Monday, November 23, 2015

எலிகள் - [சிறுகதை]

செ என்கிற சிற்றூரில் இருந்தது அந்த மத்திய அரசு அலுவலகம். திடீரென்று போன் வேலைசெய்யவில்லையே என்று பார்த்தால் டேபிளுக்கு அடியில் டெலிபோன் ஒயர் அறுந்து தொங்கிக்கொண்டு இருக்கும். இன்னொரு நாள் இண்ட்டர்நெட் கேபிள். எல்லா நாளும் கோப்புகள்.  இன்று இவர் நாளை நீ என்கிற சுடுகாட்டு வாசகமாய், அந்த அலுவலகம் துவம்சமாகிக்கொண்டு இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கீழ்மட்ட ஊழியர்களும் எலிகளும் சகஜமாய் எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டிருந்தனர். சென்னையிலிருந்து வரும் அதிகாரிகள் ஆண்டுக்கொருமுறை மாறிக்கொண்டு இருந்தனர். ஆனால் ஃபைல்களின் பாதுகாப்பு அவர்களின்  நேரடிப் பொறுப்பாய் இருந்து வந்தது.


எலிகள், பழைய பழுப்புத் தாள்களில் அப்படி என்னதான் ருசியைக் கண்டனவோ, ஒரு நாளைப்போல பழைய ஃபைல்கள் சுக்குநூறாகிக்கொண்டு இருந்தன. வில்லங்கமான பேப்பர்களை உருத்தெரியாத வண்ணம் பொடிப்பொடியாய் கிழித்துப் போடுவதில் அரசு அதிகாரிகளை மிஞ்ச எவராலும் முடியாது  eன்பதென்னவோ உண்மை. ஆனால் அந்த அலுவலகத்து எலிகள் தமது பல்லாண்டு சர்வீஸ் காரணமாகவோ என்னவோ அதைவிடப் பொடியாய்க் கொரித்துப் போட்டுக்கொண்டு இருந்தன. போனால் போகிறது புதிதாய் வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிட வீட்டுத் துணிமணிகளல்ல அவை, பல ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். பலகோடி அரசு வருவாயைப் பெரிய பெரிய நிறுவன தொழிற்சாலைப் பெருச்சாளிகள் தின்றிருந்த வழக்குகளுக்கான ஆதார ஆவணங்கள் அவற்றில் இருந்தன. எந்த நேரத்தில் கோர்ட் அழைத்தாலும் கொண்டுபோய் சமர்ப்பித்தாக வேண்டிய கோப்புகள். அவற்றை, எலிகள் கடித்து அழித்துவிட்டன என்கிற சத்தியம், கோர்ட் அவமதிப்பாகப் பார்க்கப்படக்கூடும். இந்த அபாயம், அந்த நேரத்தில் அங்கு அதிகாரியாய் இருப்பவனின் தலைக்குமேல் கத்தியாய் தொங்கிகொண்டு இருந்தது.

நாற்பதைத் தாண்டுவதற்குள்ளாகவே பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் முதல் அதி உயர் அதிகாரிகள் உட்பட விதவிதமான மனிதர்களைத் தொழில் ரீதியாய் வெற்றிகரமாக சமாளித்தாயிற்று என்கிற மதர்ப்பில் அந்தக் கிளை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்ற கண்காணிப்பாளருக்கு ஆகப்பெரிய சவாலாக இருந்தன அந்த அலுவலகத்து எலிகள். எதையும் ஊதித்தள்ளி உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்கவே பிறவி எடுத்தவர் என்று சென்னையில் கவனமாய் உருவாக்கியிருந்த பிம்பம், வந்த சில நாட்களிலேயே, கொரிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம் அவரைப் பீடிக்கத் தொடங்கிவிட்டது.

வின்செண்ட் குழந்தைசாமி என்று உரக்க அழைத்தார்.

