், கருவுற்றதும், இந்த மருத்துவரின் மனைவி அடுத்த தெருவில் வைத்திருக்கும் இன்னொரு மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்லிவிடுவாராம் அந்த மருத்துவர். அவர்கள் செய்துகொண்டு இருப்பது அசாதாரணமான சமூக சேவை என்று தோன்றியது. அவரே கூட அங்கே மாட்டப்பட்டிருந்த படத்தில் பார்க்கக் கொஞ்சம் சித்தர் போலத்தான் இருந்தார்.

சென்றதும் அவரை சந்தித்ததும் சட்டையணியாத அவரது உடல் அசைவுகளும் ரத்தினச் சுருக்கமாய் அவர் பேசியதும் எதோ விபூதிப் பிரசாதம் போன்ற மக்கல் நிறத்திலிருந்த மாவுப்பொடி மருந்துகளை, உள்ளே இருப்பது வெளிப்படையாய் தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கொடுத்ததும் எல்லாம் எதோ, பரிபூரண தன்னம்பிக்கை அளிக்கும் நல்ல கனவு போல் இருந்தது. வீடுவந்து சேருகையில் நன்கு இருட்டிவிட்டிருந்தது. மிதப்பது போல உணர்ந்தான்.

வீடு வந்து சேர்ந்த பின்புதான் மனைவி கூறினாள், அவ்வளவு தூரம் போய்விட்டு கோவிலுக்கு உள்ளே சென்று சுவாமியை தரிசிக்காமல் வந்துவிட்டோமே அவர் அருளால் அல்லவா இன்று இங்கு சென்றுவர வாய்த்தது என்று. எப்படி தவறிப்போனது என்று சேஷகிரிக்கும் வியப்பாய்தான் இருந்தது. வண்டி எடுக்கும்போதே, வண்டி வாங்கிய நாளன்று வண்டியை எடுக்கும்போது சொல் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்த ஜெயஸ்ரீ கருடத்வஜவை கர்ம சிரத்தையாய் சொல்லத் தவறாதவன், அவ்வளவு அருகில் போய்விட்டு, நரசிம்மரை எப்படி தரிசிக்காமல் வந்தோம் என்று ஆச்சரியமாய் இருந்தது. நினைப்பதும் மறப்பதும் எல்லாம் அவன் செயல் என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

பொதுவாக எங்கே சென்றாலும் அம்மாவிடம் சொல்லாமல் செல்லாதவன். என்றைக்குமே எங்கே போகிறாய் என்று அவளும் கேட்டவளில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பா போன நாள் முதலாய், அவன் வெளியில் கிளம்பும் போது எதோ முக்கியமான வேலை இருப்பதுபோல் சமையல் கட்டுக்குள் போய்விடுவாள். விட்டுக் கதவைத் தாண்டும்போது, ’ஹோய்ட்டு பர்த்தனே’ எனும் இவனது உரத்த குரலுக்கு பதிலாய் நோடி ’ஹோய்ட்டுபா’ என்று பதில் குரல் கொடுப்பதோடு சரி.

எங்கே போய் வந்தோம் என்பதை அன்று அம்மாவிடம் கூறவில்லை. இத்தனை நாள் அவள் பட்ட வருத்தத்துக்கு நல்ல சேதியாய் சொல்லலாம் என்று கிளம்பும் முன்பே மனைவியிடம் கலந்து தீர்மானித்து இருந்தான்.

அடுத்து வந்த இரண்டு நாட்களையும் அஷ்டமி நவமி என்பதால் எல்லா காரியத்திலும் தவிர்த்தான். அடுத்த நாள் செவ்வாய் ஆயிற்றே அன்று மருந்து சாப்பிட ஆரம்பிப்பதா என்று தயங்கினான். அம்மாவைக் கேட்கலாம் ஆனால் விஷயத்தைச் சொல்லாமல் எப்படிக் கேட்பது.

அதிலும் மனைவிதான் உதவினாள்.

பிராமணாளுக்குக் கிழமை முக்கியமில்லை திதிதான் முக்கியம்னு எங்கள் அம்மா கூறுவாள். கிழமை செவ்வாயாய் இருந்தாலும் திதி தசமி ஆயிற்றே.

குளித்து முடித்து ஈரத் துண்டுடன் சுவாமி கும்பிட்டபின் உடை மாற்றிக்கொள்ள படுக்கை அறைக்குள் வந்தான். மனைவி ஏற்கெனவே ஈரத் தலையில் முடிந்த துண்டுடன் எதிலும் ஈஷிக்கொள்ளாமல் மடிமடியாய் இருந்தாள். பயபக்தியாய்க் கண்களை மூடி ராகவேந்திரரை தியானித்துவிட்டு சித்தர் கொடுத்த மருந்து இருந்த பிளாஸ்டிக் கவரைப் பிரிக்கப் போனான். உள்ளே ஏதோ ஓடுயது போல் இருந்தது. ஜிப் லாக் கவரின் மேற்புறத்தைப் பிடித்து உலுக்கினான் இன்னும் இரண்டு மூன்று ஓடுவது பளிச்செனத் தெரிந்தது. மனைவியைப் பார்த்தான் அவள் முகம் பேயறைந்ததைப் போல் வெளிறி இருந்தது.

அவசர அவசரமாய் தலையைத் துவட்டிக்கொண்டு உடையணிந்து அத்தனைப் பொட்டணங்களையும் எடுத்துப் பேண்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு வேகமாய்ப் பறந்தான். அவன் வண்டியோ அவன் திருகிய திருகலில் எப்போது வேண்டுமானாலும் உயிரை விட்டுவிடுவேன் இந்த முறுக்கு முறுக்குகிறாயே என்று முக்கி முணகிற்று.

சித்த மருத்துவரின் அறைக்கு வெளியே தடுத்த ஆளைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று பொட்டணத்தை மேசைமீது வைத்தான்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்த்தார் மருத்துவர்.

பாருங்க உள்ள பூச்சி.

நம்ம மருந்துக்கு எவ்ளோ எஃபெக்ட்டுங்கறதைத்தானே இது காட்டுது. அதைப் பூச்சியா பாக்கறீங்க நீங்க. உயிரா பார்க்குறேன் நான். அதான் உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம். பிளாஸ்டிக் கவருக்கு உள்ளையே உயிர் உற்பத்தி ஆயிடுச்சில்ல.

அறைக்குள் இருந்தவர்கள் பரவசமடைந்தவர்கள் போல உச்சுக் கொட்டினர். விருட்டென வெளியேறினான் சேஷகிரி.

ஊரே புழுதியால் நிறைந்திருப்பது போல் அடிக்கடி கண்ணைக் கசக்கித் துடைத்துக்கொள்ளவேண்டி இருந்தது. என்ன நடந்ததென்று, மனைவி நம்பும்படியாய் இரவு என்ன பொய் சொல்வதென்று யோசித்த வண்ணம் அலுவலகத்தை நோக்கி நிதானமாய் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்.


ஆகஸ்டு 2015 
கல்கி தீபாவளி மலர் 2015