ஓய்வு பெற்று ஓரிரண்டு ஆண்டுகள் ஆனது போன்ற பூதாகரமான தளர்ந்த உருவம் கை கால்களை இப்படியும் அப்படியுமாய் ஆட்டி உடல் பாரத்தை சமன் செய்தபடி அவர் எதிரில் வந்து நின்றது.

எலிப்பொறி வாங்கச் சொன்னேனே எங்க.

வாங்கி, மசால் வடையோட வெச்சாச்சி சார்.

எங்க வெச்சிருக்கீங்க.

பரண் மேல சார். கொணாந்து காட்டவா சார்.

இல்ல வேண்டாம். நாளைக்குப் பார்ப்போம் எத்தனை மாட்டுதுனு.

நீ போகலாம் என அதிகாரி சொல்வதற்காக் காத்திருந்தார், ராணுவக் கீழ்ப்படிதல் ரத்தத்தில் ஊறியிருந்த குழந்தைசாமி. அலுவலகப் பதிவேட்டில் வி குழந்தைசாமி என்று எழுதப்பட்டிருந்ததையும் வெள்ளைச் சட்டைக்குள் மங்கலாய்த் தெரிந்த சிலுவையையும்  வைத்து, இவர்களெல்லாம், வீட்டில் வின்செண்ட்டாகவும் அலுவலகத்தில் சலுகை போய்விடாதிருக்கக் குழந்தைசாமியாகவும் இருப்பவர்கள்தானே என்று ஒரு ஊகத்தில், வின்செண்ட் குழந்தைசாமி என்று முதல் முறை அழைத்துப் பார்த்தார். எவ்வித மறுப்போ எதிர்ப்போ எழாதிருக்கவே அதையே நிரந்தரமாக்கிக் கொண்டுவிட்டார். என்ன வேண்டும் என்கிற விதமாய் அதிகாரி தலை தூக்கிப் பார்க்கவே அங்கிருந்து அகன்றார் குழந்தைசாமி.

பார்க்கப் போனால், குழந்தைசாமி ஓய்வுபெற்று சிலபல மாதங்கள் ஆகிவிட்டிருக்க வேண்டும் என்பதென்னவோ உண்மைதான். பட்டாள ஆபீசர் வீட்டில் பணிவிடைப் பையனாக பட்டணத்துக்கு வேலைக்குப் போனான் சிறுவன் குழந்தைசாமி. மாற்றலாகிச் செல்லும்போது அந்த அதிகாரி, தம் வாயில் வந்ததை வயதாகச் சொல்லி, வாட்ட சாட்டமான உடல்வாகுடன் இருந்தவனைப் பட்டாளத்தில் சேர்ந்து விட்டார். இருபது இருபத்தைந்து வருடங்கள் ஊரூராய் பணிபுரிந்தான். ஊரில் கறிவேப்பிலைக் கன்றாய் ஒரே பெண் வளர்ந்துகொண்டு இருந்தாள். அலைந்தது போதும் என்று தோன்றியதும் தலை நரைத்து உடல் ஊதித் தளர்ந்து ஊர் பார்க்க வந்தார். முன்னாள் ராணுவ வீரர் கோட்டாவில் வேலை கிடைத்தது. சென்னையில்தான் நேர்முகம் அங்கேயே போஸ்டிங். சென்னைக்கும் சிற்றூருக்குமாய் தினப்படிப் பயணம். அய்யா அம்மா என்று பார்த்தவரையெல்லாம் கெஞ்சி, அதிகார பூர்வ ஓய்வு வரும் தருவாயில் ஒருவழியாய் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த இந்த அலுவலகத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்.

கொஞ்ச வயதுப் பையனாக வந்திருந்த கண்காணிப்பு அதிகாரி பார்வைக்குப் பார்ப்பாராய்த் தெரியாவிட்டாலும் கறிதின்பவர் இல்லை என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதிலிருந்தே கடைநிலை ஊழியர்கள் அலுவலகத்துக்கு  அசைவம் கொண்டுவருவதைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டிருந்தனர். மேலதிகாரி வெள்ளைக்காக்கை பறக்கிறது என்று சொன்னால் அண்ணாந்து பார்த்து ஆமாம் சார், இடது காலை இழுத்து இழுத்துப் பறக்கிறது என்று துல்லியமாய் ஜால்ரா அடிக்கும் ஆய்வாளர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

வின்செண்ட் குழந்தைசாமி என்ன ஆச்சு.

ஒன்னு மாட்டிட்டு இருந்திச்சி சார் பிடிச்சிக் கொண்டுபோய் விட்டுட்டேன்.

எங்க விட்டீங்க.

நாலு தெரு தள்ளி இருக்குற காவால சார்.

என்னது நாலு தெரு தள்ளியா.

…….

ஆளு வளந்திருக்கீறே. தெருவுல விட்டா எலி திரும்ப வந்துரும்னு தெரிய வேணாம். இதையெல்லாம் விட்டு வைக்கவே கூடாது அப்பவே கொன்றனும். போங்க போங்க. நான் பாத்துக்கறேன். என்றபடிக் சத்தம்போட்டுவிட்டுக் கோபமாய் வெளியில் சென்றார். கோபத்தை சாக்காய் வைத்து, அன்றைய தினம் அலுவலகத்துக்கே முழுக்குப் போட்டு, ரயில் பிடித்து சென்னைக்கே சென்றுவிட்டார்.

மறு நாள் வழக்கம்போல ப்தினோரு மணி வாக்கில் அலுவலகம் வருகையில், மூக்கைக் கைக்குட்டையால் பொத்தியபடி வந்தார். அவர் உள்ளே நுழையும் முன்பாகவே வந்த வாடையை வைத்தே அடிமட்ட ஊழியர்களின் பிளந்த வாய் மூடவில்லை. அவரது இடது கையில் கம்பிகளால் ஆன பெரிய கூடை வடிவ கூண்டும் பிளாஸ்டிக் பையும் இருந்தன. ஒரே சமயத்தில் பத்துப் பன்னிரண்டு எலிகளைப் பிடிக்கக் கூடியது என்றும் எலிகளால் உள்ளே நுழைய முடியுமே தவிர வெளியே வர முடியாத ஒருவழிப்பாதை அந்த கூண்டின் மேற்புறம் என்றும் விளக்கினார். சீன இறக்குமதி என்றபடி குழந்தைசாமியிடம் கொடுத்து கூடவே அதில் போடும்படி தாம் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த கருவாட்டையும் கொடுத்தார். தமது டேபிளில் போய் உட்கார்ந்து ஊதுவத்தியைக் கொளுத்தி வைத்துக்கொண்டார். இருந்த இரண்டு ஆய்வாளர்களும் பிராமணர்கள். சரக்கடிக்கும்போது சைட் டிஷ்ஷாக வறுத்த கோழியைக் கொரிக்கக்கூடியவர்கள்தாம் ஆனாலும் வாடை தாங்காமல் ஆளுக்கொரு பேக்டரிக்கு அவசர வேலையை தருவித்துக்கொண்டு தலை தெறிக்க ஓடினர்.

வின்செண்ட் குழந்தைசாமி

சார்

கூண்டை வெச்சிட்டீங்களா

வெச்சிட்டேன் சார்

கருவாடு வெச்சீங்களா

வெச்சாச்சி சார்

நாளைக்குக் கொறைஞ்சது பத்தாவுது மாட்டணும் சொல்லிட்டேன்

ஆகட்டும் சார்

ஆகட்டுமாவது போகட்டுமாவது மாட்டும்

சரி சார்

மாட்டினப்புறம் என்ன பண்ணனும்

சொல்லுங்க சார்

பெரிய பக்கெட்ல வழிய வழிய தண்ணி நிரப்பிக்கணும்

சரி சார்

அப்பறம் என்ன செய்யணும்

சொல்லுங்க சார்

இந்த கூண்டை எடுத்து அப்பிடியே அந்த பக்கெட்ல முக்கிடணும்

……..

எல்லா எலியும் செத்துடிச்சினு உறுதியான அப்பறம்தான் கூண்டை பக்கெட்லேந்து வெளியவே எடுக்கணும்
………

என்ன புரிஞ்சிதா

சரி சார்

நான் வரும்போது ஆபீஸ் கிளீனா இருக்கணும்

சரி சார்

ஊதுவத்தி முடிந்ததும் அலுவலகத்தை பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, யார் வந்தாலும், முக்கிய வேலையாய் தலைமை அலுவலகம் சென்றிருப்பதாய்க் கூறச் சொல்லிவிட்டு, அவரும் சென்னைக்கு ட்ரெயின் பிடிக்கக் கிளம்பி விட்டார்.

வின்செண்ட் குழந்தைசாமி

சார்

எவ்ளோ மாட்டிச்சி

சார் சொன்னாப்பல எட்டு பத்து மாட்டிச்சி சார்

என்ன பண்ணினீங்க

சார் சொன்னாப்பலையே பண்ணிட்டேன் சார்

வெரி குட். கூண்டை எங்க போய் ஓப்பன் பண்ணொனீங்க.

மலைக்கு அண்ணாண்ட போய் பள்ளம் தோண்டிப் பொதைச்சிட்டேன் சார்

வெரி குட் வெரி குட் இல்லாட்டி ஹெல்த் ஹசார்ட். இன்னைக்கி நைட்டும் கருவாடு வாங்கி வைங்க மொத்தமா ஒழிச்சிடலாம். இந்தாங்க என்று பணம் கொடுத்தார்.

சரி சார்

மறு நாள் காலையில் அறைக்குள் போய் அமர்ந்த அடுத்த நிமிடமே ஹாலுக்கு விருட்டென எழுந்து வந்தார். வரிசையாய் இருந்த இரண்டு மூன்று கம்ப்யூட்டர்களின் பின்புறம் எட்டிப் பார்த்தவர் காட்டுத் தனமாய்க் கத்தத் தொடங்கினார்.

வின்செண்ட் என்ன ஆச்சு. சொன்ன வேலையை ஒழுங்கா செய்யறீங்களா இல்லையா. இங்கப் பாருங்க கேபிளைக் கடிச்சுப் போட்டிருக்கு

சார்…

என்ன சாரு மோருன்னுகிட்டு. இன்னிக்கி எவ்ளோ இருந்துது.

மூணு சார்.

என்ன பண்ணினீங்க.

நேத்து போலவே செஞ்சிட்டேன் சார். லெட்ச்சுமிய வேணா கேட்டுப் பாருங்க சார்.

அப்பறம் எப்படி இண்ட்டர்நெட் கேபிள் கட்டாகி இருக்கு. பாருங்க எலி கடிச்சி பல்லு பதிஞ்ச தடயம்கூட அப்படியே இருக்கு.

இல்ல சார். இன்னும் ரெண்டு மூனு நாள்ல ஒன்னுகூட இல்லாமப் பண்ணிடலாம் சார்.

ஒரு வாரம் ஆயிற்று. எனினும் எதாவது எங்காவது அறுந்து கொண்டோ கொரிக்கப்பட்டுக்கொண்டோதான் இருந்தன.

ஒரு நாள் காலையில் தம் மேசை அடியில் கொரிக்கப்பட்ட பேப்பர்கள் இருந்ததைப் பார்த்துவிட்டு பயங்கரக் கடுப்பாகிக் காச்சு மூச்சென கத்தத்தொடங்கிவிட்டார் கண்காணிப்பாளர். அலுவலகமே அவர் கத்தலில் கதி கலங்கிப் போயிற்று. அந்த நேரம் பார்த்து கம்பெனிக்காரர் ஒருவர் வரவே சற்று அமைதியானார்.

சற்றே ஆசுவாசப் படுத்திக்கொண்டு, குழந்தைசாமி டீ குடிக்கப் போனார். கம்பெனிக்காரர் கிளம்பியதும், அலுவலகத்தைப் பெருக்கித் துடைக்கும் லெட்ச்சுமி தன் மீது எங்கே சரியாக வேலை செய்வதில்லை என்கிற பழி வந்து  விடுமோ எனத் தயங்கித் தயங்கி, அதிகாரியின் அறைக்குள் போனாள்.

குழந்தைசாமி திரும்பி வந்ததும் கட்டாயம் கொலை விழும். கூடவே எங்கே தான் போட்டுக் கொடுத்ததும் வெளிப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் அதிகாரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வீடு பார்க்க நடையைக் கட்டினாள்.

குழந்தைசாமி என்று அதிகாரி சாதாரணமாய் அழைத்ததைக் கேட்டு ஆச்சரியத்துடன் அறைக்குள் போனார் குழந்தைசாமி.

இன்னிக்கி என்ன வீட்ல

சார்

இல்ல இன்னிக்கி என்ன சமைச்சாங்க வீட்ல

சார்

சொல்லுங்க நான் சாதாரணமாதான் கேக்கறேன். உங்க வீட்ல இன்னிக்கி என்ன சமையல்

கீரைக் கொழம்பு சார்

ஏன் இன்னிக்கி என்ன விசேஷம்

சார்

இல்லை கறி சமைக்கலையானு கேட்டேன்

இல்ல சார்

ஏங்க இன்னிக்கி செவ்வாய்க் கிழமை இல்ல. அமாவாசை பெளர்ணமி கிருத்திகை எதுவுமில்லை அப்பறம் என்ன கறி சமைக்க வேண்டியதுதனே

புரட்டாசி மாசம் சார்

பெருமாளுக்குதானேய்யா புரட்டாசி ஏசுவுக்கு என்னைய்யா பொரட்டாசி

…….

பொரட்டாசிய விடு. ஆடு மாடுனு எந்த வித்தியாசமும் பாக்காம எல்லாத்தையும் திங்கிறவங்கதானையா நீங்க. ஆடும் மாடும் என்ன தானாவே வந்து கொழம்புல குதிச்சிடுதா. கொன்னுதானேய்யா திங்கிறே. அப்பறம் எலிங்களைத் தண்ணில அமுத்திக் கொல்லறது மட்டும் பாவமாயிடுமா உனக்கு. கொல்லுய்யான்னா டெய்லி மலைக்கி அந்தாண்டை கொண்டுட்டுப்போயி விட்டுட்டு வர்ரது எனக்குத் தெரியாதுனு நெனச்சியா. எதோ வயசுல பெரியவரா இருக்கியேனு போனாப்பொவுதுனு பாத்தா பொய் சொல்றியா பொய்யி. உன் வயசு மட்டும் கொஞ்சம் கொறவா இருந்திருந்தா தொலைச்சிட்டிருப்பேன் தொலைச்சி. என்னை யார்னு நெனச்சிருக்கே. டெல்லி டெல்லி வரைக்கும் ஆளிருக்கு தெரிஞ்சிக்க. ஆஃப்ட்டரால் ஒரு எலியைக் கொல்லத் துப்பில்லே நீயெல்லாம் மிலிட்டரியில இருந்து என்னத்தக் கிழிச்சே.

…….

சொல்லு கறி திங்கிறவன்தானே நீயி. சும்மா சொல்லுய்யா.

ஆமா சார். ஆனா இப்ப துன்றதில்ல சார்

எப்பலேந்து

கொஞ்ச நாளாவே சார்

எப்போலேந்து

ஏசப்பாகிட்ட போனதுலேந்து விட்டுட்டோம் சார்

ஏன்யா ஏசு கிறிஸ்துவே ரெண்டு மீனை ஐயாயிரமா ஆக்கி அற்புதம் பண்ணினார்னு யோவான் 6:11ல சொல்லியிருக்கே. ஏசப்பாகிட்டப் போயி கறி தின்றதை விட்டுட்டேன்னு என்கிட்டக் கதையா விடறே

இல்ல சார் எம் பொண்ணுக்குக் கல்யாணமாயி மூனு வருசம் குழந்தை இல்லாம இருந்துச்சி சார். குழந்தை பொறந்தா வேளாங்கன்னிக்கு வர்றோம்னு வேண்டிக்கிணோம் சார். வேண்டிக்கிண ஆறு மாசத்துக்குள்ளயே அது கருத்தரிச்சிருச்சி சார். அதனால, வெரதமிருந்து வேளாங்கன்னி போயி கறி திங்கிறதையே விட்டுட்டோம் சார்

……

ஏழாவுது மாசமே கொழந்தைய எடுக்கணும் இல்லாட்டி எம் பொண்ணு உசுருக்கே ஆபத்துனு சொல்லிட்டாங்க சார். அப்படிக் கத்தி போட்டு எடுத்த கொழந்தையைக் கண்ணுலகூடக் காட்டாம என்னென்னவோ சொல்லி தனியா கொண்டுபோயி இன்கிபேட்டர்ல வெச்சிட்டாங்க சார். பொழச்சி வந்தா போதும்னு ஆயிடுச்சி சார். அதுலேந்து முட்டையக்கூட விட்டுட்டோம் சார். மன்னிச்சிக்குங்க சார். நான் செஞ்சது தப்புதான். நீங்க என்னா பனிஸ்மெண்ட் குடுத்தாலும் ஏத்துக்கறேன் சார். இது மட்டும் வேணாம் சார். இந்த கூண்டு பயங்கரம் சார். குஞ்சும் குட்டியுமா மாட்டுதுங்க சார். எலிக்குஞ்ச பாக்கும்போது இன்க்கிபேட்டர்ல இருந்த எம் பேரனைப் பாக்கறாப்புலையே இருக்குது சார். மன்னிச்சிடுங்க சார்.

குரல் தழுதழுத்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவார் போல இருந்தது.

சரி சரி விடுங்க போங்க போங்க என்றார் கண்காணிப்பாளர்

ஆனால் அதற்காக இந்த எலிகளை இப்படியே விட்டு விடவும் முடியாது. அது எப்போது எந்த ஃபைலைக் குதறி எடுத்து எப்போது வேலைக்கு எமனாகும் என்று சொல்ல முடியாது. அன்று அலுவலகத்தை விட்டுக் கிளம்புகையில் என்ன செய்யலாம் என்கிற ஆழ்ந்த யோசனையில் கிளம்பினார் கண்காணிப்பாளர்.

மறுநாள் அலுவலகம் வந்து அவர் அறைக்குள் சென்று மேசையில் இருக்கும் சாமி படங்களைக் கும்பிட்டு அலுவலைத் தொடங்க யத்தணிக்கையில் மெல்ல அவர் எதிரில் போய் பெரிய டிரங்குப் பெட்டியுடன் நின்றார் குழந்தைசாமி.

என்ன குழந்தைசாமி பெட்டியும் கையுமா வந்துருக்கீங்க லீவு வேணுமா

இல்ல சார். இது ராணுவத்துல இருந்த போது குடுத்தது சார்.

சரி அதை எதுக்கு ஆபீசுக்குக் கொண்டாந்தீங்க.

இல்ல சார் முக்கியமான ஃபைலுங்களை எலி கடிச்சிடாம இருக்க இதுல வேணா வெச்சுக்கலாம் சார். வீட்ல இது சும்மாதான் சார் கெடக்குது.

அட இது நல்ல ஐடியாவா இருக்கே. அஞ்சு ஆறு வாங்கிப்போட்டா சனியன் தொல்லை விட்டுச்சுனு நிம்மதியாத் தூங்கலாமே. இது எனக்குத் தோணாமப் போச்சே என்றபடி இரும்புப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை எதாவது தமது ஆளுகைக்குள் வருகிறதா என்று தொழிற்சாலைகள் மற்றும் டீலர்களின் பட்டியலைப் புரட்டத் தொடங்கினார் கண்காணிப்பாளர்.

20 அக்டோபர் 2015